நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ரமேஷ்-பிரேம்: சில குறிப்புக்கள்

Monday, February 21, 2005

ரமேஷ்-பிரேமின் படைப்புக்களை சில வருடங்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் எழுத்து நடைக்குள் என்னால் புக முடியாது மூச்சுத்திணறி வெளியில் வந்து விழுந்திருக்கின்றேன். பிறகு அவர்களது கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல் என்று கொஞ்சம் பொறுமையாய் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் பிரதிகளை எப்படி வாசிப்பதென்ற இழை புரிபட வாசித்தல் இலகுவாயிற்று. சிலருக்கு சிலரது எழுத்தைக்கண்டவுடன் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதுபோல் இன்றையபொழுதில் நானும் ரமேஷ்-பிரேமின் படைப்புக்கள் கண்ணில்பட்டால் முதலிடம் கொடுத்து வாசிக்கத்தொடங்கிவிடுவேன்.

எனக்குத் தெரிந்த அளவில் ரமேஷ்-பிரேம் புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு என்றொரு சொல் என்ற இரு நாவல்களை எழுதியுள்ளனர் என்று நினைக்கின்றேன். சொல் என்றொரு சொல்லை நான் வாசித்திருக்கின்றேன். வித்தியாசமான கதை சொல்லலில் என்னை ஈர்த்த புத்தகம். 'பல்வேறு கதைகள் தொகுப்பட்டாலும் தமிழ் என்ற தொன்மத்தைக் கண்டறியும் முயற்சியானது அடியோட்டமாக உள்ளது' என்று முருகேசபாண்டியன் ஒரு விமர்சனத்தில் சொன்னது சரிபோலத்தான் வாசித்தபின் தோன்றியது. இந்த நாவல் பாண்டிச்சேரி அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் பரிசொன்றுக்கு பிரபஞ்சனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, sex அதிகமாக இருக்கிறது என்று பம்மாத்து காரணம் சொல்லி விருது வழங்கப்படாது தடுக்கப்பட்டதாய் கேள்விப்பட்டிருந்தேன் (எனக்குத் தெரிந்த நண்பர் இதற்குக்காரணம் ரமேஷ்-பிரேமின் சாதியே முக்கிய காரணம் என்று கூறியிருந்தார். தகவல் சரியா தெரியவில்லை). சொல் என்றொரு சொல் நாவல் வாசித்தபின் எனக்குள் நிரம்பியிருந்த பல இடைவெளிகளை பிறகு ந.முருகேசபாண்டியன் பன்முகத்தில் இந்த நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனம் நிரப்பியிருந்தது. எப்படி ஒரு விமர்சனம் நேர்மையாகவும், பிரதியின் தவறவிடப்பட்ட பக்கங்களைக் காட்டவும் வேண்டும் என்பதை முதல் முதலாய் நான் அறிந்துகொண்டதும் ந.முருகேசபாண்டியனின் விமர்சனத்தின் மூலம்தான்.

முன்பு ஒரு காலத்தில் நூற்றெட்டுக்கிளிகள் இருந்தன ரமேஷ்-பிரேமின் சிறுகதைகளுள் ஒன்று. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தக்கதையும், ஜெயமோகனின் பத்மவியூகமும் பலரால் பாராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தக்கதை போபால் சயனைட் வாயுக்கசிவை பின்புலமாககொண்டு எழுதப்பட்ட அற்புதமான கதை. மனிதர்களில் தூசிபடிவதுபோல மரணமும் படிவதை வாசிக்கும்போது கண்முன்னாலே அந்தப்பிரதி கொண்டுவந்திருந்தது. ரமேஷ்-பிரேமின் எந்தக்கட்டுரைத் தொகுப்பையும் நான் வாசிக்கவில்லை. எனினும் சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின் நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள் முக்கியமான தொகுப்பென்று வாசிந்தவரையில் அறிந்திருக்கின்றேன். இது தவிர இளையராஜா பற்றியும், கி.ராஜநாராயணன் பற்றியும் கட்டுரைத் தொகுப்பு அவர்கள் போட்டிருக்கின்றனர். இன்றையபொழுதில் உயிர்மையில் தொடர்ந்து பத்திகள் எழுதிக்கொண்டு வருவதை ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன். அவற்றை வாசிக்கும்போது அவர்களது பரந்த வாசிப்பும், எழுதும் பொருள் பற்றிய ஆழ்ந்த அறிவும் இலகுவில் நம்மால் அடையாளங்காண முடியும். வேதத்தைப்பற்றி கட்டுடைத்து எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைக்கு அவர்கள் காட்டிய பொறுமை என்னைக் கவர்ந்திருந்தது. 'வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என சம்ஸ்கிருதத்தில் உள்ள நூல்கள் 'பிரதிகள்' என்ற அளவில் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் ஆய்வு செய்யவும் உகந்தவை. அவை போதையும் லயிப்பும் கொண்ட மொழிபுகள். இதில் கருத்து மாறுபாடுகள் எஙகளுக்கு இல்லை. ஆனால்...' என்று நிதானமாய் அந்தப் பிரதியைக் கட்டுடைக்கும் அவர்களின் முறைமை பிடித்திருந்தது.

இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் மற்றும் கறுப்பு வெள்ளைக் கவிதை என்று இரண்டு தொகுப்புக்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். அநேகமான இவர்களது கவிதைகள் நீண்டவை (கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த ஈழத்துக்கவிதைகளை நினைவுபடுபவை). ஆனாலும் வாசித்தபோது எனக்கு அலுப்புத்தட்டாதிருந்தது. கவிதையில் எதையாவது சொல்லித்தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இவர்களது கவிதைகள் எனக்குப் புரிய வைத்திருந்தன. சொல் என்றொரு சொல்லில் இடையிடையே பயன்படுத்தப்பட்ட கவிதைகள் கறுப்பு-வெள்ளைக் கவிதை தொகுப்பிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உரைநடைக்கு அண்மையாகவும் ஆனால் கவிதைகளுக்குரிய சாயலோடு மொழியில் இவர்கள் செய்யும் புதுமைத்தனங்கள் அனுபவித்து வாசிக்கக்கூடியவை.
......
புலம்பெயர் சூழலில் அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து கெளரவித்து அனுப்பியபடி இருக்கின்றார்கள் (சும்மா இருக்கமுடியாது வாற சனங்களோடு என்னைபோன்றதுகள் கண்டதையும் கேட்டோ எழுதியோ அவர்களைக் 'கஷ்டப்படுத்துவது' வேறொரு புறம் இருக்கட்டும்). நானும், எனக்கு ஒரு 6/49யோ அல்லது super 7 விழுந்தால் சில படைப்பாளிகளை இங்கே அழைப்பதாய் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன். சோலைக்கிளி, யூமா வாசுகி, அமரதாஸ் என்ற பட்டியலில் ரமேஷ்-பிரேமையும் எப்போதோ சேர்ந்துவிட்டேன். இதை வாசிக்கும் அனைவரையும் எனக்கு மில்லியனில் lotto விழும்படி பிரார்த்திக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
.......
ரமேஷ்-பிரேமின் கறுப்பு வெள்ளைக் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

செம்பருத்தித் தீவு

சூழலின் கொலை வெளியில்
மொழியின் பதுங்கு குழிக்குள்
நிகழும் பிரசவம்
செவிக்கெட்டும் திசைகளில்
துப்பாக்கிகளின் தொடரோசையும் மீறி
தன்னுள் சுவாசம் இழைய வீறிடும்
ரத்தம் பிசுபிசுப்போடு கவிதை

ஆயுத முனைகளால் சுற்றி வளைக்கப்பட்டன
வார்த்தைகள்
கொல்வதை நேர்த்திமிக்கதாக்குவதில்
தொழில் நுடபப் பாங்கு
ஒரு கண ஒலித் தொடரில்
சரிந்தன சடலங்கள்

மூலையில் சருகுகள் மீது விரிக்கப்பட்ட துணியில்
நெளியும் பசுஞ்சதைப் படைப்பின்
வாயில் விரல் நுழைத்து
அரசிலைத் துளிரென நாவைக் கிள்ளியெடுத்து
குண்டு துளைக்குச் சிதையாத
தாயின் மறு முலையில்
அலறும் வாய் பொருத்தி மீளும்
வேறினத்து மொழி

0

கடல் நடுவில்
இதுவரை நான் தீண்டியறியாத
எனது உடம்பினோர் உறுப்பெனக்
குருதி வழியும் நீ

எனது கரையொதுங்கும்
உனது வலி
உன்னை நோக்கி விழையும்
எனது உணர்த்தல்களின் பாய்மரங்கள்
நடுக்கடலில் எரிகின்றன

வெட்டி வீசப்படும்
உனது கிளை விழுங்கி
எனது வலையில் சிக்கிய
மீன் வயிற்றில்
உனது மோதிர விரல்

0

பாதாள அறையில்
வாய்கள் தைக்கப்பட்டுச்
சுவரோடு பிணைக்கப்பட்ட
உடல்களின் சங்கிலியோசையை
மேற்பரப்பில் செவிபடிந்து கேட்கும்
குழந்தைகளுக்குப்
பூமி சிரிக்கிறது என்று
இனிச் சொல்ல முடியாது

இந்தத் தண்டனை வெளிக்கு அப்பால்
வேறு நிலத்திலிருந்து
மண் குடைந்து வளர்ந்து வரும் வேர்கள்
பாதாளச் சுவரைப் பொத்து
அறையினுள் படர்கின்றன

சுவரில் படரும் வேர்கள் தீண்டிச்
சிலிர்ப்புறும் உயிருள்ள உடல்களில்
பற்றிப்படர்ந்து
உயிர்ச்சாறு வேர்களின் வழியே
மரங்களை நோக்கிப் பாய்கிறது

வலையாய்ப் படர்ந்த வேர்கள்
புதர்ந்து புடைத்த உடல்களினுள்
சுழலும் கண்களைக் கண்டு
பிணந்தின்னும் எலிகள் மருளும்
பிணக்கிடங்கின்
எல்லை தாண்டிய வேர்களின் மரங்களில்
தையல் பிரிந்து வாய் மலரும் பூக்கள்
எனது வெளியில்
உனது விடுதலையைப் பாடுகிறது
எனது மொழியில்
உனது காதலைப் பாடுகிறது

இழக்கப்படாத
மொழி மட்டுமே
அகதிகளின் நாடு-எனச் சொல்லும்
தமிழ்ப்பூவில் அசைகிறது
உனது புலி நாக்கு

0

விழிப்பற்ற உறக்கத்தின்
கொடுங் கனவிலிருந்து மீண்ட
பெருவிழிப்பாய்
மீட்கப்பட்ட எனது மூதாதையர் நிலத்திற்கு
மீண்டும் வருகிறோம்

அரசமரத்தைச் சாட்சி வைத்துத்
திரும்பி வருவேன் என்று
ஆயுதங்களோடு மறைந்தவனின்
ஆண்டுகள் பலகழிய
அம்மரத்திலென் பெயர் செதுக்கி
நிலம் விட்டு நிலம் மாறி
அகதியாய் முற்றி உருமாறி
மீண்டும் ஊர் மீண்டேன்

நிலமும் வயோதிகத்தில் நோயுற்றிருக்கிறது
இருந்தவை எல்லாம் அழிந்துவிட்ட ஊரில்
இன்னும் உயிருடன் இருக்கிறது அரசமரம்
நெளிந்து நீண்டு வடிவம் சிதைந்த
என் பெயருக்குப் பக்கத்தில்
செதுக்கப்பட்டிருக்கிறது அவனது பெயர்
காலத்தில் என்றோ
என்னைத் தேடி வந்து போனதின் நிரூபணமாய்

கால காலமாய்ப்
பூமிக்குள் புதைந்த
உடம்புகளனைத்தையும் திரட்டிப்
பொம்மை செய்து
மரத்தடியில் வைக்கிறேன்
மழையில் உருவம் கரைவதற்குள்
அவன் வரவேண்டும் என்ற
பிரார்த்தனையோடு

0000000

9 comments:

-/பெயரிலி. said...

நல்ல பதிவு

2/21/2005 01:14:00 AM
சுந்தரவடிவேல் said...

உங்களுக்குப் பணம் திரளக் கடவது!

2/21/2005 03:17:00 AM
Thangamani said...

சொல் என்றொரு சொல்லை நான் வாசித்தேன். அது ஒரு நல்ல காத்திரமான படைப்பு. நடையும்கூட பல இடங்களில் என்னைக்கவர்ந்ததே.

அப்புறம் போபால் அணுஆயுதக் கசிவல்ல, மீத்தைல் அய்சோ சயனைட் வாயுக்கசிவு. (இது தகவலுக்காக).

உங்கள் விருப்பம் நிறைவேறட்டும்.

2/21/2005 04:17:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

முதலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்த நாலைந்து பின்நவீனத்துவ வாதிகளோடு என்னையும் கனடா கூப்பிட வாழ்த்துக்கள்.

ரமேஷ் பிரேமின் கட்டுரைகளை உயிர்மையில் வாசித்து வருகிறேன்.தர்க்கங்களின் அடிப்படையில் முறையாகக் கட்டியெழுப்பப்படும் கட்டுரைகள் என்னைக் கவர்ந்தவை.பெயரிலி கூட காலச்சுவட்டிலிருந்து ஒரு கவிதை உருவி தான் வலைப்பூ ஆசிரியராக இருக்கும்போது போட்ட ஞாபகம்.

2/21/2005 04:25:00 AM
Narain Rajagopalan said...

ஆச்சரியம்!! நேற்று தான் பிரேம்-ரமேஷின் இளையராஜா இசையும் அழகியலும் படித்தேன். இன்று பிரேம்-ரமேஷ் பற்றிய உங்கள் பதிவு. இளையராஜாவின் படங்களை குறிப்பிடாமல், குறிப்பிட்ட பாடல்களைக் கொண்டு விரிவாக்காமல், ஒரு நல்ல, ஆழமான புத்தகமது. உயிர்மையில் அவர்களின் பத்தியை ஆவலுடன் வாசிப்பவன் நான், கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும். மிகத்தீவிரமாக, தர்க்கரீதியாக அவர்கள் இரண்டொரு மாதங்களுக்கு முன் எழுதிய அமெரிக்க வரலாறு [கொலம்பஸ் கொன்றழித்த பழங்குடிகள் என்று தொடங்கும் என்று நினைவு ] சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த அரசியல் பதிவுகளில் ஒன்று.

2/21/2005 04:59:00 AM
கறுப்பி said...

பிரேம்-ரமேஷின் பல படைப்புக்களை நானும் தொடர்ந்து படித்து வருகின்றேன். என்னை மிகவும் கவர்ந்தது அவர்களுடைய "முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன" என்ற சிறுகதைத் தொகுப்பில் வந்த அந்தக் கதைதான்.
ஒன்று மட்டும் எனக்கு இன்னும் புரியாமல் இருக்கின்றது எதற்காக இருவர் இணைந்து படைப்புக்களைத் தருகின்றார்கள். அது எப்படி சாத்தியமாகின்றது. அவர்களுடைய ஒரு நேர்காணலில் படித்த ஞாபகம் ஒரு படைப்பை இருவரும் மாறிமாறி எழுதுவார்கள் என்று.

நான் அண்மையில் படித்து வியந்த சில நாவல்கள் கீழே தருகின்றேன் இவற்றில் தாங்கள் எதையாவது படித்தீர்களா? தற்போது நான் மிகவும் பிஸியாக இருப்பதால் அதிகம் எழுத முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது அந்த நாவல்களுக்கான விமர்சனங்களைத் தரலாம் என்றுள்ளேன்.
“புலிநகற்கொன்றை”
“ஏழாம் உலகம்”
“ரத்த உறவு”
“நெடுங்குருதி”
“யாரும் யாருக்கும் சொந்தமில்லை” (உமா மகேஸ்வரியினது) தலைப்பு சரியோ தெரியவில்லை.
இந்த நாவல்கள் பற்றி கருத்துப் பரிமாற விரும்புகின்றேன்.

2/21/2005 09:40:00 AM
கறுப்பி said...

ஒரு சிறிய பிற்குறிப்பை எழுத மறந்து விட்டேன்.
நான் கடவுளிடம் டி.சே க்கு 6/49 விழுத்துங்கள் என்று கேட்டதற்கு கடவுள் சொல்கின்றார் தான் பல தடவைகள் விழுத்துவதற்கு யோசித்தும் முடியாமல் போய் விட்டதாம் காரணம் தாங்கள் அந்த வாரத்திற்கான பற்றுச் சீட்டையே வாங்கவில்லையாம். இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்?

2/21/2005 09:54:00 AM
இளங்கோ-டிசே said...

கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தங்கமணி, தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அலாஸ்காவில் இருந்தாலும் alertயாய் தானிருக்கின்றீர்கள் :-). ஈழநாதன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எப்போது பின்நவீனத்துவவாதியாக மாறினீர்கள்? சாரு நிவேதிதாவும் சிங்கப்பூர் பக்கம் நடமாடியதாய் ஒருகேள்வி. அதற்குப்பிறகா :-). கறுப்பி, நீங்கள் குறிப்பிட்டிருந்த புத்தங்களில் ரத்த உறவு மட்டும் வாசித்திருக்கின்றேன். நெடுங்குருதி கொஞ்சம் வாசித்தபடி கிடக்கிறது. நீங்கள் வாசித்தவற்றை நேரங்கிடைக்கும்போது உங்களின் பார்வையாய் எழுதினால் நன்றாகவிருக்கும்.

2/22/2005 12:09:00 AM
WordsBeyondBorders said...

//இந்த நாவல் பாண்டிச்சேரி அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் பரிசொன்றுக்கு பிரபஞ்சனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, sex அதிகமாக இருக்கிறது என்று பம்மாத்து காரணம் சொல்லி விருது வழங்கப்படாது தடுக்கப்பட்டதாய் கேள்விப்பட்டிருந்தேன்//
'Gravitys Rainbow' வுக்கும் இந்த நிலை தான் 'புலிட்சர் விருதில்'?. இன்று தான் தங்கள் பதிவை படித்தேன், அதனால் இத்தனை தாமதமான பின்னூட்டம். (இன்னும் சில இடங்களிலும்). மன்னிக்கவும்.
அஜய்

1/29/2011 02:01:00 AM