-மற்றும் சில...
உலகத்திற்கு பொது நீதி என்பது இனியில்லையென்று எப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அப்படியெனில் வள்ளுவர், அவ்வையார் 'அருளியதெல்லாம்' பொது நீதியல்லவா என்று ஒருவர் வினாவினால் அவரவர் விருப்பு அவரவர்க்கு உரியதென இப்போதைக்கு விடுவோம். பின் நவீனத்துவம் கூட இனி 'பொதுவான' என்ற ஒன்று இல்லையெனத்தான் கூறிக்கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவ நிலவரத்தை எவர் ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, இந்த மேலைத்தேய நாடுகள் அப்படியே அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் - அதாவது எதிர்மறையான பக்கத்தில். குழந்தைப் போராளிகளுக்காய் உலகம் நீண்டகாலமாய் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு விழிநீர் சொரிபவர்களில் உண்மையான அக்கறையோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள்; அல்லாதவர்களும் இருக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் ஆயுதங்களோடு இருப்பாராயின் அவரொரு குழந்தைப் போராளியென 'பொதுவாக' அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் அப்படியிருந்தால் மட்டும் ஒருவர் குழந்தைப் போராளியாக இருந்துவிட முடியாது. அதற்குள்ளும் அரசியல் இருக்கிறது. அதாவது இந்த மேலைத்தேய நாடுகள் தமது 'அளவீடுகளால்' அளந்து தமக்கு எந்தப் பாதகமும் இல்லாது இருக்கிறது என்று நினைத்து ஒரு சான்றிதழை வழங்கினால் மட்டுமே ஒருவர் குழந்தைப் போராளியாக முடியும்.
இன்னும் எளிதாகச் சொல்வது ஆனால், குழந்தைப் போராளிகள் (சிலவேளைகளில் இராணுவம்) என்பது இப்போராளிகள் யாருடன் மோதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து வித்தியாசப்படும். உதாரணமாக இலங்கை, ஆபிரிக்காக் கண்டத்தில் பல நாடுகள் போன்றவற்றில் உங்களுக்குள்ளேயே நீங்கள் அடிபட்டுப் பலரைப் போட்டுத்தள்ளினால் நீங்கள் குழந்தைப் போராளிகள் என முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். ஆனால் அதேசமயம் நீங்கள் -பதினெட்டு வயதிற்குள் இருந்து- அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேசங்களின் படைகளோடு போரிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் குழந்தைப் போராளிகளல்ல; தீவிரவாதிகளே.
அண்மைய வருடங்களில் நிறைய குழந்தைப் போராளிகளின் சுயவரலாற்று மற்றும் புனைவு கலந்த புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. புதினங்கள் வருவதன் பதிப்பக/பூகோள அரசியல்களுக்கு அப்பால் குழந்தைப் போராளியாக்கப்பட்டவர்களுக்காய் மனிதாபிமானமுள்ள எல்லோரினதும் மனங்களும் கசியத்தான் செய்கின்றன. நம்மைப் போன்ற 'போர் துரத்த' பின்னங்கால் அடிபட ஓடிவந்தவர்களைவிட, அதன் சாயலை அறியாத இந்தியா போன்ற 'சனநாயக' நாடுகளில் வாழ்பவர்கள், மேற்கத்தைய நாடுகளில் வசிப்பவர்கள் உட்பட அதிகாரங்களிலுள்ளவர்கள் இன்னும் அதிகமாய் குழந்தைப் போராளிகள் பற்றி உச்சுக்கொட்டுவதை நாம் அவதானித்துக் கொண்டுதானிருக்கின்றோம். அது தவறுமில்லை. ஆனால் இவர்களின் முகமூடிகள் எப்போது கிழிகிறது என்றால், இதே குழந்தைப் போராளிகள் பாதிப்பை இவர்களது வீட்டு வாசலில் செய்யும்போதுதான்...எல்லாம் கிழிந்து கோவணந்தெரிகிறது அல்லது இதுவரை பேசிய மனிதவுரிமைகளைக் கைவிட்டு நிர்வாணமாய் நிற்பவர்களாய் ஆகிப்போகின்றார்கள்.
2001ல் அமெரிக்காவும் அதன் நேசபடைகளும் (கனடா உட்பட) ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கின்றன. 2002ல் ரொரண்டோவில் பிறந்த (ஆகவே அவரொரு கனேடியர்) ஒமார் கடார் (Omar Khadr ) 2002ல் அமெரிக்கப் படைகளுக்குக் கிரனைட் எறிந்தற்காய் கைது செய்யப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. கிரனைட் வெடித்ததில் அமெரிக்கப்படையைச் சேர்ந்தவொருவர்(medic) காயப்படுகின்றார். அமெரிக்காப் படை திருப்பிச் சுட்டதில் ஒமாரிற்குக் காயம் ஏற்பட்டு ஒரு கண் பார்வையை இழக்கின்றார். தலிபானில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒமார் கியூபாவிலுள்ள குவாண்டனாமோ (Guantánamo) சித்திரவதைச் சிறைக்கூடத்திற்கு அனுப்படுகின்றார். மீண்டும் கவனிக்க, ஒமாருக்கு 15 வயது. ஆனால் அது பற்றி எந்தக் கவனமும் எடுக்கப்படாது அவர் பெரியவர்களுடனான சிறையிலே அடைக்கப்படுகின்றார். இங்கேதான் நமக்கு மனிதவுரிமைகள் போதிக்கும் மேலைத்தேயத்தின் உண்மை முகம் பல்லிளிக்கிறது. சாதாரணமாக கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் குற்றங்கள் செய்திருந்தால் (கொலையே செய்திருந்தால்கூட) அவர்களின் பெயர்களையே இன்னபிற விடயங்களையோ பொதுவில் வைக்கப்படக்கூடாது என்றொரு சட்டம் இருக்கிறது. அவையெல்லாம் ஒமார் விவகாரத்தில் மீறப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால் ஆபிரிக்காக் கண்டங்களில் அவன் இவனைப் போட்டான், அவளை இவன் பாலியல் வன்புணர்ந்தான் என்றெல்லாம் நடந்ததை எழுதும்போது, என்னதான் செய்திருந்தாலும் அவர்கள் குழந்தைப் போராளிகள் அவர்களை மன்னிக்கவேண்டும் என்கின்ற கன்டா, அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயம் ஒமார் விவகாரத்தில் ஏன் வாய்க்குள் கொழுக்கட்டையை வைத்து உள்ளே தள்ளவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாது மவுனித்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
இன்று கிட்டத்தட்ட ஒமார் சிறையில் அடைக்கப்பட்டு ஏறேறக்குறைய 6 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டன. ஐ.நா சபை வரையறுக்கிற சிறுவர் சீர்திருந்த்தப்பள்ளிக்குக்கூட கூட ஒமாரை அனுப்பாது வயது வந்தவர்களுடன் சிறைக்கூடத்திற்கு ஒன்றாகச் சேர்ந்து குவாண்டனாமோ சிறைக்கூடத்தில் அமெரிக்காவும் கனடாவும் தள்ளியதை நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். கனடாவில் சிலவேளைகளில் கொலைகளைச் செய்தவர்கள் கூட, 7 வருடத்தணடனைக்குப் பின், குறிப்பிட்ட வரையறைகளுடன் (conditions) வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கும்போது, ஒமார் போன்றவர்களுக்கு என்ன நீதியை இந்தக் கனேடிய அரசு வழங்கப்போகின்றது? கனடாவிலுள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக -கனடாப் பிரஜாவுரிமையுள்ள- ஒமார் குவாண்டனாமோ சிறையிலிருந்து, கனடாவுக்கு அனுப்பப்பட்டு நேர்மையான முறையில் அவரது வழக்கு கனடா நீதிமன்றத்தில் நடத்தப்படவேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும் கூட, ஒரு சிறு அறிக்கையைக் கூட ஒப்புக்காய் வெளியிடாது கள்ள மவுனம் சாதிக்கும் நமது அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பர் இதுகுறித்து ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பதைவிட, என்றேனும் ஒருநாள் புதனில் உயிரினம் தோன்றி எல்லா மனிதர்களினதும் உரிமைகளைச் சரிநிகராக மதிக்கும் என்று நம்புவது நியாயமானது.
இலங்கையில் குழந்தைப் போராளிகள் பற்றி மேற்குலகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, சில வருடங்களுக்கு முன் ஒரு சிங்களப் பேராசிரியர், நண்பரொருவருக்குக் சுட்டிக்காட்டியிருந்தார்... குழந்தைப் போராளிகளை விட அதிகமாய் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்துவருகின்றார்கள், அதையிட்டேன் மேற்குலகம் அதிகம் கவலைப்படுவதில்லை என்று. மேலும் சுற்றுலாப் பயணிகளாய் இந்தக் குழந்தைப் பாலியல் தொழிலாளர்களைத் தேடிவருவது அதிகம் யார் என்று ஊகிப்பது நமக்கு அவ்வளவு கடினமுமில்லை.
இஃது வெளியே வந்த ஒரு ஒமாரைப் பற்றிய கதை. வெளியே வராத நூற்றுக்கணக்கான 'குழந்தைப்போராளிகள்' ஒமார்களின் கதைகள் நிகழ்காலத்தில் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ளவேண்டும். ஆக, இன்று நமக்குக் கற்பிக்கப்படுகின்ற 'மனிதாபிமானம்' எனபது கூட பெருங்கதையாடலென பின் நவீனத்துவம் வரையறுப்பது பற்றி யோசித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்காது போலத்தான் தோன்றுகின்றது.
............
கனடாவிலுள்ள சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் சம்பந்தமாய் ஒரு பாடம் வளாகத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் நண்பரொருவர் தமது பாடப்புத்தகத்திலுள்ள ஒரு விடயத்தை என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார். வழக்கின் விபரம் இதுதான்...பத்மநாதன் என்பவர் கனடாவிற்கு வந்து அகதி அடைக்கலம் கேட்டு அவருக்கு அடைக்கலம் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த காலப்பகுதியில் அவர் பெருமதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்திப் பிடிபடுகின்றார். பத்மநாதன் போதைமருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அவருக்கு 7 வருடங்கள் சிறைக்குள்ளிருக்க தண்டனை வழங்கப்படுகின்றது. வழக்கு முடிந்து வெளியே வரும் பத்மநாதன், கனடா நீதிமன்றத்தில் தன்னையொரு அகதியாக அடைக்கலம் தரும்படி கேட்கின்றார். நீதிமன்றம் -அவர் போதைமருந்து கடத்தியன் காரணமாக- அவரது அகதி அடைக்கல வழக்கை நிராகரிக்கின்றது. ஆனால் பத்மநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது பத்மநாதனுக்கு அகதி அடைக்கலம் கனடாவில் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா பிழையா என்ற கலந்துரையாடல் நண்பரின் வகுப்பில் நிகழ்ந்திருக்கின்றது. வகுப்பு முடிந்து நண்பர் என்னிடம் வந்து இத்தீர்ப்புக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? என்றார். பத்மநாதன் தனது குற்றத்திற்காய் ஏழுவருடங்கள் தண்டனையை அனுபவித்துவிட்டார் எனவே அவருக்கு அகதி அடைக்கலம் கொடுத்ததில் தவறேதுமில்லை என்றேன். நண்பருக்கு எனது கருத்தில் அவ்வளவு உடன்பாடில்லைப் போலும். என்றாலும் அவர்(பத்மநாதன்) போதைமருந்து கடத்தியிருக்கின்றார்... என்றார்.
போதைமருந்து கடத்துவது குற்றந்தான் அவர்கள் அதைத் தெரிந்துதான் கடத்துகின்றார்கள்...அதை வாங்கிப்பாவிப்பவர்களும் தடை செய்யப்பட்ட பொருளைத்தான் பாவிக்கின்றோம் என்ற புரிதலுடந்தான் பாவிக்கின்றார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களை வைத்து சூதாட்டம் நடத்தும் (கள்ள கணக்கு உட்பட எல்லா தகிடுதித்தங்களும் செய்யும்) பெருமுதலைகள் என்ன செய்கின்றன என்று யோசித்தால் போதைமருந்து கடத்துபவர்கள் எல்லாம் சிறியவர்களாகிவிடுவார்கள் (மைக்கல் மூரின் The Corporation என்ற ஆவணப்படம் நினைவுக்கு வருகின்றது). இப்பெரு நிறுவனங்கள் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டவை; அந்த நம்பிக்கையில்தான் எல்லாத்தரப்பு மக்களும் தமது பணத்தை முதலீடு செய்கின்றார்கள். ஆனால் பெருமுதலைகளின் நிறுவனங்கள் திவாலாகினால் முதலிட்ட சாதாரண மக்களுக்கு யார் பதில் சொல்வார்கள்? பெருமுதலைகள் ஹாயாக ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஜெயிலுக்குள் இருந்துவிட்டு (கூடவே ஒரு புத்தகமும் எழுதிவிட்டு) வெளியே வந்துவிடுகின்றார்கள். அவர்கள் அல்லவா போதை மருந்து கடத்துபவர்களை விட பெரும் ஆபத்தானவர்கள். Nortel கனடா தலைநகரிலிருந்தே ஆப்பு வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். (எப்போது படித்து முடிப்போம்; எப்போது நோர்ட்டெலுக்குள் நுழையலாம் என்று காவிக்கொண்டிருந்த என் கனவு தகர்ந்ததால் வந்த எரிச்சல் அல்ல இது :-) . Nortel சென்ற வாரம் Bankruptcy File செய்திருக்கின்றார்கள் என்பது மேலதிகச் செய்தி.
நம்முடைய பொதுப்புத்தியில் பலவிடயங்கள் சிறுவயதிலிருந்தே திணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிலருக்கு சாதி என்ற அடையாளமே பெருமைக்குரிய இன்னொரு பெயர் போல... என்ற மாதிரி -பல்வேறு விடயங்கள்- ஒவ்வொருவரின் மூளையிலும் சாதாரணமாய்ப் பதியப்பட்டிருகின்றன. சில நாடுகளில் பாலியல் வன்புணர்ந்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கபட்டிருக்கின்றன. இந்தியாவில் கூட சிலருக்கு வடமாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவ்வாறாயின் நாமேன் இவ்வாறான கேள்விகளை ஒருபோதும் எழுப்புவதில்லை...? இந்திய இராணுவம் காஷ்மீர் அஸாம், மணிப்பூர் உள்ளிட்ட உள்ளூர் மாநிலங்களில் மட்டுமில்லை, 'அமைதிப்படைகளாக' ஆக்கிரமித்த இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் கூட எண்ணற்ற பாலியல் வன்புணர்ச்சிகளைச் செய்திருக்கின்றன (இந்திய இராணுவம் மட்டுமில்லை; உலகிலுள்ள அநேக இராணுவங்கள் அப்படித்தான். கனடிய இராணுவம் சோமாலியாவில் செய்திருக்கின்றது.) . ஆக சாதாரண ஒருவர் பாலியன் வன்புணர்ச்சி செய்யும்போது என்ன தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவத்திலுள்ளவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? ஆகக்குறைந்தது நீதிமன்றத்திலாவது நிறுத்தப்பட்டிருக்கின்றார்களா? வீரப்பனைத் தேடுகின்றோம் என்ற பெயரில் அதிரடிப்படை நிகழ்த்திய கொடூர சித்திரவதைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும் -வீரப்பன் கொல்லபட்ட சில ஆண்டுகளாகிய பின்னாவது- எந்த அதிரப்படையினராவது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்களா? ஆனால் நாம் போதை மருந்து கடத்துபவர்களையும், திருடுபவர்களையும் மட்டுமே பெரிய குற்றவாளிகளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவரையும் நாம் 'தேசியத்தின்' பெயரிலும் 'இறையாண்மையின்' இரட்சிப்பிலும் மன்னித்துவிடும் மகாத்மாக்களாகி விடுகின்றோம் போலும். அதைவிட கொடுமை இன்னுஞ்சிலர் இராணுவம் என்றால் அப்படியிப்படித்தான் செய்யும் என்று செப்பி பரமாத்மாக்களாகிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான்.
(1) Omar Khadr
(2) காட்டூன்: ரொரண்டோ மெட்ரோ நியூஸ்(Jan 22, 2009)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
திணிக்கப்பட்ட சிந்தனைகளில்தான் அனேகம் பேர் இருக்கிறார்கள் இன்னமும் வாழ்கிறார்கள்...
1/21/2009 05:51:00 PMஅப்படி ஒரு பொதுப்புத்தியில்தான் இருக்கிறது இன்றய சிங்கள இளைய சமுதாயமும் என்று அனுபவப்பட்ட சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்... அதே பழைய கதைகள் பேசுகிற சமுதாயங்களை என்ன செய்வது...
கிங், இன்று(தை 22) இங்கிருக்கும் மெட்ரோ செய்தித்தாளில் வந்த காட்டூனைப் பாருங்கள் (மேலே பதிவில் இணைத்துள்ளேன்)...இதுதான் யதார்த்தம் :-(. ஒபாமா அமெரிக்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றபின் குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடப்போவதாக உறுதியளித்திருக்கின்றார். அவ்வாறு நிகழ்ந்தால் ஒமாரிற்கு என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.
1/22/2009 12:26:00 PMஅமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சேர்ந்து உருவாக்கிய எந்த ஒரு விதிகளையும் அவை ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதாவது ஒரு முதலாளித்துவ மனப்பாங்குடன் அவை மற்ற நாடுகளை அடிமை செய்யவே அவர்களின் விதி முறைகள் பாவிக்கப்படுகின்றன. எனது கருத்தில் ஐ நா என்ற அமைப்பே இன்று செத்துவிட்டது என்றுதான் தோன்றுகின்றது.
1/22/2009 10:41:00 PMமனித உரிமைகள் என்று அடிக்கடி சொல்லும் கனடாவின் நிலைப்பாடு இதில் இன்னும் பெரிய ஏமாற்றம். தனது குடிமகனின் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்பவே ஹாப்பருக்கு முடியவில்லை.
மாற்றம் தேவை என்று மந்திரம் போல சொல்லும் ஒபாமா என்ன செய்கிறார் என்று பார்ப்போம்
நன்றி அண்ணன்..
1/22/2009 11:29:00 PMயதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது...
/எனது கருத்தில் ஐ நா என்ற அமைப்பே இன்று செத்துவிட்டது என்றுதான் தோன்றுகின்றது. /
1/23/2009 10:13:00 AMஅருண், பாலஸ்தீனத்தில் ஜ.நாவின் வளாகத்திலேயே தாக்குதல் நடக்கிறது நடக்கிறதென ஜ.நா அலற அலற, நீ என்ன கத்தினாலும் நான் அடிப்பதை அடித்து முடித்துவிட்டுத்தான் உனக்குப் பதில் சொல்லுவேன் என்று இஸ்ரேல் இரண்டு தடவைக்கும் மேலாய் ஜ.நா வளாகத்திலேயே தாக்குதல்களை நடத்தியபோதே ஜ.நாவின் 'வலிமை' நம்மெல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதானே.
//ஆக சாதாரண ஒருவர் பாலியன் வன்புணர்ச்சி செய்யும்போது என்ன தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவத்திலுள்ளவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? ஆகக்குறைந்தது நீதிமன்றத்திலாவது நிறுத்தப்பட்டிருக்கின்றார்களா? வீரப்பனைத் தேடுகின்றோம் என்ற பெயரில் அதிரடிப்படை நிகழ்த்திய கொடூர சித்திரவதைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும் -வீரப்பன் கொல்லபட்ட சில ஆண்டுகளாகிய பின்னாவது- எந்த அதிரப்படையினராவது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்களா? ஆனால் நாம் போதை மருந்து கடத்துபவர்களையும், திருடுபவர்களையும் மட்டுமே பெரிய குற்றவாளிகளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவரையும் நாம் 'தேசியத்தின்' பெயரிலும் 'இறையாண்மையின்' இரட்சிப்பிலும் மன்னித்துவிடும் மகாத்மாக்களாகி விடுகின்றோம் போலும். அதைவிட கொடுமை இன்னுஞ்சிலர் இராணுவம் என்றால் அப்படியிப்படித்தான் செய்யும் என்று செப்பி பரமாத்மாக்களாகிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான்.//
1/28/2009 03:52:00 PMடிசே,
அதிகார பீடத்தில் இருப்பவர்கள் செய்பவை 'கடமை' என்கிறார்கள். பாதிக்கப்படும் மக்கள் செய்யும் போது குற்றமென்கிறார்கள். டன் கணக்கில் ஆகாயம் வழியாக மக்கள் மீது கொத்துக்குண்டுகளை போடுவது 'இராணுவ நடவடிக்கை', 'பயங்கரவாத நடவடிக்கை' என்கிறார்கள். உரிமை மறுக்கப்படுபவன் வேறுவழியற்று வேட்டைத்துப்பாக்கி தூக்கினாலும் பயங்கரவாதி, தீவிரவாதி. அவனை துப்பாக்கி தூக்க வைத்த சித்தாந்தை, கொள்கையை, செயல்களை மௌனமாக ஆதரிக்கிறது உலகம். வல்லவன் வகுப்பது நியதியான உலகு.
காஷ்மீரில், அஸ்ஸாமில் இராணுவம் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்தாலும் 'தேசக்கடமையில்' மறைந்து போகிறது.
Post a Comment