கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஓஷோ - Wild Wild Country

Thursday, April 26, 2018

ஷோ பற்றி கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களுக்கு மேலாய் நீளும் Wild Wild Countryஐ, Netflix வெளியிட்ட  அன்றே, நள்ளிரவிற்கப்பாலும் விழித்திருந்து ஆறு பாகங்களையும் ஒரே நாளிலேயே பார்த்து முடித்திருந்தேன். இதில் ஓஷோ அமெரிக்காவில் Oreganனில் பெரும் பரப்பளவில் தனது commune ஐத் தொடங்குவதே முதன்மைப்படுத்தப்படுகின்றது. எந்த பக்கசார்பையும் எடுக்காது இயன்றளவு அன்றையகால (80களின் தொடக்கத்தின்) அங்கேயிருந்த முக்கிய பலரின் நேரடி அனுபவங்களோடு இந்த ஆவணப்படம் இருப்பதால் இதைப் பார்ப்பது சுவாரசியமானது.

ஓஷோ அமெரிக்காவிலிருந்த அதிககாலம் மெளனமாகவே இருந்தவர். எனவே இதில் ஓஷோ பற்றி எதுவும் விரிவாகப் பேசப்படவில்லை. அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைப் பற்றியே இது பெரும்பாலும் பேசுகின்றது. ஓஷோ -5 வருடத்திற்குள்ளாக- அமெரிக்காச் சமூகத்தில் செய்த குறுக்கீடு என்பது நாம் நினைத்தும் பார்க்கமுடியாதது. பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கே ஒன்று சேர்வது, பெரும் வளர்ச்சியை செழுமையில்லாத நிலப்பரப்பில் நிகழ்த்துவது, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் சட்டத்தினூடாக தங்களை விஸ்தரிப்பது என்பதையெல்லாம் அங்கு அன்று இருந்தவர்களின் வாக்குமூலங்களினூடாகக் கேட்பது வியப்பைத் தரக்கூடியது.

அதிலொரு ஆஸ்திரேலியாப் பெண், தன் குடும்பத்தோடு ஓஷோவின் மீதான பற்றில் புனே போய் அங்கேதான் தனது வாழ்வு நிறைவெய்யப்போகின்றது என நினைக்கும்போது, ஓஷோ சட்டென்று அமெரிக்காவிற்குப் போகும்போது திகைத்து நிற்கின்றார். ஆனால் அதன்பிறகும் அவர் அமெரிக்காவிற்கு ஓஷோவைப் பின் தொடர்ந்து செல்கின்றார். இதெல்லாம் நடப்பது 70/80களில். அதுமட்டுமில்லாது ஓஷோவின் ஆச்சிரமத்திற்கு தடையூறாக ஒரு அமெரிக்க செனட்டர்(?) இருக்கின்றார் என்பதால், ஓஷோவின் முதன்மைச் சீடரான ஆனந்த் ஷீலாவின் பணிப்புரையின் பேரில் அந்தச் செனட்டரைச் சுட்டுக்கொல்வதுவரை இந்தப்பெண் போகின்றார். மேலும் இறுதிக்கட்டத்தில், ஓஷோவின் வைத்தியர் ஓஷோவைக் கொல்லச் சதி செய்கின்றார் என அவருக்கு விஷ ஊசி கூடப் போட்டிருக்கின்றார் (வைத்தியர் பிறகு தப்புகின்றார்). இவர் பிறகு ஆனந்த ஷீலாவோடு, ஓஷோவை விட்டுத் தப்பிச்செல்லும குழுவில் ஒருவராக  இருந்தவர். இப்போது இந்தவிடயங்களுக்கான தண்டனைகளைப் பெற்று, ஜேர்மனியில் ஒரு உணவகம் நடத்தி வாழ்ந்து  வருகின்றார்.

ந்த ஆவணப்படம், இதுவரை ஆனந்த ஷீலா பற்றி இருக்கும் ஒரு விம்பத்தை உடைக்க முயற்சிக்கின்றது எனலாம். ஓஷோவின் அமெரிக்க communeஐ சிதைத்ததில் முதன்மையானவர் ஷீலாவே என அநேகரால் குற்றஞ்சாட்டப்படுகின்றார் என்பது ஒருபுறமிருந்தாலும், ஓஷோவின் அமெரிக்க வளர்ச்சி ஷீலா இல்லாது இந்தளவிற்கு சாத்தியமாகியிருக்காது என்பதும் உண்மையே. ஷீலா ஒருபோதும் ஓஷோவைத் தனது குருவாகவோ/ஆசிரியராகவோ நினைத்ததில்லை எனக் குறிப்பிடுகின்றார். அவர் அமெரிக்காவில்  commune ஐ நிர்வகித்தது கூட  ஒருவகையான  coroporate முறையில்தான். ஓஷோவோடு இருக்கும்போது எப்படி bold ஆக இருந்தாரோ, இப்போது சுவிற்சலாந்திலிருந்து கதைக்கும்போதும் அதே bold ஆக இருந்தே கதைக்கின்றார்.

சிலவேளைகளில் அவர் சென்ற வழி நமக்குப் பிடிக்காவிட்டாலும் ஓஷோ அடிக்கடி வலியுறுத்தும் தனக்குரிய authentic ஐ கைவிடாது இருப்பவர் என்பவரால் ஷீலாவையும் நாம் விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும். மேலும், இவர்கள் ஒரு குழுவாக அமெரிக்காவை விட்டுத் தப்பி, ஜெர்மனியில் தலைமறைவாக இருக்கும்போது, பொருளாதார நெருக்கடி வரும்போது, ஆனந்த் ஷீலா ஜேர்மனியில் வரும் vogue(?)ற்கு topless pose ஐ, ஒரு இந்தியப்பெண்ணாக கொடுப்பற்கு எல்லாம் ஒரு 'தில்' இருந்திருக்கவேண்டும். ஒஷோவோடு இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் நேரடியாகவே சிறுபான்மையின சமயத்தை(?) ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க நிறவாதிகளென குற்றஞ்சாட்டுகின்றார். மேலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பேசுகையிலும், Oregan மக்களைப் பார்த்து, நீங்கள் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் எனவும், உங்களுக்கு உண்மையான சந்தோசம் என்னவென்று எங்களைப் போலத்தெரியாது எனவும் குற்றஞ்சாட்டுகின்றார்.

ந்த ஆவணப்படத்தில் ஒலிக்கும் குரல்களைப் பார்க்கும்போது, அந்தக்காலகட்டத்தில் ஒரு மாற்றத்தை வேண்டிப் போனவர்களையும், உண்மையான விருப்புடன் -அது கனவுலகாகப் பிறகு கலைந்துபோனபோதும்- commune ற்கு உழைத்தவர்களையும் பார்க்கமுடிகின்றது. இப்போது கூட எவரும் தாம் அப்படி வருடங்களை இதற்காய்ச் செலவழித்ததற்காய் கவலைப்படவில்லை என ஓஷோவின் அருகில் இருந்த நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கொள்கின்றனர். அந்த வருடங்கள் தமது பிறகான வாழ்வில் எதையோ மாற்றியிருக்கின்றதெனவும் நம்புகின்றனர்.

ஓஷோவின் மீது விலகல் கொண்ட ஆனந்த் ஷீலா குழுவினர் கூட ஒருபோதும் ஓஷோவிற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தில் பேசும் ஷீலா ஓரிடத்தில் கூறுவார்; 'கவனியுங்கள், நான் பிறர் செய்வதைப் போல பணம் கொடுத்து எனது குற்றங்களிலிருந்து தப்பவில்லை. நான் பத்தாண்டுகள் ஜெயிலில் இருந்திருக்கின்றேன். எனவே நான் எனது பொறுப்புக்கூறல்களிலிருந்து தப்பி வந்து இதை இப்போது வெளிப்படையாகப் பேசவில்லை' என்கின்றார்.

ஓஷோவை அறிய விரும்புவர்க்கு இந்த ஆவணப்படம் பெரிதாக எதுவும் உதவப்போவதில்லை. ஆனால் ஓஷோவின் commune ற்கு அமெரிக்காவில் நிகழ்ந்த அசுர வளர்ச்சி, அங்கே பிறகு மூடியதிரையின் பின் நடந்த பல்வேறு விதமான மர்மமான சம்பவங்கள், இவை எதையும் அறியாத உண்மையான ஓஷோ பற்றுதலோடு இருந்த அடிமட்டத்தவர்கள் என ஓஷோவின் ஒருகாலகட்டத்தை அறிய விருப்பமிருப்பவர்களுக்கு இது சுவாரசியமானதாக இருக்கும்.

(Apr 09, 2018)

0 comments: