கபாலங்களைக் காவிச்செல்லும் பறவைகள்
நள்ளிரவிலழும் குழந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விளக்குகளை காவியபடி
பறக்கும் சாம்பல் பறவைகள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க முடியாத் துயரத்தில்
தவறவிடுகின்றன விளக்குகளை
சிதறிய எண்ணெய்த்துளிகளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருகதாசன்வரை
எண்ணற்றோர் தீ மூட்டிக்கொள்ள
நூற்றாண்டுகளாய் நிலத்தினுள்
உறைந்துபோயிருந்த போர் அரக்கன்
விழிகள் விரித்து
இன்னமும் உடலங்கள் தாவென்று உக்கிரத்துடன்
தன் அகண்ட வாயைப் பிளக்கிறான்
வன்னிப் பதுங்குகுழிகளுக்குள்.
அவ்வைக்கு கள்ளோடு தமிழூட்டி
முன்னோர் காலத்தில் சந்ததிகளைப் பிரசவித்தபடி
காடுகளில் அலைந்த ஆதித்தாயே
குழந்தைகளின் குருதி குடித்தும்
எவரினதும் தாகம் தீராக்கண்டு
எல்லாப் பூர்வீகப் பிரதிகளும்
தம்மைத் தாமே எரிக்க
எமதெல்லோரினதும் அடையாளமாகிறது மகாவம்சம்
உடலங்கள் புதைந்த சதுப்புநிலத்தில்
இன்னமும் கொய்வதற்கு மிஞ்சியுள்ள
தலைகளுக்காய் காத்திருப்பவர்களின்
கைகளில் 'சமாதானம்' இருக்க
அரசர்களும் அதிகாரங்களும்
கவனிக்கவும் கதைக்கவும்படும் காலத்தில்
நாயொன்று கவ்விக்கொண்டுவந்த
எலுமிச்சை குத்தப்பட்ட வைரவரைப்போல
அநாதரவாயினர் மக்கள்
பறவைகள் காவிச் செல்லும்
சிமினி விளக்குகளுக்காய் குழந்தைகள் காத்திருந்த காலம்போய்
நேற்றுச் சரிந்து வீழ்ந்த உடலுக்கு
கொள்ளியிட எந்தப் பிசாசு நெருப்புக்கொண்டுவருமென்று
காத்திருக்கும் விழிகளின் கோரம் தாங்காது
நான் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் எண்ணெய் ஊற்றி
எரியூட்டிய எனது கபாலத்தை.
(Feb 26, 2009)
நனவுகளின் பலிக்காலம்
கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.
பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை
அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்
என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.
f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை
அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
எவருமே நெருங்கவியலா
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.
(Nov 07,2007)
உடலப்பச்சையங்கள்
1.
நேற்றைகளின் இரவுகளின்
ஒவ்வோர் கதகதப்பான அழைப்பிலும்
பச்சையம் படிந்து உருவான காடுகள்
கழுத்திலொரு வளையம் அணிவித்து
காலம் நம்மை நெருக்கியபோது
எல்லா இரகசியங்களையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துயரத்தில் தற்கொலை செய்திருந்தன
'எல்லாமும்' இருக்கின்ற
யாருமற்ற பனிப்பாலையில்
சுழியத்திலிருந்து தொடங்கும் பதியங்கள்
தவறுகளின் துரிதகதியில் ஊரத்தொடங்குகின்றன புத்தகப்பூச்சிகள்
புத்தகங்களும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்தள்ளியபின்
கொளுத்தத்தொடங்கினேன் புத்தகம் + பூச்சிகளை.
2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைகளில்
பொழியும் மழை
மீண்டும் கிளர்த்திக்கொண்டிருக்கிறது
கனவுகளை.
'நமக்கான கனவுகள் தனித்துவமானவை'
நூறிலிருந்து சுழியத்துக்கு நகர்ந்துகொண்டிருந்த
விருப்புக்களின் சதுரங்கத்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழற்றி வீழ்த்தியபோதும்
ஏணியில் ஏற்றிவிட 'தொலைவிலொரு குரல்' காத்திருந்தது
பச்சையங்களில் வளர்த்த
நமக்கான காடு தற்கொலையை நாடியபோது
அதன் கடைசிப்பொழுது கத்தரிப்பூ நிறத்திலிருந்தது
பிடித்தமான கள்ளிச்செடிகளை வளர்க்கக்கூட
மூர்க்கமாய் மறுத்துத் தரிசானது நிலம் (அல்லது காடு).
3.
பிறருக்கான
நன்றிகளையும் விருப்புக்களையும்
மறுதலித்து பாவங்களின் குறுக்குமறுக்குமான
முடிவிலி வலைக்குள் வீழ்ந்தா நானா?
நமக்கான கனவா?
காடெரிந்த கத்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வருகையில்
காலையில் தருமொரு முத்தமாய்
உன்துயில் கலைக்காது 'போய்விட' விரும்புகின்றேன்
'எரிப்பதை விட வனாந்தரத்தில் புதைப்பதே விருப்பமானது'
அன்பே, தயவுசெய்து மறந்துவிடாதே
கனவு எண் இருபத்தைந்தை.
காடு தன்னை எரித்ததுபோலவன்றி
அடையாளமின்றிப்போவதை மறுக்கின்றேன்
'இந்தக் கனவுகள் - ஈரலிப்பானவை நித்தியமானவை நிகழக்கூடியவை'
பஞ்சவர்ணக்கிளியின் வழிகாட்டலோடு
கனவுகளை நிகழ்த்திக்காட்ட
வருமொருவரின் காலடித்தடங்களுக்காய்
மிதந்தபடியிருக்கட்டும்
என்னுடலப் பச்சையங்கள்.
(2009)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வார்த்தைகளெதுவுமில்லை டிசே. சில வரிகள் மன நிலையை இறுக்கி மூச்சடைக்க வைக்கின்றன.
5/18/2010 01:03:00 PMஉங்கள் கவிதைகள் உடல் கீறிப் புதைகின்றன வதை மிகுந்த நிலையில் எழுதவோ பேசவோ இயலாத நிலையில் வாசிக்க மட்டுமே முடிகிறது
5/18/2010 06:44:00 PMஒவ்வொரு வலியும் உள்வாங்கி வார்த்தைகளற்று கண்ணீருடன்..
5/19/2010 12:46:00 AMம்ம்...
5/26/2010 05:36:00 PMPost a Comment