கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சேரன்

Thursday, January 11, 2007

-'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து-

சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி, 'மீண்டும் கடலுக்கு' சென்ற வருடம் வெளியாகியிருக்கின்றது. அநேக கவிதைகளில் காமமும் குளிரும் தொடர்ந்தபடி கூடவே வருகின்றன. கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வின்ரர் பருவத்து கொடுங்குளிரைத் தாங்குவதற்கு நனவிடை தோய்தல்களும், காமம் சார்ந்த தகிப்புக்களும் பலருக்கு ஆறுதலாகின்றன. இத்தொகுப்பிலுள்ள சேரனின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கில்லாது புலம்பெயர்ந்த தனி மனிதன் ஒருவனின் வாழ்வைப் பேச முயற்சிக்கின்றன.

நெடுங்கவிதையொன்றிலிருந்து வெட்டப்பட்ட சிறு துண்டுகளோ என இதிலுள்ள பல கவிதைகள் ஒருவித தோற்ற மயக்கத்தைத் தருகின்றன. குருதியும், கண்ணீரும், சுக்கிலமும், குளிரும் பெரும்பான்மையான கவிதைகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. தொடர்ந்து சொல்லப்ப்பட்டதை சொல்லப்படுவதிலிருந்து விலத்தி, நல்ல கவிதைகளைத் தேடுவதுதான் இத்தொகுப்பை வாசிப்பவருக்கு முன் இருக்கின்ற முக்கியமான சவால்.

அநேகர் சேரனின் கவிதைகளில் (முக்கியமாய் 'நீ இப்போது இறங்கும் ஆறு'') காணப்படும் அரசியல் சமூகப் புள்ளிகளை விதந்து எழுதிக்கொண்டிருந்தபோது எனக்கு நெருக்கமாயிருந்தது அவரது அழகியல் கவிதைகள் (romantic poems) தான். அவற்றிலும் ஒரு அறிவுஜீவித்தனமான -உணர்ச்சி சம்பந்தபடாத - பார்வை அதிகம் விஞ்சி நின்றாலும் அவரது காதற் கவிதைகளை இலகுவாய் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. 'நீ இப்போது இறங்கும் ஆற்றில்' எளிமையான கவிதை என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட 'கேள்' என்ற கவிதையில் குளிரோடு தண்டவாளத்தருகின் ஒற்றைப்பூவுட்ன் காத்திருக்கும் ஒருவனின் தனிமையை/ஏமாற்றத்தை அப்படியே எனக்குள்ளும் அந்தக்கவிதையை படியவிட்டிருந்தது.

இத் தொகுப்பின் பின்னட்டை கூறுகின்ற ' எண்பதுகளில் ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கின் மையப்புள்ளியாக இருந்த சேரனின்...' என்ற குறிப்பு சற்றுப் பிசகானது. எண்பதுகளில் சேரன் மட்டுமே மையப்புள்ளியானார் என்பது குறிப்பினை எழுதிய நபர் சேரனின் கவிதையை மட்டும் வாசிப்பவராய் இருந்திருந்தாலன்றி இப்படி எழுதியிருக்கமுடியாது. சேரனுக்கு முன் எழுத ஆரம்பித்த சிலரும், பலவேறு இயக்கங்கள் தோன்றியபோது அவற்றிலிருந்து முகிழ்ந்த கவிஞர்களும் பலரும் எண்பதுகளின் ஈழத்துக் கவிதைப்போக்கின் மையப்புள்ளிகளாக இருந்தார்கள் என்பதே சரியானது. அந்தப் பலபுள்ளிகளில் சேரனும் ஒருவர். அவ்வளவே. எனினும் அந்தக் குறிப்பில் ஒரு உண்மை இருக்கின்றது. சேரன் எண்பதுகளில் எழுதிய கவிதைகளின் தொனியிலும் மொழியிலும் அவ்வளவு மாற்றமில்லாது -இருபது ஆண்டுகள் கடந்தபின்னரும்-அவரது புதிய கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதை இத்தொகுப்பை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

சேரனின் காமம் குறித்த கவிதைகளை தொடர்ந்து வாசித்தபோது ஒரு அலுப்பு வந்தது. ஆனால் இந்த அலுப்பு, ஏன் காமம் சார்ந்து நிறைய கவிதைகளை தமது தொகுப்புக்களில் எழுதும் ரமேஷ்-பிரேமை வாசிக்கும்போது வருவதில்லை என்று வாசக மனோநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தேன். சேரன் தனது கவிதை மொழியின் நடையில் புதிய பரிட்சார்த்தமான முயற்சிகளையோ, உடல்மொழி குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதே -எனக்கான- காரணங்களாய்த் தென்பட்டது. ஒரு கலைஞன் இறந்த காலத்தோடு உறைந்துப் போகத் தொடங்கும்போது அவனது வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. சேரனின் கவிதைப் பயணத்தின் வீழ்ச்சி இத்தொகுப்பில் துல்லியமாய்ப் புலப்படத் தொடங்குகின்றன என்பதே க்சப்பான உண்மை.

'அறிவின் சுடரில் / காமம் பிறக்கும் இரவே' (காதலனும் குழந்தையும்- 1) என்ற கவிதை வரிகளை வாசிக்கும்போது, காமத்திற்கும் அறிவுக்கும் என்ன வகையிலான தொடர்பு இருக்கின்றதென்ற வினா வாசிப்பவருக்கு ஏற்படுகின்றது. இத்தொகுப்பில் மட்டுமில்லை, முன்னைய தொகுப்புக்களிலும் அறிவை அளவுக்கு மீறி விதந்தேத்தும் கவிதைகளை சேரன் எழுதியிருக்கின்றார். அறிவே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்று திணிக்கப்படும் யாழ்ப்பாணியவாத்தின் மிச்சங்களிலிருந்து சேரன் இன்னும் விடுபடவில்லையோ என்ற வகையில் யோசித்துப் பார்ப்பது தவறாக இருக்காது என்றே நினைக்கின்றேன். காமத்தை அறிவுநிலையில் மட்டுந்தான் அணுகவேண்டும் என்றால், பிறகு ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வரும் விருப்பு/சுவாரசியம் என்ற இயற்கை உணர்வுகளைக் கூட குழிதோண்டி புதைக்கவேண்டி வருமோ என்றுதான் சேரனின் சில கவிதைகளை வாசிக்க்கும்போது தோன்றுகின்றது. பதின்ம வயதிலிருக்கும் ஒருவனுக்கு வரும் சந்தேகமெல்லாம் சேரனுக்கு அவரது நாற்பது வயதின்பின் வருகின்றது (கோடையில் கண்ணாடி அணிகின்ற பெண்ணை முத்தமிடுகின்றபோது). கண்ணாடி அணிகின்ற பெண்ணுக்கு முத்தமிடுவதிலுள்ள 'சிரமங்களை' ஒரு ஆராய்ச்சியாளர் அளவுக்கு சேரன் அதில் ஆய்வுகள் செய்கின்றார். வாசிக்கும் எனக்கோ, அந்தப்பெண் முத்த்மிடும்போது கண்ணாடியைக் கழற்றிவிட்டு முத்தமிட்டிருந்தால் நாமெல்லாம் இந்த அவ்திகளையெல்லாம் வாசிக்காமல் தப்பியிருக்கலாம் என்றுதான் தோன்றியது. (சேரனின் அடுத்த கவிதைகளுக்காய் என்னாளான உதவி, 'குளிரில் கொன்ராக் லென்ஸ் அணிந்த பெண்ணை முத்தமிடும்போது or லேஸிக் செய்த பெண்ணை மழைபெய்யும்போது முத்தமிட்டபோது... ) .

காமத்தின் பின்பான பொழுதில் பெண்ணைப் பார்த்து 'நீ காலத்தின் இடிபாடுகளில் சிக்கிய கூந்தல்கற்றை' என்று கூறிவிட்டு, நான் அப்படியல்ல... 'நித்திய ஈரலிப்பிலும்/ சலிக்காத முத்தத்துடன்/ கால்களற்று/ எப்போதும் பறக்கும் பறவை நான்' என்கின்ற கவிஞர் பல இடங்களில் சறுக்குகின்றார். தான் பறவை என்ற தொடர் பிரக்டனங்களை சேரன் தனது முன்னைய கவிதைத் தொகுதிகளிலும் வெளியிட்டவர். சேரனால் ஏன் தான் எழுதிய கவிதைகள் எதிலும், பெண்கள அப்படி சுதந்திரமாய் ஒரு பறவை போல பறக்கமுடியாது இருப்பதற்கான சமுக பின்புலங்களை விரித்து எழுத முடியவில்லை? பெண்களுக்கும் 'இடிபாடுகளில் சிக்கிய கூந்தற்கற்றையாக' அல்ல; தன்னைப் போல ஒரு பறவையாக பறக்க விருப்பம் அவர்களுக்கும் இருக்கும் என்ற மற்றப் பக்கத்தை ஏன் -வேண்டுமென்றே- சேரன் மறைக்கின்றார். நானும் பறவை நீயும் பறவை கட்டுகளை அறுத்து இருவரும் சேர்ந்து பறப்போம் என்று எழுதுவதில் என்ன தயக்கம் இருக்கின்றதென்று யோசிக்கும்போது 'கவிமனநிலையின்' சுயநலம்தான் கண்முன்னே விரிகின்றது. மற்றொரு சறுக்கல் என்னவென்றால், பறவையை கவிதைகளில் படிமமாக்கும்போது அநேகமாய் கட்டுக்களை, அடையாளங்களை மீறியதற்கே பாவிக்கப்படுகின்றது. பறவைகள் எதன் பொருட்டும் காத்திருப்பதில்லை என்பதையும் எவருக்காகவும் கண்ணீர் விடுவதில்லை என்பதையும் சேரனால் படிமாக்கப்படுகின்றதென்றால், ஏன் அந்த 'பறவை மனக் கவிஞன்' தனது மச்சாளுக்கும், அன்புள்ள அத்தானுக்கும் துயருறு காதைக் கவிதைகளை இத்தொகுப்பில் எழுத வேண்டும்? ஆக, தன்னோடு மனமும் உடலும் பகிரும் பெண்ணைப் பார்த்து நீ இடிபாடுகளிடையே சிக்கிய கூந்த்ல்; உன்னோடு தங்கவோ உனக்காகவோ கண்ணீர் விடவோ அல்லது சிக்கு எடுத்து என்னோடு பறக்க உதவி செய்வேன்... என்றோ கூறமுடியாது; ஆனால் உறவுகள் தனக்குச் செய்த 'தியாகங்களை' மட்டும் நினைத்து கண்ணீர் மல்க முடிகின்றது. அதை நாம் அற்புத கவிமனசு என்று நினைத்து விதந்தேந்த வேண்டும்!

'எரிமலைப் பயணம்', 'மாயன் நகரம்', 'செம்மணி' இத்தொகுப்பிலிருப்பதில் எனக்குப் பிடித்தமான கவிதைகள். அதிலும் 'எரிமலைப் பயண்த்தில்... 'மலை அடிவாரத்தில்/போர்க்கடவுள்களின் கோபம் மறைந்து கிடக்கிறது' என்று கூறிவிட்டு இறுதியில் 'கிழிந்து போன அமெரிக்க கொடி/ தூங்கிக் கிடக்கும் கடவுளின் மீது பறப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றேன்' என்று முடிவது அமெரிக்காவின் ஆதிக்கக்கரங்கள் மாயன் நாகரீக நாடுகள் எங்கும் பரவியிருக்கின்றது என்பதை சூசகமாய் வாசகருக்குத் தெரிவிக்கின்றது. அமெரிக்கா ஒரு எரிமலைக்கு நிகர்த்தது. எந்த நேரமும் ஒரு எரிமலையைப் போல உறங்காமல் இந்நாடுகளை கண்காணித்துக்கொண்டிருக்கின்றது என்ற விரிவான வாசிப்பிலும் வாசித்துணரலாம். 'செம்மணி' கவிதை, கடந்த காலத்துயரை எல்லாம் மறந்துவிட்டு செம்மணியில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் செல்போன விளம்பரப் பலகையினூடு நம் அவலத்தைப் பேசுகின்றது. நமது மண்ணையும் நீரையும் சுரண்ட வரவிருக்கின்ற அந்நியமுதலீடுகள் பற்றிய அச்சத்தையும் கூடவே யோசிக்க வைக்கின்றது.

'மாயன் நகரம்' கவிதை மெக்ஸிக்கோவைப் பற்றிப் பாடுகின்றது. பூர்வீக குடிகள் வாழ்ந்த தேசத்தை 'கடலோடி எரியூட்டினான் '(கொலம்பஸின் வருகையையோடு செழிப்பான ஒரு க்லாச்சாரம் மிக விரைவாக அழியத்தொடங்குகின்றது என்பதை நினைவு கொள்ளமுடியும்) என்று ஆரம்பிக்கின்றது. தொடர்கையில், அவ்வாறு வந்த கடலோடிகள் நாட்டிய ஆயிரக்கணக்கான சிலுவைகளில் கோடிக்கணக்கான கறுப்புத்தோல் இயேசுக்கள் அறையப்பட்டார்கள் என்று உவமிக்கின்ற இடம் அருமையானது. ஒரு கவிதையினூடு ஒரு பெரும் வரலாற்றை சிறிய விதையாய்க் கொடுக்க முடியும். அந்த விதையிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பூக்களையும் வளர்த்துப் பார்க்கவேண்டிய பொறுப்பு வாசகருக்குரியது. (ஞாபகம் வரும் வேறொரு தொகுப்பிலிருக்கும் சேரனின் இன்னொரு கவிதை, ஒரு காலடி ஒராயிரம் ஆண்டு வர்லாறு அங்கே இருக்கின்றது என்பது மாதிரி வரும் கவிதை). அந்த வகையில் இந்தக் கவிதை அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது என்று சொல்லவேண்டும்.

எனினும் இந்த அருமையான கவிதை வாசிப்பை அடுத்து வரும் 'பாணன் சதுக்கத்தில்' கவிதைசொல்லி தூள் தூளாய் உடைத்துவிடுகின்றார். அங்கே நடக்கும் கொண்டாட்டத்தில் ஒரு மாயன் நகர்ப் பெண்ணைப் புணர்கின்றதை பாடு பொருளாக்குகின்றார். எவரும் எவரையும் புணர்வதில் பிரச்சினையில்லை. தனிமனித சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறதுதானே. ஆனால் மாயன் கலாச்சார நாடுகளுக்கு, பெண்ணுடல்களுக்காய் போகின்றவன் அதை மட்டும் செய்துவிட்டு போய்விடுவான். இங்கேயிருக்கும் கவிதை சொல்லி போல அத்தேசத்தின் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு கண்ணீர் வடித்துக்கொண்டு இத்தகைய செயலைச் செய்வதை ஒரு 'கொண்ட்டாட்டமாய்' எழுதுவதில்லை. கடலோடி வந்து எரியூட்டி செழுமை நிறைந்த அத்தேசத்தைக் கொள்ளைகொண்டவர்களும் பெண்களைச் சிதைத்தார்கள். இங்கே காசு கொடுத்தோ அல்லது இல்லாமலோ கவிதைசொல்லி செயவதும் அதற்கு நிகர்த்ததுதான். முன் கவிதையில் வடிந்த கண்ணீர் இப்போது நீலிக்கண்ணீராகி விடுகின்றது.

சேரனின் சில கவிதைகளைப் பார்க்கும்பொது சேரனா திருமாளவளவனா எழுதியது என்ற குழப்பம் ஏற்படுகின்றது. எவரின் பாதிப்பு எவரில் இருக்கின்றது என்பதை வாசிப்பவர்களிடையே விட்டுவிடுகின்றேன். ஈழ/புலம்பெயர்/தமிழக விமர்சகர்களால் முன்னிலைப்படுத்தி விதந்தேந்தப்படும் இவ்விரு கவிஞர்களும் ஒரே நேர்கோட்டில் போய்க்கொண்டிருப்பது ஆபத்தானது. அந்த வகையில் பாவிக்கும் மொழி குறித்தும் படிமங்கள் குறித்தும் அவதானமாயிருப்பது இருவருக்கும் அவசியமாகின்றது.

சேரனின் இத்தொகுப்பை மூன்று முறைக்கும் மேலாய் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். இப்போது இதை எழுதுவதற்காய் இன்னொரு முறையும் வாசித்தாயிற்று. கூறுவதற்கு சற்றுத் தயக்கமிருப்பினும், தொடர்ந்து நிறைய முறை வாசித்தாயினும் ஒரு சில நல்ல கவிதைகளைக் கண்டுபிடிப்பேன் என்பதற்காய் மட்டுமே வாசித்திருக்கின்றேனே தவிர, பிற படைப்புக்கள் போல பிடித்தமான மனோநிலையில் இதை வாசிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ்க் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டைக் கடந்து வேக வேகமாய் தனக்கான குறைகளோடும் நிறைகளோடும் நகர்ந்துகொண்டிருக்கும்போது, சேரன் இன்னும் 80களின் மொழிநடையோடும், நித்திய காதலன் கன்வுகளோடும் இருப்பதுதான் -சேரனின் கவிதைகளுக்கான் இருப்பு- இன்றைய ஈழ/புலம்பெயர் பரப்பில் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதற்கான காரணமோ- என்று எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.

14 comments:

Anonymous said...

Wonderful write up!!!

--FD

1/11/2007 03:33:00 PM
மு.கார்த்திகேயன் said...

நல்லதொரு விரிவுரை தமிழன்.. இந்த பதிவை எழுத மூன்று முறை படித்தீர்கள் என்பதிலிருந்து பதிவுகளை எழுத நீங்கள் எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று புரிகிறது

1/11/2007 05:06:00 PM
IIஒரு பொடியன்II said...

வணக்கம் டி.ஜே இந்த வாரம் நீங்கள் படைத்த கட்டுரைகளை ஒவ்வொன்றாகப் படிக்கிறேன் ஒவ்வொன்றும் தனித்துவமான கட்டுரைகள்.நன்றாக எழுதுகிறீர்கள்.

சேரனின் கவிதைகளின் உச்சம் 90ற்கு முன்னரே முடிந்துபோய்விட்டது என்பது எனது கருத்து.சேரன் மட்டுமல்ல சேரனையொத்த ஈழத்துக் கவிஞர்களின் வீறுகொள் காலமும் 80 முதல் 90 வரை என்றுதான் வரையறுக்க முடியும்.90களின் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்ல கவிதைகளும்,நல்ல கவிஞர்களும் தோன்றினாலும் ஒருங்கே பார்த்தால் ஈழத்துக் கவிதைகள் தேக்க நிலையொன்றை அடைந்துவிட்டன என்றே கூறவேண்டும் சேரன்,ஜெயபாலன்,சண்முகம் சிவலிங்கம்,முருகையன்,சு.வில்வரத்தினம்,யேசுராசா,
கருணாகரன்,நிலாந்தன்,சோலைக்கிளி,நுக்மான்,
சிவசேகரம்,கி.பி.அரவிந்தன்,
மு.பொ.நீலாவணன்,செல்வி,சிவரமணி என்று இரண்டு தலைமுறைக் கவிஞர்களுடன் ஈழத்துக் கவிஞர் உலகம் தேங்கிப் போய் விட்டது அதன் பின்னர் வந்த தலைமுறை இவர்களின் வகைமாதிரியாகவே நின்று போய்விட்டது காலக்கொடுமை.

ஒரு காலகட்டத்தில் ஈழத்துக் கவிதைகளின் வீச்சு,உணர்ச்சிப் பிரவகிப்பு என்பவற்றால் மொத்த தமிழ்க்கவிதை உலகமுமே ஈழத்துக் கவிதைகளைப் பார்த்து பெருமூச்சு விட்டது போய் ஈழத்துக் கவிதை நீர்த்துப் போய்விட்டது என்ற குரல்கள் அங்கிங்கு எழ ஆரம்பித்திருக்கின்றன.

போர்,ஐரோப்பிய/கனடியக் குளிர், தட்டுக் கழுவும் வேலை என்ற சுபிரலாபங்களைத் தாண்டி வேறு தளத்திற்கு ஈழத்துக் கவிதைகள் இந்நேரம் பயணப் பட்டிருக்க வேண்டும்.பயணிக்கவில்லை அந்நிய மண்ணும்,மனிதர்களும் சவால் நிறைந்த வாழ்க்கையும் புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளும் சாத்தியப்படுத்தி இருக்கவேண்டிய தளங்களை ஈழத்துக் கவிதையுலகம் விலத்தி பாழ்வெளிக்குள் சுழல ஆரம்பித்திருக்கிறது.

சேரன் ஈழத்துக் கவிதை உலகின் மையப் புள்ளியாய் தன்னைக் கட்டமைக்க நிறையவே முயற்சித்திருக்கிறார் அந்த முயற்சியை கவிதைக்கு புதிய பரிணாமத்தை வழங்குவதில் செலவிடலாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்.இது சேரனின் ரொமான்டிசக் கவிதைகளில் மயங்கி விழுந்து அடிக்கடி தனது கவிதைகளைத் தானே போலச் செய்யும் இளங்கோ என்கிற வளரும் கவிஞனுக்கும் சேர்த்தே

1/11/2007 07:37:00 PM
-/பெயரிலி. said...

டிஜே, ஒரு பொடியன்
இருவருமே நன்றாக, நடைமுறையைப் பதிந்திருக்கிறீர்கள்

1/11/2007 08:49:00 PM
கார்த்திக் பிரபு said...

nalla eludhi irundheenga oru rendu kavidhaigalaiyum potrundhal innum sirapaga vandhrukum

1/12/2007 01:56:00 AM
Anonymous said...

/சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை/

. . . . .

1/12/2007 04:10:00 AM
தமிழ்நதி said...

டி.சே., உங்களுக்கு சேரனது எழுத்துப் பற்றி வேறு வகையான அபிப்பிராயம் இருக்கக்கூடும் என்றே இதுநாள்வரை நினைத்திருந்தேன்.
வருத்தம் தரும் விடயமென்னவென்றால், ஈழத்துக் கவிதை சேரன், ஜெயபாலன் இன்ன பிறரைத் தாண்டி வளர்ந்திருக்கிறதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். வளர்ந்து வரும் எவரும் இவர்கள் அளவிற்குப் பேசப்படாததற்குக் காரணம் என்ன...? எங்களை முன்மொழிபவர்களாக தமிழக விமர்சகர்களே பெரும்பாலும் இருக்கும் சூழ்நிலையில், அவர்களால் அறியப்படாதவர்கள் அல்லது தங்களை அறிமுகம் செய்துகொள்ளாதவர்கள் நல்ல கவிஞர்கள் இல்லையா...? மேற்கொண்டு நகரமுடியாத நதி தேங்கிப் போய் நாற்றமடிக்கும் சகதியாகிவிடும் சாத்தியங்களே அதிகம் அல்லவா...? தேங்கிவிட்டதென்னும் பார்வையை மாற்றியமைக்க இளையவர்களின் கவிதைகள் வெளிக்கொணரப்படவேண்டும். நல்ல கவிதைகள் முற்றிலும் இல்லையென்றில்லை ஆனால் அவை வெளிப்படுத்தப்படும் களங்கள் சரியாக அமையவில்லை என்பதே எனது கருத்து. நட்சத்திர வாரம் குறித்து (முன்னரே அறிவிக்கவில்லையென) ஆரம்பத்தில் ஏதோ வெறுத்துப்பேசியதுபோலிருந்தது. ஆனால், ஆக்கபூர்வமாக இருக்கின்றன உங்கள் படைப்புக்கள்.

1/12/2007 01:31:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
ஒரு பொடியன், நதி உங்களின் விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்களின் அநேக கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றேன்.

1/12/2007 03:52:00 PM
Anonymous said...

ஐயோ..சேரனா...
இப்போதும் கவிதை எழுதுறாரா...
ஈழத்துக் கவிதைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இப்போது??
காமத்தைப் பற்றியும் எழுதுறாரா..??
தமிழ்க் கவி உலகம் எலும்புக் கூடுகளின் ஊர்வலமாய் எப்போ மாறிற்று..?
நல்ல பதிவு...
இன்னும் கிழித்திருக்கவேணும்.

1/13/2007 11:44:00 PM
Maravandu - Ganesh said...

அன்புள்ள டி.சே

நல்ல பதிவு, ருத்ரமூர்த்தி சேரனின் புகைப்படத்தையும் இட்டிருக்கலாம்.
ஒரு சாயலில் சேரன் கே.ஜே . ஏசுதாஸைப் போல இருப்பார்.
0
ஆயிரம் தோள்கள் மீது
ஏறி நின்று சொல்கிறேன்
எனது நிலம் .. எனது நிலம் - சேரன்


என்றும் அன்பகலா
கணேஷ்

1/14/2007 04:24:00 AM
இளங்கோ-டிசே said...

சூரியகுமார் நன்றி.
....
கணேஷ், சேரனின் பெயரை/படைப்பை வாசித்து புளங்காகிதம்(?) அடைந்தது ஒரு காலம். அந்த ஆதர்சம் இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றதே என்பதே -என்னளவில்- கவலையானது. மேலே குறிப்பிடாவிட்டாலும் -முன்னர் சிலவிடங்களில் குறிப்பிட்டமாதிரி- சேரனின் அரசியல்/போர் கவிதைகள் அவ்வளவாய் கவராதற்கு காரணம், சேரன் பார்த்ததைவிட உக்கிரமான போரை நான் பார்த்தது ஒரு காரணமாயிருக்கலாம். அதேசமயம் சேரனின் கவிதைகள் பல 80களின் எமது ஈழப்போராட்டத்தை அடையாளப்படுத்துகிறது என்பதை மறுக்கமுடியாது.
......
சேரன் குறித்து -அவரது பாடல்களை முன்வைத்து- எழுதிய பழைய பதிவை விருப்பமெனில் இங்கே சென்று வாசிக்கலாம். நன்றி.

1/16/2007 03:52:00 PM
Anonymous said...

Good posting. He's a good poet and his language is somehting exceptional. As you have said I too did not like that anthology as I did his earliest writings. But there's a lot to talk about this.

4/14/2007 03:52:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பர், வருகைக்கு நன்றி.
............
சேரனின் இந்தத்தொகுப்புக் குறித்து அவ்வளவாய் விமர்சனங்கள் எழுதப்பட்டதாய்த் தெரியவில்லை. தங்கள் நூற்களை விற்பதற்கு 'சிறந்த வியாபார உத்தி'களைப் பாவிக்கும் காலச்சுவட்டிலாவது ஏதுவும் மதிப்புரை இத்தொகுப்பு குறித்து வந்ததா தெரியவில்லை(நான் தொடர்ச்சியாக காலச்சுவடு வாங்குவதில்லை).

4/14/2007 07:28:00 PM
Anonymous said...

Oh thanks for the welcome. Sorry but I do not have tamil machine /converter(murasu etc).
I couldn't get Kalachuvadu after August 2006. But I haven't read any criticism on 'Meendum Kadalukku'; the only criticism I read was on http://www.vaarppu.com/ in 2005. I'm not sure if it's still avail.

4/18/2007 10:54:00 PM