புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

காதல் கவிதைகள்

Monday, February 14, 2005

முடிந்துபோன மாலைப்பொழுது
-பா.அகிலன்

பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது...
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில்
வீழ்ந்தணைகிறது சூரியன்.

{பதுங்குகுழி நாட்கள்}


நினைவுள் மீளதல்
-தானா.விஷ்ணு

எப்போதுமே வந்து கொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய கனவு
யாருமே வந்து போகாத பெருவெளி
ஒன்றில் இருந்து

தூறல் நின்று போன
மழை இடைவெளி நேரம் ஒன்றில்
மீந்து வந்து கொண்டிருக்கும்
பாடல் ஓசையில்
எப்போதும் இல்லாதது போல்
உந்தன் நினைவு வரிகள்

நானும், நீயும் அடிக்கடி சந்தித்துப் பேசிய
புளிய மரத்தடி வேர்களைப் பற்றியபடி
தொடர்ந்தும் என் இருத்தலை
நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றேன்
என்னில் இருந்து மரணித்துப் போன
காலங்களை அசை போட்டுக் கொண்டு
எதில் இருந்துமே பிரிக்க முடியாத
ஒரு பூச்சிய வளைவுள் அமிழ்ந்து போகின்றேன்.

காரணங்கள் மறந்து போன இந்த காயங்களுக்கு
குறைந்த பட்சம் ஒரு காரணத்தினையேனும்
நினைவுபடுத்தும் முயற்சியோடு

{நினைவுள் மீள்தல்}


துயர்க்காலம்
-அமரதாஸ்

அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைந்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.

விண்ணில் இறைந்து கிடக்கும்
வெள்ளித்துகள்களில் ஒன்றாய்
எட்டாத் தொலைவில் நீ...

காற்றிடையே
அலைந்து கரையும் தீச்சுவாலையாய்
இனம்புரியாத்துயர் மனசோடு...

என் மனசு
கல்லாகிப் போனதாய் உணராதே
பிரிவுத்துயர்க்கடலில்
அமுங்கி அமுங்கி நிமிருகிறேன்.

காலமிதன் கோலமிது.

வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து.

{இயல்பினை அவாவுதல்}


அலைகளற்றிருக்கும் உனது கடலும் மூழ்கி தெறிக்கும் எனது அலைகளும்
-சித்தாந்தன்

அலைகளற்றிருக்கும் உனது கடல்.

காடும் நதியும் இல்லாத
அகன்ற வெறும் இரவில்
அலைகளால் வதைபடுகின்றேன் நான்.

ஆயிரம் யுகங்களையும்
தாண்டிவிரியும் நம் காதலை
பிரளயத்தின் தத்தளிப்பில்
கடாசி வீசிவிட்டிருக்கிறது காலம்.

யுகமலையின் முகடுகளில்
மோதித்தெறித்த நம் பாடலை
ஏதேதோ பறவைகளெல்லாம்
தம் மொழியாக்கியதை
எம்மையன்றி யார் அறியக்கூடும்.

நீ போய்விட்டாய்
மலைகள் எரிந்து சாம்பலாகிய
அதிசயம் கண்டு
கண்டவர்கள் மலைத்தார்கள்
உருகியுறைந்த பனியில்
நான் விறைத்துக்கிடந்தேன்

என் மிகப்பெரிய சுவாசவீச்சு
வானில் படர்ந்து கரைந்ததாய்
எல்லோரும் புலம்பினார்கள்
என் அலைகள் சூனியவேரில்
பிணையுண்டு அழிந்துபோனதாய்
எல்லோரும் அழுதார்கள்

அலைகளற்று இருக்கிறதா
உனது கடல்?

இரவுப்பட்சி விழித்துப்பாடும் கணங்களில்
தகர்ந்து பொடியாயினவா உனது மவுனம்

குரல் எழுப்பி அழுதுவிடாதே
உனது குரலில் தீப்பற்றி
எரிந்து சாம்பலாகக்கூடும் பிரபஞ்சம்.

{மூன்றாம் மனிதன் இதழ்-10}
....................
இந்த நான்கு கவிஞர்களும் ஈழத்தில் இன்றும் போரின் நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். பா.அகிலன் 'பதுங்குகுழி நாட்கள்' என்ற தொகுப்பையும், சித்தாந்தன் 'காலத்தின் புன்னகை' என்ற தொகுப்பையும், தானா.விஷ்ணு 'நினைவுள் மீள்தல்' என்ற தொகுப்பையும், அமரதாஸ் 'இயல்பினை அவாவுதல்' என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈழத்திலிருந்து முகிழ்ந்த புதிய தலைமுறைப் படைப்பாளிகள். இவர்களது கவிதைகளைத் தொகுப்பாய் வாசிக்கும்போது, போர் சூழ்ந்த, அனைத்து வளங்களும் தடைப்பட்ட இருண்ட வாழ்க்கையிலிருந்தும் பல நல்ல கவிதைகளை (அவனை வெட்டடா இவனைக் கொத்தடா என்று எவரையும் உசுப்பேத்தாமல்) தமக்கான மொழிகளிலும் தனித்துவங்களுடன் புனைந்துள்ளார்கள் என்பது வியப்புத் தரக்கூடியது.

9 comments:

ROSAVASANTH said...

நன்றி டீஜே, வாசித்தேன்!

2/14/2005 10:16:00 PM
-/பெயரிலி. said...

டிஜே நேரம் செலவு செய்து அடித்திட்டிருக்கின்றீர்கள். நன்றி. இலங்கையிலிருந்தே படைக்கின்றவர்களின் படைப்புகளைமட்டுமிட ஒரு பதிவினை ஆரம்பிக்கலாமா? யோசித்துச் சொல்லுங்கள்.

2/14/2005 10:17:00 PM
Thangamani said...

போர்க்காலங்களிலும் நெய்தலின் மலர்கள் இருப்பதில்லையா? நன்றி. ஈழத்திலிருந்தே எழுதுபவர்களுக்காக ஒரு பதிவை அமைப்பது நல்ல யோசனை எனப்படுகிறது!

//குரல் எழுப்பு அழுதுவிடாதே
உனது குரலில் தீப்பற்றி
எரிந்து சாம்பலாகக்கூடும் பிரபஞ்சம்//

நல்ல வரிகள். அது எழுப்பு-ஆ அல்லது எழுப்பி-யா?

2/14/2005 10:45:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

கவிதைகளுக்கு நன்றி டி.சே.
பெயரிலி நானும் கூட வருகிறேனே.

2/14/2005 11:01:00 PM
டிசே தமிழன் said...

தங்கமணி, நீங்கள் கூறியதுமாதிரித்தான் இருந்திருக்கவேண்டும். திருத்திவிட்டேன். நன்றி.
....
பெயரிலி, நல்ல யோசனை. ஆரம்பிக்கலாமே. சில வரைவுத்திட்டங்களை முன்கூட்டியே வைத்திருந்தால் இன்னும் இலகுவாயிருக்கும். உங்களிடம், ஈழநாதன் போன்றவர்களிடம் இருந்து பதிலை எதிர்ப்பார்க்கின்றேன்.

2/15/2005 09:59:00 AM
டிசே தமிழன் said...

மன்னிக்கவேண்டும். முதல் பதிவில், ஈழநாதன், தங்கமணி போன்றவர்களிடம் இருந்நது பதிலை எதிர்பார்க்கிறேன் என்றிருந்திருக்கவேண்டும்.(ரோசாவசந்திற்கு தனியேயெல்லாம் அழைப்புவிடதேவையில்லை :) ).

2/15/2005 10:23:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

இப்படியான விசயங்களெண்டா எனக்கும் தனி அழைப்புத் தேவையில்லை.

2/16/2005 04:29:00 AM
-/பெயரிலி. said...

ஈழநாதன் இல்லாமலா? இந்தக்கிழமைக்குள் தனியே உங்கள் இருவருக்கும் மதிக்கும் இதுபற்றி எழுதுகிறேன்.

2/16/2005 10:30:00 AM
டிசே தமிழன் said...

//ஈழநாதன் இல்லாமலா?//
உண்மைதான்,
பெயரிலி இங்கே பதில் எழுதாவிட்டால், அவருக்கு 'பின்னுதை' கொடுத்து kick-out செய்துவிட்டு நித்திலனைக் கூட்டுப்பதிவிற்கு சேர்ப்பதாய் எண்ணியிருந்தேன். பரவாயில்லை. பதில் எழுதிவிட்டார் :).

2/16/2005 11:58:00 AM