அசோகமித்திரனின் '18வது அட்சக்கோட்டை' மூன்றாவதோ நான்காவதோ முறையாக இந்த வாரவிறுதியில் வாசித்து முடித்திருந்தேன். சில புனைவுகளை மீண்டும் வாசிப்பதற்கு எனக்கென சில காரணங்கள் இருக்கும். அசோகமித்திரனினது இந்த நாவலை திருப்பத் திரும்ப வாசித்துப் பார்ப்பதற்கு, அவர் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை (நிஸாம் கால செகந்திரபாத்/ஹதராபாத்தின் இறுதிக்காலம்) விவரிப்பதற்கு எவ்வகையான மொழிநடையைத் தேர்ந்தெடுக்கின்றார் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. மொழியை அவ்வளவு கஷ்டப்படுத்தாது அவர் எழுதிச் செல்கின்ற நுட்பங்கள் சிலாகித்துச் சொல்லவேண்டியவை.
முன்னர் வாசிக்கும்போது கதைக்குள் விழுந்துவிட்டதால் இதனிலிருக்கும் சில அபத்தங்கள் காணாமல் போயிருந்தது. இப்போது தெளிவாகப் புலப்பட்டுமிருந்தன. முஸ்லிம்களை இதில் துலுக்கன்களாகவே எழுதிக்கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, லம்பாடிகள் எனப்படுபவர்களைச் சித்தரிப்பதும் மிக மோசமாக இருக்கின்றது. ரஜாக்கர்களும், முஸ்லிம் மிலிட்டரிக்காரர்களும் ஓடஓட விரட்ட, அதிகம் சித்திரவதைப்படுபவர்களாக, கம்யூனிஸ்டுக்களும், லம்பாடிகளுமே இருக்கின்றார்கள் எனச் சொல்லும் அ.மி, 'சாதாரண நாட்களில் லம்பாடிகளை யாரும் மனிதர்களாகக் கூட மதிக்கமாட்டார்கள். அவர்களும் நாய் பன்றி போலக் கண்ட கண்ட இடங்களில் கண்டத்தைத் தின்று கண்ட இடத்தில் படுத்து, கண்ட இடத்தில் மலஜலம் கழித்துப் போவார்கள்' என எழுதிச் செல்கின்றார்.
நிஸாம் அரசு, இந்தியா என்பதோடு இணைய விரும்பாது அதை எதிர்க்க அவர்கள் உருவாக்கும் ரஜாக்கர்கள் போல, அதே காலகட்டத்தில் இந்துக்களும் தெலுங்கானா என்ற அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள். ரஜாக்கர்களுக்கு எதிராக அவர்கள் ஏதோ ஒருவகையில் அணிதிரண்டிருக்கின்றார்கள். இந்திய அரசு தன் இராணுவத்தை உள்ளிறக்கும்வரை, தெலுங்கானாவும் எதிர்த்தரப்பில் இருந்திருக்கின்றது. என்ன சிக்கலென்றால், அ.மி இந்த தெலுங்கானா அமைப்புப் பற்றி இந்த நாவலில் எதுவுமே விரிவாகப் பேசவில்லை என்பதுதான். இன்னும் கவனிக்கவேண்டியது. நிஸாம் அரசில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். கிட்டத்தட்ட 85% ஆனோர் இந்துக்களாக அப்போது இருந்தார்கள் எனவும் குடிசன மதிப்பீடு சொல்கின்றது.
இந்த நாவலை சரியாக ஆதவன் அடையாளங் கண்டிருக்கின்றார். காந்தியின் கொலை அங்கிருக்கும் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் பாதிக்காததைக் காணும்போது, தவிர்க்க முடியாமல் தன்னை ஒரு இந்துவாக, வித்தியாசமானவனாக சந்திரசேகரன் உணர்கின்றார் என இந்த நாவலின் இரண்டாம் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஆதவன் எழுதுகின்றார். மேலும் " "யார் கொன்றது காந்தியை - ஒருவேளை யாராவது முஸ்லிமா?" என்று நினைத்து அவன் (சந்திரசேகரன்) கொலைவெறி கொள்ளும் கணத்தில், அவனுடைய இளமையின் பேதைமை முழுதும் நீங்கி அவனும் ஒரு துவேஷமுள்ள பெரியவனாகிவிடுகின்றான் " என்கின்றார் ஆதவன்.
ஒருவகையில் இந்த நாவல் ஒருவன் துவேஷமுள்ள பெரியவனாகிவிட்டான் என்று படிமத்தை முழுதும் தராமல் தவிர்ப்பது அந்த இறுதிக்காட்சி. அதுவுமில்லாவிட்டால் ஒரு துவேசமுள்ள இந்துப் பெரியவனின் கதையாகவே இது சுருங்கியிருக்கும் அபாயம் இருந்திருக்கும்.
நாவலில் சந்திரசேகரன் ஒரு கலவரத்தில் தப்பி ஒரு வீட்டுக்குள் நுழையும்போது, இந்துக்கள்தான் தாக்குதல் நடத்த வந்துவிட்டார்களோ என்று நினைத்து முஸ்லிம் குடும்பம் தமது பதினாறு/பதினேழு வயதுள்ள பெண்ணை முன்னே அனுப்ப, அந்தப் பெண் தனது குடும்பத்தைக் காப்பாற்ற தன்னை நிர்வாணமாக்கும்போதுதான், "அவள் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்த வேண்டியிருக்கிறது? அதற்கு அவனும் காரணமாகி விட்டான், இந்தக் கறையை என்று எப்படி அழித்துக்கொள்ள முடியும்? இதை அழித்துக் கொள்ளத்தான் முடியுமா?" என்பதோடு நாவல் முடியும்போதுதான் '18வது அட்சக்கோடு' தவிர்க்கமுடியாத நாவல்களில் ஒன்றாக மாறிவிடுகின்றது.
ஆனால் அதேசமயம் இந்தக் குற்றவுணர்வு புதிதுமல்ல, அசோகமித்திரனுக்கு முன்னர் சதக் ஹஸன் மண்டோ (1912-1955) தன் பல்வேறு கதைகளினால் நமக்குள் உருவாகியிருக்கின்றார். அசோகமித்திரன் இந்த நாவலை எழுதியது எழுபதுகளில் (வெளியிடப்பட்டது 1977). மண்டோவின் பிரசித்தம் பெற்ற 'Open up' என்ற கதை பற்றி நிறையத்தடவைகள் பேசப்பட்டாயிற்று. கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பஞ்சாப் பெண்ணுக்கு, தன்னைப் பார்க்க வருகின்றவர் தந்தை என்கின்றவர் என்பதைவிட ஒரு ஆண் வந்திருக்கின்றார் என்பதே மூளையில் பதிவாவதால், இவரும் பாலியல் வன்புணர்வு செய்யபோகின்றார் என்ற நினைப்பில் உடனேயே தன் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்துவார். அந்தத் துயரம் எப்படி எங்களுக்குள் பதிவாகின்றது என்பதற்கு இப்போது 60/70 வருடங்கள் கழித்து அதை வாசித்தாலும் நம்மைப் பதற வைக்கின்றது. இவ்வாறு நிறையக் கதைகளை மண்டோ எழுதியிருக்கின்றார்.
ஒரு யூதப் பெண் வருகின்ற இன்னொரு கதையில், சர்தாஜி ஒருவருக்கு இந்தப் பெண்ணுக்கு காதல் தொடக்கத்தில் வந்தாலும், அதை இந்தப் பெண் மறுக்கின்றார். கலவரக்காலங்களில் பலரைக் காக்கின்ற பெண்ணாக இவர் மாறுகின்றார். ஒரு சம்பவத்தில் சர்தாஜி மணம் செய்யப்போகின்ற பெண்ணை, முஸ்லிம்களின் ஒரு குழு துரத்திக்கொண்டு வருகின்றது. அவரைக் காப்பாற்றும்பொருட்டு யூதப்பெண் தன் ஆடைகளை அந்தப்பெண்ணுக்குக் கொடுத்து தன்னை நிர்வாணமாக்கின்றார். துரத்தி வந்த முஸ்லிம் குழு இந்த யூதப்பெண்ணின் நிர்வாணம் கண்டு திகைப்பது மட்டுமில்லை, தம்மிடமிருக்கும் துணியை நிர்வாணம் மறைக்கக் கொடுக்கின்றது. அப்போது அவர், 'உங்கள் மதவெறி படிந்திருக்கும் இந்தத்துணியை நான் உடுத்தவே போவதில்லை' என மறுதலிக்கின்றார்.
இதுதான் சதக் ஹசன் மண்டோ. அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என்று எந்த மதவெறி மீதும் பாரபட்சம் எதுவுமின்றி எழுத்தால் கடந்துபோனவர். ஆனால் அசோகமித்திரன் இந்த 18வது அட்சக்கோட்டில் வரும் துவேசமுள்ள பெரியவனிலிருக்கும் வித்தைக் கைவிட மறந்ததாலோ என்னவோ, பின்னாளில் தனக்கான மதத்தாலும், சாதியாலும் தனக்குள் வரும் privilages ஐ பார்க்கவே தயங்கியவர். தயங்கியது மட்டுமில்லாது பிராமணர்கள் தமிழ்நாட்டில் யூதர்களைப் போலக் கஷ்டப்படுகின்றனர் போன்ற பல அபத்தக் கருத்துக்களை தன் முதிர்ச்சியடைந்த காலத்தில் கூடப்பேசியவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆதவன் போன்றோர் குறுகியகால வாழ்க்கையில் தமது சாதியை எள்ளல் செய்த அளவிற்குக் கூட அதற்குள் போய் விமர்சிக்க அ.மி மறந்தவர்.
இதைச் சொல்வதால் அசோகமித்திரன் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டார் என்பதில்லை. அநேகபேர் கவனிக்க மறந்த 'ஒற்றனே' எனக்கு அவர் எழுதிய நாவல்களில் முக்கியமானது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்பதாலே அவரைத் திருப்பத் திருப்ப வாசிக்கின்றேன். அவர் எனக்குச் சலிப்பதுமில்லை. அதேபோல அவருக்குள் உள்ளுறைந்து கிடக்கும் இருண்மையான பக்கங்களையும் அவரை விரும்பி வாசிப்பவன் என்பதால் வெளிப்படையாகவே சொல்லவேண்டியும் இருக்கின்றது.
(Apr 08, 2018)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment