-பெண்களின் படைப்புகள்-
காமம்
உயரும்
மலையடிவார கும்பிகளுக்குள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு
சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று -
அவளுக்கு
(ஆழியாள் - 'துவிதம்')
....................
விஸ்வரூபம்
எதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச் சென்று அழைத்துவருவதென நிகழ்வதும்
பிற்கு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத்துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
(மாலதி மைத்ரி - 'நீரின்றி அமையாது உலகு')
....................
விருட்சங்கள்
பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது.
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்.
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாதைகளை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று.
(சுகிர்தராணி - 'இரவு மிருகம்')
....................
விடியும் பொழுதில்
உன்னை நிறுவிடவியலாத
உன் வருடலில் கிளர்ச்சியுறாத
இவ்வுடலின் மீது
பெரும் விருட்சமெனப் படர்கிற துவேசம்
இரவென் படுக்கையில் விழுந்து துடிக்க
அதிகாலையின் முதல் கதிரைக் காண
அச்சத்தோடு உறங்கி
விடியலில் மறு உயிர்கொள்வேன் நான்
(சல்மா - 'பச்சை தேவதை')
....................
முலைகள்
முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்
எவரோடு எதுவும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை....
மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.
(குட்டி ரேவதி - 'முலைகள்')
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்தக் கவிகளை நானும் படித்தேன்.
1/14/2007 12:03:00 AMஅழகிய கவிதைகள்.
ஆனால் விரகதாபம் என்று பேசும்போது
ஏன் பெண்களை மட்டும் பேசுகிறது இந்த உலகம்..??
இங்கேயும் ஆணாதிக்கமோ.
ஓஷோ பெண்களைப் பற்றி எழுதிய அற்புதமான புத்தகம் penqune publication ல் வந்திருக்கிறது.
நிறைய நிறையவே பேசுகிறது அந்த நூல்.
நிற்க, டீ.சே...உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. நான் படிக்கிறனான்,,ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை.(சோம்பல்)
அற்புதமான கவிதைகள்..
1/14/2007 03:03:00 AMமீண்டுமொறு காமத்துபாலா..???
சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com
நன்றி நண்பர்களே.
1/14/2007 11:30:00 PM...
வாசித்த வேறு சில கவிதைகளையும் இட விரும்பியிருந்தேன். எனினும் கைவசம் இருந்த தொகுப்புகளிலிருந்தே தட்டெழுத்துச் செய்ய வேண்டியதாயிற்று.
Post a Comment