ஒருநாள் கழிந்தது..
இன்று ஹென்றி மில்லரின் 'The Books in my life'ஐ எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அதை இரவில் பெறுவதற்கு முன், நூலகத்தின் தமிழ்ப்பகுதிக்குச் சென்று நோட்டமிட்டேன். இங்கு எந்த நூலகத்துக்குப் போனாலும் அது நான் வழமையாகச் செய்கின்ற ஒரு சடங்கு. கோவிட்டுக்குப் பிறகு, கடந்த சில வருடங்களாக புதுத் தமிழ்ப் புத்தகங்களின் வரவைக் காணவில்லை. இங்கு மட்டுமில்லை, தமிழர்கள் நிறைய இருக்கும் (தமிழ் எம்பி/அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி) நூலகத்தில் கூட அண்மைக்காலத் தமிழ்ப் புத்தகங்களைக் காணாதது ஏமாற்றமாக இருந்தது. கனடாப் பொருளாதாரம் போல தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கான நிதியும் சுருங்கிவிட்டது போலும்.
ஜி.குப்புசாமி தமிழாக்கிய அருந்ததி ரோயின் 'பெருமகிழ்வின் பேரவை' இருந்தது. ஏற்கனவே
அதை ஆங்கிலத்தில் எப்போதோ வாங்கி வாசித்துவிட்டேன் என்பதால் அதைத் தடவி
ஆராதித்துவிட்டு வந்தேன். தற்செயலாக அங்கே அழகியபெரியவனின் 'சின்னக்குடை' என்ற நாவல் இருந்தது.
அதன் பேசுபொருள் சுவாரசியமாக இருக்க அதைத் தூக்கிக்கொண்டு வந்து நூலகத்தில்
பத்திரிகைகள்/சஞ்சிகைகள் இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்தேன்.
நீண்டநாட்களுக்குப்
பிறகு இங்கு வரும் பத்திரிகைகளை கைகளால் ஏந்தி வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எனக்கு பத்திரிகைகளின், புத்தகங்களின் வாசங்களை நுகர்ந்து பார்க்க மிகப் பிடிக்கும். Toronto Star, Globe & Mail, National Post போன்ற பத்திரிகைகள் இருந்தன. Toronto Star லிபரல் எண்ணங்களைக்
கொண்டவர்களுக்குரியவை;
Globe & Mail அறிவுஜீவிகளுக்குரியவை; National Post வலதுசாரிகளுக்குரியவை; இப்படி ஓர் எளிய
புரிதலுக்காய் வகுத்துக் கொள்ளலாம்.
Toronto Sun என்கின்ற இன்னொரு நாளாந்த பத்திரிகையை
நூலகத்தில் காணவில்லை. அழகிகளை Sunshine Girl என்ற நீச்சலுடையில்
3ம் பக்கத்தில்
போடுவார்கள். மூன்றாம் பக்கம் தவிர
மிச்சம் எல்லாம் வலதுசாரி
அரசியலும்/கிசுகிசுக்களும் அதில் நிரம்பியிருக்கும். இதாவது பரவாயில்லை, இலண்டனுக்கு முதல்
தடவை சென்றபோது அங்குள்ள Sun வாங்கப்போக அங்கே Sunshine Girl, topless ஆக இருக்க, அதை நான் நின்ற
வீட்டில் மறைக்கப்பட்ட பாடு இருக்கிறதே. நாசமாய்ப் போக!
0000000
இப்போது கனடாவின்
பொருளாதாரம் Recession இல் வந்து நிற்கின்றது. அத்தோடு இப்போது இங்கு
பேசுபொருளாக இருப்பது மக்கள் வசிப்பதற்கான வீடுகளுக்கான பற்றாக்குறை. இந்தப்
பிரச்சினையோடு, இன்றைய மத்திய அரசு
நிறைய குடிவரவாளர்களை கனடாவுக்குள் எடுக்கின்றார்கள் என பெரும்பான்மை மக்களின்
எதிர்ப்பும் வரத்தொடங்கியுள்ளது என்ற பேச்சும் வரத் தொடங்கியிருக்கிறது.
வீட்டுப்
பற்றாக்குறையோடு புதிய குடிவரவாளர்களை எப்படி முடிச்சுப் போடுகின்றார்கள் என்பதை
மேலுள்ள மூன்று பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை இணைத்து வாசிப்பதென்பது
சுவாரசியமானது. இவ்வாறான பொழுதுகளில் எவ்வளவுதான் அடக்கினாலும், எல்லோருடைய
அரசியல்/இனத்துவ பூதங்களும் அவர்களின் வீட்டுக்கு வெளியே வந்துவிடும்.
Toronto Star இல், உலகமயமாதல் எப்படி கனடாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதைப் பற்றிய
கட்டுரையில், கனடாவிலுள்ள
கம்யூனிஸ்ட் கட்சியினரின் மிகப்பெரும் பதாதையுள்ள புகைப்படம் வந்தது
வியப்பாயிருந்தது. விளிம்புநிலையினரைப் போலவே கனடாவின் கம்யூனிஸ்ட் கட்சி
இருக்கும். எப்போதாவது மேதினம் போன்ற நாட்களில்தான் அவர்கள் வெளியுலகிற்குத்
தெரிவார்கள்.
ஒரு மே தினத்தில் இப்படிப் பதாதைகளோடு கோசமிட்டுக் கொண்டு நின்ற கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பார்த்த, ஒரு தமிழக -திமுக ஆதரவு- நண்பர், 'இவர்கள் இந்தக் கொடியோடு இப்படியே எல்லா இடத்துக்கும் வந்துவிடுவார்கள்' என்று எள்ளலாகச் சொல்லப் போக, 'அப்படி என்ன இளக்காரம்' என அவரோடு தொடங்கிய அரசியல் பேச்சு சூடாகிக் கொந்தளிப்புக்குப் போனது. அதற்குப் பிறகு 'என்னை ஒரு கம்யூனிஸ்டாகவே' அடையாளப்படுத்தி அந்த நண்பர் நக்கலடித்துக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை/இந்தியாவிலிருக்கும் இடதுசாரிகளோடு எனக்கிருக்கும் முரண் அவருக்குத் தெரியவா போகிறது?
Toronto Star இப்போது முன்பிருந்த செழிப்பில் இல்லை.
பக்கங்கள் மட்டுமில்லை, அகலத்தைக் கூட குறைத்துவிட்டார்கள். ஒருகாலத்தில் குளுகுளுவென்று பாய்ந்த நதி, இப்போது மெலிந்த
கோடாக நகர்வதைப் போன்று அது தோற்றமளித்தது. கனடா வந்த புதிதில் எனது சகோதரரோடு 'ரொறொண்டோ ஸ்டாரை' வீடுவீடாக, அடுக்ககம்
அடுக்ககமாய்ச் சென்று போட்டது நினைவுக்கு வந்தது.
சனிக்கிழமையில் 'அதன் வளப்பம்' ஒரு கைக்குள் அடங்க
மறுப்பது. பனி கொட்டும் காலத்தில் அப்படி எடை கூடிய பேப்பர்க்கட்டை கையுறையோடு
சேர்த்து வீடு வீடாகப் போடுவது நரகத்திற்குச் சென்று உலவுவதைப் போன்றது. ஆனாலும்
அன்று நமக்கு ஏதோ ஒருவகையில் உணவிட்டது இந்த பத்திரிகை விநியோக வேலைதான். ஆகவே
இந்தப் பத்திரிகை என்றும் நின்றுவிடாது அச்சில் வந்து கொண்டிருக்க வேண்டுமென மனம்
அவாவியது.
0000000
அவ்வாறு பழைய
நினைவுகளில் மூழ்கி இருந்தபோது நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களைப்
பார்த்துவிட்டு ஒருவர் இது என்ன மொழிப் புத்தகங்கள் எனக் கேட்டார். நான் தமிழ்
என்றதும் எங்கே இம்மொழி பேசப்படுகின்றது என்று கேட்கவும் நம் பேச்சு நீளத்
தொடங்கியது. அவரும் எழுதுபவர். கவிதைகள் எழுதுகின்றேன், ஆனால் அவ்வளவு
நல்லதில்லை என்று சற்று கூச்சத்தோடு சொன்னார். பிறகு அவர் இரவல் எடுத்திருந்த
கவிதைப் புத்தகங்களைக் காட்டினார். நிறைய கிளாஸிக் கவிதைகள். ஹக்கூவும் பிடிக்கும்
என்றார்.
சில வருடங்களுக்கு
முன் ஐரோப்பாவில் ஒரு நண்பரோடு பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் என்னைப்
பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது 'ஒரு எழுத்தாளர்' என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்துவார். நான் கூச்சத்துடன் அப்படியெல்லாம்
அறிமுகப்படுத்தத் தேவையில்லை என்றாலும் ' ஒருவருக்கு எது அதிகம் பிடிக்கின்றதோ, அதன் பேரிலே ஒருவரைப் பிறருக்கு அறிமுகம் செய்தலே நியாயம்' என்பார். என்னிடம் 'எது உனக்கு இந்த உலகில் அதிகம் பிடிக்கும்' என்றபோது, நான் அவரிடம் 'வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும்' என்று சொன்னதால் வந்த விளைவு இது.
இப்போதும் ஒரு நண்பர்
என்னை அப்படித்தான் பிறரிடம் அறிமுகப்படுத்துவார். அநேகமாக இவனைப் பற்றி வேறு
சொல்லி அறிமுகப்படுத்த எதுவுமில்லை, பாவம் இப்படியாவது பிழைத்துப் போகட்டும்' என்பதாக இருக்கக் கூடும்.
நூலகத்தில்
சந்தித்தவருக்கும் எனக்கும் இடையில் எழுத்து/வாசிப்பு பற்றிப் பேச்சுப் போனபோது
நானும் தமிழில் எழுதுகின்றவன் எனச் சொன்னேன். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவரின் கெட்டகாலமாக எனது நூலொன்றும் அந்த நூலகத்தின் இரவல் பெறும் பகுதியில்
இருந்தது. அதை எடுத்துக் காட்டினேன். தானெழுதிய கவிதைகளை அனுப்புகின்றேன், வாசித்துக் கருத்துச்
சொல்லமுடியுமா எனக் கேட்டார். நாங்கள் நமது மின்னஞ்சல்களைப் பகிர்ந்து விடைபெற்றுக் கொண்டோம்.
0000000
அவர் போனபின்
பத்திரிகைகளை வாசித்தபடி, நூலகத்தில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். பல்வேறு மனிதர்களை
நூல்கள் எப்படி இணைக்கின்றதென்பது அவதானிப்பதும், அங்கு நடக்கும் உரையாடல்களைக் கவனிப்பதும்
சுவாரசியம் தரக்கூடியது. ஒருவர் வந்து தன் சொந்தக்கதையை எல்லாம் நூல்களை இரவல்
பெறும் சாக்கில் நூலகரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்றைக்கு கனடாவில்
தமிழர்கள் உள்ளிட்ட பலர் முதுமையில் தனிமையில் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த
சில நண்பர்களுக்கு இந்த வயது முதிர்ந்தவர்கள்/ஓய்வுபெற்றவர்களில் இருந்து வரும்
அழைப்புக்களை எடுத்துப் பார்த்தாலே எவ்வாறு பலர் தனிமையில் உழல்கின்றார்கள் என்பது
புரியும். இவ்வாறான விடாத அழைப்புக்களைப் பார்க்கும்போது நான் முதுமையடையும்போது
இப்படியொருவனாக, மற்றவர்களைத்
தொந்தரவுபடுத்துபவனாக மாறிவிடக்கூடாது என நண்பர் ஒருவரிடம் அண்மையில்
சொல்லியிருக்கின்றேன்.
இன்னொருவகையில் முதியவர்கள் மட்டுமில்லை நாமனைவருமே தனிமையில் இருக்க மிகவும் அவதிப்படுகின்றோம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் கூட அந்தத் தனிமை வெறுமையைப் பரப்பி நம்மை எதையோ தேட வைத்துவிடுகின்றது. தனிமையை இளமையில் நிதானமாக எதிர்கொள்பவர்கள் மட்டுமே வாசிப்பிலோ, இசையிலோ, இன்னபிற நுண்கலைகளிலோ தம்மைத் தொலைத்துவிடக் கூடியவர்களாக பின்னாட்களில் மாறுகின்றார்கள். அவ்வாறில்லாது படிப்பு/வேலை/குடும்பம் என்ற ஒற்றைப்பாதையில் (அதைத்தான் சமூகம் விரும்புகின்றது) செல்கின்றவர்கள் இறுதியில் மனிதர்கள் அருகில்லாதபோது என்ன செய்வதென்று திகைத்துப் போகின்றார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரையோ அல்லது எதையையோ அவர்களைத் தேடவைக்கின்றது. அது நிரப்பப்படாதபோது காழ்ப்பும்/கசப்பும் நிறைந்த மனிதர்களாக அவர்களை ஆக்கி எதிர்மறைச் சிந்தனைகளின் சுழல்களுக்குள் கொண்டு போய்விடுகின்றது.
இதனால் அவர்கள்
மட்டுமில்லை அவர்களோடு பழகுகின்றவர்களையும் அது பாதிக்கச் செய்கின்றது.
இதிலிருந்து வெளிவந்தவர்கள்/வருபவர்கள் மிக அரிதே. சமூக வலைத்தளங்களிலும் இந்தத்
தனிமையைத் தாங்கமுடியாது தம்மையும்/பிறரையும் தொந்தரவுக்குட்படுத்தும் பலரை நாம்
எளிதாக அடையாளங்காண முடியும்.
சமூகவெளியில் உலாவும் பெண்களைக் கேட்டால் இந்தத் 'தொந்தரவுகள்' குறித்து
இன்னும் விரிவாகச் சொல்வார்கள்.
ஹென்றி மில்லரின் ஒரு
நூலை இரவல் வாங்கப் போய், எது எதுவோவெல்லாம் நினைவுக்கு வருகின்றது. இந்த நூலில் ஹென்றி அவர் வாசித்து
அவர் பாதிப்புச் செலுத்திய நூல்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். இப்புத்தகத்தின்
பிற்பகுதியில் (Appendix) இருக்கும் பகுதிகளும் சுவாரசியமானவை. அதில்
ஹென்றி தேர்ந்தெடுத்த நூறு முக்கிய நூல்கள் பற்றிய பட்டியல் ஒன்று இருக்கின்றது.
அவ்வாறே 'நான் இன்னமும்
வாசிக்க வேண்டிய நூல்கள்' (Books I still intend to read) என்ற பகுதியும், 'நண்பர்கள் எனக்கு வழங்கிய புத்தகங்கள்' என்ற பக்கங்களும்
இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
எனக்கிருக்கும்
நண்பர்கள் நான் விரும்பும் நூல்களை -ஹென்றி மில்லருக்கு அவரது நண்பர்கள் வழங்கியது
போல- எனக்கு ஒருபோதும் மனமுவந்து
தருவதில்லை.
ஆகவேதான் நான்
நண்பர்களிடமிருந்து புத்தகங்களைத் திருடுகின்றேன்.
***********
(Sep 14, 2023)
0 comments:
Post a Comment