கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பன்னிரண்டாவது அரங்காடலும், Robotsம்

Tuesday, March 15, 2005

ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் வாரநாள்களில், ஒரு இனிய கனவைப்போல வாரயிறுதி நாள்களை எனக்குள் வளர்த்தபடியிருப்பேன். உறங்குவதைப் போன்ற நிம்மதியான, பிறருக்கு தொந்தரவில்லாத விசயத்திற்கே நான் முன்னிடம் கொடுப்பவன் என்றபோதும் சிலவேளைகளில் அதையும் மீறி வேறு சில விடயங்களை வாரயிறுதிகளில் அதிசயமாய் செய்துவிடுவதுண்டு. ஒவ்வொரு வாரவிறுதி நாள்களும் முடிந்தபின், மிகவும் சோம்பலாய் கழியும் திங்கள் செவ்வாய்களில் அவற்றை அசைமீட்டபடியிருப்பேன். வகைப்படுத்தமுடியும்போது ஒவ்வொரு வாரயிறுதி நாள்களுக்கும் நவரசங்களில் ஒரு இரசத்தை நட்சத்திரப்புள்ளியாக வழங்கி, நானும் ஒரு சுயதொழில் செய்வதாக எனக்கு நானே சொல்லி திருப்திப்படுத்திக்கொள்வேன்.

கடந்து வந்த ஞாயிறில் இரண்டு விசயங்கள் செய்திருந்தேன் அல்லது கண்கள் கொண்டு பார்த்திருந்தேன் என்றும் சொல்லலாம். மதியக் காட்சியாக ரொரண்டோவில் நிகழ்ந்த மனவெளி கலையாற்றுக்குழு வழங்கிய 12வது அரங்காடலுக்கு சென்றதும், Robots என்ற படத்தை பின்மாலைப்பொழுதில் தியேட்டரொன்றில் அண்ணாவின் மகனுடன் பார்த்ததும் குறிப்பிடச்சொல்லக்கூடிய விடயங்கள்.



பன்னிரண்டு வருடங்களாக நடந்துவருகின்ற அரங்காடலில் இதுவே எனது முதலாவது பிரவேசம். ஒவ்வொரு வருடமும் இந்த நாடகங்கள் குறித்த விளம்பரங்கள், விமர்சனங்கள் வரும்போது அதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் எழுவதும், பிறகு ஏதாவதொரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் இரசிக்கமுடியாமல் போவதும் நடந்திருக்கின்றது. நான்கு நாடகங்கள் இந்த முறை மேடையேற்றப்பட்டன. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் பிரதியான 'நரகோடு சுவர்க்கம்', சகாப்தனின் எழுத்துருவில், 'அரியது கேட்கின்', கவிஞர் புவியரசு தமிழ்ப்படுத்திய Mario Frattiயின், 'வதை' மற்றும் தர்ஷினி, செளமியா, பிரஷாந்தியின் கூட்டுப்பிரதியான 'மறுமுகம் ஆகிய' பிரதிகளே அன்றையபொழுதில் பல்வேறுதரப்பட்டவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டிருந்தது.

இத்தனைகாலமும் ஒரு இதமான, குதூகலம் கொப்பளிக்கின்ற பெண்ணாய் நான் கற்பிதம்செய்திருந்த அரங்காடல் நாடகங்களை, இருமிக்கொண்டு இறுதிநாள்களை எண்ணுகின்ற, பிணிகொண்ட ஒரு வயோதிகப்பெண்ணாய் தரிசிக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தை, என்ன செய்வாய் என் விதியே என்று அரற்றியபடி நாடகங்கள் முடிந்தபொழுதில் வீடு திரும்பினேன்.

கொஞ்சம் மனம் சலித்துபோய், எனக்குப்பிடித்தமான தொழிலை (அதுதான் நித்திரைகொள்ளுதல்) செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது, எனது அண்ணையின் மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னோடு Robots திரைப்படம் பார்க்கவரும்படி. சரி, எனது ஆசைதான் இப்படி நிர்மூலமாகிவிட்டதே, ஏன் அவனுடைய ஆசையைக் கலைப்பான் என்று பின்மாலைப்பொழுதில் அவனோடு படம் பார்க்கப் புறப்பட்டேன்.



Robots படத்தின் கதையை நான்கு வரிகளுக்குள் அடக்கிவிடலாம். Dish-Wash செய்யும் தந்தையின் துயரம் பொறுக்கமுடியாமல், தான் எதையாவது சாதித்து தன் பெற்றோரை மகிழ்ச்சியடையச்செய்வேன் என்று Robots Cityயிற்கு போகும் மகன் Rodneyயின் கதைதான் இது. சின்னச் சின்ன சங்கடங்கள் அனுபவித்து இறுதியில் செல்ல மகன் தான் நினைத்தை சாதித்து, பெற்றோரை பெருமிதத்துக்குள்ளாக்குவதோடு கதை முடிகின்றது. மிகு அற்புதமாய் animations செய்திருக்கின்றார்கள். Robin Williams, Halle Barry, Ewan McGregor காட்டூன் சித்திரங்களுக்கு குரல்கொடுத்திருக்கின்றனர். Robin Williamsன் நகைச்சுவை பற்றிச் சொல்லத்தேவையில்லை.

எனது அண்ணன் மகனோடு குழந்தையோடு குழந்தையாக, அவன் குதூகலித்ததைவிட இரண்டு மடங்கு நானும் குதூகலித்திருந்தேன். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ஒரு குழந்தையின் மனநிலையில் இருக்க வைத்த கடந்த ஞாயிறையும், அதற்குக் காரணமான அண்ணையின் மகனுக்கும் கட்டாயம் நன்றி சொல்லதான் வேண்டும். மழலைகளைச் செல்வங்களாய் கொண்ட பெற்றோர்களே நீங்களும் இந்தப்படத்தை இரசியுங்கள் என்று அந்தப்படத்திற்கு unauthorized ad agentயாய் இருந்து நான் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றேன்.

11 comments:

Anonymous said...

பதிந்தது:நாராயணன்

test

15.3.2005

3/15/2005 02:45:00 AM
Narain Rajagopalan said...

மிக அருமையான படமது. டிரைய்லரை ஆப்பிள் தளத்தில் பார்த்தபோதே தெரிந்து விட்டது. இந்தியாவில் இன்னமும் வரவில்லை. வந்து பார்த்து விட்டு பதிகிறேன்.

3/15/2005 02:45:00 AM
Anonymous said...

பதிந்தது:அல்வாசிட்டி.விஜய்

போன வாரம் தான் பஸ்ஸில் போகும் போது அங்கிருந்த டிவியில் robots மற்றும் son the mask விளம்பரங்களை பார்த்தேன். குழந்தை படம் போலிருந்ததால் அப்போதே தீர்மானித்து விட்டேன். இது போன்ற படங்கள் இந்த குழந்தைக்கும் குதூகலமாயிருக்கும்.

அது சரி, வாரயிறுதி நட்சத்திர நாள், திங்களும் செவ்வாயும் போய் விட்ட வாரயிறுதியின் இனிமையை அசைப்போட்ட படி, புதன் வரயிறுக்கும் வார நாளை அசைப்போடும் நாளை எதிர்பார்த்த படி, வியாழன் வெள்ளி வரயிறுக்கும் வார நாளை அசை போட்ட படி. ஐஐ... இன்னொரு வாரயிறுதியும் வந்தாச்சி.

15.3.2005

3/15/2005 03:18:00 AM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே! இந்த எழுத்துரு மாற்றியில் "," அதாவது கமா அடிக்கவில்லை. மாறாக வேறொரு எழுத்து அடிக்கிறது. உங்கள் டெம்பிளேற்றில் அதற்கான கோடிங்கைக் கண்டுபிடித்து எழுத்தை மாற்றி விடவும்.

3/15/2005 06:51:00 AM
கறுப்பி said...

ச்சே அட. டி.சே யார் எண்டு துப்பறிந்து கொண்டு திரியிறன். நான் 6 மணிக்காட்சிக்குப் போனதால தங்களைத் தவறவிட்டுவிட்டன். இதுதான் அரங்காடலின் முதலாவது பிரவேசம் (பிரசவம்?) எண்டு தாங்கள் சொன்னதால என்ர கெஸ்சிங்கிற்குள் இருந்தவர்கள் எல்லாம் அம்பேல். அவர்களை 6மணிக் காட்சியில் நான் கண்டேன்.
//இத்தனைகாலமும் ஒரு இதமான, குதூகலம் கொப்பளிக்கின்ற பெண்ணாய் நான் கற்பிதம்செய்திருந்த அரங்காடல் நாடகங்களை, இருமிக்கொண்டு இறுதிநாள்களை எண்ணுகின்ற, பிணிகொண்ட ஒரு வயோதிகப்பெண்ணாய் தரிசிக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தை, என்ன செய்வாய் என் விதியே என்று அரற்றியபடி நாடகங்கள் முடிந்தபொழுதில் வீடு திரும்பினேன்\\ இது நிச்சயமான உண்மை. பத்தாக உடைந்து பதினொரு முறை நாடகங்களை ஏற்றுகின்றார்கள். அடுத்த வாரம் என்னுடைய கூத்துக்கும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். சக்கரவர்த்தியின் நாடகம் எனவே நிச்சயம் போர் அடிக்காது. அதை விட முக்கியமா “கறுப்பி” முக்கிய பாத்திரத்தில் போரே அடிக்காது நான் மேடையில் நிற்கும் வரை. அதற்கு நான் கரண்டி வாருங்கள் வந்து பாருங்கள்.

பின்குறிப்பு – தங்கள் விமர்சனம் பார்த்த பின்னர் 'Cold Mountian' பார்த்தேன். அருமையான படம்.

3/15/2005 10:02:00 AM
இளங்கோ-டிசே said...

கருத்துக்களுக்கு நன்றி, நரேன், விஜய், வசந்தன் மற்றும் கறுப்பி.
வசந்தன், comma எனக்கு இங்கே வேலை செய்கின்றது. எதற்கும் ஒருமுறை templateஐ பார்க்கின்றேன்.//அசை போட்ட படி. ஐஐ... இன்னொரு வாரயிறுதியும் வந்தாச்சி//
ஆம் விஜய், அடுத்த கனவும் காணத்தொடங்கியாகிவிட்டது.

கறுப்பி, இயலுமாயின் அடுத்த வாரம் உங்கள் நாடகத்தைப் பார்க்கமுயல்கின்றேன். அரங்காடலில் உங்களின் நண்பர் நண்பிகள் எதுவும் பங்களிப்புச் செய்யவில்லையா?அரங்காடலின் ஒரு நாடகத்தில் 'ஆடலுடன் பாடல்' இருந்ததைப் பார்த்து 'அப்படிப்போடு போடு' என்று ஒரு remix அதோடு இணைத்து செய்ய நினைத்தேன். ஆனால் அரங்கத்திலிருப்பவர்கள் எல்லாம் அதைப்பார்த்து ஆடத்தொடங்கிவிட்டால், விழா நடத்தியவர்கள் என்னை நெளிந்த தகரம் போல ஆக்கிப்போய்விடுவார்கள் என்ற பயத்தில் கப்சிப்பாய் இருந்துவிட்டேன் :-).

3/15/2005 06:49:00 PM
Anonymous said...

பதிந்தது:karupy

அந்த ஆடலுடன் பாடலைச் செய்தவர் எனது நண்பிதான். அவர் அரங்காடலுக்குள் நுழைந்தபோது அரங்காடல் தாங்கள் சொன்னது போல் நிலமைக்கு வந்து விட்டது. அதன் சீரியஸ் தன்மை இனி ஒருவருக்கும் விளங்கப்போவதில்லை. நடனம் முடிய என்னிடம் வந்து கருத்துக் கேட்டார். நன்றாக இருந்தது என்று சொன்னேன். காரணம் தற்போதைய அரங்காடல் இருக்கும் நிலையை வைத்துத்தான் நாம் நிகழ்ச்சிகைளத் தரப்படுத்த வேண்டும். ஜெயகரனும் சேரனும் நாடகம் போடும் மேடையில் நடனம் ஆடியிருந்தால் அவருக்கே விளங்கியிருக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதாக. வானவில் அளவிற்கு நிகழ்வின் நிலை இருக்கும் போது யாரை யார் நோவது. முதல் இரண்டு நாடகங்களையும் பார்த்த கடுப்பில் இருந்த எனக்கு கடைசி அழகான மூன்று பெண்களை மேடையில் பார்த்த திருப்பதி.

16.3.2005

3/16/2005 10:25:00 AM
Anonymous said...

பதிந்தது:டிசே

கறுப்பி, நான் அந்த மூன்று பெண்களின் நாடகத்தை, நாடகத்திற்கான முன்னுரையை வாசித்தபின் அதிகம் எதிர்பார்த்திருந்தேன். ஆரம்பம் கூட சற்று வித்தியாசமாக இருக்க எதையாவது பார்வையாளரிற்கு விட்டுச்செல்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். எடுத்துக்கொண்ட கரு முக்கியமானதெனினும் அதை அரங்கேற்றிய விதம் தவறாகிவிட்டது. இளையவர்களாய் இருப்பதால், அவர்களை கடுமையாம விமர்சிக்காமல் நல்ல பிரதிகளை வாசிக்கவும் அரங்கேற்றவும் உற்சாகப்படுத்துகின்றேன். மனநிலை பிறழ்ந்தவராக நடித்த பையன் (வலன்ரைன்?) நலலதொரு நடிகராக வருவதற்கான சாத்தியமுண்டு.

16.3.2005

3/16/2005 03:35:00 PM
Anonymous said...

பதிந்தது:karupy

அதை முக்கியமாக இயக்கம் செய்த தர்சினியிடம் நிறம்பத் திறமைகள் இருக்கின்றன. அவர் ஒன்றும் முற்போக்கு இலக்கியங்கள் படிப்பவர் அப்படியெல்லாம் இல்லை மிகச்சாதாரணமானவர.; நான் சந்தித்த மற்றைய பெண்களுடன் ஒப்பிடும் போது வாழ்வு பற்றி மிகத் தெளிவாக இருக்கின்றார். அவரது சிந்தனைகள் என்னைச் சில சமயங்களில் வியக்க வைப்பதுண்டு. காலப்போக்கில் நல்ல படைப்புக்களைத் தரவல்லவர் என்பது என்கருத்து. 2006 இல் எனது தயாரிப்பில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன. அதில் நடிப்பதற்கு அந்த வலன்டைணைக் கேட்டுள்ளேன். (சிறிய பாத்திரம் தான்) எனது நாடகங்கள் பெண்ணியக் கருவை மையமாகக் கொண்டவை மட்டுமே. முயன்று பார்ப்போம்.

16.3.2005

3/16/2005 03:47:00 PM
Anonymous said...

பதிந்தது:karupy

அதை முக்கியமாக இயக்கம் செய்த தர்சினியிடம் நிறம்பத் திறமைகள் இருக்கின்றன. அவர் ஒன்றும் முற்போக்கு இலக்கியங்கள் படிப்பவர் அப்படியெல்லாம் இல்லை மிகச்சாதாரணமானவர.; நான் சந்தித்த மற்றைய பெண்களுடன் ஒப்பிடும் போது வாழ்வு பற்றி மிகத் தெளிவாக இருக்கின்றார். அவரது சிந்தனைகள் என்னைச் சில சமயங்களில் வியக்க வைப்பதுண்டு. காலப்போக்கில் நல்ல படைப்புக்களைத் தரவல்லவர் என்பது என்கருத்து. 2006 இல் எனது தயாரிப்பில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன. அதில் நடிப்பதற்கு அந்த வலன்டைணைக் கேட்டுள்ளேன். (சிறிய பாத்திரம் தான்) எனது நாடகங்கள் பெண்ணியக் கருவை மையமாகக் கொண்டவை மட்டுமே. முயன்று பார்ப்போம்.

16.3.2005

3/16/2005 03:48:00 PM
Anonymous said...

பதிந்தது:ஜீவா

நன்று. இனிது. மகிழ்வு.

24.3.2005

3/24/2005 10:05:00 PM