கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 57

Saturday, November 09, 2024

 அமரன்: ஒற்றைக் கதையாடலின் ஆபத்து
************************


நான் அமரன் திரைப்படத்தின் கதைக்களத்துக்குள் போக விரும்பவில்லை. அது ஒரு உண்மையான மனிதனின் வாழ்க்கையைப் புனைவாகச் சொல்கின்ற திரைப்படம். எந்த ஒருவரினதும் இழப்பு என்பது துயரமானதே. அதுவும் இளம் வயது சடும் மரணமாயின், அவர்களைச் சுற்றியிருப்பவர்க்கு மனவடுக்களை நீண்டகாலத்துக் கொடுக்கக்கூடியது.

அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தின் பாதிப்பை நாம் எந்தவகையில் மறுக்கமுடியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் சிக்கல் என்னவென்றால் அது சாகசம் என்கின்ற பெயரில் இந்திய இராணுவத்தையும், இந்திய தேசப்பற்றையும் glorify செய்வதாகும்.

அப்படி மிகைப்படுத்தி மேன்மைப்படுத்துவதும்போது அது தன்னளவில் நின்று செய்யாமல், மற்றமையைக் கட்டியமைத்து அந்த மற்றமையை மிக மோசமான/கேவலமான எதிரிகளாகக் கட்டியமைப்பதாகும். இன்றைக்கு இந்தியாவில் (இலங்கையில் எப்போதும்) சிறுபான்மையினர் மீது அளவுக்கதிகமான வெறுப்பு எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்துக்கள் X முஸ்லிம்கள் என்கின்ற துவிதநிலைப் பிரிவினைகள் மிக மோசமாகிக் கொண்டிருக்கின்ற காலத்தில், ஓர் இராணுவ வீரனின் தேசப்பற்றை காஷ்மீர் முஸ்லிம்கள் என்கின்ற மற்றமையை மிக மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் 'அமரன்' கட்டியமைப்பதே இங்கே சிக்கலாகின்றது.

இனி முகுந்த் வரதராஜன் என்ற ஒரு இராணுவ மேஜரையும், அவரின் சாகசத்தையும், இழப்பையும் ஒருபுறம் வைத்துவிட்டு சிலவற்றை யோசித்துப் பார்ப்போம்.

ந்த நாட்டிலும் இராணுவம் என்பது அதிகார மையத்தின் உச்சியில் நின்று இயங்குவது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் பல நாடுகளில் அரசியல் தளம்பல்கள் நிகழும்போது இராணுவமே ஆட்சியைக் கவிழ்த்து அரசாள்வதை -முக்கியமாக நமது தென்னாசியா/தெற்கிழக்காசியா நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது அறிந்துகொள்ளலாம். அந்தவளவுக்கு அவர்களிடம் அதிகாரம் மிகுந்து இருக்கின்றது.

எந்தவகை அதிகாரம் என்றாலும் அது மிகப்பெரும் துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லும் என்றாலும், ஆயுதங்கள் தாங்கும் ஓர் அமைப்பான இராணுவத்துக்கு அது இன்னும் பிறரை ஒடுக்கின்ற சக்தியை எளிதாகக் கொடுத்து விடுகின்றது. எனவே அந்த அதிகார மையத்தை தேசத்தை ஒன்றிணைக்கும் புள்ளியாக, தியாகிகளாக மட்டும் உருப்பெருக்கும்போதே சிக்கல்கள் வருகின்றன.

அவ்வாறு அவர்கள் தேசப்பக்தியாளர்களாகவும், தியாகிகளாகவும் கட்டமைக்கும்போது அவர்களின் துஷ்பிரயோகம் பேசப்படாது போகின்றது. இங்கே அமரன் ஒற்றைக் கதையாடலை மட்டும் (Singular Narratives) முன்வைப்பதால்தான் இதைப் பேசவேண்டியிருக்கின்றது. ஒற்றைக் கதையாடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சிமாண்டா அடிச்சியின் 'The Danger of a Single Story' உரையை வாசிப்பதன் மூலம் நாமின்னும் அறிந்து கொள்ளலாம்.

'அமரன்' இந்திய இராணுவத்தினன் ஒருவனினது சாகசத்தையும் தியாகத்தையும் காட்டுவதற்கு காஷ்மீரின் சுயநிர்யண உரிமைகளுக்காகப் போராடுபவர்களை மட்டுமில்லை, இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சூதாட்டத்தில் பங்குபெறாத மக்களையும் எதிரிகளாகக் கட்டியமைக்கின்றது. இதைத்தான் சிமாண்டா அடிச்சி ஒற்றைக் கதையை (மட்டும்) சொல்வதால் வரும் ஆபத்து என்கின்றார். எப்படி வெள்ளையின ஐரோப்பா உலகம் ஆபிரிக்காவைச் சார்ந்தவர்களை ஒற்றைக் கதையாடல் மூலம் அவர்களின் தனித்துவங்களை அழித்து தனக்கான வரலாற்றை எழுதிக் கொண்டதோ அவ்வாறே அமரன் இந்திய இராணுவத்தின் சாகசத்தின் மூலம் மற்றமைகளை மூடி மறைத்திருக்கின்றது.

ண்மையிலே இந்திய இராணுவம் இவ்வளவு புனிதமானதா? என்பதை நாம் கடந்தகாலத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டால், இப்படி அமரனில் கட்டியமைக்கப்படும் விம்பம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மேலும் இங்கே இராணுவத்தினன் நாட்டுக்காக துச்சமாக மதிப்பவன் என்று புனிதமாக, தியாகியாக கட்டியமைத்தாலும் அவர்களும் அதைச் சம்பளம் பெறும் ஒரு அரச உத்தியோகத்தனாகவே இருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். எந்த ஒருவரும் நாட்டுக்காக, தாம் நம்புக் கொள்கைக்காக volunteer ஆகவோ தேசப்பக்தியின் நிமித்தமோ மட்டும் செல்வதில்லை. அந்தவகையில் பார்த்தால் போராளிகளோ அல்லது 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்படுபவர்களோ இந்த 'சம்பளம்' இல்லாது தன்னார்வளாகப் போகின்றவர்களாக, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெந்தத் தேர்வும் இல்லை என்ற நிலையில் போகின்றார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் அல்லவா இந்த 'சம்பளம்' பெறும் இராணுவத்தை விட மிகப்பெரும் தியாகிகளாக இருப்பார்கள்?

மேலும் இந்திய இராணுவம் தனது நாட்டில் அரசியல் சிக்கல்கள் இருக்கும் காஷ்மீர்/அஸாம்/மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமில்லை, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினையின்போதும், ஏன் வீரப்பன் வேட்டை என்கின்றபெயரில் அதிரடிப்படையினராக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் செய்த அட்டூழியங்களும் மிக விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே இந்திய இராணுவம் இலங்கை, சூடான் (ஐ.நா.அமைதிப்படை) போன்ற பிற நாடுகளில் செய்த 'நல்ல விடயங்களை' பட்டியலிடப்போவதில்லை.

இந்த விடயங்களை எல்லாம் அமரன் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பின்னணியோடு ஒருவர் 'அமரனை'ப் பார்த்தால் இதில் கட்டியமைக்கப்படும் தேசப்பற்றும், புனிதமும் அவ்வளவு உண்மையல்ல என்பது புரிந்துவிடும். மேலும் காஷ்மீரிகளில் பெரும்பான்மையினர் இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், ஆங்கிலேயர் வரமுன்னர் எப்படி இருந்தோமோ அப்படி அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணயமுள்ள மாகாணமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். ஆனால் 'அமரன்' கட்டியமைப்பதோ, அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் செல்வாக்குக்கு உட்பட்ட 'பயங்கரவாதி'கள். ஆகவே அவர்கள் மிக மோசமாக அடக்கியொடுக்க வேண்டியவர்கள்.

இந்திய இராணுவம் செய்யும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். கற்களை எறிகின்றார்கள். ஆனால் இந்திய இராணுவம் ஒன்றுமே அவர்கள் மீது செய்யாத அப்பாவி/அருமையான இராணுவமாகக் கட்டியமைக்கப்படுகின்றார்கள்.

காஷ்மீரில் இந்திய இராணுவமும், இந்திய அரசும் செய்த அட்டூழியங்களை சும்மா இணையத்தில் தேடிப் பார்த்தாலே விபரங்கள் கொட்டும் என்பது ஒருபுறமிருக்க, சரி காஷ்மீரிகள் எதைச் சொன்னாலும் அது பக்கசார்பாக இருக்கும் என்று சொல்பவர்க்கு அருந்ததி ராயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கப் பரிந்துரைப்பேன். அது இரண்டு தரப்பினரைப் பற்றியும் பேசுகின்றது. அந்நாவல் மீது கூட விமர்சனம் இருந்தாலும், மேலும் அது இந்த இரண்டு தரப்பையும் தாண்டி முக்கியமான மூன்றாந்தரப்பான மக்களை, அவர்கள் படும் துயரங்களையும்/ சித்திரவதைகளையும் பேசுகின்றது.

மரனில் காட்டப்படும் இந்திய இராணுவம் இவ்வாறான இடங்களைக் கைப்பற்றும், தனது வீரர்களைக் காப்பாற்றும் தாக்குதல்கள் பற்றி எனது அனுபவம் ஒன்றைச் சொல்கின்றேன். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றும் முயற்சியை செய்கின்றது. யாழ்ப்பாண நிலவியலையோ, புலிகளின் ஆயுதபலத்தையை அவ்வளவு அறியாது பாரசூட்கள் மூலம் இராணுவத்தை இறக்கி யாழ்நகரைக் கைப்பற்றலாம் என்று இந்திய இராணுவம் திட்டம் அமைக்கின்றது. அவ்வாறு ஓர் இரவில் இறக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை புலிகள் தாக்கி அழிக்கின்றனர். இது இரண்டு ஆயுதத் தரப்புக்களின் போர் எனச் சொல்லலாம். ஆனால் அடுத்தநாள் இந்திய இராணுவம் என்ன செய்கின்றது? தனது கவச வாகனங்களைத் தெருவில் இறக்கி, வீதியில் நின்ற அப்பாவி மக்களை வகைதொகையின்றி தனது வெஞ்சினம் தீர்க்கச் சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொன்றது மட்டுமில்லை அப்படித் தப்பியவர்களையும், அரைகுறையாக காயங்களுடன் துடித்துக் கொண்டவர்களையும் தனது டாங்கிக்கு அடியில் போட்டு மேலே மிதித்துக் கொன்றது. இது கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் நடந்த கோரதாண்டவம்.

அப்படி இருக்கின்ற இந்திய இராணுவத்தை ஒரு திரைப்படம் தனியே தேசப்பற்றாளர்களாவும், தியாகிகளாகவும், மக்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டுகின்றபோது ஒருவருக்கு நெருடல் வராதா என்ன? அதுவும் தனது இராணுவ காலத்தில் மிக மோசமாக காயப்பட்டு காப்பாற்றக்கூடிய 'பயங்கரவாதியைக் கூட' பக்கத்தில் வைத்து சுட்டு கொன்று தன்னை வீரனாகப் பெருமிதம் கொள்கின்ற (அமரனில் வரும் காட்சி) ஒருவனை, அவனது எதிர்த்தரப்பு கொல்கின்றபோது இதுவும் போரின் ஒரு எதிர்வினை என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். நாமே தெருவில் போனால் ஒருவன் சீண்டினால் கோபப்படுவோம் என்றால், ஒருவனை மிலேச்சனத்தனமாக அதிகாரத்தின் நிமித்தம் கொன்றுவிட்டு 'வீரனாக'க் காட்டும்போது மறுதரப்பின் எதிர்வினைகளில் இருந்து ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளமுடியும்.

மேலும் இந்திய இராணுவத்தின் புனிதத்தை குடும்பத்தின் பாசத்தைக் காட்டுவதன் மூலம் கட்டியமைப்பது இன்னும் மோசமானது. ஒரு இராணுவ வீரனுக்குப் பாசம் இருக்கக்கூடாதா என்று கேட்கலாம். இருக்கலாம். அது தவறே இல்லை. அப்படியாயின் 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்பவர்க்குக் குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்குப் பாசம் இல்லையா? அவர்கள் குடும்பம், இந்த இராணுவ சம்பளம், இறந்தால் கூட பெருமை மிகு 'அர்ஜூனா' விருதுக்கள் இல்லாது இப்படி ஏன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று ஒருகணம் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? இந்தளவு உணர்ச்சிவசப்படும் அவர்கள் ஒரு இராணுவத்தில் சேர்ந்து சம்பளம் பெற்று நிம்மதியாக வாழ முடியுமே? ஏன் இவற்றையெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு மோசமான உயிர் ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவிடாது, இவ்வாறான தேசப்பற்று/தியாக திரைப்படங்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன.

ஆகவேதான் இந்த ஒற்றைக் கதையாடல்கள் மிக ஆபத்தானவை என்கின்றேன். இந்தத் தேவையில்லாத தியாக/புனித கற்பிதங்களை நம்பி எந்த இராணுவத்தையும் மேன்மைப்படுத்தாதீர்கள் என்று மட்டுமில்லை, இராணுவத்துக்கு உங்கள் பிள்ளைகளைத் தயவு செய்து அனுப்பி வைத்துவிடாதீர்கள் என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது. இராணுவத்தில் இருந்து உயிர் திருப்பி வருபவர்களில் பெரும்பாலானோர் PTSD போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மனச்சிதைவுடன் தமது எஞ்சிய நாட்களை மிக மோசமாகக் கழிக்கின்றார்கள் என்பதை அமெரிக்க இராணுவ வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஒரு மனித உயிரின் இழப்பு என்றவகையில் முகுந்த வரதராஜனின் மரணம் ஈடுசெய்யமுடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல அது எந்த அரசியல் நோக்கம் என்றாலும் எதிர்த்தரப்பின் இழப்பும் ஈடுசெய்யமுடியாததே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் எந்த மோசமான குற்றச்செயல் புரிந்திருந்தால் கூட, நாம் எல்லோருமே மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். ஒரு உயிரைப் பறித்து நாம் எந்த பெரும் நீதியை இந்த உலகில் நிலைநாட்டிவிடப் போகின்றோம். அது எமக்கு மிக மோசமான எதிர்த்தரப்பாக இருந்தால் கூட எவருக்கும் அப்படியொரு தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகின்றோம். அதுவும் காந்தி போன்ற ஒருவர் பிறந்த நாட்டில், ஒரு இராணுவத்தின் சாகசத்தை/பழிவாங்கலை தேசப்பக்தியாகவும்/ தியாகமாகவும் கட்டியமைக்கும்போது நாம் சற்று தலைகுனிந்து வெட்கப்படவும் அல்லவா வேண்டும்?
************

(இதை எழுத, எனக்குப் பிரியமானவர் முகுந்த் வரதராஜன் காலமானபோது அவரின் அஞ்சலிக்காக இசையமைக்கப்பட்ட பாடல்களில் ஒன்றை தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்னது ஒரு காரணமாக இருந்தது. அந்தவகையில் இந்தத் திரைப்படம் அவருக்கு நெருக்கமானதும் கூட. அவரின் சார்பு/உணர்ச்சி எல்லாவற்றையும் புரிந்துகொண்டே, ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்கின்ற உரையாடலின் நீட்சியிலே இதை எழுதினேன். அவருக்கும் நன்றி)

 

- Nov 04, 2024-

0 comments: