கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 104

Wednesday, July 23, 2025


னது அண்ணாக்களில் மகன்கள் தொலைக்காட்சிகளில் விளையாட்டுக்கள் நிகழும்போது பார்ப்பதைவிட, ஒளிபரப்பாளர்கள் அந்த ஆட்டங்களின் பின் அதை அலசிக்கொண்டிருப்பதை சுவாரசியமாகப் பார்ப்பார்கள். நானும், அண்ணாவும் அவர்களின் இந்த pre/post game ஆய்வுகளை' எள்ளல் செய்து கொண்டிருப்போம். அந்தப் பாவமோ என்னவோ எனக்கும் அப்படியான ஒரு 'வியாதி' இப்போது வந்துவிட்டது.

இப்போது ஏதாவது திரைப்படம் வருகின்றதெனில் அந்த இயக்குநர்களின் நேர்காணல்களை காணொளிகளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பெரும்பாலும் அவர்களின் பேச்சுக்களில் இருந்து ஏதேனும் சுவாரசியமாக அறிந்துகொள்ள இருப்பின் அவர்களைக் காணொளிகளில் பின் தொடர்ந்து பார்க்க/கேட்கத் தொடங்கிவிடுவேன்.

பெரும்பாலும் அந்த இயக்குநர்களின் புதிய திரைப்படங்களை விட அவர்களின் பேச்சில் வெளிப்படும் கருத்துக்கள் எனக்குப் பிடித்துவிடும். கடந்தமாதம் கூட ஒரு தமிழ்ப்படம் வெளிவந்தபோது அந்த நெறியாளரின் நேர்காணல்களை ஒன்றுவிடாமல் கேட்டிருக்கின்றேன். அவரின் திரைப்படம் வெகுசனரீதியாக வெற்றியடைந்தபோதும் என்னை அந்த திரைப்படம் அவ்வளவாக கவரவில்லை என்பது வேறுவிடயம்.

இப்போதும் அப்படித்தான் இயக்குநர் ராமின் நேர்காணல் காணொளிகள் மீது ஈர்ப்பு வந்து கடந்த சில நாட்களகத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறான நேர்காணல்கள் என்பது அவர்களின் புதிய திரைபடங்களுக்கான விளம்பரப்படுத்தல்கள் என்கின்றபோதும், எனக்கு 'பறந்துபோ'வை உடனேயே பார்த்துவிடவேண்டும் என்ற எத்தனிப்பைத் தராதது வியப்பாக இருந்தது.

ஆனால் ராமின் நேர்காணல்களில் இருந்து நான் எடுத்துக் கொள்ள/நெருக்கம் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன என்கின்றபோதும், இதில் வேறொரு சிக்கலும் இருந்தது.

 
படத்துக்கான விளம்பரப்படுத்தல்களுக்கான நேர்காணல் என்பதால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட நேர்காணல் என்பதால் எல்லாவற்றிலும் பொதுவான தன்மைகள் இருந்தன. இதை நான் எழுத்தாளர் எஸ்.பொவும், ஜெயமோகனும் கனடாவுக்கு வந்தபொழுதும் கண்டிருந்தேன். அவர்கள் இங்கே தரித்து நின்ற நாட்களில் வெவ்வேறு இடங்களில் பேசியபோதும் அவர்கள் அன்றைய நிலைக்கேற்ற ஒரே விடயங்களைப் பேசியதைப் பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்திருக்கின்றேன். அதை அன்றைய காலங்களில் என் எழுத்தில் குறிப்பிட்டுமிருந்தேன். ஆக இது இயல்பாக எல்லோருக்கும் நிகழ்வதுதான போலிருக்கின்றது.

*
துவரை வந்த ராமின் திரைப்படங்களில் என்னைக் கவர்ந்தது அவரின் 'கற்றது தமிழே'. அதற்குப் பிறகு வந்த திரைப்படங்கள் என்னை கற்றது தமிழைத் தாண்டிக் கவரவில்லை. எல்லாப் படைப்பாளிகளுக்கும் அவர்களின் முக்கிய படைப்பைத் தாண்டி ஏதேனும் எழுதிவிட முடியும் என்ற எத்தனத்தில்தானே மற்றப் படைப்புக்களை எழுதிப் பார்க்க முயற்சிக்கின்றனர் அல்லவா?

ராமின் ஒரு நேர்காணலில் நான் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சிலரின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் கண்டு நொந்தேன் என்று சொல்லி, அதில் ஒன்றாக பெருமாள் முருகனின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தாலும் ராம், மிஷ்கின், வெற்றிமாறன், ரஞ்சித் போன்ற அரிதானவர்கள்களே தொடர்ச்சியாக வாசிப்புப் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் அவர்க்ள் எனக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நேர்காணல்களில் ராம், கே.ஆர்.மீராவின் 'யூதாசின் நற்செய்தி'யை அப்படி அள்ளியணைத்து பாராட்டுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவரது மதுரை அமெரிக்கன் காலேஜ் பேராசிரியர் பிரபாகர் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கின்றார். ராம் தனது திரைப்படப் பாத்திரங்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைப் பெயரிடுகின்றதார் என்பதால் 'கற்றது தமிழில்' ஜீவாவின் பாத்திரமான பிரபாகர் பெயர் இந்தப் பேராசிரியரின் பெயரின் நிமித்தமே வந்திருக்கக் கூடும்.

 
பதினைந்து வருடங்களுக்கு முன் தமிழ்த் திரைப்படங்களுக்கென்று 'காட்சிப்பிழை' என்றொரு சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியிடம் அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் எழுதும் பகுதி இருந்தது. ஒருமுறை என்னிடம் அவர்களிடம் எனக்குப் பிடித்த திரைப்படத்தைப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது 'கற்றது தமிழ்'. அந்தக் கட்டுரை 12 வருடங்களுக்கு முன்னர் வந்தபோது, அதை வாசித்த ராம் தனக்கு அது பிடித்ததாகச் சொன்னதாக அப்போது 'காட்சிப்பிழை'யின் பொறுப்பாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் சொல்லியிருந்ததும் நினைவில் இருக்கின்றது. பின்னர் நான் எழுதிய திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து 'உதிரும் நினைவின் வர்ணங்கள்' என்ற நூலை வெளியிட்டபோது, அதில் ஒரெயொரு தமிழ்த்திரைப்படமாக 'கற்றது தமிழை' மட்டுமே சேர்த்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைக்க சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.


ராம் 2000களின் தொடக்கத்தில் இருந்தபோது ஒரு வலைப்பதிவொன்றைத் தொடங்கி (காட்சி?) அவரோடு அப்போது நெருக்கமானவர்களை எழுத வைத்திருந்தார்கள். அப்போது ஈழப்போர் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றியும், அது அரசியலாக்கப்பட்ட அவலம் பற்றியும் சிறந்ததொரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் எழுதி எழுதி படைப்பாளிகளாக பின்னாள் மாறியவர்கள் என்று மாரி செல்வராஜ், யமுனா ராகவன் (பிரியா விஜயராகவன்), கார்த்திக் நேத்தா, சாம்ராஜ் என்ற பலரின் எழுத்துக்கள் இன்னமும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றது.

அந்தவகையில் ராம் தனக்குப் பின் இயக்குநர்களை மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் உருவாக்க முயன்றிருக்கின்றார்கள் என்பது முக்கியமான விடயம். இன்றைக்கு கற்றது தமிழ் வெளிவந்து 18 வருடங்களான பின், ஐந்து திரைப்படங்கள் மட்டுமே பொதுவெளிக்கு வந்தும், ஒரு இயக்குநராக ராம் தனக்கான ஓர் இடத்தை, உருவாக்கி வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் கொஞ்சக்காலம் திரைப்படங்கள் வராவிட்டாலே படுகுழிக்குள் இறக்கி மண்ணை மூடிவிட்டு போகும் அவசரமும் பொறாமையும் நிறைந்ததெனச் சொல்லப்படுகின்ற திரையுலகில் தன்னியல்பிலே ஒரு நெறியாளர் நிமிர்ந்து நிற்பது என்பது ஒருவகையில் சாதனைதான்.

காட்சிப்பிழையில் வந்த 'கற்றது தமிழ்' கட்டுரையை இவ்வாறாக முடித்திருப்பேன்:

"பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர, பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க் இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன.

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம். எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்."


எனக்கென்னவோ ராமின் பிறகு வந்த திரைப்படங்களின் முக்கியபாத்திரங்களிலும் கூட, இவ்வாறான ஒத்ததன்மைகளே உள்ளோடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றுகின்றது.

*************

 

(Jul 10,2025) 

எனது புதிய இணையத்தளம் - www.elankodse.com

Monday, July 21, 2025

 

நண்பர்களுக்கு வணக்கம்!

 

எனது புதிய தளமான  www.elankodse.com இல் எனது ஆக்கங்களை இனி நீங்கள் வாசிக்க முடியும்.

 

நன்றி. 

****

கார்காலக் குறிப்புகள் - 103

Tuesday, July 15, 2025


ண்பரொருவரின் இன்னமும் வெளியிடப்படாத புனைவொன்றை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருந்தேன். இதை வாசித்த நாட்களில் எனக்குள் பிரான்ஸிஸ் கிருபாவே நிரம்பியிருந்தார். பிரான்ஸிஸ்ஸின் 'கன்னி'யில் உளவியல் பிறழ்வுக்குள்ளான பாண்டியை வீட்டு மரத்தடியில் கட்டி நீண்டகாலம் வைத்திருப்பார்கள். ஒருவகையில் அது அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வென்றால், பிரான்ஸிஸ்ற்கு பின்னர் நிகழ்ந்தது ஒரு மீட்சிதான்.

அந்த மீட்சியின் போதுதான் பிரான்ஸிஸ் 'கன்னி'யை எழுதியிருக்கின்றார். எல்லோருக்கும் இப்படியொரு உளவியல் மீட்சி' எளிதில் கிடைப்பதில்லை. அப்படி மீட்சியடைந்தவர்களும் அதை எழுத்தாகப் பதிவு செய்திருப்பார்களா என்று தேடினால் அவர்கள் அரிதாகவே தென்படுவார்கள். எனக்கென்னவோ பிரான்ஸிஸ்ற்கு கிடைத்த அந்த தற்காலிக மீட்சி என்பதே, அவர் கடந்துவந்த வாழ்க்கையை எழுத்தாக நம் முன் வைப்பதற்காகத்தானோ என்றுகூடத் தோன்றுவதுண்டு.

எனது குழந்தை/வளரிளம் பருவம் போருக்குள் கழிந்திருக்கின்றது. ஆனாலும் அவ்வாறில்லாது இயல்பாக சூழ்நிலைக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று நினைத்த பலரின் குழந்தைப் பருவங்கள் பல்வேறு மனவடுக்களுக்குள் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றேன். கிரிஷ் எழுதிய 'விடுபட்டவை'யில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் பதின்மத்தில் மனவடுக்குள் போவதைப் போல, நான் வாசித்த -இன்னமும் பிரசுரமாகாத நாவலிலும்- வரும் முக்கிய பாத்திரமான ஆண் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றான். அது அவனது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இந்தப் புனைவின் பெரும்பகுதி.

பெண் குழந்தைகளைத்தான், குழந்தைகளாக வளர்ப்பது நம் சூழலில் கடினமென்று நினைத்தால், ஆண் குழந்தைகளும் இப்படி பாலியல் பலாத்காரங்களுக்குள்ளால்தான் வளர்கின்றார்கள் என்று நினைக்கும்போது மூச்சுமுட்டுகின்றது. அவ்வாறான உளவியல் சிக்கல்களுக்குள் இருப்பவர்களோ அல்லது அதைத்தாண்டி வருகின்றவர்களோ பொதுவெளியில் இவை குறித்துப் பேசும்போது, நாம் அவர்களுக்கு ஏதேனும் 'அடையாளத்தை'யோ/காரணங்களையோ சுமத்திவிட்டு எளிதில் தப்பிவிடுகின்றோம்.

 
மேலும் பொதுச்சமூகத்தைக் கொஞ்சம் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, இவ்வாறு பெண்/ஆண் என்று வேறுபாடில்லாது பலரின் வெகுளித்தனமான உலகைச் சிதைக்கின்றவர்களாகவும் எழுத்தாளர்கள்/கலைஞர்கள் இருக்கும்போது இன்னும் அச்சமடைய வேண்டியிருக்கின்றது. கலை என்பதே சகவுயிர்கள் மீதெழும் அக்கறையின் பாற்பட்டதெனில், கலைஞர்கள் எவ்வாறு இவ்வாறு இருக்க முடிகின்றதென்பது அடிநாதமாக ஒலிக்கக்கூடிய அறம் சார்ந்த ஒரு கேள்வி.

இவ்வாறான படைப்பாளிகள் மீது தீங்கிரைக்கானவர்கள் (Victims) குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது நாம் அவர்களின் குரல்களை தொடக்கத்திலேயே கலையின் 'பரிசுத்த ஆவியின்' பெயரால் அடக்கிவிடவும் எத்தனிக்கின்றோம். அப்படியாயின் இந்த தீங்கிரைக்கானவர்கள் எப்போதுதான் அவர்களுக்கான மீட்சியைப் பெறுவது? அவர்கள் தாம் இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று மனந்திறந்து பேசும்போதல்லவா, குறைந்தபட்சம் அவர்களின் நெஞ்சை அழுத்தும் மனவடுக்களின் பாரங்களிலிருந்து விடுதலையடைய முடியும்? 

 
ஆனால் அந்த சுதந்திரமான வெளிகளைக் கூட அவர்களுக்குக் கொடுக்காது, நமக்கான சார்புகளில் நின்று நாம் தீர்ப்புக்களை வழங்கத் தயங்காத 'மகாத்மா'க்களாக விடுகின்றோம். இவ்வாறு இருப்பதால் எவருக்கும் எந்தப் பயனும் கிடைப்பதில்லை என்கின்றபோதும், நமக்கு இப்படியான ஓர் அடையாளம் வேண்டியிருக்கின்றது. ஆனால் அது தீங்கிரைக்கானவர்களை எந்தளவு இன்னும் மோசமாகப் பாதிக்கும் என்பதை அறியாமலே நாமும் மேலும் தீங்கிழைப்பவர்கள் ஆகிவிடுகின்றோம்.

நண்பரின் இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில், அவ்வப்போது இடைவெளி எடுத்தே வாசிக்க வேண்டியிருந்தது. அந்தளவுக்கு கனமான, நான் கற்பனை செய்யாத உலகம் அது. இப்படி உளவடுக்களால் நிரம்பிய ஒரு புனைவை வாசிக்கின்றேன் என்றபோது இன்னொரு நண்பர், 'மற்றவர்களின் அனுபவங்களுக்குள் நுழையாமல் இருப்பதென்பது எம்மைப் போன்றவர்களுக்கு மிகுந்த சவால் மிக்கது. நீங்கள் இவ்வாறான கதைகளை வாசிக்கும்போது அதிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளும் வெளிகளை உருவாக்கி வைத்திருத்தல் அவசியம்' என்றார். உண்மையில் அது கடினமானது என்றாலும், அப்படியிருத்தலும் அத்தியாவசியமானது என்றே நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இந்தக் கதைகள் மிகுந்த மனப்பாரத்தைத் தந்து எங்களை வேறொரு சுழலுக்குள் அழைத்துச் சென்றுவிடவும் கூடும்.

நீங்கள் அருகில் இருக்கின்றவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அதை மீறி கண்களுக்குத் தெரியாத இன்னொரு ஒரு உருவம் உங்களோடு விடாது பேசிக் கொண்டிருக்கின்றது. அந்த மாயக்குரல் இப்படிச் செய் அப்படிச் செய் என்று விபரீதமான விடயங்களைச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடும்போது உங்களால் என்ன செய்ய முடியும்? மேலும் எதிரே இருப்பவர் பேசுவதைத் தாண்டி, இந்தக் குரல் தீர்க்கமாக ஒலித்தால் எந்தக் குரலில் உங்கள் கவனம் குவியும்?

இப்படித்தான் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, அவ்வப்போது அது தற்சாவின் விளிம்புகளுக்கு அழைத்துச் செல்கின்றதுமாக, சிலருக்கு வாழ்க்கை அமைந்துவிடுகின்றது என்பதுதான் எவ்வளவு துயரமானது. மேலும் எல்லோருக்கும் மீட்சியோ/மீளுயிர்ப்போ அவ்வளவு எளிதில் வாய்த்து விடுவதுமில்லை.

***********

 

ஓவியம்: வின்சென்ட் வான்கோ 

(July 03, 2025) 

 

 

கார்காலக் குறிப்புகள் - 102

Monday, July 07, 2025

 

ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது

****

நான் எனது பதினாறாவது வயதில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்குக் கற்பித்த தமிழாசிரியரின் தந்தையார் காலமாகி இருந்தார். அவரே எங்கள் வகுப்பாசிரியர் என்பதால் நாங்கள் முழுவகுப்பாக அவரின் வீட்டுக்குப் போயிருந்தோம். ஆசிரியர், கதைகளை எழுதும் ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் தனது தந்தையைப் பற்றிய ஒரு கதையை உருக்கமாக எழுதினார். அது அன்று கொழும்பில் இருந்து வெளிவந்த 'சரிநிகர்' பத்திரிகையில் வெளியாகியது. எனக்கு இதன் பின்னணி தெரிந்திருந்தாலும் இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தாலும், இதை அறியாத ஒருவருக்கு அது மிகச்சிறந்த ஒரு புனைவாகத் தெரிந்திருக்கும்.

ஒரு தனிப்பட்ட அனுபவத்தை எப்படி தந்தையர்களை இழந்த எல்லோருக்கும் பொதுவான அனுபவமாக மாற்றமுடியுமென்ற ஒரு திறப்பை அந்த எழுத்து என் பதினாறாவது வயதில் தந்திருந்தது. அதுவரைக்கும் நான் வாசிக்கும் கதைகள் எல்லாம் தொலைவில் நடப்பதாகவும், நடந்து முடிந்துபோனவையாகவும் இருந்ததாக் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.

எனது தமிழாசிரியராக இருந்தவர் இரவி. அவரின் தந்தையான அருணாச்சலம் காலமானதை புனைவாக எழுதி அந்தத் துயரைக் கடந்திருந்தார். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு இப்படி இருக்க முடியுமா என்பதை (அது யதார்த்ததில் எப்படி இருந்தாலும்) எனக்கு ஒருவகை புல்லரிப்பை ஏற்படுத்தியிருந்தது. என் நினைவு சரியானால், அது அப்பா என்கின்ற பெயரில் வெளிவந்திருக்க வேண்டும். இம்முறை இரவி அருணாச்சலத்திற்குத்தான் புனைவிற்கான கனடாவின் 'இயல் விருது' வழங்கப்படுகின்றது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்!
*

இப்படி வேறுவகையான  ஓர் இழப்பைச் சொல்வதற்கு, வ.அ.இராசரத்தினம் 'ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது' என்கின்ற நெடுங்கதையாக எழுதியிருக்கின்றார். வ.அ.இராசரத்தினம் அவரது மனைவியான லில்லியை, தனது 50 ஆவது வயதில் இழக்கின்றார். லில்லிக்கு அப்போது 40களின் மத்தி. அவ்வளவு எளிதில் ஓர் அடையாளங்காண முடியாத நோயால் லில்லி சென்.அந்தோனியார் பாடசாலையில் அதிபராக இருக்கும்போது இறந்துவிடுகின்றார். ஓரிடத்தில் மட்டும் விசர் நாய் கடி காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

வ.அ.இராசரத்தினம், 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' என்கின்ற குறுநாவலை வீரகேசரியில் தொடராக எழுதுகின்றார். அதில் மனைவியின் மரணத்தோடு அவர்கள் இருவரினதும் வாழ்க்கையை நினைவுகூர்கிறார். லில்லி ஒரே ஊராக இருந்தாலும், இரு குடும்பங்களுள்ளும் இருந்த ஈழஅரசியல்(?) வித்தியாசங்களாலும் திருமணம் முடிக்கமுடியாதிருக்கின்றது. இறுதியில் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் இரகசியமாகப் பதிவு திருமணம் செய்யலாம் என்கின்ற முடிவை, தேவாலயப் பாதிரியார் நீங்கள் இருவரும் திருமணம் செய்யும் வயதுக்குரியவர் என்று திருமணம் செய்து வைக்கின்றார்.

லில்லியிடம் தனது சம்பளப் பணத்தைக் கொடுப்பதைத் தவிர குடும்பம்/பிள்ளைகளிடம் நடப்பது எதுவு தெரியாத ஓர் எழுத்தாளராக இராசரத்தினம் இருக்கின்றார். அவர்கள் தங்களுக்கென்று கட்டுகின்ற வீட்டைக் கூட லில்லியாலே கட்டப்படுகின்றது. அதேவேளை லில்லிக்கு தனது கணவர் எழுத்தாளர் என்கின்ற பெருமை இருக்கின்றது. அவர் எழுதுகின்றபோது, அவரின் பிள்ளைகளை அண்டவிடாது மட்டுமில்லை, அவருக்கு வேண்டிய தேநீரையும், சிகரெட்டுக்களையும் எடுத்துக்கொடுக்கின்ற கனிவான துணையாகவும் இருக்கின்றார்.

அந்தக்காலத்திலேயே லில்லி அதிபராக கற்பிக்கின்ற பாடசாலையிலே, இராசரத்தினம் படிப்பிகின்ற ஓர் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்(?). தனது மனைவியின் கீழ் வேலை செய்ய இந்தக்காலத்து ஆண்களே தயங்குகின்றபோது இராசரத்தினம் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கின்றார். அதுமட்டுமின்றி இவரது நூல்கள் வெளிவருவதற்கு எங்கேயோ எல்லாம் கடன்வாங்கி புத்தகங்களைப் பதிப்பிகின்ற வைக்கின்றவராகவும் லில்லி இருக்கின்றார். லில்லி மரணமடைகின்ற ஆண்டு 1975. ஆக இவையெல்லாம் 75 இற்கு முன்னராக நிகழ்ந்தவை.

லில்லிக்கு அழகிரிசாமி பிடித்த எழுத்தாளர். இவர்கள் வீடுகட்டி புதுமனைப் புகுதலின்போது உறவுக்காரர்கள் உங்களிடமிருக்கும் பெறுமதி வாய்ந்த பொருட்களை வீட்டுக்குள் கொண்டுவாருங்கள் என சொல்கின்றார்கள். இராசரத்தினமோ தனக்குப் பிடித்தமான சிலப்பதிகாரத்தையும், மு.தளையசிங்கத்தின் 'புதுயுகம் பிறக்கிறது' நூலையும் வீட்டுக்குள் முதன்முதலாகக் கொண்டுவருகின்றார். வந்திருந்த உறவுக்காரர் கோபிக்கின்றனர். லில்லியோ அவரின் பித்து அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகங்களோடு நீங்கள் எழுதும் பேனாவையும் சேர்த்து வைத்துக் கொண்டு வாருங்களென சிரித்தபடி சொல்கின்றார்கள். அந்தளவுக்கு லில்லி தனது கணவரைப் புரிந்துகொண்ட துணையெனலாம்.

மரணச் செய்தி அறிந்து அன்றைய பிரதியமைச்சராக இருந்த மஜித், எஸ்.பொ(ன்னுத்துரை)வைக் கூட்டிக்கொண்டு வருகின்றார். எப்போதும் கலகலப்பாகப் பேசும் எஸ்.பொ, இவரை அணைத்துக்கொண்டு 'மகாமாசன' அமைதி காக்கின்றார். எஸ்.பொவை கட்டியணத்தபடி 'நீ அறிந்த எழுத்தாளன் இறந்து போய்விட்டான்' என்று கதறுகிறார் வ.அ.இ! அந்தளவுக்கு லில்லி அவரின் எழுத்துலக வாழ்க்கையின் பின்னிப்பிணைந்தவராக இருந்திருக்கின்றார்.

இறுதியில் லில்லியை உறவுகளும், பாடசாலைச் சமூகமும் பெரியளவில் பிரியாவிடை கொடுக்கும்போது, 'வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளன் செத்துப்போனான் என்று சொன்னேன் அல்லவா? அவன் சாகவே மாட்டான், ஏனென்றால் ஒரு காவிய நாயகியாக இடம்பெற்ற லில்லியின் கதையை அவன் எழுதவேண்டும்' என்று அருகில் நின்ற எஸ்.பொவிடம் உணர்ச்சியோடு இராசரத்தினம் சொல்கிறார்.

ஒரு பகல் முழுக்க மகாமசான அமைதியைக் கடைபிடித்த எஸ்.பொ, அவரின் முதுகில் தட்டி, 'ஆ. அதுதான் சரி. நீ மட்டும் எழுத்தை மறந்தாயானால் அத் உன்னை எழுத்தாளனாக வளர்ந்துவிட்டவளுக்கு நீ செய்யும் துரோகமாகவே இருக்கும்' என்கிறார்.  அதுவே என் 'காவிய நாகிக்கு' என லில்லிக்கு காணிக்கை செய்த 'ஒரு காவியம் நிறைவுபெறுகிறது' குறுநாவலாக வெளிவருகின்றது.

இந்த குறுநாவல் மிகச்சிறியதுதான். ஒரு எழுத்தாளத் தம்பதியினரின் சிறுபகுதியைச் சொல்வதுதான். ஆனால் இப்போது 50 வருடங்களான பின்னும் இதை வாசித்து முடிக்கும்போது மெல்லிய துயரம் எனக்குள் படிந்துகொள்கின்றது. லில்லி இன்னும் கொஞ்சக் காலம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் என்றாலும், நாம் கடந்துபோகும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவராக இல்லாது, லில்லியை காலத்தில் மறந்துபோகாது ஒருவராக இராசரத்தினம் எழுத்தின் மூலம் ஆக்கியது முக்கியமானது . அநேகமாக எழுத்தாளர்களின் மனைவிமார்கள்தான் தமது கணவர்களின் மரணத்தை முன்வைத்து பிறகாலத்தில் எழுதியிருக்கின்றார்களே தவிர, ஓர் எழுத்தாளன் தன் மனைவி குறித்து இப்படியெழுதியது என்பது தமிழுலகில் அரிது. ஆகவே இந்த நூல் தனித்துவமானது என்று கூடச் சொல்லலாம்.
*
எஸ்.பொ(ன்னுத்துரை), சண்முகம் சிவலிங்கம் போல, பிற்காலத்தில் இராசரத்தினமும் அவரின் மகளையும் மருமகனையும் இந்த யுத்தத்தில் காவு கொடுத்திருக்கின்றார். தந்தையர்கள் உயிரோடு இருக்க, பிள்ளைகள் இளவயதில் மரணமாவது என்பது கொடுமையானது. இவர்கள் அனைவருமே அந்தத் துயரங்களோடே தொடர்ந்து தமது இறப்புக்கள் வரை விடாது எழுதியவர்கள் என்பதால் இவர்களின்பால் இன்னும் நெருக்கம் கூடுகின்றது.

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட வ.அ.இராசரத்தினம் 90இல் மூதூரை இலங்கை இராணுவப்படை கைப்பற்றியபோது உள்ளூரில் அகதியாகப் இடம்பெயர்ந்தவர். பிறகு அவரின் வீட்டுக்குத் திரும்பியபோது அவர் சேகரித்த நூல்கள், அவர் எழுதி பதிப்பிக்காத பல்லாண்டுகால பத்திரிகை ஆக்கங்கள் உள்ளிட்ட அவர் நடத்திய மூதூரில் நடத்திய பதிப்பகம் அனைத்துமே அரச படைகளால் தீக்கிரையாக்கபட்டிருந்ததன. ஆனால் எழுத்தின் மீதான ஓர்மம் குன்றாது அப்போது 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' என்ற நாவலை எழுதியவர்.

அதன் முன்னுரையில், 'நான் பிறந்த மண்ணில், தந்தையும் தாயும் மகிழ்ந்த குலாவிய அத்திருவிடத்தில், இனிப் போய் வாழவே முடியாதோ? என்ற கேள்விக்குறி கொக்கியாய் வளைந்து என் இதயத்தைக் கொழுவி வளைத்து வதைத்தது. அந்த வாதையில் ஒரு காலத்தில் மூதூர்ப்பட்டினத்திற் தமிழர்களும் வாழ்ந்தார்கள்; முஸ்லிம் மக்களோடு சகோதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான சரித்திரச் சான்றாக அமையவேண்டும் என்ற குறிக்கோளுடன் 1990ம் ஆண்டு மார்கழியில் திருகோணமலையில் வைத்து இந்நாவலை எழுதி முடித்தேன்' என்று சொல்கிறார். மேலும் 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதான சங்க இலக்கியங்கள் மூலமாகத்தானே நாம் அந்தக் காலத்து மக்கள் வாழ்க்கையை இன்று அறிகின்றோம். அதுபோலவே இந்த நாவலும், என் ஊரைப்பற்றி இனி வரும் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லும் ஒரு சரித்திர ஆவணமாக இருக்கும்' என்று எழுதிச் சொல்கிறார்.

நாம் லில்லி என்கின்ற அருமையான பெண்மணியைப் பற்றி 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' குறுநாவலிலும், 'மண்ணிற் சமைந்த மனிதர்கள்' நாவல் மூலமாக மூதூர்ப் பட்டினத்தில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாழ்க்கையையும் விரிவாக அறிந்துகொள்கின்றோம். எழுத்து என்பது ஒருவகையில் மனிதர்களை அவர்களின் வாதைகளிலிருந்து ஆற்றும் வடிகாலாகவும், இன்னொருவகையில் அதிகாரத் தரப்புக்களால் வரலாற்றில் இருந்து எளிதில் அகற்றமுடியா ஆவணமாக மாறிவிடும் விந்தையையும் செய்து விடுகின்றது.

************

 

( Jun 27, 2025)

ஒரு சந்திப்பு - இளவரசி

Friday, July 04, 2025

 

 அபூர்வமான சந்திப்புகள் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காமலே நடக்கும்
மதிற்பிற்குரிய எழுத்தாளர் Elanko DSe அவர்களின் சந்திப்பும் அவ்வாறே. அவருடைய ஆழமான,  பகடியான சமகால எழுத்துக்கள் எப்போதும் எனக்கு பிடித்தமானவை.


தோழைமையோடு வந்திருந்தவர் அவருடைய இரண்டு புத்தகங்களை “தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ” புத்தகங்களை கையளித்து அம்பை,  சூடாமணி,  எஸ் ரா  என உரையாடல் நீண்டது. 


நானும் மொன்றியல் எழுத்தாளர்கள் நடராசா அம்மா & வீணை மைந்தன் ஐயாவின் புத்தகங்களை வாசிக்க கொடுத்தேன். 


அத்தி பூத்தார் போல் நடக்கும் இது போன்ற புத்தகம் ,எழுத்து உலக மனிதர்களோடு உரையாடல் உள்ள நிறைவை அளிப்பது போல் அன்றாடம் அமைவதில்லை.


10 வயதேயான எனது மகனோடு சதுரங்கம் ஆடி சென்றபின்  அவருடைய புத்தகங்களை காட்ட “wow amazing cover and opt size for reading ” என சட்டென உதிர்த்தான் வார்த்தைகளை .. மகனின் முதல் விமர்சனம். 

 

தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ”  வாசிப்பு பயணம் முடித்து எனது அனுபவம் பகிர்கிறேன்.

 

நன்றி: இளவரசி இளங்கோவன்

கார்காலக் குறிப்புகள் 101

 இனி (ஒரு விதி செய்வோம்)

****

எஸ்.பொ(ன்னுத்துரை)வின் 'இனி' என்ற நூலை திருப்பவும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இது வெளியாகியபோதே சுடச்சுட வாசித்திருக்கின்றேன். எனக்கு மிகப் பிடித்த நூல், ஆனால் யாரோ என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் அது தொலைந்து போய்விட்டிருந்தது. நிறையக் காலம் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அதை வாசிக்கக் கிடைத்தது.


'இனி' என்கின்ற இந்தநூல், ஒருவகையில் எஸ்.பொவின் கடந்தகால இருப்பைச் சொல்லும் அல்புனைவு எழுத்துக்களாலும், நேர்காணல்களாலும், அவருக்குப் பிடித்த அறிக்கைகளாலும் நிரம்பிய தொகுப்பு . ஒருவகையில் எஸ்.பொ இதுதான் தானேன இலக்கிய வெளியில் தன்னை அறிக்கையிட்ட நூலெனவும் எடுத்துக் கொள்ளலாம். இது வெளியிடப்பட்ட ஆண்டு 2000 ஆவணி. அடுத்தடுத்த மாதங்களில் எஸ்.பொ, 'புலம்பெயர்ந்தோரோ இனி தமிழ் இலக்கியத்தை வழி நடத்துவர்' என்கின்ற இலக்கிய சுவிசேஷத்தோடு பல்வேறு நாடுகளில் பயணித்துக் கொண்டிருந்தவர். அப்படி புறப்பட்ட அந்த இலக்கியப் பயணி கனடாவில் கால் வைத்தபோதுதான் நான் அவரை நேரடியாக முதன்முதலாகச் சந்தித்தேன்.

எஸ்.பொவைச் சந்திக்கமுன்னரே அவரின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பை வாசித்திருந்தேன். என் பதின்ம வயது வாசிப்பை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட இரண்டு நூல்களில் ஒன்று 'ஜே.ஜே.சில குறிப்புகள்; மற்றது 'ஆண்மை'. இரண்டையும் தற்செயலாக ஒரேநேரத்தில் வாங்கி வாசித்திருந்தேன்.

எஸ்.பொவைச் சந்தித்த காலத்தில்தான் 'காலச்சுவடு', தமிழினி-2000 என்கின்ற இலக்கியப் பெருநிகழ்வை நடத்தியிருந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு பெருநிகழ்வு தமிழக-ஈழத்து-புலம்பெயர் எழுத்தாளர்களைக் கொண்டு நடத்தபட்டதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. அது சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் அன்பின்பால கூட்டிணைந்த கூட்டம். ஒரு பெரு நிகழ்வு நடந்தால் அதற்கு எதிர்ப்பில்லாது, உலகில் எங்கேனும் இலக்கியம் உண்டா என்ன? 'நிறப்பிரிகை'யினர் அ.மார்க்ஸின் தலைமையில் 'தமிழினி என்கின்ற கும்பமேளா' என்று அறிக்கைவிட்டு இந்நிகழ்வைப் புறக்கணித்தனர். இதற்கிடையில் தனித்த ஒநாயாக (lone wolf), சு.ராவோடு ஒத்தோட முடியாமலும், நிறப்பிரிகையோடு இணையவும் முடியாமல் ஜெயமோகன் தனித்து ஓடிக்கொண்டிருந்தார்.

எஸ்.பொ அந்த வருடத்திலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்து இலக்கிய ஊழியத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.எஸ்.பொவால் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் சரியாக அடையாளங்கண்டு கொள்ள முடிந்திருக்கின்றது. எம்மிடையே பேசும்போது, இப்போது மலையாளப் பின்னணியில் வந்த ஜெயமோகன் நல்லாய் எழுதிக் கொண்டிருக்கின்றார் எனச் சொன்னார். அப்போது ஜெமோவின் 'விஷ்ணுபுரம்'வந்து நேர்/எதிர்மறையான எல்லா விமர்சனங்களையும் அது சந்தித்துக் கொண்டிருந்தது. அப்படி தன்னுடைய எழுத்துலக வாரிசாக  தற்போது பிரான்ஸில் வசிக்கும் கலாமோகனைச் சொல்லியிருக்கின்றார். பின்னாட்களில் வேறு சிலரையும் எஸ்.பொ வாரிசுக்களாக அறிவித்திருந்தார். அது அவரின் மூப்பின் காரணமாக வந்த தனிமையில் அவரோடு நெருங்கியிருந்த சிலர் மீது வைத்த அன்பின் காரணம் என்பதால் அந்த 'வாரிசு'க்களை நாம் இப்போதைக்கு மறந்துவிடலாம்.

இந்த 'இனி: ஒரு விதி செய்வோம்' என்கின்ற நூலை ஒவ்வொரு தசாப்தங்களாக எஸ்.பொ பிரித்திருக்கின்றார். '70களில் எஸ்.பொ' என்கின்ற பகுதியில், அவரின் பிரசித்த பெற்ற அறிக்கை இருக்கின்றது. 70களில் இடதுசாரி சார்புள்ள சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு, வெளிநாட்டு உற்பத்திகள் பலவற்றுக்கு தடை விதித்தது. அதில் ஒன்று இந்தியாவிலிருந்து வெளிவந்த புத்தகங்கள்/சஞ்சிகைகளுக்கான தடை. இந்தத் தடையை எந்தந்த வகையினர் எவ்வாறு ஏற்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்று எஸ்.பொ ஓர் அறிக்கையை 100 பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கின்றார். இது அன்றைய காலத்தில் (1972), 'எஸ்.பொ அறிக்கை' என்ற பெயரில் 124 பக்கங்களில் தனி நூலாகவும் அச்சிடப்பட்டிருக்கின்றது.

இது மட்டுமில்லை, இந்த தொகுப்பில் இல்லாவிட்டலும், கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 'இஸ்லாமும் தமிழும்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். ஏதோ ஒரு சச்சரவின் நிமித்தம் மூன்றோ/நான்கோ நாளில் 100 பக்கங்களுக்கு மேலாக நீளும் எழுதி இஸ்லாமிய வாலிபர் இயக்கம் இதை வெளியிட்டிருக்கின்றது. என்ன சர்ச்சை என்பது ஒருபுறம் இருக்க, ஒருவகையில் அந்நூலை வாசிக்கும்போது எழுபதுகளில் இஸ்லாமிய (முஸ்லிம்) இலக்கியம் குறித்து நாம் அறியும் ஓர் ஆவணமாக இன்று அது திகழக் கூடும். இவ்வாறு எஸ்.பொ அவருக்குரிய சர்ச்சைகளுடன், ஓர் முழுமையான ஆளுமையாகத் திகழ்ந்திருக்கின்றார்.

அதனால்தான் இந்த நூலில், '80களில் எஸ்.பொ' என்ற பகுதியில் கலாமோகனோடு ஓர் நீண்ட நேர்காணலை நிகழ்த்துகின்றார். அது எஸ்.பொவுக்கு அன்றிருந்த இலக்கிய நிலைப்பாட்டை மட்டுமின்றி, அவருக்கு ஈழத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டம் குறித்து என்ன கருத்திருந்தது என்பதையும் பதிவு செய்கின்றது. ஆனால் 80களில் இருந்த எஸ்.பொ, 2000களில் இருக்கவில்லை. அவருக்குள் எப்போதும் தமிழ்த்துவக் கனல் எரிந்துகொண்டிருந்தபோதும், பிற்காலத்தில் 'விடுதலை வெறி'யர்களை நேசிக்கும் ஒருவராக அவர் மாறிவிட்டிருந்தார்.

அதை எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும், அருமையான குறுநாவலாக இருக்கும், போராளியாக இருந்து அகாலமான அவரின் மகனின் மித்தியைப் பற்றி நனவிடைதோய்ந்து எழுதிய கதை-15இல் நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோலவே இந்த நூலின் பின்னட்டையில் அவர் சேர்த்திருப்பது அவரது மகன் போராளியாக களத்தில் ஆயுதங்களோடு அவரின் தோழர்களோடு நிற்கின்ற புகைப்படத்திலும், எஸ்.பொ வந்து சேர்ந்த பாதையைக் காணலாம்.

அதன்பிறகு '90களில் எஸ்.பொ' பகுதியில் அவர் தமிழக/புலம்பெயர்ந்த சஞ்சிகைகளுக்குக் கொடுத்த நேர்காணல்கள். இந்த நூலில் நான் மீண்டும் வாசிக்கும்போது தவிர்த்த பகுதி அதுதான். என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்கு எவரின் நேர்காணல்களும் சுவாரசியம் தருவதில்லை. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய வேண்டுமெனில், ஒரு நேர்காணலே போதுமென நினைப்பவன். அதற்குப் பிறகு அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து 'சொன்னதையே திருப்பிக் கூறுகின்றனர்' என்று எளிதாக கண்டுகொண்டுவிடுவேன். மற்றும்படி ஒரு படைப்பாளி தன் (புனைவல்லாத) கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனில் எழுதி விட்டுப் போய்விடலாம் என்பதே என் கருத்து. ஆகவே எனக்கு எஸ்.பொவை அறிந்துகொள்ள கலாமோகன் அவரை 80களில் கண்ட ஒரு நேர்காணலே போதுமாக இருந்தது.

இந்நூலின் இறுதிப்பகுதியான 'புத்தாயிரம் நோக்கிய உரத்த சிந்தனைகள்' எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று. இதில் எஸ்.பொ, அன்று 'கணையாழி'யில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. 'தமிழ்த்துவம்: ஒரு புரிதல்', 'தேவை: உண்மையான உபாசகர்கள்', இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்' என்று பல சுவாரசியமான இன்றும் உரையாடல்கள் அமைக்கக்கூடிய கட்டுரைகள் இருக்கின்றன.
 

இந்த நூல் வெளிவந்து 25 வருடங்கள் ஆன பின்னும், இன்னும் காலத்தில் உறைந்துபோய் விடாமலும், அதே வேளை ஒரு காலகட்டத்தை ஆவணப்படுத்துவதாக இருக்கின்றதும் கவனிக்கத்தது.

எஸ்.பொ, பிரமிள், மு.தளையசிங்கம் போன்றவர்கள் புனைவில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தினாலும், அதேயளவுக்கு நிகராக அல்புனைவிலும் தமது எழுத்தின் திசைகளை விசாலித்தவர்கள். அதனால்தான் இவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள்/வசைபாடல்கள்/கீழிறக்குதல்கள் இருந்தாலும், எந்த ஓர் இலக்கிய தரப்பாலும் எளிதில் நிராகரிக்க முடியாதவர்களாக அவர்கள் விகாசித்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

***********

 

( Jun 25, 2025)

‘வன்னி’ கிராபிக் நாவலை முன்வைத்து

Monday, June 30, 2025

 

 Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict  

 by Benjamin Dix & Lindsay Pollack

 

1.

வன்னி' (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்ததைப் பற்றிப் பேசுகின்றது. செம்பியன்பற்றில் சூனாமியால்  2004 இல் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி,விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை போவதுவரை இந்த நூல் விவரிக்கின்றது.

 

இதைக் கதையாக எழுதிய எழுதிய பெஞ்சமின், வன்னிக்குள் சூனாமி பேரழிவோடு சென்று, இறுதியில் யுத்த வலயத்துள் இருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நாவின் பணியாளராக இருந்தவர். அரச சாரபற்ற நிறுவனங்கள் வன்னிக்குள் இருந்து அரசால் கடைசியாக வெளியேற்றப்பட்ட 2008, செப்ரெம்பர் 16, காலை 10.45 எனத் துல்லியமாகச் சொல்கிறார் பெஞ்சமின். ஏனென்றால் அவ்வாறு வெளியேற்றப்பட்ட  இறுதிப் பணியாளர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்

 

பெஞ்சமின் மீண்டும்  தனது சொந்தநாடு திரும்பியபோது, போரை நேரடியாகப் பார்த்ததால் PTSD யினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.  அந்தப் பாரத்தை ஏதோ ஒருவகையில் இறக்கிவைக்காவிட்டால், உளவியல் சிக்கலுக்குள் மூழ்கிவிடக்கூடுமென்ற அச்சத்திலே 'வன்னி'யை எழுதத் தொடங்கியிருக்கின்றார். 

 

பெஞ்சமின் கிளிநொச்சியில் இருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, ஒரு கட்டுரையை போர் நடந்து கொண்டிருந்த அன்றைய காலத்தில் (2009) அநாமதேயமாக எழுதியிருக்கின்றார். அது அன்று தெல்ஹா (Telka) பத்திரிகையில்  'இரண்டு இராணுவங்களுக்கு இடையில்' (In between two armies) என்று தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுமிருந்தது.

 

பெஞ்சமின் வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் (Palestine) பற்றியதும், யூதப் படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே Vanni  நாவலுக்கு உந்துசக்தியெனச் சொல்கிறார்.

 

2.

அன்ரனியின் தகப்பனும், அன்ரனின் சகோதரனும் கொழும்பிற்குச் செல்லும்போது, 1983 இனக்கொலைகள் நடக்கின்றது. அதில் அன்ரனியின் தகப்பன் கொல்லப்பட்டு, அதிஷ்டவசமாக அன்ரனியின் சகோதரனான ரஞ்சன் தப்பி ஊர் திரும்புகின்றார். எனினும் படுகொலைகளை நேரடிச் சாட்சியமாகப் பார்த்த ரஞ்சன் ஒரு விடுதலைப்புலிப் போராளியாக மாறுகின்றார்.  ரஞ்சன் விடுமுறையின்போது வீட்டுக்குத் திரும்பும்போது அவரின் பெறாமக்களான மைக்கலும், தீபாவும் அவரோடு அன்பு பாராட்டுகின்றனர். போர் தீவிரமாகும் அன்ரனியின் பக்கத்து வீட்டு சேகரும் புலிகளின் இணைகின்றார். இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடையும்போது இராணுவத்தால் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, கண்கள் துணியால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள்.

 

இவ்வாறே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட ரஞ்சனின் மனைவியின் சகோதரியான பிரியாவும், அவரது தோழியான கவிதாவும் (இவர்கள் இருவரும் புலிகளின் மருத்துவப்பிரிவில் வேலை செய்கின்றனர்) போரின் இறுதிக்கட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு 'காணாமற்' போகின்றனர்.

 

அன்ரனும் ரஞ்சனியும் காதலித்துத் திருமணம் செய்திருந்தாலும், வெவேறு சமூகப்பின்னணியில்  இருந்து வந்தவர்கள். ஈழநிலாவை அன்ரனின் தாயான ஈழநிலாவால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இவ்வாறு ஈழத்தில் சமூகங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளும் இந்த கிராபிக் நாவலில் சுட்டிக்காட்டப்படுவது முக்கியமானது. அன்ரனுக்கும் ரஞ்சனிக்கும் மைக்கல், தீபா என்கின்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இறுதி யுத்தம் முடியும்போது இவர்கள் தமது குழந்தையான மைக்கலையும், பாட்டியான ஈரநிலாவையும் இழக்கின்றனர்

 

அன்ரனின் சகோதரரும் (ரஞ்சன்), மச்சாள் (பிரியா) புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இராணுவத்தில் சரணடைந்த அன்ரனை இராணுவம் கொடுமையான சித்திரவதைகள் செய்கின்றது. ஒரு கட்டத்தில் முள்வேலி முகாமில் தங்கியிருந்த அன்ரனின் மனைவியான ரஞ்சினியும், மகள் தீபாவும் இராணுவத்துக்கு -அவர்களின் உறவினர் ஒருவரால்- இலஞ்சம் கொடுக்கப்பட்டு முகாமிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றனர். அவ்வாறே ஒரு கட்டத்தில் மிகப்பெரும் பணம் கொடுத்து அன்ரனும் அகதி முகாமில் இருந்து வெளியில் தப்பிவருகின்றார்.

 

இவர்கள் பின்னர் கொழும்பிற்குச் சென்று, தமிழகத்துக்குத் தப்பிப் போகின்றனர். அங்கேயும் உரிய ஆவணம் இன்றி தமிழகப் பொலிஸின் கண்காணிப்பில் சிக்குகின்றனர். ஒருவழியாக அன்ரன் உறவினர் ஒருவரின் உதவியால் இங்கிலாந்துக்கு வந்து, தனது துயரக் கதையை இங்கிலாந்து குடிவரவு அதிகாரியிடம் சொல்கின்றார். இறுதியில் ரஞ்சனியும் தீபாவும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அன்ரனோடு சேர்வதோடு இந்த கிராபிக் நாவல் முடிகின்றது

 

அன்ரன் இப்போது இலண்டனில் வாகனச்சாரதியாக வேலை பார்க்கின்றனர். அவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவர் என அவரது காரில் ஏறும் பயணியொருவர் அறியும்போது, ‘இலங்கை நல்ல காலநிலையையும், அழகான கடற்கரைகளும் ஒரு நல்ல நாடு. நான் கூட விரைவில் இலங்கைக்குப் போக இருக்கின்றேன், நீ இலங்கைக்குப் போகவில்லையா என அந்தப் பயணி கேட்கின்றார். அதிலிருந்து அன்ரனின் கடந்தகாலக் கதை துயரக்கதை வாசகர்களாகிய நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றது

 

3.

ஈழப் போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் செய்யப் புறப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான PhDயையும் செய்திருக்கின்றார். இந்த நாவலுக்காய், வரைபடக் கலைஞரான லிண்ட்சேயுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் காரணமாக, 2012ல் இவர்கள் இருவரும் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும், பிரான்சிலும், கனடாவிலும் போரில் தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் இந்த நாவல் தொடர்பாய்ச் சந்தித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் பாத்திரங்களாய் வருவதை, இலண்டனில் அன்ரனியின் கதையைக் கேட்கும் பக்கங்களில் நாங்கள் பார்க்க முடியும்

 

பெஞ்சமின் மீண்டும் 2017 இல் இலங்கை போய், அவர் பணியாற்றிய .நா கட்டட்டத்தை கிளிநொச்சியில் பார்க்கின்றார். போருக்கு முன்பும் பின்புமாக இருந்த வன்னியைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்த கிராபிக் நாவலின் பின்னிணைப்பாக பெஞ்சமின் எழுதியிருக்கின்றார். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அகதியும், தாங்கள் போருக்குள் இருந்ததைப் போன்ற பதற்றங்களோடே தமது அகதி மனுக்கோரிக்கைகள் ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்று இருக்கின்றார்கள் என்ற தனது ஆய்வின் அடிப்படையை வைத்துச் சொல்கின்றார். அவ்வாறு அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சிலரைக் கூட தான், இந்த நாவல் எழுதுவதன் பொருட்டு சந்தித்திருப்பதாகச் சொல்கின்றார்

 

மேலும் அன்ரனியைப் போன்று யுத்த்த்தால் பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்க்கு அவர்களின் வாழ்வை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு எந்த வழிகளும் இல்லையென்கின்றார். இவர்கள், ஓர் அந்நிய கலாசாரத்தில், புதிய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதையும், அவர்களுக்கு பழக்கமற்ற அந்தந்த நாட்டு பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்ள அவதிப்படுவது பற்றியும் பெஞ்சமின் இங்கே கவனப்படுத்துகின்றார். அன்ரனியைப் போன்றவர்கள் தமது இழந்த வீடுகளை மட்டுமல்ல, போரில் இறந்த தம் உறவுகள்/நண்பர்களின், நினைவுகளையும் தாங்கி உளவியல் சிக்கல்களில் இன்னமும் போர் முடிந்தபின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களென இதில் அடையாளப்படுத்துகின்றார்

 

பிபிஸியின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளரான பிரான்ஸிஸ் ஹாரிசன், ஈழப்போர் தொடர்பாக 'Still Counting the Dead' என்ற நூலை எழுதியிருந்தார். அதன் அறிமுகநிகழ்வு கனடாவில் நடந்தபோது, பிரான்ஸிஸ், ஈழப்போரின்போது நடந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெவ்வேறு கலைவடிவங்களில் வெளிப்படுத்த முயற்சிக்கவேண்டுமெனக் கூறியிருந்தார். ஏனெனில் இந்த உலகுக்கு, நேரடிச் சாட்சிகளாய் நடந்தவைபற்றி புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் அறிய நிறைய இருந்தாலும், அங்கே நடந்த படுகொலைகள் பற்றி எவரும் அக்கறைப்படுவதாக காணவில்லை. எனவே நாம் வெவ்வேறு ஊடகங்கள்/தளங்கள் மூலம் வெளிப்படுத்த கவனம் செலுத்தவேண்டுமெனக் கூறியிருந்தார்

 

அந்தவகையில் இந்த 'வன்னி' என்னும் கிராபிக்ஸ் நாவல் வித்தியாசமான முயற்சி எனலாம். இதனூடாக போருக்கு முன்பான அமைதியான வாழ்க்கை மட்டுமின்றி, இறுதிப்போரின் உக்கிரமான ஒவ்வொரு காலகட்டமும் வரைகலை ஓவியங்களாக மாற்றப்பட்டு, மறக்கப்பட முடியாத நினைவுத்தடங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 

***********

 

( நன்றி: 'எழுநா' - பங்குனி, 2025)

 

 

 

 

கார்காலக் குறிப்புகள் - 100

Sunday, June 29, 2025

 

சுவரொட்டிகளும், கதிர்காம வரலாறும்..
**********


காலையில் நடக்கும்போது ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அது எங்கள் மாகாணத்தில் கொண்டுவரப்படும் சட்டமான Bill-5 எதிரான சுவரொட்டி. இங்குள்ள வலதுசாரிகள், பெரும் முதலாளிகளுக்கு 'சுதந்திர பொருளாதார வலயத்தை' அமைப்பதற்கான சட்டத்திருத்தம் இதுவாகும். இதன் மூலம் இந்த 'சுதந்திர பொருளாதார வலயம்' மாகாண சட்டங்களுக்கு உட்பட வேண்டியதில்லை. இதன் மூலம் காடுகளை அழிக்கவும், கனிமங்களைச் சுரண்டியெடுக்கவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இன்றைக்கு எமது மாகாணத்தில் இயற்கை வளங்கள் பெரும்பாலும் இங்குள்ள பூர்வீகக் குடிகளாலேயே காப்பாற்றப்பட்டு வருகின்றது. அவர்களிடம் கலந்துபேசாமல் இந்தச் சட்டசீர்திருத்தம் பெரும்பான்மையாக ஆட்சியமைத்த வலதுசாரிகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஈழத்திலிருந்து வந்த நமக்குச் சுவரொட்டிகள் எத்தகை மதிப்பு வாய்ந்தது என்பதை அறிவோம். அண்மையில் 'எழுநா' புத்தகமன்றத்துக்காக ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நாம் 70/80களில் வெளியிட்ட சுவரொட்டிகளை ஆவணப்படுத்தினாலே ஒரு பெரும் அரசியல் சித்திரம் தெளிவாகும் என்று சொன்னார். இவ்வாறான சுவரொட்டி கலாசாரத்தை (அல்லது அதற்கிணையானதை) நாம் சுவிஸில் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஏதாவது ஒரு புதிய சட்ட சீர்திருத்தத்தைக் கொண்டுவரும்போது ஆமா/இல்லையா என்று பொதுமக்களிடம் வாக்களிக்கப்படும்படி கோருவார்கள். ஒவ்வொரு கந்தோனும் (மாகாணமும்) அதற்குரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரும் அதிகாரம் இருக்கின்றது. ஆகவேதான் பல்வேறு மொழிகள் பேசப்படும் கந்தோன்கள் சேர்ந்து மிகச்சிறந்த சுயநிர்ணய உரிமையுள்ள நாடாக சுவிஸ்சிலாந்தை உருவாக்க முடிந்திருக்கின்றது.

சுவிஸில் இவ்வாறான சுவரொட்டிகளைத் தெருக்கள் எங்கும் காணமுடியும். அத்துடன் அரசியல் போராட்டங்களுக்கான அழைப்புக்களையும் கூட.
இந்த சுவரொட்டிகளைப் பற்றி நண்பரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, 80/90களில் வெளிவந்த புலம்பெயர்ந்த சஞ்சிகைகளில் வந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்களை ஒழுங்குபடுத்தினால் கூட, நமது தொடக்க கால புகலிட வாழ்க்கை பற்றி அறிக்கையிட முடியுமென நினைத்தேன்.

*

ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் கண்ணில்பட ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்' நூலை வாசித்துப் பார்த்தேன். அயோத்திதாசர் 1914 காலமாகியவர். நீண்டகாலம் வரலாற்றில் மறைந்து போயிருந்தவர். ஞான அலோசியஸ் அவரின் எழுத்துக்களை 1990களில் தொகுக்கின்றார். ராஜ் கெளதமன் அதைத் தொடர்ந்து 'அயோத்திதாசர் ஆய்வுகள்' என்று இத்தொகுப்புக்களை முன்வைத்து ஒரு விரிவான வாசிப்பை நிகழ்த்துகின்றார். அவரைத் தொடர்ந்து நா.தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் என்று எண்ணற்ற பலர் பண்டிதரை எடுத்துக்கொண்டு சமகாலத்திலும் அணையா விளக்காக அயோத்திதாசரை கொண்டுவந்தபடி இருக்கின்றனர். இன்றைக்கு தமிழ்ச்சூழலில் பெரியாரைப் போல, அயோத்திதாச பண்டிதரும் ஒரு முக்கிய ஆளுமையாக நிறுவப்பட்டுவிட்டார்.

ஈழத்தில் இவ்வாறு விரிவாக வாசிப்புச் செய்து மதிப்பிடவும் விமர்சிக்கவும் கே.டானியல், மு.தளையசிங்கம், விபுலானந்தர், நடேசய்யர், சிவத்தம்பி போன்ற பலர் இருக்கின்றார்கள். தளையசிங்கம், டானியல் போன்றவர்களின் முழுத்தொகுப்புக்கள் கூட வெளிவந்துவிட்டன. எனவே ஆய்வாளர்களுக்கு இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடியெடுக்கும் கஷ்டம் கூட இல்லை. ஆனால் இற்றைக்கு எமது பொதுச்சமூகத்தில் இருந்து மட்டுமில்லை, பல்கலைக்கழகச் சூழலிருந்தும் தனித்துவமான ஆய்வாளர்கள் தோன்றவில்லை.

எனக்கு நம்பிக்கையான சில பல்கலைக்கழக நண்பர்களிடம் இந்தத் திசைகளில் அவர்களின் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்தகாலங்களில் கேட்டிருக்கின்றேன். ஆனால் இன்றைய இலங்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் அவர்களால் முற்றுமுழுதாக இவற்றில் கவனஞ்செலுத்த முடியாத நாளாந்த வாழ்க்கைத் தத்தளிப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான ஆய்வாளர்கள் ஆறுதலாக ஆய்வு செய்து எழுதும் சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்கவோ, அவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களை அமைக்கவோ இன்னமும் இல்லை.

எனினும் இவ்வாறானவற்றை செய்யும் சில நம்பிக்கைக் கீற்றுக்களைக் காண்கின்றேன். உதிரிகளாக இருப்பவர்களை, அவர்களின் நம்பிக்கைகள்/அரசியல் சார்பகளைத் தாண்டி ஏதோ ஒரு புள்ளியில் 'வேற்றுமையில் ஒற்றுமை' போல ஒன்றிணைத்து முன்னே சில காலடிகளையாவது நாம் வைக்கத்தான் வேண்டும்.

*
இன்று கதிர்காமம் (கந்தன்) முற்றுமுழுதாக சிங்களவர்களிடம் ஆகிவிட்டது. ஒருகாலத்தில் பெளத்தர்களும்
, சிங்களவர்களும் வழிபட்டு வந்த நுழைவாயில் இருந்த கந்தனின் வேல் கூட அகற்றப்பட்டுவிட்டது. கடல் கடந்து வாழ்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலம் என்பதால் இது 14ம் நூற்றாண்டிலே தமிழர்களால் கவனிப்புக்குள்ளான இடம் என்பதை நாம் நிறுவமுடியும். இதற்கு இன்னொரு ஆதாரமாக நடேசய்யரின் இலங்கை சுதந்திரமடைய முன்னர் 1946இல் எழுதிய 'கதிர்காமம்' என்ற நூல் நம்மிடையே இருக்கின்றது. இன்றைக்கு சிங்களர்கள் ஏகபோக உரிமை கொள்ள முயற்சிக்கும் கதிர்காமத்தை நாம் 70 ஆண்டுகளுக்கு முன்னே போய் கதிர்காமம் எப்படி இருந்தது என்று நிரூபிக்க நடேசய்யரின் 'கதிர்காமம்' என்ற ஆவணம், எமக்கு எழுத்தாக மட்டுமின்றி அந்தக்காலத்தைய புகைப்படங்களுடனும் சான்றாக இருக்கின்றது.

நடேசய்யர் கதிர்காகம் என்ற நிலப்பரப்பை சிங்கள - தமிழ் மன்னர்களுக்கு போர் நடந்த இடமாகவும், சிங்கள மன்னர்கள் தமிழர்களை வெல்வதற்காக கதிர்காமத் கடவுளிடம் அருள் வேண்டிச் சென்ற இடமாகவும் காண்கின்றார். 

இன்னொருவகையில் இந்து நூல்களில் இந்த இடம் முருகனும், சூரனும் போர் செய்த இடமாகவும், முருகன் சூரனை வென்று ஓய்வெடுத்த படைவீடாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இன்றிருக்கும் கதிர்காமம் பெளத்ததிலிருந்து இந்துசமயத்துக்கு மாறிய முதலாம் ராஜசிங்கனால் கட்டப்பட்டது என்கின்ற முக்கிய விடயத்தை நடேசய்யர் பதிவு செய்கின்றார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழர்களால் வழிபாடுகள் செய்யப்பட்ட இடத்தை சிங்களவர்கள் எடுத்துக் கொண்டபோது, பிரிட்டிஷ்காரர் காலத்தில் மீண்டும் அவர்களால் வழிபாட்டு இயற்றும் உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் நடேசய்யர் சொல்கின்றார்.

ராஜசிங்கன் காலத்திலேயே கல்யாணகிரி என்ற சன்னியாசி கதிர்காமத்துக்கு இந்தியாவில் இருந்து வந்ததாகவும், அவரின் மூலம் இன்னும் பல சன்னியாசிகள் கதிர்காமத்தை நோக்கி வந்தார்கள் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. அப்படி வந்த மரபில் ஒரு சன்னியாசி அன்ன ஆகாரம் எதுவுமின்றி பால் மட்டும் குடித்து தியானம் செய்ததால் அவரை பால்குடி பாவா என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் 1898இல் கதிர்காமத்தில் சமாதியடைந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. அந்த சன்னாசியே அங்கிருக்கும் கல்யாண மண்டப நிர்வாகம் பற்றி மரணசாசனம் எழுதி வைத்ததோடு அது அப்போதைய ரிஜிஸ்டர் ஜெனரலாக இருந்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் காலத்தில் நடந்தென்றும் பதிவு செய்திருக்கின்றார்.

அதுபோலவே எப்படி முறையான தமிழ்/இந்து நூல்களில் கதிர்காமம் தெளிவாகப் பதியப்படவில்லையோ, அதைவிட சிங்களவர்கள் தமது எல்லா 'வரலாற்றை' எழுதிவைத்த மகாவம்சத்திலும் கதிர்காமம் குறித்து விரிவான பதிவுகள் இல்லை என்று நடேசய்யர் குறிப்பிடுகின்றார். புத்த பெருமானின் வரலாறு அல்ல, கந்த பெருமானின் சரித்திர வரலாறே சிங்களத்தில் 'கந்தகுமர் உபத' என்ற நூலில் காணப்படுகின்றது என்று நடேசய்யர் குறிப்பிடுவது சுவாரசியமானதாகும்.

இவ்வாறு நாம் வரலாற்றில் பின்னகர்ந்து இன்று சிங்களப் பெளத்தர்கள் ஏகபோக உரிமையாக எடுத்துவிட்ட கதிர்காமத்தின் வரலாறு அவர்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும். அதுபோல இந்த நூலில் இறுதி அத்தியாயத்தில் நடேசய்யர் குறிப்பிடும் இன்னொரு விடயமும் முக்கியமானது. இதேயிடத்தில் ஒரு முஸ்லிம் ஞானி இருந்ததாகவும் அவரின் பெயர் கிதர்நபி என்றும், அவர் மூலமாகவும் மாலதீவில் முஸ்லிம் மதம் பரவியதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கின்றார். இதனாலேயே இந்தியாவிலிருந்து கூட முஸ்லிம்கள் கதிர்காமத்தைத் தேடி வருகின்றனர் என்று எழுதியிருக்கின்றார். அது மட்டுமின்றி வள்ளியமைக்கு அருகில் ஒரு சமாதி கட்டப்பட்டிருக்கின்றது என்றும். அது ஒரு முஸ்லிம் பெரியாரியுடையது என்றும், அந்தப் பெரியார், கதிர்காமத்தில் வாழ்ந்த முத்துலிங்க சுவாமி காலத்தவர் என்றும் அவரோடு சேர்ந்து தொண்டாற்றியவர் என்றும் சொல்கின்றார்.

இவ்வாறாக கதிர்காமம் என்பது இலங்கையில் பல்லின/மதக் கலாச்சார இடமென்று நாம் எளிதாக ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஆக 1940களில் எழுதி ஆவணபப்டுத்தப்பட்ட நூலிலிருந்து நாம் இந்த கதிர்காம வரலாற்றை கட்டவிழ்க்க முடிகின்றது என்பதுதான் ஆவணப்படுத்தல்களின் முக்கியத்துவம் என்கின்றேன்.

*************

 

( Jan 13, 2025)

கார்காலக் குறிப்புகள் - 99

Friday, June 27, 2025

 

டந்த ஞாயிறு தியானத்திற்காக புத்த மடாலயத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். நண்பர் Thug Life திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு மோசமான திரைப்படத்தைப் பற்றி உரையாடுவது என்பதே அதற்கு விளம்பரம் கொடுப்பதாகத்தான் இருக்கும், உங்களுக்கு ஏதேனும் அதில் உறுத்திக் கொண்டிருந்தால் எழுதிவிட்டோ அல்லது காணொளியில் பேசிவிட்டோ நகர்வதே நல்லது என்றேன்.

ஒரு விடயத்தை உரையாடும்போது அதில் இருந்து கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விடயங்களில் இருந்து கடந்து செல்வதே நமது பொழுதுகளை பிரயோசனமாக்கும். இதை நாம் சமூக வலைத்தளங்களிலும் எளிதில் பார்க்க முடியும். நாம் ஏதாவது எழுதும்போது உடனே எதிர்க் கருத்தைச் சொல்ல வருவார்கள். அதற்கு மறுத்துச் சொல்லப்போகும்போது விதாண்டவாதம் ஆகும். இருவருக்கிடையில் ஏதேனும் உரையாடல் நடந்தால் அதைக் கவனிக்கும் மூன்றாம் நபருக்கு புதிதாக அறிந்துகொள்ள ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அவ்வாறில்லாத உரையாடல்களில் இருந்து விலகுவதோ, அதை மெளனமாகக் கடந்து செல்வதோ அனைவர்க்கும் நன்மை பயக்கும்.

இந்த Thug Life இல் சமூக வலைத்தளங்கள் எரிந்துகொண்டிருந்தபோது, நான் அமைதியாகவே கடந்து சென்றேன். நண்பரிடமும், பாருங்கள் நீங்கள் கூட Thug Life ஐ இந்தளவுக்கு பேசுகின்றீர்கள். உங்களுக்குப் பிடித்த ஜெயமோகன் 'காவியம்' என்ற நல்லதொரு நாவலை தொடராக 45 அத்தியாயங்களுக்கு மேலாக எழுதிவிட்டார். இந்த சமூகவலைத்தளத்தில் அது குறித்து ஓர் உருப்படியான கட்டுரையோ/பதிவோ இந்த ஒரு மாதத்திற்குள் வந்திருக்கா என்று சொல்லுங்கள் என்றேன்.

'காவியம்' புதினத்தை வரவேற்கின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒரு கடும் உழைப்பு அதில் இருக்கின்றது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இத்தனைக்கும் என் இலக்கிய செல்நெறியென்பதே ஜெயமோகனுக்கு எதிர்த்திசையில் போகக் கூடியது. ஆனாலும் நான் தினம் விடாது 'காவியத்தை' வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஒரளவு வயதாகும்போது நாம் எதிர்மறை விடயங்களை விட ஆக்கபூர்வமான செயல்களுக்கு பொழுதுகளைச் செலவிட வேண்டும் என்ற விருப்பம் வந்துவிடுகின்றது. வாழ்வென்பதே எந்தக் கணத்தில் நின்றுவிடும் என்பது ஒருபுறமிருக்க, மிச்சமிருக்கும் வாழ்வை கொஞ்சமாவது பிடித்தமான விடயங்களின் திசையில் கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் வந்திருக்கின்றது.

அந்தவகையில்தான் இந்த வயதிலும் சலிப்பில்லாத அ.யேசுராசா, மாதம் ஒரு திரைப்படத்தை திரையிடுவதும், வடகோவை வரதராஜன் தனது நண்பர்களுடன் மாதமொரு முறை ஏதேனும் ஒரு தலைப்பில் துறை/அனுபவம் சார்ந்த ஒருவரை அழைத்து பேச வைப்பதும் மதிப்புக்குரிய செயல்களாக எனக்குத் தெரிகின்றது.

இந்த இலக்கிய உலகென்பது பிற எல்லாத் துறைகளைப் போலவே குழிபறித்தலும், பொறாமைகளும், கோபங்களும் கொண்ட ஒரு சூழல்தான். ஆனால் இதை விரும்பி ஏற்று வந்திருக்கின்றோம் என்றால், (அல்லது வேறு எதுவுமே எமக்குத் தெரியாது என்றால்), நாம் விரும்பிய துறைக்குள் இருந்து உருப்படியாக எதையாவது செய்து பார்க்கலாம். ஏனென்றால் பிடித்த விடயங்களில் நிகழும் இழப்புக்கள் கூட, ஒருபோதும் தோல்விகளாகி விடுவதில்லை.

'நூலகம்', 'எழுநா' போன்ற திட்டங்களின் பின்னால் இருந்து உழைப்பவர்களும் அந்தவகையில் மதிப்புக்குரியவர்கள். அவர்கள் மீது நமக்கு கேள்விகள்/விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களின் இருப்பை ஆவணப்படுத்துவதில் முக்கியமானனை. கடந்த சில வருடங்களாக மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்த 'எழுநா' இப்போது மீண்டும் புத்தகங்களைப் பதிப்பிக்கவும் முன் வந்திருக்கின்றது.

இலங்கையிலே அச்சிட்டு இலங்கை எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தும் இந்தத் திட்டம் மிக முக்கியமானது. ஏனெனில் நம்மவர்களில் பலருக்கு அரசியல் மட்டுமே முழுமூச்சாக இருக்கின்றது. அந்த அரசியலைக் கூட ஆவணமாக்கவேண்டும், எதிர்காலச் சந்ததிக்காய் எழுத்தாக்கி பதிப்பிக்க வேண்டும் என்கின்ற தொலைதூர நோக்கில்லை. பேச்சால் மட்டும் வானில் ஏறி நடனமாடுவதில் நாம் எல்லோருமே வல்லவர்கள். ஆடுவது தவறில்லை, ஆனால் அவ்வப்போது நல்ல விடயங்கள் நடக்கும்போது அவற்றுக்கு ஆதரவு கொடுப்பதால் நாம் எதிலும் குறைந்துவிடப் போவதில்லை.

அண்மையில் 'செம்மணி' புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டு, மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது பேசு பொருளானது. கிருஷாந்தியின் படுகொலையில் வாக்குமூலம் கொடுத்த சிங்கள இராணுவத்தினனின் மூலமே இந்தப் புதைகுழி பற்றிய மர்மம் அன்று துலங்கியது. கிருஷாந்தியின் படுகொலை நடத்தபோது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று கனடாப் பாராளுமன்றத்தின் முன் நாம் இதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளைச் செய்துமிருக்கின்றோம். ஆனால் இப்போது இருந்து யோசித்துப் பார்க்கும்போது செம்மணி படுகொலை குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து ஒரு உருப்படியான நூல் எதுவும் வந்திருக்கின்றதா? நாம் கிருஷாந்தி கொலை, செம்மணி புதைகுழி, அன்று பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்கள் குறித்து சரியாகப் பதிவு செய்திருக்கின்றோமா என்று பார்த்தால் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

ஆனால் இலங்கையில் அண்மையில் உள்ளூராட்சி நடந்தபின், எதற்குமே உருப்படியில்லாத மாநகர சபைகளை யார் கைப்பற்றப்போகின்றார், எந்த தமிழ் அரசியல்வாதி எதைத் திருவாய் மொழிந்தார் என்பதை இந்த Thug Life போல எழுதுவதற்கோ/பேசுவதற்கோ தயங்கவே மாட்டோம். ஏனெனில் நாங்கள் மறத்தமிழர். மேலும் மறத்தமிழர் என்று ஓரினம் இருந்தால் எதிர்க்கோஷ்டி இருக்கவேண்டும் அல்லவா? அவர்களுக்கும் இந்த மறத்தமிழருக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் உறைந்துபோன மூளையுடன் இருக்கும் அவர்களுடன் உரையாடுவதென்பது பாறையொன்றை நகர்த்துவதற்கு நிகர்த்தது.

மறத்தமிழரையும், எதிர்த் தமிழரையும் தாண்டியபடி காலம் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்கு கொஞ்சமாவது பங்களிப்பவர்களாக இந்தக் காலத்தில் நம்மை மாற்றியமைப்பதுதான் எமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால்!

*********

 

(Jun 12, 2025)