கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

Thursday, May 31, 2018

மிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’, ‘மாயக்குதிரை’ மற்றும் ‘மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை’ என்பவற்றைச் சொல்வேன்.

‘தாழம்பூ’வும், ‘தோற்றப்பிழை’யும் நூற்றாண்டுகள் தாண்டிய கதையைச் சொல்வதில் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசிக்கப்படவேண்டியவை. பெண்களான தாழம்பூவும், ஆயியும் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முளைத்துவருகின்றார்கள். காலத்தின் தடங்களிலிருந்து இன்னமும் அழிந்துவிடாது, யாருடடையதோ தொடர்ச்சியாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒருவகையில் பார்த்தால் அவர்களினூடாக பெண்களின் துயரங்களும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் இன்னமும் முடிவடையவில்லை எனவும் கூட வாசிக்கலாம்.

‘மாயக்குதிரை’யில் வரும் பெண் கஸினோவிற்குள் தன்னைத் தாரை வார்த்துக்கொடுப்பதைப் போல, ‘கடன்’ கதையில் வரும் ஆண், பிறருக்காய்க் கடன் வாங்கிக்கொடுப்பதால் தன் வாழ்வைச் சீரழிக்கின்றான். ‘கடன்’ கதை ஒரு நல்ல கதையாக ஆகமுடியாமைக்கு, அவன் கடனாளியாவதற்குக் காரணமாக இருந்த தன் தங்கையின் கணவனையோ அல்லது வன்கூவருக்கு தப்பிச் சென்ற தங்கையையோ அறையாமல், தனக்கு அறாவட்டியில் கடன் தந்த தன் நண்பனை மட்டும் அறைவதில் முடிவதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

புலம்பெயர் வாழ்வில் ஒட்டமுடியாமைக்குப் பலருக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பாதகமான ஒருபகுதியை மட்டும் புலம்பெயர் வாழ்வாக தமிழ்நதி சித்தரிக்கும்போது ஒருவகையில் சிக்கல் வருகின்றது. ‘கறுப்பன் என்றொரு பூக்குட்டி’யிலும், ‘மெத்தப் பெரிய உபகாரத்திலும்’ வரும் புலம்பெயர்ந்தவர்கள் தமது பெற்றோரில் அன்பைக் காட்டுவதைவிட, சொத்தில் மீது அபரிதமான ஆசை வைத்திருப்பவர்களாக வருகின்றார்கள். அதேபோல தமிழ்நதியின் அநேக புலம்பெயர் பாத்திரங்கள், தாம் இழந்துவந்துவிட்ட தாய் நிலத்தை மட்டுமே சொர்க்கமாகப் பார்க்கின்றன.

ஒருவகையில் தமிழ்நதியின் கதைகளை பொதுவாக வாசிக்கும்போது புலம்பெயர் வாழ்வு ஒரு திணிக்கப்பட்டுவிட்ட துயரம் என்கின்றதொரு சித்திரம் மட்டுமே எஞ்சுகின்றது. இதைச் சுயவிமர்சனத்திற்குட்படுத்த தமிழ்நதி முயலவேண்டும். இத்தொகுப்பில் தொடக்கத்தில் தமிழ்நதி கனடா-தமிழகம்-ஈழம்  என்கின்ற பல்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்கின்றார் என்ற ஒரு குறிப்பு வருகின்றது. தமிழ்நதி கனடாவிற்கு வராது, இலங்கையில் மட்டும் வாழ்ந்திருந்தால் இவ்வாறு அவர் விரும்பிய நிலப்பரப்புக்களுக்குச் சென்று வாழும் ஒரு 'வசதி'யான வாழ்வு அவருக்குக் கிடைத்திருக்காது என்பதை அவர் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆகவே புலம்பெயர் வாழ்வானது துயரத்தை மட்டுந்தானா தந்திருக்கின்றதா என்பதை அவர் தன் கதைகளினூடாக  எழுதியோ/ மீள வாசித்தோ பார்க்கவேண்டும்.

த்தொகுப்பிலிருக்கும் ‘காத்திருப்பு’ கதை அது வெளிவந்த காலத்திலேயே சர்ச்சைக்குள்ளாகிய கதை. காணாமல் போகின்ற ஒரு மகனைத் தாய் தேடுவது அதன் பேசுபொருள். அவரது மகன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாகி சிறையில் இருந்து வந்தபின், நேரடியாக இயக்கத்தில் சேர்ந்து மரணமடைந்திருக்கின்றார் என்பதைப் பல ஆண்டுகள் காத்திருப்பின் பின் ஒரு தற்செயலான நிகழ்வாய் அந்தத் தாய் அறிந்துகொள்கின்றார். நெடுங்காலத் தேடலிலிருந்த அந்தத் துயரைவிட தாயிற்கு, மகனுக்கு என்ன நிகழ்ந்ததென்று அறிந்த நிம்மதியில் நிறைவாகச் சாப்பிடத் தயாராகின்றார் என்பதாக அந்தக் கதை முடியும். இதுகுறித்த சர்ச்சைகளுக்கு தமிழ்நதியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்து வாசித்ததாகவும் நினைவு.

அந்தச் சர்ச்சையில் சொல்லப்பட்டதைவிட எனக்கு இந்தக் கதையோடு இருக்கும் சிக்கல் என்னவென்றால், இன்று காணாமல் போன பிள்ளைகளுக்காக/சகோதரர்களுக்காக/துணைகளுக்காக எத்தனையோ பெண்கள் வருடங்கள் தாண்டியும் போராட்டங்கள் செய்து கொண்டிருக்கையில் இவ்வாறான கதைகள் அதன் வீரியத்தை dilute செய்துவிடும் என்பதாகும். இந்தக் கதைபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பிவந்து இயக்கத்தில் சேர்ந்து இறந்துபோனது என்பது விதிவிலக்கான ஒன்று. அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்று.

அத்தோடு இக்கதையிலிருக்கும் பலவீனம் என்னவென்றால் அந்த இளைஞர் 2001ல் இறப்பதாகச் சொல்லப்படுகின்றது. புலிகள் இயக்கத்தில் சேரும்போது சேருபவரின் விபரங்களைக் கட்டாயம் எடுப்பார்கள். அதுபோலவே அவர்கள் மரணமடையும்போதும் உரிய மரியாதையைக் கொடுப்பதுபோல, பெற்றோரிடம் விபரத்தை எப்பாடுபட்டேனும் தெரிவிப்பார்கள். இறப்பு இறுதிப்போர் நிகழும்போது நடக்கும் நிகழ்வல்ல. 2001ல் மரணம் நடந்த பின், சிலவருடங்கள் சமாதான உடன்படிக்கை வந்து, சற்று அமைதியாக வன்னிநிலம் இருந்தபோது புலிகள் அதைப் பெற்றோருக்கு அறிவிக்காமல் விடுவார்களென்று – கதையாக இருந்தபோதும்- நம்பமுடியாது இருக்கின்றது.

சிலருக்கு எழுதுவதற்குக் கதைகள் இருக்கும். ஆனால் எழுதும் முறையில் எங்களுக்குத் தலைவலியைக் கொண்டுவருவார்கள். வேறு சிலருக்கு எழுதும் மொழி வாய்த்தாலும், அவர்கள் திணிக்கும் அரசியல் சார்புகள் தொடர்ந்து வாசிக்க முடியாது எரிச்சலைக் கொண்டு வந்துவிடும். இன்னுஞ் சிலர் பாலியல்/உளவியல் கதைகள் எழுதுகின்றேன் என்று தொடங்கி, எங்களின் இரத்தத்தைக் கொதிநிலைக்கு ஏற்றிவிடுவார்கள்.

தமிழ்நதி தனக்கென்று வெளிப்படையான ஒரு அரசியல் சார்பு வைத்திருந்தாலும், அதைத் தாண்டியும் வாசிக்க தமிழ்நதியிற்கு வசமாக்கியிருந்த எழுத்து நடை எங்களை உந்தித் தள்ளுகின்றது. இத்தனை விமர்சனங்களையும் எதிர்கொண்டு நம் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து ஒருவர் இயங்குவது அவ்வளவு எளிதுமல்ல. அந்தவகையில் தமிழ்நதி பாராட்டுக்குரியவர். நாடகீயமான பாவனைகளை அவ்வப்போது தன் எழுத்துக்களிலும் தன்னைப்பற்றியும் உருவாக்குவதிலிருந்தும் அவர் சற்று வெளியே வரவேண்டும் என ஒரு வாசகராக –வேண்டுமானால்- அவருக்குச் சொல்லிக்கொள்ளலாம்.

அண்மையில் வெளிவந்து உதிரிகளாக வாசித்துக்கொண்ட எத்தனையோ கதைகளை விட – ஒருகாலத்தில் நன்றாக எழுதியவர்கள் என்று நினைத்துக்கொண்டவர்களின் கதைகள் உட்பட- மாயக்குதிரையில் இருக்கும் கதைகள் பல தன்னளவில் மேலுயர்ந்தே நிற்கின்றன. அந்தவகையிலும் ‘மாயக்குதிரை’ தொகுப்பு அண்மையில் வந்தவற்றில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தொகுப்பாகும்.
........................

(நன்றி: 'அம்ருதா' - சித்திரை/2018)

உழைப்பை ஒழிப்போம்?

Monday, May 28, 2018

மேதினத்தில், உழைக்கும் வர்க்கமாய்த் திரண்டு புரட்சி செய்வது, சமத்துவமான உரிமைகளையும் உழைப்பையும் கோருவது என்பது - முக்கியமாய் முதலீட்டிய நாடுகளில்- பெருங்கனவாய் இருக்கும்போது, வேறுவகைகளிலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'உழைப்பு' என்பதில் ஒளிந்து நிற்கும் 'ஓய்வு' குறித்தே அதிகம் இன்றைய பொழுதுகளில் நான் யோசிக்கின்றேன்.

முதலீட்டிய அரசுகள்/பெரு நிறுவனங்கள் என்பவை மிக நுட்பமாக நமது உழைப்பைச் சுரண்டுவதோடு அந்த வலையிலிருந்து வெளிவராமல் நம்மால் எட்டவே முடியாத கனவுகளை ஒருநாள் அடைந்துவிடமுடியுமென பெரும் ஆசைகளை விதைத்துக்கொண்டிருப்பார்கள். அதிலொன்று கடுமையான உழைப்பைக் கொடுத்தால், மிகப் பெரும் சொகுசான வாழ்க்கையைத் தங்களைப் போல - இன்னொருவகையில் சொல்வதனால் The Great Gatsbyயில்  வரும் அமெரிக்க கனவைப் போல- அடைந்துவிடலாமென ஒருவகையில் உணர்த்தியபடியே இருப்பார்கள்.

உதாரணத்திற்கு அடிப்படைச் சம்பளத்தில்(basic salary)  வேலை செய்யும் தொழிலாளியைப் பார்த்து, நீ இன்னும் நிறையக் கல்வி கற்று (அதற்கும் உழைப்பவரே பணம் செலுத்தவேண்டும்; ஆனால் அதற்கான கடனை கூடிய வட்டியுடன்  இவர்களே அள்ளி வழங்குவார்கள்) உயர்ந்த இடத்தைக் காணமுடியுமென ஆசை காட்டுவார்கள். ஆனால் ஒருபோதும் அந்த அடிப்படைச் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பது குறித்துப் பேசினால் வேறுதிசையில் முகம் காட்டியபடி காணாமற் போய்விடுவார்கள். இத்தனைக்கும் ஒருவர் கல்விகற்றோ அல்லது வேறுதுறைக்குச் சென்றால் கூட, அந்தத் தொழிலிற்கான இடம் அப்படியே இருக்கும். அதை நிரப்ப, இன்னொரு தொழிலாளர் வரவேண்டியிருக்கும். ஆகவே உண்மையில் ஒரு தொழிலாளியின் நிலையை உயர்த்தவேண்டுமெனில் அவருக்கான அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதுடன், கூடிய ஓய்வை அவருக்கு வழங்குவதிலேயே ஒருவரின் அக்கறை இருக்கவேண்டும்.

இந்த முதலீட்டியம் நமது உழைப்பைச் சுரண்டுவதற்காய் எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதால், நாம் உழைப்பிலிருந்து ஓய்வை நோக்கி யோசிக்கவேண்டியிருக்கிறது. அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதோடு, கனடா போன்ற முதலீட்டிய நாடுகளில் பல்கலைக்கழக மேற்படிப்புக்களையும் இலவசமாக வழங்கவேண்டுமென வலியுறுத்தவேண்டும். எனெனில் அந்த மேற்படிப்பு உங்களை மேலும் பத்தாண்டுகளுக்கு இன்னும் உழைப்பு அடிமைகளாக இருக்கவைத்திருக்கும். நீங்கள் அந்தக் கடன்களிலிருந்து தப்பவே முடியாது. உங்கள் வாழ்வை நிதானமாகவோ விரும்பியமாதிரியோ வாழமுடியாது இந்தக் கடன் உங்களை நெருக்கும்.

நான் கனடா வந்து பதினேழாவது வயதிலேயே வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பல்கலைக்கழகக் காலங்களிலும் கோடை விடுமுறை காலத்தில் மட்டுமின்றி, பகுதிநேரமாகவும் வேலை செய்திருக்கின்றேன். அப்படிச் செய்தும் படித்த கடனை (வட்டியுடன் சேர்த்து) மட்டும் பத்தாண்டு வருடங்களுக்கு மேலாய் கட்டிக்கொண்டிருப்பவனாய் இருந்திருக்கின்றேன். ஒரு பதின்மனின் வாழ்க்கை, அவன் விரும்பிய இடங்களுக்குப் பயணிக்கவோ இன்னபிற விடயங்களைச் செய்யவோ விடாது இந்த உயர்கல்விக் கடன்கள் ஒருவரைத் திக்குமுட்டாடச் செய்யும்.

வாழ்வில் படித்தபின்னோ/படிக்காமலோ, உயிர்வாழ்வதற்காய் என்றுமே பிற்காலத்தில் உழைக்கவேண்டியிருக்கப்போகும் ஒருவருக்கு, அவர் படிக்கும் காலம் வரையிலாவது விரும்பியதைச் செய்வதற்கு கடன்கள் இல்லாது கழுத்தை நெரிக்கும் ஒரு கல்விமுறையை அறிமுகப்படுத்துவதே சிறந்ததாகும். உழைக்கத் தொடங்கியபின்னும், முதலீட்டிய உலகில் உழைப்பை விட, ஓய்வு குறித்தும் ஒவ்வொரு உழைப்பாளியும் தன் உடல்/உளம் குறித்தும் யோசிக்கவேண்டும். மேலும் மூளை உழைப்பை விட, உடல் உழைப்பைக் கொடுக்கும் தொழிலாளர்க்கு முன்னதாகவே ஓய்வூதியம் கொடுக்கும் திட்டம் குறித்து இந்த முதலீட்டிய அரசுக்கள் சிந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? (கனடாவில் ஓய்வூதிய வயது - 65).

உழைப்பை ஒழிப்போம் (The Abolition of Work) என்கின்ற Bob Black கட்டுரையை இந்த மேதினத்தில் வாசிப்பது கூட பொருத்தமானது. இது தொடர்பாய், தமிழில் வாசிக்க விரும்பவர்க்கு அ.மார்க்சின் 'கடமை அறியோம், தொழில் அறியோம்' என்ற நூலைப் பரிந்துரைக்கின்றேன்.

(மே 01,2016)

இன்னும் தீராச்சோகம்

Wednesday, May 09, 2018

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, அவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்ட பயணம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள்ளால் உரிய ஆவணங்களின்றி அது நிகழ்ந்திருந்தது. ஒருமுறை ரஷ்யா எல்லையிற்குப் போய், தனியொருவராக போலந்து எல்லைக்குள் உள்ளூர்வாசியின் உதவியுடன் கடந்திருக்கின்றார். அவருடைய கெட்டகாலம். எல்லை பாயும் இடத்தில் இராணுவம் பதுங்கியிருந்திருக்கின்றது. வழமைபோல அவர்களின் கடமையைச் செவ்வனே செய்து, திருப்ப அவர்கள் வந்த எல்லைக்குள்ளால் அவரையும் இன்னொரு ரஷ்யரையும் 'நாடு' கடத்தியிருக்கின்றனர். 
ஏதோ பெரும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வதுபோல, எல்லையில் இராணுவ மரியாதையெல்லாம் நிகழ்ந்து, ஷம்பெயின் போத்தல்கள் இரண்டு பக்கத்திலும் உடைக்கப்பட்டு அவர்கள் திருப்பவும் ரஷ்யாவிற்குள் அனுப்பட்டிருந்தனர். இந்த மரியாதை நிமித்தங்கள் நிகழும்போது, வாகனத்தோடு கைச்சங்கிலி கட்டப்பட்டிருந்த இரஷ்யர் தப்புவதற்கான முயற்சியையும் செய்திருக்கின்றார். ஷம்பெயின் போத்தல்களை உடைத்து மரியாதையைக் காப்பாற்றும் அரசுக்கள், நண்பர்களைப் போன்ற எளிய மனிதர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது வேறுவிடயம். அதிகாரங்கள் ஏற்படுத்திய எல்லைகளைக் கடந்து மனிதாபிமானம் குறித்து யோசிக்க எந்த அரசும் தயாராகவேயில்லை. இதே நண்பர் ஜரோப்பாவிலிருந்து கனடாவிற்கு எல்லை தாண்டியது, கதையாய் எழுதக்கூடியவளவிற்கு சுவாரசியமானது.
பொ.கருணாகரமூர்த்தியினது 'பெர்லின் நினைவுகளிலும்' இந்த எல்லை கடத்தல்கள் வருகின்றன. ஏன் கருணாகரமூர்த்திகூட அன்றைய கிழக்கு-மேற்கு ஜேர்மனி பிரிவினைகளால் பல்வேறு முறை மேற்கு ஜேர்மனிக்குப் போக வெளிக்கிட்டு திருப்பி அனுப்பப்படுவதைப் பற்றி எழுதியிருக்கின்றார். புதிய கலாசாரம், வித்தியாசமான காலநிலை மட்டுமின்றி அதுவரை அறிந்தேயிராத மொழி பேசும் நாட்டில் தமது கால்களை அகதிகள்/குடிவரவாளர் ஊன்றுவது எவ்வளவு கடினமாயிருக்கும் என்பது நாம் கற்பனைகளில் கூட எண்ணிப்பார்க்கமுடியாதவை. அதிலும் அன்றைய காலக்கட்டத்தில் ஜேர்மனிய இனவாத அரசு, குடிவரவாளர்க்கு வேலை கொடுக்கக்கூடாது என்று புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரும்போது, இவ்வாறு எல்லை கடந்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகப் போகின்றது. அரசே ஓர் இனவாதியாக இருக்கும்போது, அதன் அமைப்பை மீறி வாழும் வீடற்றவர்கள்/அராஜவாதிகள் (anarchists) எப்படி குடிவரவாளர்கள்/அகதிகள்/வேறுநிறதோல் கொண்டவர்கள் மீது கரிசனையாக இருக்கின்றார்கள் என்பதையும் கருணாகரமூர்த்தி இதில் கவனப்படுத்தத் தவறவில்லை.
இதையெல்லாம் இன்னொரு நண்பனோடு பகிர்ந்துகொண்டிருக்கையில், அவன்தனது எல்லை கடத்தல்களில் நனவிடை தோயத்தொடங்கினான். என் சமவயதொத்த நண்பன். நான் 16வயதில் கனடாவிற்கு வந்ததைப் போல, அவன் தன் பதினான்காவது வயதில் எல்லை கடந்தவன். அவனது பயணங்கள் வேறுவகையானது. மாதக்கணக்கில் சிங்கப்பூர், மலேசியா, ஹொங்கொங், ஜப்பான் என பல்வேறு நாடுகளுக்கு அலைபாய்ந்த கதை.
ஹொங்கொங்கிலிருந்து ஜப்பானுக்கு எல்லாம் அவ்வளவு பாதுகாப்பற்ற படகுகளில் கடல் பாய்ந்த கதையது. பின்னர் ஒரு பெண்மணியின் பாஸ்போட்டில் மூன்று பிள்ளைகளில் ஒருவராக அமெரிக்காவின் எல்லைக்குள் புகுந்தவன். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு ஏஜென்சிகள் என கைமாறலும், ஏற்கனவே இருப்பவர்களின் கதைகள் இன்னும் அச்சமூட்டலும் என்பது மட்டுமின்றி சில ஏஜென்சிக்காரர்கள் கூட்டிக்கொண்டு வருகின்ற பெண்கள் மீது 'பாய்ந்த' காட்சிகளென அவனின் சொற்களில் சொல்வதென்றால் 'பிஞ்சிலே வெம்பிய' கதைகள் அவை.
இவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தப்பிவந்து தமது வாக்குமூலங்களைச் சொல்ல முயன்றவர்கள். ஆனால் இன்னொருபுறத்தில் எல்லைகளைக் கடக்காது, இடையிலே பயணங்களை முடித்தவர்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த எண்ணிக்கை கூட சரியாக ஆவணப்படுத்தாது சமுத்திரங்களும், பனிப்பாலைகளும், வெற்று நிலங்களும் மட்டுமே அவர்களின் கதைளையும் கடைசிமூச்சின் கணங்களையும் அறியும்.
இன்றும் கனடா, ஆஸ்திரேலியாவிற்கென எப்போதும் உடையக்கூடிய கப்பலில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பல்வேறு மக்கள் எல்லைகளைக் கடக்கப் புறப்பட்டபடியே இருக்கின்றார்கள். தமது உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு எல்லாவற்றையும் விட்டது விட்டபடி வெளிக்கிடும் இவர்களிடமிருக்கும் இறுதி நம்பிக்கையும் அதே உயிராகவும் இருப்பதுதான் எத்தகை அவலமானது.

(May 09, 2016)

ஈழ இலக்கியம் குறித்த எதிர்வினை

Tuesday, May 08, 2018

எப்போதும் உரையாடல்கள் அவசியமானவை. அதுவும் பாடசாலையில் தமிழ் கற்பித்த ஆசிரியரோடு விவாதிப்பது என்பது இன்னும் சுவாரசியமானதுதான் அல்லவா?

(1) நமது ஈழத்து/புலம்பெயர் சூழல் ஏன் நம் முன்னோர்களைக் கைவிட்டதென்பதை அறிவதற்கு சில வரலாற்றுக் காரணங்களைக் கவனிக்காமல் நகரமுடியாது. முக்கியமானது நமது 30 வருடகால ஆயுதப்போராட்ட வரலாறு. உயிர் தப்புவதே பெரும் விடயமாக இருக்கும்போது, இலக்கியம்/வாசிப்பென்பது  பெருமளவு நிகழாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் நாம் போரை மட்டும் காரணங்காட்டி தப்பிவிடவும் முடியாது. ஆகவே இன்னொரு காரணம் நம் முன்னே விரிகின்றது. அது நம் தொடர்ச்சியான விமர்சன மரபு கட்டியமைக்கப்படாமல் விடுபட்டது பற்றியது. ஏன் நாமின்றும் முற்போக்கு இலக்கியக் காலத்தை (அதன் பலவீனங்களைத் தவிர்த்து) இப்போதும் பேசுகின்றோம் என்றால் அது  ஒரு இறுக்கமான விமர்சனமரபை தனக்கென முன்வைத்தது. அப்படி ஒரு தீவிரம் இருக்கும்போது அதை மறுத்து வேறு பல விமர்சன மரபுகள் எழுதலும் இயல்பானது.

கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் ஒரு விமர்சன மரபை உருவாக்க, அதிலிருந்து வெளியேறி/வெளித்தள்ளி மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றோர் வேறொன்றை உருவாக்கினர். அதேசமயம் இந்த உரையாடல்கள்  கே.டானியல் சிவசேகரம், நுஃமான், மு.பொன்னம்பலம், அ.யேசுராசா, தெணியான் போன்ற எண்ணற்றவர்களை புனைவு/அபுனைவு சார்ந்து எழுதவதற்கு முன்னகர்த்தி உதவியது. மேலும் இன்று முற்போக்கு இலக்கியக்காரர்கள் மீது விமர்சனம் இருந்தாலும், அவர்களே பலரைத் தொடர்ந்து முன்னிறுத்தியவர்கள் என்பது மறுக்கமுடியாது. அந்தப் பரம்பரையைச் சார்ந்தோமறுத்தோ  வந்தவர்கள் இன்றும் எழுதிக்  கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகச் சூழலில் கூட ஜெயமோகனை ஏதோ ஒருவகையில் சிலர் அங்கீகரித்துக்கொண்டிருக்க, எம் சூழலில் ஒவ்வொருவரும் எதிர்நிலைகளில் நின்றாலும் நுஃமானோ, மு.பொன்னம்பலமோ, சிவசேகரமோ, அ.யேசுராசாவோ என எந்த ஒருவருமே ஜெயமோகனை அவ்வளவு எளிதில் அங்கீகரித்ததில்லை. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஜெயமோகனை விமர்சித்தபடிதான் அவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஜெயமோகனைச் சார்ந்தே தமிழக எழுத்துலகம் ஒருவகையில் இயங்குகின்றதான பிரமை நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், நமது முன்னோடிகள் தமது சுயங்களை இழக்காமல் இருப்பதையிட்டு நாம் பெருமைகொள்ளவேண்டும் (ஜெயமோகனோடு தனிப்பட்டு நட்பாக இருக்கலாம். அது சிக்கலில்லை. எழுத்து என்று வரும்போது அதில் சமரசம் செய்துகொள்ளாத தன்மையை இங்கு குறிப்பிடுகின்றேன்).

(2) அ.இரவி போன்றோர்  உட்பட ஈழத்தில் இருக்கும் எமக்கு அடுத்த தலைமுறை கவனிக்காத விடயம் என்னவெனில், தமிழகத்தில் நிறைய எழுதுபவர்களும், தொடர்ச்சியாக முன்வைப்பவர்களும் மட்டுமே இலக்கியம் செய்கின்றார்கள் என்று நம்ப முயற்சித்துக்கொண்டிருப்பது. இலக்கியப் போக்குகள் பல்வேறுவகையில் இருக்கின்றன. அவர்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தால் அது மட்டுமே இலக்கியம் போன்ற பார்வைகள் நமக்கு தன்னியல்பிலேயே வந்துவிடும்.

இப்போது எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு போன்றவர்கள் வெகுசன ஊடகங்களிலும் (விகடன், தமிழ் இந்து,குமுதம், குங்குமம் - நகைச்சுவை என்னவென்றால் கருணாநிதி மற்றும் திராவிடக்கட்சிகள் துளியும் பிடிக்காத ஜெமோ அவர்களின் சார்பான குங்குமத்தில் எழுதுவதையும் நாம் 'அறம்' எனக்கொள்வோம்) எழுதுவதால் அவர்கள்  கருத்துவருவாக்கிகளாய் எளிதாய் ஆகியும் விடுகின்றனர். எப்படி தமிழ் இலக்கியம் சாதியாலும், ஆண்களாலும் மேல்நிலையாக்கம்  செய்யப்பட்டு, பிறர் விளிம்புநிலையாக்கப்பட்டபோது (தலித்துக்களும், பெண்களும்) தமக்கான இலக்கிய வகைமைளை உருவாக்கினார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

(3) இன்றும் கே.டானியல்தான் தலித் இலக்கிய பிதாமகனாய் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்றார். விமர்சன ஆய்வுமுறைகளுக்கு, முக்கியமாய் சங்ககால/திரைப்பட ஆய்வுகளுக்கு கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களே தமக்கு முன்னோடிகளென அ.மார்க்ஸ், ரவிக்குமார் மட்டுமின்றி ராஜ் கெளதமன், எம்.எஸ்.பாண்டியவர் போன்றவர்கள் கூட இவர்களை நன்றியுடன் பல்வேறு இடங்களில் நினைவுகூர்ந்திருக்கின்றனர். எனவே நாம் நமது கண்ணாடியாலா அல்லது வேறு யாருடைய கண்ணாடிகளுக்குள்ளாலா இலக்கியத்தைப் பார்க்கின்றோம் என்பதையும் நிதானமாய் யோசித்துப் பார்க்கவேண்டும்.

(4) நிறைய எழுதுவது, அது இதென்று பலமுறை எழுதி அலுத்தாயிற்று. திரும்பத் திரும்பச் சொல்வது ஈழத்துப் பராம்பரியம் குறைய எழுதினாலும் நன்றாக எழுதியவர்களை நமக்கு நினைவில் வைத்திருக்கக் கற்றுத் தந்திருக்கின்றது. ஏற்கனவே இதையொரு நீண்ட கட்டுரையில் விவாதித்ததுதான், தமிழகத்திலும் அப்படிப் பலர் ஒருகட்டத்தில் நிறைய எழுதிவிட்டு மறைந்துவிடுகின்றார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை பெருமளவு என்பதால், அந்த இடைவெளியை மற்றவர்கள் நிரப்புவதால் நமக்கு அந்த விலத்தல் வெளிப்படையாய்த் தருவதில்லை.

நாகார்ஜூனன், எம்.டி.எம், பிரேம் போன்றவர்கள் அப்படி ஒருகாலத்தில் தலைமறைவுக்குப் போனவர்கள். திரும்பி வந்தபோதும் அவர்களுக்கான இடம் இருந்திருக்கின்றது. அவர்களைப் பின் தொடர்பவர்கள், நீங்கள் இப்படி இடைநடுவில் போனவர்கள் உங்களை வரவேற்கமாட்டோம் என தெரிவித்தவர்களுமில்லை. மேலும் நிறைய எழுதவேண்டும், உற்சாகமாக எழுதவேண்டும் என்பதெல்லாம் நல்லதுதான். ஆனால் அவர்களால் மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும் என்று சொன்னால், வேறுவழியில்லை அப்படியில்லையென தெளிவாக மறுக்கவேண்டியிருக்கின்றது.

ப.சிங்காரம்  எழுதியது இரண்டு நாவல்கள்தான். புயலிலே ஒரு தோணியும், கடலுக்கு அப்பாலும். ஆனால் ப.சிங்காரத்தை மறுத்து நாம் இலக்கியம் பேசமுடியுமா? க.ஆதவனும் காகித மலர்கள், என் பெயர் ஆதிசேஷன் என இரண்டே இரண்டு நாவல்களைத்தான் எழுதியிருக்கின்றார்.. ஆதவனின் சிறுகதைகளை விடுவோம். இந்த நாவல்களில் மட்டுமே ஆதவன் என்றென்றைக்குமாய் உயிர்த்திருக்கமாட்டாரா என்ன? இப்படி குறைவாய் எழுதிய எண்ணற்ற உதாரணங்கள் நம்மிடையே இருக்கின்றன.

(5) அசோகமித்திரனைப் போல, ஜெயகாந்தனைப் போல நம்மிடையே ஒருவரும் எழுத மட்டும் செய்யும் வாழ்வுமுறையைத் தெரிவு செய்யவில்லை என்பது சற்றுக் கவலைதான்.   எனினும் இப்போது நம்மிடையே ஷோபா அப்படியான ஒரு வாழ்வைத்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அதற்காய் எப்போதும் எழுதிக்கொண்டிருந்தால் நல்ல இலக்கியம் வந்துவிடுமா என்ன? ஷோபா இவ்வளவு காலத்தில் 3 நாவல்களே எழுதியிருக்கின்றார். குணா கவியழகனும் குறுகியகாலத்தில் 3 நாவல்களை எழுதி 4ம் நாவலுக்கும் தயாராகிவிட்டார். எனக்கு இருவரது நாவல்களும் பிடிக்கும். எந்த இடத்திலும் 'உச்சம்' அடைந்தார்கள் எனச் சொல்லவுமில்லை. சொல்லப்போவதுமில்லை. உச்சமடைந்தால் பிறகேன் ஒருவர் எழுதவேண்டும்?

ஷோபாவும் குணாவும் எழுதிய இந்த 6 நாவல்களை மட்டுமே வைத்து தமிழகத்தில் நிறைய நாவல்களை எழுதியவர்களோடு உரையாட இப்போதும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனக்குப் பிடித்த எஸ்.ராமகிருஷ்ண்னன் ஆனாலென்ன அல்லது ஜெயமோகன் ஆனாலென்ன, சாருவாயிருந்தலென்ன அவர்கள் இதுவரை எழுதிய நாவல்கள் எல்லாம் உச்சத்தையா தொட்டிருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனின் எல்லா நாவல்களையும் (அண்மைய இடக்கை வரை) வாசித்தவன் என்றளவில் அவரின் உபபாண்டவமும், யாமமும், நிமித்தமும் தவிர மிகுதி எல்லாம் என்னைக் கவராதவை. முக்கியமாய் சஞ்சாரமும், இடக்கையும் ஏதோ ஒவ்வொரு வருடமும் ஒரு நாவலை எழுதிவிடவேண்டும் என்று  கட்டாயத்திற்காய் எழுதியவைபோலவே தோன்றியது. எனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளர் அவர் என்றாலும் இந்த நாவல்களை அவரின் சரிவாகப் பார்க்கின்றேன்.   சரி அதை விடுவோம்.

நம் தமிழ்ச்சூழலை பேயாய் பிடித்தாட்டும் ஜெயமோகன் எத்தனை நல்ல நாவல்களைத் தந்திருக்கின்றார். விஷ்ணுபுரமும், கொற்றவையும், காடும், ஏழாம் உலகமும் மட்டுமே கவனிக்கத்தக்கவை. சாருவின் ஜீரோ டிகிரியையும் (வேண்டுமானால்) ராசலீலாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இவர்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றோம் என்றால் இவர்கள் தங்களைச் சுற்றி பேசுபவர்களை உருவாக்கிவைத்திருக்கின்றார்கள். அவ்வப்போது இவர்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டாலும், 'சமாதான காலத்தில்' மாறி மாறி புகழ்ந்தும் கொள்கின்றனர். ஹிட்லர் காலத்தில் கோயாபஸ் செய்ததுபோல, இவர்களைச் சுற்றியே தமிழ் இலக்கியம் சுற்றிக்கொண்டிருப்பதாய் ஒரு பிரமையே நாமும் அறிந்தோ அறியாமலோ கட்டமைக்கத் தொடங்குகின்றோம்.

ஜெயமோகன் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுதிய சிறுபுத்தகங்களை அவதானமாக ஒருவர் வாசிப்பாராயின் அவர் அந்த ஆளுமைகளைப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டே தன்னைப்பற்றிய விம்பங்களைக் கட்டியமைப்பதைக் காணமுடியும். இதை சுந்தர ராமசாமி முன்னரே செய்தார் என்றாலும், அவருக்கென்று ஒரு பெயர் வந்ததன்பிறகே சு.ரா செய்தார். மற்றது ஜெமோ மாதிரி அவர் இந்தளவிற்கு தன்னைத்தானே புகழ்ந்தவருமில்லை. இன்னும் நான் சொல்வதை நம்பவில்லை என்றால் ஜெமோ எழுதிய 'நாவல்'  என்கின்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்துப் பாருங்கள். தமிழிலேயே 'நாவல்'களே இதுவரை எழுதப்படவில்லை எனத்தொடங்கி தனது நாவல்தான் முதல் நாவல் என்பதை நுட்பமாய் செருகியிருப்பார்.

மேலே ஜெமோ, எஸ்.ரா, சாரு  பெயர்களைக் குறிப்பிடுவதால் அவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றேன் என்பதல்ல அர்த்தம். அவர்களுக்கான இடம் அவர்களுக்கிருக்கின்றது. ஆனால் அவர்கள் மட்டுமே இலக்கியம் படைக்கின்றார்கள் என்று நம்புகின்றவர்க்காய் அதைக் காவிக்கொண்டு திரிபவர்களுக்காய் இவற்றையெல்லாம் குறிப்பிடவேண்டியிருக்கின்றது.

(6) இதையெல்லாம் குறிப்பிட்டதால் நாம் ஏதோ சரியாக செய்துகொண்டிருக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். நம்மைப் போன்ற எழுதுகின்ற எத்தனை பேர் நமது சக படைப்பாளிகளின் படைப்புக்களைத் தேடி வாசிக்கின்றோம். விவாதிக்கின்றோம். பகிர்ந்துகொள்கின்றோம் என எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? சரி நமது முன்னோடிகளை விடுங்கள். இத்தனை நாவல்களைப் பட்டியலிடுகின்ற பெயர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் சமகாலத்தைய நாவல்களை வாசித்தும் எழுதியுமிருக்கின்றார்கள்.

படைப்பாளியாக இருக்கும் எனது ஆசிரியரே அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டிலிருக்கும் விமல் குழந்தைவேலுவின் நாவல்களை இன்னும் வாசிக்கவில்லை என்பது எவ்வளவு துயரமானது. நமது அரசியல் முரண்களை மட்டும் வைத்துக்கொண்டு, வாசிக்காமலே இரண்டு வரி எழுதிவிடுவதுதானே நமது இன்றைய இலக்கிய செல்நெறியாக இருக்கின்றது. சுகனைப் போன்றோர் சயந்தனைப் போன்றோரின் நாவல்களை சில பக்கங்கள் வாசித்தவுடனேயே நிராகரிக்கின்றனர் என்றால், குணாவிற்கோ தமிழ்நதியிற்கோ, ஜீவமுரளியையோ அல்லது நடேசனையோ வாசித்து விமர்சிக்கின்ற மனோநிலை இருக்கின்றதா? இங்கேதான் நமது விமர்சன மரபு தலைகுப்புற வீழ்கிறது என்பதோடு, சக படைப்பாளிகளை நம்மால் மனமுவந்து விமர்சித்து வரவேற்க முடிகிறதா என்பதையும் நாம் நம்மை நாமே கேட்கவேண்டும்.

இத்தனை எழுதிக்குவிக்கும் அ.முத்துலிங்கம் எத்தனை ஈழத்துப்படைப்பாளிகளை அறிமுகஞ்செய்திருக்கின்றார் என எப்போதாவது எவரேனும் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா?  தமிழ் பேசாத எழுத்தாளர்களையெல்லாம் தேடித்தேடி நேர்காணலும் கண்டு மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றார். ஆகக்குறைந்தது அருகில் இருக்கும் தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்தாவது ஓரிரு வரிகளாவது எழுதியதுண்டா?

மேலும் வெற்றிச்செல்வியின் எழுத்துக்களை மட்டும்  வாசிப்பதோடு நிறுத்தாது, தமிழ்க்கவியையும், தமிழினியையும் எவ்வித முன் நிபந்தனையற்றும் என் ஆசிரியரைப் போன்றவர்கள் வாசிக்கவேண்டும். தம் வாசிப்புக்களை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும். விவாதிக்கவேண்டும். அதுவே நம் சூழலுக்கு வளத்தைத் தருமே தவிர, நம் முன் அனுமானங்களோடு அவர்களின் அரசியலை முன்வைத்து நிராகரிப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.  நமது அரசியலுக்கு சார்பாக இருப்பதால் சிலரை உச்சிமுகர்வதால் வேண்டுமெனில் நமக்கு சந்தோசம் வரக்கூடும். ஆனால் இலக்கியத்திற்கு எந்தவகையிலும் பயன் தராது என்க.

(7) நம் காலத்தில் அண்மைய வரவுகளில் முக்கியமானது சயந்தனின் ஆதிரை. அவரின் சமகாலத்தவனாக இருப்பதால் என்னளவில் பெருந்தாக்கத்தை அது ஏற்படுத்தாவிடினும், இந்த நாவலை நன்குபிடித்த சில நண்பர்களிடம் இது குறித்து ஒரு உரையாடலைத் தொடர்ச்சியாகச் செய்யவேண்டுமெனவே சொல்லியிருக்கின்றேன். ஏனெனில் இவ்வாறுதான் தமிழகத்தில் பலருடைய நாவல்களை திரும்பத்திரும்பப் பலர் உரையாடித்தான் அவற்றை மறுக்கமுடியாத நாவல்களாய் நம்மிடையே ஆக்கியிருக்கின்றனர்.

(8) புலம்பெயர்/ஈழத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும்போது மிகக்குறைவான படைப்புக்களே வந்தபோதும் அவற்றைக் கூட நாம் திரும்பித் திரும்பிப் பேசமுடியாச் சூழலை நாம்தான் உருவாக்கியிருக்கின்றோம். அதிலிருந்துதான் நாம் மீளவேண்டுமே தவிர, தொடர்ச்சியாக எழுதவில்லை, முழுநேரமாய் எழுதவில்லை என அனுங்கிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை.

அசோகமித்திரனும், ஜெயகாந்தனும் தமிழகத்திலேயே இருக்கட்டும். நமக்கு மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்களே போதும். இப்போதும் நம்மிடையே  ஷோபா சக்தி, குணா கவியழகன் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் என்றாலும், நாம் பெருமைகொள்ள இருக்கின்றார்கள். இனியும்  புதியவர்கள் வருவார்கள், அது சுடரேந்திய தொடரோட்டம். நிகழ்ந்தபடியே இருக்கும்.

(அ.இரவியின் பதிவிற்கு எழுதிய எதிர்வினை இது.
https://www.facebook.com/iravi.arunasalam/posts/10154879141124036)

(Dec 20, 2016)

பட்டியல்..

பட்டியல் இடுவது என்பது ஒரு வாசகருக்கு, தான் வாசித்ததை/பார்த்ததை/அனுபவித்ததைப் பகிர்வதற்குரிய உரிய விடயமே தவிர, படைப்பவர்க்கு அது பெரிதாக எதையும் தந்துவிடப்போவதில்லை (அவ்வாறே விருதுகளும் எனக் கொள்க). சிறுபத்திரிகைச் சூழலில் இருந்து வந்தவர்கள் அல்லது அதன் மீது ஒரளவு மதிப்பிருப்பவர்கள் இப்போது விகடனிலோ அல்லது இந்துவிலோ தம் பெயர்களைப் பார்த்து புளங்காகிதம் அடைவதில் அப்படி என்ன இருக்கிறதென யோசித்துப் பார்க்கின்றேன்.

இப்போது எழுதுவதற்கு எத்தனையோ தளங்களிலிருந்தாலும்  நினைத்த நேரத்திற்கு வரும் 'காலத்திலோ' அல்லது 'ஆக்காட்டி' போன்ற சிறுசஞ்சிகைகளிலோ ஆக்கம் ஒன்று வெளிவரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னைப் பொருத்தவரையில் வித்தியாசமானது.  தமிழகத்தில்  (கோணங்கி கேட்டும் ஒரு படைப்பேனும் இன்னும் அனுப்பாதது ஒருபுறமிருக்க) கல்குதிரையிலோ அல்லது ஹரியின் மணல் வீட்டிலோ ஒரு ஆக்கம் வரும்போதோ அதுவே கூடிய நிறைவை அளிக்கக்கூடியதாக இருக்குமென நம்புகிறேன். அப்படி ஒரு காலத்தில்  கெளதம சித்தார்த்தனின் 'உன்னதத்தில்' அடிக்கடி எழுதிக்கொண்டிருந்த காலமும் அற்புதமானது.

எல்லோரும் அப்படித்தான் இருக்கவேண்டும்/ எழுதவேண்டும் என்பதல்ல  இதன் அர்த்தம். சிறுபத்திரிகை பராம்பரியத்திலிருந்து வருகின்றவர்கள்/ அந்தச் சூழலை மதிப்பவர்கள் என்பதில் இப்போதும் பெருமைகொள்ளும் என்னைப் போல இன்னும் சிலரேனும்  இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இதன் பின்னணியில் இருந்து வருகின்றவர்கள் இயன்றளவு தமது சஞ்சிகைகளை வாங்குங்கள் வாங்குங்கள் என்றோ அல்லது நான் மட்டுமே கலை இலக்கிய சேவை செய்கின்றேன் என்றோ என்னை இந்தத் தமிழ்ச்சமூகம் மதிப்பதேயில்லை என்றோ சும்மா அலம்பிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

ஏன் பட்டியலால் படைப்பவர்க்கு எதுவும் நிகழ்ந்துவிடாதென்பதற்கு நானேஓரு நல்ல உதாரணம். எஸ்.ராமகிருஷ்ணன்  2008ல் சிறந்த பத்துத் தமிழ்ப்புத்தகங்கள் என ஒரு பட்டியலிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற ஒரேயொரு கவிதைத் தொகுப்பு என்னுடையதென நினைக்கின்றேன். அந்தத் தொகுப்பிற்கு  'ஏலாதி' விருதும் கிடைத்திருந்தது.

பட்டியலுக்குள்ளும், விருதுக்கும் உரியதான ஒரு தொகுப்பின் பிறகு நானேன் கவிதைகள் எழுதி வெளியிடவில்லை என யோசித்துப் பார்க்கின்றேன். ஏற்கனவே எழுதிய தொகுப்பைத் தாண்டாவிட்டால் இன்னொன்றை தொகுக்காமல் இருப்பது சிறந்தது என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், இங்கே சொல்ல வருவது என்னவென்றால் விருதாலும், பட்டியலாலும் எழுதுகின்றவருக்கு எந்தப் பயனும் பெரிதாகக் கிடைப்பதில்லை என்பதுதான். ஏற்கனவே நாம் எழுதியவற்றை  அழித்தும் /சிதைத்தும், புதியதைத் தேடிப்போவதைத் தவிர பெரிதாய் என்ன திருப்தி எழுத்தில் நமக்கு வந்துவிடப்போகின்றது?

(Dec 29, 2016)

எழுதி அனுப்பாத கடிதம்

Monday, May 07, 2018

'காலம்' ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு,
தாங்கள் எழுதிவரும் 'பாரிஸ் அனுபவங்களை' நாம் தொடர்ந்து வாசித்து வருகின்றோம். அண்மையில் பொன்மலர் அன்ரி (உங்களுக்கு அக்கா என்றால், எமக்கு அன்ரிதானே) அவர்கள் பற்றி எழுதிய பதிவில், அண்ணன் தம்பிமார் ஒன்றாய் பத்துபேரிருக்கும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்துவந்தாலும், நீலப்படம் ஓடும்போது அண்ணன் பார்க்கும்போது, தம்பி அறையில் இருக்கமாட்டான், அவ்வாறே தம்பி பார்க்கும்போது, அண்ணன் வெளியில் போய்விடுவான் என்று எழுதப்படாத 'ஒரு விதி' இருந்ததாக நுட்பமாய் அவதானித்து எழுதுகின்றீர்கள்.

முன்னர் கூட, ஒரு பதிவில் பாரிஸில் நிர்வாண விடுதியிற்குப் போனதுபற்றியும், எல்லாவற்றையும் இரசித்துப் பார்த்தபின், கொடுப்பதற்கு காசில்லாது அங்கிருந்த பவுண்சர்களால் வெளியே வீசியெறியப்பட்டதையும் கூட விபரித்திருக்கின்றீர்கள்.
இவ்வாறு வாழ்க்கையை அதன் எல்லாப் பக்கங்களோடும் அனுபவித்து இரசித்துவிட்டு, எங்களைப் போன்றவர்கள் 'வராது வந்த மாமணியை'ப்போல எப்போதாவது பக்கத்திலிருக்கும் கரீபியன் தீவுகளுக்குப் போய், அங்கிருக்கும் அணங்குகளோடு ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்துப்போடும்போதுமட்டும் 'என்னடா அங்கே செய்கின்றீர்கள், வரவர கெட்டுப் போகின்றீர்கள், கெதியாய் கனடா வந்து சேருங்கள்' என்று மட்டும் மறக்காமல் அறிவுரை கூறுகின்றீர்களே, இது நியாயமா?
இதையெல்லாம் ஏன் எம்மைப்போன்றவர்கள் செய்கின்றோம் என நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? உங்களைப் போன்ற முன்னோடிகளுக்கு கடலளவு அனுபவங்கள் இருக்கும்போது, பின் தொடர்ந்து வரும் எங்களுக்கு அதில் குளமளவு கூட இல்லையென்றால் பிறகு எப்படி உங்களின் வாரிசுகளென எம்மை அழைத்துக்கொள்ளமுடியும்? இப்படியான எங்கள் கஷ்டம் புரிந்தால் நீங்கள், ஒருவாரம் இடம் பார்க்கச் செல்லும் எம்மை ஒரு மாதம் ஆறுதலாக இருந்துவிட்டு வாருங்கள் என்றல்லவா -சாபத்திற்குப் பதிலாக- வாழ்த்துச் சொல்லி அனுப்பவேண்டும்.
மேலும் இயல்விருதுக்காய் வரும் ஜெயமோகனையும், அவரது துணைவியாரையும் இங்கே அழைப்பதற்கு, 'காலம்' இதழ்கள் விற்று வந்த ஒரு பகுதியையும் நீங்கள் அர்ப்பணித்திருப்பதாய் அண்மையில் ஒரு கதை கேள்விப்பட்டோம். அது கதையா, நிஜமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஏன் நீங்கள் 'காலம்' இதழில் எழுதும் எங்களைப் போன்றோரில் ஒருவரை ஒவ்வொருவருடமும் குலுக்கல்முறையில் தேர்ந்தெடுத்து -இலங்கையிற்கோ இந்தியாவிற்கோ இல்லாவிட்டாலும்- பக்கத்திலிருக்கும் கியூபாவிற்கோ, ஜமாக்காவிற்கோ அனுப்பக்கூடாது. எவ்வளவு காலந்தான் நாங்கள் ஸ்காபரோவிற்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது?

ஜெயமோகன் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு மூன்று முறை வந்துவிட்டார், எங்களைப் போன்றவர்கள் நீங்கள் வசித்த பாரிஸைக்கூட இதுவரை ஒருமுறைகூட பார்க்க முடிந்ததில்லையே? அது எவ்வளவு துயரமான விடயம் என்பதை அறியாதவரா நீங்கள்? இந்தியாவிலிருப்பவர்களை இங்கே அழைப்பதற்கு அ.மு போன்ற பல புரவலர்கள் இருக்கின்றார்கள். எம்மைப் போன்றவர்களை எங்கேனும் அனுப்ப உங்களைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்பதை உங்களின் வாரிசுகளாகத் துடிக்கும் எம்பொருட்டு என்றேனும் சிந்தித்ததுண்டா?
ஆகக்குறைந்தது, இப்போது பல தேசங்களுக்கு அலைந்து திரிந்தால்தான், பிற்காலத்தில் உங்களைப் போன்று எழுத எங்களுக்கு ஏதாவது விடயங்கள் அகப்படும். இல்லாவிட்டால், பிறகு நமது எதிரிகள் நாம் எதையும் எழுதாமல் இருக்கும்போது, 'பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்று நமக்குப் பிடித்தமான கம்பன் கூறியதையே வைத்து எம்மைக் கேலி செய்வார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? அது எவ்வளவு அவமானமாய் பிறகு எங்களுக்கு ஆகிவிடும்.
இறுதியாய், இம்முறை 'காலம்' சார்பாக எங்களில் ஒருவரை கரீபியன் தீவுகளுக்கு அனுப்பவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். இல்லாவிட்டால் ஜெயமோகன் இங்கே வந்து இறங்கும்போது ஏர்போட்டில் கறுப்புக்கொடி காட்டுவதாய்த் தீர்மானித்திருக்கின்றோம். இப்படிக்கு, 'காலத்தின்' வாரிசுகள் (Apr 17, 2015)