கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னை

Sunday, July 23, 2023


சிலவற்றை நிறைய யோசிக்காது செயற்படுத்தியாக வேண்டும். "தாய்லாந்து" புதினத்தின் கதைசொல்லி ஒரு நண்பனின் திருணத்துக்காய் சென்னைக்குப் போவதற்குத் தயார்ப்படுத்துவதுடன் கதை தொடங்கும். அதுபோல இப்போது நண்பரொருவனின் திருமணம் சென்னையில் நடக்கையில் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவனை, கூடவே புத்தகக் கண்காட்சிக்கும் சேர்த்து சென்னைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.


புனைவு போல ஒரு வாழ்வு!


ஒரு ஓவியருக்கு ஓவியக் கண்காட்சிகள் போல, ஒரு இசைஞருக்கு இசை நிகழ்ச்சிகள் போல, நம்மைப் போன்று எழுதவும் வாசிக்கவும் விரும்புபவர்க்கு இப்படியான புத்தகக் கண்காட்சிகள் எனலாம். ஆனால் இங்கே நாமெல்லாம் உதிரிகள். நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எதிரே கடந்துசெல்கையில் புன்னகைக்கவோ அல்லது அருகில் நம்மோடு நடந்து வருபவர்க்கு இவரின் இன்னின்ன புத்தகங்கள் நமக்குப் பிடிக்குமென மனம் கனிந்து பேசிக்கொண்டோ போகலாம்.

இந்தக் கண்காட்சியில் நிறைய நண்பர்களைச் சந்திக்கலாமெனினும், சிலரோடு மட்டுமே ஆறுதலாகப் பேச முடியும். ஒரு காலையில் 24 மணித்தியால விமானப் பயணத்தில் வந்து சேர்ந்தவனுக்கு காலநிலை, வாகனங்களின் பேரிரைச்சல்கள், நேரமாற்றங்கள் எல்லாம் சர்ரிலிய அனுபவத்தைக் கொடுக்கும். பிறகு ஊரோடு ஒத்துப்போக எல்லாம் இயல்பாகிவிடும்

'தாய்லாந்து' வெளிவந்திருந்த "எதிர்" நண்பர்கள் உற்சாகமாய் வரவேற்றனர். "மெக்ஸிக்கோ"வை பதிப்பித்த டிஸ்கவரி புக் பாலஸ்" வேடியப்பன், உங்கள் நூல்கள் அனைத்தும் விற்றுவிட்டன. அதற்கான ரோயல்டி தருகிறேன், மெக்ஸிக்கோ இன்னொரு பதிப்பு வெளியிடுவோம் என்று "பொங்கல் போனஸாக" இன்ப அதிர்ச்சி தந்தார். எப்போதும் போல என் தமிழகப் பயணங்களை இலகுவாக்கும் இனிய நண்பர் தளவாய் சுந்தரம் எனக்கான sim card உடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.


இன்று பொங்கல் என்பதால் ஒரு சிறுபயணம் செய்து
பொங்கலை எப்படி சென்னை கொண்டாடுகிறது என்று பார்ப்போம் என வடபழனி முருகன் கோயில் வரை போயிருந்தேன். விடிகாலையிலே கோலங்கள் போடப்பட்டு, கரும்புகள், இஞ்சி, மஞ்சள், தோரணங்கள் கட்டப்பட்டு ஒவ்வொரு வீடும் களை கட்டியிருந்தது. வடபழனி முருகன் கோயிலில் ஓரிடத்தில் தமிழில் அர்ச்சனை செய்யலாமென எழுதப்பட்டிருந்தது நிறைவாயிருந்தது. எப்போதும் போல கோயில் கோபுரங்களையும், உள்ளேயிருக்கும் பழைய சிற்பங்களையும் பார்க்கவே எனக்கு விருப்பம் நிறைய இருக்கும். எனவே அவற்றை இரசித்துப் பார்த்துவிட்டு, அங்கே தரப்பட்ட சர்க்கரைப் பொங்கலையும் உருசித்துச் சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த ஒரு கடையில் வத்தகைப்பழ (தர்ப்பூசணி) ஜூஸ் குடித்துவிட்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜீவா பூங்காவிற்கு அருகில் பணம் மாற்றுவதற்காய்ப் போயிருந்தேன். கடந்தமுறை சென்னை வந்தபோதும் ஆடைக் கடைகளுக்கு போய்விட்டு இங்கே வந்திருந்தேன். நடேசன் பார்க் என்றால் அங்கே இருந்து எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் படிமம் தோன்றுவதில்லையா? அது போலத்தான் இதுவும். ஒரு தீவிர மார்க்ஸியரான ஜீவாவின் பெயரில் இருந்த பூங்காவின் உள்ளே பிள்ளையார் கோயில் இருந்ததை முதன்முறை இருளில் பார்த்தபோது சற்று வியப்பாயிருந்தது. இம்முறை பகலில் உள்ளே போய்ப் பார்க்கையில் ஒருபக்கம் பிள்ளையாரும், இன்னொரு பக்கம் ஜெய் மாதாவும் பொங்கலுக்கான அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். உள்ளே சிலர் விஷ்ணுவைப் போல கவலைகள் எதுவுமின்றி நிம்மதியாய்த் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இளஞ்சோடியொன்று ‘instagram reels’  இற்கான காணொளியைச் சளைக்காது திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஜீவா பார்க்கில் இருந்தபடி பொங்கல் நாளன்று தமிழக தியேட்டர் அனுபவத்தை ஒருமுறை அனுபவித்துப் பார்க்கலாமென்று ‘வாரிசு’க்கும் ‘துணிவு’க்கும் முயன்றபோது நீயெல்லாம் ‘காணும் பொங்கலுக்கே இலாயக்கு’ என்று ஒரு ரிக்கெட்டுக்கும் கிடைக்கவில்லை. ஜீவா பார்க்கிற்கு முன்னால் இருந்த மரங்களில் கிளிகள் மட்டும் பாட்டுப் பாடி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தன.

மாலையில் நமது செல்வத்தாரின்
'பனிவிழும் பனைவனம்' புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு, கனடா மாதிரியில்லாது நேரத்துக்குப் போகவேண்டுமென்று நந்தனம் போயிருந்தேன். செல்வத்தாரின் ரேஞ்சே இப்போது வேறுமாதிரி என்பதால் நாங்கள் போய்ச் சேர்ந்து அரைமணித்தியாலத்துக்குப் பிறகு - அவரின் அன்றைய தலை புரட்சித்திலகம் போல- கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தார். அதுகூடப் பரவாயில்லை, நாமெல்லாம் காலச்சுவடு அரங்கின் முன்றலில் நிகழ்வு நடக்கப் போகின்றதென்று காத்திருக்க, அவர் இலக்கியம் என்பது உள்வட்டத்துக்கு உரியதென்று காலச்சுவடு அரங்கின் பின்கோடியில் வைத்து பெருந்தலைகளுடன் அதை நடத்தி முடித்தார். அந்தக் கோபத்தில் நான் அவரின் 'பனிவிழும் பனைவனத்தை' வாங்காது பகிஷ்கரிப்புச் செய்தேன். செல்வத்தாரினால் நடந்த ஒரேயொரு நல்ல விடயம், காலச்சுவடு அரங்கில் பத்தினாதனைச் சந்தித்து கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேச முடிந்தது என்பதே. எனக்கும் அவருக்கும் சில விடயங்களில் ஒற்றுமை இருக்கின்றதென்று இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால் அவரை இன்னமும் எந்த நிலப்பரப்பிலும் வேர்கொள்ள விடாத நுண்ணதிகாரத்தின் துயரம் எம்மைப் போன்ற எவராலும் துளியும் உணரமுடியாதது.

செல்வத்தார் தன் இரசிகைகளுக்கு கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அஜிதனை அறிமுகப்படுத்தி விட்டிருந்தார். அஜிதன் நான் அவரின் 'மைத்ரி'க்கு எழுதிய விமர்சனத்தை யாரோ நண்பர் அனுப்ப வாசித்தேன் எனச் சொன்னார். எப்போதும் தொடக்கத்தில் கொஞ்சம் கறார், பிறகு போகப்போக மனம் கனிந்துவிடும் எனச் சொல்லி, அவரின் வல்லினக் கதையையும் வாசித்தேன் எனச் சொன்னேன். அகழில் அடுத்த கதை வரப்போகின்றதென்றார். என் விமர்சனம் வேறு,  ஆனால் அஜிதன் எதையும் சுதந்திரமாகப் பேசக்கூடிய, உடனே நட்பு கொள்ளக்கூடிய ஒருவராகத் தெரிந்தார்.

முதல் நாளன்று சாரு நிவேதிதா கண்காட்சி முடியும்போது காரொன்று வந்து நிற்க ஸ்டைலாக ஏறிப்போனதைக் கண்டிருக்கின்றேன். படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் சொல்வதைப் போல, வயதாலும் அந்த ஸ்டைலும் திமிரும் இன்னும் போகவில்லை போல சாரு இருந்தார். இன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் சாருவின் ஒரு நூலை வாங்கி கையெழுத்திட்டு பாரிஸ் பயணங்கள்/ஆபீதின் கதைகள் பற்றிக் கதைப்போமா என்கின்ற ஆசை வந்தது. ஆனால் எனக்கும் இந்த சர்ச்சைகள்/நிரூபித்தல்கள் போன்றவற்றில் இருந்து விலகிப்போகும் காலம் கனிந்துகொண்டிருப்பதால் சாருவை அருகில் பார்த்தும், மூன்று முறைக்கு மேலாய் அவரைப் புத்தகக் கண்காட்சியில் கண்டபோதும் ஒவ்வொரு முறையும் விலத்தி விலகி வந்திருந்தேன். செல்வத்தாரின் புத்தக நிகழ்வில் இமையம், ‘எழுத்தை மட்டும் வாசித்துவிட்டு எழுத்தாளரைச் சந்திப்பதைத் தவிர்ப்பது’ நல்லதென்ற தொனியில் கூறியதைப் போல சாருவையும் இப்படியே ஒரு தொலைவில் வைத்து இரசிப்பது போதும் போல.

வயசாகிக் கொண்டிருப்பதால் இப்போது புத்தகக் கண்காட்சிக்குள் நடந்து திரிவதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. பதின்மங்களில் நின்றபடி 8 மணித்தியாலங்கள் வேலை செய்ததால் வந்த முள்ளந்தண்டு வலி இப்போது மீண்டும் உலுக்கியெடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இனியான காலங்களில் தனியே புத்தகக் கண்காட்சிக்கு என இவ்வளவு தூரம் பயணித்து வருவேனா என்பதில் நம்பிக்கை குறைந்து வருகின்றதென நண்பரிடம் சொன்னேன். செல்வதாரும் இனி இலக்கியத்தால் பயனில்லையென, அவர் வெளியிடும் 'காலம்' புது இதழ் வெளிவந்ததைக் கூட மறந்துவிட்டு, இயக்குநர்கள், பாடகர்களுக்கு கதை/ பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போயிருக்கின்றார் என்றொரு கதையும் கேள்விப்பட்டேன். நானும்  இனி சென்னைக்கு வந்தால் நடிகைகளை மட்டும் சந்திக்கச் செல்லலாமென நினைக்கின்றேன்

ஆண்ட்ரியாவுக்கு பொங்கல் வாழ்த்துகள்.

*************************


(Jan 16, 2023)

கார்காலக் குறிப்புகள் - 14

Saturday, July 22, 2023

 "விடுதலை" - சிறு குறிப்புகள்



'விடுதலை' வன்முறை சார்ந்து எனக்கான திரைப்படம் அல்ல. தியேட்டரில் இதைப் பார்த்திருக்காவிட்டால் சிலவேளை இதைப் பார்ப்பதைப் பின்னர் தவிர்த்திருக்கக் கூடும். வெற்றிமாறனின் 'விசாரணை' யையே நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் நான் கேட்டு/பார்த்து வந்த அந்த "யதார்த்த" வன்முறை. "விடுதலை' யிலும் நான் கண்மூடிக் கடந்த காட்சிகள் சில உண்டு.

இத்திரைப்படம் குறித்து பின்னர் விரிவாக கருத்துச் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கதையான "துணைவனி"ல் இருந்து விரித்து, அது சார்ந்து, ஆனால் அதுவில்லாத ஒரு கதையாக இதை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார். "துணைவன்" எப்போதோ வாசித்தது; அதன் அடிச்சாரம் நினைவிலுண்டு, ஆனால் சம்பவங்கள் மறந்துவிட்டன. இப்படத்தில் காட்சிப்படுத்தும் வன்முறையையும், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளையும் ஜெயமோகனின் இந்தியத் தேசிய மனம் ஒருபோதும் எழுத்தில் முன்வைக்க ஒப்புக்கொள்ளாது. ஆகவேதான் நாமெல்லாம் உயிருள்ள சாட்சியங்களாக இன்னமும் இருக்கவும், ஜெமோவின் நெருங்கிய நண்பர்களாக ஈழத்தமிழர்கள் இருந்தும், எம்மை அது எவ்வளவு காயப்படுத்தும் என்கின்ற சிறு பிரக்ஞையுமின்றி, இந்திய இராணுவம் ஈழத்தில் பாலியல் வன்புணர்வே செய்யவில்லை என்று எழுதும் மனம் அவருக்கு வாய்த்தது. அவரல்ல, அப்படி தேசியப் பித்துப் பிடித்த பல படைப்பாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் trauma பற்றி தனியே வகுப்பெடுக்க வேண்டும்.

"விடுதலை" பல படைப்புக்களின் பாதிப்பாக வந்திருக்கிறது. ஆனால் எனக்கு இதன் பல காட்சிகளைப் பார்த்தபோது பாலமுருகனின் " சோளகர் தொட்டி"யே நினைவுக்கு வந்தபடி இருந்தது. தமிழக சூழலில் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் செய்த வன்முறை/பாலியல் வன்புணர்வுகள் குறித்து அவ்வளவு தீவிரத்தோடும், உக்கிரத்தோடும் எழுதப்பட்ட ஒரு நூல் 'சோளகர் தொட்டி'.  அதை வாசித்துவிட்டும், யாரேனும் ஒருவர் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் குறித்து பெருமைகள் பேசினால், ஒருநாள் கர்மா உங்களை இரட்சிக்கட்டும் என்று அவர்களுக்கு சொல்வதைவிட வேறொரு வழியும் நமக்கு இல்லை.

'விடுதலை' நிறைய உரையாடல்களை உருவாக்கக்கூடிய ஒரு படம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றிமாறன் அதை genuine ஆகவும் எடுக்க முயற்சிக்கின்றார். என்னை உறுத்திய விடயம் என்னவெனில் இந்தக் கதையை ஒரு அப்பாவிப் பொலிஸினுடாக மட்டும் நகர்த்தியது. உண்மையில் எந்தப் பொலிஸாக இருந்தாலும் அவர்களுக்கு agency இருக்கிறது. ஒருவர் "காக்கிச்சட்டை" யைப் போட்டவுடன், அவருக்குரிய agency எப்படியோ வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றது. காக்கிச் சட்டையைக் கழற்றியவுடன், அவர் சாதாரண மனிதர். ஆனால் அந்தச் சட்டையுடன் ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் பற்றி கேள்வியில்லாது ஒரு பாத்திரத்தை நாம் படைக்கமுடியாது. ஆகவே சூரியின் மிக மிக நல்ல பொலிஸ் பாத்திரச் சித்தரிப்பு எனக்கு சற்று எரிச்சலூட்டியது.

அதேவேளை இந்தப் படத்தின் தீவிரத்துக்கு 2 முக்கிய காட்சிகள் வலுவில்லாது இருந்தது போலவும் தோன்றியது.

(1) ஒரு சாதாரண நிலையில் இருக்கும் பொலிஸ்காரரின் பேச்சைக் கேட்டு, அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வேவுகூடச் செய்யாது, உடனேயே ஒரு பெரும் படையை வாத்தியாரைப் பிடிக்க இறக்குவது.

(2) வாத்தியாரின் குழுவினர், பொலிஸ் சூரிக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தபின்னும் (எப்போதாவது ஆபத்து வரலாம்), அதே இடத்தில் தொடர்ந்து தங்கியிருப்பது.

எனினும், தமிழ்ச்சூழலில் பொலிஸுக்குள் இருக்கும் அதிகார மிதப்பு, ஊழல், சித்திரவதைகள், அவர்கள் பெண் உடல்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் என எல்லாவற்றையும் அதே வீரியத்துடன் முன்வைப்பதால் 'விடுதலை' கவனிக்க வேண்டிய ஒரு திரைப்படமே.


************


(Apr 01, 2023)

கார்காலக் குறிப்புகள் - 13

Wednesday, July 19, 2023


பசுமை தேடிய பயணங்கள் – 03



காலை உணவை முடித்துவிட்டு குமரி
அள்ள(அருவி)வைத் தேடிப் போகத் தொடங்கினேன். நான் நின்ற இடத்திலிருந்து 10-15 நிமிட நடைக்குள் அங்கே போக முடிந்திருந்தது. போகும் வழியெங்கும் மரங்கள் பசுமையாக இருந்தது. அதிலும் தித்திக்கும் பலாப்பழங்கள் மரங்களெங்கும் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. காலை நேரமென்பதால் அருவியில் எவரும் இருக்கவில்லை. சலசலத்தோடும் அருவி மட்டுமே துணையாகவும், இசையாகவும் இருந்தன.

ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வில், சித்தார்த்தா ஞானம் பெறும் எல்லா வழிகளிலும் நம்பிக்கையிழந்து திரும்பும்வழியில் நதியின் ஒலியைக் கேட்பான். ஆயிரம் குரல்களுடைய நதியின் பாடலை, மகிழ்ச்சியோ, துக்கமோ இன்றி, அதன் அத்தனை குரல்களையும் தன் அகங்காரத்திற்குள் நுழையவிடாது, முழுதாய்/ நிறைவாய்க் கேட்டுத் திளைத்தபடியிருப்பான். இறுதியின் அந்த ஆயிரம் குரல்களும் ஒரேயொரு சொல்லுக்குள் முழுமை பெறும். அது ‘ஓம்’ என்கின்ற பூரணநிலை. அப்போது நிகழும் மாற்றத்தினால் சித்தார்த்தா வேறொருவனாக மாறியிருப்பான். அது அவன் ஞானமடைகின்ற இடம்.

இப்படி ஏன் ஹெஸ்ஸேவின் ‘சித்தார்த்தா’ எனக்குள் இடைவெட்டிப் போனார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி இப்படி மரங்களை, நதிகளைப் பார்க்கும்போது வந்து வந்து போவார். ஹெர்மன் ஹெஸ்ஸே இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீட்டை சுவிஸ்-இத்தாலி எல்லையில் பார்த்தபோதும், அங்கே ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் மென் நீல ஆடையில் என்னைக் கடந்து போனபோது, ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா அவ்வளவு பெரும் முயற்சிசெய்து பேரழகி கமலாவை அடைந்துவிட்டு, ஒருபொழுது சட்டென்று அவளை நீங்கிப் போகும் கையறுநிலைக்காட்சி நினைவுக்கு வந்தது.

இவ்வாறு தொடர்பற்று நினைவுகளை அலைவுறுவுவதைத் தவிர்க்க, குமரி அள்ளவை அள்ளியணைப்போம் என்று அருவி வீழும் ஆழமான பகுதியில் அல்ல, பாதுகாப்பான பகுதியில் நின்று நீராடத் தொடங்கினேன்.

அங்கே திளைத்து நின்ற ஒன்றரை மணித்தியாலத்துக்குள், இரண்டு இளைஞர்கள் மட்டும் வந்து கொஞ்ச நேரம் செல்ஃபிக்கள் எடுத்துப் போனதைத் தவிர எவரும் வராமல் அவ்வளவு அமைதியாக அருவி இருந்தது. இந்த இடத்துக்கு அருகிலேயே சீதாவக்க தாவரவியல் பூங்காவும் இருந்ததென்றாலும் பார்க்க முடியவில்லை. நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்பதால் அருகிலிருந்த அருவிகளைத் தேடத் தொடங்கினேன்.

இவ்வாறான பயணங்களுக்கு நமக்கென்றொரு வாகனம் இருந்தால் நினைத்த இடத்தில் நின்று நின்று போகமுடியும். பொதுப் போக்குவரத்தில் போய்ப் பார்ப்பதென்றால் உள்ளே நிறைய நடக்கவேண்டி இருக்கும். குமரி அள்ளவிலிருந்து ஹொட்டலுக்கு இன்னொரு அருவியைப் பார்க்கலாம் என்று தேடியபோது அள்ள உட அள்ள என்றொரு இடம் சிக்குப்பட்டது. சிக்கல் என்னவென்றால் அது நடந்துபோக முடியாத தூரத்தில் இருந்தது.

மோட்டார் சைக்கிளும், ஓட்டோவும் மட்டும் ஒரளவுக்குக் கிட்டவாகப் போகக்கூடிய இடம். நான் நின்ற இடத்தில் ஊபரும் வருவதாய்க் காணோம். தெருவில் நின்று கையைக் காட்டி மறிப்போம் என்றால், அரிதாக வந்த ஆட்டோக்களும் 'அவுதுறு' பார்ட்டிக்குப் போகும் சனங்களோடு போய்க்கொண்டிருந்தார்கள். அதுவரை சூரியன் வெளிச்சிருந்த பகலில் மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது.

இறுதியில் என் நிலைகண்டு ஒரு ஓட்டோ நின்றது. அதையொரு பெண்தான் ஓடிக் கொண்டு வந்தார். உள்ளே அவரின் இரண்டு பிள்ளைகளும்
, அவர்களுக்கு வாங்கிய சின்னச் சைக்கிளும் இருந்தனர். என் நிலை கண்டு பரிதாபப்பட்டுத்தான் நிறுத்தியிருப்பார் போலும். போகவேண்டிய இடத்தைச் சொன்னேன். பின்னாலிருந்த சைக்கிள் முதுகைக் குத்தினாலும் நெருக்கி உள்ளே உட்கார்ந்தேன். ஓட்டோ முழுதும் சேகுவராவின் படங்கள். ஹெஸ்ஸே நினைவுக்கு வருவது போல சே இப்போது முன்னால் தோன்றினார். நிச்சயம் இந்தப் பெண்மணி ஒருகாலத்தில் ஜேவிபியின் தீவிர ஆதரவாளராக இருந்து புரட்சிக்கு உதவியிருப்பார் என்று கற்பனைக் குதிரை சிறகடித்து எனக்குள் பறந்தது. என் சிந்தனை அவருக்கு விளங்கியதோ தெரியாது, ஆனால் அந்த ஓட்டோவுக்கு நன்கு விளங்கிவிட்டது. ஆம், இடைநடுவில் அது சட்டென்று நின்றுவிட்டது. ஒற்றைப் பாதை என்பதால் பின்னால் வந்த வாகனம் எல்லாம் ஹோனடிக்கத் தொடங்கிவிட்டன.

இப்போது நான் ‘புரட்சிக்காரனாக’ உருவாகும் பொற்தருணம். கீழே இறங்கி ஓட்டோவைத் தள்ளினேன். அது மத்தியானச் சாப்பிட்டுவிட்டு பகல்கனவில் மூழ்கிய குதிரை போல அப்படியே நின்றது. ஒரு துளியும் அசைவதாய்க் காணோம். இந்தப் பெண்ணோ சிங்களத்தில் தள்ளு தள்ளு என்கின்றார். அது போதாதென்று பின்னாலிருக்கும் பஸ்காரர் விடாது ஹோர்ன் அடிக்கிறார். உள்ளேயிருக்கும் சின்னப்பிள்ளைகளோ சிரி சிரியென்று என் நிலைகண்டு சிரிக்கின்றனர்.

ஒரு தமிழ் மறவனுக்கு இப்படியா நடுரோட்டில் சோதனை வரவேண்டும் என்று எல்லாளனை நினைத்து தோளுக்கு வலுக்கொடுத்தேன். ஒருமாதிரி ஒரு ஓரமாய் ஆட்டோ போய்ச்சேர்ந்தது. அப்பாடா!

பிறகு ஏதோவெல்லாம் செய்து
, அதற்கு பெட்ரோல் எல்லாம் தீத்தி ஓட்டோவை அந்தப்பெண் இயக்கிவிட்டார். ஆனால் அது பிறகு இன்னொரு இடத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதாவது சமதரை, அது மேடு ஒன்றில் இனியும் ஏறமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுவிட்டது. இப்போது என் நிலை இன்னும் பரிதாபமாகிவிட்டது. மேடென்பதால் அதை நான் பின்னால் நின்று தடுத்தும். என்னைத்தாண்டி இறங்கி இறங்கி பள்ளத்துக்குள் பாய்கின்ற நிலைமை வந்தது. நல்லவேளையாக எதிர்ப்புரத்தில் மோட்டார்சைக்கிளில் போன ஓர் இளைஞன் துணைக்கு வந்து, பெரிய கல்லொன்றை ஓட்டோ டயருக்குள் வைத்து, ஓட்டோ பள்ளத்துக்குள் பாய்வதைத் தடுத்துவிட்டோம். துட்டகைமுனுவுக்கு நன்றி.

இத்தோடு இனி மேலே தனது வாகனம் வராதென்று அந்தப் பெண்மணி கறாராகச் சொல்லிவிட்டார். அது கூடப் பரவாயில்லை பயணம் முழுமையடையாமலே சொன்ன பணத்தை கையில் தா என்றும் அடம்பிடித்தார். ஒரு சேயின் புரட்சித் தோழி இப்படிச் செய்வதா என்று கேட்கத்தான் மனம் விரும்பியது. பிறகு ஓட்டோ பாயாமல் இருப்பதற்காக வைத்த கல்லை, என் வாய்த்துடுக்கிற்காய் எடுத்து எறிந்தார் என்றால், என் நிலை என்னவாவது என்ற பயத்தில் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு உட அள்ளவிற்கு மேலேறினேன்.

மழை இப்போது வலுக்கத் தொடங்கிவிட்டது. ஓரு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மழை கொஞ்சம் குறைய அருவிக்குப் போனேன். மழையையும் பொருட்படுத்தாது அருவியில் குளித்துவிட்டுக் கரையேறிய சில பெண்கள் கடந்து போனார்கள். மஞ்சள் தேய்த்தா குளித்தீர்கள் எனக் கேட்கத் தேவையில்லாது அப்படி அவர்கள் மலர்ந்திருந்தார்கள். இறுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு மேடேறி வந்ததன் பெரும் பேறடைந்தேன். எங்கும் குறுக்கிடும் கமலாக்களால் நமக்கு இப்போதைக்கு ஞானமடைதல் சாத்தியமில்லை என்றும் தேற்றிக்கொண்டேன்.

குமரி அள்ள போல, இதில் நீர் அவ்வளவு பெருக்கெடுத்துப் பாயவில்லை.. கொஞ்ச நேரம் அதைச் சுற்றி இரசித்துவிட்டு ஒரு ஓட்டோவை பிடித்து பெருந்தெருவுக்கு வந்து கொழும்புக்கான பேருந்துக்காய் காத்திருக்கத் தொடங்கினேன்.

*********************************


(May 10, 2023)

கார்காலக் குறிப்புகள் - 12

Monday, July 17, 2023

 பசுமையைத் தேடிய பயணங்கள் – 02


நான் தரித்து நின்ற இடம் மல்வானை இறம்புட்டான்களுக்கு இலங்கையில் பெயர் பெற்ற இடம். சில ஊர்களில் மாமரங்கள் வீட்டின் அடையாளமாய் முன்றலில் இருப்பது போல, இங்கே நான் பார்த்த அளவில் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் இறம்புட்டான் மரங்கள் நன்கு கிளை பரப்பி விரிந்து நின்றன. இந்தக் காலம் இறம்புட்டான்கள் காய்க்கின்ற காலம். எனவே மரங்களில் மென்பச்சையில் காய்கள் வரத் தொடங்கிவிட்டிருந்தன.


நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதென்றால் இன்னும் உள்ளே அவிசாவளைப் பக்கமாய் கிழக்கு நோக்கி நகரவேண்டும். விடுதி உரிமையாளர்,போகும் வழியில் பத்தினி தேவாலயத்துக்கும் போகச் சொன்னார். சாதாரண வாகனங்களில் செல்ல முடியாத ஓரு குறுக்குப் பாதையில் போனால் எளிதாகப் போய்விடமுடியும், இல்லாவிட்டால் பெருஞ்சுற்று சுற்றவேண்டும் என்றார். இப்போது நம் கவிஞர்களில் சிலர் எவ்வாறாகவோ எல்லாம் இருந்துவிட்டு, தாங்கள் தம் மனைவியை மட்டும் நேசிக்கும் ‘பத்தினி’ கணவன் என்று அடிக்கடி எழுதி எமக்குக் கிச்சுமூச்சுக் காட்டுவதில்லையா? அதுபோல நானும் நல்லதொரு பத்தினிப் பக்தந்தான்,  ஏன் வீணாக கோயிலுக்குப் போய் பத்தினி தெய்யோவைக் கஷ்டப்படுத்துவான் என்று எண்ணி நேரேயே அருவிகளைப் போய்ப் பார்ப்போம் எனத் தீர்மானித்தேன்.

ஆனால் பத்தினி தெய்யோ,  நான் எந்தப் பெண்ணையும் பார்த்து சலனமடையாத இராமனின் நெருங்கிய உறவுக்காரன் என்று நினைத்துவிட்டார் போலும். தன்னைப் பார்க்காது போகக்கூடாதென்று 'ஊபர்'க்காரர்களுக்கு சித்து விளையாட்டைக் காட்டத் தொடங்கிவிட்டார். தங்கி நின்ற விடுதிப்பக்கமாய் எந்த ஊபரையும் விடமாட்டேன் என்று தெய்யோ குறுக்காய் மறித்து நின்றார். அப்படி அந்த மந்தீரிகத்திற்குள் விழாது ஒரளவு தப்பிவந்தவர்களையும் திசைதெரியாமலாக்கி தெய்யோ மடைமாற்றிக் கொண்டிருந்தார். இனியும் இயலாது என்று விடுதியில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினேன். தார் பரவாத தெருக்களில் நடந்து, வெயிலில் உக்கிரத்தால் வியர்வையும் களைப்பும் மேலோங்க ஓரிடத்தில் போய் அமர்ந்துவிட்டேன். என் பரிதாப நிலையைக் கண்ட ஒரு சிங்களக் குடும்பம், தங்களுக்குத் தெரிந்த ஓர் ஓட்டோவை அழைத்து என்னை ஏற்றிவிட்டனர்.

இனியும் பத்தினி தெய்யோவுடன் விளையாடக்கூடாதென்று
, முதலில் தெய்யோவைப் பார்த்துவிட்டு, பிறகுதான் நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதென்று தெய்வம் பிடறியில் அடித்துச் சொன்னது. தெய்யோவிடம் வெறுங்கையோடு போகக் கூடாதென்று தாகத்துக்கு இளநீர் குடித்த கடையிலே இரண்டு நெய்ச்சட்டியும்,சாம்பிராணிக் குச்சிகளையும் வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். புராதனம் மிளிர நம் அம்மை வீற்றிருப்பார் என்று நினைத்த எனக்கு என்னே ஏமாற்றம்! அம்மை ஒரு பொம்மையாக இருந்தார். அவர் வேறு யாருமில்லை நம் கண்ணகிதான். கையில் சிலம்புடன் வீற்றிருந்தார். ஆனாலும் இதற்கிடையிலும் அம்மையின் திருவிளையாடல் விளங்கியது. நீ இராமன் வழிவந்தவனல்ல, என்னை அழியாப் புகழ் பெறச்செய்த சிலப்பதிகாரம் எழுதியவ  இளங்கோவடிகளின் வழித்தோன்றல் நீயென எனக்கு உணர்த்தத்தான் அம்மை அங்கே அழைத்திருக்கின்றார். அம்மையே நீ வாழி!

இனியும் தாமதிக்க முடியாதென சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு அருகிலிருந்த இடத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன். தெய்வத்தைத் தரிசித்தால் அடுத்து சொர்க்கந்தானே என்பதால் பதிவு செய்த விடுதியின் பெயரும் Heaven De Fountain என இருந்தது. உண்மையிலே பெயருக்கேற்ற மாதிரி அவ்வளவு அழகான இடத்தில்தான் அமைந்திருந்தது. அதைச் சுற்றி அருவி மூன்று திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தது. விழிகளை விரித்தால் காணுமிடங்கெங்கும் பசுமை. சலசலவென்ற நீரோடையின் சத்தம் இசை போலப் பின்னணியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த அறையில் இருந்து பார்த்தால் ‘குமாரி அள்ள’ என்ற அருவி, குமரியாக தளதளவென்று தூரத்தில் விழுந்து கொண்டிருந்தார்.


அங்கு நின்று இங்கு நின்று பிரச்சினைப்பட்டு
, சமாதானப்பட்டு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தற்கு, இது இயற்கையின் வெகுமதியென நினைத்துக் கொண்டேன். விரும்பியமாதிரி இயற்கையாக ஓடும் அருவியிலும் குளிக்கலாம், செயற்கையாக வடிவமைத்த நீச்சல் தடாகத்திலும் நீந்தலாம் என்று விடுதிக்காரர்கள் சொன்னார்கள். இவ்வளவு தூரம் தேடி வந்தபின் நீர்வீழ்ச்சியில் சிலிர்க்காது, யாராவது நீச்சல் குளத்தில் இறங்குவார்களா என்ன?  ஆனாலும் பயணங்களில் கிடைக்கும் எதையும் நிராகரிக்கக் கூடாதென்பது நான் கற்றுக் கொண்ட பாலபாடம். ஆகவே வாலைக்குமரிகள் நீச்சல்குளத்தில் நீச்சலடித்தால், பாக்கு நீரிணையைக் கடந்த ‘ஆழிக்குமரன்’ ஆனந்தனின் வாரிசு நான் என்பதை நிரூபிக்கத் தயாரென்பதை என் ‘தினவெடுத்த’ தோள்கள் சொல்லிக் கொண்டன.

இன்றைய காலத்து மனிதர்களுக்கு எல்லாமே போதாமையாக இருக்கின்றன. மேலும் பயணங்களின்போது தம் வீட்டையும் அப்படியே காவிக் கொண்டு வருகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மரங்களும் நீரோடையும் பறவைகளும் கலந்து ஒரு அருமையான சூழலில், குடித்துக் கொண்டு ஒரு கும்பல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. மது அருந்துவதோ, கொண்டாட்ட மனோநிலையில் இருப்பதோ பிரச்சினையில்லை, ஆனால் இவர்கள் Karaoke இற்கு மைக் வைத்து பாட்டுக்களைப் பாடிக் கொன்று கொண்டிருந்ந்தார்கள். அவர்களுக்கே தாங்கள் என்ன செய்கின்றோம் என்று அறியா நிலை. இதற்குள் அடிக்கடி நிமிடக் குளியலுக்காய் நீச்சல் தடாகத்தில் இறங்குவதும், ஏறுவதுமாகவும் இருந்து,  மற்றவர்கள் நிம்மதியாக நீச்சலடிக்க விடாதும் கத்திக் குழறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த
Karaoke சத்தம், இரண்டாம் அடுக்கின் அறைக்குள், நான் பலகணிக் கதவுகளை மூடிய பின்னும் உள்ளே அதிர்ந்து கொண்டிருந்தது. மற்றவர்களின் வெளியைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொஞ்ச நேரம் இப்படிச் சத்தமாய் களியாட்டம் செய்கின்றார்கள் என்றால் கூட பரவாயில்லை. நான் அந்த விடுதிக்குப் போன பிற்பகலில் இருந்து இரவுவரை அதே அலறல் சத்தத்துடன் இருந்தார்கள். ஏற்கனவே அம்பலகமவின் அடிபட்டு நொந்துவிட்டதால், இங்கே பொறுமை காப்பதென்று எண்ணி மூடிய அறைக்குள் இருந்து இயற்கையை இரசிக்கத் தொடங்கினேன். மேலும் ஸென், சந்தைக் கூச்சல்களுக்குள் தியான மனோநிலையுடன் இருப்பதுதான் முக்கியமெனவும் போதிக்கிறது.

இரைச்சல்களில் இருந்து தப்புவதற்கு குமாரி அருவிக்குப் போவதென்றாலும் கொஞ்சம் உட்பாதைக்குள்ளால் நடக்கவேண்டி இருந்தது. வெயிலும் சாய்ந்து கொண்டிருந்ததால், நீர்வீழ்ச்சி குளிரவும் தொடங்கியிருக்கும். எனவே குமாரியை அடுத்தநாள் காலையில் போய் ஆரத்தழுவது என்று பகலிலே கனவு காணத் தொடங்கினேன்.



**************

(Apr 27, 2023)

கார்காலக் குறிப்புகள் - 11

Saturday, July 15, 2023

 

பசுமை தேடிய பயணங்கள் - 01



கடற்கரைகளைத் தேடிப் போன ஒவ்வொரு பயணங்களிலும் காடுகளும், மலைகளும் கூடவே நினைவில் வந்து கொண்டிருந்தன. கடல் பிடிக்குமென்றாலும் அது தத்தளிப்பான உணர்வெழுச்சிகளைத் தந்து கொண்டிருக்கும். காடும் மலைகளும் என்னை அமைதியாக்குபவை. நீலம் எனக்குப் பிடித்த வர்ணமென்று நினைத்துகொண்டதை, மரங்களின் பசுமை ‘பச்சைக்கு அதிக ஈர்ப்புண்டு’ என மாற்றியும் இருக்கிறது. கடல்களைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, காடுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் தேடிப் போகும் ஆசை ஏற்பட்டது.

தெற்குக் கடற்கரைகளுக்குப் போக புகையிரதங்களும், பேருந்துகள் செல்ல புதிய நெடுஞ்சாலையும், கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை கரையோரமாக இருக்கின்றது. காடுகளையும், மலைகளையும் தேட மத்திய மாகாணங்களுக்குச் செல்வதென்றால் நல்ல வசதியுடைய வாகன வசதி வேண்டும். இயற்கையின் வனப்பு போகும் திசைதோறும் விரிந்து கிடக்கும். ஆனால் நிறுத்தி நிறுத்தி இரசித்துப் போக புகையிரதமோ/பேருந்தோ அவ்வளவு தோதுப்படாது. மேலும் இப்போதிருக்கும் இலங்கையின் பொருளாதார நிலைமைக்கும், என் கையிருப்புக்கும் தனிப்பட்ட வாகன வசதி செய்வதெல்லாம் கற்பனையில் கூட சாத்தியமில்லை.


அநேகமாக புகையிரதங்கள்/பேருந்துக்கள்தான் என் பயணத்திற்கு கைகொடுப்பவை. ஆனால் தனியார் பேருந்துகளில் நெருக்கி ஆட்களை ஏற்றுவார்கள் என்பதோடு, இருக்கைகளின் இடமும் குறுகியதாக இருக்கும். இது போதாதென்று ஏதோ பட்டத்து இளவரசியின் பல்லக்கு போகின்ற மாதிரியான பாவனையில் திரைச்சேலைகளை உள்ளே போட்டு, கொஞ்சம் இருக்கும் கண்ணாடிகளையும் மறைத்திருப்பார்கள். மூச்சுவிடவே சிலவேளைகளில் கஷ்டமாயிருக்கும். இத்தோடு எல்லாம் உங்களை சும்மா விடமாட்டோம் என்று, கோத்தபாய ஐயா பதுங்கியிருக்கும் இடம் வரை கேட்கவேண்டும் என்பது போல, காலாவதியான சிங்களப் பாட்டுக்களை அலறல் ஒலியில் போடுவார்கள் (இலங்கையில் ஹோர்னே அடிக்கமாட்டார்கள் என்று முன்னொருபொழுது எழுதிய சாரு நிவேதிதா இன்றைக்கு அல்லவா இலங்கைக்கு வருகின்றார். அவரை ஒருமுறை இந்தத் தனியார் பேருந்தில் போகச் சொல்லவேண்டும்). ஆனாலும் ஊரோடு ஒத்துவாழ வேண்டும் என்பதால் வேறு வழிகளில் இல்லாதபோது இந்தப் பேருந்துக்களில் ஏறுவதுண்டு.

பசுமையையும், நீர்வீழ்ச்சியையும் தேடிப்போக ஒரே நீண்ட பயணத்தைச் செய்யாது, நின்று நிதானித்துப் போவதாகத் தீர்மானித்து ஓரிடத்தை இணையத்தினூடு பதிவு செய்து போனேன். 'அம்பலகம’ என்ற விடுதிக்குப் போனபோது புத்தாண்டுக் கொண்டாடங்களில் அது அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் வசதி நாம் நினைத்தற்கேற்ப இல்லாதுவிட்டாலும் வரவேற்பவர்களின் உடல் மொழியும் பேச்சும் நமக்கு உற்சாகமளிக்கும். இங்கே அந்த அதிர்வுகள் எதனையும் நான் உணரவில்லை. ஏனோதானோ என்று வரவேற்றவர்கள் ‘booking.com’ இல் பதிவு செய்ததை இரத்துச் செய்கின்றீர்களா எனக் கேட்டார்கள். வழமையாக நான் இப்படி இரத்துச் செய்வதில்லை. பரவாயில்லை, நேரே பதிவு செய்தால் அவர்களுக்கு கொமிஷன் இல்லாது முழுப்பணமுங் கிடைக்குமே என்று அதைச் செய்தேன்.

என் பெயருக்குரிய ஆவணத்திற்காக பாஸ்போர்ட்டைக் கொடுத்தேன். அறை தயாராகிவிட்டதெனச் சொன்னபோதுதான், பாஸ்போர்ட்டை அவர்கள் மீண்டும் தராதது நினைவுக்கு வந்தது. எங்கே என் பாஸ்போர்ட் என்றபோது, நீங்கள் அறையைக் காலி செய்யும்போது தருகின்றோம் என்றார்கள். எனக்கு வந்ததே கோபம், ஆனால் அதை அடக்கிக்கொண்டு அதை நகலாகவோ அல்லது போட்டோவாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அசலை என்னிடம் தாருங்கள், அது தொலைந்துவிட்டால் எனக்குச் சிக்கலாகிவிடும் என்றேன். இல்லை இது இங்கு ஓர் சட்டமென்றனர். ‘அப்படியா? நானும் இலங்கைக்குள் பல இடங்களில் பயணித்திருக்கின்றேன். அப்படியெவரும் என் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததில்லையே’ என்றேன்.

அவர்கள் திரும்பத் திரும்ப பாஸ்போர்ட்டைத் தரமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். இறுதியில் இது இலங்கை முழுவதற்கான சட்டமில்லை. இங்குள்ள பொலிஸ் நிலையத்தின் கட்டளை என்றார்கள். அப்படியா, பொலிஸ் ஸ்டேசனுக்குப் போன் போடுங்கள். நான் கதைக்கின்றேன் என்றேன். இப்படியே இழுபட்டு அவர்களின் மானேஜர் எல்லாம் வந்தபின்னும் அப்படியேதான் அடம்பிடித்தார்கள். ஆனால் எனக்கு முன்பாக ஒரு குடும்பத்தினர் வந்தபோது இப்படி எந்த அடையாள அட்டை எதுவும் வாங்கி வைக்கவில்லையே, ஏனெனக் கேட்டேன்.

இனி இவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தபோது, நீங்கள் இனவாதிகள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், ஒரே இனத்தவர் என்றார் மானேஜர். நீங்களும், நாங்களும் ஒன்றல்ல என்றுதானே போராட்டங்கள் நடந்தன. இப்போது இதையும் செய்துவிட்டு ஒரே இனத்தவர், நாம் இலங்கையர் என்றால் முட்டாள்தனமாகத் தெரியவில்லையா என்று கூறிவிட்டு அம்பலகமத்தை விட்டு வெளியே வந்திருந்தேன்.

0000000

பயணங்களில் இப்படி எதிர்பாராதாவையெல்லாம் நடக்கக் கூடியதுதான். ஆனால் அந்தத் துயர/கோப நினைவுகளுக்குள் மூழ்காமல் அடுத்து என்ன செய்வதென்பதையும் பயணங்களே நமக்குக் கற்றுத் தரும். வெளியில் வந்து அலைபேசியிலே இன்னொரு இடத்தைப் பதிவு செய்தேன். நேரமும் மதியத்தைத் தாண்டியதால், காதலிக்குக் கட்டாயம் தினம் கொடுக்க வேண்டிய முத்தத்தைப் போல பசியும் வயிற்றைப் பிறாண்டியது. இந்த இடம் எந்தத் திசையில் இருக்கின்றது என்பது பற்றி அக்கறைப்படாமல் பசுமை சுற்றியிருந்தால் மட்டுமே போதுமாக எனக்கு இருந்தது. அங்கே பேருந்து வசதிகள் இல்லை. எனவே ஊபர் மட்டுமே போகும். ஊபர் ஓட்டோவும் போகிறது போகிறது, இறுதியில் ஒரு எல்லையில் கொண்டு போய், இனி போவதற்குத் தெரு இல்லையென்ற இடத்தில் நின்றது.

இப்படித்தான் கேரளாவின் குமரகத்தில் நின்று
, இடுக்கிக்கு ஒரு இடத்தைப் பதிவு செய்துவிட்டு ஊபர் டாக்ஸியில் போகும்போதும் நடந்தது. அது மலையுச்சி. என் வாழ்வையே இங்கே கொண்டுவந்து முடிக்கத்தான் வந்தாயா என்று கெஞ்சுமளவுக்கு ஊபர் டிரைவரை அந்த இடம் வைச்சுச் செய்திருந்தது. ஆனால் அவ்வளவு அழகான இயற்கைக் காட்சி விரிகின்ற இடம். ஒருநாள் தங்க முடிவெடுத்ததை மூன்று நாட்களாக நீடித்து வேறெந்த இடத்தையும் அலைபாய்ந்து பார்க்காது, இயற்கையோடு அந்த இடம் ஒன்றிக்க வைத்தது. பல் வலி வந்ததால், ஒருநாள் மட்டும் மலையிறங்கிப் போய் அங்கே பல் வைத்தியரைப் பார்க்கவேண்டியிருந்தது. அந்தப் பெண் வைத்தியரின் பெயர் ஸக்காரியா என்று முடிந்ததால், நீங்கள் எழுத்தாளர் பால் ஸக்காரியாவின் உறவுக்காரரா என்று வலிக்கிடையிலும் அவரோடு கொஞ்சம் ‘கடலை போடவும்’ முடிந்தது.

இலங்கையில் இந்த இடமும் உச்சிதான், பாதை முடிவடையும் இடத்தில்தான் என்றாலும் அந்தளவு உயரத்தில் இருக்கவில்லை. விடுதியின் அறைகளும் முழுக்கண்ணாடிகளால் சுவராக்கப்பட்டிருந்தன என்பதால் அறையே ஒரு காட்டின் நடுவில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. அருகில் எந்த உணவுக்கடையும் இல்லை என்பதால் அவர்களே உணவகமும் வைத்திருந்தார்கள்.  குளத்தில் பிடித்த மீனோடு நல்ல சாப்பாடும் சுடச் சுடக் கிடைத்தது.  அதை நடத்துபவரோடு அந்தச் சாப்பாடுடன் உரையாடச் சந்தர்ப்பம் வாய்த்தது.

அவர் ஒரு பொறியியலாளராக இலங்கை தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து
 இளைப்பாறிவிட்டு, தனது ஓய்வுக்காலத்தை வீணாக்காமல் அவரே வரைகலை செய்து இதை நிர்மாணித்திருக்கின்றார். சின்னதாய் இருந்த காணியில் தொடங்கி, பக்கத்து சிறு நிலங்களையும் வாங்கி இணைத்து இப்போது ஆறேழு அறைகள் இருக்கின்றன. குசினி முற்றிலும் ஊர்ச் சமையலறை போல் மண்ணாலும், மட்டையாலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு கொஞ்சம் விலை கூடத்தான், ஆனால் இடத்தின் அமைவும், உபசரிப்பும் விலைமதிப்பற்றவை. எனக்கும் இப்படி காட்டின் நடுவில், மரங்கள் சூழ ஒரு வீட்டில் வாழ ஆசை என்றேன். 'யாருடைய தயவுக்காகவும் காத்திராதே, நீயே அதை வடிவமைத்துக் கொள்வதுதான் நல்லது' என்றார். பக்கத்தில் ஒரு பத்தினி தெய்யோ இருக்கின்றார். அங்கே போய் அவரைப் பிரார்த்தித்தால் நினைத்தவை நடந்தேறும் என வழியும் காட்டினார் அந்தக் கிறிஸ்தவ நண்பர்.

ஆகவே வீடமைக்கின்றேனோ இல்லையோ, ஒரு பர்ணசாலையாவது அமைத்து இப்படியான ஓரிடத்தில் ஒருநாள் 
கொஞ்சக் காலமாவது வாழத்தான் போகின்றேன். தீபுவின் கவிதையைப் போல  அன்று நான் யோகியாகவோ அல்லது போகியாகவோ எப்படி வாழ்வது என்பது அந்த நேரத்துக்குரிய நியாயமாக இருக்கட்டும்.

"இன்னும் எத்தனை காலம்?"
என்கிற
ஒரே ஒரு வாக்கியம்
என்னைப் பாதி யோகியாகவும்
பாதி போகியாகவும்
மாற்றியது.
பிறகு
எனது உடலில்
ஒரு பாதி சொர்க்கத்துக்கும்,
மறுபாதி நரகத்துக்கும்,
நடந்து நடந்து களைத்தன.
~தீபு


*******************


(Mar, 2023)

கார்காலக் குறிப்புகள் - 10

Saturday, July 08, 2023

 

ஒரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய அகதிக் கோரிக்கையெல்லாம் யாழ் மேயராக இருந்த "அல்பிரட் துரையப்பாவின் கொலை"யைச் சுற்றியிருந்தன. அகதி விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான கதையைப் பார்த்த அதிகாரிகள் எத்தனை துரையப்பாக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள் என்று திகைத்ததாய் பல்வேறு புனைவுகள் இருக்கின்றன. 'எல்லாக் கதைகளும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன' என்ற பின்னமைப்பியலை நடைமுறை வாழ்க்கையில் பரீட்சித்துப் பார்த்தவர்கள் நம் புகலிடத் தமிழர்!

"அல்பிரட் துரையப்பா முதல் காமினி (திஸநாயக்கா) வரை" என்று "தினமுரசு" பத்திரிகையில் வாராந்தம் வந்த தொடரை, அன்று கொழும்பில் இருந்த காலங்களில் அடிபட்டு வாசித்து, நானொரு புலம்பெயர் தமிழனாக பிற்காலத்தில் ஆவதற்கான தகுதிகளை என் சிறுவயதிகளிலேயே நானும் வளர்த்திருக்கின்றேன் என்பதும் ஆச்சரியமானதுதான். அந்தத் தொடரை எழுதியவரும், அதன் பொறுப்பாசிரியருமான ரமேஷ் அதே "தோழர்"களின் இயக்கத்தாலே பின்னர் கொல்லப்பட்டதும் அவலமானது.

அவ்வாறு, கடந்த ஒரு தசாப்தகாலமாய் "அண்ணைக்குப் பக்கத்தில் நின்றவர்கள்" என்றொரு புதிய கதையாடல் பிரபல்யமாகி இருக்கின்றது. உண்மையில் அவரோடு கடைசிக்காலத்தில் பக்கத்தில் இருந்தவர்கள் மே பதினேழோடு களச்சாவைக் கண்டவர்களாகவோ அல்லது இன்னும் இலங்கையில் இருக்கும் அடக்குமுறையின் நிமித்தம் மெளனமாகவோ இருக்க, வேறு பலர் இந்தப் புனைவுகளை கட்டவிழ்க்கத் தொடங்கினார்கள் ( இது தெரிதா சொல்லும் "கட்டவிழ்ப்பு" அல்ல).

அவ்வாறே சிங்கள வம்சம் சிங்கபாகு என்ற சிங்கத்திற்குப் பிறந்த விஜயனின் வருகையுடன் தொடங்குகின்றது என்ற மகாவம்ச புனைவைப் போல, "தம்பி இன்னமும் இருக்கின்றார்" என்று காலத்துக் காலம் தமிழ்நாட்டவர் சிலர் கட்டமைக்கும் கதைகளும் இருக்கின்றன.

இதுவரை சிங்களவர்கள் தமக்கான அனைத்துப் புனைவுகளும் மகாவம்சத்திலே இருக்கின்றது, இனி புதுப்புனைவுகள் வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தார்கள். புலம்பெயர்ந்தவர்களின் மீள்வருகையாலோ, இல்லை இந்தியர்களின் 'அணையுடைத்துப் பாயும்' இலங்கைச் சுற்றுலாப் பயணங்களாலோ அவர்களும் இந்தப் புனைவுக் கடலுக்குள் இப்போது குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். "இராவணன் ஒரு சிங்கள அரசன்" என்றும், இதுவரை இராவணனின் தொன்மத்து நீட்சியாக தமிழர் பிரதேசத்தில் இருந்த கன்னியா வெந்நீரூற்றுக்கள், "அனுராதபுரத்து பெளத்தத்தின் அடையாளங்கள்" எனவும் அவர்களும் புனவுகளை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள்.

இவை கூடப் பரவாயில்லை. கடந்த மூன்று இலங்கைப் பயணங்களில் நானேறும் ஓட்டோக்காரர்கள்/டாக்ஸிக்காரர்களில் அரைவாசிப் பேர்கள் தாங்கள் இராணுவத்தில் இருந்தனர் என்கின்றார்கள். அதிலும் பலரிடம் இன்னும் தோண்டிக் கேட்டால், "நாங்கள் அதுபற்றி அதிகம் சொல்லமுடியாது, நாங்கள் இண்டலிஜென்சில் இருந்தோம்" என்கின்றார்கள். நாடு 'திவாலாகி'ப் போனாலும் இராணுவ பட்ஜெட்டையோ, இலட்சக்கணக்கிலிருக்கும் இராணுவத்தையோ குறைக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கும் இலங்கையரசு, இந்த இராணுவக்காரர்களை மட்டும் ஏன் வெயில் உருக்கி எறிக்கும் நேரங்களில் ஓட்டோ ஓட விட்டிருக்கின்றார்களென என் நெஞ்சம் பதைபதைப்பதுண்டு. முப்பது வருடங்களாக நீடித்த யுத்தத்தை 'மனித உரிமைகள் மீறாமல்' சுமுகமாய் முடித்துக் கொடுத்த இலங்கை இராணுவத்துக்கு, 'செய்ந்நன்றி' கொன்ற அரசு இது.

நேற்றுக்கூட மாத்தறையில் ஏறிய டாக்சிக்காரர் நானும் உளவுத்துறைதான்; இப்போது பூஸாவில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். அதிலும் முல்லைத்தீவு தமிழை விட யாழ் தமிழ் அருமையானது என்று எனக்கு வகுப்பு எடுத்தார். "டேய் நீ யாழ்ப்பாணத்துக்குப் போய் இப்ப பாரடா, அங்கே பெரும்பாலும் பேசுவது சென்னைத் தமிழடா" என்று சொல்ல வாயரித்தாலும், ஏற்கனவே எயார்போர்ட்டில் புகைத்த வாயை சூடாய்த் திறந்து பட்டபாடு போதும் என்பதால், அப்படியா ஜீ, ஓம் சேர் என்று சலாம் போட்டபடி வந்து, கொழும்புக்கான பஸ்செடுத்தேன்.

உலகத்திலேயே ஒருத்தன் உளவுத்துறையில் வேலை செய்தால், நான் உளவுத்துறையில் இருக்கின்றேன் என்று பொதுவெளியில் பெருமையாகச் சொல்கின்ற ஒரேயொரு நாடாக இலங்கை மட்டுந்தான் இருக்கும் போலும். இது கூடப் பரவாயில்லை. இன்னும் நான்கைந்து வருடங்களில் இவர்கள் நாங்கள்தான் கொடுங்கோலர் மகிந்தாவையும், கோத்தாவையும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்த உளவுத்துறை/ஆர்மிக்காரங்கள் என்று என்னென்ன கதைசொல்லப் போகின்றார்களோ, அதையெல்லாம் நான் எப்படியெல்லாம் தாங்கப் போகின்றேனோ தெரியவில்லை.


இந்த எல்லாப் புனைவுகளையும் கேட்பதிலிருந்து தப்ப எனக்கிருக்கும் சில தேர்வுகள்:


-மீண்டும் இலங்கைக் குடிமகனாக மாறி என்னையொரு தேசப்பக்தன் என நிரூபிப்பது (One Nation One People, ஹொந்தாய் ஹொந்தாய் போம ஹொந்தாய்)

-இலங்கைக்குள் எங்கு பயணித்தாலும் இனி ஓட்டோ எடுக்காமல் இருப்பது 

-நானும், ஏதேனுமொரு தமிழ் இயக்கத்தின் புலம்பெயர் உளவுத்துறைக்காரன் என ஓர் எதிர்க்கதையாடலை உருவாக்கல்


*************


(Mar 27, 2023)

யாழ்ப்பாணம்

Friday, July 07, 2023

 

யாழில் நிற்பதற்கு இம்முறை புதியதொரு ஹொட்டலைத் தேர்ந்தெடுத்தேன். அங்கே நின்ற இரண்டு நாட்களுக்குள் மூன்று அறைகள் மாற்றப்பட்டிருந்தேன். அவ்வளவு குழறுபடிகள். அவர்கள் 'Booking.com' இல் சொல்லியபடி அங்கே வசதிகளும் இருக்கவில்லை. எங்கெங்கோ எல்லாம் அலைந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விடயமில்லை. ஆனால் என்னைப் பார்க்க நண்பர்கள் வந்தபோது புதிய விதிகளை விதித்தார்கள். நீங்கள் எனக்கு சொல்லப்பட்ட அறையையோ, குறிப்பிட்ட வசதிகளையோ செய்து தரவில்லை, அப்படியிருந்தும் அமைதியாக இருந்தேன், ஏன் இப்போது மட்டும் என் நண்பர்கள் பார்க்க வரும்போது தடுக்கின்றீர்களென அவர்களோடு கொஞ்சம் எகிறினேன்.


இவ்வாறு கட்டுநாயக்கா எயார்போட்டில் என் லக்கேஜ்ஜை எடுத்துவிட்டு வெளியே வரும்போது என்னை மட்டும் ஒருவர் தடுத்துவிட்டு, பெட்டிகளைத் திறக்கச் சொன்னார். அவரின் பாவனையும், கேட்ட மொழியும் இனவெறி பிடித்தவர் என்பதைச் சொல்லாமற் சொல்லியது. சரி பெட்டிகளைத் திறந்து காட்டுகிறேன் என்று ஒரு பக்கமாய் ஒதுங்கினேன். முன்னால் சென்ற நண்பர் என்ன நடந்ததெனக் கேட்டார். This guy asking me to open my luggage என்றபோது, வந்த எரிச்சலில் guy இற்கு முன்னர் f word பாவித்துவிட்டேன். நண்பருக்கு நான் சொன்னதைக் கேட்டுவிட்ட இந்த அதிகாரிக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. 


சிலவேளைகளில் பேச்சு வழக்கில் f word பாவிப்பது போல இதை நான் அங்கே பாவித்தது தவறுதான். இது நான் தடுத்தவரை நோக்கிச் சொன்னது இல்லை, என் நண்பருக்கே சொன்னேன். ஆனால் இதையே நான் தமிழில் சொல்லியிருந்தால் இவருக்கு விளங்கியிருக்கவா போகிறது. உடனே கோபம் வந்துவிட்ட அவர் என் பெற்றோர், எங்கள் சந்ததியென எல்லோரையும் இழுத்தார். நான் எதுவுமே பேசவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியை இப்படித்தான் வழிநடத்துவரா என்ற யோசித்தபடி, அவரைப் படமெடுக்க முயன்றேன். உடனே என் அலைபேசியைப் பறித்து கேஸ் போடபோகின்றேன் என போனை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அலுவலகத்துக் கூட்டிச் சென்றார். அவரை பார்த்தல்ல, என் நண்பருக்குத்தான் இதைச் சொன்னேன் என்பதால் எனக்கு அவர் எந்தக் கேஸ் போட்டாலும் (ஆகக் கூடியது என்ன செய்வார்கள், இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காது, கனடாவுக்கு அப்படியே திரும்ப அனுப்புவார்கள், அவ்வளவுதானே) அதை எதிர்கொள்ளலாம் என அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.


இலங்கைக்குள் நுழைந்த அந்த ஞாயிறு Sunday Times எடுத்து வாசித்தபோது, முக்கிய செய்தியாக சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் தற்சமயம் மோசமாக வழிநடத்துவது பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. ரெயினில் போன சுற்றுலாப் பயணிக்கு செருப்பால் எறிந்தது, ஓட்டோவில் விமானநிலையத்துக்கு aggressive ஆக அழைத்துச் செல்ல முயன்ற ஆட்டோக்காரரின் விடீயோ என பல்வேறு வகைச் சம்பவங்கள்! இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சரும் இவை குறித்து கண்டித்ததுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொல்லியிருந்தார். அதை வாசித்தபோது சாதாரண/விளிம்புநிலை மனிதர்களை விடுங்கள், முதலில் உங்கள் விமான நிலையத்தில் இந்த அதிகாரநிலை அதிகாரிகளுக்கு எப்படி பயணிகளை வரவேற்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள் என எண்ணிக்கொண்டேன்.


நான் நின்ற ஹொட்டலில் அனுபவங்கள் எதிர்மறையாக இருக்கின்றதேயென சலித்துக் கொண்டபடி, ஒருநாள் காலையில் அங்கு உணவருந்தப் போனேன். நான் முரண்பட்ட மானேஜர் ஒட்ட வெட்டிய தலையோடு, கை முழுதும் tattoo வோடு macho வாக இருந்தார். அவரைப் பார்த்த என் நண்பர், ஆள் பழைய ஆர்மிக்காரனோ தெரியாது, சும்மா அவரோடு தனவாதே என்றார். எதற்கு வம்பென வாயைச் சாப்பிடுவதற்கு மட்டுமே திறப்பதென அதற்குப் பிறகு முடிவு செய்திருந்தேன். இரண்டு குழல் பிட்டும்,பூரியும், கோழிகறியும், பருப்பும், சம்பலும், சொதியுமென ஆற அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டேன்.

பரிமாறிக்கொண்டிருந்தவருக்கு அப்படியொரு களையான முகம். பேச்சுக் கொடுத்தபோது மட்டக்களப்புப் பக்கம் சொந்த ஊரென்றார். சாப்பாடும் நன்றாக இருந்தது. மற்ற இடங்களில் உணவும், சேவையும் சிறப்பாக இருக்கும்போது நம்மியல்பிலே Tips கொடுப்பதைப் போல அவருக்குக் கொடுத்தபோது, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். சரி ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போகும்போது ஏதாவது வாங்கிப் போவதில்லையா, அப்படி பொருள் வாங்கிச் செல்ல மறந்த சந்தர்ப்பமாக இதை நினைத்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோதும் அதை வாங்க மறுத்தார். வேண்டுமெனில் மட்டுநகர் வந்தால் என் ஊருக்கு வாருங்கள், அப்போது விருந்தாளியாக ஏதேனும் வாங்கிக்கொண்டுவந்தால் பார்ப்போம் என அதே அப்பாவித்தனமான சிரிப்போடு சொன்னார்.

பயணிக்கும்போது பல இடங்களில், நல்ல அனுபவங்களைப் பெறுவதுபோல, பயணிகள் என்று தெரிந்து, இவர்கள் திரும்பி வரப்போவதில்லையென அறிந்து அறாவிலை கேட்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் அனுபவித்திருக்கின்றேன். ஆனால் இப்படியொரு அருமையான மனிதரைக் கண்டதும், இந்த ஹொட்டலில் நான் சந்தித்த அனைத்து எதிர்மறை அனுபவங்களும் பண்ணைக் கடலில் மறைந்த சூரியனைப் போலக் கரைந்து போயின.

ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல அனுபவத்தை நீங்கள் சந்திக்கையில், ஒரு பயணம் இனிதாக நிறைவுபெறத் தொடங்குகின்றது.


***************

 

(Mar 10, 2023)


கார்காலக் குறிப்புகள் - 09

Thursday, July 06, 2023

 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படத்தை நேற்றுப் பார்த்தேன். அந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டதில் பல அபத்தங்கள் இருக்கின்றன. அத்துடன் இத்திரைப்படம், தொ.பத்தினாதனின் நூல்களில் இருந்து உருவப்பட்ட பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்கின்ற பத்தினாதனின் குற்றச்சாட்டுக்களும் முக்கியமானவை. இதைப் போன்றே எழுதப்பட்ட உண்மைக்கதையிலிருந்து அப்பட்டமாக உருவாக்கப்பட்டது ‘அயோத்தி’ என்ற திரைப்படம் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை நாமறிந்தால் தொ.பத்தினாதனுக்கு என்ன தீர்ப்பு இகொடுக்கப்படும் என்பதும் எளிதாக விளங்கும்.

மேலும் சிலர் பத்தினாதன் இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று அறைகூவல் செய்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் மட்டுமில்லை, பத்தினாதன் கூட இந்தியக் குடியரசின் எந்த உரிமைக்கும் உரித்தில்லாதவர்களாக இருக்கும்போது எதன் பெயரில் வழக்குப் போடுவது? எவ்வாறு வழக்காடுவது என்பது இவர்களுக்குப் புரிவதில்லையா? ஒரு ஈழத்து அகதி எப்படி இந்தியாவில் வாழ முடிகின்றது என்று தெரியாத இவர்களுக்கே முதலில் விழிப்புணர்வு ஊட்டவேண்டும்.

ஆக, நான் இந்தத் திரைப்படத்தை அழகியல்/அரசியல்ரீதியாக உள்ளே சென்று இப்போது பார்க்கப் போவதில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் ஒரளவுக்கு போரும், அகதிகளின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருப்பது ஒருவகையில் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. தமிழகத்தில், முக்கியமாக திரைப்படங்களில் ஈழத்து அகதிகளின் கதையாடல் (Discourse) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவை. அதை மீறி ஈழத்தவர்களின் கதையைச் சொல்கின்றோம் என்று வந்த திரைப்படங்களைப் பார்த்தபோது (‘நந்தா’ தவிர்த்து), ‘ஆளை விடுங்கடா சாமி’ என்று, நீங்கள் எங்கள் கதையைச் சொல்லாமல் விட்டாலே போதும் என்று நம்மைக் கூற வைத்தவையே அதிகம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அபத்தமாய் எடுக்கப்பட்டாலும், அதில் இன்னமும் அகதிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் சிக்கல்களை திரையில் சொல்ல முயல்கின்றது என்பது கவனத்திற்குரியது. ஒரளவுக்கு தமிழக பொலிஸ்/கியூ பிராஞ்ச் எப்படி அகதிகளைச் சுரண்டுகின்றார்கள் என்பதை இது இயன்றவளவுக்கு காட்சிப்படுத்துகின்றது. ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை உள்ளவர்க்கு இருக்கும் Privilegeகளில் எதுவும் இந்த அகதிகளுக்கு இல்லையென்று நம்மைக் கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சியடையச் செய்கிறது.

நான் இத்திரைப்படத்தை கொழும்பில், இப்போதும் மே 18 நினைவுதினத்தில் கொல்லப்பட்ட மக்களை அமைதியாக நினைவுகூர முடியாத (பொரளையில் சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்நிகழ்வை பொலிஸ்/இராணுவ துணையுடன் கலைக்கின்ற காலகட்டத்தில்), ஒரு தலைநகரத் தியேட்டரில் இருந்து இறுதிப் போரின் சில காட்சிகளையும், வன்னியிலிருந்து தப்பிப் போகும்போது இலங்கை இராணுவத்தால் ஒருவனின் பிடறியில் பிஸ்டல் வைக்கப்பட்டு கொல்லப்படுவதையும், ஒரு பெண் போராளி கைகள் இரண்டையும் இழந்தபோது, இனி இராணுவத்தால் கைப்பற்றப்படப் போகின்றேன் என்ற நிலை வரும்போது, இந்த நாயக சிறுவனிடம் சயனைட்டை என் வாயில் வைத்துவிடு என்று கதறவதையும் பார்க்க முடிகின்றது என்பதுதான் என்னளவில் முக்கியமானது.

ஏனெனில் இன்னும் கூட, இலங்கைக்குள் ஈழப்படுகொலைகள் சம்பந்தமான புகைப்படங்களோடோடு, முகப்பு அட்டைகளோடோ வருகின்ற எந்தப் புத்தகத்தையும் உள்ளே நுழைய விடுவதற்கு இலங்கை அரசுக்கு தயக்கங்கள் உள்ளன. பல நூறு கேள்விகள் கேட்டே சுங்கத்திலிருந்து வெளியே எடுக்க அனுமதி தருகின்ற கதைகளையே நாம் அடிக்கடி கேட்டபடி இருக்கின்றோம்.


இதனோடு சம்பந்தப்பட்டும்/படாத மாதிரி ஒரு விடயத்தை
, நமது செல்வத்தாரின் (செல்வம் அருளானந்தம்) ‘பனிவிழும் பனைவளம்’ வாசித்துக் கொண்டிருந்தபோதும் உணர்ந்தேன். இந்த நூல் யாழில் வாழும் ஓருவனின் கதையைச் சொல்லத் தொடங்கி, ஒரு காதல் முறிவை மறக்க வேலையொன்றை எடுத்து மன்னாருக்கு 1970களின் பிற்பகுதியில் செல்கின்ற கதையைச் சொல்லி, பின்னர் அவன் அகதியாக ஜேர்மனிக்குப் புலம்பெயரும் அவலக் கதையைச் சொல்வதாக மாறுகின்றது. செல்வத்தாரின் மூன்று நூல்களும் அரசியல் என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரேவிதமான 'அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம்' என்கின்ற மேலோட்டமான கருத்துக்களை பாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் தொடர்ந்து இந்தப் புத்தகத்திலும் சொல்லிக்கொண்டிருப்பது சற்று அலுப்பைத் தருகின்றது. ஆனால் இதன் முக்கியம், ஏனைய எந்தப் புலம்பெயர் நூலிலும் இல்லாதவளவுக்கு ஈழத்து சாதியத்தின் கொடுமையைத் தொடர்ந்து இடைவெட்டிச் சொல்கின்றது என்பதில் இருக்கின்றது. அத்தோடு அவற்றை எப்படி இந்த மாந்தர்கள் கடந்து செல்கின்றார்கள் என்பதும் கவனத்திற்குரியது. ஒருவகையில் சல்மா ஆண்களைப் பார்த்து, ‘எல்லாப் புரிதல்களுடனும் விரிகிறது என் யோனி’ என்று எழுதியதைப் போல, ‘பனிவிழும் பனைவளம்’ நூலின் கதைசொல்லி இவ்வாறு ஆதிக்கசாதியினரைப் புரிந்து கொள்ள முயல்கின்றான்.

ஈழத்தில் போர் நிகழ்ந்து முடிந்து 15 ஆண்டுகள் இப்போது தொடங்கும்போதும் கூட, நிம்மதியாக அவர்களை நினைவுகூர முடியாத நிலையே இருக்கின்றது. அப்படிக் கொல்லப்பட்ட மக்களை எங்கும் நினைவுகூர வெளிகளை உருவாக்காமல், அவர்கள் அதன்மூலம் ஆற்றுப்படுத்தி தங்கள் உளவடுக்களை இல்லாமற் செய்ய முயலாமல், இன்றைய தொங்குநிலை ஜனாதிபதி அதேநாளில் இராணுவத்தின் ‘வீரர்களின் போர் வெற்றிவிழா’வில் பெருமிதத்தோடு கலந்துகொள்கின்றார்.

அதைவிட அபத்தமாய் கனடாவின் பிரதமர் மே 18ஐ ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இன அழிப்பு (genocide) 2009இல் இலங்கையில் நிகழ்ந்தது என்று சொன்னதற்காய் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ‘கடுமையாக’ கனடாவின் இலங்கைக்கான அம்பாஸிடருக்கு எச்சரிக்கை விடுத்தாரென இங்குள்ள சிங்கள/ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதிக் குதூகலிக்கின்றன. இதன் குரூரநகைச்சுவை என்னவென்றால், அன்று இனப்படுகொலை நடைபெறவில்லை, போர்க்குற்றங்கள்தான் இராணுவத்தாலும், புலிகளாலும் நடந்ததென்று ஐ.நாவின் அறிக்கையையே இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் உசாத்துணைக்கு இந்த அறிக்கையில் எடுத்தாள்கின்றார். அன்பரே, இனப்படுகொலை என்பதோ, போர்க்குற்றங்கள் என்பதோ ஒரு சொல்தானே, அதற்கான வரைவிலக்கணங்களை மேற்குலகங்கள் தங்கள் வசதிப்படி கொடுத்து வைத்திருப்பதை, பின்னர் நாம் ஆராய்வோம்.

போர்க்குற்றங்கள் அரசு, புலிகள் என்ற இரண்டு தரப்பாலும் நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது யார்?அப்போது இறந்த 50,000-70,000 மக்கள் எந்த நாட்டின் குடிமக்கள்? போர்க்குற்றங்கள் செய்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தரப்பான புலிகள் அன்றே அழிக்கப்பட்டுவிட்டார்கள். யாருக்கு இப்போது பொறுப்புக்கூறும் கடமையுள்ளது. புலிகள் என்ன இறையாண்மையுள்ள ஓர் அரசா? அவர்களா இந்த 50,000 இற்கு மேற்பட்ட மக்களை அழித்தார்கள்? இந்த நாட்டின் குடிமக்களாக இருந்த அந்தப் பொதுமக்களின் படுகொலையில் அரசின் கரங்கள் இரத்தக்கறை படவேயில்லையா? அவர்களின் உறவுகள், சுற்றத்தார், நண்பர்களுக்கு நீங்கள் எந்த ஆறுதலைக் கொடுத்தீர்கள்? இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? போன்ற எண்ணற்ற கேள்விகள் நம்மிடையே இருக்கின்றன.

இம்முறை மட்டுமில்லை, கடந்த சில ஆண்டுகளாக கனடா அரசு இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று அறிக்கை வெளியிட்டபடிதான் இருக்கின்றது. மே மாதத்தில் ஒரு வாரத்தை இலங்கையின் இனப்படுகொலை வாரம் என்று கனடாவில் அறிவித்து கனடாவில் சில மாகாண/நகராட்சி மட்டங்களில் அனுட்டித்து விழிப்புணர்வு செய்யவும் அங்கே செய்கின்றார்கள். அது சரி சென்ற வருடம் ஏன் நீங்கள் இப்படி கனடாவிற்கெதிராகப் பொங்கவில்லை? சென்ற வருடம் அரகலியா போராட்டம் காலிமுகத்திடலில் நடைபெறாவிட்டால், உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்குமா என்ன?

அன்புள்ள இறையாண்மை இலங்கை அரசின் அமைச்சர்களே, நீங்கள் போராடவேண்டியது மேற்குலகங்களோடு அல்ல, உங்கள் சொந்த மக்களோடுதான். அவர்களுக்கு நீங்கள் ஆறுதலும், நிறைவான ஆட்சியும் கொடுத்தால் ஏன் மேற்குலகத்தான் இங்கே வரப்போகின்றான். எங்கள் மக்களை இந்த மேற்குலகம் துவித நிலைகளுக்கு (polarization) தள்ளுகின்றது என்று ஏன் நீங்கள் புலம்பவேண்டும். நல்லாட்சியும், மீளிணக்கமும் சிறப்பாக நடைபெறுமாக இருந்தால், மேற்குலகம் இடையூறு செய்வதை, அரசுக்கு முன்னர் அம் மக்களே பொங்கியெழுந்து ‘அந்நியனே உனக்கென்ன வேலை எம் நாட்டில்’ என்று சொல்லியிருக்கமாட்டார்களா என்ன?

ஆகவே ஆகக் குறைந்தது முதலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ மனச்சுத்தியோடு அம்மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, அழிவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அவர்கள் இழந்த உறவுகளுக்காக நிம்மதியாக அழுவதற்காவது அவர்களை இப்போது விடுங்கள்.

'பனிவிழும் பனைவளத்தில்' வரும் ஒருபகுதி இது, இதை வாசிக்கும்போது நீங்கள் இந்நாட்டு மக்களுக்கு உடனடியாகச் செய்யவேண்டியது என்னவென்பதாவது புரியட்டுமாக!

ஏனெனில் நானும் அன்று இந்நிகழ்வில் ஓர் சாட்சியாக அங்கேயிருந்தேன்.

"முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்த அந்த மே மாதத்தில் 20ஆம் திகதி நான் வாழும் பட்டணத்துப் பாராளுமன்றத்துக்கு அருகே பெருமளவில் தமிழர் கூடி காற்றாகிப் போன இலட்சக்கணக்கான தங்கள் உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தனர்.

நானும் என் நண்பர்கள் சிலரும் அங்கு போயிருந்தோம். இவ்வளவு பெருந்தொகையில் தமிழர் கூடிப் பெருமூச்சுகள் விட்டும் பெரும் குரல் எழுப்பி அழுததையும் என் வாழ்வில் நான் மறக்க முடியாதது.

அது கடும் துயர் கவிந்த பெரும் இரவு. இந்த நாட்டு பொலிஸார் குதிரைகளிலும் மோட்டார் சைக்கிளிலும் சுற்றிவர நின்றார்கள். மக்களோடு மக்களாகக் கலந்தும் நின்றார்கள்.

எங்கோ தொலைதூரத்தில் இருந்து தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வாழ வந்த மக்களின் துயரில் பங்குபற்றுவதைப் போல எங்கும் அவர்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மனம் கனத்தது. நான் என் நண்பர்களை விட்டு நழுவிப்போய் ஒரு மரத்தின் கீழ் நின்றேன்.

என் உறவுகளை நினைத்தேன். நான் பிறந்து வாழ்ந்த என் ஊரை நினைத்தேன். அல்பிரட் அண்ணனின் மகள் மல்லிகாவையும் கார்க்கார இராயப்புவையும் நினைத்துப் பெரும் குரல் எடுத்து அழுதேன். என் அழுகை அங்கு புதினமாகப் பார்க்கப்படவில்லை. எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள்.

என் பின்புறமாகத் தோளில் ஒரு கை விழுந்தது. மறுகை என்னை ஆதரவோடு அணைத்தது, திரும்பினேன். ஒரு கறுப்பினப் பெண் பொலீஸ் அதிகாரி கருணை ததும்பும் விழிகளுடன் என்னைப் பார்த்தாள்."

(ப.230)

***************************


(May 26, 2023)


சென்னை

Wednesday, July 05, 2023

வசந்த முல்லையும், சுறாப்புட்டும்...


சென்னையில் ஒரு இரவு பயங்கரப் பசியில் இருந்தேன். கடைகள் எல்லாம் பூட்டும் தருவாயில் இருந்தன. ஓர் உணவகத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொண்டு போய், விடுதியில் ஆறுதலாக இருந்து சாப்பிடலாமென தீர்மானித்திருந்தேன். மெனுவைப் பார்த்தபோது சுறாப்புட்டு வசீகரித்தது. இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர அதுவரை இதைச் சாப்பிட்டதில்லை. கடைக்காரரிடம், அண்ணா ஒரு சுறாப்புட்டு பார்சல் என்று கூலாக் கூறிவிட்டுக் காத்திருந்தேன். இடையில் சந்தேகம் வர, இதனோடு சாப்பிட ஏதும் கிரேவி வேண்டுமா என்று கேட்டேன்; dry ஆகத்தான் இருக்கும், ஆனால் அப்படியே கூடச் சாப்பிடலாம் என்று அவர் ருசி காட்டினார்.


நான் காத்திருந்த சுறாப்புட்டு கையில் வந்தது. ஆனால் எனக்கு ஒரே அதிர்ச்சி. 300 ரூபாய் சுறாப்புட்டு ஒரு குட்டி டப்பாவில் தரப்பட்டது. நான் யாழ்ப்பாணத்து முட்டைப்பொறியல் பிரட்டித் தரும் புட்டைப் போல அல்லவா, இந்தச் சுறாபுட்டை எதிர்பார்த்திருந்தேன். திகைப்போடு கடைக்காரரிடம், "அண்ணா, சுறா இருக்கிறது, எங்கே புட்டு?" என்றேன். தம்பி இதுதான் சுறாப்புட்டு என்று அவர் அடம்பிடித்தார். எனக்கு அவ்வளவு கோபம். விஜய்தான் ‘சுறா’ என்று ஒரு படம் நடித்து எங்களை ஏமாற்றினார் என்றால், நீங்கள் புட்டுத்தராமல் சுறாப்புட்டு தந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கடைக்காரரைத் திட்டிவிட்டு இன்னொரு தெருக்கடையில் பரோட்டாவும், பன்னீர்க்கறியும் வாங்கிச் சாப்பிட்டு என் வயிற்றெரிச்சலைக் கரைத்துக் கொண்டேன்.

இப்படி சுறாப்புட்டோடு சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் சிங்காரச் சென்னையை காதலிகளை விடக் கூட காதலித்ததாலோ என்னவோ அடுத்த நாள்,'வசந்தமுல்லை' என்ற படம் பார்க்கப் போனேன். பகலில் சென்னை வெயில் சுட்டெரிப்பதால் மதியக்காட்சிக்கு ஏஸிக்குள் நிம்மதியாய் இருக்கலாம் என்பதும் படம் பார்க்கப் போனதற்கு இன்னொரு காரணம். ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாய் எதையாவது கற்கவேண்டும், அதுவரை தாண்டாத எல்லைகளைக் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊர்சுற்றுவதில் என்ன பயன். 'வசந்தமுல்லை'யின் டிரெயிலர் பார்த்தபோது ஒரு அமானுஷ்யப் படம் போலத் தெரிந்தது. நான் இப்படியான அமானுஷ்ய/பேய்ப் படங்கள் பக்கம் போவதில்லை. அவ்வளவு பயம். இம்முறை இப்பயத்தைக் கடந்து -புதுவிடயமொன்றைப் பயணத்தின்போது கற்பதற்காக- வசந்தமுல்லைக்குப் போனேன்.

படத்தின் தொடக்கக் காட்சி சத்யம் தியேட்டரில் நடக்கும். அது காட்சிப்படுத்தப்பட்ட சத்யம் தியேட்டரில்தான் நானும் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சண்டைக்காட்சி தியேட்டர் washroom இல் நடக்கும். எனக்குப் பிடித்த மசாலா 'டீ' எவ்வளவு இங்கே குடித்தாலும், இனி கழிப்பிடப் பக்கம் போவதில்லையென அப்போதே தீர்மானித்தேன். அநேகமாய் பேய் அங்கிருந்துதான் வெளிவரப் போகின்றதென்று இருக்கையை இன்னும் கைகளால் இறுக்கப் பிடித்தேன்.

அடுத்த காட்சி மூணாறிலோ
, இடுக்கியிலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மர்மமான சூழல். அதன் பின்னணியில் ஒரு பாடல் நன்றாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. மவனே/மவளே நீ எந்தப் பாலினப் பேயாக இருந்தால் என்ன, நானே இடுக்கியில் நள்ளிரவில் ஏலம் கள்ளமாகப் பிடுங்கத் தனியே போயிருக்கின்றேன். உன்னைச் சமாளிக்கத் தயார்' என்று வசந்தமுல்லையில் வரும் பேயைச் சந்திக்க அறைகூவல் விடுத்தேன். மனதுக்குள் வீர சபதம் எடுத்தது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணுக்கு எப்படிக் கேட்டதோ தெரியாது, "அண்ணா, நீங்கள் நம்ம சீமானின் விடீயோக்கள் தினமும் பார்ப்பீர்களோ" என்று கேட்டார். "இல்லையே, நான் காலையில் கண் விழிப்பதே, என் குரு நித்தியானந்தாவின் சொற்பொழிவுகளோடுதான்’ என்றேன். ‘அய்யோ, அது இன்னும் ஆபத்தானதே' என்று காலியான இருக்கை தேடி அடுத்த வரிசைக்கு அவர் எழும்பிச் சென்றுவிட்டார்.

எப்படா பேய் வரும் வருமென்று எதிர்பார்த்த எனக்கு, படம் முடியும்வரை பேயே வராதது சுறாப்புட்டில் புட்டு இல்லாதது மாதிரி ஏமாற்றமாக இருந்தது. அதுகூடப் பரவாயில்லை, தூக்கம் ஒழுங்காக இல்லாதுவிட்டால், சிந்திப்பது குழம்பும் என்று 5 நிமிடக் குறும்படத்தில் சொல்லவேண்டிய செய்தியை ஏன் 2 மணித்தியாலப் படத்தில் நீட்டித்துச் சொன்னர்களோ தெரியவில்லை.

இந்தத் துயரத்தை நண்பர் ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். வசந்தமுல்லைக்குப் போனபோது கூட பக்கத்து அரங்கில் தீபிகா படுகோனேயின் "பதான்" போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே தேசப்பற்று என் இரத்தத்தில் உயர் அழுத்தத்தில் இருப்பதால் பேய்ப்படம் பார்த்து, அதைக் கீழே இறக்கத்தான் வசந்தமுல்லைக்குப் போனேன், ஆனால் பேயைக் கண்ணில் காட்டவில்லை என அவருக்குச் சொன்னேன். அவரோ, நீ இலங்கைத் தமிழ்ப் பாடத் திட்டத்தில் 'வசந்தமுல்லை பந்தடித்தல்' என்ற காமக் கிறங்கல் பகுதியைப் படித்த ஞாபகத்தில் ஒரு செமி போர்ன் படத்தை எதிர்பார்த்து ‘வசந்தமுல்லை’க்குப் போயிருப்பாய், உன்னை வைத்து நன்கு செய்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு ஹா ஹா எனச் சிரித்தார். 

இறுதியில் ஒரு மோகினியை எப்படியோ  நான் சந்தித்துவிட்டேன் என்று அவருக்குச் சொல்லவில்லை.

 
************


(Feb 13, 2023)