'கடலோடிகள்' என்கின்ற இந்தத் தொகுப்பில் நான்கு எழுத்தாளர்களின் பத்துக் கதைகளை எழுத்துக்கினியவனும், அனுஜா பிரகாஷூம் தமிழாக்கியிருக்கின்றனர். அழகு சுப்பிரமணியத்தினதும் (3), து.தம்பிமுத்துவினதும் (3) கதைகள் பற்றியே இங்கே எழுத விரும்புகின்றேன். இரண்டு பேருமே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்று, அங்கே இலக்கியத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்தவர்களாவர்.

அழகு சுப்பிரமணியம் பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்து வாசத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டவர். தம்பிமுத்துவோ இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கிடையே அலைபாய்ந்து திரிந்தவர்.
 



இவர்கள் இருவருக்கும் எப்படி எழுத்துத் திறமை இருந்தவோ, அவ்வாறே குடிபோதையும் அவர்கள் இருவரையும் கடைசிவரை விடாது துரத்தியிருக்கின்றது. அதனால் இன்னமும் ஒளிர்விட்டு ஒளிர்ந்திருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இடைநடுவில் வால்வெள்ளியாக விரைவில் ஒளிர்ந்து இருட்டாகி விடைபெற்றுக் கொண்டவர்களோ என்ற எண்ணம் எனக்கிருக்கின்றது.

இவர்களின் இருவரினதும் கதைகளை வாசிக்கும்போது எப்படி இவர்கள் அன்றைய கால யாழ்ப்பாணத்தை ஆங்கிலத்தில் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்ற வியப்பே ஏற்படும். ஈழத்துச் சூழலில் மண் மணம் கவிழும் கதைகள் தமிழில் எழுதப்படும் காலம் அல்லது அதற்கு முன்னரே மிக நுட்பமாக தமிழ் கலாசாரத்துக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இன்றைக்கு கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவர்களின் கதைகளை வாசிக்கும்போது நாம் அன்றைய யாழ்ச்சூழலில் உலாவிக் கொண்டிருப்பது போலத் தெரிகின்றது. தம்பிமுத்துவும் அழகு சுப்பிரமணியமும் எப்படி மேற்தட்டு மக்களின் வாழ்வியலை எள்ளலுடன் கேலி செய்கின்றார்களோ, அதேயளவிற்கு விளிம்புநிலை மனிதர்களைப் பரிவுடன் அணுகின்றார்கள் என்பதையும் இக்கதைகளினூடு நாம் அவதானிக்க முடியும்.

உதாரணத்திற்கு அழகுவின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையையும், தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையையும் வாசிப்பவர்கள் அதை உணர்ந்து கொள்ள முடியும். கூலிக்கு அழுபவர்கள் கதையில், ஆதிக்கசாதி தலைவர் வீட்டில் ஒரு சாவு விழுந்துவிட  மரணவீட்டிற்கு கூலிக்கு அழுபவர்களை அழைத்து வரச் சொல்லப்படுகின்றது. ஆனால் அதேசமயம் இந்த விளிம்புநிலை மனிதர்களின் வீட்டிலும் சாவீடு நடக்கின்றது. அவர்கள் தமது சொந்த சோகத்தை ஆற்றமுடியாது, ஆதிக்கசாதி சா வீட்டுக்கு கூலிக்குப் பாட அழைத்து வரப்படுகின்றார்கள். அப்போது இந்தச் சா வீடுகளில் நிகழும் சம்பவங்களை அழகு சுப்பிரமணியம் அருமையாக எழுதிச் செல்கின்றார்.

அதுபோல தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையில் இப்படி மரமேறியான வேலுவின் கதை சொல்லப்படுகின்றது. வேலு, அச்சுவேலிக்கு கொழும்பிலிருந்து விடுமுறைக்குச் செல்லும் கதைசொல்லிக்கும், அவரின் சகோதரருக்கும் தென்னைமரமேறி இளநீர் வெட்டிக் கொடுப்பவர். அவர்களின் தாத்தாவுக்கு தென்னையிலிருந்து கள் இறக்குபவர். இத்தனைக்கும் வேலு வசதியில் குறைந்தவரல்ல. அவருக்கு நிறையத் தென்னைகளுடன் சொந்தமாகத் தோப்பும் இருக்கின்றன. ஆனால் கதைசொல்லியின் தாத்தா மீதிருக்கும் அன்பால் இவர்களின் தென்னைகளிலும் ஏறி இறங்குகின்றவர்.

இந்தக் கதையின் தம்பிமுத்து, மரமேறி வேலுவுக்கும், இவர்களின் பூட்டனாருக்கு நல்ல உறவு இருந்தாலும், சாதியின் நுட்பமான தடுப்புச் சுவர்கள் பற்றியும் பேசுகின்றார்.  அதுவேதான் இந்தக்கதையை அசல்தன்மையுடன் வாசகர் முன்னால் வைக்கின்றது எனச் சொல்வேன்.

எப்படி அழகு சுப்பிரமணியத்தின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையில் செத்தவீட்டில் அழும் நிலைமை விபரிக்கப்படுகின்றதோ, இந்த 'மரமேறி' கதையிலும் ஒரு மரணம் நடந்துவிட இப்படி கூலிக்கு அழுபவர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஒருவகையில் அழகும், தம்பிமுத்துவும் மத்தியதர உயர்வர்க்க வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்களாலும் சமூகத்தில் அடிநிலையில் இருந்த மக்களை எழுத்துக்களால் நெருங்க முடிந்திருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.

*

இந்த 'கடலோடிகள்' தொகுப்பில் தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்', 'மரமேறி', 'பூட்டனாரும் பேய்பூதங்களும்' ஆகிய மூன்று கதைகளை எழுத்துக்கினியனும், அனுஜாவும் தமிழாக்கியிருக்கின்றனர்.  தம்பிமுத்து தன்னையொரு கவிஞராகவே வாழும் காலத்தில் முன்வைத்தவர். அவர் இங்கிலாந்தில் (அமெரிக்காவிலும்) தொடர்ந்து நடத்திய Poetry London (/New York) சிற்றிதழே கவிதைகளுக்கென்றே நடத்தியவர். அவ்வாறான தம்பிமுத்து அமெரிக்காவில் வாழ்ந்த காலத்திலே கதைகளை எழுதத் தொடங்கியவர். வெளியாகிய கதைகள் ஐந்துதான் என்கின்றனர். சிலவேளைகளில் அதற்கு மேலும் எழுதி சிலது வெளிவராதிருக்கக்கூடும்.

இந்தக் கதைகளை தமிழாக்கிய எழுத்துக்கினியனோடு தனிப்பட்ட பேச்சில், அவர் தம்பிமுத்துவின் ஒரேயொரு மகளான சகுந்தலாவோடு தொடர்பில் இருப்பதை அறிந்துகொண்டேன். எனவே தம்பிமுத்துவின் புதிய கதைகளை எழுத்துக்கினியன் கண்டெடுத்து இனி வரும் காலங்களில் நாம் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் வரக்கூடும் என நம்புகின்றேன்.

தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்' நியூ யோர்க்கர் இதழில் வெளிவந்திருந்தது. இவ்வளவு காலமாகியும் இன்னும் வேறெந்த தமிழ் எழுத்தாளரின் கதை நியூ யோர்க்கரில் வெளியாகியதாக ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவுமில்லை என்கின்றபோது தம்பிமுத்துவின் கதை கடந்த நூற்றாண்டின் 50களில் வெளிவந்திருக்கின்றது என்பதையிட்டு ஈழத்தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

ஒருவகையில் பார்த்தால் தம்பிமுத்து கதைகளை எழுதப்போகின்றபோது அவர் இளமைக்காலத்தில் விடுமுறையில் கழித்த யாழ்ப்பாணத்தை (அச்சுவேலி) பின்னணியாகக் கொண்டுதான் கதை எழுதியிருக்கின்றார் என்பது புரிகின்றது. இந்த மூன்று கதைகளிலும் அச்சுவேலி எங்கோ ஓரிடத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுகின்றது. ஆக ஒரு மனிதனின் சிறுவயது/பதின்மவயது ஒருவரின் படைப்பில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு தம்பிமுத்துவின் கதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

*

அழகு சுப்பிரமணியம் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கின்றார். அவரின் ஒரு குறிப்பிட்ட சிறுகதைகள் 'நீதிபதியின் மகன்' என்ற பெயரில் ராஜ சிறிகாந்தனால் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. அப்படி தமிழாக்கப்படாத மூன்று கதைகளை எழுத்துக்கினியவன் தமிழாக்கியிருக்கின்றார்.

அழகுவின் 'பெரிய பிள்ளை (The big Girl) எழுதிய காலத்திலே கவனத்திற்குள்ளான கதை. அதே பெயரிலேதான் அழகு தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் இருந்தார். ஒருவகையில் பார்த்தால், இந்தத் தொகுப்பில் இருக்கும் 'பெரிய பிள்ளை'யும், 'பெரிய கடைச் சந்தி'யும் ஒன்று மற்றதன் தொடர்ச்சி எனச் சொல்லலாம்.

'பெரிய பிள்ளை' ஒரு செல்வாக்கான யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர் தனது மகளை படிப்பதற்கான யாழ்நகரிலுள்ள புளியடி (வேம்படி) பாடசாலைக்கு அனுப்புவதுதான் கதை. இந்தக் கதையில் திருமதி இராமசாமி தனது மகளை வேம்படி பாடசாலை மாட்டுவண்டிலில் கொண்டுபோய் விடுதியில் விட்டு விட்டு திரும்புவதுதான் கதை. இரண்டாவது கதையான 'பெரிய கடைச் சந்தியில்' யாழ் நகருக்கு திருமதி இராமசாமி தனது நகருக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்ற பயணத்தைப் பற்றியது. திருமதி இராமசாமிக்கு அதுவரை காலமும் தன்னோடு வளர்ந்த மகள் பார்வதியை புளியடி பாடசாலை விடுதியில் தனியே விட்டுவிட்டு வந்தது கவலையைக் கொடுக்கின்றது. வழிமுழுதும் வண்டிலுக்குள் இருந்து அழுகின்றார். வண்டியோட்டியோ 'இப்படியே அழுதபடி வந்தால், பெரியகடைச் சந்தியில் இருக்கும் வம்பன்கள் வேறுவிதமாகக் கதைப்பார்கள்  ஆகவே அழாமல் இருங்கள்' எனச் சொல்கின்றார்.

இந்தக் கதையில் திருமதி இராமசாமியின் பயணத்தினூடாக அன்றைய யாழ்ப்பாணத்தின் வெளிச்சூழலை அழகு அற்புதமாகக் காட்டுகின்றார். இவ்வளவு நுணுக்கமாக எப்படி ஆங்கிலத்தில் அழகுவால் எழுத முடிகின்றது என்று வாசிப்பவர் வியக்காமல் இருக்க முடியாது.

மூன்றாவது கதையான 'மதமாற்றத்தில்'தான் அழகு என்கின்ற படைப்பாளின் ஆளுமை விகசிப்பதை நாம் காண்கின்றோம். வேலைக்காக மதம் மாறிய ஒருவரால் கடைசிவரை 'சிவன் சிவன்' என்று இந்துக்கடவுளளை உச்சரிப்பதை மாற்றமுடியாது. அந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த ஆசிரியரின் மீது பொறாமை கொள்ளும் சக ஆசிரியர் அவரின் பதவியுயர்வை தடுக்க நினைக்கின்றார். இறுதியில் மதம் மாறி சிவன் சிவன் என்று உச்சரிக்கின்ற அந்த ஒடுக்கப்பட்ட ஆசிரியருக்கு அவரது பதவி உயர்வு கிடைக்கின்றதா இல்லையா என்பதுதான் கதை. இந்தக் கதையை தீவிரமாகவும், அதேவேளை நகைச்சுவையுணர்வு பொங்க அழகு எழுதியிருப்பதுதான் சிலாகிக்கத்தக்கது.

*

இவர்கள் இருவரின் கதைகளோடு வி.வி.கணேஷானந்தனினதும், வஜ்ர சந்திரசேகரினதும் தலா இரண்டு கதைகள் இத்தொகுப்பில் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அதை வாசிக்கட்டுமென அவர்களின் கதைகளைப் பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கிறேன்.

சமகால எழுத்துக்களில் ஒருவித அலுப்பு வந்து நான் பழைய ஈழத்து எழுத்தாளுமைகளைத் தேடத் தொடங்கியபோது அழகுவும் தம்பிமுத்துவும் என்னை அவ்வளவு பாதிப்புச் செய்தனர். அவர்களது படைப்புக்கள் மட்டுமில்லை, எந்தப் பிரபல்யம்/புகழ் எது குறித்தும் கவலைப்படாது தாம் நம்பிய கலையில் ஊன்றித் திளைத்தது என்னை அவர்களை மேலும் மேலும் அறியவேண்டும் என்கின்ற வேட்கையை ஏற்படுத்தியது.

அதே சமகாலத்தில் தமிழுக்கு கிடைத்த பேறாய் எழுத்துக்கினியவனும், அனுஜாவும் இவர்கள் இருவரின் கதைகளையும் தமிழாக்கம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட கதைகளைப் போல இவர்களின் மொழிபெயர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறையாக அல்ல, ஆனால் விரும்பினால் கவனிக்கலாம் என்று தமிழாக்கம் குறித்து ஒரு விடயத்தை அவர்களிடம் சொல்வேன். இந்தளவுக்கு யாழ் வட்டாரமொழியில் கதாபாத்திரங்கள் பேசுவதை மாற்றத் தேவையில்லை என்று சொல்வேன். கொஞ்சம் நியமத்தமிழின் பக்கம் சென்று பார்க்கும்போது இன்னும் இறுக்கமான கதைகளாக தமிழுக்கு வரும்போது இவர்களின் இருவரின் கதைகள் இருக்கும் போலத் தோன்றியது. விரும்பியனால் தமிழாக்கிய இருவரும் இந்தப் புள்ளி குறித்து சற்று யோசித்துப் பார்க்கலாம்.

அழகு சுப்பிரமணியன் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர். 'நீதிபதியின் மகன்' தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. எழுத்துக்கினியன்/அனுஜா இதுவரை தமிழாக்காத அழகுவின் கதைகளை தமிழாக்கி ஒரு தனித் தொகுப்பாக வெளியிடலாம். அதுபோல தம்பிமுத்துவின் கதைகள் உள்ளிட்ட பொயட்ரி இலண்டனில் அவர் எழுதிய அற்புதமான ஆசிரிய தலையங்கள், விமர்சனங்கள் என்பவற்றைத் தொகுத்து தம்பிமுத்துவுக்கெனவும் ஒரு தொகுப்பு வெளியிடலாம்.

தமிழிக்கு ஒரு நல்நிகழ்வாய் எழுத்துக்கினியன்/அனுஜா போன்றவர்கள் இரண்டு மொழிகளிலும் தமிழாக்கும் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களைப் போன்றவர்களின் தமிழாக்கங்களை/அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பை மதிக்கின்றவர்களாக நம் சமூகம் இருந்தால் இன்னும் நிறைய வளங்களைத் தமிழுக்கு அவர்கள் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நினைக்கின்றேன்.

***