Life is lived in the subtext.
-Unknown
சபிக்கப்பட்ட வாழ்வை
திணிக்கப் பழகிவிட்ட நாளொன்றில்
அன்று பெய்திருக்கவேண்டிய பனிமழை
திசை மாறிப் பெயர்ந்திருந்ததன் வினோதத்தை
சுவர்கள் சூழவிருந்த தீவு அறைக்குள்ளிருந்து வியந்தபடியிருந்தோம்
வாழ்தல் என்பது என்னவெனறு தொடங்கிய
சலிப்பான தேடல் புத்தகங்களிற்குள் பதுங்கிக்கொள்ள
ஒரு வாரமாய் இடைவிடாத வாசிப்பு.
மூடப்படாத புத்தகங்கள், தோய்க்கப்படாத உடுப்புக்கள்
பசிக்கும்போது ரொட்டியைச்சூடாக்க முட்டையைப்பொறிக்கவென
அவ்வப்போது குசினியுடனான முத்தமிடல்கள்
இறுதியில் மிஞ்சியது என்னவோ
நிர்வாணஙகளில் மீது நம் தனியன்கள் நின்றாட
பெருந்தனிமையில் சுடர்விட்டணைந்த தவிப்பு
ஒன்பதாவது நாள் அறை வந்துசேர்ந்த தோழியுடன்
நாமிணைந்து சமைத்த காளான்கறியைச் சுவைக்கையில்
வாழ்வென்பது ஆவி பறந்துகொண்டிருக்கும்
சோற்றில் மிதப்பதாய்த் தோன்றியது.
2.
நமதெல்லாக் கனவுகளும்
கண்ணாடியில் ஆவியாகிக் கரைந்துகொண்டிருக்கையில்
முல்லைத்தீவு முற்றுகையிடப்படுகிறது
காஸா ஆக்கிரமிக்கப்படுகின்றது
தமது உடல்களை
நிலம் பிளந்துவந்த கவசவாகனங்களுக்கு காணிக்கைசெய்த
ஒரு தலைமுறை முன்னேயிருக்கிறது
இனி என்றென்றைக்குமாய் அடிமை வாழ்வாவென
பின் வந்த தலைமுறை கலங்குகிறது
நாமின்னும் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்
உரையாடலிலிருந்து செயலுக்குத் திரும்புவது குறித்து
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
................... அலுப்பேயின்றி.
3.
மூதாதையர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருக்கும் மண்ணை
பல்குழல் பீரங்கிகளால் பிளந்து
அடிமைப் பிள்ளைகளைப் பிரசவிக்க முடியாது
இரத்த வெடிலலையும் காற்றில்
துர்க்கையம்மன்கள் தலைவிரித்து அலைவதால்
அடக்கநினைக்கும் எவர்க்கும்
நிம்மதியான இரவுகளினி வாய்க்கப்போவதுமில்லை
வலியவன் மட்டுமே வாழ்வானெனும்
போரின் மனுநீதியைக்கண்டு
வெறுத்தொதுங்கிய காலம் நெடியதெனினும்
எம்மை வயிறுகளில் கருவாய்ச்சுமக்கையில்
இரட்டைக் குழந்தைகளாய்
கூடவே போரையும்
பிரசவித்த பிரிய அன்னையர்களே...
நீங்கள் எம்மைக் கருவிலே கொன்றிருக்கவேண்டும்.
குழந்தைகள் பிறக்காத நாட்டில்
சந்ததிகளின் நீட்சியில்லாதது போல
தன் துப்பாக்கிகளுக்கு
குறிபார்த்துச்சுட உடலங்கள் கிடைக்காத சலிப்பில்
போரும்
தற்கொலை செய்வற்கு வாய்ப்பிருக்கிறது
5.
பிறகொருநாள்
அம்மார்களே...
நம்மண்ணில் உள்ளனவெல்லாம் யுத்தமில்லாது வாழட்டுமென
புதிய கருக்களைப் பிரசவியுங்கள்;
இல்லாவிட்டாலும் பரவாயில்லை
குழந்தைகளில்லாது நிம்மதியாய் நீங்கள் வாழ்ந்தீர்களென்று
எம் சவக்குழிகளின் முன்நின்று உரத்துச் சொல்லுங்கள்.
(வளாக நாட்களுக்கு...)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
:-(
1/15/2009 01:30:00 PM--fd
//நாமின்னும் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்
1/15/2009 05:34:00 PMஉரையாடலிலிருந்து செயலுக்குத் திரும்புவது குறித்து
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
................... அலுப்பேயின்றி//
போர் பற்றி படித்தும், கேட்டும், அறிந்தும், பார்த்தும், உணர்ந்து எத்தனையோ விமர்சனங்கள் மனதிலே இருந்தாலும் முல்லைத்தீவு மீதான முற்றுகை எந்த பக்கத்தில் யோசித்தாலும் மீண்டும் மீண்டும் ஒரு சூனியத்துக்கே இட்டுச்செல்கின்றது. எல்லாப் போர்களும் ஒரே வடிவானவை என்று சொல்வதுபோல காஸாவிலும். எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறும் நெஞ்சங்கள் காத்திருக்கின்றன வரும் செவ்வாய் மட்டும்,
நன்றி fd.
1/15/2009 10:25:00 PM...
அருண்: எங்கும் சூனியமாய்தானிருக்கிறது. இன்னும் சமாதானத்திற்காய் முன்னர் கூட்டம் நடத்தியவர்கள், கூட்டுச்சேர்ந்தவர்கள், சமாதானம் பேசும் ஆட்களைக் கூப்பிட்டு எங்களுக்கு வகுப்பு நடத்தியவர்களென எல்லோரையும் கூடவே தேடிக்கொண்டிருக்கின்றேன்...
\\
1/21/2009 05:59:00 PMஅருண்: எங்கும் சூனியமாய்தானிருக்கிறது. இன்னும் சமாதானத்திற்காய் முன்னர் கூட்டம் நடத்தியவர்கள், கூட்டுச்சேர்ந்தவர்கள், சமாதானம் பேசும் ஆட்களைக் கூப்பிட்டு எங்களுக்கு வகுப்பு நடத்தியவர்களென எல்லோரையும் கூடவே தேடிக்கொண்டிருக்கின்றேன்...
\\
அது ஒரு சூனியமாகத்தான் தெரிகிறது என்றாலும் ஒரு மூலையிலிருந்து உள் மனது சொல்லிக் கொண்டிருக்கிறது சட்டென்று நிகழ்கிற அற்புதங்களாய் நல்லதொரு நிகழ்வு நடந்து விடும் என்பதாக...
மற்றபடி வாழ்வதற்கான நாட்களை தொலைத்துக்கொண்டிருப்பதில் தலைமுறைகள் சபிக்ககப்பட்ட உண்மை புலப்படவேயில்லை...
Post a Comment