கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள் - 04

Sunday, September 24, 2023

 

அன்பு இளங்கோவிற்கு,

 

உங்களுடைய ஜென் கடிதம் படிக்கப் படிக்க உங்களது தேடல்களின் ஊடே சற்றுப் பயணித்தது போல் இருந்தது. ஏதோ எனக்கு எதிரே நீங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது போலவும், நான் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது போலவும் ஒரு மாயை எழுந்தது. தாயை Thich Nhat Hanh என்ற பெயரில் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்தவை அவரைக் குறித்து இன்னும் எனக்கு அறியத் தந்திருக்கின்றன. நமக்குத் தெரிந்து கொள்ளவும், வாசிக்கவும் தான் எத்தனை எத்தனை இருக்கின்றன என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது.

 

கொடைக்கானலில் மிக அழகான ஒரு இடத்தில் Bodhi Zendo என்று ஒரு ஜென் மையம் இருக்கிறது. நான் அடிக்கடி சென்று வரும் இடங்களில் அதுவும் ஒன்று. முடிந்தவரையில் வருடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வருவேன். அங்கே Zazen ல் என் மனம் ஈடுபடும் அளவிற்கு நான் போதனைகளை அறிந்து கொள்ள மெனக்கெட்டதில்லை. அந்த இடம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

இப்போதெல்லாம் என் மனம் எங்கேயோ அலைபாய்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரு கணம் எல்லாவற்றையும் ரசிக்கும் மனம், அடுத்த கணம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்கிறது. முதலில் எல்லாம் எழுதும் போது தியான நிலையில் இயங்குவது போல் therapeutic ஆக உணர்வேன். நான் மீண்டும் எழுதத் துவங்கியதே, அது நான் அவ்வளவு பிடித்து செய்யும் செயலாக இருந்தது என்பதால் தான். ஆனால் இப்போது எழுதுவது எண்ணங்களை கிளறுவதாக, மிகவும் தொந்தரவிற்கு உள்ளாக்குவதாக இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரை ஒரு சீசாவில் அடைத்து குலுக்கி விட்டதைப் போல, எண்ணங்களின் கசடுகள் என் மனவெளி எல்லாம் ஆக்ரமித்திருக்கிறது. எனது மனதை அமைதிப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனது இரவுகள் உறக்கம் தொலைந்த இரவுகளாக ஆகிவிட்டன. கொஞ்ச நாட்களுக்கு எழுதுவதையே நிறுத்தி விடலாமோ என்று கூடத் தோன்றுகிறது. I feel I lost my center. அதே போல எளிதில் உணர்ச்சி வயப்படுவளாக மாறி வருவதையும் உணர்கிறேன். வெயில் தாழ்ந்த மாலை வேளைகளில் வானம் பார்த்து சற்று நேரம் அமர்ந்திருக்கும் போது மட்டும் சிறு அமைதி தழுவிக் கொள்கிறது. கொஞ்ச நாட்கள் எங்காவது சென்று இயற்கையின் மடியில் என்னை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது எதையாவது அருந்தி என்னையே நான் மறந்து நீண்ட நாட்கள் உறங்க வேண்டும் என்ற பேரவாவும் எழுகிறது.

 

யாரோப்போல் நான் என்னைப் பார்க்கிறேன்

ஏதும் இல்லாமலே இயல்பாய்

சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்

கண்ணாடியாய் பிறந்தே

காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே

ஓசை எல்லாம் துறந்தே

காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

 

கார்த்திக் நேத்தாவின் இந்த வரிகளை நான் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். இந்த வரிகளை நீங்களும் கவனித்துப் பாருங்களேன்.

 

யாரோ போல நான் என்னைப் பார்க்கிறேன், ஏதும் இல்லாமலே (எந்த பிம்பமும் இல்லாமல்) இயல்பாய், சுடர் போல் தெளிவாய்... அப்படிப் பார்க்கும்போது அது என்ன மாதிரியான தெளிவைக் (self awareness) கொடுக்கும் என்று வியக்கிறேன்.

 

அடுத்த வரிகளில் 'நான்' தொலைந்த ஆழத்தில் நான் இருக்கிறேன், காண்கின்ற யாவும் நானாகிறேன். எனக்கு இந்த வரிகள் 'the world is you, and you are the world' என்ற ஜே கேயின் கருத்தை நினைவூட்டுகிறது. 'நான்' தொலைந்து, காண்கின்ற எல்லாமே நானாகும்போது அது அன்பின் பிறப்பிடமாகத் தானே இருக்க முடியும்.

 

அடுத்த வரிகளை வாசிக்கும்போது என்னால் இந்த பாடலாசிரியரை வியக்காமல் இருக்க முடியவில்லை. நீரின் ஆழத்தில் போகின்ற கல்லைப் போல, காண்கின்ற காட்சியில் (நிகழில்) ஓசை எல்லாம் துறந்தே (ஓசை என்றால் அக, புறம் சார்ந்த எல்லா வகையான distractions யும் தானே!) நான் மூழ்கினேன். அப்படி நிகழோடு ஒன்றிப் போக முடிந்தால்? ...அவர் இந்தப் பாடலை எழுதும்போது என்ன மாதிரியான மன நிலையில் இருந்திருப்பார் என்று பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு நானே என்னைக் குறித்து ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்களிலிருந்து விடுதலையும், நான் என்ற ego நிலையிலிருந்தும் இயங்காமல் இருக்க முடிந்தாலும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன். இதுவும் ஆசை என்கிற கணக்கில் தானே வரும். இயல்பான நிலையிலிருந்து தப்பி இன்னொன்றை அடைய வேண்டும் என்ற ஆசை அல்லது விருப்பு.

 

எனது எண்ணங்களைப் போலவே இந்தக் கடிதம் ஒரு ramble ஆகத் தெரிகிறது எனக்கு. இந்தக் கடிதத்தை எப்படி முடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே ஜன்னல் வழி பார்க்கிறேன். பாக்கு மரம் ஒன்று, அத்தனை காய்களை சுமந்தபடி, காற்றின் போக்கில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு, நான் பார்க்கிறேன் என்ற பிரக்ஞையே இல்லை. ஆனால் எனக்கோ, நின்ற இடத்திலேயே வருடங்களாக நின்றிருந்தாலும் இந்த மரத்திற்கு மட்டும் எப்படி அலுப்பதே இல்லை என்று தோன்றுகிறது. எண்ணங்கள் ஒரு சாபமோ?

 

மீண்டும் எழுதுகிறேன்,

 

அன்புடன்,

 

இனியா


*************



அன்பின் இனியா,

 

நீங்கள் குறிப்பிடும் Bodhi Zendo பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது குறித்து வாசித்தபோது அங்கே போய் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் வந்திருக்கின்றது. எனினும் உங்களைப் போல எனக்கு அங்கே செல்லும் வாய்ப்பு வரவில்லை, அந்தவகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

 

எனக்கும் இவ்வாறான தியான மையங்களுக்குச் சென்று சில வாரங்களோ, மாதங்களோ தங்கி நின்று கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் அடிக்கடி பொங்கிப் பிரவாகரிக்கும். எலிஸபெத் கில்பேர்டின் 'Eat, Pray, Love' அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தைப் பார்த்தபோது, எலிஸபெத் இந்தியாவில் தியானம் பழகிய இடத்தை எப்படியோ தேடிப் பிடித்து கண்டுபிடித்திருக்கின்றேன். இந்தியாவிலுள்ள அவர்களோடு தொடர்புகொண்டு பயணத்துக்காய் தயாராகிக் கூட இருந்திருக்கின்றேன். ஆனால் அது பிறகு எப்படியோ திசைமாறிவிட்டது.

 

இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால், எனக்கும் உங்களைப் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனோநிலைதான் பெரும்பாலும் வாய்த்திருக்கின்றது. உங்களைப் போலத்தான் 'ஒரு கணம் எல்லாவற்றையும் ரசிக்கும் மனம், அடுத்த கணம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்கிறது'ம் எனக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஒருவகையில் நான் இதை என் 'இருத்தலிய சிக்கல்' ஆகப் பார்ப்பதுண்டு.

 

அது இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்ற கேள்விக்கு இழுத்துச் செல்லும். பிறப்பும், மரணமும் அறுதியான உண்மைகளாக நம் முன்னே இருக்கும்போது இடையில் நடப்பவையெல்லாம் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளும் விடயங்களோ என்று நினைப்பதுண்டு. எதற்காக இந்த அலைக்கழிப்புக்கள், கசப்புகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், நாடகீயங்கள் என்று ஒரு திசையில் மனம் விடாது அலைவுறும். பிறகு சட்டென்று அதே மனதே ஏதோ சில விடயங்களில் குவிந்து அமைதியுறும்; இந்த வாழ்க்கை வாழ்வதற்கெனச் சொல்லி சிறகுகளை விரிக்கும்.

 

என் பதின்மங்களில் இங்கே வந்த ஒரு பத்திரிகையில் (அதுதான் நான் முதலும் கடைசியுமாக கொடுத்த நேர்காணல்) உனக்கு என்ன விருப்பம் என்று கேட்கப்பட்டபோது, 'எனக்கு ஒரு தனிமையான அறையும், வாசிக்க புத்தகங்களும், எழுதுவதற்கு கணனியும் இருந்தால் போதும்' என்று சொன்னதாக ஞாபகம். இப்போதும் அந்த விருப்பிலிருந்து பெரிதாக மாறவில்லை. மனிதர்க்கு உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால் கிடைப்பவை எல்லாம் 'ஆடம்பரமான விடயங்கள்' என்றுதான் நினைப்பதுண்டு. அந்தவகையில் இந்த வாழ்க்கையில் பலருக்குக் கிடைக்காத வசதிகளும், வாய்ப்புக்களும் எனக்குக் கிடைத்திருக்கின்றது என்றும், ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைப்பதுண்டு.

 

ஆனால் நம் மனது மாபெரும் விளையாட்டுத் திடல் போன்றது. இன்னும் இன்னும் என்று அதிக ஆசைப்படும். பிறரைப் போல எங்களால் இருக்க முடியாது என்று நினைத்து வருந்துவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இந்தச் சமூகம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்ல பலதைத் திணிக்கச் செய்யும். இந்தச் சமூகத்தில் 'வெற்றியாளராக' இருப்பது முக்கியமே தவிர, ஒவ்வொன்றாக நமக்கு இத் அவசியமில்லையென உதறிச் செல்வது அவ்வளவு எளிதில்லை.

 

ஆகவே நம் மனது தொடர்ந்து தொந்தரவுக்குள்ளாகின்றது. உறக்கம் தொலைந்த இரவுகள் நமக்கு வாய்க்கத் தொடங்குகின்றன. சிலவேளை எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த வாழ்க்கையை ஒரளவுக்கு வாழ்ந்து பார்த்துவிட்டேன், இனி எதுவுமில்லை போலத் தோன்றுகிறது எனச் சொல்வேன். இது சலிப்பால் எழுவதல்ல, ஒருவகையான மனநிறைவாலே நான் இதைச் சொல்லிக் கொள்ளுவேன். சிலவேளைகளில் ஒரேமாதிரியான வாழ்வை வாழ்ந்து பார்த்துத்தான் மனிதர்கள் தம் உயிரைக் கூட த் தொலைக்கும் சாகசப் பயணங்களிலோ/விளையாட்டுக்களிலோ ஈடுபடுகின்றார்களோ என்று நினைப்பதுண்டு.

 

நமது சமநிலைகள் குலையும் பொழுதுகளில், என்னைப் போல மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை குறித்து கேள்விகள் வராதோ என்று நினைப்பதுண்டு. ஏனெனில் பலர் மிக அமைதியான வாழ்வை ஒரே சமநிலையில் எப்போதும் வாழ்வது போலத் தோற்றமளிப்பார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு வேறு விதமான கேள்விகள், தேடல்கள் இந்த வாழ்வு குறித்து இருக்கவும் கூடும். நாம் எல்லோரும் ஒரு கட்டத்தில், எம்மால் இப்படித்தான் இருக்கமுடியும் என்ற ஒரு உறுதியான நிலைப்பாடு வந்தவுடன், ஒரு மிகப்பெரும் தெளிவு வருமல்லவா? அதுதான் அலைவுறுகின்ற மனதுக்கு மிக முக்கியமென நான் நினைப்பதுண்டு.

 

நம்மால் tribes போல ஒரு வாழ்வு நிலைக்குள் போகவும் முடியாது. அதேபோல் நுகர்வின் வெறிகொண்ட நவீன மனிதனாகவும் ஆகவும் முடியாது. அதுவே நம்மைத் தொந்தரவுபடுத்துகின்றது. நமது centre of attention ஐ குலைக்கின்றது. நாம் இந்தப் பொழுதில் யாராக இருக்கின்றோம் என்பதுதான் சிக்கலாக இருக்கின்றது.

 

இதனால்தான் சிலர் வேறுவிதமாக தமக்குரியதல்லாத அடையாளங்களை எல்லாம் வலிந்து ஏற்றிக்கொண்டு சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றனர். பலருக்கு அது ஒரு வெறும் அடையாளம் என்று தெரிந்தாலும், அது அவர்களுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுக்கின்றது. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரமே தனது அசலான முகம் என்று நம்பத் தொடங்கினால் என்னாகும்? அவ்வாறுதான் பலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிலவேளைகளில் அவ்வாறே வாழ்வை 'நடித்து' முடித்துவிடவும் அவர்களுக்கு இயலக்கூடும்.

 

நீங்கள் குறிப்பிடுவது போல 'எண்ணங்கள் சாப'மாகக் கூட சிலவேளைகளில் இருக்கலாம். ஏனென்றால் அவை நமக்கு கடந்தகாலத்தை நினைவூட்டுபவை. அவ்வாறு கடந்தகாலத்தில் உறையும்போது நிகழ்காலம் வழுக்கிக் கொண்டு போய்விடும். எனக்கு சிலவேளைகளில் சலிப்பு வரும்போது முகநூலில் memoriesஐ பார்ப்பதுண்டு. அப்போது 'பரவாயில்லையே, பலதைச் செய்திருக்கின்றேன், பல இடங்களுக்குப் பயணித்திருக்கின்றேன்' என்று என் நிகழ்கால சலிப்பைத் தேற்றிக் கொள்வதுண்டு.

 

ஆனால் அதில் சிக்கலும் இருக்கின்றது. மனம் அந்த இனிமையை மீண்டும் அசைபோடத் தொடங்கும். எங்களுக்கு கடந்தகாலத்தில் இனிமையான நிகழ்வுகள் நடந்திருந்தாலும், நாம் அவற்றை ஆழப்பார்த்தால் அப்போதும் நாம் ஏதோ இந்த 'இருத்தலிய/நாளாந்த சிக்கல்களினூடாக' அல்லாடிக்கொண்டுதான் இருந்திருப்போம். அப்படியெனில் அது கடந்தகாலமாகி விட்டபின் எப்படி அது மதுரமாக இனிக்கின்றது? ஆக நாம் ஒன்று நிகழ்ந்து கடந்துகாலமான பின், நமக்குத் தேவையானதை மட்டும் நிகழுக்கு எடுத்து வர முயல்கின்றோம் அல்லவா?

 

இந்த முகநூல் memories பற்றிச் சொன்னேன் அல்லவா? சிலவேளைகளில் நான் பொதுவெளியில் பகிர்ந்திருக்காவிட்டாலும், எனக்கும் நடந்த கசப்பான/துயரமான நினைவுகள் பெருக்கெடுக்கவும் செய்யும். எனவே கடந்தகாலத்திற்குப் போய்ப் பார்ப்பதென்பது எப்போதும் மதுரமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லமுடியாது. ஆனால் அந்தத் துயரங்கள் கடந்தகாலம் என்பதால் எங்களால் அந்தக் கொடும் நினைவுகள் இப்போது நம்மைப் பீடிக்காது என்று நிம்மதி கொள்ள முடிகின்றது. அதிலிருந்து தெளிவான எல்லைக்கோட்டைப் போட்டு வெளியேறிவிடுகின்றோம். அதுவே கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான வித்தியாசம். ஆகவேதான் நாம் கடந்தகாலத்தில் மூழ்க விரும்புகின்றோம் அல்லது எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண ஆசைப்படுகின்றோம்.

 

ஒரு நாளிலேயே எல்லாவிதமான ஏற்ற இறக்கங்களைப் பார்ப்பேன் என்று பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். ஒரு மனிதன் பிரச்சினையில்லாது வாழ முடியாது. ஆனால் வருகின்ற சிக்கல்களை குறைத்துக் கொள்வதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தியானத்தில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் குறுக்கும்மறுக்குமாய் ஓடிக் கொண்டிருக்கும்போது, ஒரு எண்ணத்துக்கும் மற்ற எண்ணத்துக்குமான இடைவெளியை அவதானியுங்கள் என்று சொல்லித் தருவதுபோல என்று இதை எடுத்துக் கொள்ளலாமா எனத் தெரியவில்லை. அந்த எண்ணங்களுக்கிடையிலான இடைவெளி நமக்கு அமைதியைக் கொண்டு வரலாம்.

 

அவ்வாறு நமக்கு வந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள்/சிக்கல்களுக்கிடையில், வரும் அமைதியில் வாழ்ந்து கொண்டிருப்பதுந்தான் வாழ்க்கையோ தெரியாது.

 

ஒவ்வொரு மனிதர்களும் நாம் தூர நின்று பார்க்கும்போது நிம்மதியான, செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் அவர்களை சற்று நெருக்கும்போது, அவர்கள் தங்களைத் திறந்து காட்டும்போது ஒரு எரிமலையல்லவா உள்ளே பொங்கிக் கொண்டிருக்கின்றது என்று தோன்றும். புத்தர் சொன்னத்தைத் தான் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொள்வேன்; sufferingsஐ நாம் தடுக்கமுடியாது, ஆனால் அதனால் வரும் painஐ வேண்டுமானால் குறைக்கமுடியும்.

 

எனக்குத் தெரிந்த எழுத்தாளர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையும், செயலாற்றுவது குறித்தும் பேசிக் கொண்டிருப்பார். அவரின் உற்சாகம் தரும் கட்டுரைகள் எனக்கு அவரின் அபுனைவுகளை விடப் பிடிக்கும். ஆனால் அவர் கூட, இனி புதிதாக எழுதமுடியாது என்று சட்டென்று வந்த சலிப்பில் மின்சாரம் வரும் plug இல் கை வைப்போமா என்று பெரும் உந்துதல் வந்தது என்று ஒருமுறை எழுதினார். அவர் இவ்வாறு எழுதும்போது அவரை அரவணைத்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதன்மூலம் அவர் நமக்குச் சொல்வது;  தான் இவ்வளவு உற்சாகமானவராக, தொடர்ந்து செயலாற்றுபவராக இருந்தால் கூட, தானும் இந்தவகைச் சிக்கல்களுக்குள் இருந்து தப்பவில்லை என்பதுதான். இவ்வாறு இதை அவர் பகிர்வதுகூட நம்மோடு தோளணைத்து உங்கள் மனதின் சிக்கல்கள் தனிப்பட்ட ஒருவருக்குரியதல்ல என்று குறிப்பிட விழைவதாகக் கூட இருக்கலாம்.

 

உங்களுடைய நாட்கள் இன்னும் இனிதாகவும், அமைதியானதாகவும் அமையட்டுமாக.

 

அன்புடன்,

 

இளங்கோ

 

***************

 

 

 


0 comments: