கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் தமிழ்ப் பெளத்தம்

Tuesday, November 19, 2024


1.

லங்கையில் எப்போதிருந்து சிங்களப் பெளத்தம் இருந்ததோ அப்போதிருந்தே தமிழ்ப் பெளத்தமும் இருந்தது என்கின்ற ஆய்வுக்கட்டுரைகள் இப்போது நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெளத்தம் இந்தியாவில் அசோகர் காலத்தில் அவரின் மகனான மகிந்தரால் கொண்டு வரப்பட்டது என்று 'மகாவம்சம்' கூறுகின்றது. மகாவம்சத்தின்படி சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறியது.  அதன்பிறகு பெளத்தம் கி.மு 3ம் நூற்றாண்டில் மகிந்த தேரரால், அன்று இலங்கை மன்னனாக இருந்த தேவனம்பிய தீசன் காலத்தில் அறிமுகப்படுத்தப்படது.

 

இவ்வாறு
மகாவம்சத்தின் பிரகாரம், இலங்கையில் பெளத்தம் மகிந்ததேரரால் கி.மு 3ம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது என பொதுச்சூழலில் ஆழமாக விதைக்கப்பட்டாலும் அது அவ்வாறுதான் உண்மையில் நடந்ததா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். இன்று பலர் (சிங்கள ஆய்வாளர்கள் உட்பட) பெளத்தம் அசோகரின் காலத்துக்கு முன்னர், புத்தரின் காலத்திலேயே இலங்கைக்கு வந்துவிட்டதெனச் சொல்கின்றார்கள். புத்தரின் ஆளுமை திராவிட மொழிக்குடும்பமான தெலுங்கை (ஆந்திரப் பிரதேசம்) முதலில் அடைந்து நிறையப் பேர் புத்தரைப் பின் தொடரச் செய்கின்றார்கள். அவர்களினூடாக புத்தரும் அவரின் போதனைகளும் தமிழ்நாட்டுக்கு/தமிழுக்கு வந்தடைகின்றது. ஆந்திரா/தமிழ்நாட்டுக்கு வந்த பெளத்தமே இலங்கையை முதலில் வந்தடைந்திருக்கின்றது என்பதை இப்போது பல ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

 

இப்போது எப்படி தமிழ்ப் பெளத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இது தொடர்பாக வாசித்தபோது சிங்கள ஆய்வாளர்களின் எழுத்தில் உறுத்திய சில புள்ளிகளைப் பார்ப்போம். தமிழ்ப் பெளத்தம் குறித்து பேசுகின்ற பெரும்பாலான சிங்கள ஆய்வாளர்கள் தமிழர்கள் சோழப் படையெடுப்பால்தான் ஆதியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். அதே போல அவ்வாறு படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட எல்லாளன் தவிர்ந்த எல்லாத் தமிழ் அரசர்களும் பெளத்தத்தைத் தழுவியவர்கள் என்பதில் உறுதியாய் நிற்கின்றார்கள். ஏனெனில் இலங்கையானது அனுராதபுரத்தை ஆண்டு பாண்டுகாபாயமன்னனில் இருந்து பிரித்தானியர்கள் முற்றுமுழுதாக கைப்பற்றும் காலம்வரை, பெளத்தத்தை தழுவிக்கொண்ட மன்னர்களாலேயே ஆளப்பட்டிருக்கின்றது எனச் சொல்கின்றனர். அதாவது கி.மு 4ம் நூற்றாண்டிலே இலங்கை முற்றுமுழுதான பெளத்த (சிங்கள) அரசாக இருந்திருக்கின்றது என நிரூபிக்க கடுமையாக முயற்சிக்கின்றனர்.

 

அதன் நம்பகத்தன்மை/விதிவிலக்குகள் என்பவற்றை இப்போது ஒருபுறத்தில் வைத்துவிட்டு நாம் இப்போது சில கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம். சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் ஆரம்பிக்கின்றது என மகாவம்சம் சொல்கின்றது. அப்போது வந்த விஜயனின் மதம் என்னவாக இருந்தது. அதைப் பற்றி ஏன் மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள ஆய்வாளர்கள் எவரும் பேசுவதில்லை. அது மட்டுமின்றி விஜயன் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பெளத்தம் இலங்கைக்கு வருகின்றது என்று மகாவம்சம் கூறுகின்றது. அந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்தமக்கள் மதமற்ற நாத்திகர்களாவா இருந்தார்கள்? விஜயன் வருவதற்கு முன்னர் இயக்கர், நாகர் என்பவர்கள் இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாகர்களின் கல்வெட்டுக்கள் பல, தமிழ்ப் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் (தமிழ்நாட்டில் இருக்கும்) பிராமி எழுத்துக்களோடு ஒத்து வருகின்றது என்பதைப் பல சிங்கள் ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

 

இரண்டாவது விடயம், இலங்கையில் தமிழர்களின் வரவு சோழர்களின் படையெடுப்போடு தொடங்குகின்றது எனறு 'அடித்துக் கூறுகின்ற' எந்தச் சிங்கள ஆய்வாளரும், விஜயன் முதலில் குவேனியை மணந்து அவரைக் கைவிட்டு மணம்புரிந்த பாண்டிய இளவரசியையும், அவரோடு அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றியும் ஏன் பேசுவதில்லை. சிங்களவர்களின் வாதப்படி சொல்வதென்றால் கூட, சோழப் படையெடுப்பால் தமிழர்கள் முதலில் முதலில் இலங்கைக்கு வரவில்லை. சிங்கள இனம் இலங்கைக்கு வந்த கி.மு 5ம் நூற்றாண்டிலேயே நீங்களாகவே தமிழர்களை பாண்டிய இளவரசியை மணமுடிந்ததன் மூலம் இலங்கைக்கு விரும்பி அழைத்துவிட்டீர்கள் அது மறந்துவிட்டதா என நாம் கேட்கலாம். மேலும் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியது போல,  சிஙகள் இனம் (சிங்கள இனம் மட்டுமில்லை, எந்த இனமும், தமிழர் உட்பட) தூயதல்ல. எனவே இனப்பெருமை பேசுவதில் எவ்வித தர்க்கங்களும் இருக்கப்போவதில்லை எனத்தான் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது. 

 

 

2.

 

லங்கையில் பெளத்தம் பரவியபோது  சிங்களப் பெளத்தம் போல தமிழ்ப் பெளத்தமும் இருந்தது. அது பின்னாளில் அழிந்துபோனதும், பிரித்தானியர்கள் வரமுன்னரே தமிழர்கள் சைவத்தையும், சிங்களவர்கள் பெளத்தத்தையும் தமக்குரிய மதங்களாகக் கொண்டு பிரிவினைகளை உருவாக்கிவிட்டார்கள் என்பது தெளிவு.  பிறகான காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியுள்ள காலனித்துவவாதிகளான ஆங்கிலேயர்களால் கச்சிதமாக இன்னும் இவ்விரு இனங்களிடையே இன/மதத்தை முன்வைத்து வேற்றுமைகளை உருவாக்கவும்  முடிந்திருக்கின்றது.

 

இலங்கையில் இன்று தேரவாத பெளத்தமே அதிகம் ஆதிக்கம் செய்கின்றது. மகாசேன மன்னன் காலத்தில் அதில் பிரிவினை வந்து அபயகிரி விகாரைப் பிரிவு தோன்றுகின்றது. தமிழ்ப் பெளத்தம் தேரவாத பெளத்தமாகவும், மகாயான பெளத்தமாகவும் இரண்டு பிரிவுகளையும் தனக்குள் கொண்டிருந்திருக்கின்றது. தொடக்கத்தில் தமிழகத்தில் ஊடு பரவிய தமிழ்ப்பெளத்தம் (யாழ்ப்பாணம்,மன்னர், நெடுந்தீவு போன்றவை தமிழ்நாட்டுக்கு மிக அண்மையாக இருந்தமையால்) சிங்களப் பெளத்தத்தின் எந்தச் செல்வாக்குக்கும் உட்படாதிருக்கச் சாத்தியம் அதிகம் இருக்கின்றது. மகிந்தரின் வருகையால் பரவிய தேரவாத பெளத்தம் பின்னர் தமிழ்ப் பெளத்ததிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஒருவகையில் ஒரு நாட்டின் மன்னர் முழுமையாக மதம் மாறும்போது அந்த நாடும் முழுதாய் ஒரு தனி மதத்துக்குரிய நிலப்பரப்பாக மாறுவதும் இயல்பானதென எடுத்துக் கொள்ளலாம்.

 

அவ்வாறு பல்வேறு நாடுகளில் பல மன்னர்கள் மதம் மாறியிருக்கின்றனர். ஏன் டொச்சுக்காரர் வந்தபோது கொழும்பு மன்னனாகிய தர்ம்பாலா கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி தன் பெயரையும் அவரின் மனைவிகளையும் டொனா இஸபெல்லா, டொனா மார்கடீட்டா என மாற்றவில்லையா? இவ்வாறெல்லாம்,  எதிரியுடன் போரிட்டு வெல்ல முடியாதபோது மதம் மாறுகின்ற சிங்கள் மன்னர்களை, இன்னமும் தமக்குரியவர்களாகக் கொள்ளும் சிங்களப் பேரினவாதிகள், எல்லாள மன்னனை அதுவும் முழு இலங்கையை 44 ஆண்டுகள் சுமூகமாக எந்தப் பிளவுகளும் வராது ஆண்ட ஒருவனை, அந்நியராகவும், படையெடுப்பாளராகவுமே தமது நினைவுகளிலும், எழுத்துக்களிலும் முன்வைத்தபடி இருக்கின்றார்கள்  என்பதுதான் வியப்பானது. அத்துடன் எல்லாளனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட சேனன்/குத்திகன், ஏழு வணிகர்கள் (சில சிங்கள ஆய்வாளர்களின்படி ஏழு குண்டர்கள்) போன்ற மன்னர்கள் தமிழர்கள் என்றாலும், அவர்கள் பெளத்தத்தைத் தழுவாமல் ஒருபோதும் இலங்கையை ஆண்டிருக்க முடியாதென ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

 

ஒருவகையில் அதுவும் நல்லதுதான். சிங்களப் பெளத்தம் என்கின்ற ஒற்றை அதிகாரத்தை (Hegemony) இது தகர்க்க உதவும் என்பதால், ஆம் அவர்கள் பெளத்தர்கள்தான், ஆனால் அவர்கள் தழுவிய பெளத்தம் உங்களதல்ல, அது தமிழ்ப் பெளத்த மரபில் வந்ததெனச் சொல்லலாம். மற்றும்படி இப்படியான வம்புகளுக்கு எதிர் ம்புகளை நாம் பேசுவதைத் தவிர்த்து, ஆம், எங்களிடையே தமிழ்ப் பெளத்தம் இருந்தது ஆதாரபூர்வமானது என்று நிரூபிக்க நம்மிடம்  உள்ள ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் இன்று சிங்களவர்கள் தமது சிங்களப் பெளத்தம் என்று உரிமை கொள்கின்ற பெளத்தம் தமிழ்ப் பெளத்ததிற்கு உரியது. எனினும் அங்கு இருக்கும் சிறு விகாரைகள் போன்றவைகள் இலங்கையின் எந்தப் பகுதியோடும் தொடர்புடையது அல்ல. அவ்வாறு எந்தக் கட்டட அமைப்பும் இலங்கையில் இல்லை. ஆய்வாளர்களின் கூற்றுப்படி இது தெலுங்குப் பகுதியில் இருக்கும் கட்டட அமைப்பை நிகர்த்தது. அதேபோன்று வல்லிபுரக் கோயில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புப்பட்டயத்தில் செதுக்கப்பட்டவையும் தெலுங்குப் பகுதியைச் சேர்ந்தது. அது யாழ்ப்பாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எந்த பெளத்தக் கல்வெட்டு எழுத்துக்களோடும் தொடர்புபடாதவை. வல்லிபுரத்தில் அகழ்ந்தெடுக்கப்ப்ட்ட அழகான புத்தர் சிலையை அன்றைய பிரித்தானிய அரசு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைத்தும் இருந்தது.

 

ஒருவகையில் வல்லிபுரம் ஆழ்வார் கோயில், தமிழ்ப்பெளத்த ஆலயத்திலிருந்து பின்னாளில் எழுந்திருக்கவே சாத்தியம் அதிகமிருக்கின்றது. இன்றைக்கு ஆதாரபூர்வமாக யாழில் ஒன்பதுக்கு மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்ததெனனவும், அவற்றில் நான்கு பின்னர் அய்யனார் கோயில்களாக மாற்றப்பட்டன எனவும் சொல்கின்றனர்.

 

நான் அறிந்து யாழில் போரின் நிமித்தம் ஒவ்வோரு ஊர் ஊராக அகதியாக அலைந்தபோது சுன்னாகத்தில் (அல்லது மல்லாகத்தில்) ஒரு அய்யனார் கோயில் வயலில் நடுவில் இருந்தமை ஞாபகத்திலுண்டு. சுன்னாகம்/மல்லாகம்/தெல்லிப்பளை போன்ற இடங்களில் தமிழ்ப் பெளத்தம் ஒருகாலத்தில் தளைத்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறே நெடுந்தீவில் வெடியரசன் கோட்டைக்கு அருகிலும் பெளத்த மடாலயம் இருந்திருக்கின்றது. அதற்கான அடித்தளம் நமக்கு அது ஒரு பெளத்த ஆலயம் என்பதை எளிதாகக் காட்டி விடுகின்றது. ஒருவகையில் நாகதீபம்/மணிபல்லவம் என்று பழங்காலத்தில் குறிப்பிடும் தீவு நயினாதீவு என்று தமிழர்க்கும்/சிங்களவர்க்கும் பொதுவானநம்பிக்கையாகஇருக்கின்றது. ஆனால் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் அப்படி நாகதீபமாய் இருக்க நெடுந்தீவே பெரும்பாலும் சாத்தியமென பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தோடு மிக அருகில் மற்ற இடங்களைவிட மிக அருகில் இருப்பது நெடுந்தீவேயாகும். எனவே அவ்வாறிருக்கச் சாத்தியமும் அதிகம்.

 

இன்று இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேச கஷ்டப்படும் சிங்களவர்கள் புத்தகோஷா, புத்த தேரோ, தர்ம்பால வஜ்ஜிரபோதி உள்ளிட்ட பல தமிழ்ப் பெளத்த அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து வந்து இலங்கையில் தங்கி கற்பித்ததை மறந்து விடுகின்றார்கள். ஒருவகையில் இன்று தேரவாத பெளத்தம் இலங்கையில் இந்தளவுக்கு வேரூன்றி நிற்பதற்கு தமிழ்ப் பெளத்தரான புத்தகோஷா இலங்கையில் தங்கி நின்று பாளியில் இருந்த பிரதிகளை சிங்கள மொழிக்கு எழுதிக் கொடுத்ததே முக்கிய காரணமாகும். அதுவே 'விசுத்திமகா' (பரிநிர்வாணமடைவதற்கான வழி) என்ற ஒரு முக்கிய பிரதியாக சிங்களவரிடம் இப்போதும் இருக்கின்றது. அத்தோடு எப்போதெல்லாம் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்று குழப்பம் வந்து விகாரைகளை மன்னர்கள் ஒடுக்குகின்றார்களோ, அப்போதெல்லாம் பெளத்த பிக்குகள் தமிழ்நாட்டில் இருந்த புத்த மடலாயங்களிலேயே தஞ்சம் புகுத்திருக்கின்றார்கள். சிலர் அவ்வாறு தஞ்சமடைந்த காலங்களில் சிங்களத்தில் பெளத்த பிரதிகளைக் கூட எழுதியிருக்கின்றார்கள்.

 

3.

ப்போது மீண்டும் தமிழ்ப் பெளத்தத்திற்கு வருவோம். ஏன் இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் அழிந்தது என்பதற்கு இரண்டு காரணிகளை முக்கியமாகச் சொல்கின்றார்கள். அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னர்கள் தமது அரசியல் அதிகாரத்தை யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களில் பிரயோகிக்க முயன்றமை ஒன்று. மற்றது சிங்கள பெளத்தர்கள் தமிழ்ப் பெளத்தர்களோடு தொடர்பாடலைத் துண்டித்துக் கொண்டமை. அத்தோடு தமிழ்நாட்டில் எப்படி பக்தி இயக்கங்கள் பெளத்தத்தையும், சமணத்தையும் விழுங்கிக் கொண்டனவோ அவ்வாறே அதன் பாதிப்பு தமிழர்கள் இருந்த வடக்கு கிழக்குகளையும் சென்றடைந்தன என்கின்றார்கள். இன்னொருவகையில் இப்படிப் பார்க்கலாம். தமிழ்ப் பெளத்தத்திற்கு பெருமளவில் உதவிகள் சிங்கள மன்னர்களிடம் இருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. ஆகவே அது இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசர்களையும், தமிழ்நாட்டு மன்னர்களையும், புரவலர்களையும் நம்பியிருந்திருக்கலாம். தமிழ்நாட்டிலே பெளத்தம் தன்னிருப்பை அடையாளமற்று கைவிட்டபோது இலங்கையிலும் தமிழ்ப் பெளத்தம் மறையத்தொடங்கி சைவத்தோடு தன்னிருப்பைக் கரைத்திருக்கலாம்.

 

ஆகவே எப்படி விஜயன் இரண்டாவது மனைவியாக பாண்டிய அரசியை மணந்ததன் முலம் தமிழர்களின் வரவு இலங்கையில் தொடங்கிவிட்டதெனச் சொல்ல சிங்களவர்களின் மகாவம்சமே நமக்கு ஆதாரம் எடுத்துத் தருவதுபோல, சிங்களப் பெளத்தம் மட்டுமில்லை தமிழ்ப் பெளத்தமும் சமாந்திரமாக இலங்கையில் தொடங்கியிருக்கின்றது என்று சொல்வதற்கும் நமக்குப் பல ஆதாரங்கள்  இருக்கின்றன. இதன் மூலம் சிங்களவரோ/தமிழரோ தனிப்பட்டு உரிமைகொள்ள இலங்கை என்கின்றநாடோ, அரச மதமாக சிங்களப் பெளத்தமோ ஒருபோதும் அமைய முடியாது.  இலங்கையில் பிறந்தநம் அனைவருக்கும் இலங்கை என்கின்றநாட்டிலும், இலங்கையின் இறையாண்மையின் முக்கிய பகுதியாககட்டமைக்கப்பட்டிருக்கும் பெளத்தமதத்திலும், சமபங்கிருக்கின்றது என்று உறுதியாக உரையாடல்களை நிகழ்த்த முடியும்.

 

*************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை)

0 comments: