நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

Cold Mountain: திரைப்படம்

Wednesday, February 23, 2005

{பார்த்ததும் பிறகு பதிந்ததும்}

"நமக்கான காலம்
போய்விட்டதைப் போலுள்ளது.
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது..."
-நட்சத்திரன் செவ்விந்தியன்

இந்தக் கவிதை சொல்வதைப் போல அமெரிக்காவில் நடந்தாலென்ன ஈழத்தில் நடந்தாலென்ன போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டுத்தான் போகின்றது. யுத்தக்காலத்தை விட யுத்தத்தின் பின்பான காலங்கள்தான் இன்னும் கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. Cold Mountain - இந்த கதையின் பின்னணி அமெரிக்கா உள்நாட்டுப்போரை பின் தளமாகக்கொண்டு போரெழுப்பும் அதிர்வுகளை காட்சிகளினூடாக பார்ப்பவர்களிடையே படியவிடுகின்றது.

நேரடிப்போர் பற்றிய காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே வருவதால், கதாநாயக ஆர்ப்பாட்டங்கள் அதிகமில்லாது படத்தோடு ஒன்ற முடிகிறது. Cold Mountain என்ற ஒரு ஒதுக்குப்புறமான ஊரிலிருந்தே கதை ஆரம்பிக்கிறது. ஒர் ஊரிற்குரிய இயல்போடும் நிம்மதியோடும் அங்கேயிருக்கும் மனிதர்களின் வாழ்வு நகர்கிறது. எனினும் அங்கிருக்கும் ஆண்கள் எப்போது அமெரிக்க உள்நாட்டுப்போரிற்கு தங்களிற்கு அழைப்பு விடப்படும் என்பதைக் கிளர்ச்சியுடன் எதிர்பார்த்தபடி இருக்கின்றார்கள். அதையே அப்படி அழைப்பு வரும்போது ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடிவிட்டு போரிற்கு புறப்படும் காட்சி தெளிவுபடுத்துகிறது. ஆனால் போரின் நிசம் நாம் நினைப்பது போல இல்லைத்தானே. இதற்கிடையில் தனது தந்தையின் உடல்நலம் காரணமாக ஊரில் ஓய்வெடுக்க வரும் பணக்காரப் பெண்ணுக்கு(Ada) அவர்களின் பண்ணையில் வேலை செய்யும் ஆணிடம்(Inman) ஈர்ப்பு வருகிறது. காதலைக் கூட சரியாகச் சொல்லவோ அனுபவிக்கவோ முடியாத வகையில் போரிற்கான அழைப்பு Inmanற்கு வருகிறது. ஊரிலுள்ள ஏனைய ஆண்களைப்போல அவனும் தனது காதலியைப் பிரிந்து போரிற்குச் செல்கின்றான்.

பிறகொருபொழுதில் போரில் காயம்பட்டு, போரின் கொடூரம்கண்டு வெறுத்து, தனது இராணுவத்தை விட்டு தப்பி தனது ஊரிற்கு பயணிக்கின்றான். ஒரு நீண்ட பயணம் என்றாலும் தனக்காய் தனது Ada காத்திருப்பாள் என்ற நினைப்பு அவனை ஊரை நோக்கிச் செல்ல உந்துசக்தியாகிறது. இதற்கிடையில் நாடுமுழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாரடைப்பால் தனது தந்தையுமிறக்க, போரின் நிமிர்த்தத்தால் செல்வச்சீமாட்டியான Ada வறியவளாகிறாள். எவருமேயில்லாத அவளது தனிமையை ஊர்க்காரன் ஒருவன் தனக்குச் சாதகமாக்கப்பார்க்கின்றான். ஒருபொழுதில் உணவெதுமேயில்லாது ஒரு துண்டு பன்றியிறைச்சிக்காய் தனது தந்தையாரின் இறுதி ஞாபகப்பொருளான கடிகாரத்தையே விற்கப்போகின்றாள். எனினும் தன்னோடு சில பொழுதுகள் கழித்தவன் போரிலிருந்து என்றாவது ஒருநாள் தனக்காய் திரும்பிவருவான் என்ற நம்பிக்க்கையுடன் காத்திருக்கிறாள் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டமெல்லாம் பற்றைகளாக மாறுவதைப் பார்த்துக்கொண்டு.

போரில் நேரில் ஈடுபவர்களைவிட அவர்களுக்காய் ஊரில் காத்திருப்பவர்கள்தான் இரட்டைத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லி, காத்திருக்கும் Ada போன்ற பெண்களுக்கு அடுத்த அதிர்ச்சி அவர்களின் இராணுவத்தின் கட்டளை ரூபத்தில் வருகிறது, எந்தக்காரணம் கொண்டு இராணுவத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு எவரும் புகலிடம் கொடுக்ககூடாது என்று. எதிர் இராணுவத்தைவிட தங்கள் இராணுவம் மிக மோசமாக இருக்கின்றதே என்று பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிய தாய்மார்கள் திட்டியபடி கலைகின்றனர்.

Cold Mountainற்கு தப்பிவருகின்ற Inmanற்கு பயணம் அவ்வளவு இலகுவாயில்லை. ஒரு ஆற்றைக் கடக்க உதவி செய்வதாய் துடுப்புடன் வருகின்ற பெண்ணுடன் Inmanம் இடையில் சேர்ந்துகொண்ட தோழனும் செல்கின்றனர். ஆற்றின் இடைநடுவில் படகு சென்றுகொண்டிருக்கும்போது அவர்களின் சொந்த இராணுவத்தாலேயே சுடப்படுகின்றார்கள் (தப்பியோடுபவர்கள் ஊர் போகக்கூடாதென்ற கட்டளைக்கேற்ப). உதவி செய்ய வந்த பெண் கொல்லப்பட Inmanம் நண்பனும் தப்புகின்றார்கள். இடையில் பூச்சிகள், காய்ந்த சோளப்பொத்தி என்று கண்டதையெல்லாம் சாப்பிட்டு உயிரைத் தக்கவைத்த்துக்கொண்ட இவர்களை, பசி கொடூரமாய் கொல்கிறது. அதிஷ்டவசமாய், பலநாள்களுக்கு முன் செத்த ஒரு மாட்டை (சாப்பாட்டுக்குப் பஞ்சம்) துண்டாக்குவதற்கு ஒருவனுக்கு உதவி செய்ய அவன் அன்றிரவு தான் உணவு தருவதாகவும் தனக்குத் தெரிந்த வீட்டில் தங்கலாம் என்றும் கூறுகின்றான். அங்கே நாலைந்து பெண்கள் இருக்கின்றனர். நல்ல சாப்பாடும் குடியும் பரிமாறப்படுகிறது. ஆண்கள் எல்லாம் போரிற்குப் போனபின் சாப்பாட்டுப் பஞ்சத்தைப்போலவே பெண்கள் பாலியல் உறவு இல்லாது தவிக்கின்றனர். நான் முந்தி நீ முந்தி என்று Inmanடன் உறவு கொள்ள அழைக்கின்றனர். இப்படி உறவிற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது இவர்களை விருந்திற்கு அழைத்து வந்தவன் Inmanனின் இராணுவத்திற்கு தகவல் சொல்ல Inmanம் அவனது நண்பர்களும் அவர்களின் கைதியாகின்றனர். பிறகு இவர்களைப் போன்ற பலரைச் சங்கிலியில் பிணைத்தபடி போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது எதிரணியினரை(Yankees) சந்திக்கின்றனர். கைதிகளை ஒளித்துவைத்துக்கொண்டு இவர்களது இராணுவம் பதுங்கிக்கொள்ள, இப்படியே போனால் போர்க்களத்தில் எப்படியோ இறக்கத்தான் போகின்றோம், எனவே சத்தம்போட்டு Yankeesன் கவனத்தைக் கலைப்பானாக்கி ambush நடைபெற்று அதிஷ்டவசத்தால் தாங்கள் தப்பக்கூடும் என்று நினைத்து கைதிகள் சங்கிலிப்பிணைப்போடு தப்பியோடத்தொடங்குகின்றனர். இரு தரப்புக்கும் சண்டை தொடங்குகிறது. மாறி மாறி சுடுபட இறுதியில் Yankees வெல்கின்றனர். ஆனால் Inman மட்டும் இறந்த உடல்களில் ஒருவனாய் கிடக்க அனைவரும் இறந்துவிட்டனர் என்று நினைத்து Yankees போகின்றனர். பிறகு ஒரு மூதாட்டியால் காப்பாற்றபட்டு, கழுத்தில் பட்ட காயத்தை ஆற்றி ஓய்வெடுத்துக்கொண்டு, ஊரிற்கான தனது பயணத்தைத் தொடர்கின்றான்.

இடையில் ஒரு நாள் குளிரும் பசியும் தாங்க முடியாது ஒரு விட்டின் கதவைத் தட்டுகின்றான். அங்கே ஒரு பெண் ஒரு குழந்தையுடன் இருகின்றாள். இருந்த உணவைக் கொடுத்து, தனது கணவன் போரில் இறந்துவிட்டான் என்று அந்தப்பெண் கூறுகின்றாள். இரவில் வெளியே படுத்திருக்கும் Inmanஐ அழைத்து தன்னால் தனியே உறங்கமுடியாது தனக்குப் பக்கத்தில் தயவு செய்து படு, ஆனால் அதற்குமேல் ஒன்றையும் கேட்காதே என்கின்றாள். ஒரு ஆணின் நெருக்கம் அருகில் இருக்க அவளுக்கு கணவனின் நினைவு வந்து உடைந்து அழத்தொடங்குகிறாள். ஒன்றுமே செய்யவியலாது தவிர்க்கும் Inmanஐ பார்த்து தன்னோடு தங்கிவிடச் சொல்கிறாள். இல்லை எனக்காய் என் காதலி காத்திருப்பாள், அவளுக்காய் நானெனது ஊர் போகவேண்டும் என்று அவளை அணைத்தபடி உறங்கிப்போய்விடுகிறான் Inman. விடிகாலையில் எதிரணியினர்(Yankees) இவளது வீடு தேடிவருவதைக்கண்டு பதறியபடி அந்தப்பெண் Inmanஐ தப்பியோடச் சொல்கிறாள்.போரினால் பலதினங்களாய் சாப்பாடில்லாது அலையும் அவர்கள் அந்தப்பெண்ணிடம் இருக்கும் எல்லாவற்றையும் பறிப்பதற்காய் அவளது பச்சிளங்குழந்தையை வெளியே குளிரில் கிடத்திவைத்து அவளையும் கயிற்றால் பிணைத்துவிட்டு அவளது உடமைகளைப் பட்டிலிடச்சொல்கின்றனர். அவள் எல்லாவற்றையும் கொடுத்தபின்னும் குழந்தையை குளிரிலேயே விடுகின்றனர். பிறகு அவளையும் வன்புணர்ச்சியிற்காய் வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றான் ஒருத்தன். இதை ஒளித்திருந்து கண்ட Inman வீட்டினுள் பின்புறமாய் சென்று வன்புணர்ச்சியிற்கு வரும் இருவரைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகின்றான். வெளியே கொஞ்சம் வயது குறைந்தவனாய் நிற்கும் எஞ்சியிருந்தவனைக் கண்டு பரிதாபப்பட்டு ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு தப்பியோடு என்று சொல்கின்றான். ஆனால் அவன் தப்பியோடும்போது சடுதியாய் அந்தக்குழந்தையின் தாய் துவக்கெடுத்து அவனைச் சுட்டுவிடுகிறாள். இந்தச் சம்பவத்தை எந்த வார்த்தையுமில்லாது Inman பார்த்துக்கொண்டிருக்கின்றான். இது படத்தின் முக்கிய பகுதியாக பார்க்குபோது எனக்குத் தெரிந்தது. போர் எப்படி எல்லோரையும் வன்முறையாளராக்கி விடுகின்றது என்பதற்கு இதைவிட என்னவொரு காட்சி வேண்டும்?

இதற்கிடையில் Inmanற்காய் காத்திருக்கும் Ada, ஒரு பெண்ணின் உதவியுடன் வீடு தோட்டம் எல்லாம் திருத்தியமைத்து இயல்பு வாழ்க்கையிற்கு வருகின்றாள். கொஞ்சம் சந்தோஷமாய் போய்க்கொண்டிருக்கும் Adaவின் வாழ்வு அயல் வீட்டில் நிகழும் சம்பவத்தோடு பீதியாய் மாறிவிடுகின்றது. போரிற்கு போய் தப்பிவந்த தங்கள் பிள்ளைகளை ஒளித்து வைத்திருக்கும் அந்தக்குடும்பத்து தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் அவர்கள் போராடப்போன இராணுவத்தாலேயே அநியாயமாய் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவர்களின் தாயார் குற்றுயிராய் Adaவினால் காப்பாற்றப்பட்டாலும், பேச்சிழந்து போகின்றார்.

இறுதியில் Adaவும் Inmanம் சந்திக்கின்றனர். பிரிவும் காதலும் பெருகிவழிய உடல்கள் கலக்கின்றன் அந்த இரவில். எனினும் ஊரில் பகல்வேளைகளில் தங்குவது ஆபத்து என்பதால் மலையடிவாரத்திலுள்ள ஒரு குடிசையில் Inmanஐ தங்கச் சொல்லிவிட்டு Adaவும் அவளது தோழியும் ஊரிற்கு கிளம்புகின்றனர். இதற்கிடையில் எங்கையோ தகவல் கேள்விப்பட்டு வருகின்ற Inmanனின் இராணுவத்தினர் Ada வையும் அவளது தோழியையும் சுற்றி வளைக்கின்றனர். Inman தனது ஓளிவிடத்தைவிட்டு வர துப்பாக்கிகள் வெடிக்கின்றன. இறுதியில் எல்லோரும் இறக்கின்றனர் Adaவையும் அவளது தோழியையும் தவிர. சொற்பகாலத்தில் காதல் முகிழ்ந்து அதற்காய் நெடுந்தனிமைப்பயணம் செய்து ஒருநாளையும் விடக்குறைவாக காதலியுடன் இருந்தவன் வாழ்க்கை முடிந்துபோகின்றது. I came back for you என்று Inman சொல்லவும் I love you என்று Ada கதறவும் Inmanனின் உயிர் பிரிகின்றது, முடிவில்.

.....
படத்தின் சின்ன இழையாய் காதல் இருக்கின்றது. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள்தான் Inman, Ada சேர்ந்திருக்கும் காட்சிகள் வரும். மிகுதி முழுவதும் போரே பல்வேறு சம்பவங்களாலும் உரையாடல்களாலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. நேரடியாகப் போரிற்கு எதிரான உரையாடல்கள் இல்லாதபோது காட்சிகள் சொல்லவந்த விடயத்தை நாசூக்காய் சொல்லிவிடுகின்றன. Hollywoodற்கான ஹிரோயிச/ரொமாண்ஸ் அதிகம் கலக்காது ஒரளவு இயல்பாகவும், அதிகம் போரடிக்காமலும் எடுக்கப்பட்டிருந்ததால் படத்தோடு ஒன்ற முடிந்தது.
.........
இறுதிக்காட்சியில் Ada, தனது பிள்ளையுடன் இருந்தபடி, முடிந்தகாலம் இனிப்போகட்டும், அதை எவரும் மீளக்கொண்டு வரமுடியாது, ஆனால் எப்படி சமாதானமாய் வாழ்வது என்பதை பழைய வரலாற்றிலிருந்தாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது உலகத்து அனைத்து நாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும் போலத்தான் தோன்றுகிறது.
.........
Stars:
Nicole Kidman (Ada)
Jude Law (Inman)
Renee Zellweger(Ada's friend)
Director:
Anothony Minghella (director of the English Patient)

11 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: நாராயணன்

mike testing 1,2,3 - Narayanan

24.2.2005

2/23/2005 10:01:00 PM
Narain Rajagopalan said...

மிக அருமையான படம். Welcome to Sarajevo என்றொரு படமிருக்கிறது. அதுவும், போர் சூழலில் இருந்தாலும், போரினைப் பற்றிய செய்திகள் சேகரிக்கும் நிருபர்களின் வாழ்க்கையினூடே போர்முகத்தினை சொல்லுகின்ற படம். என் டிவிடி கொஞ்சம் சொதப்பியதால், குறிப்புகள் எடுக்க முடியவில்லை. பின்பு பதிகிறேன். நான் முன் பதிந்த மைக்கேல் விண்டர்பாட்டம் [ In this world ]தான் இந்த படத்தின் இயக்குநர். கொஞ்சம் தேடிப்பார்த்தீர்களேயானால், விண்டர்பாட்டமின் படங்கள் கிடைக்கும். நவீன பிரிட்டிஷ் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இவர்.

2/23/2005 10:02:00 PM
Anonymous said...

எழுதிக்கொள்வது: Raj Chandra

நல்ல பதிவு. போர்களைப் பிண்ணனியாகக் கொண்ட படங்களைப்(கதாநாயக ஆராதனைப் படங்களைச் சொல்லவில்லை) பார்க்கும்போதே மனம் பாரமாகும். நானும் வியட்நாம் சம்பந்தமான படங்களைப் பார்த்து, பாதித்தவைகளை, என் வலைப் பதிவில் பதிந்துக் கொண்டிருக்கின்றேன்.

Cold Mountainனில் Deer Hunter படத்தின் சாயல் சற்று தெரிகிறது.

http://rchandra.blogspot.com

23.2.2005

2/23/2005 10:05:00 PM
Anonymous said...

பதிந்தது:Mathy Kandasamy

ரொம்ப அருமையாக இருந்த படம். நன்றாக எழுதியிருக்கீங்க DJ. Liked Nicole Kidman for the first time. Renee was simply superb.

As Narain said Welcome to Sarajevo was very good. Deer Hunter - i dont know it didnt affect me like Cold Mountain.

24.2.2005

2/23/2005 11:30:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே போன மாதம்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன் உங்கள் பதிவைப் பார்த்தவுடன் இன்னொருமுறை பார்க்கத் தோன்றுகிறது.இந்தப் படத்திற்கு எக்கச்சக்க விருதுகள் கிடைத்தது பற்றியும் அதில் ஒன்று சிறந்த நடிகைக்கு என்பதையும் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே

2/24/2005 12:19:00 AM
இளங்கோ-டிசே said...

கருத்துக்களைப் பகிர்ந்த நரேன், ராஜ் சந்திரா, மதி, ஈழநாதனிற்கு நன்றி.
நரென், மதி: நீங்கள் குறிப்பிட்ட Welcome to Sarajevo பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்னும் பார்க்கவில்லை.
ராஜ் சந்திரா: உங்களது லிங்கிற்கு நன்றி. நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் பற்றி உங்கள் பார்வையை பதிவுசெய்யுங்கள்.
ஈழ்நாதன்: Cold Mountain சென்ற ஆண்டு ஒஸ்காரின் பலபிரிவுகளில் விருதிற்காய் பரிந்துரைக்கப்ப்ட்டாய் நினைவு. இந்தப்படத்தில் நடித்தற்காய் Nicold Kidman ற்கு சிறந்த நடிகையிற்கான விருது கிடைத்திருந்தது. எனக்கு Nicole Kidmanஐ அவ்வளவாய் பிடிக்காது. பிடித்த நடிகை, Hollywood நந்திதா தாஸான Halle Barry. Monstor Ballல் எவ்வளவு அற்புதமாய் நடித்திருப்பார். ஆனால் இப்போது Sword Fish, Cat Woman, James Bond படம் என்றெல்லாம் நடித்து தனது திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது வேறுவிடயம்.

2/24/2005 10:38:00 AM
Anonymous said...

பதிந்தது:Karupi

டி.சே நான் இன்னும் "Cold Mountain" பார்க்கவில்லை. ஏனோ தெரியாது foreign Movies இல் இருக்கும் ஆர்வம் (இதுவும் எமக்கு foreign தான்) எனக்கு ஆங்கிலப்படங்களில் இருப்பதில்லை. ஆனால் அனேகமாக தமிழ் படங்களைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு மறந்து போய் விடுவேன். சில தெரிவு செய்த படங்களே மனதில் நிற்கின்றன. எல்லோரும் Cold Mountain நல்லது என்கிறார்கள் எனவே பார்க்க உள்ளேன். கடந்த வாரம் நண்பர்களுடன் சென்று திரையரங்கில் “Closer” உம் “Ocean’s Twelve” உம் பார்த்தேன். (ஒரு ticket இல் இருபடங்கள் ஹ ஹ) “Closer" பரவாயில்லை. “Ocean’s Twelve” பிடிக்கவில்லை. “Ocean’s Eleven” கொஞ்சம் பரவாயில்லை. நேற்று The Last Samurai” பார்த்தேன். படப்பிடிப்பு நன்றாக இருந்தது. கதையில் புதுமையில்லை.

24.2.2005

2/24/2005 11:09:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே Halle Barryக்கு Monstor Ball இல் நடித்ததற்காக Academy awards for best actress கிடைத்தது.நேற்று அமெரிக்க உள்நாட்டு யுத்ததுடன் தொடர்புடைய The Patriot பார்த்தேன் நன்றாக இருந்தது

2/24/2005 07:37:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன்! நீங்கள் சொல்வது சரிதான். Monstor's Ball ல் நடித்தற்காய் Halle Barryற்கு விருது கிடைத்தது. நிற்க, The Patriot கதாநாய விம்பம் அதிகம் உள்ள படம். Mel Gibson, அதற்கு முதல், Brave Heart எடுத்திருந்து அது வசூலில் நல்ல வெற்றியும் பெற, கிட்டத்தட்ட அந்தப்பாணியை பின்பற்றி இதையெடுத்து நல்ல அடிவாங்கியிருந்தார். The Brave Heartல் வீரதீர பராக்கிரமங்கள் இருந்தாலும் பார்க்கக்கூடிய நல்ல படம். அந்தப் படத்தைப் பார்ந்தபின் தான், அநேக அயர்லாந்து மக்கள் தங்களுக்கென்று இப்படியொரு வரலாறு இருந்ததாய் அறிந்துகொண்டார்கள் என்று எங்கையோ வாசித்தாய் நினைவு.
........
கறுப்பி, Ocean Twelve இரவில் கடைசி show பார்த்த என்னை, தியேட்டரில் விரைவில் தூங்க வைத்த படம். Hollywood Superstarsகள் (George Clooney, Brat Pitt, Matt Damon, Julia Roberts, Catharine Lee Jones) இருந்தாலும் கதையொன்று ஒருவிடயம் இல்லாவிட்டால், அமெரிக்காவிலும் படம் ஊத்திக்கிடும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம் (தமிழ்நாட்டிலே நம்ம superstarன் பாபா :-).

2/25/2005 12:03:00 AM
Narain Rajagopalan said...

டிசே, இதிலிருக்கிற இன்னொரு சுவாரஸ்யம், கமலின் மருதநாயகம் [வருமா? வராதா?] முழுக்க முழுக்க ப்ரேவ் ஹார்ட்டின் தமிழக தழுவலாக வரவேண்டியது. டிரைய்லர் பார்க்கும்போதே தெரிந்துவிட்டது [ அது சரி, எங்கியாவது எடுத்த வரைக்கும் மருத நாயகம் கிடைக்குமா ?;-)]

ப்ரேவ் ஹார்ட், தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லும் பாணியிலும் என்னை அசத்திய படம். அத விடுங்க. Passion of the Christ அங்க கனடாவிலயோ, அமெரிக்காவிலயோ லிமிடட் எடிஷன்னு மெல் கிப்சன் சொன்னதாக ஞாபகம். ரிலீஸாகியாச்சா?

2/25/2005 12:31:00 AM
இளங்கோ-டிசே said...

//கனடாவிலயோ, அமெரிக்காவிலயோ லிமிடட் எடிஷன்னு மெல் கிப்சன் சொன்னதாக ஞாபகம். ரிலீஸாகியாச்சா?//
நரேன் இங்கையும் தியேட்டர்களில் The passion of the Christ ரிலீசாகி இருந்தது . சென்ற வருடத்து Easter நேரத்தில் சனங்களின் நாடித்துடிப்பறிந்து வந்து, நல்ல வசூலானது. சரியாக விபரம் தெரியவில்லை, இங்கே வெளியிடப்பட்டது limited edition தானா என்று. ஆனால் வத்திகானுக்கும், அமெரிக்காவிலுள்ள Jew communitiesற்கும் படத்தை முதலில் திரையிட்டுக்காட்டி சம்மதம் பெற்றுத்தான் வெளியிடப்பட்டது என்று கேள்விப்பட்டனான் (இந்தியாவிலை RSS மாதிரி இங்கே யூதர்களின் ஆதிக்கம். மிக சாதுர்யமாக பின்னாலிருந்து காய்களை நகர்த்துவார்கள்). அப்படியிருந்தும் படம் வந்தபின் பல இடங்களில் யூதர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாய் கேள்விப்பட்டேன். Holocust போன்றவற்றில் யூதர்கள் அநியாயமாய் இலட்சக்கணக்கில் இறந்தாலும், அவர்களோடு இலட்சக்கணக்கில் நாசிகளால் படுகொலைசெய்யப்பட்ட ஜிப்சிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சோவியத் போர்க்கைதிகள் பற்றி எதுவுமே மூச்சுவிடாமல், யூதர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் என்று இன்று உலகத்தை பேசவைப்பதில் வல்லவர்களான அவர்களிடம் வேறெதை எதிர்ப்பார்க்கமுடியும் :-(?

2/26/2005 12:52:00 AM