(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)
இந்த இடத்தில் பெயர்களைப் பட்டியலிடுவதை சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ச்சியாக எழுதுவது/ எழுதாமல் இருப்பதன் புள்ளி குறித்து சற்றுப் பார்ப்போம். பல்வேறு புறக்காரணங்கள் இருந்தாலும், ஈழத்திலக்கியத்தில் நல்ல சில படைப்புக்களை எழுதிய எத்தனையோ பேர்கொண்ட பட்டியல் நம்மிடம் நீண்டதாய் இருக்கிறது. ரஞ்சகுமார் ஓர் அருமையான தொகுப்பான 'மோகவாசலோடு' நிறுத்திவிடவில்லையா? ' மக்கத்துச் சால்வை' எம்.ஹனீபா 40 ஆண்டுகளாக எழுதினாலும் 'அவளும் ஒரு பாற்கடல்' என்ற தொகுப்பில் 25 கதைகளை மட்டுந்தானே தொகுக்க முடிந்திருக்கின்றது. ஆனால் வாசிக்கும் நாம் ரஞ்சகுமாரையோ, ஹனீபாவையோ, ஏன் அரசியல் தளத்தில் கோவிந்தனையோ தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழத்தின் தனித்துவமான ஒரு பண்பு என எடுத்துக்கொள்கின்றேன். எங்களுக்கு -அதாவது வாசகருக்கு- ஒரு படைப்பாளி ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட அவர் கவனிக்கக்கூடியவர் என்றுதான் எமது ஈழத்து மரபும் வாழ்வும் கற்றுத்தந்திருக்கின்றது. இந்த மரபு இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது என்பதல்ல, சங்ககாலக் கவிஞர்களை இப்போதும் நினைவுகூர எங்களுக்கு அவர்களின் ஒன்றிரண்டு பாடல்களே போதுமாயிருக்கிறது அல்லவா?
இந்தக் காலகட்டத்தில் இணையம் பல புதிய படைப்பாளிகளை அடையாளங்காட்டுகின்றது. முக்கியமாய் யாழ்ப்பாணத்திலிருந்து முரண்வெளி தளத்தில் ஹரி எழுதத் தொடங்குகின்றார். முரண்வெளி தளத்தில் வெளிவந்த ஆமிரபாலியின் கவிதைகளும், அமெளனனின் 'வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்' என்பதும் 2005ற்குப் பிற்பான படைப்புக்களில் கவனத்தைக் கோருபவை. வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் கதை இராணுவத்தால் மூடப்பட்ட யாழ் நகரின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ சூழலின் நிர்ப்பந்தற்குள் உந்தப்பட்டு இராணுவத்தோடு தற்பால் உறவு கொள்கின்ற சிறுவர்களின் பாத்திரங்கள் இதில் வருகின்றது. இக்கதையில் அநேகமான ஈழத்துச் சிறுகதைகளில் விபரிக்கப்படுகின்ற 'கொடுமைக்கார' இராணுவம் என்ற பாத்திரம் இராணுவத்திற்கு கொடுக்கப்படாதது கவனத்தில் கொள்ளவேண்டியது. மிக உக்கிரமான போர்ச்சூழல் நமக்கான இரண்டு தெரிவுகளைக் கொடுக்கின்றது; அதிலொன்று நாம் 'வீரனாகி'ப் போர்க்களத்திற்குப் போவது. அல்லது இன்னுமொரு வாய்ப்பாக இருக்ககூடிய காமத்தின் உச்சத்திற்குள் சிக்கிக்கொள்வது. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.
2005ற்குப் பின் முத்துலிங்கமும், சோபாசக்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவர்களின் பிற படைப்புக்களைச் சற்று மறந்து பிறரைப் பார்ப்போம். சுமதி ரூபனின் 'யாதுமாகி' தொகுப்பு மிதர பதிப்பகத்தால் வெளிவருகின்றது. அவற்றில் அனேகமானவை வானொலிக்கு எழுதியவை என்றாலும் ஒரு பெண்ணின் அகவுலகம் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. முக்கியமாக 'வேட்கை' என்று சுமதி திண்ணையில் எழுதிய கதை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திருமணம் என்கின்ற மிகக்கட்டுபாடான அரங்கை விட்டு நகர விரும்புபவ்ர்களால் கூட சிலவேளைகளில் பண்பாட்டை கழற்றியெறிய முடியாது இருக்கின்றது என்பதைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் கவனப்படுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் கனடாவிலிருக்கும்போது அவ்வளவு கவனம் பெறாத தமிழ்நதி தமிழகத்திலிருந்து தனது தடங்களைப் பதிக்கத்தொடங்குகின்றார். 'சூரியன் தனித்தலையும் பகல்' என்கின்ற கவிதைத் தொகுப்பும், 'நந்தகுமாரனுக்கு எழுதியது' என்கின்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. தமிழ்நதியின் கவிதை மொழியில் ஒரு வசீகரத்தன்மை இருந்தாலும் அவர் முன்வைக்கும் அரசியல் சிலவேளைகளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
இவர்களை விட மிகவும் கவனிக்கத்தக்க தொகுப்பை நிருபா 'சுணைக்கிது'வாய் தந்திருக்கின்றார். சிறுமியிலிருந்து வளர்ந்த பெண்வரை பல பாத்திரங்கள் மிக அழகாகச் சித்தரிக்கபப்ட்டிருக்கின்றன. சுணைக்கிது கதையில் சிறுமியொருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குபவர் யாரென்பதை நேரடியாகச் சொல்லாமல் ஒரு வினாவாகத் தொக்கு நிற்க வைத்து அருமையானதொரு கதையாக முடித்திருப்பார். கிட்டத்தட்ட எஸ்.ராமகிருஸ்ணைன் தனது கதையொன்றில் (விசித்திரி என நினைக்கிறேன்) மனநிலை பிறழ்ந்த பெண்ணொருத்தியோடு உறவு கொண்டது யாரென்பதை கூறாமல் ஒரு கதை எழுதியிருப்பார். அதை ஒரு சிறந்த கதையாக சொல்லித் திரிந்த எவரும் நிருபாவின் சுணைக்கிது கதையைப் பற்றிக் குறிப்பிடாமல்விட்டது வியப்பாக இருக்கிறது.
இதேவேளை பிரான்சிலிருந்து நீண்டகாலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் 'தொலைவில்' வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்களும்' , த.பாலகணேசனின் 'வர்ணங்கள் கரைந்த வெளியும்' இதே காலப்பகுதியில் வெளிவருகின்றன..
3.
ஈழத்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார்கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த.அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு.வில்வரத்தினத்தினம் தீவுகள் ஆக்கிரமிக்கப்படுவதைப் பாடிய 'காற்றுவெளிக்கிராமம்' , யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம்பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய 'யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே' போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவை விட அதற்கப்பால விரிவடையவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக்கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்பதால் இதை இப்போது சொல்லவேண்டிய அவசியமும் இருக்கிறது எனவே நம்புகிறேன். த.அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்லமுடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய 'மரணத்தின் வாசனை' முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்யமுடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத்தமிழ் இனம் குறித்த சோகமும் மரணத்தின் வாசனை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவரின் சகோதரரும் போரின் நிமித்தம் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஏன் இவர்களின் படைப்புக்களோடு இவர்களின் புறச்சூழல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவர்களைப் போன்ற பல படைப்பாளிகள் பலர் இவ்வாறான இழப்புக்களோடும் துயரங்களோடும் நேரடியாகப் பாதிக்கப்படடவர்கள். தாங்கள் நினைத்த நேரத்திற்கு கும்பமேளாவிற்கும், குமரிமுனைக்கும் போய் வருபவர்களுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.
இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டுபோகக்கூடிய இடைவெளிகளை வாசகருக்குத் தரக்கூடிய ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காதபோதும், மெலிஞ்சியின் 'வேருலகு' அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளிலிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.
(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை, Apr, 2010)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
anpulla dj. கிட்டத்தட்ட எஸ்.ராமகிருஸ்ணைன் தனது கதையொன்றில் (விசித்திரி என நினைக்கிறேன்)..dj, first up all i want to say that i am a regular reader of your blog.so this comment. i noticed so many times of these type of references which you can easily concretise by searching a little bit and make sure of the reference. i was annoyed once when u said 'yamuna rajendran aaga irukkalaam ena ninaikkiren'. i think u know verywell that we ( you and me a writers)are all put lot of efforts in writing a piece. so please be concrete in refernces. anpudan yamuna rajendran.
5/02/2010 02:36:00 PMபோருக்குப் பின், ஈழத்துக்கவிதைகள் நேரிடையான மொழியை கையாளுவதாக இருக்கின்றன. அப்படி கையாளும்போது கவிதைக்குள் வாசகன் சுலபமாக சென்றுவிடக்கூடிய நிலையை அக்கவிதைகள் பெறுகின்றன. போரும், அதன் சூழலும் தந்துவிட்டு போயிருக்கிற கொடுந்தாக்கத்தில் அதை தாண்டி எழுதுவது என்பதும் சுலபமானதல்ல. அதனால்தான் சமீபத்திய ஈழக் கவிதைகள் உக்கிரத்தோடு இருப்பதாக நினைக்கிறேன்.
5/03/2010 09:20:00 AMநல்ல முயற்சி. வலைப்பதிவு எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிடும் போது வலைதள லிங்க் கொடுத்தால் வாசிக்க வசதியாக இருக்கும்.
வாழ்த்துகள்.
அன்பின் யமுனா,
5/03/2010 11:42:00 PMமுக்கியமான தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உண்மையில் இதற்கு எக்காரணத்தைக் கொண்டும் சாட்டுச் சொல்லமுடியாது; என் சோம்பலைத் தவிர. இனி வருங்காலங்களில் இது குறித்து கவனமாக இருக்க விரும்புகின்றேன்.
....
இந்தக் கட்டுரையை மிகக்குறுகிய காலத்திலேயே(2 நாட்களுக்குள்) தயாரித்திருந்தேன். அதிகம் நினைவில் இருந்தவற்றை வைத்தே எழுதியிருந்தேன்; குறிப்பிட்ட பல புத்தகங்கள் மீண்டும் தட்டிப் பார்க்கக்கூட கைவசமிருக்கவில்லை.
நன்றி ஆடுமாடு.
5/04/2010 11:12:00 AM/வலைப்பதிவு எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிடும் போது வலைதள லிங்க் கொடுத்தால் வாசிக்க வசதியாக இருக்கும்/
நேரம் வாய்த்தால் அவர்களின் வலைத்தள இணைப்புக்களைத் தர முயற்சிக்கின்றேன்.
Post a Comment