கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 26

Monday, October 23, 2023

 

சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பார்த்திபன் ஜேர்மனியில் இருந்து வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த வெவ்வேறு மொழிகளில் நிகழ்த்தபட்ட concert காணொளிகள்/பாடல்கள்/திரைப்படங்கள் நிரம்பிய memory stick ஒன்றை எனக்கு அன்பின் நிமித்தம் தந்திருந்தார். தற்செயலாய் என் கணனியில் அதைத் திறந்து பார்த்தபோது, ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னையில் 2016இல் நடந்த நிகழ்வு இருக்க, இந்த மாலையில் அதைப் பார்த்து/கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.


நான் இசை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானோடு வளர்ந்து வந்தவன். இன்றைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய காலத்தில் வந்த இசைத்தட்டுக்களின் முகப்புகள் அப்படியே மறக்காமல் நினைவிலிருக்கின்றது. 'அலைபாயுதே'யில் கூந்தல் விரிந்தபடி நீலநிற உடையில் புல்வெளியில் படுத்திருக்கும் ஷாலினி, 'மின்சாரக் கனவில்' பச்சை நிற ஆடையில் இருக்கும் கஜோல் என இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

அன்று அசல் இசைத்தட்டுக்களை ரெமி, ஐங்கரன் போன்ற நிறுவனங்கள் ஐரோப்பா/கனடாவில் வெளியிடும். அவற்றின் விலை அதிகமென்றாலும், இசையின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். நான் அன்று கையில் பெரிதும் புழங்காது விட்டாலும் தேடித்தேடி இவற்றை வாங்கிச் சேகரித்திருக்கிறேன். ரஹ்மான்தான் முதன் முதலில் பாடகர்களைத் தாண்டி, தொழில்நுட்ப/பக்கவாத்திய கலைஞர்களின் பெயர்களை தனது இசைத்தட்டுக்களில் பதிவு செய்தவர்.

பின்னாட்களில் இளையராஜா, எஸ்பிபி- ஜேசுதாஸ், கார்த்திக் உள்ளிட்ட அண்மையில் பிரதீப்குமாரின் நேரடி இசை நிகழ்ச்சிகள் வரை எத்தனையோ பார்த்திருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்வுதான் எனக்கு மிக நெருக்கமானது. மற்றவர்களின் இசை/பாடல் தரங்குறைந்தது என்றெல்லாம் இல்லை, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களோடு தவழ்ந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு அவரின் பாடல்களோடு -இன்றைய ஈராயிரக்குழவிகளின் மொழியில் சொல்வதென்றால் - vibe செய்வது எளிதாக இருக்கும். அதனால்தான் ஏஆர்ஆர் 'அந்த அரபிக் கடலோரம்' பாடலை இங்கு பாடியபோது சுற்றியிருந்த சூழலையெல்லாம் மறந்து எழுந்து ஆடியிருக்கின்றேன்.

இப்போதும் இந்த 'நெஞ்சே எழு' நிகழ்வைக் காணொளியாகப் பார்க்கும்போது, என்னையறியாமலே மனம் நிறைந்து சில இடங்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பகலில் ஏதோ ஒரு சோர்வுக்குள் காரணமில்லாது போயிருந்தவனை உற்சாகமான மனோநிலைக்கு இது பின்னர் மாற்றியுமிருந்தது. அதைத்தானே நமக்குப் பிடித்த கலைஞர்/கலை நமக்குள் நிகழ்த்த வேண்டியது? அதனால்தான் அந்தப் படைப்புக்களோடு நெருக்கமாகவும், அதை வெளிப்படுத்திய கலைஞர்களோடு நேசமாகவும் இருக்கின்றோம்.

இப்போது ரஹ்மானின் பாடல்களை முந்திய 'வெறி'த்தனத்தோடு கேட்பதில்லை. அவர் கடந்த 10 வருடங்களில் வேறொரு தரத்துக்கு நகர்ந்து விட்டார் என நினைக்கின்றேன். நான் பத்து வருடங்களுக்கு முன் இருந்த ரஹ்மானோடு பின் தங்கி அங்கேயே நிற்கின்றேன். ஆனால் அதுவே எனக்கு ரஹ்மானை ஆராதிக்கப் போதுமாயிருக்கின்றது. எனக்கு அடுத்த தலைமுறைக்கு , சமகாலத்தைய ரஹ்மானின் பாடல்கள் நெருக்கமாக இருக்கக்கூடும்.

ரஹ்மான், இளையராஜா எல்லோரும் இசைக்குள்ளேயே மூழ்கிப்போனவர்கள். அவர்களை வெளியே இழுத்து அவர்களுக்குத் தொடர்பில்லாத உலகத்தைப் பற்றிக் கேட்பதெல்லாம் அபத்தமானது. அதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்கு மட்டுமில்லை நமக்கும் நல்லது. தேவையில்லாது வீணாய் பொங்கி எவரின் நேரத்தையும் வீணடிக்கவும் வேண்டியதில்லை. இளையராஜாவிடம் கடந்தகாலத்தில் பொப் மார்லி/கத்தார் மாதிரி அவர் இருக்கவேண்டும் என்று தமிழுலகம் விவாதித்து அடிபட்டது நினைவிருக்கிறது.

ரஹ்மானும் இசைக்காக ஆஸ்கார் விருது பெற்றபோது ஈழத்தில் மனிதவுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் யுத்தத்தில் அழிந்து கொண்டிருந்தன. ரஹ்மான் அப்போது ஈழத்தில் ஒரு கொடூர யுத்தம் நடக்கிறதென்று உலகின் முன்னிலையில் சொல்லியிருந்தால் ஒரு இரசிகனாய் அவரை இன்னும் உயரத்தில் கொண்டு போய் நான் வைத்திருப்பேன். ஆனால் ரஹ்மான் எப்படி என்று ஏற்கனவே தெரிந்ததால் எனக்கு அதில் எந்த ஏமாற்றமும் இருக்கவில்லை.

அதேவேளை தனது பாடல்களைப் போல அரசியலையும் வெளிப்படையாகப் பேசும் M.I.A என்கின்ற மாயா அதே எம்மி/ஆஸ்கார் நிகழ்வுகளில் தனது மேடையை ஈழத்துக்காய்ப் பகிர்ந்து கொண்டார். மாயா அதைச் செய்யாவிட்டால்தான் மாயாவின் தீவிர இரசிகன் என்றவகையில் நான் ஏமாற்றமடைந்திருப்பேன்; ரஹ்மான் இது குறித்து மட்டுமில்லை இந்தியாவில் இந்த்துத்துவம் எல்லை மீறிப்போகும் இந்தக்காலத்தில் எதுவும் பேசாதது மெளனமாக கடந்துபோவதைக் கூட என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஒரு கலைஞரிடம் அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமென நாம் எதிர்பார்க்கலாம்; ஆனால் ஒருபோதும் இப்படித்தான் இருக்கவேண்டுமென அவர்களை வற்புறுத்துதல் நியாயமற்றது. (இதற்கும் தனிப்பட்ட பலவீனங்களால மற்றவர்களை மோசமாகச் சுரண்டல் செய்து அதைக் கலையின் பேரில் சுமத்திவிட்டுத் தப்புபவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)

நான் ரஹ்மானின் காலத்தவன் என்பதால் இப்போது இன்னொரு சிக்கலையும் எதிர்கொள்கின்றேன். என் காலத்தைய ரஹ்மானின் பாடல்கள் எல்லாம் வைரமுத்துவோடு சம்பந்தப்பட்டது. வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் குறித்து பெண்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, இந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இந்த அரசியலை எப்படிக் கடந்து கேட்பது என்று மனம் திண்டாடும். அந்த உறுத்தல் ஒவ்வொரு பொழுதும் ரஹ்மானின் பாடல்களைக் கேட்கும்போது ஏதோ ஒருவகையில் எனக்குள் வரும்.

அண்மையில் கூட நண்பரொருவர் மழைக்காலத்திற்கான பாடல்களென எனக்கும் ஒரு பாடலை tag செய்தபோது, அவருக்கு நன்றியாக ஒரு பாடலைப் பதிவு செய்யப்போனபோது ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்த ஒரு மழைப்பாடலே எனக்கு உடனே நினைவுக்கு வந்தது அதனைப் பகிரப் போகும்போதுதான் அதைப் பொதுவெளியில் சொல்வதுகூட வைரமுத்துவின் பாலியல் சீண்டல்களை ஒருவகையில் ஏற்றுக்கொள்வது போலாகிவிடும் என்று அதைப் பகிராது பின் வாங்கியிருந்தேன்.

ஆனால் ரஹ்மான் இந்த விடயத்தில் ஒன்றைச் சொல்லாமல் செய்தார். வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொதுவெளிக்கு வந்தபோது கிட்டத்தட்ட வைரமுத்துவிடம் இருந்து பாடல்களை வாங்குவதிலிருந்து அவர் முற்றிலும் விலகினார். அதேவேளை இந்தச் சர்ச்சையினால் திரைப்படப் பாடல் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட சின்மயியைத் தன் பாடல்களில் தொடர்ந்து பாடவும் வைத்தார். அரசியல் நீக்கம் செய்தவராக இருக்கும் ரஹ்மான் செய்த இந்த விடயத்தைக் கூட நமது இலக்கியவாதிகள் செய்யவில்லை. கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கூட வைரமுத்துவை மேடையேற்றி அழகு பார்த்தவர்கள் நமது இலக்கியச் சிம்மங்கள்.

இதையேன் இப்போது சொல்கின்றேன் என்றால் ரஹ்மானின் அண்மைய இசைநிகழ்வின் குழறுபடியால், அவரை எல்லாப் பக்கங்களாலும் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் பெரிதாக இந்த விடயங்களைப் பின் தொடர்ந்து பார்க்கவோ/வாசிக்கவோ இல்லை. நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டு எடுத்தும் அனுமதிக்கப்படாதவர்கள் கோபிப்பதில் நியாயங்கள் இருக்கின்றன. ரஹ்மானும் இது குறித்துத் தன் தரப்பைப் பேச வேண்டும் என்றாலும், அந்தப் பாரத்தை நிகழ்வை நடத்தியவர்களே பெரிதும் பொறுப்பெடுக்க வேண்டியவர்களாவர்.

அதேவேளை என் வாழ்க்கையில் இசையின் ஒரு பகுதியாய், அதிக நெருக்கமாக இருந்த ரஹ்மானை எந்தப் பொழுதில் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஏனெனில் அவரிடமிருந்து ஒரு சாதாரண இசை இரசிகனாய்ப் பெற்றதும், பெற்றுக் கொண்டுக் கொண்டிருப்பதும் நிறைய.

ஆகவே அவரோடு இருக்கின்றேன்.

இந்த 'நெஞ்சே எழு'வுடன் அலையலையாய்க் கடந்தகாலத்தில் பயணித்துக் கொண்டிருப்பவன், அதற்கு மூலகாரணியாய் இருப்பவரின் படைப்பாளுமையை 'மறக்குமா நெஞ்சம்'?

இல்லை. ஒருபோதும் மறக்காது!

**********************

(ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்வில் வந்த சர்ச்சைகளால், ரஹ்மானின் ஒரு தீவிர இரசிகன் என்றவகையில் எழுதத் தொடங்கியதை, வழமை போல சமூகவலைத்தளக் கொந்தளிப்புக்கள் அடங்கியபின் இப்போது பதிவிடுகின்றேன்)


(புரட்டாதி 15, 2023)


0 comments: