கோட்பாடுகளைப் பற்றி அண்மையில் ஒரு சிறு உரையாடல் போயிருந்தது. கோட்பாடுகளை அறிதல்/கற்றல் ஒரு படைப்பாளிக்கு முக்கியமா இல்லையா என்பது தமிழ்ச்சூழலில் அவ்வப்போது தீவிர விவாதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ்ச் சூழலில் கோட்பாடுகளும், புனைவுகளும் ஒன்றோடு ஒன்று ஊடாடி தங்களை செழுமைப்படுத்தியபடியே வந்திருக்கின்றன. அந்தப் புரிதல் இல்லாது இவற்றை இருவேறு துவிதமுனைகளில் வைத்து விவாதிப்பவர்களோடு உரையோடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
தமிழ்ச்சூழலில் கோட்பாடுகள் மிகவும் உரையாடப்பட்ட 80/90கள் ஒரு 'பொற்காலம்' எனலாம். அத்தோடு அதுவரை பெரும்நம்பிக்கையாக இருந்த சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்ட பின்னும், மிக விரிவான உரையாடல்கள் மார்க்ஸிசம் சம்பந்தப்பட்டு உரையாடப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வளவு முன்னே கோட்பாடுகள் சார்ந்து முன்னோக்கி இருந்தோம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.
எனது நண்பர் ஒருவர் 15 வருடங்களுக்கு முன் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கற்கப்போனபோது, முதலாண்டிலே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் பற்றி அறிந்திருப்பதை அவரது முதலாமாண்டு பேராசிரியர் வியப்புடன் பார்த்திருக்கின்றேன். இது எவ்வாறு சாத்தியம் என்றபோது எங்கள் தமிழ்ச்சூழலில் இது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது என அவர் சொல்லியிருக்கின்றார்.
ஆனால் 2000களின் பின் கோட்பாடுகள்/விமர்சனங்கள் சார்ந்து தமிழ்ச்சூழலில் எந்தத் தீவிரமான உரையாடல்களையும் நாம் செய்யவில்லை. கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி விவாதித்த முன்னோடிகளும் உறங்குநிலைக்குப் போய்விட்டிருந்தனர் அல்லது அவ்வாறான ஒரு நிலைமை தமிழ்ச்சூழலில் உருவாக்கப்பட்டு, புனைவு எழுத்தாளர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தின் முகங்களென கட்டமைக்கப்பட்டார்கள். அவர்களும் கோட்பாடுகள்/தத்துவங்கள் புனைவுகளுக்கு எதற்கென திருவாய் மலர், அவர்களின் சீடர்களுக்கு எவர் கோட்பாடு/தத்துவங்களைப் பேசத்தொடங்குகின்றார்களே, அந்த முன்னோடிகளை எல்லாம் நக்கலும்/நளினமும் எளிதாகச் செய்யத் தொடங்கினார்கள்.
நான் எழுத வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது கவிதைகள் மீது பெரும் மோகம் இருந்தபோதும், தமிழகத்தில் இருந்து நூல்களை இணையத்தில் வாங்கியபோது கவிதைப் புத்தகங்களுக்கு நிகராக தமிழில் வந்த கோட்பாடு/தத்துவ நூல்களையும் வாங்கியிருந்தேன். அந்தக் கோட்பாடு நூல்களை எல்லாம் முழுதாக வாசித்தேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் இயன்றளவு நுனிப்புல்லாக வாசித்து அதன் அடிப்படைகளை அறிந்து வைத்திருந்தேன். மேலும் அன்றையகாலத்தில் (இன்றும்) எனக்கு பின்னமைபியல்/பின் நவீனத்துவம் மிக நெருக்கமாக இருந்தது/இருக்கின்றது.
பின்னமைப்பியல்/இருத்தலியம்/தெரிதா/சார்த்தர் என எனக்குத் தெரிந்ததை எழுதியெழுதித்தான் ஒருவகையில் அதன்/அவர்களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன். அன்றையகாலத்தில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் வழிகாட்டியாக இவற்றுக்கு இருந்ததென்றால், இன்னொருவகையில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த நாகார்ஜூனன், தமிழவன் (தீராநதி) போன்றவர்களின் ஊடாடங்கள் எனக்கான கற்றல்களாக இருந்தன. நாகார்ஜூனன் போன்றவர்கள் அன்று நான் எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் கூறியும், இது குறித்து உரையாடல்களில் பங்குபற்றியும் எமக்கு (மறைமுகமாக) வழிகாட்டுபவர்களாக இருந்தார்கள்.
அந்த நீட்சியில்தான் மார்க்ஸியம் மீது பெருவிருப்புக் கொண்ட என் சமகாலத்துவர்களோடு, மார்க்ஸிசம் X பின் நவீனத்துவ உரையாடல்களை நிகழ்த்தியிருந்தோம். அது தொடர்ச்சியாக நிகழாமல் போனது எம்மளவில் ஓர் இழப்பே. ஏன் இந்த கோட்பாடுகள் சார்ந்த உரையாடல்கள் புனைவுகளுக்கு முக்கியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.
ஈழத்தில் இலக்கியம் சார்ந்த வரலாற்றை அவதானிப்பவர்க்கு, ஒருகாலத்தில் மார்க்ஸிசம் சார்ந்த முற்போக்கு இலக்கியத்துக்கும், மரபுசார்ந்த இலக்கியத்துக்கும் விவாதங்கள் நடந்ததை அறிந்திருப்போம். அது பின்னாளில் முற்போக்கு இலக்கியத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய மு.தளையசிங்கம், எஸ்.பொ என்பவர்களால் முற்போக்கு இலக்கியம் அதற்கெதிரான எஸ்.பொ முன்வைத்த (நற்போக்கு இலக்கியம்) போன்ற உரையாடல்களாக மாறியது.
இத்தனைக்கும் எஸ்.பொவின் (நற்போக்கு இலக்கியம்), மு.தளையசிங்கத்தின் (பிரபஞ்ச யதார்த்தவாதம்) என்பவை ஒருபோதும் மார்க்ஸிசத்தை முற்றாக நிராகரித்ததும் இல்லை. மார்க்ஸிசம் சில இடங்களில் போதாமையாக இருக்கின்றது என்று சொல்லியே அவர்கள் தமது விவாதங்களை உருவாக்கியபோதும், மார்க்ஸிசத்துக்கு ஒரு பெரும் மதிப்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது.
இவ்வாறான ஒரு சூழலின் ஒளி புகுந்திருக்காவிட்டால் பிரமிள் போன்ற ஒருவர் எல்லாவற்றையும் திருகோணமலையில் துறந்துவிட்டு இலக்கியப் பித்துப் பிடித்து அன்று தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தே இருக்கமாட்டாரெனவே நம்புகின்றேன். எஸ்.பொவின் 'தீ'யுக்கு, பிரமிள், எஸ்.பொ, மு.தளையசிங்கம் நடத்திய உரையாடல்களை அவதானித்தால், தனியே அந்த நாவலுக்கு மட்டும் அது நடக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
இன்றைக்கு தமிழ்ப் புனைவெழுத்து ஈழத்திலும்/தமிழகத்திலும்/புலம்பெயர்விலும் தேங்கிப் போனதற்கு இந்த கோட்பாட்டு/விமர்சனச் சூழல் அருகிப் போனதையே முக்கிய காரணம் என்பேன். அதனால்தான் புதிய முயற்சிகள்/பரிசோதனைகள் அடிக்கடி தமிழில் புனைவெழுத்து சார்ந்து நடப்பதைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.
கோட்பாடு/தத்துவங்களை மட்டும் வைத்து புனைவைப் படைத்து முடியுமா என்று தேய்வழகான கேள்விகளோடு எவரும் வரத்தேவையில்லை. எந்த ஒரு படைப்புமே கோட்பாடுகள் சார்ந்து எழுதப்படுவதில்லை. அது பின்னர் வாசிப்பு எளிமைக்காய் ஒரு பிரிவிற்குள் வகுக்கப்படுகின்றது. புனைவுகள் மட்டும் அல்ல, பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ வாதிகள் என்று இன்று நாம் சொல்கின்ற எந்த ஒரு அறிஞரும் கூட அப்படி ஒரு சட்டகத்துள் தம்மை வைப்பதை மறுதலிப்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
நாம்தான் அவர்கள் சொல்வதை எளிதாக விளங்கிகொள்வதற்காக ஒரு சட்டகத்திற்குள் வைத்துப் பேசுகின்றோம். மார்க்ஸே கூட, தனக்கான காலத்தின் பின் அவர் பேசியவை எல்லாம் தன் பெயரிலே பொதுமைப்படுத்தி 'மார்க்ஸிசம்' என்று பேசப்படுமென நினைத்திருப்பாரா என்ன?
*************
(Oct 20, 2024)
ஓவியம்: ஜி.கோபிகிருஷ்ணன்
0 comments:
Post a Comment