1.
இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் சென்றபோது சில வருடங்களுக்கு முன் 'அரகலய' போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் உச்சத்தில் அன்றைய ராஜபக்ஷ அரசு துடைத்தெறியப்பட்டது. இலங்கையின் முழு அதிகாரங்களும் பெற்ற ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையை விட்டுத் தப்பியோடியதும், வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாகப் பதுங்கி இருந்ததும் அண்மைக்கால இலங்கையின் வரலாறு.
நாட்டைத் திவாலாக்கி இப்படி அரசுகள் வீழ்ந்தற்கு -ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் போனால்- நமக்கு 'அரபு வசந்தம்' சிறந்த சாட்சியமாக இருக்கின்றது. விலைவாசிகள் உயர்ந்து மக்களின் நாளாந்த வாழ்வே அவதிக்குட்பட்டபோது ஒரு துனிஷியா இளைஞன் சந்தையொன்றில் தன்னைத் தீவைத்துக் கொழுத்தியதன் மூலம் 'அரபு வசந்தத்தை'த் துனிஷியாவில் தொடக்கி வைத்தான். அந்தக் கோபத் தீ பின்னர் எகிப்து, லிபியா, பஹ்ரைன், யேமன், சிரியா பல நாடுகளைச் சென்றடைந்தது. சில நாடுகளில் மனித இழப்புக்களோடு அந்தந்த நாட்டு ஜனாதிபதிகள் தூக்கியெறியப்படவோ அல்லது அரச அதிகாரத்தை இராணுவத்திடம் கொடுத்துவிட்டுத் தப்பியோடவோ வேண்டியிருந்தது. இந்த 'அரபு வசந்தத்தில்' மேற்குலகின் இரகசியக் கைகள் போராட்டத்தின் இறுதிக்காலங்களில் இருந்தனவா என்பதும், முக்கியமான கேள்விதான்.
ஆனால் இலங்கையில் நடந்த 'அரகலய'ப் போராட்டம் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்தது. எவ்வித மனித இழப்புக்களும் இல்லாமல் ஒரு சர்வாதிகார -அதுவும் ஈழத்தில் போரை முடித்து இன்னொரு பேரரசனாக தம்மை புதிய 'மகாவம்ச'த்தின் பக்கங்களில் சேர்த்துக்கொண்ட ராஜபக்ஷ குடும்பம் முழுதாக மக்களினால் துடைத்தெறியப்பட்டது. இவ்வாறு இலங்கையில் வரலாற்றில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட இந்த முக்கிய சம்பவத்தையும் ராஜபக்ஷ குடும்பமோ அல்லது இனி வரும் சிங்கள அரசாட்சியாளர்களோ மகாவம்சத்தில் சேர்ப்பார்களா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும் 'அரகலய' போராட்டம் நடந்தபோது இராணுவம் எவ்வாறு பேரமைதியாக இருந்தது என்பது மிகப்பெரும் கேள்வி (அமெரிக்காவின் தலையீடு நிச்சயம் இருந்திருக்கும்). பிற தென்கிழக்காசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளைப் போல, அங்கு மக்களால் துரத்தப்பட்ட ஜனாதிபதி/பிரதமர்களுக்குப் பின், இராணுவம் இலங்கையில் தனக்கான அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளாது, 'ஜனநாயக வழியிலே' அதிகாரம் கைமாற்றப்பட்டதையும் முக்கிய புள்ளியாக நாம் குறித்தாக வேண்டும்.
இத்தனைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அளவு மிகப்பெரியது. ஒரு நாட்டின் சனத்தொகையை வைத்துப் பார்க்கும்போது, இலங்கையானது உலகில் 14வது பெரிய இராணுவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அத்தகைய பலமிகு இராணுவத்துக்கு, சர்வ அதிகாரமும் வாய்க்கப் பெற்ற ஜனாதிபதி கட்டளையிட்டிருந்தால் 'அரகலய' போராட்டக்காரர்கள் அனைவரையும் ஒரு நாளுக்குள் அகற்றிவிட முடியாதா என்ன? ஆகவே இந்த விடயத்தில் உள்ளே நடந்திருக்கக்கூடிய இந்திய/அமெரிக்க/ஐரோப்பா அரசுக்களில் இராஜதந்திர நாடகத்தை தற்சமயம் கொஞ்சம் மறந்துவிடுவோம்.
2.
இப்போது சமகாலத்துக்கு வருவோம். அரகலய போராட்டத்தின் ராஜபக்ஷ குடும்பம் துரத்தப்பட்டபின், நிலைமாறும் அரசை ரணில் விக்கிரமசிங்க தாங்கிக் கொள்கிறார். நேரடித் தேர்தல்களில் பலமுறை தோற்று ஒருபோதும் ஜனாதிபதி பதவி ரணிலுக்குக் கிடைக்காதென, ரணிலே அந்த ஆசையைக் கைவிட்டபோது அவருக்கு இப்படி அமைந்தது ஒரு பேராச்சிரியமே. இதையும் ஒருவகையில் பின் நவீனத்துவ 'விளையாட்டு' என எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அவல்/அபத்த நகைச்சுவையை ஒருபக்கம் வைத்துவிட்டுப் பார்த்தால், அரகலயப் போராட்டம்/அதற்காய்ப் போராடிய மக்கள்/துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி என எல்லாவற்றையும் பின் நவீனத்துவத்தின் மூலம் அணுகினால் இன்னும் சுவாரசியமான பல முடிச்சுக்கள் கட்டவிழலாம்.
பின் நவீனத்துவம் மார்க்ஸியம் உள்ளிட்ட பலவற்றைப் பெருங்கதையாடல் என்று கூறி நிராகரிக்கின்றது. ஏன் மார்க்ஸியம் போன்றவை பெருங்கதையாடல் என்று பின்நவீனத்துவம் சொல்கின்றது என்றால், மரபான மார்க்ஸியர் உள்ளிட்ட பலர் 'மார்க்ஸியமே' முடிந்த முடிவானது. அதை மாற்றமுடியாது என்று வலியுறுத்திய காலம் ஒன்றிருந்தது, எல்லோருக்குமான முழு உண்மை என்பதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாமே பகுதி பகுதி உண்மைகளாளது என்பதே பின் நவீனத்துவம் வலிறுத்துகின்றது. ஆகவே மார்க்ஸியம் தன்னை முடிந்த உண்மையாகவும், முழுமையடைந்த தத்துவமாகவும் தன்னை முன்வைக்கும்போது அது பெருங்கதையாடல் ஆகிவிட்டது என்றே அர்த்தம். அங்கே எந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியாது ஒரு 'தேக்கநிலை' உருவாகிவிடுகின்றது.
மதம் சார்ந்த பிரதிகளையும் இப்படிப் பார்க்கலாம், எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன/சொல்லப்பட்டுவிட்டன என்ற அடிப்படைவாத மதவாதிகள் உரத்தக் குரலெழுப்புவார்கள் அல்லவா? அவ்வாறு பெருங்கதையாடலாகி விட்டவை என்ன செய்யும், தனக்குள் அதிகாரத்தைக் குவிக்கும். அப்படிக் குவிப்பதன் மூலம் எல்லோருக்கும் பொதுவான உண்மையான அந்தப் பிரதிகளை முன்வைக்கும். அவ்வாறு அதற்குள் அடங்காதவர்களை 'மற்றமை'யாகக் கட்டியமைத்து தனது எதிர்ப்பினைக் காட்டும்.
உதாரணத்துக்கு இலங்கையில் சிங்களப் பேரினவாதம், சிங்களப் பெளத்தமே அரச அதிகார மதம் என்று சொல்வதன் மூலம் ஒருவகை அதிகாரத்தை பெளத்தத்துக்குக் கொடுப்பதைச் சொல்லிக் கொள்ளலாம். அதன் இன்னொரு முனைதான் இப்போது மீண்டும் வென்றுள்ள டிரம்ப் பைபிளை மீண்டும் அமெரிக்காவின் மீட்டெடுத்த வெள்ளையினப் பெருமிதமாக முன்வைப்பதாகும்.
நான் மீண்டும் இலங்கை அரசின் பின் நவீனத்துவ நிலவரத்துக்கு வருகின்றேன். பின் நவீனத்துவம் பெருங்கதையாடல்களை நிராகரிக்கும் அதேவேளை, இனிப் பெரும் புரட்சிகளால் மாற்றங்கள் நிகழாது என்பதையும் விலத்தி வைக்கவே செய்கின்றது. ஏனெனில் இந்த குவிப்பு (unity) என்பது எப்படியோ பெரும் அதிகாரத்தைக் (totality)கொண்டுவருகின்றது என்று சந்தேகப்படச் சொல்கின்றது. சிறு குழுக்களால் அதிகாரத்தில் மாற்றங்களை ஏதேனும் ஒரு வகையில் மேற்குலகில் கொண்டுவந்தற்கு கறுப்பினத்தவர்களில் 'Black Lives Matter', கனடாவில் பூர்வீகக்குடிகளின் 'Idle No More' போன்றவற்றை அவ்வப்போது உதாரணங்களாகச் சொல்வதுண்டு.
இன்னொருவகையில் இடதுசாரி ஆயுதப்புரட்சிகளை இரண்டு வெவ்வேறு காலங்களில் நிகழ்த்திய ஜேவிபியின் பின்னணியில் இருந்து வருகின்ற, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க ஒரு இடதுசாரியா என ஒரு நேர்காணலில் பாக்கியசோதி சரவணமுத்துவிடம் கேட்கும்போது Anura is a pragmatist, not a Marxist என்று சொல்கிறார். அதாவது அநுர யதார்த்தவாதியே தவிர இடதுசாரி கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கூடிய ஒருவர் அல்ல என்கின்றார் (இல்லாவிட்டால் எந்த அசலான இடதுசாரி IMFஉடன் கடன்வாங்கும் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்த முடியும்?)
மேலும் அநுரவின் என்பிபி கூட்டணி, இடதுசாரி அரசியலை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டவர்களும் அல்ல. அவர்களின் முக்கியமான தேர்தல் விஞ்ஞாபமானதாக இருந்தது இலஞ்ச ஒழிப்பு (Anti-Corruption). இத்துடன் இலங்கை வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு, பொருளாதாரச் சீர்திருத்தமும் முக்கியமானது என்பதை மேலதிகமாகத் தம் தேர்தல் பரப்புரைகளில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அந்தப் பொருளாதாரச் சீர்திருத்தம் மார்க்ஸின் பொருளாதாரத்தின் அடிப்படையில் வரப்போவதில்லை என்பதையும் நாமறிவோம். வேண்டுமெனில் என்பிபியினர் கொண்டு வரும் சீர்திருத்தம் நியோ-லிபரல்களுக்குரிய ஒன்றாக இருக்கக்கூடும் என நம்பலாம். இல்லாவிட்டால் இன்றிருக்கும் இலங்கையை என்றென்றைக்குமாகக் கட்டியெழுப்பவும் முடியாது என்பதே இலங்கையின் துயர யதார்த்தமாகவும் இருக்கின்றது.
3.
இந்தப் பின்னணியில்தான் -அதாவது இலஞ்ச ஒழிப்பும், பொருளாதாரச் சீர்திருத்தமும் - முக்கியப்படுத்தப்பட்டதால்தான் சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் என்பிபி கூட்டணியிருக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஜனாதிபதிக்கோ/சிங்களக் கட்சிக்கோ எதிரான நிலையில்தான் தமது ஆதரவை வழங்கிய வடக்கு கிழக்கு (மட்டக்களப்பு தவிர்த்து) மக்கள் பெருமளவில் வாக்களித்தது இலங்கையின் வரலாற்றிலே முக்கியமானது.
'இலஞ்ச ஒழிப்பு' என்பது இத்தேர்தலில் முக்கியப்படுத்தப்பட்டதால்தான், அதற்கு முன்னர் யாழில் சில அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கும் மருத்துவச் சீர்கேடுகளைப் பொதுவெளியில் கொண்டு வந்த வைத்தியரான அருச்சுனாவும் வடமாகாணத்தில் சுயேட்சையாக நின்று வென்றிருக்கின்றார் என்று நம்புகின்றேன். இங்கே ஒருசாரார் அருச்சுனாவை கண்மூடி ஆதரிப்பதற்கும், இன்னொருபகுதியினர் அவரை எல்லாவற்றுக்கும் நக்கலடிப்பதற்கும் அப்பால் அருச்சுனாவின் வருகையை/வெற்றியை வைத்து ஒரு case study செய்து பார்க்கலாம்.
எப்படி அரகலய போராட்டத்தோடு ஜேவிபியினர் இளையவர்களை சமூகவலைத்தளங்களினூடாக அணுகி ஆதரவு பெற்றனரோ (மிகுதி அனைத்து மரபார்ந்த சிங்கள அரசியல் கட்சிகள் சமூகவலைத்தளங்களின் தாக்கத்தை கவனிக்கத் தவறியமை) அவ்வாறே சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி அருச்சுனாவும் வெற்றி பெற்றிருக்கின்றார். இத்தனைக்கும் அவரின் சறுக்கல்கள், அவரின் சுயேட்சிக்குழுக்கள் நடந்த எதிர்ப்புக்கள் எனப் பல விடயங்கள் தேர்தல் காலங்களில் தொடர்ந்தபோதும், மரபார்ந்த தமிழ்க்கட்சிகளின் பல முக்கியமானவர்களை மண் கவ்வச் செய்து அருச்சுனா வென்றிருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
சுமந்திரன் போன்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியமான நபரை மட்டுமில்லை, எப்போதும் நிலையான வாக்கு வங்கியை வைத்திருப்பவர் என்று கடந்த பல தசாப்தங்களாக நிரூபித்த டக்ளஸ் தேவானந்தாவைக் கூட தோற்கடித்து, அதுவும் இலங்கையில் பல நூற்றுக்கணக்கான சுயேட்சைக்குழுக்கள் நின்ற இத்தேர்தலில், ஒரேயொரு சுயேட்சைகுழு எம்பியாக பாராளுமன்றத்துக்கு அருச்சுனா சென்றிருக்கின்றார். இத்தனைக்கும் யாழின் முன்னாள் மேயராகவும், நிதானமாக அரசியல் செய்பவராகவும், பெரும்பாலான யாழ்ப்பாணர்கள் விரும்புவதாகச் சொல்லும் தமிழ்த்தேசியத்தின் மீது அபரித விருப்புமுள்ள மணிவண்ணனைக் கூட எளிதில் அருச்சுனா தோற்கடித்திருப்பதை பின் நவீனத்துவ நிலவரத்தின் நல்லதொரு உதாரணமாகக் காட்டலாம்.
இன்னொருவகையில் இது எனக்கு சிலியில் நடந்த ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றது. பினோச்சோயின் சர்வாதிகாரத்திற்குள் நெடுங்காலமாகச் சிக்கித் திணறிய மக்களுக்கு அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜனநாயக ரீதியாக சூழல் வருகின்றது. அதாவது 'இல்லை' (No) என்று பெரும்பான்மை வாக்களித்தால் பினோச்சோ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிப் போகவேண்டும். அந்தத் தேர்தலில் பினோச்சோவைத் தோற்கடிக்க அங்கிருக்கும் இடதுசாரிகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் எப்படி எதைச் செய்தாலும், என்ன புதிதாக நடந்துவிடப் போகின்றது என்ற அலுப்பில், இளம் வாக்காளர்கள் வாக்களிக்கவே விரும்பாமல் இருக்கின்றனர். அப்போதுதான் ஒரு இடதுசாரிக் குழு, இந்த இல்லை' (No) க்கு வாக்களித்தால் நாட்டில் பாலும் தேனுமாக coca colaவும், பார்ட்டிகளும், அமெரிக்கக் கனவுமாக மாறப்போகின்றதென்று விளம்பரங்கள் செய்து இளைஞர்களின் மனதை மாற்றியமைக்கின்றார்கள் (இதன் வரலாற்றை 'NO' என்கின்ற திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்). இறுதியில் இந்தத் தேர்தலில் பினோச்சோ தோல்வியடைந்து சிலியிருந்து ஐரோப்பா நாடொன்றுக்குத் தப்பியோடுகின்றார்.
அவ்வாறுதான் நாட்டில் எல்லாமே இலஞ்சத்தில் திளைத்திருக்க, ஒரு தன்னிலை அதன் அத்தனை பலவீனங்களோடும் எதிர்க்கேள்விகளும், அம்பலப்படுத்தல்களையும் செய்ய, வடமாகாணத்தில் அருச்சுனா ஒரு வெற்றித் திருவுருவாக்கப்பட்டிருக்கின்றார். இந்த வெற்றியை நாம் சும்மா போகின்றபோக்கில் எள்ளல் செய்து கடந்துவிடாமல் இருந்தால் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த தேர்தலில் அருச்சுனா இதைமாதிரி வெல்வாரா இல்லையா அல்லது ஏதேனும் மரபான கட்சியில் ஜக்கியமாவாரா என்பது எதிர்காலத்துக்குரியவை. இப்போது அவசியமும் அற்றது.
எனக்குப் பிடித்த தத்துவவாதியான தெரிதா 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' என்கிறார்.. எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும் என்பதைத் தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நமக்குத் தெரிந்த எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே தான் குறிப்பிடும் எதிர்காலம் என்கின்றார் தெரிதா. அவ்வாறான ஒரு 'எதிர்காலம்'தான் இலங்கையில் இப்போது சாத்தியமாகின்றது என்று நினைக்கின்றேன். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் 225 இருக்கைகள் உள்ள பாராளுமன்றத்தில் 3 இருக்கைகள் மட்டுமே வென்ற ஜேவிபி, இம்முறை கிட்டத்தட்ட 160 இருக்கைகளை வென்று இலங்கையின் தேர்தல் வரலாற்றில் நிகழாத அறுதிப்பெரும்பான்மைச் சாதனையை நாட்டியிருப்பதும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒருவர் இம்முறை 42% வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இலங்கையில் வந்திருப்பதையும் யார்தான் கணித்திருக்க முடியும்?
ஆக, 'அரகலய'ப் போராட்டத்தில் இருந்து, இன்று அனுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாக வென்றிருப்பதிலிருந்து, அருச்சுனா ஒரு சுயேட்சை வேட்பாளராக எம்பி ஆனது வரை எல்லாவற்றையும் பின் நவீனத்துவ நிலவரத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்பது சுவாரசியந் தரக்கூடியது. ஆனால் irony என்னவென்றால் நாம் ஒன்று உறைந்துபோன தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் அரைத்த மாக்கதைகளில் சிக்குண்டு கிடப்போம், இல்லாவிட்டால் இன்றைய யூ-டியூப்பர்களின் கட்டுக்கதைகளில் 'சில்லறையைச் சிதற' விட்டுக் கொண்டிருப்போம். ஒருபோதும் வெவ்வேறு சிந்தனைப்புள்ளிகளில் வைத்து இலங்கை அரசியலை விளங்கிக் கொள்வது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளமாட்டோம்.
*****************
(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2024)
புகைப்படங்கள்: இணையம்