கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 59

Tuesday, December 17, 2024

 

சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைதூர நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, 'உங்களுக்குத் தெரியுமா? எனது நண்பன் ஒருவன் உங்களை அப்படிக் காதலித்தான்' என்றார். எனக்கு அது ஓர் ஆச்சரியமாக இருந்தது. காதலால் அல்ல. நானே அப்படி எத்தனை பேரை நேசித்திருக்கின்றேன். இப்படி என்னைப் போன்ற ஒருவனைக் கூட, என் எழுத்துக்களின் வழி ஒருவர் ஆழமாக காதலிக்க முடியுமா என்பதுதான் கொஞ்சம் வியப்பாக இருந்தது. 'அடடா இவ்வளவு காலமாக தெரியாமல் விட்டது. இதை அறிந்திருந்தால் நேரில் சந்தித்தபோது அவரை ஆரத்தழுவி என் காதலையும் தெரிவித்திருப்பேனே' என்று இந்த நண்பருக்குச் சொன்னேன்.

இந்த நண்பர்களை நேரில் சந்தித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகின்றது. என்னை 'நேசித்த' நண்பர், என் எழுத்தை மற்றவர்கள் விமர்சித்தால் கூட, அதெப்படிச்செய்யலாம் என்று என் பொருட்டு எல்லாம் சண்டை பிடிப்பார் என்று, இந்த நண்பர் தொலைபேசி உரையாடலில் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது என்னை 'நேசித்த' அந்த நண்பர் எனக்கு சமூகவலைத்தளத்தில் நண்பராகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நம்மை வாழ்வு வேறு வேறு தளங்களுக்கும்/ அடையாளங்களுக்கும் நகர்த்தியும் விட்டது. எங்கிருந்தாலும் அவர் வாழ்க. அவரின் அந்தக் காதலால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன் என்று மானசீகமாய் அவருக்குச் சொல்லவும் பிரியப்படுகின்றேன்.

இப்போது இதையேன் சொல்கிறேன் என்றால், பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா?' கதையை வாசித்தால், இன்னொருவகையான இரு ஆண்களின் அழகான காதல் கதை விரியத் தொடங்கும். ஜயகரனின் கதைகளை, ஈழத்தில் இருந்த ஒருவர் எப்படி இந்த புலம்பெயர் வாழ்வில் blend ஆகின்றார் என்பதை ஒரு பெரிய 'கான்வாஸில்' வரைந்து காட்ட முடியுமென்பதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும். மற்ற புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இதைச் சொல்லவில்லை என்பதல்ல இதன் அர்த்தம். மிக நிதானமான, மிகை நவிற்சியும்/அதீத நகைச்சுவையும் இல்லாது நம்மைப் போன்ற புலம்பெயரிகளின் நாளாந்த வாழ்வை மிக இயல்பாக ஜயகரன் அவரது கதைகளில் கொண்டு வந்தவர் எனச் சொல்வேன்.

புலம்பெயர்ந்தவர்களில் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதை மட்டுமில்லை எப்படி இந்தப் பல்கலாசார சூழலில் integral/evolve ஆனார்கள் என்பதையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கக் கூடிய கதைகள் ஜயகரனுடையது. மேலும் பாத்திரங்களின் உணர்வுநிலைகளை மட்டுமில்லை, இந்த வாழ்வின் நுண்ணழகியலை/நிலவியலை வர்ணிக்க ஜயகரன் எழுத்தில் எடுக்கும் நிதானம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

ஆகவேதான் ஜயகரனின் கதைகளை (நம் சூழலில் 'கவனம் பெற்ற' எழுத்தாளர்களின் படைப்புக்களை விட) வாசித்துப் பார்க்கச் சொல்லி எனக்கு அடுத்து வந்த தலைமுறையினர்க்குச் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் நான் எடுத்துச் சொல்வதுண்டு. முக்கியமாக நல்லதொரு எழுத்தாளராக வரக்கூடிய சாதனாவின் ('தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்') கதைகள், ஏன் வேரூன்றமுடியா தனித்தலையும் கதைகளாக அந்தரத்தில் மிதக்கின்றன என்று யோசித்தபோது, அவர் ம் நமது புலம்பெயர் தமிழ் - பல்கலாசார வாழ்வை முற்றிலுமாக அந்நியநில மக்களில் சுமத்தி எழுதிச் சென்றதால், அவை கிட்டத்தட்ட மொழிபெயர்ப்புக் கதைகள் போன்ற தோன்றத்தைத் தருவதாக நினைத்திருக்கின்றேன்.

ஆனால் ஆச்சரியமாக இந்த இடைவெட்டும் புலம்பெயர் வாழ்வையும் X தமிழ் மனதின் நெருக்கடியையும்  விஜய ராவணன் அவரது தொகுப்புக்களில் கொண்டு வந்திருக்கின்றார். அதேவேளை விஜய ராவணனின் கதைகளில் இருக்கும் பலவீனத்தை சர்வோத்தமன் மிகச்சரியாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்: "ஆசிரியர் (விஜய ராவணன்) கதையில் பாத்திரங்களை தங்களைத் தாங்களே நிகழ்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.அதற்கு கதை அவரில் நிகழ வேண்டும்.அதாவது கதை மாந்தர்கள் அவர்கள் பேச விரும்புவதை பேச வேண்டும்.அதற்கு அந்தத் அகத் தொந்தரவு உண்மையில் அவரில் உதித்திருக்க வேண்டும்".



யகரனின் 'அவனைக் கண்டீர்களா?'ஐ, ஒரு நெடுங்கதை எனத்தான் சொல்ல முடியும். ஈழத்தமிழர் ஒருவர் அகதியாக மொன்றியலுக்கு வந்து அங்கே கேளிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு நிர்வாண விடுதியில் துப்பரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இந்தக் கதையின் தொடக்கம் அவ்வளவு விரிவாக ஆண்-பெண் கழிவறைகளையும், நிர்வாணப்படம் தனித்து பார்க்க வருபவர்கள் பூத்துக்களில் வந்து சிந்தும் விந்துக்களையும், அதிகம் குடித்து வாந்தியெடுப்பதையும் சுத்தமாக்கும் கஷ்டத்தைச் சொல்கின்றது. கிட்டத்தட்ட அருவருப்பு வரமளவுக்கு இந்நிகழ்வுகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் அந்தச் சூழலில் வேலை செய்பவர்களின் நிலையை யோசிக்கும்போது நாம் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவு சுத்தமாகப் பாவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொஞ்சமேனும் நமக்குள் எட்டிப் பார்க்கலாம்.

அங்கே வேலை செய்யும் இரவி என்பவர் எப்படி ஒரு 'வீரசாகச' நிகழ்வொன்றின் மூலம் விரனாகவும், அப்படி ஆவதால் எவ்வளவு உயிராபத்துக்கும் உள்ளாகின்றார் என்பதும் முதல் பகுதியாகின்றது. ஆனால் வீரனாகும் இரவி உடைந்து போகின்ற கணமும் அந்த நிர்வாண விடுதியில் நிகழ்கின்றது. அங்கிருந்து கதை இப்போது ஈழத்துக்கு நகர்கின்றது. இரவியினதும், அவரது நண்பனினதும் கதைகள் சொல்லப்படுகின்றது. அந்த நண்பனுக்கும் இரவிக்குமான உறவு, யாழ்ப்பாணத்து மூடுண்ட சமூகம், போர்ச் சூழல் என்பவை பேசப்பட்டு, இறுதியில் அந்த நண்பனுக்கு என்ன நடந்தது என்பதுதான் கேள்வியாக 'அவனைக் கண்டீர்களா?' என்பதை ஜயகரன் இரவியின் கேள்வியாக மட்டுமின்றி வாசிக்கும் நம் அனைவருக்குமான கேள்வியாக முன்வைக்கின்றார்.

நாம் இரவியாக இருந்தால் அல்லது இந்த இருவரின் கதையை அறிந்த ஒருவராக இருந்தால் நமது பார்வைதான் என்னவாக இருக்கும். நாம் அவர்களைப் புரிந்துகொண்டிருப்போமா? நமக்கு உள்ள வாழ்க்கை போல ஒன்றை அமைக்க, அவர்களுக்கு விரும்பியமாதிரியான சூழலை ஏன் உருவாக்க நாம் முனையவில்லை? ஆகக்குறைந்தது பொதுச்சூழலில் பேசக்கூடத் துணியவில்லை என்பதுதான் எமக்கான முக்கிய கேள்வியாக இருக்கும்.

ஒரு படைப்பு நம் அகத்தில், தயக்கத்தில் ஒளிரும் சுடராயினும் அதைச் சிறிதாவது அசைத்துப் பார்க்க வேண்டும். அப்படி 'அவனைக் கண்டீர்களா?' அசைத்துப் பார்க்கின்றது. அதேபோன்று 'நீங்கள் எந்தப் பக்கம் போகின்றீர்கள்?' என்கின்ற இன்னொரு கதை இங்குள்ள முதியவர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டைப் பேசும் முக்கிய கதையுமாகின்றது.

'அவனைக் கண்டீர்களா?' ஜயகரனின் மூன்றாவது தொகுப்பு. ஒரு சிறந்த நாடகப் பிரதி எழுத்தாளராகவும்/நெறியாளராகவும் இருக்கும் ஜயகரன் அவரது கதைகளைத் தொகுப்பாக்கியது அண்மைக்காலத்தில்தான். அதேவேகத்தில் அவர் இப்போது புதிது புதிதாகக் கதைகளையும் உற்சாக எழுதிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியது.

முதலாவது தொகுப்பான 'பா.அ.ஜயகரன் கதைகள்' தொகுப்பு அவசரமான கதியில் வந்ததால், பின்னர் அது செம்மையாக்கப்பட்டு புதிய கதைகளோடு 'ஆலோ ஆலோ'வாக வெளிவந்தது. இப்போது 'அவனைக் கண்டீர்களா?' தொகுப்பிலும் ஏற்கனவே தொகுப்பில் வந்த சில கதைகள் சேர்க்கப்பட்டிருகின்றன. அப்படி இல்லாது அடுத்த தொகுப்பு தனித்து புதிய கதைகளுடன் மட்டும் வரவேண்டும் என்பது என் விருப்பு.

ஏனெனில் ஜயகரனின் கதைகளுக்கு இந்தப் புலம்பெயர் தேசத்தில் ஒரு முக்கிய வகிபாகமுண்டு. மேலும் கனடா போன்ற நாடுகளில் வாசிப்பவர்கள் மட்டுமின்றி, எழுதுபவர்களே அரிதாகிக் கொண்டிருக்கும்போது, ஜயகரன் இன்னும் நிறைய எழுத வேண்டும். அது என்னைப் போன்ற, கதைகள் எழுதுவதில் விருப்பிருந்தாலும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி உறங்குநிலைக்குப் போய்விட்டவர்களுக்கும் நிச்சயம் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்.

 

****************

 

(Nov, 2024)

இலங்கை அரசியலை பின்-நவீனத்துவ நிலவரத்தினூடாகப் புரிந்துகொள்ளல்!

Monday, December 16, 2024

 

1.

இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் சென்றபோது சில வருடங்களுக்கு முன் 'அரகலய' போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் உச்சத்தில் அன்றைய ராஜபக்‌ஷ அரசு துடைத்தெறியப்பட்டது. இலங்கையின் முழு அதிகாரங்களும் பெற்ற ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்‌ஷ இலங்கையை விட்டுத் தப்பியோடியதும், வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாகப் பதுங்கி இருந்ததும் அண்மைக்கால இலங்கையின் வரலாறு.

நாட்டைத் திவாலாக்கி இப்படி அரசுகள் வீழ்ந்தற்கு -ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் போனால்- நமக்கு 'அரபு வசந்தம்' சிறந்த சாட்சியமாக இருக்கின்றது. விலைவாசிகள் உயர்ந்து மக்களின் நாளாந்த வாழ்வே அவதிக்குட்பட்டபோது ஒரு துனிஷியா இளைஞன் சந்தையொன்றில் தன்னைத் தீவைத்துக் கொழுத்தியதன் மூலம் 'அரபு வசந்தத்தை'த் துனிஷியாவில் தொடக்கி வைத்தான். அந்தக் கோபத் தீ  பின்னர் எகிப்து, லிபியா, பஹ்ரைன், யேமன், சிரியா பல நாடுகளைச் சென்றடைந்தது. சில நாடுகளில் மனித இழப்புக்களோடு அந்தந்த நாட்டு ஜனாதிபதிகள் தூக்கியெறியப்படவோ அல்லது அரச அதிகாரத்தை இராணுவத்திடம் கொடுத்துவிட்டுத் தப்பியோடவோ வேண்டியிருந்தது. இந்த 'அரபு வசந்தத்தில்' மேற்குலகின் இரகசியக் கைகள் போராட்டத்தின் இறுதிக்காலங்களில் இருந்தனவா என்பதும், முக்கியமான கேள்விதான்.

ஆனால் இலங்கையில் நடந்த 'அரகலய'ப் போராட்டம் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்தது. எவ்வித மனித இழப்புக்களும் இல்லாமல் ஒரு சர்வாதிகார -அதுவும் ஈழத்தில் போரை முடித்து இன்னொரு பேரரசனாக தம்மை புதிய 'மகாவம்ச'த்தின் பக்கங்களில் சேர்த்துக்கொண்ட ராஜபக்‌ஷ குடும்பம் முழுதாக மக்களினால் துடைத்தெறியப்பட்டது. இவ்வாறு இலங்கையில் வரலாற்றில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட இந்த முக்கிய சம்பவத்தையும் ராஜபக்‌ஷ குடும்பமோ அல்லது இனி வரும் சிங்கள அரசாட்சியாளர்களோ மகாவம்சத்தில் சேர்ப்பார்களா என்றும் பார்க்க வேண்டும்.

மேலும் 'அரகலய' போராட்டம் நடந்தபோது இராணுவம் எவ்வாறு பேரமைதியாக இருந்தது என்பது மிகப்பெரும் கேள்வி  (அமெரிக்காவின் தலையீடு நிச்சயம் இருந்திருக்கும்). பிற தென்கிழக்காசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளைப் போல, அங்கு மக்களால் துரத்தப்பட்ட ஜனாதிபதி/பிரதமர்களுக்குப் பின், இராணுவம் இலங்கையில் தனக்கான அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளாது, 'ஜனநாயக வழியிலே' அதிகாரம் கைமாற்றப்பட்டதையும் முக்கிய புள்ளியாக நாம் குறித்தாக வேண்டும்.

இத்தனைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அளவு மிகப்பெரியது. ஒரு நாட்டின் சனத்தொகையை வைத்துப் பார்க்கும்போது, இலங்கையானது உலகில் 14வது பெரிய இராணுவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அத்தகைய பலமிகு இராணுவத்துக்கு, சர்வ அதிகாரமும் வாய்க்கப் பெற்ற ஜனாதிபதி கட்டளையிட்டிருந்தால் 'அரகலய' போராட்டக்காரர்கள் அனைவரையும் ஒரு நாளுக்குள் அகற்றிவிட முடியாதா என்ன? ஆகவே  இந்த விடயத்தில் உள்ளே நடந்திருக்கக்கூடிய இந்திய/அமெரிக்க/ஐரோப்பா அரசுக்களில் இராஜதந்திர நாடகத்தை தற்சமயம் கொஞ்சம் மறந்துவிடுவோம்.



2.


இப்போது சமகாலத்துக்கு வருவோம். அரகலய போராட்டத்தின் ராஜபக்‌ஷ குடும்பம் துரத்தப்பட்டபின், நிலைமாறும் அரசை ரணில் விக்கிரமசிங்க தாங்கிக் கொள்கிறார். நேரடித் தேர்தல்களில் பலமுறை தோற்று ஒருபோதும் ஜனாதிபதி பதவி ரணிலுக்குக் கிடைக்காதென, ரணிலே அந்த ஆசையைக் கைவிட்டபோது அவருக்கு இப்படி அமைந்தது ஒரு பேராச்சிரியமே. இதையும் ஒருவகையில் பின் நவீனத்துவ 'விளையாட்டு' என எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அவல்/அபத்த நகைச்சுவையை ஒருபக்கம் வைத்துவிட்டுப் பார்த்தால், அரகலயப் போராட்டம்/அதற்காய்ப் போராடிய மக்கள்/துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி என எல்லாவற்றையும் பின் நவீனத்துவத்தின் மூலம் அணுகினால் இன்னும் சுவாரசியமான பல முடிச்சுக்கள் கட்டவிழலாம்.

பின் நவீனத்துவம் மார்க்ஸியம் உள்ளிட்ட பலவற்றைப் பெருங்கதையாடல் என்று கூறி நிராகரிக்கின்றது. ஏன் மார்க்ஸியம் போன்றவை பெருங்கதையாடல் என்று பின்நவீனத்துவம் சொல்கின்றது என்றால், மரபான மார்க்ஸியர் உள்ளிட்ட பலர் 'மார்க்ஸியமே' முடிந்த முடிவானது. அதை மாற்றமுடியாது என்று வலியுறுத்திய காலம் ஒன்றிருந்தது,  எல்லோருக்குமான முழு உண்மை என்பதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாமே பகுதி பகுதி உண்மைகளாளது என்பதே பின் நவீனத்துவம் வலிறுத்துகின்றது. ஆகவே மார்க்ஸியம் தன்னை முடிந்த உண்மையாகவும், முழுமையடைந்த தத்துவமாகவும் தன்னை முன்வைக்கும்போது அது பெருங்கதையாடல் ஆகிவிட்டது என்றே அர்த்தம். அங்கே எந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியாது ஒரு 'தேக்கநிலை' உருவாகிவிடுகின்றது.

மதம் சார்ந்த பிரதிகளையும் இப்படிப் பார்க்கலாம், எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன/சொல்லப்பட்டுவிட்டன என்ற அடிப்படைவாத மதவாதிகள் உரத்தக் குரலெழுப்புவார்கள் அல்லவா? அவ்வாறு பெருங்கதையாடலாகி விட்டவை என்ன செய்யும், தனக்குள் அதிகாரத்தைக் குவிக்கும். அப்படிக் குவிப்பதன் மூலம் எல்லோருக்கும் பொதுவான உண்மையான அந்தப் பிரதிகளை முன்வைக்கும். அவ்வாறு அதற்குள் அடங்காதவர்களை 'மற்றமை'யாகக் கட்டியமைத்து தனது எதிர்ப்பினைக் காட்டும்.

உதாரணத்துக்கு இலங்கையில் சிங்களப் பேரினவாதம், சிங்களப் பெளத்தமே அரச அதிகார மதம் என்று சொல்வதன் மூலம் ஒருவகை அதிகாரத்தை பெளத்தத்துக்குக் கொடுப்பதைச் சொல்லிக் கொள்ளலாம். அதன் இன்னொரு முனைதான் இப்போது மீண்டும் வென்றுள்ள டிரம்ப் பைபிளை மீண்டும் அமெரிக்காவின் மீட்டெடுத்த  வெள்ளையினப் பெருமிதமாக முன்வைப்பதாகும்.
 
நான் மீண்டும் இலங்கை அரசின் பின் நவீனத்துவ நிலவரத்துக்கு வருகின்றேன். பின் நவீனத்துவம் பெருங்கதையாடல்களை நிராகரிக்கும் அதேவேளை, இனிப் பெரும் புரட்சிகளால் மாற்றங்கள் நிகழாது என்பதையும் விலத்தி வைக்கவே செய்கின்றது. ஏனெனில் இந்த குவிப்பு (unity) என்பது எப்படியோ பெரும் அதிகாரத்தைக்  (totality)கொண்டுவருகின்றது என்று சந்தேகப்படச் சொல்கின்றது. சிறு குழுக்களால் அதிகாரத்தில் மாற்றங்களை ஏதேனும் ஒரு வகையில் மேற்குலகில் கொண்டுவந்தற்கு கறுப்பினத்தவர்களில் 'Black Lives Matter', கனடாவில் பூர்வீகக்குடிகளின் 'Idle No More' போன்றவற்றை அவ்வப்போது உதாரணங்களாகச் சொல்வதுண்டு.

இன்னொருவகையில் இடதுசாரி ஆயுதப்புரட்சிகளை இரண்டு வெவ்வேறு காலங்களில் நிகழ்த்திய ஜேவிபியின் பின்னணியில் இருந்து வருகின்ற, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க ஒரு இடதுசாரியா என ஒரு நேர்காணலில் பாக்கியசோதி சரவணமுத்துவிடம் கேட்கும்போது Anura is a pragmatist, not a Marxist என்று சொல்கிறார். அதாவது அநுர யதார்த்தவாதியே தவிர இடதுசாரி கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கூடிய ஒருவர் அல்ல என்கின்றார் (இல்லாவிட்டால் எந்த அசலான இடதுசாரி IMFஉடன் கடன்வாங்கும் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்த முடியும்?)

மேலும் அநுரவின் என்பிபி கூட்டணி, இடதுசாரி அரசியலை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டவர்களும் அல்ல. அவர்களின் முக்கியமான தேர்தல் விஞ்ஞாபமானதாக இருந்தது இலஞ்ச ஒழிப்பு (Anti-Corruption). இத்துடன் இலங்கை வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு, பொருளாதாரச் சீர்திருத்தமும் முக்கியமானது என்பதை மேலதிகமாகத் தம் தேர்தல் பரப்புரைகளில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அந்தப் பொருளாதாரச் சீர்திருத்தம் மார்க்ஸின் பொருளாதாரத்தின் அடிப்படையில் வரப்போவதில்லை என்பதையும் நாமறிவோம். வேண்டுமெனில் என்பிபியினர் கொண்டு வரும் சீர்திருத்தம் நியோ-லிபரல்களுக்குரிய ஒன்றாக இருக்கக்கூடும் என நம்பலாம். இல்லாவிட்டால் இன்றிருக்கும் இலங்கையை என்றென்றைக்குமாகக் கட்டியெழுப்பவும் முடியாது என்பதே இலங்கையின் துயர யதார்த்தமாகவும் இருக்கின்றது.



3.

இந்தப் பின்னணியில்தான் -அதாவது இலஞ்ச ஒழிப்பும், பொருளாதாரச் சீர்திருத்தமும் - முக்கியப்படுத்தப்பட்டதால்தான்  சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் என்பிபி கூட்டணியிருக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஜனாதிபதிக்கோ/சிங்களக் கட்சிக்கோ எதிரான நிலையில்தான் தமது ஆதரவை வழங்கிய வடக்கு கிழக்கு (மட்டக்களப்பு தவிர்த்து) மக்கள் பெருமளவில் வாக்களித்தது இலங்கையின் வரலாற்றிலே முக்கியமானது.

 'இலஞ்ச ஒழிப்பு' என்பது இத்தேர்தலில் முக்கியப்படுத்தப்பட்டதால்தான், அதற்கு முன்னர் யாழில் சில அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கும் மருத்துவச் சீர்கேடுகளைப் பொதுவெளியில் கொண்டு வந்த வைத்தியரான  அருச்சுனாவும் வடமாகாணத்தில் சுயேட்சையாக நின்று வென்றிருக்கின்றார் என்று நம்புகின்றேன். இங்கே ஒருசாரார் அருச்சுனாவை கண்மூடி ஆதரிப்பதற்கும், இன்னொருபகுதியினர் அவரை எல்லாவற்றுக்கும் நக்கலடிப்பதற்கும் அப்பால் அருச்சுனாவின் வருகையை/வெற்றியை வைத்து ஒரு case study செய்து பார்க்கலாம்.

எப்படி அரகலய போராட்டத்தோடு ஜேவிபியினர் இளையவர்களை சமூகவலைத்தளங்களினூடாக அணுகி ஆதரவு பெற்றனரோ (மிகுதி அனைத்து மரபார்ந்த சிங்கள அரசியல் கட்சிகள் சமூகவலைத்தளங்களின் தாக்கத்தை கவனிக்கத் தவறியமை) அவ்வாறே சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி அருச்சுனாவும் வெற்றி பெற்றிருக்கின்றார். இத்தனைக்கும் அவரின் சறுக்கல்கள், அவரின் சுயேட்சிக்குழுக்கள் நடந்த எதிர்ப்புக்கள் எனப் பல விடயங்கள் தேர்தல் காலங்களில் தொடர்ந்தபோதும், மரபார்ந்த தமிழ்க்கட்சிகளின் பல முக்கியமானவர்களை மண் கவ்வச் செய்து அருச்சுனா வென்றிருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

சுமந்திரன் போன்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியமான நபரை மட்டுமில்லை, எப்போதும் நிலையான வாக்கு வங்கியை வைத்திருப்பவர் என்று கடந்த பல தசாப்தங்களாக நிரூபித்த டக்ளஸ் தேவானந்தாவைக் கூட தோற்கடித்து, அதுவும் இலங்கையில் பல நூற்றுக்கணக்கான சுயேட்சைக்குழுக்கள் நின்ற இத்தேர்தலில், ஒரேயொரு சுயேட்சைகுழு எம்பியாக பாராளுமன்றத்துக்கு அருச்சுனா சென்றிருக்கின்றார். இத்தனைக்கும் யாழின் முன்னாள் மேயராகவும், நிதானமாக அரசியல் செய்பவராகவும், பெரும்பாலான யாழ்ப்பாணர்கள் விரும்புவதாகச் சொல்லும் தமிழ்த்தேசியத்தின் மீது அபரித விருப்புமுள்ள மணிவண்ணனைக் கூட எளிதில் அருச்சுனா தோற்கடித்திருப்பதை பின் நவீனத்துவ நிலவரத்தின் நல்லதொரு உதாரணமாகக் காட்டலாம்.

இன்னொருவகையில் இது எனக்கு சிலியில் நடந்த ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றது. பினோச்சோயின் சர்வாதிகாரத்திற்குள் நெடுங்காலமாகச் சிக்கித் திணறிய மக்களுக்கு அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜனநாயக ரீதியாக சூழல் வருகின்றது. அதாவது 'இல்லை' (No) என்று பெரும்பான்மை வாக்களித்தால் பினோச்சோ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிப் போகவேண்டும். அந்தத் தேர்தலில் பினோச்சோவைத் தோற்கடிக்க அங்கிருக்கும் இடதுசாரிகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் எப்படி எதைச் செய்தாலும், என்ன புதிதாக நடந்துவிடப் போகின்றது என்ற அலுப்பில், இளம் வாக்காளர்கள் வாக்களிக்கவே விரும்பாமல்  இருக்கின்றனர். அப்போதுதான் ஒரு இடதுசாரிக் குழு, இந்த இல்லை' (No) க்கு வாக்களித்தால் நாட்டில் பாலும் தேனுமாக  coca colaவும், பார்ட்டிகளும், அமெரிக்கக் கனவுமாக மாறப்போகின்றதென்று விளம்பரங்கள் செய்து இளைஞர்களின் மனதை மாற்றியமைக்கின்றார்கள் (இதன் வரலாற்றை 'NO' என்கின்ற திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்). இறுதியில்  இந்தத் தேர்தலில் பினோச்சோ தோல்வியடைந்து சிலியிருந்து  ஐரோப்பா நாடொன்றுக்குத் தப்பியோடுகின்றார்.


அவ்வாறுதான் நாட்டில் எல்லாமே இலஞ்சத்தில் திளைத்திருக்க, ஒரு தன்னிலை அதன் அத்தனை பலவீனங்களோடும் எதிர்க்கேள்விகளும், அம்பலப்படுத்தல்களையும் செய்ய, வடமாகாணத்தில்  அருச்சுனா ஒரு வெற்றித் திருவுருவாக்கப்பட்டிருக்கின்றார். இந்த வெற்றியை நாம் சும்மா போகின்றபோக்கில் எள்ளல் செய்து கடந்துவிடாமல் இருந்தால் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த தேர்தலில் அருச்சுனா இதைமாதிரி வெல்வாரா இல்லையா அல்லது ஏதேனும் மரபான  கட்சியில் ஜக்கியமாவாரா என்பது எதிர்காலத்துக்குரியவை. இப்போது அவசியமும் அற்றது.

எனக்குப் பிடித்த தத்துவவாதியான தெரிதா 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' என்கிறார்.. எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும் என்பதைத் தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நமக்குத் தெரிந்த எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே தான் குறிப்பிடும் எதிர்காலம் என்கின்றார் தெரிதா. அவ்வாறான ஒரு 'எதிர்காலம்'தான் இலங்கையில் இப்போது சாத்தியமாகின்றது என்று நினைக்கின்றேன். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் 225 இருக்கைகள் உள்ள பாராளுமன்றத்தில் 3 இருக்கைகள் மட்டுமே வென்ற ஜேவிபி, இம்முறை கிட்டத்தட்ட 160 இருக்கைகளை வென்று இலங்கையின் தேர்தல் வரலாற்றில் நிகழாத அறுதிப்பெரும்பான்மைச் சாதனையை நாட்டியிருப்பதும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒருவர் இம்முறை 42% வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக  இலங்கையில் வந்திருப்பதையும் யார்தான் கணித்திருக்க முடியும்?

ஆக, 'அரகலய'ப் போராட்டத்தில் இருந்து, இன்று அனுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாக வென்றிருப்பதிலிருந்து, அருச்சுனா ஒரு சுயேட்சை வேட்பாளராக எம்பி ஆனது வரை எல்லாவற்றையும் பின் நவீனத்துவ நிலவரத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்பது சுவாரசியந் தரக்கூடியது. ஆனால் irony என்னவென்றால் நாம் ஒன்று உறைந்துபோன தமிழ் அரசியல் ஆய்வாளர்களின்  அரைத்த மாக்கதைகளில் சிக்குண்டு கிடப்போம், இல்லாவிட்டால் இன்றைய யூ-டியூப்பர்களின் கட்டுக்கதைகளில் 'சில்லறையைச் சிதற' விட்டுக் கொண்டிருப்போம். ஒருபோதும் வெவ்வேறு சிந்தனைப்புள்ளிகளில் வைத்து இலங்கை அரசியலை விளங்கிக் கொள்வது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளமாட்டோம்.

*****************

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2024)

 புகைப்படங்கள்: இணையம்

அத்திப்பூ குறிப்புகள்

Sunday, December 01, 2024

 

1. அமெரிக்கத் தேர்தல்


அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிட்டது. யார் வென்றுவிட்டார் எனது அனைவர்க்கும் தெரியும். அடுத்த வருடம் கனடாவிலும் தேர்தல் இருக்கின்றது. அதிலும் வலதுசாரிச் சார்புள்ள மிதவாதக் கட்சி (Conservative) வெல்லவே அதிகம் சாத்தியமிருக்கின்றது.

இப்போது அமெரிக்கத் தேர்தல் குறித்து எழுத வரவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் வென்றவுடன், ஒருவர் அது கறுப்பின மக்களின் ஆதரவால் நிகழ்ந்ததென்று கூறி ஒரு பதிவு எழுதியிருந்தார். சரியான புள்ளிவிபரம் கிடைக்காமல் எழுந்தமானமாக எழுதினார் என்றால் கூட அதை மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால் கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்டதை மறந்து, தமது புதிய அடிமை நிலையை மீண்டும் நிரூபிக்க டிரம்பிற்கு வாக்களித்தார்கள் என்று எதையெதையோ எழுதியதுதான் எரிச்சலாகக் கிடந்தது.

மேலும் அத்தோடு கறுப்பினத்தவர்கள் (கூட) ஒரு பெண் ஜனாதிபதியாக வருவதை விரும்பாத ஆணாதிக்கவாதிகள் என்று எழுதியிருந்தார்.

உண்மையில் இவருக்கோ/இவரின் பதிவுக்கோ (இவ்வாறு பல பதிவுகள் எழுந்தமானமாக முன்னரும் இவரால் எழுதபட்டிருக்கும்) மறுத்துச் சொல்ல அவ்வளவு விருப்பமில்லை. ஆனால் நான் மதிக்கும் பல நண்பர்கள் - முக்கியமாய் நான் முன்னோடிகள் என்று நினைப்பவர்கள் - அவரின் பதிவை வாசித்து அவ்வப்போது உரையாடுவதால் இதை எழுத விரும்புகின்றேன்.

அமெரிக்கர்கள் மட்டுமில்லை, ஆசியர்களும் முக்கியமாக -பெருமளவு இந்தியர்கள் தொடர்ந்து வலதுசாரிகளுக்கே ஆதரவளிப்பவர்கள். அது அமெரிக்காவில் மட்டுமில்லை, கனடாவிலும் வெளிப்படையாகத் தெரியும். என்ன இம்முறை கமலா ஹாரிஸ் என்கின்ற இந்தியப் பின்புலமுள்ள பெண்மணி ஜனாதிபதி தேர்தலில் நின்றதால் மெல்லவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் கொஞ்சம் கமலாவுக்கு வாக்களித்திருக்கக் கூடும். மற்றும்படி ரிபளிக்கனுக்கு வாக்குகளை இவர்களின் பெரும்பாலானோர் அள்ளி வழங்கக்கூடியவர்கள். அதனால்தான் அண்மையில் தமிழிலும் தெலுங்கிலும் (இந்தியா மாதிரி) டிரம்புக்கு வாக்களிக்கக் கேட்டு பெரிய Banner வைத்திருந்தது சமூகவலைத்தளங்களில் 'வைரல்' ஆனது.

இப்போது கறுப்பினத்தவர்கள் டிரம்புக்கு வாக்களித்துவிட்டார்கள் என்ற விடயத்துக்கு வருவோம். அது மிகத் தவறான தகவல்.

இம்முறை வழமையை விட கறுப்பின ஆண்கள் அதிகம் கமலா ஹரிஸுக்கு வாக்களித்திருக்கின்றனர். அதனால்தான் தேர்தல் முடிந்தபின் டிரம்ப் ஆதரவு FOX News கூட எப்படி 76% கறுப்பின் ஆண்கள் நமது டிரம்பை விட்டுவிட்டு கமலாவுக்கு வாக்களித்தார்கள் என்று இங்கு காலையிலிருந்து புலம்புகின்றார்கள்.

அதற்கு 'நீங்கள் டிரம்பிற்கு வாக்களித்தால் கறுப்பினப்பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்று மிஷேல் ஒபாமா பேசியதுதான் காரணம் என்று மிஷேலையும் கூடவே இந்த வலதுசாரிகள் திட்டித் தீர்த்தபடி இருக்கின்றார்கள்.

இனி இம்முறை அமெரிக்கத் தேர்தல் வாக்களிப்பு புள்ளிவிபரத்தை இனம்/பால் என்பவற்றை வைத்துப் பார்த்தோம் என்றால், அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக கமலாவுக்கு வேறெந்த (வெள்ளை/ஹிஸ்பானிய/ஆசிய ) இனத்தவர்களை விட வாக்களித்திருக்கின்றார்கள் என்பது புரியும் (பார்க்க இணைப்பு 01).

இவ்வாறு கறுப்பினத்தவர்கள் மிகத் தெளிவாக டிரம்புக்கு எதிராக வாக்களிக்கும்போது இந்தியாவிலிருந்து கொண்டு, அடிமைகளாக்கப்பட்ட கறுப்பர்கள் கூட இப்போது டிரம்புக்கு வாக்களித்து நவீன அடிமைகளாகின்றனர் என்று எழுதுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது. இப்படித்தான் இந்தியாவிலிருந்து வந்துபோகும் சில எழுத்தாளர்களும் அவ்வப்போது கறுப்பினத்தவர்களைப் பற்றி பொன்மொழி உதிர்ப்பதைக் கடந்த காலங்களில் கண்டுமிருக்கின்றோம்.

இம்முறை டிரம்ப் வென்றதற்கு ஹிஸ்பானிய ஆண்கள் அதிகம் டிரம்ப் பக்கம் சாய்ந்தது முக்கிய ஒரு காரணம் என்று சொல்கின்றார்களே தவிர கறுப்பினத்தவர்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று எங்கும் சொல்லவில்லை.

ஆகவே அன்பரே, எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரியும் என்கின்ற பாவனையில் எழுதாதீர்கள். மேலும் உங்கள் தரவுகள்/தகவல்கள்/கோட்பாட்டு விளக்கங்கள் தவறென்று அவ்வப்போது சொல்ல வரும் நான் மதிக்கும் முன்னோடிகளை உங்கள் அரைகுறை ஞான அகம்பாவத்தால் விரட்டியடிக்காதீர்கள். அதனால் அவர்களுக்கல்ல, உங்களுக்குத்தான் ஒரு புதிய உலகைப் பார்க்கும் சாளரம் அடைத்துக் கொள்கின்றது என்பதையாவது சற்றுப் புரிந்து கொள்ளுங்கள்.


 

2. றஷ்மி

 

றஷ்மி என் பிரியத்துக்குரிய படைப்பாளி. அவரின் கவிதைகளை என் பதின்மங்களில் 'சரிநிகரில்' உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முதல் தொகுப்பான 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு: முதலான கவிதைகள்' தொகுப்பே அவரை இன்னும் நெருக்கமாக்கியது. அந்த நெருக்கம் எவ்வாறானதெனில் என் பல்கலைக்கழக காதல் பிரிவின் போது ஆற்றுப்படுத்தும் 'நிவாரணிகளில்' ஒன்றென அந்தத் தொகுப்பு இருந்தது. பின்னர் றஷ்மியோடு தொடர்ந்து பல்வேறுவகைகளில் சேர்ந்து பயணித்தாயிற்று. 

 

எனது தொகுப்புக்களில் ஒன்றான 'பேயாய் உழலும் சிறுமனமே' அவரின் முகப்போவியத்தோடு வெளிவந்தது. எனது கதைகள் 'காலச்சுவடில்' வெளிவருகின்ற ஒவ்வொரு பொழுதும் றஷ்மியின் ஓவியங்களோடே வெளிவந்திருக்கின்றன. இதற்கிடையில் ஷர்மிளா ஸையத் கொழும்பில் கலைகளினூடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என ஒருங்கமைத்த முதல் நிகழ்வில் எனதும் றஷ்மியினதும், நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இலக்கியத்தில் ஒரு சகபயணியாக றஷ்மியுடன் நானும் மாறியிருந்தேன்.

சிலவருடங்களுக்கு முன் றஷ்மியை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். எப்போதும் தொடர்புகளைப் பேணுவதில் சோம்பலும், தொலைபேசி அழைப்புக்களை விட்டுவிலகுபவனாக இருந்தாலும், றஷ்மியோடு தொலைபேசும்போது -அது அரிதாக இருந்தாலும்- அந்த பேச்சுக்கள் நீண்டதாகவே இருக்கும். றஷ்மியின் ஆளுமை பன்முகப்பட்டது. கவிஞர், ஓவியர், புத்தக வடிவமைப்பாளர், புனைவெழுத்தாளர் என்று அவரின் திறமை பல்வேறு திசைகளை நோக்கிப் பாய்வது. இன்று அவர் ஒரு நல்ல பாடகர் என்பதும், பாடல் வரிகளை எல்லாம் மிக நேர்த்தியாக நினைவில் வைத்திருப்பவர் என்பதையும் அறிந்தேன்.

கவிதைகளுக்காக எப்போதோ அவருக்குக் கிடைத்திருக்கவேண்டிய 'இயல்விருது' இப்போதாவது அவரின் சிறுகதைகளுக்காக கிடைத்திருக்கின்றது என்று ஆறுதற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வாழ்த்துகள்!

றஷ்மி இன்னும் நிறைய எழுதுங்கள்; இதே நேசத்தோடு எங்களோடு எப்போதும் இருங்கள்!

 

3.  Martha (ஆவணப்படம்)

எனது பாடசாலை/பல்கலைக்கழக காலங்களில் மார்த்தா (Martha Stewart) மிகப் பிரபல்யமாக இருந்தவர். எந்தப் பத்திரிகையை வாசித்தாலும், எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் மார்த்தா அங்கே இருப்பார். அவ்வாறு புகழின் உச்சிக்குப் போன மார்த்தாவின் செல்வாக்கும், அவரின் நிறுவனமும் சட்டென்று சரிந்து போனது. அவர் stock market இல் insider trading செய்தார் என்று கூறப்பட்டு, அது நிரூபிக்கப்படாததால் அவர் எப்ஃபிஐக்கு பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டில் ஐந்து மாத சிறைத்தண்டணையும், மிகுதி ஐந்துமாத வீட்டுச் சிறையிலும் இருந்தவர். இதன் நிமித்தம் அவர் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தார்.

ஆனால் மார்த்தா, மிக எளிமையான 5 சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் வறுமையோடு போராடி அன்று அவரது உழைப்பாலேயே தனது சொந்தப்பெயரை மார்க்கட் செய்து, ஒரு நிறுவனத்தை நடத்திய முதல் பில்லியரான பெண்ணாக அன்று மாறியது ஒரு பெரும் நிகழ்வே. இன்று 'இன்புளூவென்சர்' எனப்படும் தேய்வழக்கிற்கு 80/90களில் மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருந்தவர் அவர். மார்த்தா தனது பெயரிலேயே பல்வேறு சஞ்சிகைகளை நடத்தியவர். அதன்பின்னர்தான் பெண் ஆளுமைகளான ஒபரா வின்பரே போன்றவர்கள் தமக்கான சஞ்சிகைகளை நடத்தியவர்கள் என நினைக்கின்றேன்.

உண்மையில் அன்று மார்த்தா பெரிய குற்றம் எதையும் செய்யவில்லை. அவர் விற்ற பங்குகள் கூட 50,000 டொலர்களுக்குக் கீழானவை. அவரின் வளர்ச்சியை விரும்பாத யாரோ அவரை வீழ்த்த விரும்பியிருக்கக் கூடும். மேலும் வெகுசன விருப்பம் என்பதும் உச்சிக்குப் போகும் ஒருவரை தனக்குத்தானே சரிநிகராக கீழே வீழ்த்திப் பார்ப்பதிலும் ஆசைப்படுவதும் இயல்புதானல்லவா. மார்த்தா ஜெயிலுக்குப் போனதன் பிறகு அவரின் பெயரில் இருந்த நிறுவனத்தின் அனைத்து உரிமைகளையும் இழக்கின்றார். அதுபோலவே அவரின் முகத்தை ஒரு பிராண்டாக வைத்திருந்த நிறுவனத்தின் பங்குகளும் மிக மோசமான சரிவைச் சந்தித்து, அந்த நிறுவனத்தையே 'அடிமாட்டு விலை'க்கு விற்க வேண்டி வருகின்றது.

மார்த்தாவின் மீட்சி பின்னர் நிகழ்ந்தாலும் ஆனாலும் மார்த்தாவினால் பெரிதாக முன்னர் போலச் சாதிக்க முடியவில்லை. அவரின் நிறுவனம் வீழாமல் இருந்திருந்தால் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை பல்வேறு வழிகளில் அடைந்திருக்கும் என்று சொல்கின்றார்கள். அதேபோன்று இந்த ஆவணப்படத்தில் மார்த்தாவின் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு, அவருக்கும் அவரது கணவருக்கும் திருமணத்தைத்தாண்டிய உறவுகள் என்று பலதையும் பேசுகின்றார்கள். எப்போதும் தனது விடயங்களில் முழுமையை எதிர்பார்த்த மார்த்தா எப்படிப் பலவேளைகளில் தனது ஊழியர்களை அவமானப்படுத்தினார்கள் என்பதையும் சொல்கின்றார்கள்.

இத்தனைக்கும் அப்பால், எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் சமையலாலும், வீட்டு அலங்கரிப்பாலும், தோட்டக் கலையாலும் பத்திரிகை/தொலைக்காட்சியின் மூலம் (இன்றைய ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கட், மென்பொருட்கள் போன்றவற்றால் அல்லாது) பில்லியனாராக ஒரு பெண்ணாக அன்றைய காலத்தில் மிக குறுகிய காலத்தில் தனித்து நின்று மாறிக்காட்டினார் என்பதுதான் மிக முக்கியமானது.

 

 

4. The Bike riders (திரைப்படம்)

இத் திரைப்படம் எப்படி அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் குழுக்கள் தோன்றியது என்பதன் ஆதிமூலத்தைத் தொட்டுச் செல்கின்றது. மோட்டார் சைக்கிள்களை ஓடுவதிலும் அவை பற்றிப் பேசுவதிலும் ஆர்வமுள்ளவர்கள் ஓரு குழுவைத் தொடங்க அது எப்படி பின்னர் வன்முறை/போதைமருந்து/பாலியல் தொழில் போன்றவற்றின் திசைகளை நோக்கிச் சென்றது என்பது பற்றிக் கூறுகின்றது. இதுவே இப்போது பிரபல்யமாக இருக்கும் outlaws என்கின்ற வன்முறையான மோட்டார் சைக்கிள் குழுவிற்கான அடித்தளமானது.

சிகாகோவில் இருந்த இக்குழுவில் (அப்போது அது வன்முறையின் திசைக்குச் செல்லவில்லை) 1960களில் சிலவருடங்கள் இணைந்திருந்த டானி (Danny Lyon) அந்தக் காலத்தில் இக்குழுவை புகைப்படங்களாலும் குறிப்புக்களாலும் ஆவணப்படுத்த அது நூலாகப் பின்னர் வெளிவந்தது. அவரின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

 

*******************

கார்காலக் குறிப்புகள் - 58

Wednesday, November 20, 2024

 

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார். அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo), பெட்ரோ பராமோ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ் அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால் முன்னுரையிலிருந்து இந்நாவலின் எல்லாப் பக்கங்களையும் அப்படியோ ஒப்புவிக்க முடியும் என்று மார்க்வெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவுக்கு மார்க்வெஸ் இந்த நாவலுக்குள் மூழ்கியவர். இந்த நாவல் கொடுத்த பெரும் ஈர்ப்பினால்தான், மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை எழுதுகின்றார்.

யுவான் ரூல்ஃபோ 'பெட்ரோ பராமோ'வை 1955 இல் எழுதிவிட்டார். நாவலின் கதைசொல்லியான யுவான் , இறந்துவிட்ட தனது தாய் சொன்னதிற்கு இணங்க, அவரது தந்தையைத் தேடி கோமாலா நகருக்குச் செல்கின்றார். இதுவரை நேரில் பார்த்திராத தனது தந்தையான பெட்ரோவை யுவன் பல்வேறு பாத்திரங்களினூடாக அறிகின்றார். பெட்ரோ இப்போது உயிருடன் இல்லை. அவரின் கதை சொல்பவர்களில் பெரும்பாலானோர் கூட இறந்துவிட்டனர். காலமாகியவர்கள் எப்படி கதை சொல்கின்றார்கள், எவ்வாறு யுவனின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றார்கள் என்பதுதான் இந்த நாவலின் சுவாரசியமான பகுதிகளாகும்.

இந்த நாவலே இலத்தீன் அமெரிக்காவில் இருந்து முகிழ்ந்த 'மாய யதார்த்த' கதை சொல்லல் முறைக்கான முதல் புதினம் எனச் சொல்கிறார்கள். இது 120 பக்கங்களுக்குள்ளே அடக்கி விடக்கூடிய ஓர் புனைவு. ஆனால் இவ்வளவு குறுகிய பக்கங்களில் கிட்டத்தட்ட அன்றைய கால மெக்ஸிக்கோவின் நிலவியல், அரசியல், கலாசாரம், புரட்சி எனப் பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பெட்ரோ பராமோ வன்முறையின் மூலம் ஒரு நிலச்சுவாந்தர் ஆகின்றார். அவர் காதல் செய்யும் பெண்களும் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல. அதனால் எண்ணற்ற பெண்களோடு மோகிக்கின்றார். அவர்களை எளிதில் கைவிட்டு தன் வாழ்க்கையில் நகர்ந்தபடியும் இருக்கின்றர்.

இந்த நாவலின் கதைசொல்லியான யுவானே ஒரு தற்செயலான நிகழ்வால் பெட்ரோவிற்கு பிறக்கின்றவர். 

 

 

தத்திற்கு எதிரான புரட்சியும், பிறகு அந்தப் புரட்சிக்கெதிராக தேவாலயங்களின் போராட்டமும், நிலப்பிரத்துவ இறுதிக்கட்டமும், அதிகாரம் எதுவுமற்ற பெண்களின் நிலையும் என பல்வேறு நிகழ்வுகளை பெட்ரோ பராமோ நமக்குக் காட்சிகளாக விரித்துக் காட்டுகின்றது.

இவ்வாறான ஒரு நேர்கோட்டுத் தன்மையில்லாத, நினைவுகளும், பேய்களும், கடந்தகாலமும், பாதாள உலகும், கல்லறைக்குள் இருப்பவர்களும் பேசும் ஒரு நாவலைக் காட்சித் திரையாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் 'பெட்ரோ பராமோ' திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக - மாய யதார்த்தமும் குலைந்துவிடாது- கொண்டு வந்திருக்கின்றனர். பெட்ரோ பராமோ ஒரு துன்பியல் முடிவை நோக்கிச் செல்கின்ற நாயகனின் கதை என ஓர் எளிமைக்காகச் சொல்லலாம்.

மார்க்வெஸ்ஸின் 'கொலாராக் காலத்தில் காதல்' நாவலில் வருகின்ற நாயகன் 80வயதுவரை தனது முதல் காதலுக்காகக் காத்திருப்பதைப் போல, 'பெட்ரோ பராமோ'வில் பெட்ரோ தனது பதின்மக் காதலியான சூசனாவுக்காய்க் காத்திருக்கின்றான். அவள் கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் பெட்ரோவிடம் திரும்புகின்றபோது அவள் இளமையில் பெட்ரோவை விட்டுச் சென்ற சூசனா அல்ல. அவள் வேறொருத்தியாக,கண்களுக்குத் தெரியாத உருவங்களோடு (இறந்துவிட்ட கணவனோடு) உரையாடும் ஒருத்தியாக இருக்கின்றாள்.

அவளின் வரவோடு பெட்ரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தனது காதலி சூசனா இறக்கும்போது அதை அசட்டை செய்து இந்த நகர் தன்பாட்டில் விழாக் கொண்டாட்டத்தில் திளைக்கின்றதா என பெட்ரோ கோபமுறுகின்றான். அத்தோடு அந்த ஊரைக் கைவிடத் தொடங்குகின்றான்.

பாழாய்ப்போன ஊரிலிருந்து மறைந்துவிட்ட அந்த ஊரவர்கள் யுவனின் தந்தையை யுவனுக்கு நினைவுபடுத்துவதற்காய் மீண்டும் அந்த நகரிலிருந்து எழுகின்றார்கள். இவர்கள் அசலான மனிதர்கள்தானா என ஒவ்வொருத்தரையும் பார்த்துயுவன் திகைத்து அவர்களைக் கரம்பற்ற விழைகின்றபோது அவர்கள் இறந்துவிட்ட மனிதர்கள் என்பதை அறிகின்றான்.

இறுதியில் கதைசொல்லியான யுவனே காலமாகிவிட்ட ஒருவனாக நமக்குத் தெரிகின்றான். அப்படியாயின் நாம் பெட்ரோ பராமோவில் இறந்துபோன ஆவிகளின் கதைகளைத்தானா கேட்டிருக்கின்றோம்? அவர்களோடுதான் இவ்வளவு நேரமும் உலாவிக் கொண்டிருந்தோமா எனத் திகைக்கவும் செய்கின்றோம்.


***************

 

(Nov 07, 2024) 

 

இலங்கையில் தமிழ்ப் பெளத்தம்

Tuesday, November 19, 2024


1.

லங்கையில் எப்போதிருந்து சிங்களப் பெளத்தம் இருந்ததோ அப்போதிருந்தே தமிழ்ப் பெளத்தமும் இருந்தது என்கின்ற ஆய்வுக்கட்டுரைகள் இப்போது நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெளத்தம் இந்தியாவில் அசோகர் காலத்தில் அவரின் மகனான மகிந்தரால் கொண்டு வரப்பட்டது என்று 'மகாவம்சம்' கூறுகின்றது. மகாவம்சத்தின்படி சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறியது.  அதன்பிறகு பெளத்தம் கி.மு 3ம் நூற்றாண்டில் மகிந்த தேரரால், அன்று இலங்கை மன்னனாக இருந்த தேவனம்பிய தீசன் காலத்தில் அறிமுகப்படுத்தப்படது.

 

இவ்வாறு
மகாவம்சத்தின் பிரகாரம், இலங்கையில் பெளத்தம் மகிந்ததேரரால் கி.மு 3ம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது என பொதுச்சூழலில் ஆழமாக விதைக்கப்பட்டாலும் அது அவ்வாறுதான் உண்மையில் நடந்ததா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். இன்று பலர் (சிங்கள ஆய்வாளர்கள் உட்பட) பெளத்தம் அசோகரின் காலத்துக்கு முன்னர், புத்தரின் காலத்திலேயே இலங்கைக்கு வந்துவிட்டதெனச் சொல்கின்றார்கள். புத்தரின் ஆளுமை திராவிட மொழிக்குடும்பமான தெலுங்கை (ஆந்திரப் பிரதேசம்) முதலில் அடைந்து நிறையப் பேர் புத்தரைப் பின் தொடரச் செய்கின்றார்கள். அவர்களினூடாக புத்தரும் அவரின் போதனைகளும் தமிழ்நாட்டுக்கு/தமிழுக்கு வந்தடைகின்றது. ஆந்திரா/தமிழ்நாட்டுக்கு வந்த பெளத்தமே இலங்கையை முதலில் வந்தடைந்திருக்கின்றது என்பதை இப்போது பல ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

 

இப்போது எப்படி தமிழ்ப் பெளத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இது தொடர்பாக வாசித்தபோது சிங்கள ஆய்வாளர்களின் எழுத்தில் உறுத்திய சில புள்ளிகளைப் பார்ப்போம். தமிழ்ப் பெளத்தம் குறித்து பேசுகின்ற பெரும்பாலான சிங்கள ஆய்வாளர்கள் தமிழர்கள் சோழப் படையெடுப்பால்தான் ஆதியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். அதே போல அவ்வாறு படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட எல்லாளன் தவிர்ந்த எல்லாத் தமிழ் அரசர்களும் பெளத்தத்தைத் தழுவியவர்கள் என்பதில் உறுதியாய் நிற்கின்றார்கள். ஏனெனில் இலங்கையானது அனுராதபுரத்தை ஆண்டு பாண்டுகாபாயமன்னனில் இருந்து பிரித்தானியர்கள் முற்றுமுழுதாக கைப்பற்றும் காலம்வரை, பெளத்தத்தை தழுவிக்கொண்ட மன்னர்களாலேயே ஆளப்பட்டிருக்கின்றது எனச் சொல்கின்றனர். அதாவது கி.மு 4ம் நூற்றாண்டிலே இலங்கை முற்றுமுழுதான பெளத்த (சிங்கள) அரசாக இருந்திருக்கின்றது என நிரூபிக்க கடுமையாக முயற்சிக்கின்றனர்.

 

அதன் நம்பகத்தன்மை/விதிவிலக்குகள் என்பவற்றை இப்போது ஒருபுறத்தில் வைத்துவிட்டு நாம் இப்போது சில கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம். சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் ஆரம்பிக்கின்றது என மகாவம்சம் சொல்கின்றது. அப்போது வந்த விஜயனின் மதம் என்னவாக இருந்தது. அதைப் பற்றி ஏன் மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள ஆய்வாளர்கள் எவரும் பேசுவதில்லை. அது மட்டுமின்றி விஜயன் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பெளத்தம் இலங்கைக்கு வருகின்றது என்று மகாவம்சம் கூறுகின்றது. அந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்தமக்கள் மதமற்ற நாத்திகர்களாவா இருந்தார்கள்? விஜயன் வருவதற்கு முன்னர் இயக்கர், நாகர் என்பவர்கள் இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாகர்களின் கல்வெட்டுக்கள் பல, தமிழ்ப் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் (தமிழ்நாட்டில் இருக்கும்) பிராமி எழுத்துக்களோடு ஒத்து வருகின்றது என்பதைப் பல சிங்கள் ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

 

இரண்டாவது விடயம், இலங்கையில் தமிழர்களின் வரவு சோழர்களின் படையெடுப்போடு தொடங்குகின்றது எனறு 'அடித்துக் கூறுகின்ற' எந்தச் சிங்கள ஆய்வாளரும், விஜயன் முதலில் குவேனியை மணந்து அவரைக் கைவிட்டு மணம்புரிந்த பாண்டிய இளவரசியையும், அவரோடு அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றியும் ஏன் பேசுவதில்லை. சிங்களவர்களின் வாதப்படி சொல்வதென்றால் கூட, சோழப் படையெடுப்பால் தமிழர்கள் முதலில் முதலில் இலங்கைக்கு வரவில்லை. சிங்கள இனம் இலங்கைக்கு வந்த கி.மு 5ம் நூற்றாண்டிலேயே நீங்களாகவே தமிழர்களை பாண்டிய இளவரசியை மணமுடிந்ததன் மூலம் இலங்கைக்கு விரும்பி அழைத்துவிட்டீர்கள் அது மறந்துவிட்டதா என நாம் கேட்கலாம். மேலும் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியது போல,  சிஙகள் இனம் (சிங்கள இனம் மட்டுமில்லை, எந்த இனமும், தமிழர் உட்பட) தூயதல்ல. எனவே இனப்பெருமை பேசுவதில் எவ்வித தர்க்கங்களும் இருக்கப்போவதில்லை எனத்தான் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது. 

 

 

2.

 

லங்கையில் பெளத்தம் பரவியபோது  சிங்களப் பெளத்தம் போல தமிழ்ப் பெளத்தமும் இருந்தது. அது பின்னாளில் அழிந்துபோனதும், பிரித்தானியர்கள் வரமுன்னரே தமிழர்கள் சைவத்தையும், சிங்களவர்கள் பெளத்தத்தையும் தமக்குரிய மதங்களாகக் கொண்டு பிரிவினைகளை உருவாக்கிவிட்டார்கள் என்பது தெளிவு.  பிறகான காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியுள்ள காலனித்துவவாதிகளான ஆங்கிலேயர்களால் கச்சிதமாக இன்னும் இவ்விரு இனங்களிடையே இன/மதத்தை முன்வைத்து வேற்றுமைகளை உருவாக்கவும்  முடிந்திருக்கின்றது.

 

இலங்கையில் இன்று தேரவாத பெளத்தமே அதிகம் ஆதிக்கம் செய்கின்றது. மகாசேன மன்னன் காலத்தில் அதில் பிரிவினை வந்து அபயகிரி விகாரைப் பிரிவு தோன்றுகின்றது. தமிழ்ப் பெளத்தம் தேரவாத பெளத்தமாகவும், மகாயான பெளத்தமாகவும் இரண்டு பிரிவுகளையும் தனக்குள் கொண்டிருந்திருக்கின்றது. தொடக்கத்தில் தமிழகத்தில் ஊடு பரவிய தமிழ்ப்பெளத்தம் (யாழ்ப்பாணம்,மன்னர், நெடுந்தீவு போன்றவை தமிழ்நாட்டுக்கு மிக அண்மையாக இருந்தமையால்) சிங்களப் பெளத்தத்தின் எந்தச் செல்வாக்குக்கும் உட்படாதிருக்கச் சாத்தியம் அதிகம் இருக்கின்றது. மகிந்தரின் வருகையால் பரவிய தேரவாத பெளத்தம் பின்னர் தமிழ்ப் பெளத்ததிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஒருவகையில் ஒரு நாட்டின் மன்னர் முழுமையாக மதம் மாறும்போது அந்த நாடும் முழுதாய் ஒரு தனி மதத்துக்குரிய நிலப்பரப்பாக மாறுவதும் இயல்பானதென எடுத்துக் கொள்ளலாம்.

 

அவ்வாறு பல்வேறு நாடுகளில் பல மன்னர்கள் மதம் மாறியிருக்கின்றனர். ஏன் டொச்சுக்காரர் வந்தபோது கொழும்பு மன்னனாகிய தர்ம்பாலா கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி தன் பெயரையும் அவரின் மனைவிகளையும் டொனா இஸபெல்லா, டொனா மார்கடீட்டா என மாற்றவில்லையா? இவ்வாறெல்லாம்,  எதிரியுடன் போரிட்டு வெல்ல முடியாதபோது மதம் மாறுகின்ற சிங்கள் மன்னர்களை, இன்னமும் தமக்குரியவர்களாகக் கொள்ளும் சிங்களப் பேரினவாதிகள், எல்லாள மன்னனை அதுவும் முழு இலங்கையை 44 ஆண்டுகள் சுமூகமாக எந்தப் பிளவுகளும் வராது ஆண்ட ஒருவனை, அந்நியராகவும், படையெடுப்பாளராகவுமே தமது நினைவுகளிலும், எழுத்துக்களிலும் முன்வைத்தபடி இருக்கின்றார்கள்  என்பதுதான் வியப்பானது. அத்துடன் எல்லாளனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட சேனன்/குத்திகன், ஏழு வணிகர்கள் (சில சிங்கள ஆய்வாளர்களின்படி ஏழு குண்டர்கள்) போன்ற மன்னர்கள் தமிழர்கள் என்றாலும், அவர்கள் பெளத்தத்தைத் தழுவாமல் ஒருபோதும் இலங்கையை ஆண்டிருக்க முடியாதென ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

 

ஒருவகையில் அதுவும் நல்லதுதான். சிங்களப் பெளத்தம் என்கின்ற ஒற்றை அதிகாரத்தை (Hegemony) இது தகர்க்க உதவும் என்பதால், ஆம் அவர்கள் பெளத்தர்கள்தான், ஆனால் அவர்கள் தழுவிய பெளத்தம் உங்களதல்ல, அது தமிழ்ப் பெளத்த மரபில் வந்ததெனச் சொல்லலாம். மற்றும்படி இப்படியான வம்புகளுக்கு எதிர் ம்புகளை நாம் பேசுவதைத் தவிர்த்து, ஆம், எங்களிடையே தமிழ்ப் பெளத்தம் இருந்தது ஆதாரபூர்வமானது என்று நிரூபிக்க நம்மிடம்  உள்ள ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் இன்று சிங்களவர்கள் தமது சிங்களப் பெளத்தம் என்று உரிமை கொள்கின்ற பெளத்தம் தமிழ்ப் பெளத்ததிற்கு உரியது. எனினும் அங்கு இருக்கும் சிறு விகாரைகள் போன்றவைகள் இலங்கையின் எந்தப் பகுதியோடும் தொடர்புடையது அல்ல. அவ்வாறு எந்தக் கட்டட அமைப்பும் இலங்கையில் இல்லை. ஆய்வாளர்களின் கூற்றுப்படி இது தெலுங்குப் பகுதியில் இருக்கும் கட்டட அமைப்பை நிகர்த்தது. அதேபோன்று வல்லிபுரக் கோயில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புப்பட்டயத்தில் செதுக்கப்பட்டவையும் தெலுங்குப் பகுதியைச் சேர்ந்தது. அது யாழ்ப்பாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எந்த பெளத்தக் கல்வெட்டு எழுத்துக்களோடும் தொடர்புபடாதவை. வல்லிபுரத்தில் அகழ்ந்தெடுக்கப்ப்ட்ட அழகான புத்தர் சிலையை அன்றைய பிரித்தானிய அரசு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைத்தும் இருந்தது.

 

ஒருவகையில் வல்லிபுரம் ஆழ்வார் கோயில், தமிழ்ப்பெளத்த ஆலயத்திலிருந்து பின்னாளில் எழுந்திருக்கவே சாத்தியம் அதிகமிருக்கின்றது. இன்றைக்கு ஆதாரபூர்வமாக யாழில் ஒன்பதுக்கு மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்ததெனனவும், அவற்றில் நான்கு பின்னர் அய்யனார் கோயில்களாக மாற்றப்பட்டன எனவும் சொல்கின்றனர்.

 

நான் அறிந்து யாழில் போரின் நிமித்தம் ஒவ்வோரு ஊர் ஊராக அகதியாக அலைந்தபோது சுன்னாகத்தில் (அல்லது மல்லாகத்தில்) ஒரு அய்யனார் கோயில் வயலில் நடுவில் இருந்தமை ஞாபகத்திலுண்டு. சுன்னாகம்/மல்லாகம்/தெல்லிப்பளை போன்ற இடங்களில் தமிழ்ப் பெளத்தம் ஒருகாலத்தில் தளைத்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறே நெடுந்தீவில் வெடியரசன் கோட்டைக்கு அருகிலும் பெளத்த மடாலயம் இருந்திருக்கின்றது. அதற்கான அடித்தளம் நமக்கு அது ஒரு பெளத்த ஆலயம் என்பதை எளிதாகக் காட்டி விடுகின்றது. ஒருவகையில் நாகதீபம்/மணிபல்லவம் என்று பழங்காலத்தில் குறிப்பிடும் தீவு நயினாதீவு என்று தமிழர்க்கும்/சிங்களவர்க்கும் பொதுவானநம்பிக்கையாகஇருக்கின்றது. ஆனால் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் அப்படி நாகதீபமாய் இருக்க நெடுந்தீவே பெரும்பாலும் சாத்தியமென பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தோடு மிக அருகில் மற்ற இடங்களைவிட மிக அருகில் இருப்பது நெடுந்தீவேயாகும். எனவே அவ்வாறிருக்கச் சாத்தியமும் அதிகம்.

 

இன்று இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேச கஷ்டப்படும் சிங்களவர்கள் புத்தகோஷா, புத்த தேரோ, தர்ம்பால வஜ்ஜிரபோதி உள்ளிட்ட பல தமிழ்ப் பெளத்த அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து வந்து இலங்கையில் தங்கி கற்பித்ததை மறந்து விடுகின்றார்கள். ஒருவகையில் இன்று தேரவாத பெளத்தம் இலங்கையில் இந்தளவுக்கு வேரூன்றி நிற்பதற்கு தமிழ்ப் பெளத்தரான புத்தகோஷா இலங்கையில் தங்கி நின்று பாளியில் இருந்த பிரதிகளை சிங்கள மொழிக்கு எழுதிக் கொடுத்ததே முக்கிய காரணமாகும். அதுவே 'விசுத்திமகா' (பரிநிர்வாணமடைவதற்கான வழி) என்ற ஒரு முக்கிய பிரதியாக சிங்களவரிடம் இப்போதும் இருக்கின்றது. அத்தோடு எப்போதெல்லாம் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்று குழப்பம் வந்து விகாரைகளை மன்னர்கள் ஒடுக்குகின்றார்களோ, அப்போதெல்லாம் பெளத்த பிக்குகள் தமிழ்நாட்டில் இருந்த புத்த மடலாயங்களிலேயே தஞ்சம் புகுத்திருக்கின்றார்கள். சிலர் அவ்வாறு தஞ்சமடைந்த காலங்களில் சிங்களத்தில் பெளத்த பிரதிகளைக் கூட எழுதியிருக்கின்றார்கள்.

 

3.

ப்போது மீண்டும் தமிழ்ப் பெளத்தத்திற்கு வருவோம். ஏன் இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் அழிந்தது என்பதற்கு இரண்டு காரணிகளை முக்கியமாகச் சொல்கின்றார்கள். அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னர்கள் தமது அரசியல் அதிகாரத்தை யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களில் பிரயோகிக்க முயன்றமை ஒன்று. மற்றது சிங்கள பெளத்தர்கள் தமிழ்ப் பெளத்தர்களோடு தொடர்பாடலைத் துண்டித்துக் கொண்டமை. அத்தோடு தமிழ்நாட்டில் எப்படி பக்தி இயக்கங்கள் பெளத்தத்தையும், சமணத்தையும் விழுங்கிக் கொண்டனவோ அவ்வாறே அதன் பாதிப்பு தமிழர்கள் இருந்த வடக்கு கிழக்குகளையும் சென்றடைந்தன என்கின்றார்கள். இன்னொருவகையில் இப்படிப் பார்க்கலாம். தமிழ்ப் பெளத்தத்திற்கு பெருமளவில் உதவிகள் சிங்கள மன்னர்களிடம் இருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. ஆகவே அது இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசர்களையும், தமிழ்நாட்டு மன்னர்களையும், புரவலர்களையும் நம்பியிருந்திருக்கலாம். தமிழ்நாட்டிலே பெளத்தம் தன்னிருப்பை அடையாளமற்று கைவிட்டபோது இலங்கையிலும் தமிழ்ப் பெளத்தம் மறையத்தொடங்கி சைவத்தோடு தன்னிருப்பைக் கரைத்திருக்கலாம்.

 

ஆகவே எப்படி விஜயன் இரண்டாவது மனைவியாக பாண்டிய அரசியை மணந்ததன் முலம் தமிழர்களின் வரவு இலங்கையில் தொடங்கிவிட்டதெனச் சொல்ல சிங்களவர்களின் மகாவம்சமே நமக்கு ஆதாரம் எடுத்துத் தருவதுபோல, சிங்களப் பெளத்தம் மட்டுமில்லை தமிழ்ப் பெளத்தமும் சமாந்திரமாக இலங்கையில் தொடங்கியிருக்கின்றது என்று சொல்வதற்கும் நமக்குப் பல ஆதாரங்கள்  இருக்கின்றன. இதன் மூலம் சிங்களவரோ/தமிழரோ தனிப்பட்டு உரிமைகொள்ள இலங்கை என்கின்றநாடோ, அரச மதமாக சிங்களப் பெளத்தமோ ஒருபோதும் அமைய முடியாது.  இலங்கையில் பிறந்தநம் அனைவருக்கும் இலங்கை என்கின்றநாட்டிலும், இலங்கையின் இறையாண்மையின் முக்கிய பகுதியாககட்டமைக்கப்பட்டிருக்கும் பெளத்தமதத்திலும், சமபங்கிருக்கின்றது என்று உறுதியாக உரையாடல்களை நிகழ்த்த முடியும்.

 

*************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை)