விபாஸனா என்பது புத்தரால் அவரின் காலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் எப்படி புத்தம் இந்தியாவில் அதன் அடிச்சுவடுகள் இல்லாது அழிந்துபோனதோ, அவ்வாறே இந்த தியான முறையும் காணாமல் போயிருந்தது. புத்தரின் போதனைகள் அசல் வடிவத்தில் மியான்மார் (பர்மா), இலங்கை போன்ற இடங்களில் இருந்தாலும் விபாஸனா ஒரு 'மறைந்துபோன பிரதி'யாக காலத்தில் உறைந்து கிடந்திருக்கின்றது.
அதிஷ்டவசமாக மியான்மாரில் இந்தியாவில் இருந்து சென்று புத்தமும் விபாஸனாவும் அதன் அசல்தன்மையோடு ஒரு சிறுவட்டத்தில் தொடர்ச்சியாக காலம் காலமாக எடுத்து வரப்பட்டிருக்கின்றது. அப்படி விபாஸனா கற்பிக்க சிறுவட்டத்தில் இருந்த ஆசிரியரிடமிருந்து எமது விபாஸனா ஆசிரியர் கோயிங்கா தியானத்தைப் பழகியிருக்கின்றார்.
ஒவ்வொரு நாள் மாலையிலும் (ஏற்கனவே இப்படி 10 நாள் விபாஸனா வகுப்புக்களில் பதிவு செய்யப்பட்ட) கோயிங்காவின் தம்ம போதனைகள் நடக்கும். ஒருவகையில் இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள் என்பதற்கான விளக்கமும், நாளைய வகுப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியும் அதிகம் கோயிங்கா உரையாற்றுவார்.
திருப்பத் திரும்ப அவர் நமக்கு நினைவுபடுத்துவது, அனுபவ நிலையில் இந்த தியானத்தை உற்றுக் கவனியுங்கள். இது ஒரு 'அறிவுஜீவு கொண்டாட்டம்' இல்லை. மேலும் இந்த விபாஸனாவை ஒரு மதத்துக்குள்ளோ, ஒரு கல்ட்டுக்குள்ளோ அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால் அது ஒருபோதும் அசலான விபாஸனா இல்லை.
மனிதர்கள் துன்பத்துக்குள் உழல்வது எல்லோருக்கும் பொதுவான என்றால், அந்தத் துன்பத்தை விளங்கி வெளியே வர முயற்சிப்பதும் 'யூனிவர்சலாக' இருக்க முடியுமே தவிர அதையொரு வட்டத்துக்குள் அடக்கிச் சொல்லிக் கொடுத்தால், நீங்கள் ஒருபோதும் உங்கள் துயரங்களிலிருந்து விடுபடமுடியாது மட்டுமில்லை, இந்த விபாஸனாவால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்று தொடர்ச்சியாக தனது தம்ம உரைகளில் கோயிங்கா சொல்லிக் கொண்டே இருந்தார்.
*
விபாஸனா தியானம் பழகுவதற்கு சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவர் பரிநிர்வாணமடைய இப்படிப்பட்ட நிபந்தனைகள் தேவையா என்றால், அப்படி ஒரு கட்டாயமும் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்கள் தமது பழக்கப்பட்ட வட்டங்களில் (habit patterns) இருந்து வெளியேறி விபாஸனாவுக்குள் நுழைவதற்கு சில முன்நிபந்தனைகள் அவசியம் என்று கோயிங்கா வலியுறுத்துகின்றார்.
அதில் முதலாவது புத்தர் கூறிய பஞ்ச சீலம்: கொல்லாமை, திருடாமை பிறரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமை, பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை போன்றவையாகும்.
நீங்கள் நுட்பமாக கவனித்தீர்கள் என்றால், அதற்காக சூழலைத்தான் எங்கள் அலைபேசிகளை அணைக்க வைத்து, எதையும் பேசாத மெளனத்துக்குள் அமிழ்த்தி, எமக்குரிய உணவைத் தந்து எம்மை விபாஸனாத் தியானத்துக்குள் இங்கே அழைத்துச் செல்கின்றார்கள் என்பது புரியும்.
ஒருவர் இந்த விபாஸனா நாட்களில் எதையும் பேசாமல் இருக்கும்போது, எப்படி பொய் பேச முடியும்? உங்களுக்கான உணவு வழங்கப்படும்போது நீங்கள் எப்படி கொல்லப் போகின்றீர்கள். உங்களுக்கான தனித்த அறைக்குள்ளும், பொது தியான மண்டபத்திலும் இருக்கும்போது எப்படி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடமுடியும்?
மேலும் எமக்கு தனிப்பட்ட அறைகள் தரப்பட்டாலும் அவை எதற்கும் திறப்புக்கள் இருப்பதில்லை. எப்போதும் எவரும் திறந்து நுழையமுடியும். அது நாம் பிறரின் பொருட்களை திருட சந்தர்ப்பம் இருந்தாலும் திருடாதிருப்பதற்கு நம்மை நெறிப்படுத்துவது.
ஆக இவ்வாறாக சீலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றது. சீலத்தின் பின் சமாதி, அதன் தொடர்ச்சியில் பஞ்ஞ என்கின்ற விபாஸனாவின் ஆழ்நிலை சொல்லித் தரப்படுகின்றது.
கோயிங்காவின் சொற்களின்படி இந்த சீல, சமாதி எல்லாம் புத்தரின் காலத்துக்கு முன்னரே இருந்தன. புத்தரின் அசல் கண்டுபிடிப்பு என்றால் அது பஞ்ஞ மட்டுமே.
அதாவது பற்றறுத்தல் என்கின்ற ஆழ்நிலைக்குப் போவது அல்லது 'சம்ஹாரா' எனப்படுவதை அடிவேரிலிருந்து அகற்றுவது எனச் சொல்லலாம்.
இதை புத்தர் பிற உயிர்களுக்கு அளிக்கப்படாத மனிதவுடல் என்கின்ற அரிய சாதனத்தின் மூலம் கற்றுக்கொள்ளச் சொல்கின்றார் ((within frame work of body). அதாவது உடலின் உணர்வுகள் என்கின்ற தளத்தில் வைத்து நமது புதிய சம்ஹாரக்களையும், அடியில் புதையுண்டு கிடக்கும் சம்ஹாரக்களையும் முற்றாக இல்லாதொழிப்பது.
அனுபவத்தளத்தில் இவற்றைப் புரிந்து கொள்ளுதல் முக்கியமே தவிர இப்படி அறிவுத்தளத்தில் விளங்கிக் கொண்டாலே நாம் விபாஸாவில் இருந்து வெளியேறிவிடுவோம் என்பதையும் கோயிங்காவும் எச்சரிக்கின்றார். ஆகவே இந்த விபாஸனா தியான விளக்கங்களில் இருந்து இப்போதைக்கு நாமும் விலகி விடுவோம்.
*
மதியம் பன்னிரண்டுக்குள் சாப்பிட்டதன் பின், என்னைப் போன்ற புதியவர்களுக்கு இரக்கப்பட்டுத்தான் என்னவோ மாலையில் தேநீரும், பழமும் இங்கே தந்தார்கள். நீங்கள் விபாஸானாவுக்கு இரண்டாவது முறை வந்தால் அதுவும் இல்லை.
எனது கடும்பயமாக இருந்த, இந்த மதியத்துக்குப் பிறகு எப்படி இரவு உணவில்லாது மட்டுமில்லை, இடையிடையில் கொறிக்கவும் எதுவும் இல்லாது எப்படி இந்த நாட்களில் இருப்பேன் என்பதை மிக எளிதில் இதன் பின்னரான நாட்களில் கடந்துவிட்டேன்.
அதற்கேற்றமாதிரி விபாஸனா நிகழ்ச்சிநிரல் இரவு 9 மணி வரை இருந்ததாலோ அல்லது வேறு எதனாலாவோ என்னால் பசியைப் பெரிதாக உணர முடியவில்லை. தொடக்க நாட்களில் பின்னர் பசிக்குமே என்கின்ற பயத்தில் காலை, மதிய உணவுகளை அதிகம் எடுத்த நானே, பின் வந்த நாட்களில் கிட்டத்தட்ட அரைவாசி உணவு எடுக்குமளவுக்கு வந்திருந்தேன்.
மேலும் இந்த பத்து நாட்களில் உடலுக்கு பெரிதாக வேலையில்லை. மனது மட்டும் தீவிரமாக இயங்கியதால், இந்த உணவே போதும் போதுமென்ற அளவுக்கு திருப்தியாக இருந்தது. அதேவேளை குறைந்த தெரிவுகளாயினும் உணவை அப்படி இரசித்து உருசித்துச் சாப்பிட முடிந்தது. நாம் சாதாரண வாழ்வில் மூன்று நான்கு கறிகளுடன் சாப்பிடுவது என்பது ஒருவகை 'ஆடம்பரம் (luxury) போலவும் தோன்றச் செய்தது. இப்படியான எளிய உணவுடனும் இனி வாழ முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்க்க இந்த விபாஸனா நாட்கள் கற்றுத் தந்திருந்தன.
***


0 comments:
Post a Comment