கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 08

Sunday, July 02, 2023

 

குடும்பம் என்கின்ற அமைப்பில் பெண்களே அச்சாணிகளாய் இருக்கின்றார்கள். அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் வழிநடத்தல் இல்லாது போகும்போது குடும்பம் என்ற அமைப்பு உடையத் தொடங்குகின்றது. அப்போதும் அந்தச் சிதைவைச் சரிசெய்து அடுத்த தலைமுறைக்கு வழிநடத்தவும் இன்னொரு பெண்ணே பெரும்பாலும் தேவைப்படுகின்றார். மனிதகுல வரலாற்றில் வேட்டையாடும் காலம்வரை பொறுப்புக்கள் திணிக்கப்படாது சுதந்திரமாக இருந்த பெண், வேளாண்மைச் சமூகமாக வாழமுற்பட்டபோது எப்படி குடும்பம்என்ற அமைப்பால் உள்ளிழுக்கப்பட்டாள் என்பது நாமனைவரும் ஏற்கனவே அறிந்தே இருக்கின்றோம்.

அசோகமித்திரனின் ‘மணல்என்கின்ற குறுநாவலில் வரும் அம்மா என்கின்ற பாத்திரமே இந்தக் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் இணைத்துக் கொள்ளும் முக்கிய கண்ணியாக இருக்கின்றார். அம்மாவின் பெரும்பாலான நேரம் வீட்டுச் சமையலறையிலேயே கழிந்துவிடுகின்றது. அவருக்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும். இரண்டு பெண்கள் திருமாணமாகிவிட்டனர். இப்பெண்களின் தகப்பனும், இரண்டு ஆண்களும் உழைப்பவர்களாக இருப்பினும், எவ்வித பொருளாதார சுதந்திரமும் இல்லாது வீட்டுக்குள் வாழும் அம்மாவே எல்லோரையும் கவனித்துக் கொள்கின்றார். பிரச்சினைகள் வரும்போது அந்த அழுத்தங்களைக் குறைத்து குடும்பத்தைக் கொண்டு செல்கின்றார்.

இந்தக் குடும்பத்தில் திருமணம் செய்துவிட்டுப் போன ஒரு பெண், குழந்தைகளுடன் வீட்டுக்குத் திரும்பி வருவதுடன் இக்குறுநாவல் தொடங்குகின்றது. ஏதோ சிறுவிடுமுறையில் தன் மகள் வனஜா வந்திருக்கின்றார் என்று நினைக்கும் அம்மாவிற்கு, வனஜா தனது கணவரோடு சண்டை பிடித்து வந்திருக்கின்றார் என்பது புரிகிறது. ஏற்கனவே வீட்டில் இருக்கும் இரண்டு மகன்கள், இளையமகளோடு வனஜாவையும் பார்க்கவேண்டிய பொறுப்பு அம்மாவுக்கு வந்துவிடுகின்றது.

மூன்று ஆண்கள் வீட்டில் இருந்தாலும், அந்த ஆண்களுக்கு இடையில் ஏதும் பெரிய பேச்சுவார்த்தை இருப்பதில்லை. இளையமகன் அப்பு வித்தியாசமானவன். வீட்டில் இருந்து அதிகம் அந்நியப்பட்டவனாக இருக்கின்றான். மூத்தமகன் மணி கிட்டத்தட்ட அப்பாவைப் போன்றவன். வேலையில் கிடைக்கும் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிடும் இன்னும் மணமாகாத மகன்.

மணிக்கு வீட்டில் பெண் பார்க்கின்றனர். மணிக்கு அந்தப் பெண்ணைப் பிடித்தாலும், அம்மாவுக்கு அந்தப் பெண் தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை என்கின்ற எண்ணம் இருக்கின்றது. அம்மாவின் கடைசிமகள் சரோஜா மருத்துவம் படித்துக்கொண்டிருப்பவள்.

இவ்வாறு குடும்பம் ஒவ்வொரு பக்கமாய் இழுபடுகின்றபோது அம்மா சட்டென்று இறந்து போகின்றாள். குடும்பத்தின் எல்லாக் கண்ணிகளும் சிதறுகின்றன. மணியின் திருமணம் நின்றுபோகின்றது. திருமணம் செய்த பெண்கள் சொத்தில் பங்கு கேட்கின்றார்கள். இளையமகள் சரோஜாவின் மருத்துவ மேற்படிப்பு கட்டுவதற்கு பணமில்லாததால் இடைநிறுத்தப்படுகின்றது. அம்மாவின் இரண்டாவது மகன் வேறொரு சாதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டுப் போய்விடுகின்றான்.

குறுநாவல் இறுதியில், ஒரு வருத்தக்கார அப்பா, இன்னமும் திருமணம் செய்யாத மூத்தமகன் மணி, படிப்பை மிகவும் நேசித்து, இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு வீட்டுக்குள் அம்மாவின் பொறுப்பை எடுத்துக்கொண்ட சரோஜா போன்ற உயிர்ப்பற்று வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்வதுடன் முடிகின்றது.

ந்த நாவலில் அசோகமித்திரன் சம்பவங்களை மட்டும் கொண்டு நமக்கு விபரிக்கின்றார். எந்தப் பாத்திரத்துக்குள்ளும் இறங்கி தத்துவவிசாரணைகள் செய்வதில்லை. இவர்கள்தான் மனிதர்கள்
, இவ்வாறுதான் வாழ்க்கை இருக்கின்றது என்ற சித்தரிப்பை மட்டும் நமக்கு எழுத்தால் காட்டுகின்றார். நாம் காட்சிச் சிதறல்களாய் காலத்தில் நகரும் ஒரு வாழ்வின் பகுதியை மெளனமாகப் பார்த்துக் கொள்கின்றோம். இந்த நாவல் 1969இல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு 50 வருடங்கள் ஆன பின்னும், நம் குடும்பங்களைத் தாங்கிக்கொள்ளும்/இணைத்துக்கொள்ளும் கண்ணிகளாக நம் அம்மாக்களே இருப்பதை எண்ணிப் பெருமூச்சுவிடுகின்றோம். பெண்கள் இல்லாத வீடுகள் பொலிந்து செழிப்பதில்லை என்பதையும் கண்டுணர்கின்றோம்.

இப்படி நமக்கு குடும்பம் என்ற அமைப்புக்கு பெண்களே முக்கியமாக இருக்கின்றார்கள் என்று தெரிந்தும், நாம் அவர்களை இன்னும் சுரண்டுபவர்களாகவும், அவர்களுடன் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருக்கின்றோம். வீடுகளில் பெண்களின் சம்பளமற்ற உழைப்பையும், அவர்கள் நமக்கு வழங்கும் நிபந்தனையற்ற அன்பையும் கண்டும்காணாது, இன்னுமின்னும் அவர்கள் நமக்கு அள்ளி வழங்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். இந்த எதிர்ப்பார்ப்பை, நமது தடித்தனத்தைத்தான் அசோகமித்திரன் ஒரு குடும்பத்தின் வாழ்வை இங்கே சொல்வதன் மூலம் கேள்வி கேட்க விரும்புகின்றார் போலும்.

அசோகமித்திரன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரின் பெரும்பாலான நாவல்கள்/குறுநாவல்கள் தேடித்தேடி வாசித்திருக்கின்றேன். பிறரால் அவ்வளவு கவனிக்கப்படாத ஒற்றன்எனக்கு மிக நெருக்கத்திற்குரிய நாவல். பிரியமான எழுத்தாளர் என்றாலும் அவருக்கு இருக்கும் சில சனாதனமான கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை.

இதில் ஓரிடத்தில் சரோஜினி பரீட்சை எடுத்து பெறுபேறுகள் வந்தபின் தொடர்ந்து படிக்க முடியாது இருக்கும்போது, “பர்ஸ்ட் கிளாஸ்தான், ஒரு டிவாங்கியிருக்கிறாள். அப்பா பூணூலை எடுத்துக் காண்பித்தார். மூணு டி வாங்கினாலே இதுக்கு இல்லேன்னுடுவான். ஒரு டிக்கெல்லாம் அவ்வளவு சுலபமா?” என்று எழுதியிருப்பார். இது இந்தக் குறுநாவலில் வரும் ஒரு பாத்திரம் சொன்னாலும், அசோகமித்திரன் இதைப்பற்றி பிறகு எந்த இடத்திலும் தன் குரலில் அதற்கான நியாயம்/அநியாயம் பற்றிப் பேசுவதில்லை. அசோகமித்திரன் இறுதிக்காலத்தில் கூட பிராமணர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகின்றார்கள் என்கின்றமாதிரியான நேர்காணல் ஒன்றைக்கொடுத்து சர்ச்சைக்குள்ளானவர். இது ஒருவகையில் இடஒதுக்கீடு மீது அசோகமித்திரன் மீதிருக்கும் ஒவ்வாமை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு புனைவில் பாத்திரங்கள் political correctness இல்லாது பேசலாம். ஆனால் எழுத்தாளரின் குரல் என்பது மறைந்தும்/ மறையாமலும் பிரதியொன்றில் அரசியலைச் சொல்வதை தேர்ந்த வாசகரொருவர் அறிந்துகொள்வார்.

இவ்வாறே இன்னொரு இடத்தில் அப்பு அதுவரை வீட்டில் இருந்தபடி, அம்மாவின் ஒரு மாதத் திதி வரும் நாளன்று சரியாக வீட்டைவிட்டு வெளியே போய், வேறொரு சாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்வான். அதுவரை வீட்டோடு இருந்த, அம்மாவின் மீது நேசமுள்ள அப்பு அந்தநாளை தன் வாழ்வின் முக்கியமான தருணமொன்றிற்காக ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்? ஒருநாள் மேலதிகமாகக் காத்திருக்கமாட்டானா? இப்படி அப்புவின் பாத்திரத்தை எதிர்மறையாக (வேறொரு சாதியில் மணம் செய்வதால்) வாசகர்க்கு காண்பிப்பதிலும் அசோகமித்திரனின் அகமனது செயற்பட்டிருக்கின்றது என்று ஒரு வாசிப்பை நாம் செய்யலாம்.

அதேசமயம் பெண் பாத்திரங்களை, முக்கியமாக சரோஜினியை அசோகமித்திரன் நேர்த்தியாகப் படைத்திருப்பார். நிறையக் கனவுகள் இருக்கும் சரோஜினி அம்மாவின் மரணத்தோடு வீட்டுக்குள் முடங்கிப் போகின்றாள். திருமணம் செய்யாத இன்னொரு 'அம்மா'வாக அவள் அந்தக் குடும்பத்துக்கு பிறகு மாறியும் விடுகின்றாள் அவளுக்கு வயதும் ஏறிப்போகின்றது. கல்வி கற்கும்போது சிறகு விரித்த பறவையாத் திரிந்த அவளுக்கு வீட்டுக்குள் எப்போதும் இருப்பதும் மூச்சுமுட்டுகின்றது. தமையனிடம் வெளியே போய்விட்டு வரப்போகின்றேன் எனச் சொல்கின்றாள். அப்போது மணி 'காய்கறி ஏதும் வாங்கிவரப் போகின்றாயா?' எனக் கேட்கின்றான். அதற்கு சரோஜா, 'வெளியே போகின்றதுன்னாக் கூட, உங்களுக்கு உழைக்கத்தான் நான் போகணுமா?' என்று கேட்கின்றாள்.

இங்கே நம் பெண்களை குடும்பம் என்ற அமைப்புக்கு வெளியே சென்றுபார்க்க, உந்தித்தள்ளும் ஓர் அசோகமித்திரனைப் பார்க்கின்றோம். வீட்டுக்குள் உழைத்தது போதாது, வெளியே போவது என்றால் கூட 'உங்களுக்கு உழைக்கத்தானா?' என்று கேட்கும் பெண் குரலில். அவளுக்கென்ற ஓர் தனித்துவமான வாழ்வு இல்லையா என்ற கேள்வியே தொக்கி நிற்கின்றது. இந்த குரல், அசோகமித்திரனில் 'தண்ணீர்' நாவலில் வரும் சகோதரி பாத்திரங்கள், அனைத்து சோகங்கள்/ஏமாற்றங்களுக்கு அப்பாலும், தமக்கான வாழ்வைத் தெரிவுசெய்யும் இடங்களில் இன்னும் தெளிவாக ஒலிப்பதும் நினைவுக்கு வருகின்றது.

அசோகமித்திரன் எனக்குப் பிடித்தவர் என்றாலும், ‘மணல்என்கின்ற இந்த குறுநாவல் கவனிக்கத் தக்கதொரு புனைவு என்றாலும், அசோகமித்திரனை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் எனக்கில்லை. நான் முன்னோடியாகக் கொள்கின்ற ஒருவரை அவரின் பிரதிக்குள் இருக்கும் பலவீனங்களோடோ கொண்டாடமுடியும். ஆகவேதான் எனக்கு அசோகமித்திரன் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றார்.

அம்மா மணல்தான். அவரைப் பிறதோடோ/பிறரோடோ குழைந்து பூசிதான் குடும்பம் என்ற அமைப்பை வலுவாகக் கட்டமுடியும். ஆனால் மணல் தனித்து எதனோடும் ஒட்டாது சட்டென்று உதிர்ந்துபோகும்போது, குடும்பம் என்ற அமைப்பும், அதன் அத்தனை கனாக்களோடும் எளிதில் சிதறியும் போய்விடுகின்றது.

**************************


(May 07, 2023)


2 comments:

Latha Kuppa said...

Nicely said about women's role in our families.

7/02/2023 02:10:00 PM
இளங்கோ-டிசே said...

Thank you Latha.

7/02/2023 02:26:00 PM