-புதுவிசை (ஒக்ரோபர் - டிசம்பர் 2008)
நனவுகளின் பலிக்காலம்
கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.
பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை
அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்
என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.
f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை
அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
நான்
எவருமே நெருங்கவியலாத
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.
இறுதியில் நிகழ்ந்தது
நாமெழுப்பும் கண்காணிப்புத்தேசத்தின்
எண்ணற்ற தெருக்களில்
நேசம் பாசியைப்போல பின்னலிடுகிறது
வழுக்கி விழுந்து உதிரமுருகி சாலைதகிப்பினும்
காயங்களை மறைக்கும் புத்திசாலித்தனத்தை
தாபமொரு சுனையாய்க் கசியவிடும்
செயல்களின் தவறுகளை கர்ப்பக்கிரகத்தில் பதுக்கியொளிக்க
துர்நாற்றம் தாங்கமுடியாக்கடவுளர்கள்
நாம் விமர்சித்து
உயிர்த்தெழுவதற்கான சந்தர்ப்பங்களோடு வெளியேறிவிடுகின்றனர்
கதகதப்பான நினைவுகளை வெயிலில் காயும்
ஆடைகளோடு உலரவைத்துவிட்டு
அலுப்பூட்டும் பெருமூச்சுக்களோடு
இந்த் ஆண்கள் இப்படித்தானென நீயும்
இந்தப் பெண்களே இப்படித்தானென நானும்
எதிரெதிர்த்திசைகளிலிருந்து சபிக்கிறோம்
காலப்பெருங்காகமொன்று
தன்கூரிய அலகால் கொத்தத்தெடங்குகையில்
விரல்கள் குழைந்து புனைந்த Tottem Pole சரிந்து
நேசம் நமக்களித்த ஓவியங்கள குலைகின்றன
ஆதிக்குடியின் வெண்தாடிக்கிழவன்
சூரியன் காணாத்துயரில் தற்கெலைத்த துயரம்
நம்மிலும் கருமையாய்ப்படர
நிச்சயமின்மைகளில் நடக்கத்தொடங்குகிறோம்
இன்னெரு இழப்பு
இன்னெரு பருவமாற்றம்
இன்னெரு இடப்பெயர்வு.
சுழன்றாடும் துருவப்பனிப்புயலிற்கு
நாடோடிக்கும் நின்று தரிப்பவனுக்கும்
வித்தியாசம் தெரிவதேயில்லை
தான் நினைத்த நேரம் பெழிந்துவிட்டு
கலங்காது நகரும் பனியின் வாழ்க்கை
எவருக்கும் வாய்ப்பதுமில்லை.
நன்றி: கீற்று
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இதில் முதலாவது ஏற்கனவே உங்களிடமிருந்து வாசித்தது போல இருக்கிறது...
1/21/2009 05:54:00 PMPost a Comment