மஜீத்தின் 'புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன', கருணாகரனின் 'பலியாடு' என்பவற்றையும் வாசிக்காதபோதும் -வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில்- அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. அதேபோன்று யாழிலிருந்து வெளிவந்த
நீண்டகாலமாய் புனைவுத்தளத்தில் இயங்கிவரும் பொ.கருணாகரமூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாகரமூர்த்தியிடம் மரபு சார்ந்த கதைசொல்லி அவ்வப்போது வெளிப்பட்டு வாசிப்பவருக்கு இடைஞ்சல் கொடுத்தாலும், அதை வெளிப்படையாக உணரமுடியாதவளவுக்கு அவரின் கதைகளில் அங்கதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் படைப்புக்கள் குறித்து அவரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசியிருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே பேசுவதைத் தவிர்க்கிறேன்.
மேலும் தொகுப்புக்களாய் வெளிவராதபோதும் (என்னை) மிகவும் வசீகரித்த கதைகளை எழுதிய மைக்கல், பார்த்தீபன், சித்தார்த்த சே குவேரா போன்றவர்களையும் கவிதைகளில் பிரதீபா தில்லைநாதன், துர்க்கா போன்றவர்களையும் நாம் இந்த இடத்தில் தவறவிட முடியாது; அவ்வாறு குறிப்பிடத்தக்க நீண்ட பட்டியல் நம்மிடையே இருக்கிறது. றஞ்சினி, தேவ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேரங்கருதி- இங்கே தவிர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.
பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொகுத்து இலண்டனிலிருந்து பத்மநாப ஜயர் (கண்ணில் தெரியுது வானம்), பிரான்சிலிருந்து ஷோபா சக்தி, சுகன் (சனதருமபோதினி, கறுப்பு), கனடாவிலிருந்து தேவகாந்தன் (கூர்), தமிழகத்திலிருந்து அ.மங்கை (பெயல் மணக்கும் பொழுது), சுவிஸிலிருந்து ரஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட தொகுப்புக்கள் சமகால ஈழத்து இலக்கியம் குறித்த பலவேறு குறுக்கு வெட்டு முகங்களைத் தருகின்றன.
3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இலக்கியம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகாலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் எங்களைவிட கணிசமானோர் இலக்கியச் சூழலில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவர்களுக்கு ஏற்பட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வந்து நிரப்பிவிடுகின்றார்கள்.
மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவியத்து ஒன்றியம்) உட்பட பல நாடுகள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவந்த அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்பது கூட வரலாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய காலமே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.
கடந்த 10 வருட காலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றில் கவனிக்கத்தக்க படைப்புக்களை பதிவு செய்த ஈழத்து இலக்கிய உலகம் நாவலகளிலோ விமர்சனம் உள்ளிட்ட அபுனைவுத்தளத்தில் அதிகளவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாவல்கள் என்று பார்க்கும்போது ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', நடேசனின் 'வண்ணாத்திக்க்குளம்', 'உனையே மயல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்கத்த்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்'. ரகுநாதனின் 'ஒரு பனங்காட்டுக்கிராமத்தின் கதை', எஸ்.பொவின் 'மாயினி' போன்றவையே ஒரளவாவது கவனிக்கத்தக்க படைப்புக்களாய் இருக்கின்றன.
இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்றவையே முக்கியமுடைய படைப்புக்களாகின்றன. வண்ணாத்திக்குளம் சிங்கள/தமிழ் உறவுகளை அதிக ரொமான்டிசை செய்ததுபோல இருக்க, உனையே மயல் கொண்டு ஒரு ஆணாதிக்கப் பிரதியாகவும் யாழ்ப்பாணியக் கூறுகள் அதிகம் கொண்டதாகவும் தெரிகின்றது. பனங்காட்டுக் கிராமத்தின் கதை ஈழத்துப் பஞ்சமர் வாழ்வைச் சொல்ல முற்படும் ஒரு படைப்பு என்றாலும் அதில் சில விடயங்கள் திருப்பச் திருப்பச் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகின்றது. சிறந்த கதை சொல்லியாக தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக மோசமான தமிழ்த்தேசிய பிரச்சாரக் கதையாக மாயினியைத் தந்திருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் உண்மை கல்ந்த நாட்குறிப்புக்கள், அவை தனித்தளவில் சிறுகதைகளாய் இருக்கின்றதே தவிர ஒரு நாவலுக்கான வெற்றியை அது அடையவே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.
ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. நம் படைப்பாளிகள் சக படைப்பாளிகளிடையோ வாசகர்களிடையோ விரிவான உடையாடல்களை நிகழ்த்தாது தங்களின் சாளரங்களை இறுக்க முடிக்கொண்டிருப்பது இருப்பது இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் -இதைச் சொல்வதால் சிலருக்கு கோபம் வரக்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கும் இலக்கியம் வரை இந்தியா மீதான் அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை; சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது - Apr, 2010)
9 comments:
அண்ணே!
5/08/2010 08:25:00 PMஉங்கள் எழுத்தை தொடர்ச்சியாக விரும்பி வாசிப்பவன். என் மனதில் பட்டதை சொல்ல விரும்புகிறேன்.
நீங்களும் 'பட்டியல்' பேர்வழியாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். இதை உங்கள் எழுத்துக்கள் மீதான ஒரு அவதானிப்பாக முன்வைக்கிறேன்.
நீங்கள் 'றஞ்சினி, தேவ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேரங்கருதி- இங்கே தவிர்க்கின்றேன்' என்று சொல்கிறீர்கள். ஆனால் மற்ற பல படைப்பாளிகளுக்கு மூன்று வரியாவது ஒதுக்கியிருக்கிறீர்கள். சமகால இலக்கியம் என்று எழுத வந்துவிட்டு படைப்புகளுக்கான முக்கியத்துவத்தை தராமல், தராசில் பெயர்களை மட்டும் அடுக்கியிருப்பது அவ்வளவு அழகல்ல.
எஸ்.போஸ், கருணாகரன், றஷ்மி போன்றவர்களின் படைப்புகளைக் காணவில்லை.
'இதைவிட ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார்'.
நீங்கள் அனாரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா? வாசிக்காமலே எப்படி காத்திரம், சூத்திரம் என்று எழுத முடிகிறது. அவரின் கவிதைகள் மாலதிமைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி போன்றோரின் கவிதைகளின் தோற்றப்பாடு. இதை முஜீப் ரகுமான் போன்றவர்கள் முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சமகால இந்திய பெண் கவிதைகளின் பிரதிபலிப்பே அனாரின் கவிதைகள் - நீங்கள் சொல்லும் இன்றைய சமகால ஈழக் கவிதைகள். ஈழத்து சிவரமணி, செல்வி போன்றோரின் சமூக வரலாற்று தொடர்ச்சியாக அவர் எழுதவில்லை. இதை சில பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார். மாலதிமைத்ரி, சுகிர்தராணியின் தொகுப்புகளோடு ஒப்பிட்டு வாசிப்புச் செய்யுங்கள்.
நீங்களே நல்லதொரு கவிஞராக இருந்து கொண்டு இதையெல்லாம் ஆராயாமல் எழுதலாமா?
விஜய்
அன்பின் விஜய்,
5/12/2010 03:30:00 PMஇங்கே எது குறித்தும் உரையாடலாம்; தயக்கங்கள் எதுவும் தேவையில்லை.
நிற்க.
ஏற்கனவே இப்பதிவின் தொடக்கத்தில் கூறியதுபோல பல விடுபடல்கள் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்(எனது வாசிப்பு இதுவெனவும், எதற்கான முடிந்த முடிபோ அல்ல என). ஆனால் அதை மட்டும் சாட்டாக வைத்து கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டிப் போகமுடியாது என்பதும் அறிவேன்.
இக்கட்டுரையின் பலவீனங்களில் ஒன்று. இது மிகக் குறுகிய நாட்களில் தயாரிக்கப்பட்டது. மேலும் 'காலம்' நிகழ்வு பிந்தித் தொடங்கி, அரங்கை நேரத்திற்குக் கொடுக்கவேண்டும் என்ற நெருக்கடியும் அப்போதிருந்தது. எனவே இந்தக் கட்டுரையை வாசிக்கவில்லையென செல்வத்திடம் கூறினேன். பிறகு சுருக்கி வாசிக்கச் சொல்லி செல்வமும், தலைமைதாங்கிய எம்.கே.மகாலிங்கமும் கூறியபோதும், இதை முழுதும் வாசித்துவிட்டே செல்வேன் எனச் சொல்லியே உரையைத் தொடங்கினேன். அப்படியிருந்தும் 20நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. நேரம் கூட எடுக்கிறேனோ என்ற பதற்றத்தில் சில பந்திகளை இடையில் தவிர்த்துமிருந்தேன். எனவே நீங்கள் குறிப்பிடுவதைப் போல 'பட்டியல்' இட்டவர்களைப் பற்றியும் விரிவாகப் பேசினால் இன்னும் நீண்டதொரு உரையாக இருந்திருக்கும் எனச் சொல்லத்தேவையில்லை. உண்மையில் இந்தப் பட்டியலிடலைத் தவிர்த்திருக்கலாம் தான்.ஆனால் நேரத்தைக் காட்டி இவர்களைத் தவற விடக்கூடாது/முடியாது; விரும்பியவர்கள் தேடிப்படிக்க உதவியாக இருக்குமெனவே ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தேன்.
பட்டியலில் குறிப்பிட்டவர்களை அந்தக் கூட்டத்தில்தான் விரிவாகப் பேசவில்லையே தவிர, தனிப்பட்ட பதிவுகளாக சிலரைப் பற்றியேனும் எனது தளத்தில் எழுதியிருக்கிறேன். மேலும் 'ஏதிலிகள்' நடத்திய கூட்டத்தில் பெண்ணியா, அலறி போன்றவர்களின் தொகுப்புக்களை நண்பர்களினுடாக அறிமுகம் செய்திருக்கின்றேன்/றோம்.
நீங்கள் குறிப்பிடும் "கருணாகரன், எஸ்போஸ், றஷ்மி" பற்றி
ஏன் கதைக்கவில்லை என்பது முக்கியமான கேள்வி. எஸ்போஸின் தொகுப்பு என்று எதுவும் வரவில்லை; அங்குமிங்குமாய் சஞ்சிகைகளில் வாசித்த கவிதைகளை ஒன்றாக வைத்து வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதே என நிலை. எஸ்போஸ் கவிதைகள் பற்றி விரிவாக வாசிக்க விருப்புபவர்க்கு, சித்தாந்தன் எழுதிய பதிவைச் சிபார்சு செய்கிறேன்.கருணாகரனின் 'பலியாடுளும்' வாசிக்கவில்லை. வாசிக்கத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பலியாடுகள் பற்றி நண்பர் தீபன் வைகறையில் எழுதிய பதிவு கவனிக்கத்தக்கதொன்று.
றஷ்மியினது பெயரைக் குறிப்பிடாதது எனது தவறே. அவ்வாறு இப்போது ஞாபகம் வரும் சிலர் இளைய அப்துல்லா, எம்.ஆத்மா போன்றவர்கள். தனக்கு மிகப்பிடித்த கவிஞர் என்று என் தோழி அடிக்கடி சொல்லும் அஸ்வகோஷையும் எப்படித் தவறவிட்டேன் என்பது இப்போது உறைக்கிறது. எனக்குப் பிடித்த இளவாலை விஜயேந்திரனின் தொகுப்பையும் (நிறமற்ற வானவில்) அது எப்போது வெளிவந்தது எனற குழப்பத்தில் விலத்தியே வைத்தேன் (என்னிடம் இருப்பது 'காலம்' இங்கே வெளியிட்ட மறுபதிப்பே). எனவே விடுபடல்கள் இருக்கின்றன என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறேன்.
(cont...)
வ.ந.கிரிதரன் இக்கட்டுரைக்கான ஓர் எதிர்வினையை பதிவுகள் தளத்தில் எழுதியிருக்கின்றார்.
5/28/2010 01:56:00 PMhttp://www.geotamil.com/pathivukal/vng_on_djt.htm
நண்பர் சிட்டுண்ணிக்கு,
6/06/2010 12:17:00 PMஉங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கோபமும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. ஆனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் எழுதிய பின்னூட்டத்தின் மொழியைச் சற்று மாற்றிப் பின்னூட்டமாகப் போடமுடியுமா? சிலவேளைகளில் நீங்கள் கூறவந்த கருத்துக்கள் உணர்ச்சிவசமான சில சொற்களால் திசை திரும்பிவிடும் அபாயமுண்டு என்பதால் இதைக் கூறுகின்றேன். விளங்கிக்கொள்வீர்களென நம்புகின்றேன்.
அன்புடன், டிசே
அன்பின் நண்பர் டிசே,
6/07/2010 07:19:00 AMஉங்களுக்கு அசௌகரியம் என்றும் படும் வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, பின்னூட்டம் செய்யுங்கள்.
அன்புடன்
சிட்டுண்ணி
குறிப்பு:இது சிட்டுண்ணி யின் பின்னூட்டம். 3 இடங்களில் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.திருத்த அனுமதி தந்தமைக்கு சிட்டுண்ணிக்கு நன்றி ~டிசே)
6/07/2010 09:51:00 AM.....
நண்பர் டிசே அவர்களுடைய கட்டுரையை “எதுவரையிலும்“, அவரது இணைய தளத்திலும் படித்தேன். ”ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. ‘ஓவியம் வரையாத தூரிகை, ‘எனக்குக் கவிதை முகம்’, ‘உடல் பச்சை வானம்’ என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார்”. டிசேயின் நியாயபூர்வமான இக்கருத்தை தற்கால இலக்கிய நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அக்கருத்து அனாரின் கவிதைகள் மீது வைக்கப்பட்டதே அதற்கு காரணம். எனது மகிழ்ச்சியை டிசேக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக விஜய் என்பவர் எழுதிய குறிப்புக்கு சில பதில்களை தர விரும்புகிறேன்.
“முட்டடப்பன்“ கட்டிய வாயுடன் இதுவரை எடுத்த எடுப்பில் அனார் பற்றி, வெப்தளங்களில் கருத்துக்களை கூறும் சிலர், காலச்சுவடு வெளியீடாக அனாரின் “எனக்குக் கவிதை முகம்“ வெளிவந்ததிலிருந்து அவரவர் கருத்து, விமர்சனம், லொட்டு .. லொசுக்கு என நினைப்பதையெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டனர். ஆதாரபூர்வமான கருத்துக்களையோ, விமர்சனப் பண்புகளையோ இவை எவற்றிலும் இதுவரை காணமுடியாமலிருந்தது.
அனார் அவரது கவிதைகளுக்கு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் கூறாதிருப்பது தான் அவர்விட்ட தவறென நான் எண்ணுகிறேன். எந்தவொரு விமர்சகப் பிதாமகனும் இதுவரை அனாருடைய தொகுப்புகளை முன்வைத்து நோ்மையான விமர்சனத்தை வைத்திருக்காத நிலையில், சில பேக்கச்சிகளும் (ஊடறு) பேக்கையர்களும் படுகின்ற பாட்டைப் பார்த்தால், அனாரின் கவிதைமுகம் சிறு சிரிப்பில் அதை கடப்பதன் வலிமையை எண்ணி நான் வியப்படைகிறேன்.
மேலும் அனாரின் வருகைக்குப்பிறகு எழுதவந்த புதியவர்களிடமும் எழுதாமலிருந்து எழுதத்தொடங்கிய சிலரிடமும் அனாரின் கவிதை மீதான பாதிப்பை காணமுடியும்.
இப்படியிருக்க விஜய் என்பவரின் கருத்தும், கவலையும் என்ன ? முஜிப் ரஃமான் சொன்னாராம்… விஜய் மொக்கர் கேட்டாராம் … எவன்டாவன் ?
மாலதிமைத்திரி, சுகிர்தராணி, குட்டிரேவதி வரிசையில் அனாரை வைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த வரிசை தாதா விஜய் கூறுவதுபோல் தரத்தில் குறைந்ததாம்? மேன்மை தங்கிய தாதாவின் கருத்துப்படி செல்வி, சிவரமணி வரிசை உயர்ந்ததாம் ! டிசே அவர்களையே மிரட்டுகிறார். டிசே தான் இதற்கு தகுந்த பதில் அளிக்கவேண்டியவர்.
சிவரமணி, செல்விக்குப் பிறகு சமூக வரலாறோடு வந்த வேறொரு பெண் கவிஞர் யார்ரா லூசுப் பேயா? நீயே அதையும் கக்கன் பார்ப்போம் என்று டிசே கேட்க வேண்டாமா ? ஏனெனில் டிசே நல்லதொரு கவிஞர் என்று விஜய் காக்காவே கூறியிருக்கிறார். பைத்தியம்.. பைத்தியம் எண்டு கேள்விப்பட்டனான்! முத்திய பச்சப் பைத்தியத்த இப்பாண்டா வாப்பா பாக்கன்!
அனாரின் ”பருவகாலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி,பிச்சி,மேலும் சில இரத்த குறிப்புகள்,நிலாக்குட்டி, இரண்டுபெண்கள், நீர்நடனம், நான் பெண், மண்புழுவின் இரவு, காற்றின் பிரகாசம் … இதெல்லாம் போல, உங்க யாராலயும் எழுத முடியாதுடா சிறுவால்கட்டாத பன்னிகளா..?
இது
சிட்டுண்ணி
நண்பர் டிசே
6/11/2010 01:43:00 PM'இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்“ நூலின் ஆசிரியர் பா. சத்தியமூர்த்தி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரின் சரியான பெயர் “ந.சத்தியபாலன்“ திருத்திக்கொள்ளுங்கள்.
நன்றி சித்தாந்தன். மாற்றிவிட்டேன்.
6/14/2010 11:58:00 AMவிஜயிற்கான எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விடயம் தவறாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் அதைச் சுட்டிக்காட்டினார்கள். தவறான இத்தகவலால் மனவுளைச்சல் ஏற்பட்ட நண்பர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அந்தப் பகுதியை நீக்கிவிட்டு என் பின்னூட்டத்தை மீளப்பதிகிறேன்
7/05/2010 01:34:00 PMஅனாரின் கவிதைகள் பற்றிய உங்கள் பார்வை சுவாரசியமூட்டக்கூடியவை. முதலில் அனாரை வாசித்திருக்கின்றீர்களா எனக் கேட்கின்றீர்கள். ஆதாரமாக சிலதைச் சொல்லிவிட்டு மேலே நகர்கிறேன். 'ஓவியம் வரையாத தூரிகை' ஊடறுவிலும், நூலகத்திலும் இலவசமாக வாசிக்கலாம். நான் வாசித்தேன். 'எனக்குக் கவிதை முகம்' வீட்டிலிருக்கிறது. அதையும் வாசித்திருக்கிறேன். 'உடல் பச்சை வானம்' வாசிக்கவில்லை. இந்த உரைக்கு முன் தட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமே வாய்த்தது. ஆனால் அதில் இருக்கும் கவிதைகளை ஏற்கனவே பல்வேறு சஞ்சிகைகள் வாசித்த நினைவுண்டு. ஆகவே நான் அனாரின் தொகுப்புக்களில் 2/3 பங்காவது வாசித்திருக்கிறேன் என நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களென நினைக்கிறேன்.
சமகால ஈழக் கவிதைகளில்.. 'காத்திரமாகவும்,தொடர்ச்சியாகவும்' என்ற எழுதுபவர் என்ற சொற்களையே நான் பாவித்திருக்கிறேன். 'தனித்துவமாகவோ' அல்லது தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டவர் என்றோ (உதாரணமாக சோலைக்கிளிக்கு, வில்வரத்தினத்திற்கு கைவந்த தனித்துவமான மொழி)சொல்லவில்லை. நீங்கள் கூறுவதுபோல மாலதி மைத்ரியினதும், குட்டி ரேவதியினதும் பாதிப்புக்கள் அனாரில் தெரிவது தெள்ளிடைதான். ஆனால் அதையும் மீறியும் அனாரை ஒரு முக்கியமானவராகக் கொள்ள அவர் சில நல்ல கவிதைகளையாவது எழுதியிருக்கின்றாரென நம்புகின்றேன். எதிர்காலத்தில் தனக்கான ஒரு மொழியை கடந்தகாலப் பாதிப்புக்களைத் தவிர்த்து உருவாக்குவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது. சந்தர்ப்பம் வாய்த்தால், அனாரின் 3ம் தொகுப்பு பற்றி ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.
Post a Comment