*கல்யாண்ஜியின் கவிதை
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
-கல்யாண்ஜி
{அந்நியமற்ற நதி}
*இந்தக் கவிதைக்கு தலைப்பில்லையெனினும் ஒரு குறிப்புக்காய் பெயரிட்டிருக்கின்றேன் (~டிசே)
நீங்குதலின்றி
இன்றிரவையும் தொலைவிலிருந்தபடி
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றாய்
வியர்வை ஊறும் உடலில்
மீந்திருக்குமுன் ஸ்பரிசங்களின்
தடயங்களை
நினைவுகளால் சுரண்டியபடி
சந்திப்பின் ஞாபகங்களைத்
தடவிக் கரைகிறேன்
பிசுபிசுக்கின்ற இரவை
உலர்த்தி மடிக்கிறது சுவாசம்
பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்
பிறகது
ஒரு புகைச்சித்திரமாய்
இருளின் வர்ணங்களில்
கூடிநிரம்புகிறது
பிறகு நிலவின் ஒளியில்
எரிமலைக் குழம்பாகி வழிந்தோடி
தெருவின் நிசப்பத்திற்குள் ஊடுருவிப்
படர்ந்து அதன் விதிகளை எரிகிறது
நிலவொளி
நனைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு பெய்த மழையையும்
எனது காதலையும்
-சல்மா
{பச்சை தேவதை}
மெளனப்பாதை
முதல் ரயில் பயணம்
வற்றாத அனுபவம் நிறைந்து
உன்னுடனான முதல் பயணமும்கூட
சக்கரம் வேகம் தூரம் காலம் பிரமிப்பு
என் முகம் ஜன்னலில் வெட்டும் காட்சிகளினூடாக
பால்ய காலத்தைப் பற்றிப் பேசிகொண்டுவருகின்றேன்
நாம் இறங்கும் இடம் வந்தவுடன்
என் மீது கோபமா
பயணம் முழுவதும் என்னிடம் பேசவில்லையே என்கிறாய்
உன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தேன்
இதழ் பிரியாத சிரிப்புடன் கனவிலா என்கிறாய்
நீ அருகில் இல்லாச் சமயங்களிலும்
உன்னுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறேன்
காலம் வெளி அற்ற நம் உறவுகள்
சக்கரத்தின் ஓயாத உராய்வுகளோடு கிடக்கும்
நமது உடல்கள்
-மாலதி மைத்ரி
{சங்கராபரணி}
மரப்பாச்சிகள்
இரண்டாம் பருவத்தில்
காதலிக்கும் பெண்
கணவனைச் சுமந்தபடி காதலித்துக்கொண்டிருக்கின்றாள்.
இதுவே காதலிக்க ஏற்ற பருவம்
என்பது வெளிப்படையானது
விடலைப்பருவக் காதலில்
காதலுமில்லை
காமத்தின் ருசியுமில்லை
என்பது தெளிவாயிற்று.
காதலிக்கும் பருவத்தின்
புள்ளிகளை இணைத்து
குழந்தைகள் வரையும் கோலங்கள்
தளர்ந்தாட்டங்களில் சுருக்கங்களை
ஏற்படுத்திவிட்டன.
குழந்தைகளின் பாதியளவுக்கு மண்ணில் புதையுண்ட மரப்பாச்சிகள்
மழை முடிந்த தனிமையில்
உயிர்கொண்டு எழுகின்றன
உடலுக்குள்ளிருந்து முளைப்பது போல
கணவனின், சைக்கிள் பின்னிருக்கையில்
அல்லது இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
அமர்ந்து வெளியடித்துச் செல்கையில்
இரண்டாம் பருவத்தில் கதவுகளைத்
திறந்துவைக்கிறாள்.
முதல் பருவத்து காதலுக்கான
தடைகள் விவாதிக்கப்படுபவை
வெளிப்படையானவை
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்
ஒத்துக்கொள்பவை.
இரண்டாம் பருவத்துக் காதலில்
காதலன் காத்திருப்பதில்லை
கடிதம் தருவதில்லை
காற்றில் புழுதிபோல - அவன்
பறந்து கொண்டிருக்கின்றான்.
நிமிர்ந்து முகம்பார்க்க இயலாத
காதலன் யாரென்றும் தெரியவில்லை.
-லக்ஷ்மி மணிவண்ணன்
{வீரலெட்சுமி}
காதல் விதை
சப்தங்களுக்குள் என் மெளனம்
அமுங்கிக் கிடந்தது
சப்தம் அடங்க என் மெளனம்
துருத்திக் கொண்டு நின்றது
நடமாடும் சலங்கைத் தாரை
என் மனவெளியின் அந்தரத்திலிருந்து கொட்டியது
நனைந்து கொண்டிருந்த நான்
முழ்கிக் கொண்டிருக்கின்றேன்
அடுத்த கணம்
எனக்கும் அப்பாலான வெற்றிடத்தில்
சப்தம் மட்டும் சுழித்துக் கொண்டோடும்
கரையில்
கறுப்பாய் படிந்திருக்கும் என் நிழலில்
புதைந்திருக்கும்
முளைப்பதற்கான உக்கிரத்துடன்
உன் முகம்
-ரமேஷ்-பிரேம்
{கறுப்பு-வெள்ளைக் கவிதை}
சின்னக்குறிப்பு:மனுஷ்ய புத்திரனின் கட்டுரைரையும் அவர் பதிந்துவருகின்ற கவிதைகளையும் வாசித்த பாதிப்பில் இவற்றை பதிகின்றேன். வாசிப்பவர்களுக்கு அவரவர்களின் முன்னாள், இன்னாள் ஞாபகங்கள் நினைவில் வரக்கூடும். அப்படிவரும்பட்சத்தில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு (நல்லதுXநல்லது அல்லாதது) நான் பொறுப்பற்றவன் என்பதையும் (என்னையும் சேர்த்து) இத்தால் குறித்துக்கொள்கின்றேன்.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உயிர்மை வலைப்பதிவைத் தொடர்ந்து உங்கள் வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் மிகவும் சிறப்பானவை. ஏற்கனவே படித்த அவற்றை மீள நினைத்துக் கொள்ள உதவியதற்கு என் நன்றி.
2/13/2005 09:39:00 PMஅன்புடன்
மனுஷ்ய புத்திரன்
டிசே, எப்படி சொதப்பினேன் என்று ஞாபகமில்லை, நீங்கள் பதிந்த அதே மாலதி மைத்ரியின் கவிதையை தான் நானும் பதிந்திருக்கிறேன். ஏதோ ஒரு அலைவரிசை ட்யூனாகி கொண்டு வருகிறது நமக்குள் என்று நினைக்கிறேன் ;-) இருந்தாலும், சற்றே குற்ற உணர்ச்சியுடன், அந்த கவிதை என் பதிவிலும் இருந்துவிட்டு போகட்டும். மனுஷ்ய புத்திரனின் மாலதி மைத்ரி கவிதைக்கான பின்னூட்டத்தில் இன்னொரு கவிதையை பதிந்திருக்கிறேன். பாருங்கள்.
2/14/2005 04:27:00 AMநன்றி, மனுஷ்ய புத்திரன்.
2/14/2005 07:03:00 PMநரேன் இதற்கெல்லாம் எதற்கு குற்றவுணர்ச்சி? மனுஷ்ய புத்திரனின் பதிவில் நீங்கள் இட்டிருந்த மாலதி மைத்ரியின் கவிதை பிடித்திருந்தது (ஏற்கனவே அந்தக் கவிதையை வாசித்திருந்ததாய் நினைவு).
Post a Comment