In English: எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தக்குறிப்பு மட்டும் உள்ளது - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008
(தேவை கருதி அவசரம் அவசரமாய் மொழிபெயர்த்தது. தமிழ் மொழிபெயர்ப்பில் தெரியக்கூடிய தவறுகளுக்காய் ஆங்கிலத்தில் எழுதியவரிடம் முன்கூட்டிய மன்னிப்பு. ~டிசே)
கைவிடப்பட்ட வீடுகள், சிதைக்கப்பட்ட வாழ்வு, இடம்பெயர்க்கப்பட்ட மக்கள். இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் உக்கிரமான போரின் கோரத்தை விபரிக்கின்றார் உதவிப்பணி செய்யும் ஒருவர்.
"வன்னியிலுள்ள இலுப்பைக்கடவையில் எனது வீடு இருக்கிறது. தை இரண்டாந்திகதி, 2007 காலை ஒன்பது மணிக்கு கிபீர் (இலங்கை விமானப்படையின் ஜெட்ஸ்) வந்தன. அவை எங்கள் கிராமத்தில் குண்டுகளை வீசின, நிலம் அதிர்ந்துகொண்டிருக்க, குண்டின் சிதறல்கள் எல்லா இடங்களிலும் பறக்கத்தொடங்கின. பல மக்களுக்கு காயம் ஏற்பட்டது போலவே நானும் காயப்பட்டேன். இவ்வாறே நான் எனது காலை இழந்தேன்."
ஸ்ரெல்லா, செந்தளிர்ப்பான முகமும் வனப்புமுள்ள 13 வயதுடையவள். நான் அவளை ஆவணி 05, 2008ல் மணியங்குளத்தில் சந்தித்தேன்; இலங்கை வடக்கிலுள்ள வன்னியில் இருக்கும் மணியங்குளம் கிராமம், அவ்வருடத்தின் ஆரம்பம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. ஸ்ரெல்லா அவளது வாழ்வின் முக்கிய கட்டத்திலிருந்தாள், அவளது மனமும் உடலும் வளர்ச்சியடைந்துகொண்டிருந்தது. ஆனால் அவளுக்கும் அவளது வயதிலிருந்த மற்றவர்களுக்குமிடையில் பாரிய வித்தியாசமிருந்தது; அவள் சாதாரண பதின்ம வயதுடையவர்கள் சந்திப்பதற்கு அப்பால் நிறைய விடயங்களைச் சந்தித்திருந்தாள்.
"ஆனி 20, 2008ல், எங்கள் புதிய வீட்டுக்கு அண்மையாக எறிகணைகள் விழத்தொடங்க, நாங்கள் பயத்தில் வீட்டை விட்டு ஓடவேண்டியிருந்தது. எங்களால் பல பொருட்களை(உடைமைகளை) எடுக்கமுடியவில்லை, எனது குடும்பத்தினரினதும் உறவினர்களினதும் உதவியுடன்- என்னுடைய ஊன்றுகோலோடு- எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாய் நான் ஓடவேண்டியிருந்தது. நாங்கள் இங்கே ஒருவாரமாய் இருக்கின்றோம், ஆறு குடும்பங்கள் இருப்பதற்கு ஒரேயொரு தங்குமிடம் மட்டுமேயிருக்கிறது. கிட்டத்தட்ட 23 பேர். மலசலகூடங்கள் வசதியாய் இல்லை, எனது (ஒற்றைக்)காலால் எனக்கு இன்னும் கஷ்டமாயிருக்கிறது."
"எனக்குத் தெரியவில்லை, நாங்கள் இந்த இடத்திலிருந்து இனியும் இடம்பெயர்ந்தால் என்னால் எப்படி சமாளிக்க முடியும் என்று. என்னிடம் செயற்கைக்கால் இருக்கிறது, சைக்கிள் ஓடவும் முடியும். என்னிடம் ஒரு சைக்கிள் இருந்திருந்தால், வாழ்க்கை இன்னும் இலகுவாய் இருக்கும்."
"நிம்மதியாகப் படுக்க ஒழுங்கான தங்குமிடங்களையும், வசதியான மலசலகூடங்களையும் நாங்கள் பெறமுடியுமென்றால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்; ஆனால் இவற்றுக்கப்பால், எனக்கு ஒரு சைக்கிளே முக்கிய தேவையாக இருக்கிறது."
நான் ஸ்ரெல்லாவை மீண்டும் ஆவணி 20, 2008ல் சந்தித்தேன். அவள் தாங்கள் தங்கியிருந்த மணியங்குளம் வீடு இரண்டு நாட்களுக்கு முன் எப்படி இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டது என்பதை விபரித்தாள்.
"மாலை 7.30 மணியவளவில் எறிகணைகள் விழத்தொடங்க நாங்கள் அவசரமவசரமாக 5 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள கோணாவில் பாடசாலைக்கு ஒடினோம். என்னுடைய செயற்கைக்காலால் என்னால் தொடர்ந்து போக முடியவில்லையென்பதால் எங்கள் குடும்பம் அவ்விரவை இப்பாடசாலையிலேயே கழிக்கவேண்டியிருந்தது. எங்கள் குடும்பம் தங்களது உடைமைகளைக் காவிக்கொண்டு வந்தால் அவர்களால் எனக்கு உதவவும் முடியவில்லை. எனது குடும்பம் ஓடுவதை நான் மெதுவாக்கிக் கொண்டிருந்ததால் எனக்குச் சரியாகக் கவலையாக இருந்தது. அந்த இரவு எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்ததால் பெரும் சத்தங்களுடையதாக இருந்தது. மற்றக் குடும்பங்களால் இன்னும் தூரத்துக்கு ஓட முடிந்திருந்தது, ஆனால் என்னுடைய காயங்களினால் நாங்கள் இங்கேயே தங்கவேண்டியதாகப் போய்விட்டது."
"நாங்கள் இப்போது இந்தப் பாடசாலையில்(கோணாவில்) இருக்கின்றோம், எனக்குத் திருப்பவும் கஷ்டமாக் இருக்கிறது. இந்தப் பாடசாலை எனது பழைய பாடசாலை போலவே இருக்கிறது, ஆனால் நாங்கள் இதை ஒரு வீடாய்ப் பாவித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கத்திலுள்ள சிறுவர்கள் கஷ்டப்படப்போகின்றார்கள். திரும்பவும் எறிகணைகள் ஏவப்பட்டு இந்த இடத்தை விட்டும் திரும்பவும் ஓடவேண்டியிருக்குமோ என்று எனக்குச் சரியாகப் பயமாயிருக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடியோடி எனக்குச் சரியாகக் களைப்பாகவும், எந்த இடமும் பாதுகாப்பாய் இருக்காது போலவும் தோன்றுகிறது."
"இலங்கை அரசும், புலிகளும் எங்களை அனுமதித்தார்கள் என்றால், இந்த இடத்திலிருந்து தப்பியோட எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கும். எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நிம்மதி வேண்டும், என்னால் இனியும் ஓடமுடியாது. எனக்கு இன்னும் கிபீர் விமானத்தாக்குதல் குறித்த கெட்ட கனவுகள் வருகின்றன. கிபீர் விமானங்களின் சத்தத்தைக் கேட்கும்போது, நான் மிகவும் பயப்பிடுகின்றேன்."
ஸ்ரெல்லா அந்த நேரத்தில் என்னத்தையெல்லாம் அனுபவித்தாள் என்பதை நானறியேன். இலங்கை அரசு. 2009ம் ஆண்டு முடிவதற்குள் விடுதலைப் புலிகளை அகற்றி, விடுவிக்கப்பட்ட இடங்களில் சனநாயகத்தை வழங்கப்போவதாய் சூளுரைத்திருக்கிறது. தை 02ல் இலங்கை இராணுவம் முக்கிய நகரான கிளிநொச்சிக்குள் நுழைய, புலிகள் எல்லா விலையையும் கொடுத்து சண்டை பிடித்துக்கொண்டிருக்க நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் கேள்வி இருக்கிறது: வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு என்ன நிகழப்போகின்றது?
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-08 வரையிருந்த யுத்த நிறுத்தத்திற்கு நன்றி கூறியபடி, வன்னியிலிருந்த சமூகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த அபிவிருத்தியில் மகிழ்ச்சியடைந்திருந்தன. மக்கள் தங்கள் வீடுகளிலும் வாழ்க்கைத் தேவைகளிலும் முதலீடுசெய்து, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்க்கத்தொடங்கியிருந்தனர். இந்தக் கனவுகள், இலங்கை அரசாங்கம் ஆறு வருட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்தபோது நொறுங்கி, தமிழர்கள் மீண்டும் இடப்பெயர்வு, அதன் பாதிப்புக்கள், நிச்சயமின்மைகள், பாதுகாப்பின்மை என்பவற்றோடு மல்லுக்கட்டவேண்டியிருந்தது.
உள்நாட்டிலேயே அதிகம் இடம்பெயர்ந்தவர்களை கொண்ட ஒரு நாடாக உலகில் இலங்கை இருக்கிறது. நிலைமை மோசமாகத் தொடங்கத் தொடங்க, கிட்டத்தட்ட 400 000 மக்கள் தம் வீடுகளை இழந்திருக்க்கின்றார்கள், 70, 000 பேர் -எண்ணிக்கையில்- கால் நூற்றாண்டு உள்ளூர்ப் போரால் இறந்துள்ளார்கள்.
2008 முழுதும், வன்னியின் தென்மேற்கு மூலையிலிருந்து இலங்கை இராணுவம் குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. இராணுவம் முன்னேற முன்னேற, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும், மீன்பிடிக் கிராமங்களையும் விட்டு, வருகின்ற எறிகணைகளிலிருந்து தப்புவதற்காய் ஓடத்தொடங்கியிருந்தனர். மக்கள் தமது உடைமைகளைக் கட்டி, டிராக்டர்கள் மூலமாகவும் நடந்தும் பாதுகாப்பான வடக்கு நோக்கி நகரத்தொடங்கியிருந்தனர். விவசாயிகளும் மீனவர்களும் அந்நியோன்னியமாய் வாழ்கின்ற வன்னி இலங்கையுள்ள மிகவும் செழிப்பான பகுதிகளாகும். அவர்களுடைய மிகச்சொற்பமான சேகரிப்பை பாதுகாப்பான் இடங்களுக்கு நகர்வதற்காய் டிராக்டர்களை வாடகையெடுப்பதற்கு செலவழிக்கின்றார்கள். "மரங்களுக்கு கீழே வாழும் எங்களில் பலர் உரிய தங்குமிடங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலைமைக்குள் எப்படி என்னால் எனது மாணவர்களைக் கவனிக்க முடியும்? அவர்கள் வந்து படிப்பதற்கான எந்தப் பாடசாலையும் என்னிடம் இல்லை; அந்த மாணவர்களில் பலர் எங்கேயிருக்கின்றார்கள் என்பதே தெரியாது' என்கிறார் கிளிநொச்சியிலிருந்து வந்த ஆசிரியர், பிள்ளை.
இலங்கை இராணுவம் இன்னும் வன்னிக்குள் உள்நகர, பல மக்கள் களைத்தும், பிறரிடம் இரந்தும், இன்னுமின்னும் இடம் பெயரத்தள்ளப்படுகின்றார்கள். "நான் கடந்த மூன்று வருடங்களில் எனது வீட்டிலிருந்து ஏழு முறைகள் இடம்பெயரச் செய்யப்பட்டிருக்கின்றேன்" என்கிறார் ஜெயபுரத்தைச் சேர்ந்த சந்திரா. "2005ல், இலங்கை இராணுவம் எங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள பகுதிகளை நோக்கி எறிகணைகளை ஏவும்வரை வீரபன் கண்டலில் எங்களுக்கு நல்லதொரு வாழ்க்கையிருந்தது. எனது கணவன் ஒரு மீனவராக இருந்தார்; நாங்கள் நன்றாகவே வாழ்ந்தோம். "
"எறிகணைகள் வீசப்பட்டிருந்த காலப்பகுதியில், கர்ப்பிணியாயிருந்த நான் இரவினுள் பாதுகாப்பின் நிமித்தம் ஓடவேண்டியிருந்தது. அதிலிருந்து ஒவ்வொரு ஆறு மாதமும் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கின்றேன். நான் இப்போது இந்த மரத்தின் கீழே இருக்கின்றேன், இது ஏழாவது முறை. ஓடியோடி (இடம்பெயர்ந்து பெயர்ந்து) எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. "
மன்னாரிலிருந்து வந்த மக்களை நான் புரட்டாதி 2008ல் சந்தித்தபோது, அவர்கள் பட்டினியுடனும் களைப்புடனும் பயத்துடனும் இருந்தார்கள். குழந்தைகள் பல மாதங்களாய் பாடசாலைக்குப் போகவில்லை, தந்தைமார்கள் தமது தொழில்களை இழந்திருந்தனர், தாய்மார்கள் பாதுகாப்பு, உணவு, படிப்பு என்பவற்றை உரியமுறையில் வழங்கமுடியாத பலவேறு உணர்ச்சிகளோடு அல்லாடிக்கொண்டிருந்தனர். மிகப்பெரும் தத்தளிப்பு எல்லா மக்களிடையும் காணக்கூடியதாக இருந்தது; இது 25 வருடப்போரினால் வந்த கடைசி அழுத்தமாயிருந்தது.
மேரி யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், ஆனால் 1995ல் வன்னிக்கு வந்தவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள், கணவர் ஒரு விவசாயி. அன்பும் அரவணைப்பும் உடைய தாயான மேரி இலங்கையை விட்டு வெளியேறி புதிய ஒரு வாழ்வை தனது குடும்பத்துடன் வாழ அவதிப்படுகின்றார். "இப்படியான சூழ்நிலையில், ஒரு தாயாக இருப்பது மிகவும் கடினமானது" என்று எனக்கு அவர் சொன்னார். " எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள், ஒரு பதினாறு வயது மகனும் பதின் மூன்று வயது மகளும். கனக்க பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, எனது பெரிய பயம் என்னவென்றால், புலிகளால் எனது பிள்ளைகள் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாகிவிடுவார்களோ என்பது".
"எனது மகள் இங்கே என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அவ்வளவு அறிந்தவள் அல்ல, நானும் அவளுக்கு இவற்றைச் சொல்ல முயற்சிக்கவும் இல்லை. அவளது குழந்தைமையைச் சந்தோசிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ள அவளை நான் குழப்ப விரும்பவில்லை. ஆனால் எனது மகனுக்கு எல்லாம் விளங்கும். "
"அவன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது, தனக்கு மேல் வகுப்பிலுள்ளவர்கள் சண்டைக்காய் கூட்டிச் செல்லப்படுகின்றார்கள் என்பதை அடிக்கடி கூறுவான். இது பிள்ளைகளுக்கு மிகவும் கஷ்டமானது, அவர்கள் தமது பிறந்தநாட்களைப் பற்றிக் கதைத்து, நேரம் வரும்போது யார் முதலில் கூட்டிச் செல்லப்படுவார்கள் என்பதைக் கணக்கிடுகின்றார்கள். எனது மகன் 1992ல் பிறந்தவர், இப்போது, புலிகள் 1991ல் பிறந்த பிள்ளைகளைக் கூட்டிச்செல்கின்றார்கள்....அடுத்த வருடம் 1992 ஆக இருக்கும்.
"இன்னொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், எங்கள் சனத்துக்கிடையே இருக்கும் பொறாமை மனப்பான்மை. ஒரு பிள்ளை வீட்டிலிருந்து (புலிகளால்) கூட்டிச்செல்லப்படுகையில், அப்பிள்ளையின் பெற்றோர், புலிகளிடம், அந்தச்சுற்றாடலிலுள்ள வீடுகளில் ஒளிந்திருக்கும் மற்றப்பிளைகளைப பற்றிய விபரங்களைச் சொல்லுகின்றார்கள். எங்கள் சனத்துக்கிடையேயுள்ள இவ்வாறான பொறாமை மனப்பான்மை, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரைப் பற்றியும் (கோள்மூட்ட) சொல்ல வைக்கின்றது. ஒரு பெண் பிள்ளை ஆறு மாதமாய் ஒரு பள்ளத்துக்குள் பதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும் அவளது தந்தை உணவும் நீரும் கொண்டுவந்து கொடுக்க அவள் எல்லோருடைய பார்வையிலிருந்தும் தப்பியிருந்தாள். ஒரு வெயிலான நாளில் அந்தப்பிள்ளை கிணற்றில் தண்ணீர் குடித்துவிட்டு பள்ளத்துக்குள் திரும்பிப்போவதை அயலவர் ஒருவர் கண்டிருக்கின்றார். அடுத்த நாள் புலிகள் வந்து அவளைப் பள்ளத்திலிருந்து கூட்டிச் சென்றிந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எங்கள் சமூக அமைப்பின் அடித்தளங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. "
"எனது பிள்ளைகளும் கிபீருக்குச் சரியாகப் பயப்பிடுகினம். ஒருநாள் மாலை எனது மகன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது, வானத்திலில் கிபீர் சடுதியாகத் தோன்றி, எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த புலிகளின் முகாமிற்கு குண்டு வீசியது. அந்தச் சத்தம் மிகப் பெரியது, அந்தச் சத்தம் எனக்குள் நிறையப் பயத்தைக் கொடுத்தது. எனது மகன் அந்தப் பக்கத்தாலை வந்துகொண்டிருக்கும் நேரம் என்பதை நான் உணர்ந்து அவனுக்கு சேதம் ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில் நான் கத்தினேன். ஓடிக்கொண்டே வந்த நாங்கள் இருவரும் பாதையின் இடைநடுவில் சந்தித்தோம். அவனைக் கண்டபோது எனக்கு பயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் இப்போது அவன் கிபீருக்கு சரியாகப் பயந்துபோயிருக்கின்றான். வீட்டிலிருக்கும் எங்களுக்குக் கேட்கமுன்னரே அவனுக்கு அந்தச் (கிபீர்) சத்தம் கேட்கிறது. உடனேயே ஓடிப்போய் வீட்டுக்குப் பின்பக்கமுள்ள கானுக்குள் படுத்துக்கொள்கின்றான். இவ்வாறு மாலையில் நடக்கும்போது, அவனால் படிக்க முடியாதிருக்கின்றது, எனக்கும், இந்தத் தாக்கம் அவனது படிப்பைக் குழப்பிவிடுமோ என்று சரியாகக் கவலையாக இருக்கிறது. "
"எனது பிள்ளைகள் நன்கு படிக்கவும் நல்ல கல்வியையும் பெற விரும்புகின்றேன், ஆனால் கிபீரின் சத்தத்தை காலையில் நாங்கள் கேட்கும்போது, அவர்கள் பாடசாலைக்குப் போவதை விரும்பவில்லை. எனது பிள்ளைகள் என்றோ ஒரு நாள் கொல்லப்படப்போகின்றார்கள் என்று வரவர எனக்குச் சரியாகப் பயமாயிருக்கிறது...ஆகவேதான் அவர்களை வீட்டிலிருக்கச் சொல்கின்றேன். எனது பயத்தின் காரணமாக சிலவேளைகளில் அவர்கள் வாரத்தில் ஒருநாளோ இரண்டு நாட்களோ பாடசாலைக்குப் போவதைத் தவறவிடுகின்றார்கள். நானொரு கெட்ட அம்மாவாக ஆகிக்கொண்டிருப்பதாய் இது என்னைச் சரியாய்க் கவலைப்படுத்துகிறது. ஆனால் நான் எனது பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்."
2008 ஆண்டுமுழுதும், இலங்கை இராணுவம் மேற்குக்கரையோரத்தால் கிளிநொச்சி நோக்கியும், யாழ் தீபகற்பகத்தையும் மிகுதி நாட்டையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு நோக்கியும் முன்னேறியபடி இருந்தது. பொதுமக்கள் மீண்டும் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலிருக்கும் புதுக்குடியிருப்பு நோக்கி இடம்பெயரத்தொடங்கினர். இந்தக்கணம்வரை, இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்திருந்தாலும், கிளிநொச்சியிலும், ஆனையிறவிலும் நடந்த சண்டைகளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
செஞ்சிலுவை சங்கம் தவிர்ந்த அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களும், ஐப்பசி 16, 2008ல் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசாங்கத்தின் நகரான வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இம்மக்களை அவர்களுக்கு உதவி தேவைப்படுகின்ற முக்கிய தருணத்தில் விட்டுவிட்டு வந்தது என்னுடைய வாழ்வில் மிக வலியைத் தந்த அனுபவமாகும். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காத நிலையில், எறிகணைகளினதும், விமானங்களின் தாக்குதல்களுக்கிடையில், நான் எனது நண்பர்களையும், கூட வேலை செய்தவர்களையும் வன்முறைகளுக்கிடையிலும், நம்பிக்கையீனங்களுக்கிடையிலும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஐப்பசி மாதத்திலிருந்து, உதவி வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் உணவையும் தங்குமிடங்களையும், அத்தியாவசியமான மருந்துகளையும் மக்களுக்கு கொண்டுசெல்வதற்கு திணறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது. பலவேறு வகையான அமைப்புக்களின் தொடர்ச்சியான தடுத்துநிறுத்தல்களால், அத்தியாவசிய பொருட்கள் மிகவும் அவசியமாய்த் தேவைப்படுகின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கு கொண்டுசெல்லுதல் தடுக்கப்படுகின்றது. கார்த்திகை பருவமழையின் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் மரங்களைத் தமது வீடுகளாக்கி, இருக்கின்ற சொற்ப உணவுப்பொருட்களைப் பகிர்ந்தபடி இருக்கின்றார்கள். உதவி நிறுவனங்கள் தொடர்ச்சியாக மலேரியாவையும், போசாக்கின்மையையும் தடுப்பதற்கு உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், ஆனால் விளைவு என்னவோ சொற்பமே.
தை 02, கிளிநொச்சி இலங்கை இராணுவத்திடம் விழும்வரை, இடம்பெயர்ந்த மக்களால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து நகர முடியவில்லை. அவர்கள் இந்து சமுத்திரத்தாலும், முன்னேறிக்கொண்டிருந்த இராணுவத்தாலும், விடுதலைப்புலிகளாலும் சூழப்பட்டிருந்தார்கள். புலிகள் இடம்பெயர்வதற்கு தடுத்ததோடு, அவர்களைத் தங்கள் இயக்கத்திற்குச் சேர்ப்பதற்கும், வேலைகளைச் செய்வதற்கும் பயன்படுத்தினர்.
கிளிநொச்சியின் கைப்பற்றலோடும், சில நாட்களின் பின்பான ஆனையிறவின் வீழ்ச்சியோடும், புலிகளுக்கு எதிர்காலம் அவ்வளவு நல்லதாகத் தென்படவில்லை. வன்னியிலுள்ள மக்கள் கூட்டம் தற்சமயம் தங்களுக்கேற்ற பகுதிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை இராணுவம் கிளிநொச்சியைத் தம் வசமாக்கியபின், இறுதி யுத்தம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மிகப்பெரும் இடம்பெயர்ந்த சனத்திரள் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலிருக்கிறது, ஆனால் இம்முறை அவர்களுக்கு ஒளிந்துகொள்ள எந்த இடமும் இல்லை.
"இந்த மோசமான நிலவரம் மிக உச்சத்தில் இருக்கிறது" என்றார் சர்வதேச அமெனெஸ்டி ஆய்வாளரான யோலென்டா போஸ்டர். " முல்லைத் தீவை நோக்கிய அரசாங்க நடவடிக்கையினால் சண்டை உக்கிரமடைய கடந்த வாரம் மக்களுக்கு இழப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. தமிழ் புலிகள் மக்களைப் போக விடவேண்டும், அதேவேளை அரசாங்கம், பொறியில் அகப்பட்டும், பலவேளைகளில் மறக்கப்பட்டும்விட்ட மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும்."
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மக்கள் வெளியேறுவதற்கான -உடன்பாடுள்ள பாதையில்லாதது குறித்து மிகவும் விசனப்பட்டுள்ளது, அத்துடன் மக்கள் மிகச்சிறியதான பகுதியில் செறிவாக்கப்பட்டிருக்கின்றார்கள், இதனால் அவர்களது வாழ்விட நிலைமைகளும், பாதுகாப்பும் மிகவும் கவ்லைக்கிடமாயுள்ளது, குறிப்பாய் தொற்றுநோய்கள். மக்களுக்கு வழங்கப்படவேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் (அரசாங்கத்தால்) தடுக்கப்பட்டுள்ளதாலும், , சர்வதேச நிறுவனங்களில் உதவில்லாததாலும், எவ்வித பாதுகாப்புமின்றி இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை மிக மோசமாய் இருக்கிறது.
வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவம் பற்றி மிகுந்த பாதுகாப்பின்மையாக இருப்பதே உண்மை. தமிழர் மீதான 25 வருட படுகொலைகளின் வரலாற்றில், இலங்கை இராணுவத்தின் தெளிவான நோக்காக புலிகளை முற்றாக அழிப்பதாய் இருக்கையில் வன்னி மக்கள் மிகவும் அந்தரமான நிலையை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். கிட்டத்தட்ட எல்லோருடைய குடும்பத்திலும் யாரோ ஒருவர் விரும்பியோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ புலி உறுப்பினராக இருக்கின்றார். இந்த நிலைமையால் தாங்கள் புலிகளின் அனுதாபிகளாக பார்க்கப்படுவோம் என்று இன்னும் அதிகமாய் இலங்கை இராணுவத்தின் மீது பயப்பிடுகின்றவர்களாய் மக்கள் இருக்கின்றார்கள், அவ்வண்ணமே தாங்கள் இலங்கையினது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் இருப்பதாய்ப் பார்க்கப்படுவோம் என்பதும்.
"இலங்கை இராணுவம் இந்தப் பகுதியிற்கு வருவது குறித்து எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது" என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வன் கூறினார். "எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டால் நான் வெளியேறுவேனா என்பது எனக்குச் சந்தேகமாய் இருக்கிறது. எங்கள் கிராமத்திலிருக்கும் எல்லோரும் அரசாங்கத்தின் பகுதிகளுக்கு செல்வார்களாயிருப்பின், நான் எனது குடும்பத்துடன் போகக்கூடும். ஆனால் எங்கள் எல்லோருக்கும் சரியாய்ப் பயமாயிருக்கிறது, நாங்கள் ஒருபோதும் வெளியில்(அரச பகுதியில்) வாழ்ந்ததில்லை ஆதனால் அங்கே எப்படி(நிலைமை) இருக்கும் என்றும் தெரியவில்லை."
வன்னி 'விடுவிக்கப்படும்போது' வன்னியிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளமாய் வரக்கூடுமென்று வவுனியாவில் அரசாங்கம் (தடுப்பு) முகாங்களைத் தயார்படுத்தியுள்ளது. ஆனால் நாங்கள் கடந்தகாலத்தில் பார்க்கின்றபோது, இத்தகைய 'மனிதாபிமான முகாங்கள்' முக்கியமான சித்திரவதைக் கூடங்களாகவும், இம்முகாங்களிலிருந்து மக்கள் வெளியேற பல மாதங்கள் எடுக்கக்கூடியதாகவும் இருந்திருக்கிறது. அத்துடன் இங்கே தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன காத்திருக்கிறது? வளமான அவர்களின் வன்னி நிலங்கள் இந்த யுத்தத்தால் வெடிக்கப்படாத குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இன்னமும் வெடிக்காத எறிகணைகள் பதிந்துள்ள விவசாய நிலங்களையும், கரையோரப் பகுதிகளையும் சுத்திகரித்து விவசாயிகள் திரும்பிப்போக இன்னும் பலவருடங்கள் எடுக்கும்? என்ன நடவடிக்கைகள் மீள்சீரமைப்புக்கும் மீள் குடியேற்றங்களுக்கும் செய்யப்பட்டிருக்கின்றன? இவையெல்லாம் சுத்திகரிக்கப்பட்டு கையளிக்கும்வரை இந்த மக்கள் இவ்வாறான தடுப்பு முகாங்களிலா காத்திருக்கவேண்டும்?
சுயாதீன கண்காணிப்பாளர்கள் வன்னியில் இல்லாததால், இரண்டு பக்கமும் ஒழுங்கமைக்கப்பட்ட பரப்புரையைச் செய்து வருகின்றன, இதனால் உதவி வழங்கும் நிறுவனங்கள் கடந்த ஐப்பசியிலிருந்து வெளியேறியபின், வன்னியிலுள்ள மக்களின் உண்மையான நிலவரத்தை அறிவது மிகவும் கடினமாயிருக்கிறது. அந்த மாதம் வரையும்(ஐப்பசி) பார்த்தவகையில் சொல்வதனால், மக்கள் உணவு, உறைவிடம், பாதுகாப்பு கழிவிட வசதிகள் மிகவும் குறைந்த கஷ்டமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்... சர்வதேச நிறுவனங்களின் வெளியேற்றத்துடன், உதவிப் பொருட்கள் வழங்குவது தடுக்கப்பட்டன, பருவமழையின் காரணமாகவும், உக்கிரமான இராணுவ நடவடிக்கையாலும், நிலைமை மிகவும் மோசமாக நினைத்துப் பார்க்காத அளவுக்குப் போயிருக்கும்.
நன்றி:
Tehelka
தமிழில்: டிசே தமிழன்
புகைப்படம் 1: வீடும், பாதுகாப்பும் பிறவசதிகளுமற்று மரத்தின் கீழ் தங்கியிருந்த குடும்பம் ஒன்று.
புகைப்படம் 2: இலங்கை இராணுவத்தின் எறிகணைகளால் அழிக்கப்பட்ட வீட்டின் எஞ்சியபகுதியில் தனித்திருக்கும் சிறுவன்.
புகைப்படம் 3: மனிதாபிமானப் பணிகளைச் செய்த நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வன்னிக்குள இருந்து வெளியேற்றபோது, அவர்களைப் போகவேண்டாம் என்று மக்கள் நடத்திய போராட்டம்.
(இப்படங்களும் மேலே கட்டுரையை எழுதியவராலேயே எடுக்கப்பட்டிருந்தன)

5 comments:
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
1/28/2009 03:27:00 PMகருத்துக்கு பின்னர் வருகிறேன்...
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - 29 அக்டோபர் 2008 - எழுதியவர் இவர்தான் என்று நினைக்கிறேன்.
1/28/2009 06:13:00 PMஅங்கிருக்கும் நிலை சரியாக சொல்லப்பட்டுள்ளது. ராணுவம் - புலிகள் இரண்டிற்கும் இடையில் மக்கள் என்ன செய்வதே என்ற தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.
1/28/2009 07:09:00 PMநீங்கள் சொன்னது போல கிட்டதட்ட எல்லா குடும்பங்களும் போராளி குடும்பங்களாக மாறி / மாற்றப்பட்டுவிட்ட நிலையில் மக்கள் உணாரும் பாதுகாப்பின்மையை உணர முடிகின்றது. எந்த விதமான கேள்விகளையும் கேளாமல் உணர்ச்சிவசப்பட்டு எல்லாத்துக்கும் தலையாட்டியகூட்டம் இன்று காரணங்களை தேடி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.
எதுவுமே சொல்லமுடியாத நிலையில் தேசியம் ச்ன்பது ஒரு கற்பனை என்று யாரோ சொன்னது காற்றில் கேட்கின்றது.
Nice post!
1/29/2009 02:58:00 AMஉடன் தமிழில் வாசிப்போருக்கு கொடுத்ததற்கு நன்றி டிஜே.
1/29/2009 08:06:00 AMஈழத்தில் போர்ச் சூழலின் கொடூரச் செய்திகள் கிடைக்கக் கிடைக்க வேதனை மிகுந்து கொண்டேயிருக்கிறது.
ஈனத்தனமான இந்திய அரசின் தலையீட்டை நிறுத்தச் செய்வது எப்படி, தமிழகத்து எச்சப்பொறுக்கி அரசியல் தலைவர்களை மீறி ஒரு வெகுமக்கள் எழுச்சியை உருவாக்க என்ன செய்வது என்ற எண்ணங்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன.
இயலாமை உணர்வு வெட்கித் தலைகுனிய வைக்கிறது :(
Post a Comment