பெருமாள் முருகனின் 'சோரகவி மரபு: பதிப்பும் திருட்டும்' நூல் குறித்து..
***
இன்று புத்தர் கற்பித்தவை என்று சொல்லப்படுபவை ஒரு நீண்ட மரபில் பேணிக் காக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வந்து கொண்டிருப்பவை. அவ்வாறே நமது சங்க இலக்கியப்பனுவல்களும் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் பேணப்பட்டு நூல் வடிவங்கள் பெற்றிருக்கின்றன. அந்த ஆக்கங்களில் இடைவீழ்தல், இடைநீக்கல், இடைச்செருகல் நிகழ்ந்திருக்கலாமென்றாலும் ஏதோ ஒருவகையில் சங்க இலக்கியங்களின் அசல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பதாலேயே தமிழ் மொழியின் தொன்மையை நாம் இன்று பேச முடிகின்றது.
வாய்மொழியாகவும் பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த இந்தப் பனுவல்கள் அச்சியந்திந்திரங்களின் அறிமுகத்தால் அச்சிலும் வந்தாலும், இவற்றைன் பின்னால் பலரின் பேருழைப்பு இருக்கின்றது என்பதை நாமறிவோம். சங்க கால இலக்கியங்களைப் பேசும்போது மறைமுகமாக இவற்றை எடுத்து வந்தவர்களினதும், பாடபேதங்களைக் களைந்தவர்களினதும் பங்களிப்பு இல்லாதுவிட்டால் இன்று நாம் அசலான சங்க இலக்கியப் பாடல்களையோ அதன்பின்னால் எழுதப்பட்ட பனுவல்களையோ எளிதில் அறிந்திருக்க முடியாது.
அவ்வாறானவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அறிமுகம் செய்கின்ற ஒரு சிறந்த நூலாக பெருமாள் முருகனின் 'சோரகவி மரபு: பதிப்பும் திருட்டும்' என்பதைச் சொல்ல முடியும். இந்நூலில் இருக்கும் கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. சோரகவி மரபு என்ற தலைப்பின் கீழ் பெருமாள் முருகன் சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதி இடைநிறுத்திய தொடரும் இந்நூலின் பிறபகுதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
எனக்கு சோரகவி மரபுத் தொடரின் கீழ் வரும் ஒன்பது கட்டுரைகளை விட, வெவ்வேறு தலைப்பில் கீழ் எழுதப்பட்ட மற்றக் கட்டுரைகளே அதிகம் பிடித்திருந்தது. இத்தொகுப்பின் முதலாவது கட்டுரையான 'அகராதி நோக்குப் பதிப்பில்' , சங்க இலக்கியம் முழுவதையும் ஒருசேரப் பதிப்பித்தவர் ச.வையாபுரிப் பிள்ளை (1940) என்பதை அறிந்துகொள்கின்றோம்.
அதேவேளை ஈழத்தைச் சேர்ந்த சி.வை.தாமோதரம்பிள்ளையாலே முதன்முதலில் 1887இல் கலித்தொகை பதிப்பிக்கப்படுவதன் மூலம் சங்க இலக்கிய பதிப்பு தொடங்கப்பட்டது என்பதை பெருமாள் முருகன் நேர்மையாகப் பதிவு செய்கின்றார்.
*
தாமோதரம்பிள்ளையால் தொடங்கப்பட்ட சங்க இலக்கியப் பதிப்பின் இன்னொரு பரிணாமத்தை உ.வே.சாமிநாதயைய்யர் உருவாக்குகின்றார். இவர்களின் தொடர்ச்சியில் முழு சங்க இலக்கியத்தையும் ச.வையாபுரிப் பிள்ளை இரண்டு பகுதிகளாக 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' மூலம் வெளியிடுகின்றார்.
இந்தக் கட்டுரையில் மட்டுமில்லை, தனிக்கட்டுரையாக எழுதப்பட்ட இன்னொரு கட்டுரையான 'உண்மைப் பாஷாபிமானம்' மூலமாகவும், நாம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு சங்க இலக்கியங்கள் மீதிருந்த ஆழமான பற்றைக் கண்டுகொள்கின்றோம். வ.உ.சி தனியே 'கப்பலோட்டிய தமிழனாக' தமிழர் தம் மனங்களில் தேங்கிப் போனவர் என்றாலும் அதைத்தாண்டி வ.உ.சி செய்த சங்க இலக்கியப் பதிப்புக்களை, முக்கியமாக தொல்காப்பியப் பதிப்புகள் குறித்து பெருமாள் முருகனின் கட்டுரையில் கண்டறிந்து கொள்கின்றோம்.
வ.உ.சி தனியே தொல்காப்பியத்தில் மட்டும் நிற்காது, அவருக்கு அறக்கோட்பாடுகள் மீதிருந்த ஈடுபாடால், அவர் திருக்குறள் அறத்துப் பாலுக்கு உரை எழுதியிருக்கின்றார் என்பதும், சிறைக்குள் இருந்த காலத்தில் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ததாகவும் அவரது 'மனம் போல வாழ்வு' நூலை வாசிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது என்கிறார் பெருமாள் முருகன். தனியே வ.உ.சியின் பங்களிப்பு என்று இக்கட்டுரைய எழுதாமல், தொல்காப்பியத்தில் நிகழ்ந்த இடைச்செருகல், பாடபேதங்கள், போலி நூல்கள் என்று பலவிடயங்களை பெருமாள் முருகன் தொட்டுச் செல்வது சுவாரசியமானது.
அதேபோல இத்தொகுப்பில் இருக்கும் 'புலமையும் படைப்புணர்வும்' கட்டுரை புனைவில் சிறந்து விளங்கிய கு.அழகிரிசாமியை பழ்ந்தமிழ் இலக்கிய பதிப்பில் ஒருவராக நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. புனைவெழுத்திலும் அதேவேளை பழந்தமிழ் இலக்கியத்திலும் ஒருசேரக் கால்பதித்து நின்றோர் அரிதே. அந்தவகையில் நவீன சிறுகதையாளரான மு.அழகிரிசாமி பழந்தமிழ் இலக்கியப் பதிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டார் என்பது அறிவது வியப்பூட்டக்கூடியதே. எப்படி வ.உ.சியை 'கப்பலோட்டிய தமிழனாக' மட்டும் சுருக்கினோமோ, அவ்வாறே மு.அழகிரிசாமியையும் ஒரு புனைவெழுத்தாளராக மட்டும் நாம் சுருக்கிவிட்டோம் என்றுதான் அவரின் பங்களிப்பை அறியும்போது நமக்குத் தோன்றும்.
அழகிரிசாமி 'காவடிச் சிந்து' நூலைப் பதிப்பிக்கும்போது சும்மா வீட்டுக்குள் இருந்து நூலை பதிப்புக்கு அனுப்பாது, பல கிராமங்களுக்கு சென்று ஏடுகள் பலதைத் தேடியும், பலரை அதைப் பாடச் சொல்லிக் கேட்டும் குறிப்புகளை சேகரித்தோடல்லாது, அச்சுப்பிரதி, ஓலைச்சுவடிப் பிரதி, கள ஆய்வில் சேகரித்தவை என்பவற்றைக் கொண்டு பாட பேத வேறுபாடுகளையும் கவனமாக நுணுக்கி ஆராய்ந்தே அந்த நூலை பதிப்பித்திருக்கின்றார். அதேபோன்று கம்பராமாயணத்தின் பாலகண்டம், ஆரணிய காண்டம், சுந்தர காண்டம் போன்றவற்றையும் அழகிரிசாமி பதிப்பித்திருக்கின்றார். தனியே பதிப்பிக்காது, கம்பராமாயணத்தின் அசலில் கைவைத்த செருகுகவிகள் பற்றிய குறிப்பையும் தனது பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவரின் வார்த்தைகளில் கூறுவதனால், 'கம்பராமாயணத்தைக் கவிதை உணர்ச்சியோடு படிப்பவர்கள் பல பகுதிகளைச் செருகுகவிகள் என்று கூறும் நிலைக்கு வருவார்கள் என்பது திண்ணம். அப்போது புத்தகத்தில் பாதியோ அலல்து பாதிக்கும் அதிகமோ செருகுதான் என்று அவர்கள் கண்டு உணரக் கூடும்' என்கின்றார்.
*
'கண்ணைக் கொடுத்த நூல்' என்ற தலைப்பில் பெருமாள் முருகன் 'புறத்திரட்டு' நூல்களைப் பேசுவது அவ்வளவு சுவாரசியமானது.
புறத்திரட்டு என்பவை அசலான நூல்களே அல்ல. அவை ஒவ்வொருவரும் தம்மைக் கவர்ந்த பாடல்களை மனப்பாடம் செய்யும்பொருட்டு பல்வேறு மூல நூல்களில் இருந்து எழுதிவைத்த பாடல்களின் தொகுப்பாகும். இந்தப் 'புறத்திரட்டு'ப் பாணியே பிற்காலத்தில் பிரசங்கம்/கதாகலாட்சேபம் செய்பவர்களுக்கு உதவியது என்கின்றார் பெருமாள் முருகன். தொடக்கத்தில் இத்தகை புறத்திரட்டு நூல்களை எவரும் பதிப்பிக்கவில்லை என்றாலும், முதன்முதலாக 'புறத்திரட்டை'ப் பதிப்பித்த ச.வையாபுரிப் பிள்ளை இது 13/14ம் நுற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப் பெற்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
வ.உ.சா ஒருகாலத்தில் வறுமைக்குச் சென்றபோது அவர் தமது குடும்பத்தவர் செய்த தொழிலான காலட்சேபம்/உபந்நியாயம் செய்யப் போகின்றார். அவருக்கு இந்த புறத்திரட்டு நூல்களே உதவியிருக்கலாம் என பெருமாள் முருகன் பல்வேறு உதாரணங்கள் மூலம் நமக்குக் காட்டுகின்றார். அதேவேளை இப் புறத்திரட்டில் தமிழர் மரபான அகமும் புறமான திணைப்பாடல்கள் இருந்திருக்கலாம் என்றாலும், ஏதோ ஒருகட்டத்தில் அறவுணர்வை வலியுறுத்தும் நோக்கில் அகப்பாடல்கள் இந்த புறத்திரட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு முக்கிய அவதானமாகும்.
*
'தமிழில் நவீன இலக்கியச் செம்பதிப்புகள்' என்ற கட்டுரை ஆ. இரா. வேங்கடாசலாபதி பதிப்பித்த 'புதுமைப்பித்தன் கதைகளோடு' (2000) தொடங்குகின்றது என்கின்ற அவதானத்தை பெருமாள் முருகன் முன்வைக்கின்றார். இந்தக் கட்டுரை மட்டுமில்லை 'நவீன இலக்கியப் பதிப்பு முன்னோடி', 'புதுமைப்பித்தனின் காசு' போன்ற கட்டுரைகளும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பதிப்புக்களையே நவீன பதிப்புக்களாக நிலை நிறுத்த முயல்கின்றவை எனச் சொல்லலாம்.
நமக்கு இந்தப் புள்ளியில் மாறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், வேங்கடாசலபதி தமிழின் பதிப்புக்களுக்கு ஒரு புது முன்னுதாரணத்தைக் கொடுத்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தப் பதிப்புக்களை முன்னோடியாகக் கொண்டு பெருமாள் முருகன் தான் தொகுத்த 'கு.ப.ராவின் சிறுகதை'களைப் பதிப்பித்தார் எனவும் சொல்கின்றார். மேலும் இதுவரைகாலமும் தொகுப்பாசிரியர் என்றிருந்ததை தமிழில் பதிப்பாசிரியர் என்கின்ற இன்னொரு கட்டத்துக்கு வேங்கடாசலபதி நகர்த்தியிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தது.
இன்னொரு கட்டுரையான 'எம்முளும் உளனொரு பொருநன்' தமிழ்ன் கலைக்களஞ்சியம் குறித்த முக்கியமான கட்டுரையாகும். தமிழின் கலைக்களஞ்சியத்தை இதுவரை நான் பார்த்தவன் இல்லை என்றாலும், அது ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தை விட வித்தியாசமாக இருக்கின்றதென நினைக்கின்றேன். ஏனெனில் பெருமாள் முருகன் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருந்து மா.கிருஷணின் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'பறவைகளும் வேடங்தாங்கலும்' என்ற தொகுப்பை பெருமாள் முருகன் வெளியிட்டிருக்கின்றார். அவ்வாறே இக்கலைக்களஞ்சியத்தில் இருந்து தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கட்டுரைகளும் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிவந்ததென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். மேலும் இதில் நவீன தமிழ் இலக்கியத்தில் பங்களித்தவர்களின் கட்டுரைகளும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருக்கின்றதென்கின்றார்.
ஆக ஆங்கிலக் கலைக்களஞ்சியம் போலவல்லாது, தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதென நினைக்கின்றேன். இஃதொரு சுவாரசியமான வித்தியாசம். அதுபோல இந்தக்கட்டுரையில் பெருமாள் முருகன், வேங்கடாசலபதி எழுதிய 'கலைக்களஞ்சியத்தின் கதை' என்கின்ற நூலைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். எவ்வாறு தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டது, யார் யார் பங்களித்தார்கள், (மறைமலையடிகள் உட்பட) யார் யார் பங்களிக்க மறுத்தார்கள், ஏன் திராவிட கட்சிப் பாரம்பரியத்தைச் சேர்ந்த க.அன்பழகன் போன்றோர் எதிர்த்தார்கள் என்பதெல்லாம் அதில் எழுதப்பட்டிருக்கின்றது என்கின்றார்.
இன்னொரு கட்டுரையான 'வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு' எப்படி ஒரு பதிப்பைச் சரியாகப் பதிப்பிக்க முடியும் என்பதற்கான உதாரணமாக புதுச்சேரியில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகள் பதிப்பிக்கப்பட்டதைப் பற்றி விரிவாக பெருமாள் முருகன் ஆராய்கிறார்.
*
இக்கட்டுரையில் பின்னால் ஒன்பது கட்டுரைகளாக இருப்பது பெருமாள் முருகன் சோரகவி மரபு என்ற தலைப்பில் எழுதிய ஒன்பது கட்டுரைகள். தமிழில் இலக்கியத் திருட்டுகளை அந்தக்காலத்திலே பல்வேறு பெயர்களில் பிரித்து வைத்திருக்கின்றார்கள் என்பது சுவாரசியமானது. அது 'சோரகவி, சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி' திருட்டுக்கள் எனப் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
சோரகவி என்பது ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆகும் வகையைச் சேர்ந்தது. அதுபோல சார்த்துக்கவி என்பது ஏற்கனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் செய்யும் திருட்டாகும். பிள்ளைக்கவி என்பது சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றி கவி எழுதும் திருட்டாகும். வெள்ளைக்கவித் திருட்டு பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோர் செய்யும் செயலாகும். நமது ஈழ/புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கவனம் கொள்ளவேண்டிய ஒரு திருட்டைப் பற்றியும் பெருமாள் முருகன் சொல்கிறார். அது ' எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்படாலும் கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகின்றது' என்கின்றார்.
இந்த வகையில் தமிழில் நடந்திருக்கும் திருட்டுக்களை ஆய்வு செய்யும் நோக்கில் இதிலிருக்கும் ஒன்பது கட்டுரைகள் இருப்பினும், இந்த நூலின் முன்னே இருக்கும் கட்டுரைகளின் தரத்துக்கு இக்கட்டுரைகள் இல்லை என்றே சொல்வேன். இந்தத் திருட்டுக்களை எழுத்தில் பதிவு செய்வது முக்கியம் என்றாலும், இந்நூலுக்கு இவை தேவையில்லை என்பது போலவே எனக்குத் தோன்றியது.
அண்மையில் ஓர் அரங்கில் சல்மான் ருஷ்டி நேர்காணல் கொடுக்கும்போது, ஏன் அதிகாரத்தில் இருப்பவர்க்கு எழுத்தாளர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள். இத்தனைக்கும் இந்த எழுத்தாளர்களிடம் பணமோ, அதிகாரமோ இல்லையென்றாலும் ஏன் அவர்களைக் கண்டு அதிகாரம் அஞ்சுகிறது? ஏனெனில் சர்வாதிகாரிகள் அதிகாரபூர்வமாக (official) தம்மைப் பற்றி பெருந்திரளுக்குள் ஒன்றை நிறுவ முயல்கின்றபோது, ஒரு நூல் அதனுள்ளே அதிகாரபூர்வமற்ற(unofficial) முறையில் அந்த அதிகாரத்துக்கு எதிரானவற்றைப் பேச முயல்கின்றது. அதனால்தான் அதிகாரம் எழுத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று சொல்லியிருப்பார்.
அவ்வாறே நூல்களில் சொல்லப்படுபவை அவ்வளவு எளிதில் அழிவதில்லை. பெருமாள் முருகன் இந்த நூலில் முன்னுரையில் மலையாள மனோரமாவில் 'தமிழக இசை' பற்றி அங்கயற்கண்ணி எழுதிய கட்டுரையை அன்றைய ஜெயமோகனின் 'சொல் புதிது' களவாடி அவரின் மனைவி பெயரில் வெளியிட்டது என்பது குறித்த வரலாற்றை விரிவாகப் பேசுகின்றார். அசல் கட்டுரையை எழுதிய அங்கயற்கண்ணியைப் பெருமாள் முருகன் நேரில் சந்தித்திருக்கின்றார் என்பது சுவாரசியமானது. இந்தத் திருட்டை பொ.வேல்சாமி போன்றவர்கள் அம்பலப்படுத்தப்படும்வரை மெளனம் காத்த ஜெயமோகன் பின்னர் 'தீம்தரிகிட' இதழ் மூலம் மன்னிப்புக் கேட்டார் என்று பெருமாள் முருகன் எழுதுகின்றார். அதேவேளை அப்படி மன்னிப்புக் கேட்ட ஜெயமோகன், அங்கயற்கண்ணியே கலைக்களஞ்சியத்தைப் பார்த்து எழுதினார் என்றும், இன்னொருபொழுது 'சொல் புதிது' இதழ் பணிகளைச் செய்த சரவணன்1978 இப்படிச் செய்துவிட்டார் என்று குழப்பகரமான பதில்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் என்றும் பெருமாள் முருகன் இந்த இலக்கியத் திருட்டைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.
என்கின்றபோதும் இந்த இலக்கியத் திருட்டுக்கள் பற்றிய முன்னுரையோ, அல்லது பிற்பகுதியில் சேர்க்கப்பட்ட கட்டுரைகளோ அவ்வளவு வளத்தை இத்தொகுப்புக்குச் சேர்க்கவில்லை என்றே சொல்வேன். மேலும் சோரகவிக்கு அன்று என்ன அர்த்தம் இருந்தாலும் இன்று சோரம்போதல் என்ற சொல்லோடுதான் மனம் அதிகம் தொடர்புபடுத்திப் பார்க்க விழைகிறது. அந்தச் சொல்லே காலாவதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற காலத்தில் பெருமாள் முருகன் வேறொரு தலைப்பில் இந்நூலுக்கு தலைப்பு வைத்திருக்கலாமோ என்றும் தோன்றுகின்றது.
*
இந்த நூலின் முற்பகுதியில் இருக்கும் கட்டுரைகளே இந்தத் தொகுப்பை அவ்வளவு முக்கியப்படுத்துகின்றது. இன்று தமிழ்ச்சூழலில் பதிப்புச்சூழலில் இயங்குபவர்கள் நிச்சயம் இந்நூலை ஒரு உதவிக் கையேடாகக் கொள்ளலாம் என்று சொல்லுமளவுக்கு விரிவாகப் பல விடயங்கள் பதிப்புகள் சார்ந்து எழுதப்பட்டிருக்கின்றது.
இந்த நூலை வாசிக்கும்போது எப்பாடுபட்டேனும் 'கலைக்களஞ்சியத்தின் கதை'யைப் பெற்று வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் வந்திருந்தது. அதுபோலவே பழந்தமிழ் இலக்கியம் என்றாலே சற்று பயத்துடன் ஒதுங்கி நிற்கும் ஒருவனான என்னையே பெருமாள் முருகன் தொல்காப்பியம் பற்றிக் குறிப்பிட்டவற்றைப் வாசித்தவுடன், உடனேயே 'தொல்காப்பியம்: ஒரு பனுவலின் நெடும்பயணம்' என்ற சிலம்பு நா.செல்வராசு அவர்கள் எழுதிய நூலை எடுத்து வாசிக்க வைத்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு புனைவெழுத்தாளர் ஒரு அல்புனைவாளராகவும் இருக்கும்போது அவரின் எழுத்துக்கள் வித்தியாசமான பார்வையைத் தருவதாக மட்டுமில்லை ஒரு புனைவைப் போல வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும் என்பதற்கு இந்த நூல் நல்லதொரு உதாரணமாகும். கு.அழகிரிசாமி எப்படி புனைவெழுத்தாளராக இருந்துகொண்டு பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி எழுதவும், பதிப்பிக்கவும் முடிந்ததோ, அவருடைய தொடர்ச்சியாக நான் பெருமாள் முருகனையும் நினைத்துக் கொள்கின்றேன். அவ்வாறு இருதுறைகளிலும் காலூன்றியவர்கள் அரிதே. ஆனால் அதுவே சிறப்பானதும் கூட.
***
(Oct 06, 2026)

