நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

எனது பெயரும் அகதி.

Saturday, January 13, 2007

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது பூவரசுகளிலும் கள்ளிச்செடிகளிலும் ஒளித்துபிடிக்கும் விளையாடும் வயதிலேயே துப்பாக்கிகளே தமது கடவுள் என்ற வாழ்க்கை திணிக்கப்படுகின்றது. துப்பாக்கிகள் தமது உயிரை எடுக்கின்றபோது, தமக்கான வாழ்வைக் காப்பாற்றுபவையும் துப்பாக்கிகளே என்ற புரிதலோடு துப்பாக்கிச் சிறுவர்களின் சந்ததிகள் முகிழத்தொடங்குகின்றன.

ஆயிரம் கனவுகள் உலாவித்திரிந்த வெளியில் அவனும் ஒரு மழலைக் கனவாயிருந்தான். பதினைந்துவருட தாயக வாழ்வில் தனது ஊரில் -அவனுக்கு நினைவு தெரிந்த நாள்களின் பின் - ஒரு வருடமாவது முழுமையாய்த் தன் வீட்டிலே நிம்மதியாய் இருந்தான் என்பதே நினைவில் மீளக்கொணர்வதே கடினமாயிருக்கின்றது. இரவுகளுக்கு மட்டும் நிறம் கருமையாக இருப்பதில்லை; அலைந்து திரியும் அகதிகளுக்கு பகல்கள் கூட இருட்டானவையே. உயிரின் நிமித்தம் ஊரையும் வீட்டையும் துறந்து ஒவ்வொரு ஊர்களில் தங்கியும், பின் போரின் நிழல் அங்கும் நெருங்கி அருகில் வரவர 'பாதுகாப்பான' அடுத்தடுத்த ஊர்களுக்கும் என்று அலைந்துழந்த கதை நெடியது. காலையில் ஆரம்பிப்பதுதான் பாடசாலை என்ற நினைப்பொழிந்து மத்தியானப்பாடசாலைகள் அவனைப்போனற அகதிகளுக்கு ஒரு அடையாளமாயிற்று. பாடசாலைகளுக்குள்ளும் பதுங்குகுழிகள் இருந்தன. போர் அரசர்கள் விமானத்திலும் எறிக்ணைகளிலும் ஏறிவரும்போது எப்படி தப்பிப்பதென்ற முன்னெச்சரிக்கைகளே பாடங்கள் மனதில் படிந்ததைவிட அதிகம் படிந்திருந்தன.

தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணாக்களும் அக்காக்களும் பாடசாலைகளில் இருந்து திடீர் திடீரென மறைந்துபோவதையும், சில மாதங்களின்பின் தெருக்களில் துப்பாக்கிகளுடன் தம்மைப்போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மலரவைப்பதற்காய் வெயிலில் கருகித் திரிவதையும் காண்கின்றான். மிருதங்கமும், 'எங்களின் பாதைகள் வளையாது' என்று பாடித்திரிந்து தனக்கும் கலைகளில் விருப்பை வரச்செய்த ஒரு அன்பு அண்ணா போராளியாக மாறியபோது மிருதங்கம் தொடர்ந்து பழகுவதும் அவ்வளவு பிடிக்காமற்போனது. எப்போதும் சிரித்தபடி சதுரங்கத்தின் நுட்பமான ஆட்டங்களை கற்றுத்தந்த இன்னொரு அண்ணா, போராளியாக இல்லாதபோதும் களத்தில் இறந்தவுடல்களை அகற்றப்போனபோது சினைப்பரடியில் இறந்துபோனநாளில், இது உண்மையாருக்கக்கூடாது என்று தேம்பித் தேம்பி ஒரு பின்னேரப்பொழுதில் இவன் அழுதுமிருக்கின்றான். அகதிகளுக்கு சொந்த ஊர்தான் இருப்பதில்லையே தவிர, கண்ணீரும் கனவுகளும் வற்றிப்போவதில்லைத்தானே.

போராட்டத்தின் நியாய/ அநியாயங்களை
-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் 'மனநிலையை' வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. தொடர்ந்து எழுத்துக்களில் போராட்டம் குறித்து பேசாதுவிட்டாலோ அல்லது எழுதப்படுவதில் 'பாஸிசம்' என்ற சொல்லாடலைப் பாவிக்காதுவிட்டாலோ, தீட்டுப்பட்டவனாய் ஆக்கிக்கொண்டிருக்கின்றன சில ஆகிருதிகள்(அது குறித்து எள்ளளவு கவலையுமில்லை. போரின் இரணங்கள் மழலை வயதில் சுமந்த ஒரு அகதியானவன் அதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகளிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.

இன்று பேசுவதைப்போலவே தானே -இவர்கள்- இவன் ஊரூராய் அகதியாய் அலைந்துகொண்டிருந்திருக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்திருப்பாகள்? இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது? இன்று இதைக்கூட எழுதமுடியாமல் - செய்திகளின் இலக்கங்களில் மட்டுமே வாசிக்கும் ஒரு அநியாய மக்கள் படுகொலையின் -பெருங்கூட்டத்தின் ஒருவனாய்- இவனும் நேற்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இரங்கல் குறிப்பை விட உயிர் விட்டுக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் கணங்கள் எவ்வளவு அற்புதமானது என்பது 'போர் பிதுக்கித்தள்ள பருவம் வரமுன்னரே வளர்ந்துவிட்ட' இவனைப்போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒவ்வொரு துயரங்களிலிருந்தும் அவன் தப்பியோடவே முயன்றுகொண்டிருக்கின்றான் என்பதையும், வாசிக்கும் செய்திகளின் அவலத்தில் தனது பழைய வாழ்வின் அத்தியாயங்கள் இன்னொரு சந்ததிக்கும் மீளப்புதுப்பிக்கப்படுகின்றது என்பதை அறிவதாலும்... தான் மூளைநரம்பு வெடித்து பைத்தியக்காரனாய் ஆகிவிடக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு எப்போதும் உண்டு. தப்பித்தல் என்றாலும் தனது நினைவுப்புள்ளிகள் ஊரின் -பழையசம்பவங்களின்- துயரங்களில் மையங்கொள்வதைத் தவிர்ப்பதற்காய் தன்னை இலகுவாக்கும் பொழுதுபோக்கிற்குள் அடிக்கடி புகுந்துகொள்கின்றான். ஆனால் இங்கே அரசியல் பேசும் பலருக்கு போரால் பாதிக்கப்படும் மக்களின் மனவுணர்வுகளைவிட தமக்கான அரசியல் புள்ளிகளை நிரூபித்துவிடும் எத்தனிப்புக்களே இருப்பதென்பதே மிகப் பெருஞ்சோகம். அவர்களின் எந்தப்புள்ளிக்குள்ளும் சிக்கிவிடாதிருத்தலே சாலவும் சிறந்தது.

தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன என்றும் விளங்கிக்கொள்ளமுடியும். 'எனக்கு நடைபெறும் எதிலும் உடன்பாடில்லை' என்று பொதுவாய் ஒவ்வொரு குறிப்பின்பின்னும் எழுதி எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது இலகுவெனினும்-அவனுக்கு கிடைத்த தனிமனித அனுபவங்களினூடு- அந்த முடிவுகளுக்கு மிக எளிதாய் வந்துவிடமுடிவதில்லை. தன்னில் அன்பு வைத்த அண்ணாக்கள், அக்காக்கள், ஊர் விட்டு நீங்கி வந்தபோது தொலைந்துபோன தோழர்கள், தோழிகள், உறவுகள் என்று அனைவரையும் எவரேனும் ஒருவர் உயிர்த்தெழச்செய்து தருவார்களெனின் எல்லோருக்கும் பொதுவான போரின் அறத்தையும், தவறுகளே இல்லாத வார்த்தைகளால் மட்டுமே கட்டியமைப்படும் புரட்சிப்போராட்டங்கள் குறித்த கனவுகளையும் பற்றி இவன் விரிவாகப் பேசக்கூடும்.

புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டும் அதன் தேசிய நீரோட்டத்தில் தொபுக்கடீரென வீழ்ந்துவிடாது 'அகதி' என தொடர்ந்து அடையாளப்படுத்துவது, கழிவிரக்கத்திற்காய் அல்ல. தனது தேசத்தில் இருப்பில்லாது அடித்துத் துரத்தப்படும் அகதிகளின் சென்ற தலைமுறையின் ஒரு எச்சமாய் இருக்கவே விரும்புகின்றான். தாயகமண்ணை விட அதிக சுதந்திரத்தையும், பொருளாதார வாய்ப்பையும் இந்தப் புலம்பெயர்தேசம் தந்தாலும், ஒரு கனடியப் பிரஜையாக உரிமைகொண்டாடுவதில் அவ்வளவு விருப்பமில்லை. தன் தாய்தேசத்தில் இருக்கும் அகதிகள் மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்கள் திரள்திரளாய் அகதிகளாய் அலைந்து திரியாதபொழுதொன்றின் அற்புதமானகணத்தில் 'அகதி' என்ற தனது அடையாளத்தை இவன் தொலைத்துவிடக்கூடும். அதுவரை முன்னாள் அகதியெனவும், மனதின் உணர்வுகளின் அடியாழங்களில் இன்றும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்றும் அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதில் தயக்கங்களேதுமில்லை.

.

4 comments:

Anonymous said...

நீயுமா..நண்பா..?

1/14/2007 12:06:00 AM
அருண்மொழிவர்மன் said...

////தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன////

நண்பரே.... இது நான் உண்மையாக உணர்ந்த நிலை...... ஈழப்போராட்டத்தை பொறுத்தவரை என் நிலை இது தான்....... சரி பிழை என்Kஇர வாத பிரதிவாதங்களை தாண்டி மௌனமொழி எம்மீது பலமாக் திணிக்கப்பட்டிருக்கிறது.....

1/14/2007 01:08:00 AM
Anonymous said...

//போராட்டத்தின் நியாய/ அநியாயங்களை
-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் 'மனநிலையை' வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. //

டிசே நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்.
அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் அடக்குபவரின் யுத்தத்தையும் ஒரே தராசில் வைத்து ஈகை,தியாகம்,மரணம் என்பவை அர்த்தம் அற்றவை என்பவர்களுக்கான பதிலை ,சொந்த அனுபவத்தினூடாகச் சொல்லி உள்ளீர்கள்.

1/14/2007 03:40:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
சூர்யாகுமார், நீயுமாவில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. எந்த அர்த்தம் என்றாலும் எழுதியதிற்கு நான் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
....
அருண்மொழி, எங்களுக்கிடையில் ஒத்த அனுபவங்கள் இருக்கக்கூடும் போல.
.....
நாரதர், அவரவர் அவரருக்கான கருத்துக்களைச் சொல்ல உரிமையுண்டு; எனக்கான புரிதல்கள் என் அனுபவங்களினூடாக வருகின்றன என்பதைத்தான் இப்பதிவில் குறிப்பிட விழைந்தேன்

1/14/2007 09:56:00 PM