கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மல்கம் எக்ஸ்

Monday, January 08, 2007

-ரவிக்குமாரின் 'மால்கம் எக்ஸ்' நூலை முன்வைத்து-

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-

அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கும், மல்கம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். மல்கம் எக்சை முதன்மையாக வைத்து இரவிக்குமார் எழுதியுள்ள இந்நூலினுடாக எக்சின் வாழ்க்கையை விரிவாக அறிந்து கொள்ளமுடிகின்றது. மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும்- வாசிக்கும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள். இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். இவற்றைத் தொடர்ந்து வெள்ளை இனத்துவேசவாதிகள் மட்டுமில்லை, அமெரிக்க அரசின் உளவுநிறுவனமும் மல்கமை கண்காணிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பொழுதுகளில் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளை பேசி கருப்பின் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த, மலக்ம் எக்ஸ் அமெரிக்காவின் வடக்குப் பகுதியான நியூயோர்க்கில் கறுப்பின் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார்

இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது. அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் என்ற பெயரை எக்ஸ் ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர். இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது. அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, 'வினை விதைதவன் வினை அறுப்பான்' என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கறுப்பின மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.

திருமணம் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாத மல்கம் பிறகு பெற்றியை (Betty) திருமணம் செய்கின்றார். எனினும் மல்கம் பெண்கள் மீதான முற்போக்கான கருத்துகள் எதையும் கொண்டிராது -ஒரு அடிப்படை மதவாதியைப் போல இருந்தது- மல்கமின் ஆளுமையில் முக்கிய குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். எனினும் கறுப்பின் மக்களின் தலைமைக்கான தகுதியை மல்கம் கொண்டிருந்தார் என்பதை -இதைவைத்து- மறுக்கவும் முடியாது.

நேசன் ஒஃப்வ் இஸ்லாமை பிரிந்த பின்னும் மல்கமின் வளர்ச்சியை எலிஜாவினால் தடுக்கமுடியாது போகின்றது. அதேசமயத்தில் சட்டத்தின் அப்பாற்பட்ட தனது முறையற்ற மனைவியர் பற்றிய செய்தியை மூடிமறைப்பதற்கான ஒத்துழைப்பை எலிஜா கேட்டபோதும் மல்கம் மறுத்துவிடுகின்றார் என்பது இன்னும் எலிஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. 1965ம் ஆண்டு ஒரு அரங்கில் மல்கம் பேசிக்கொண்டிருக்கும்போது எலிஜாவின் ஆதரவாளர்களால் மல்கம் கொல்லப்படுகின்றார். எலிஜாவின் ஆதரவாளர்களால் இக்கொலை செய்யப்படாலும் இதன் பின்னணியில் அமெரிக்கா உளவுநிறுவனங்களின் 'சுத்தமான' கைகளும் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. மல்கமை உளவு பார்த்துப் பார்த்தே ஏழாயிரம் பக்கங்களுக்கு மேலான பக்கங்கள் உளவுத் துறையில் சேகரிக்கப்படது கவனத்தில் கொள்ளக்கூடியது.

மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மலகம் தப்பியுமிருக்கின்றார். கலகக்காரனாய் இருந்த மலமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.

மல்கம் எக்ஸ் (1965), மார்ட்டின் லூதர் கிங் (1968) இரண்டு முக்கிய கறுப்பின் தலைவர்களையும் அடுத்தடுத்து மூன்றாண்டுகளுக்குள் கறுப்பின் மக்கள் இழக்கின்றனர். இவர்கள் இருவரின் மிக்ப்பெரும் எழுச்சியானது, இனி மனிதவுரிமைகள் பேசும் எந்தத் தலைவரையும் பிரமாண்டமாய் வளர்ந்துவிடச்செய்யக்கூடாது என்பதில் இற்றைவரை அமெரிக்க அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருக்கின்றது. அதனாலேயே இற்றைய மிகு நெருக்கடி காலத்திலும் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போலவோ, மல்கம் எக்ஸ் போலவே ஒருவர் உருவாக முடியாது உள்ளது. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு (கறுப்பின, ஸ்பானிய, பூர்வீககுடிகளுக்கு, 9/11 ற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு) தங்கள் உரிமைகளுக்காய் போராட வேண்டியபயணமோ மிகவும் நீண்டதாய் இருக்கின்றது.

அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டபோது தயவு தாட்சண்யமில்லாது அதிகார்த்தை நோக்கி கேள்விகள் எழுப்பி விமர்சித்தவர்கள்தான் மார்ட்டி லூதர் கிங்கும் மலக்ம் எக்சும். இன்றைய ஈராக், ஆப்பானிஸ்தான் யுத்தங்களை விமர்சிக்கத்தேவையுள்ள வலிமையுள்ள கறுப்பினக் குரல்கள் தொலைந்திருப்பதுதான் அவலமானது. அதைவிட அதிகாரத்தின் குரலாய் இருந்து -கருப்பினத் தலைவர்களாய் ஊடகங்களால் ஆக்கப்பட்டிருக்கும்- Condoleezza Riceம், Colin Powellம் போருக்கு ஆதரவாய் அதிகாரத்தின் குரலில் பேசிக்கொண்டிருப்பதுதான் இன்னும் ஆபத்தானது.

மல்கம் எக்ஸ் பற்றிய நூலை மிக கட்டிறுக்கமான மொழியில் தேவையான விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ரவிக்குமார் எழுதியிருக்கின்றார். -வாசித்து முடிக்காமல் கையிலிருந்து எடுக்கக்கூடாது- என்பது மாதிரியான நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை ரவிக்குமாரின் எழுத்து நடை தருகின்றது. ரவிக்குமாரின் தலித்திய அனுபவங்களோடு மல்கமின் அனுபவங்களும் ஒத்துவருவதால் (ரவிக்குமாரும் இதை முன்னுரையில் குறிப்பிடுகின்றார்) இந்நூலை எளிதாக ரவிக்குமாரால் எழுதிக்கொண்டு போக முடிகின்றது . முன்னுரையில் ரவிக்குமார் குறிப்பிடமாதிரி, இஸ்ஸாமால் மட்டும் அல்ல, எந்த நிறுவனமயப்பட்ட மதத்தில் சேருவதாலும் தலித்துக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை வந்துவிடமுடியாது என்பது என்னளவான நம்பிக்கையும் கூட. மலகம் அவரது மரணத்தின் பின், கலகத்தின் குறியீடாகிவிட்டார். எனினும் இன்றும் அமெரிக்கா நகரமெங்கும் மார்ட்டின் லூதர் கிங் பெயரில் பாடசாலைகளும் தெருக்களும் பெயரிடப்படும்போது மல்கம் எக்ஸ் அதிக இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றார் என்பதை மல்கமின் கலகக்குரலிற்கு இன்னும் அதிகார மையங்கள் அஞ்சுகின்றன என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அதிகார மையங்களுக்கு மார்ட்டின் லூதர் முன்வைத்து போராடிய கிறிஸ்தவத்தை இலகுவாய் ஏற்றுக்கொள்ளவும், மல்கம் முன்வைத்த இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தயக்கங்கள் இருக்கின்றன என்ற இன்னொரு அர்த்தத்திலும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

மல்கத்தினதும், மார்ட்டின் லூதர் கிங்கினதும் கள முன்னெடுப்புக்கள், அரசியல் புள்ளிகள் என்பவை இருவேறு துருவங்கள் என்றாலும் இருவருக்கும் தமது மக்கள் மீட்சி பெறவேண்டும் என்பதே முதல்நோக்கமாய் இருந்தது. அதனால்தான் அவர்கள் மதங்களைச் சார்ந்திருந்தாலும், அம்மதங்களின் மரபான பல நம்பிக்கைகளை புறக்கணித்ததோடு, பிரார்த்தனைகளால் மட்டும் கடவுள் எல்லாவற்றையும் தந்துவிடுவார் என்று நம்பிக்கை கொள்ளாது மக்களுக்காய் களத்தில் இறங்கிப் போராடியவர்கள். பெரியார் நமக்கு இன்னும் தேவையாக இருப்பதுபோல, அமெரிக்கா தன் ஏகாதிபத்தியப் பாதங்களை -முன்னைவிட இன்னும் வேகமாய்- உள்நாட்டிலும், வெளி உலகிலும் ஆழப்பதிக்கும்போது மல்கமினதும், மார்டின் லூதர் கிங்கினதும் மறுவாசிப்புக்கள் நமக்கு இன்னும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.


(குறிப்பு: ரவிக்குமாரின் நூலின் மார்ட்டின் லூதர் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே வருகின்றன. ஒரு ஒப்பீட்டுகாய் கிங்கின் செயற்பாடுகளையும் இங்கே சேர்த்துள்ளேன்.)

12 comments:

Anonymous said...

மிகவும் தகவல் பூர்வமான பதிவு. இவர் எம்.எல்.ஏ. ரவிக்குமார் தானே?

1/08/2007 10:04:00 PM
Anonymous said...

The African-Americans have been
co-opted in to the system.A middle
class has emerged and it allies
with Democrats not with left. The
poor are in no mood for left or adventurism. They expect a better
deal from the system. So they will not rebel against Empire. Today
Martin Luther KIng is more relevant than Malcom X.Most African-Americans know that their social problems cannot be solved by romanticising poverty,broken homes and hearts, drugs. Such romanticism may sell among youth as
part of culture.But beyond that what?.Will that give solutions.
You can have nostalgia for that bygone era of Malcom X.It will never return.Hence in one sense
Malcom X is more irrelevant now
than ever before.

1/09/2007 01:50:00 AM
Anonymous said...

RaviKumar chose to become a MLA.He praises Karunanidhi.So in real life he chooses to be a honorable
person than a real rebel.All the talk about Malcom X is just a talk.

1/09/2007 01:52:00 AM
தருமி said...

பிரார்த்தனைகளால் மட்டும் கடவுள் எல்லாவற்றையும் தந்துவிடுவார் என்று நம்பிக்கை கொள்ளாது ...//

முன்பு வாசித்த போது கிடைக்காத அகன்ற பார்வை உங்கள் குறிப்பில் கிடைத்தது.

1/09/2007 03:39:00 AM
தருமி said...

used the first quote in your post in my Let us hit the nail...
thanks

1/09/2007 03:51:00 AM
இளங்கோ-டிசே said...

/இவர் எம்.எல்.ஏ. ரவிக்குமார் தானே?/
குப்புசாமி செல்லமுத்து: அநாமதேய நண்பர் குறிப்பிட்டது மாதிரி அதே ரவிக்குமார்தான்.
....
அநாமதேய நண்பர், நீங்கள் குறிப்பிடும் மல்கம் எக்ஸோ அல்லது மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் மட்டுமில்லை, சே குவேரா போன்றவர்களும் இன்று உலகம் இருக்கும் காலகட்டத்தில் மீண்டும் தோன்றமுடியாது. ஆனால் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு போவதில் தவறில்லைத்தானே.
/. The
poor are in no mood for left or adventurism. They expect a better
deal from the system./
யதார்த்தம் அதுவாய்த்தானிருக்கின்றது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த அமெரிக்க system என்றேனும் ஒருநாள் உடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எந்த பெரும் அமைப்பும் உச்சத்தை அடைந்து ஒருபொழுது சிதறி விழத்தான் செய்யும். எனவே system இல்லாதிருக்கும்போது என்னவாய் இருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதில் தவறேதுமில்லை என்றே நினைக்கின்றேன். இவைகுறித்து விரிவாக எழுத விருப்பம். இந்தச்சமயத்தில் முடியாதிருக்கின்றது. மன்னிக்கவும்.
.....
தருமி நன்றி. உங்களின் பதிவில் ஏற்கனவே -நான் குறிப்பிட்ட மல்கம் எக்ஸின் quote ஐ -பாவித்ததை இப்போதுதான் பார்க்கின்றேன். ஒத்த அலைவரிசை போலும் :-).

1/09/2007 10:05:00 PM
தருமி said...

ம்ம்...ம்.. உங்கள் பதிவிலிருந்து 'சுட்டு'தான் அங்கு இட்டேன் என்று கூறினேன்.

இவ்விடம் அவ்வளவு 'மசாலா' கிடையாது :)

1/10/2007 12:25:00 PM
சாத்வீகன் said...

மால்கம் எக்ஸ் பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி.
ரவிக்குமார் அவர்களுடைய நூலின் மதிப்புரையாக இல்லாமல் அவர் நூல் வழி நின்று மால்கமின் வாழ்க்கையை தந்துள்ளீர்கள்.

//எந்த நிறுவனமயப்பட்ட மதத்தில் சேருவதாலும் தலித்துக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை வந்துவிடமுடியாது //

அமைப்பை விட்டு வெளியேறுவது எந்த விதத்திலும் அமைப்பை மாற்ற உதவாது. அமைப்பை மறுசீரமைப்பதே எல்லா இடங்களிலும் தீர்வாக இருக்க முடியும்.
இதனால் அடையாளங்களை இழந்த எக்ஸ் களாக எஞ்சுவதே மிஞ்சும் நிலையை தவிர்க்கலாம்.

அடையாளங்களை இழக்காமல் இருப்பை வலியுறுத்தல் மற்றும் அங்கீகாரம் மிக முக்கியம்.

1/10/2007 05:32:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

நட்சத்திர வாரத்தில் போராளி நட்சத்திரங்களின் வாழ்க்கைக்குறிப்புகள்.நன்று அண்ணே நன்று.

ஆபிரிக்க அமெரிக்க இயக்குனரான ஸ்பைக் லீயின் உருப்படியான படங்களில் ஒன்று மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு.டென்சில் வாசிங்டன் மால்கம் எக்ஸாக நடித்திருப்பார்.இயக்குனர் ஸ்பைக் லீயும் அதில் நடிக்கிறார்.முடிந்தால் தேடிப் பாருங்கள்

1/10/2007 10:02:00 PM
Anonymous said...

மல்க்கம் எக்ஸ் குறித்த படம் (ஆவணப்படம்) அவரது பெயரிலேயே வெளிடிடப் பட்டது.2 வருட்ங்களுக்கு முன்பு பார்த்ததாக நினைவு..நல்லதொரு படம் முடிந்தால் பாருங்கள்.
இயக்குனர் பெயர் மறந்துவிட்டது.அது பற்றி வேறு தகவல் இருந்தல் பின்னர் சொல்லுகிறேன்

1/10/2007 11:23:00 PM
Anonymous said...

ஈழநாதன் சொன்ன படமும் அருமையானது.உண்மையில் நிறைவான தகவல்களை இந்த படம் கொண்டிருகிறது.

1/10/2007 11:26:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
ஈழநாதன், சோமி தகவல்களுக்கு நன்றி. அண்மையில் காலமான ஜோர்ஜ் ப்ரவுணின் (the godfather of soul)வாழ்க்கையையும் ஸ்பைக் லீதான் படமாக்கப்போகின்றார் என்று வாசித்திருந்தேன்.

1/14/2007 09:55:00 AM