காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார்.
அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo), பெட்ரோ பராமோ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ்
அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால்
முன்னுரையிலிருந்து இந்நாவலின் எல்லாப் பக்கங்களையும் அப்படியோ ஒப்புவிக்க
முடியும் என்று மார்க்வெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவுக்கு மார்க்வெஸ் இந்த
நாவலுக்குள் மூழ்கியவர். இந்த நாவல் கொடுத்த பெரும் ஈர்ப்பினால்தான், மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை எழுதுகின்றார்.
இந்த நாவலே இலத்தீன் அமெரிக்காவில் இருந்து முகிழ்ந்த 'மாய யதார்த்த' கதை சொல்லல் முறைக்கான முதல் புதினம் எனச் சொல்கிறார்கள். இது 120 பக்கங்களுக்குள்ளே அடக்கி விடக்கூடிய ஓர் புனைவு. ஆனால் இவ்வளவு குறுகிய பக்கங்களில் கிட்டத்தட்ட அன்றைய கால மெக்ஸிக்கோவின் நிலவியல், அரசியல், கலாசாரம், புரட்சி எனப் பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பெட்ரோ பராமோ வன்முறையின் மூலம் ஒரு நிலச்சுவாந்தர் ஆகின்றார். அவர் காதல் செய்யும் பெண்களும் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல. அதனால் எண்ணற்ற பெண்களோடு மோகிக்கின்றார். அவர்களை எளிதில் கைவிட்டு தன் வாழ்க்கையில் நகர்ந்தபடியும் இருக்கின்றர்.
இந்த நாவலின் கதைசொல்லியான யுவானே ஒரு தற்செயலான நிகழ்வால் பெட்ரோவிற்கு பிறக்கின்றவர்.
மதத்திற்கு எதிரான புரட்சியும், பிறகு அந்தப் புரட்சிக்கெதிராக
தேவாலயங்களின் போராட்டமும், நிலப்பிரத்துவ இறுதிக்கட்டமும்,
அதிகாரம் எதுவுமற்ற பெண்களின் நிலையும் என
பல்வேறு நிகழ்வுகளை பெட்ரோ பராமோ நமக்குக் காட்சிகளாக விரித்துக் காட்டுகின்றது.
இவ்வாறான ஒரு நேர்கோட்டுத் தன்மையில்லாத, நினைவுகளும், பேய்களும், கடந்தகாலமும், பாதாள உலகும், கல்லறைக்குள் இருப்பவர்களும் பேசும்
ஒரு நாவலைக் காட்சித் திரையாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் 'பெட்ரோ பராமோ' திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக -
மாய யதார்த்தமும் குலைந்துவிடாது- கொண்டு வந்திருக்கின்றனர். பெட்ரோ பராமோ ஒரு துன்பியல் முடிவை
நோக்கிச் செல்கின்ற நாயகனின் கதை என ஓர் எளிமைக்காகச் சொல்லலாம்.
அவளின் வரவோடு பெட்ரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தனது காதலி சூசனா இறக்கும்போது அதை அசட்டை செய்து இந்த நகர் தன்பாட்டில் விழாக் கொண்டாட்டத்தில் திளைக்கின்றதா என பெட்ரோ கோபமுறுகின்றான். அத்தோடு அந்த ஊரைக் கைவிடத் தொடங்குகின்றான்.
பாழாய்ப்போன ஊரிலிருந்து மறைந்துவிட்ட அந்த ஊரவர்கள் யுவனின் தந்தையை யுவனுக்கு நினைவுபடுத்துவதற்காய் மீண்டும் அந்த நகரிலிருந்து எழுகின்றார்கள். இவர்கள் அசலான மனிதர்கள்தானா என ஒவ்வொருத்தரையும் பார்த்துயுவன் திகைத்து அவர்களைக் கரம்பற்ற விழைகின்றபோது அவர்கள் இறந்துவிட்ட மனிதர்கள் என்பதை அறிகின்றான்.
இறுதியில் கதைசொல்லியான யுவனே காலமாகிவிட்ட ஒருவனாக நமக்குத் தெரிகின்றான். அப்படியாயின் நாம் பெட்ரோ பராமோவில் இறந்துபோன ஆவிகளின் கதைகளைத்தானா கேட்டிருக்கின்றோம்? அவர்களோடுதான் இவ்வளவு நேரமும் உலாவிக் கொண்டிருந்தோமா எனத் திகைக்கவும் செய்கின்றோம்.
***************
(Nov 07, 2024)
0 comments:
Post a Comment