இன்றைக்கு அப்பிள்களைப் பறிப்பதற்காக ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். சில பண்ணைகளில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிட்டு, எங்களை நாம் விரும்பிய மரக்கறிகளை, கனிகளைப் பறிக்க விடுவார்கள்.
'இதென்ன இவ்வளவு சின்னப் பூசணியையா கொண்டு போகப்போகின்றாய், நீ பெரிய மனிதன், இன்னும் பெரிதாக பறித்துக் கொள்' என்று சொன்னது அந்தக் குரல். சிரிப்பதென்றாலே எப்படி என்று கேட்கும் எனக்கு, நன்கு தெரிந்தவரைப் போலச் சொன்ன தொனியும், அந்தச் சொற்களும் சிரிப்பை வரவழைத்தது.
பிறகு அதைவிட நன்கு பெரிய பூசணியைப் பிடுங்கிக் கொண்டு wagon இல் ஏறியபோது இந்தப் பெண்ணோடும், அவரது தாயாரோடும் கொஞ்சம் கதைக்க முடிந்தது. நானும் நண்பரும் எங்கிருந்து இந்தப் பண்ணைக்கு வந்தோம் என்று கேட்டனர். அவர்களை விட நாங்கள் தொலைவிலிருந்து வந்திருக்கின்றோம் என்று வியந்தபோது, இல்லை நாங்கள் காரில்தான் வந்தோம், தூரம் பெரிதாகத் தெரியவில்லை என்றோம். அவர்கள் கார் இல்லாதபடியால் ஊபரில் வந்தோம் என்றார்கள்.
000000
நான் நெடுங்காலம் காரைச் சொந்தமாக வைத்திருப்பதைக் கைவிட்டிருந்தேன். ஆனாலும் குளிர்காலத்தில் எனது பஸ்கள் நேரந்தவறி வரும்போது எரிச்சல் வரும். பத்து நிமிடத்தில் பேரூந்தில் போய்விடும் தூரத்தில் இருக்கும் வீட்டுக்காய் ஒரு மணித்தியாலம் எல்லாம் சிலவேளைகளில் காத்திருந்திருக்கின்றேன்.
இப்படி நான் பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது அறிமுகமில்லாத ஒருவர் எனக்காய் தன் காரை நிறுத்தி ride தருவார். பின்னர் காலையில் அப்படி பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது பலமுறை என்னை ஏற்றிக் கொண்டு அவர் போகும் தூரம் வரை கூட்டிச் செல்வார். அந்தக் கருணை எல்லாம் எல்லோருக்கும் எளிதில் கை வராதது.
நான் சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, சதுரங்கப் போட்டியில் பங்குபெற யாழ்நகருக்கு எங்கள் ஊரிலிருந்து செல்வேன். ஆஸ்மாவில் பீடிக்கப்பட்ட என்னைப் பெற்றோர் சைக்கிளோட அவ்வளவு அனுமதிப்பதில்லை. அத்துடன் சிறுவயது என்பதால் என்னை பக்கத்து வீட்டு அக்காதான் இந்தப் போட்டிகளுக்கு அப்பாவிற்கு நேரமில்லாதபோது அழைத்துச் செல்வார். அவருக்கு என்னை விட ஏழெட்டு வயது கூட இருக்கும். அப்படிப் போகும்போது (உயர்தரத்தில் வர்த்தகம் படித்துக்கொண்டிருந்தார்) எனக்குப் பல கதைகள் சொல்லி வருவார்.
ஒருமுறை 'உனக்குத் தெரியுமா, வெளிநாட்டில் காரில் வெறுமையான இருக்கைகளோடு போகும்போது, அவர்கள் காரை இடைநடுவில் நிறுத்தி தெருவில் நிற்பவரை எல்லாம் அழைத்துச் செல்வார்கள்' எனச் சொன்னார். அது எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது. ஆனால் அகதியாய் உள்ளூரில் அலைந்து பிறகு கனடாவுக்கு வந்தபோது இப்படியான ஒரு நிகழ்வையும் பார்க்காதது எனக்கு மிக ஏமாற்றமாயிருந்தது. நான் நினைக்கின்றேன் அந்த அக்கா Hitchhiking செய்வது பற்றித்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று.
இப்போது அந்த அக்கா இலண்டனில் இருக்கின்றார். அவர் தன் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றிய கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் இன்றும் 'உள்ளம்' என்ற நல்லதொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அக்காவும், வளர்மதி சனசமூக நிலையமும் வாழ்க!
000000
பண்ணை wagonஇல் எம்மோடு வந்த இந்தப் பெண்ணிடமும் அம்மாவிடவும் நாங்கள் உங்கள் வீட்டுப் பக்கமாய்த்தான் போவோம், உங்களுக்கு சம்மதமெனில் நாங்கள் உங்களை அங்கே கொண்டு போய் இறக்கிவிடுகின்றோம் என்றோம். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வரும் வழியில் இந்தப் பண்ணை தனக்கு மிக நெருக்கமான உணர்வைத் தருகின்றது என்றார். எங்களுக்கும்தான் என்று இந்தப் பண்ணையில் நீண்டு விரிந்திருந்த சூரியகாந்தி தோட்டத்தில் கிறங்கிப் போயிருந்த எனது நண்பரும் சொன்னார்.
அந்தப் பெண் தாங்கள் சீனாவில் (நகரின் பெயர் மறந்துவிட்டேன்) ஒன்றிலிருந்து வந்தவர்கள் என்றார். இந்த நகரத்து அப்பிள்களைப் போல, தங்கள் நகரம் லீச்சிகளுக்குப் பிரபல்யம் வாய்ந்தது என்றார். அப்படி தரமான லீச்சிகளைச் சுவைத்த தங்களுக்கு இங்கு கடைகளில் விற்கும் லீச்சிகளைச் சாப்பிடுவது என்பது அவமானமாய் இருக்கிறது என்றார். நானும், மாம்பழங்களோடு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இங்கு அதே சுவையுடன் மாம்பழங்கள் கிடைப்பதில்லை என்றேன். பிறகு எங்கள் பேச்சு இந்நகரின் மோசமான பஸ்/மெட்ரோ சேவைகள் பற்றிய விமர்சனமாக நீண்டது. அருகிலிருந்த நண்பருக்கோ, இவன் ஒன்று இலக்கியவாதிகளை திட்டுகின்றான், மிச்ச நேரத்தில் இந்த நகரைத் திட்டுகின்றான் என்று மனதில் சிந்தனை போயிருக்கும். ஆனாலும் என்ன நாய் வாலை நிமிர்த்தவா முடியும்?
மகளையும், தாயையும் அவர்களின் வீட்டுக்கு அருகில் இறக்கியபோது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நிறைய நன்றிகளைத் தெரிவித்தார்கள். இறுதியில் சிறுவயதில் அந்த அக்கா சொன்ன விடயத்தை நான் செய்துபார்த்துவிட்டேன் என்பதில் ஒரு சிறு நிறைவு. இவ்வாறான தருணங்களில்தான் வாழ்வு வேறெதையும் விட அதிகம் நுரைத்து பெருகுகின்றது என நினைக்கின்றேன்.
நான் குளிரில் நடுங்கும் நாட்களில் என்னைத் தன் காரில் ஏற்றிப் போன பெயர் தெரியாத அந்த அண்ணாவையும் நன்றியுடன் இந்தப் பொழுதில் நினைவுகூர்கின்றேன்.
**************
(Sep 15, 2023)
0 comments:
Post a Comment