1.
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்றொரு விம்பம் தமிழ்ச்சூழலில் பொதுப்புத்தியில் பதிந்திருக்கின்றது. அவ்வாறான சூழலிலிருந்து வரும் நெறியாளர்களும் பொதுப்புத்தியைத் தவிர்த்து புதிய களங்களில் தமிழ்த்திரைபடச்சூழலை நகர்த்துவதற்கு அக்கறை கொள்வதுமில்லை.. ஆகவேதான், வழமைக்கு மாறாய் ஆடல், பாடல், சண்டைக்காட்சிகள் குறைவாக வரும் திரைப்படங்களைக் கொண்டாடவேண்டிய அவலச்சூழல் தமிழில் இருக்கிறது. எனினும் இவற்றுக்கு அப்பால் இவ்வாறான திரைப்படங்களில் கூட தலித்துக்கள், பெண்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய சித்தரிப்புக்கள் மிக மோசமாக நுண்ணியதளத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.தமிழ்ச்சூழலோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய பார்வையாளர் வட்டத்தையும் மோசமான தணிக்கைச் சூழலையும் கொண்ட சிங்களத் திரைப்படச்சூழலிலிருந்து அற்புதமான திரைப்படங்கள் பல்வேறு பின்புலங்களை முன்வைத்து வரத்தொடங்கிவிட்டன. அதிகாரத்தின் அமைப்புகளுக்கு அறைகூவல் விடுத்தபடி பல இளைய நெறியாளர்கள் தமக்கான -முக்கியமாய் போருக்கும்/அரச அதிகாரங்களுக்கும் எதிரான கதைகளைத் துணிவுடன்- திரைப்படமாக்கத் தொடங்கிவிட்டனர். இன்று பல்வேறு நாடுகளில் நிகழும் திரைப்பட விழாக்களில் சிங்களப்படங்கள் திரையிடத் தேர்ந்தெடுக்கப்படுவதும், விருதுகளைப் பெறுவதும் புதிய களங்களைப் பரீட்சித்துப்பார்த்த சிங்களத்திரைப்படச்சூழலிற்குக் கிடைத்த அங்கீகாரமென எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறான சிங்கள நெறியாள்கையாளர்களில் ஒருவராக, தனது இருபத்தேழாவது வயதில் The Forsaken Land திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனததைத் திருப்பிய ஒருவர் விமுக்தி ஜெயசுந்தரா. இலங்கையின் தென்பகுதியில் பிறந்த விமுக்தி திரைப்படத்துறை சார்ந்த கல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்னர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்டவர். இப்போது மீண்டும் -நான்கு வருட இடைவெளியின்பின்- தனது இரண்டாவது படமான Between Two Worlds என்ற படத்தோடு வந்திருக்கின்றார்.. ஏற்கனவே வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடத்தெரிவான இத்திரைப்படம் இமமாதம் ரொறண்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்படவிழாவிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. .மிகக் குறைவான உரையாடல்களையும், நிறையப் படிமங்களாலான கவித்துவக்காட்சிகளையும் கொண்ட விமுத்தியின் படங்களில் சாதாரணமாய் ஒருவரால் அவ்வளவு எளிதில் நுழைந்துவிடமுடியாது..மிக மெதுவாகவும், நேர்கோட்டுத்தன்மை அற்ற காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாது அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்படங்களைப் பார்க்கத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளாத ஒரு பார்வையாளரை இத்திரைப்படங்கள் தம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிடவே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்படம் தொடங்குவதற்கு முன், ஒரு சிறு அறிமுகத்தை விமுக்தி தரும்போது, "ஏற்கனவே இப்படத்தைப் பார்த்த பலர் விளங்குவதற்குக் கடினமான படம் என்றே கூறியிருக்கின்றார்கள். இது பல puzzleகளைக் கொண்ட ஒரு திரைப்படம். படம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்களுக்கான ஒரு கதையை உருவாக்க முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்தப்படம் பார்வையாளருக்குரிய திரைப்படம்; .puzzleகளை மாற்றி மாற்றி அடுக்குவதன் மூலம் பார்ப்பவர் தனக்கான ஒரு கதையை உருவாக்க முடியும். ஒருவர் உருவாக்கும் கதையும், படத்தைப் பார்க்கும் மற்றொருவர் உருவாக்கும் கதையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதை இன்னொருவிதமாய் இது தன்னளவில் பார்ப்பவரின் சூழலுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்ப கணந்தோறும் மாறிக்கொள்ளும் பிரதியென எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒற்றைத்தன்மையிலும், நேர்கோட்டுக்கதைச் சொல்லலிலும் ஊறியிருக்கும் நம்மில் எத்தனைபேர் இத்திரைப்படம் தரும் சுதந்திரத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கின்றோம்? கட்டற்ற சுதந்திரம் என்பது சிலருக்குப் பிடிக்காதுபோல இத்திரைப்படம் எடுக்கப்பட்டவிதமும் பலருக்குப் பிடிக்காது போகவும் கூடும்.
2.
ஒருவன் மலையுச்சியிலிருந்து கடலுக்குள் வீழ்வதுடன் ஆரம்பிக்கும் முதற்காட்சி, அவன் திரும்பவும் மலை மீதேறி நகருக்குள் நுழையும்போது நகர் கலவரத்தின் அந்தரத்தில் மிதக்கத் தொடங்கியிருக்கின்றது. தெருவில் போகின்றவர்களை அடித்துத் துவைத்து கடைகளையெல்லாம் நொறுக்கியபடி குழுக்குழுவாய் இளைஞர்கள் கூக்குரலிட்டபடி இருக்கின்றார்கள். கலவரத்தின் நடுவில் பயந்து நடுநடுங்கியபடி ஒரு பெண்ணிருப்பதைப் பார்த்து, கடலில் விழுந்து நகர் மீண்ட இளைஞன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீனச்சாயலுடைய பெண்ணை இவன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்தனின் வானில்(Van) ஏற்றியபடி நீண்டவீதியினூடாக கிராமப்புறத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். 'உன்னை வன்புணர்ந்தவர் யாரென்று தெரியுமா' என அந்தப் பெண்ணிடம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற சாயலுடைய ஒருவன்' என்கிறாள் அந்தப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வன்புணர இவன் துடிக்கின்றபோது, வானை ஓட்டிக்கொண்டு வருகின்றவர் அதற்கு இடைஞ்சலாய் இருப்பது புரிகின்றது. இப்பயணத்தின்போது சீனாவில் ஒரு நகரில் பல தொலைத்தொடர்புச்சாதனங்களைத் தகர்த்தபடி போராளிகள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்கப்படும் வானொலியில்- சொல்லப்படுகின்றது (மறைபொருளாய் இலங்கையிலிருக்கும் போராளிகள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). பயணத்தின் நடுவில், இவ்வாறு காமத்துடன் பித்தேறியிருக்கும் இவனை அடித்துப்போட்டுவிட்டு அந்தப்பெண்ணும், சாரதியும் வானில் ஏறித் தப்பிப்போகின்றார்கள்.
இவன் மீண்டும் தனது கிராமத்திற்குப் பஸ்சில் போகின்றான். ஊரிலிருப்பவர்கள் 'ஊருக்கு ஏன் இவ்வளவு விரைவில் திரும்பி வந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவர்கள் சுட்டுப்போட்டுவிடுவார்கள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவது ஒளிந்துகொள்' என்கின்றார்கள். அவனைப் போன்ற பல இளைஞர்கள் அதிகார அமைப்பின் வன்முறைக்குப் பயந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்பக்கமாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு சிறுவனின் துணைகொண்டு இவன் அறிகின்றான். .தானும் அவர்களோடு பதுங்கிவாழ இவன் தயாராகின்றபோது, தான் வந்த வான் குளமொன்றில் கவிழ்வதைக் காண்கின்றான். இவன் விரைவாக ஓடிப்போய் குளத்தைப் பார்க்கின்றபோது அங்கே வான் விழுந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.. குளத்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவரிடம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குளத்தினுள் இப்போது விழவில்லை. ஆனால் முன்னோர் காலத்தில் இப்படியோரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. கடந்தகாலத்தில் நிகழ்ந்தது எதுவும் இனி நிகழாது என்றும் அறுதியிட்டுக் கூறமுடியாது' என்கிறார். இப்போது அடுத்த காட்சி மாறுகின்றது.
3.
ஒரு முதியவரும் இளைஞனும் நல்ல வெறியில் கடலையொட்டிய குன்றொன்றில் அமர்ந்திருக்கின்றார்கள். முதியவர் கதையொன்றைச் சொல்லப்போவதாய்க் கூறுகின்றார். ஆனால் கதையின் நடுவில் எதுவும் கூறி கதையை வேறு விதமாக மாற்றக்கூடாது என்று இளைஞனை எச்சரிக்கின்றார். கதை: ஒரு நாட்டின் அரசனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இந்த அரசனின் மகள் திருமணஞ்செய்து அவளுக்குப் பிறக்கின்ற ஆண் குழந்தை, அவனின் இரு மாமன்களையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்று சோதிடர்கள் எச்சரிக்கின்றார்கள். இதன் நிமித்தம், எவரையும் திருமணஞ்செய்து குழந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரசனின் மகள் ஒரு தீவின் நடுவில் சிறைவைக்கப்படுகின்றாள். ஆனால் ஏதோவொரு வகையில் அவள் கர்ப்பமடைந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்று விடுகின்றாள். வளர்ந்துவரும் அந்த இளவரசனைக் கொல்ல இரண்டு மாமன்களும் முயல்கின்றார்கள். இறுதியில் அந்த இளவரசன் கொல்லப்பட்ட விதம் பற்றிப் பல கதைகள் கூறப்படுகின்றன. ஒன்று: இளவரசன் குறித்த சரியான அடையாளந்தெரியாததால், அந்நாட்டிலுள்ள அவன் வயதொத்த அனைத்து இளைஞர்களையும் கொலைசெய்ய அவனது மாமன்மார்கள் கட்டளையிட்டார்கள் என்று கதை சொன்ன முதியவர் கூறுகின்றார். அதைக் கதை கேட்ட இளைஞன் மறுத்து, அந்த இளவரசன் தனது தோழர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இளவரசன் தப்பிப்போய் ஒரு மரப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் எனவும், அவன் இன்னமும் அந்த மரப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று நம்பப்படுகின்றது என்றும் கதையை வேறுவிதமாய் முடிக்கின்றான்.
4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் தன் வயதொத்த -பதுங்கியிருக்கும்- இளைஞர்களைத் தேடும் இவன், தனது அண்ணியின் வீட்டுக்குள் வருகின்றான். கண்ணில் காயம் ஏற்பட்டு ஒரு விழி திறக்கமுடியாத இவனுக்கு அவர் முலைப்பால் விட்டு காயம் ஆற்றுகின்றார். இடையில் இவனுக்கு அண்ணி மீது உடல்சார்ந்த ஈர்ப்பு வர அண்ணி அவனை உதறித்தள்ளுகின்றார். 'எனது ராஸ்கல் அண்ணன் இனியும் திரும்பி வருவான்?' என்று நீங்கள் நினைக்கின்றீர்களா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவனோடு பற்றைகளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவன் சிறுவனின் துணையுடன் ஒளிந்திருக்கும் இளைஞர்களைத் தேடிப் போகின்றான். சிறுவன் ஒரு மரப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. இவன் சிறுவனின் மன்றாட்டத்தையும் அலட்சியம் செய்து மரத்தடிக்குப் போகின்றான். அந்த மரம் இளவரசன் தான் கொல்லப்படுவதிலிருந்து தப்ப ஒளிந்து கொள்வதாய்த் தொமக்கதையில் குறிப்பிடப்படுகின்ற மரம்.
இதற்கிடையில் கிராமம் எங்கும் கைகள் மட்டும் வெளியே தெரியும் உடலங்கள் தென்படத்தொடங்குகின்றன. கிராமத்துக் குழந்தைகளும், பெண்களும் பீதியுடன் உறைந்த நிலையில் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாய்கள் மாடுகள் எல்லாம் கூடவே சுடப்படுகின்றன. ஒரு முழு மாட்டைக் கோரமாய் கிழித்துண்ணும் கரிய நாய் சூழலின் கொடூரத்தை நன்கு புலப்படுத்துகின்றது.. கிராமத்தில் எல்லா இயல்பற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் காணாமற்போய்க்கொண்டிருக்கின்ற கதையை வெளியே சொல்லமுடியாத கனத்த சோகத்தை தங்கள் தொண்டைக்குழிகளுக்குள் அடக்கியபடி கிராமத்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.அதேவேளை கிராமத்தவர்களின் நீர்த்தேவைகளைப் பூர்த்திசெய்யும் குளமும் நஞ்சூட்டப்படுகின்றது. பதுங்கியிருக்கும் இளைஞர்கள் வெளியே வர, இவனும் அந்த இளைஞர்களும் ஒன்றுசேர்ந்து அக்குளத்தைச் சுத்திகரிக்கும் பணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குளத்தைச் சுத்திகரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைகளில் ஆயுதங்களுடன் வருபவர்கள் கூடி நிற்கும் இளைஞர்களைத் அடித்தும் சுட்டும் கொல்லத்தொடங்குகின்றார்கள். எல்லோரும் கொல்லப்பட இவன் மட்டும் தப்பிப்போய் மரப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன இவனைத் தேடி சிறுவனும், இவனது அண்ணியும் அலையத்தொடங்குவதுடன் படம் முடிவுபெறுகின்றது.
காட்சிகளை அப்படியே பதிவாக்குவது என்றால் இப்படித்தான் இத்திரைப்படத்தின் கதையிருக்கும். விமுத்தி குறிப்பிட்டதுபோல பார்ப்பவர் இந்த puzzleகளை எப்படி அடுக்கித் தனக்கான படத்தை உருவாக்குகின்றார் என்பதில்தான் படத்தின் முழுமை தங்கிருக்கிறது. திரையிடலின் பின் படம் குறித்த கேள்விகளுக்கு, 'இந்தப்படத்தின் மூலம் எந்தக் கதையைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?' என்று பார்வையாளரிடையே இருந்து வினாவப்பட்டபோது, 'நீங்கள் யோசியுங்கள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவாரத்தில் உங்களுக்கான ஒரு கதை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி பதிலளித்திருந்தார்.. 'சிலவேளைகளில் இந்தப்படத்தை தங்களின் ஜதீகக் கதைகளோடு இணைத்துப் பார்த்து இலங்கையர்களால் விளங்கிக்கொள்ள முடியும், அதனாற்றான் எங்களால் விளங்குவதற்குக் கடினமாய் இருக்கிறதா?' என்றொருவர் கேள்வி எழுப்பியபோது, 'இதில் சொல்லப்படுகின்ற கதை மகாவம்சத்தில் வருகினறது. ஆனால் மகாவம்சத்தை வாசித்தால்தான் இந்தப் படம் விளங்கும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை' என்றும் விமுக்தி கவனப்படுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வர்த்தக ஹொலிவூட் படங்களுக்கு தான் எதிரானவன் என்பதை விமுக்தி பதிவு செய்தபோது, அப்படியாயின் இத்திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் யாரென வினாவப்பட்டபோது, 'அது குறித்து நான் அக்கறைகொள்ளவில்லை. என்னளவில் எத்தகைய சமரசத்திற்கும் தயாரில்லை. ஆகக்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமானது' என்று விமுத்தி தெளிவாகவே கூறியிருந்தார்.
5.
இனி, எனக்கு விளங்கியமாதிரி உருவாக்கிக்கொண்ட கதை: இரண்டுவித்தியாசமான உலகு என்பதை விமுக்தி யதார்த்ததிற்கும் புனைவுக்குமான உலகம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது கனவுக்கும் நனவுக்கும் இடையிலான உலகம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த கனவு X நனவு என்கின்ற இரண்டு உலகை அவ்வளவு எளிதாக எவராலும் வித்தியாசப்படுத்த முடியாது. நாம் யதார்த்த்தில் இருக்கும்போதே சட்டென்று கனவுலகத்திற்குப் போய்விடமுடியும். இங்கே தன்னை தடுத்துநிறுத்த முயல்கின்ற சிறுவனை இவன் தரையில் அடித்துக்கொள்வதும், தனக்கு புணர முதலில் சம்மதம் தராத அண்ணியை கல்லொன்றால் சதக் சதக் என்று இரத்தம் பீறிட இவன் கொல்வதுமான காட்சி யதார்த்ததில் நிகழ்வதுபோலக் காட்டப்பட்டிருந்தாலும் இவையனைத்தும் இவனின் உள்மனதில் உருளுகின்ற உலகில் வருபவையே. எனெனில் இறுதிக்காட்சிகளில் இவன் பொந்தில் இருக்கின்றபோது தேடி உயிருடன் மீள வருபவர்கள் இச்சிறுவனும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு படிமங்களைக் காட்சிப்படுத்துவதில் பெருவிருப்பம் உள்ளதென்பதால் எதையும் நேரடியாகச் சொல்வதற்காய் அதிக நேரம் செலவ்ழிப்பதில்லை. அவரது முதற்படமான Forsaken Land லிலேயே, போரைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் போரின் நேரடி அழிவுகளை எந்தவொரு காட்சியிலும் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்.. அதுபோல அந்தப்படத்தில் அடிக்கடி ஒரு படிமமாய் வரும் கவச வாகனமும் (ராங்கியும்) அது குறிப்பார்க்கத் திருப்புகின்ற நீண்ட குழாயும், 'சமாதான காலம்' என்று சொல்லப்படுகின்ற காலத்திலும் போர் வாசற்படியில் நின்று, எப்போதோ மீண்டும் நிகழத் தயாராகின்றதென நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்திலும் அவ்வாறான படிமங்களையே விமுக்தி பயன்படுத்தியிருப்பார். உண்மையில் இந்தப்படத்தில் வரும் இவன் ஒரு முன்னோர் காலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படுகின்ற கதையில் வருகின்ற இளவரசனின் இன்னொரு படிமமே. இங்கே வரும் அண்ணியும் கூட. அவர் மூன்றாம் முறையாக இவனது காயத்தை ஆற்றுவதற்காய் தனது முலைப்பால் கொடுக்கும்போது, இவன் கேட்கின்றான் எப்படி 'உங்களுக்குப் பிள்ளையில்லாமலே முலை சுரக்கிறது?' என்று. இதை நாம் அந்த ஜதீகக் கதையில் தீவின் நடுவில் சிறைவைக்கப்பட்ட இளவரசி எவருமேயின்றி எப்படி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகின்றாள் என்பதோடு பொருத்திப் பார்க்கலாம். அதே மாதிரி இளவரசனின் தோழர்கள் கொல்லப்பட்டதைப் போல நிகழ்காலத்தில் இவனது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்படுகின்றார்கள். ஒரு கிளர்ச்சி/கலகம் அழிக்கப்பட்டுவிட்டது என்று அதிகாரத்திலிருப்பவர்கள் கொண்டாடுகின்றபோதும், இவன் பொந்தில் இருப்பது என்பது, போராட்டத்திற்கான காரணி இன்னமும் அழிந்துவிடவில்லை என்பதைக் குறியீடாகக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தை ஈழத்தில் நடைபெற்ற இரண்டுவிதமான உள்நாட்டுப் போர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.. திரைக்கதை மேலோட்டமாய் தனியொருவனின் கதையைச் சொல்வதாக இருந்தாலும், அது ஒரு போராடிய சமூகத்தின் கதையைத்தான் சொல்கின்றது என்ற நுட்பமான பார்வையை நாம் வந்தடைய முடியும். ஈழத்தில் நடைபெற்று முடிந்த தமிழரின் ஆயுதப்போராட்டம், சிங்கள இளைஞர்களின் 'சே குவேரா' (ஜேவிபி) கிளர்ச்சிகளுடன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்தவரை அதிகமாய்ப் பொருந்திப் போவது ஜேவிபியின் கிளர்ச்சிக்காலம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மிக மிலேச்சத்தனமாய் எந்தவித சாட்சிகளோ விசாரணைகளோ இன்றி கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையின் தென்பாகம் எங்கும் சடலங்கள் கடலில் மிதந்ததாகவும் அரைகுறையாய் புதைக்கப்பட்டதாகவும் பின்வந்த கதைகள் சாட்சியம் கூறியிருக்கின்றன. இன்றைய தமிழின அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூரக்கரங்கள் இருந்தனவோ அதேபோல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்காலத்தை ஒடுக்கவும் இந்தியாவின் இரத்தக்கரங்கள் நீண்டிருந்தன என்பதை நாமனைவரும் அறிவோம்.
மானுட விடுதலைக்கான கலகங்கள் எவ்வளவு கொடூரமாய் அதிகாரத்தின் கரங்களால் ஒடுக்கப்பட்டாலும் அவை என்றேனும் ஒருகாலத்தில் மீண்டும் திரும்பி வருவதற்கான நிகழ்தகவுகள் இருக்கின்றன என்பதையே இப்படம் உள்ளுறை உவமமாகக் கூறுவதாகத் தோன்றுகின்றது.. இப்படத்தில் ஒரு முதியவர் அடிக்கடி வந்து வரலாற்றில் நிகழ்வுகள் அடிக்கடி மீள நிகழக்கூடியவை என்பது இச்சாராம்சத்தோடு இணைந்துபோகக்கூடியதுதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன, இந்தப் படமாய் இருந்தாலெனன அவருக்கு மிகப்பெரும் வெளியைக் காட்சிப்படுத்துவது பிடித்திருக்கின்றது. Forsaken Landல் பொட்டல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த பெரு நிலப்பரப்பு. அத்தோடு அதிக காட்சிகளில் கமரா அப்படியே அசையாமல் சலனமற்றிருக்கின்றது; அது காட்டுகின்ற வெளியில் மனிதர்கள் வருகின்றார்கள், பிறகு மறைந்தும் போய்விடுகின்றார்கள்.. அகண்டகாட்சிகளாய் விரியும் பல காட்சிகளில் வந்துபோகின்ற மனிதர்கள் மிக்ச்சிறிதாகத் தெரிகின்றார்கள். இந்தப் படக்காட்சிகள் நமது மனதோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவை. நமது வாழ்வில் எத்தனையோ மனிதர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள், ஆனால் நமது வாழ்வு தொடர்ந்து ஒரேயிடத்தில் நின்று இவை எல்லாவற்றையும் சலனமற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றதுபோல.
விமுக்தியின் படங்களை -ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று- சாதாரணப் படங்களை பார்க்கும் வேகத்திலோ, அதிரடியான திருப்பங்களையோ எதிர்பார்த்தோ பார்க்க முடியாது. முதல் வரும் காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியத்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்தள்ளும் அதேவேளை சில காட்சிகள் மிக மிக மெதுவாக நகர்கின்றபோது சற்று அலுப்பு வரச்செய்வதையும் குறிப்பிட்டாக வேண்டும். இன்று விமுத்தியின் படத்தை பார்த்து ஒரு கதையை உருவாக்கும் ஒரு பார்வையாளர் நாளை அதற்குத் தொடர்பில்லாத இன்னொரு கதையைத் தன்னளாவில் உருவாக்கிக்கொளளவும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிரதி வாசிக்கும் கணந்தோறும் தனக்கான கதையை மாற்றிக்கொள்ளும் மாயத்தை உள்ளடக்கினால் எப்படியிருக்குமோ அப்படியே விமுத்தியின் இப்படமும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்களின் குறுக்குவெட்டுக்களால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள முனைகின்றது. இந்தக் மாய வித்தை சிலருக்கு வனப்பூட்டலாம், வேறு சிலருக்கு அலுப்பூட்டலாம். அது கதைசொல்லியின் தவறுமல்ல, கதைகளைச் சதுரங்கக் கட்டத்தில் நகர்த்த விரும்பும்/விரும்பாத நமது தனிப்பட்ட விருப்புகள் சார்ந்தவை.
நன்றி: 'உன்னதம்' & 'வைகறை'
0 comments:
Post a Comment