-ஓர் இலையுதிர்கால நடை-
நிறம் மாறும்
இலைகள். இலைகளை உதிர்க்கும் மரங்கள்.
வர்ணங்களின்
பேரழகும், உதிர்வின்
பிரிவும் இரண்டறக் கலந்து மனதை ஏதோ சொல்ல முடியாத உணர்வில் ஆழ்த்தும்
இலையுதிர்காலம் இனி இங்கு.
கோடையைப் போல
வெயில் புன்னகைக்கின்ற இந்த நாளில் நான் நடந்தபடியிருக்கிறேன்.
பச்சை/மஞ்சள்/சிவப்பு என எவ்வளவு பார்த்தும் ஒருபோதும் தெவிட்டா மரங்களின்
மாயஜாலங்களையும், அவ்வப்போது
இடைவெட்டுகின்ற மனிதர்களையும் கடந்தபடி போகின்றேன்.
இதமான காலநிலை
என்பதால் சைக்கிளில் நிறையப் பேர் செல்கின்றார்கள். உலாத்தலின் நடுவில்
சுற்றியிருக்கும் இடத்தின் வனப்பில் மயங்கி ஓர் புகைப்படத்தை வலையேற்றுகிறேன். 'என்னைக் கூட்டிச் செல்லாமல் எங்கே தனியே
நடக்கிறாய்' என்று ஒரு
மெஸெஜ். 'இன்னமும் இலைகள்
உதிர்க்கவில்லையா?' என்று மற்றுமொரு
மெஸேஜ்.
எல்லாப் பதில்களையும் புன்னகைத்து ஏற்று நீள நடக்கிறேன். காதில் ஹென்றி மில்லரின் 'The Hour of Man' ஐ கேட்கின்றேன். ஓரிடத்தில் ஒரு மத்திய வயதுக்காரரும் இளைஞரும் பேசிக்கொண்டிருப்பது கேட்கின்றது. 'வேலை மட்டும் வாழ்க்கையில்லை, அந்த எண்ணத்தை மறந்துவிடு' என்று சொல்லப்படுவதைக் கேட்கின்றேன். சிலவேளை ஒரு கவுன்சிலர் தன்னிடம் ஆலோசனை கேட்க வந்திருப்பவரை இப்படி மரங்கள் சூழ்ந்த இடத்திற்குக் கூட்டி வந்து, 'வாழ்க்கையை எளிதாகப் பார்' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை. பிறகு அதே பாதையையில் திரும்பும் வழியிலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இம்முறை காதில் கேட்பதை நிறுத்திவிட்டு அவர்களின் வாழ்க்கை பற்றிய உரையாடலை உற்றுக் கேட்கின்றேன்.
மரங்களின் மீள்நடுகையை இங்கே தொடங்குகின்றோம் என்ற ஓர் பலகையை கிட்டச் சென்று வாசிக்கின்றேன். இந்த மரங்கள் வளர ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். தயவு செய்து இதற்குள் நுழைந்து இயற்கையின் சமநிலையைக் குழப்பிவிடாதீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. மரங்கள் வளர்வது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.
ஒரு பெஞ்சில் சற்றுநேரம் இருந்து புகைப்படத்துக்கு வந்திருந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இன்ஸ்டாவில் ஏனோ அமலாபாலின் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அவருக்குள் என்ன மாற்றம் நடந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, விவாகரத்துக்குப் பின் சோர்ந்துபோகாமல் ஒரு உற்சாகமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதை அவரது பக்கம் காட்டுகின்றது. மண் சிற்பங்கள் செய்வதாக அமலா மாடல் செய்த புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன என நினைத்தபடி மீண்டுமொருமுறை அவர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' பட முன்னோட்டதைப் பார்க்கிறேன். இன்னமும் அந்தத் திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பது நினைவுக்கு வரவும், பக்கத்தில் வந்து ஒரு இளைஞன் அமரவும் சரியாக இருக்கின்றது.
கொஞ்சம்
அமைதியற்ற இளைஞன். அப்படி இல்லாவிட்டால் இளைஞர் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
குடிப்பதற்கு ஏதோ கொண்டு வந்து வைத்துவிட்டு, நடப்பதும் பின் பெஞ்சில் அமர்வதுமாக இருந்தார்.
அவரைக் குழப்பாமல் அவரின் இயல்பில் அவரை விடுவதே நல்லதென என் நடையை மீள
ஆரம்பிக்கின்றேன்.
நான் நிறையக்
காலம் அணியும் ரீஷேர்ட்டைப் பார்த்து மருமகள் 'மாம்ஸ் தயவு செய்து இதை அணியாதை' என்றும், பெறாமகள் 'எப்போதுதான் இதைக் கைவிடுவீர்களோ?' என்று கேட்காத நாட்களில்லை. ஆனால் இப்படி
குறும்பான வாசகத்தோடு இருப்பதால்தான் கொஞ்ச மனிதர்களாவது என்னைக் கவனித்துப்
பார்க்கின்றார்கள் என்பது எனக்கு மட்டுந் தெரிந்த உண்மை. இதே ரீஷேர்ட்டோடு
தோழியோடோ, காதலியோடு
சேர்ந்து போனால் கூட, யாரேனும் பெண்கள்
என்னை கொஞ்சம் ஏறெடுத்துப் பார்த்தால் அவர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். என்னை
அல்ல, இந்த ரீஷேர்ட்டைத்தான்
உற்றுப் பார்க்கின்றனர் என்று நான் உள்ளதைச் சொல்லும்போது 'அதுதானே பார்த்தேன்' என்று அவர்கள் விடும் மூச்சில் என்னை ஒரு
சதத்துக்கும் மதிப்பதில்லை என்ற உண்மை விளங்கும். ஆனால் நமக்குத்தானே எந்த வெட்கம்
மான ரோஷம் எதுவும் இருப்பதில்லை. அன்பே என்று அவர்களின் காலடியில் சரணாகதி
அடைவேன்.
இப்படி
நடக்கையில் ஒரு வயது முதிர்ந்த இணை ஒன்று எதிரே நடந்து வந்து கொண்டிருந்தது.
காதில் ஹென்றி மில்லர் இன்னமும் போய்க் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்து ஹலோ
சொன்னபோது, கையால் சைகையைக்
காட்டி கொஞ்சம் நில் என்றனர். என் ரீஷேர்ட் வாசகத்தை வாசித்துவிட்டு, I
love it என்றார் அந்தப் பெண்மணி.
பிறகு இன்றைய நாள் அவ்வளவு வெம்மையாக அழகாக இருக்கின்றது அல்லவா என்று எங்கள்
உரையாடல் போனது. இப்படியே நான் கடைக்குப் போய் என் மனைவிக்கு பிகினி வாங்கிக்
கொடுக்கப் போகின்றேன் என்று நகைச்சுவையாக அந்த முதிய ஆண் சொன்னார். இன்னமும்
வற்றிப் போக காதல் அவர்களிடையே ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தல் அவ்வளவு
இனிமை.
அவர்களிடம்
விடைபெற்று நடந்தபோது மனம் நிறைந்திருந்தது. விழுந்திருந்த ஒரு இலையை எடுத்து
சிறுபாலத்தைக் கடக்கும்போது ஒரு முனையில் நேசத்துடன் எடுத்து எறிந்தேன். அதை
வீசிவிட்டு பாலத்தின் மறுகரையில் வந்து நின்று அந்த இலை மிதந்து போகின்றதா எனப்
பார்த்தேன். அப்போது நீரைக் குனிந்து பாத்தபோது வானம் கீழே மிதந்தது. கூடவே இலைகள்
விரிந்த மரமொன்றும் அழகாய்த் தெரிந்தது.
அந்த அழகைப்
பார்க்கப் பார்க்க உள்ளே மகிழ்ச்சி ததும்பத் தொடங்கியது. மகிழ்ச்சி என்பதே
எண்ணங்கள் ஏதுமில்லாமல் நாங்கள் தொலைவதுதான் என்பது புரிந்தது. இல்லாவிட்டால்
மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அழகும் மகிழ்வும் மறைந்துவிடும்.
ஹென்றி மில்லரின் எழுத்தில் -இராமகிருஷ்ணர் யானையைப் பற்றிச் சொல்லிய கதையொன்று-
சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
நான் எறிந்த இலையைக் காணவேயில்லை. அப்போதுதான் நீரை உற்றுப் பார்த்தேன். அந்த சிற்றாறிலே இரண்டுவிதமான நீரோட்டங்கள் எதிரும் புதிருமாக ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டிலும் இலைகள் இருவேறு திசையில் வந்து கொண்டிருந்தன. அப்படியெனில் எது போகின்றது எது வருகின்றது என எளிதாகக் கணிக்கமுடியுமா? தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. எந்த ஒன்றும் உருவாவதுமில்லை, அழிவதுமில்லை என்ற துவிதங்களை மறக்கவும் மறுக்கவும் எளிதாக முடிவதில்லை. எனினும் சிலவேளைகளில் இப்படி ஓரு சிற்றாறு எளிய பாடமாக இவற்றைக் கற்பித்து விடுகின்றது.
உதிர்வும்
அழகென்று இலையுதிர்கால வர்ண இலைகள் சொல்கின்றன. முதுமையில் கூட இந்த வாழ்வு
பேரழகென்று உரையாடிய அந்தத் தம்பதியினர் சொல்லிச் சென்றனர். மூச்சை உள்ளிழுத்து,
வெளியே விட்டு நாம்
உயிர்த்திருக்கும்வரை, இந்த உலகில்
எல்லாமே சாத்தியம் என்று எனது ஆசிரியரான தாய் அடிக்கடி நினைவுபடுத்துவார்.
நமக்கு
நடப்பதற்கு கால்களும், வரவேற்பதற்கு
மரங்களும், புன்னகைப்பதற்கு
மனிதர்களும் இன்னமும் இருக்கின்றன/ர்.
*****************
(Oct 04, 2023)
4 comments:
அருமை இளங்கோ அருமை
10/21/2023 11:06:00 AMஇப்பொது தான் எனது வீட்டுக்கு பின்னால் இருக்கும் பூங்காவுக்கு போய் இயற்கையின் ஜாலத்தினை ரசித்துக்கொண்டே நடை போட்டு விட்டுவீட்டுக்கு வந்து அமர்ந்து பார்த்தால் உங்கள் பதிவு .
பார்க்கப்பார்க்க தெவிட்டாத அழகுதரும் இயற்கை,இன்னும் சில் நாட்களில்
இலைகள் உதிர்ந்து மொட்டையாக போகும் அவலம் .மனிதர்கள் ,அவர்களின் செயல்கள்,உங்கள் கவனிப்பு .அருமை அருமை எழுத்தாளர்கள் இப்படிதான் எதையும் கூர்ந்து கவனிப்பவர்களாகவே இருக்கிறார்கள் ,இருக்க வேண்டும் ..
நன்றி
மிக்க நன்றி. நலந்தானே?
10/24/2023 12:26:00 AM//மகிழ்ச்சி என்பதே எண்ணங்கள் ஏதுமில்லாமல் நாங்கள் தொலைவதுதான் என்பது புரிந்தது. இல்லாவிட்டால் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அழகும் மகிழ்வும் மறைந்துவிடும்.// So true ❤️❤️
10/24/2023 07:42:00 PMநன்றி. அநேமதேய நண்பர் :).
10/27/2023 06:02:00 PMPost a Comment