நேற்று ஐரோப்பாவிலிருக்கும் நண்பரொருவருடன்
பேசிக்கொண்டிருந்தபோது பெத்ரோ அல்மதோவரின் புதிய படமான 'Bitter Christmas'ஐ
பார்த்ததை நண்பர் சொன்னார். ஐரோப்பாவில் வெளியிடப்பட்டாலும், அல்மதோவரின்
இந்தப் படம் இன்னும் அமெரிக்காப் பக்கம் வெளியிடப்படவில்லை. எங்களுக்கும்
வரும் மாதம் நிகழும் திரைப்படவிழாவில் (TIFF) திரையிடப்படும்போதுதான்
பார்க்கும் சந்தர்ப்பம் வரும்.
Bitter Christmas ஒரு
படைப்பாளிக்கு வயதாகும்போது அவரது படைப்புத் திறமை முடங்கிப் போவதன்
அவதியைப் பற்றிப் பேசுகின்றதாக அமைந்திருக்கின்றது என்று நண்பர் கதையின்
தன்மையை மேலோட்டமாகச் சொன்னார். எனக்கு அல்மதோவர் பிடித்த நெறியாளர்
என்றாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த 'The Room Next Door'
இன்னமும் பார்க்காதது நினைவுக்கு வந்தது.

நண்பர்
அதையும் பார்த்துவிட்டார். அது கவித்துவம் நிறைந்த திரைப்படம் கட்டாயம்
பார்க்க வேண்டும் என்றார். நான் அதை நண்பருடன் உரையாடியபின் பார்க்கத்
தொடங்கியிருந்தேன் என்றாலும் அது புற்றுநோயின் பின்னணியில் இரண்டு
பெண்களுக்கிடையிலான உறவைப் பற்றிப் பேசுவதால் என்னால் தொடர்ந்து பார்க்க
முடியாத ஒரு அவதியில் அரைவாசியோடு நிறுத்திவிட்டிருந்தேன்.
நண்பர் இப்படி அவர் பார்த்த திரைப்படங்களைச் சொன்னபோது, நீங்கள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு ஞாபகத்தில் ஏதோ ஓரிடத்தில் நிற்க, அதைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கும், இப்போதெல்லாம் இப்படியான அரிய விடயங்களைப் பகிரும் இடமாக சமூக வலைத்தளங்கள் இல்லாமல் போய்க்கொண்டிருப்பது கவலையானது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஒரு நல்ல புத்தகத்தையோ/திரைப்படத்தையோ/இசையையோ தேடிப் பார்த்தல் மற்றவர்கள் பகிரும்போதே அது சாத்தியமாகின்றது. அது இல்லாதபோது ஒரு குறிப்பிட்ட சிறுவட்டத்துக்குள்ளே அன்றன்றைக்கு நடக்கும் 'கிளர்ச்சியூட்டம் சம்பவங்களை' மட்டும் பேசுவதுடன்/அறிவதுடன் நமது நாளாந்தம் (நண்பர் அதை அன்றாடம் என்று உபயோகிப்பார்) முடிந்துவிடுகின்றது என்றேன் .
*
இப்படி அல்மதோவரின் திரைப்படத்தைப் பார்த்து எனக்குள் வந்த பதற்றத்தை, அமெரிக்காவின் கவிஞரனா மேரி ஒலிவரின் (Mary Oliver: Saved by the Beauty of the World ) ஆவணப்படத்தைப் பார்த்து இயல்புநிலைக்குக் கொண்டுவந்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு பதிவைப் பார்த்தே இப்படி ஓர் ஆவணப்படம் மேரி பற்றி வந்திருப்பதை அறிந்திருந்தேன். இயற்கையோடு வாழ்ந்து இயற்கையை நுட்பமாக இரசித்து அதை தன் எளிமையான வார்த்தைகளுக்குள் மேரி கொண்டு வந்திருந்தாலும் நாம் அவரின் கவிதைகளை வாசிப்பதுனூடாக ஒரு மீப்பெரும் உலகை நமக்குள் சிருஷ்டிக்க முடியும்.
மேரி தொடர்ச்சியாக காடுகளுக்குள் போய்க்
கொண்டிருந்தவர். அதுபோல தினமும் எழுதுவதை ஒரு தீவிர 'சடங்காக'
வைத்திருந்தவர் அவரது பதின்ம வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு வாரமாக
காட்டுக்குள் வாழ்ந்தும் மேரி இருந்திருக்கின்றார். அவர் இயற்கையையும்
உயிரினங்களையும் இந்தளவு தனது படைப்புக்களில் கொண்டுவந்ததைப் போல வேறு
சிலரே இருப்பார்கள். மேரி ஓரிடத்தில் இன்று நாம் இயற்கையிடம் இருந்து
அந்நியமாகும்போது இந்த வாழ்க்கை இரசிக்கும் அழகிலிருந்தும் விலகிப்
போகின்றோம் என்கின்றார். ஒருவர் பெருநகரத்தில் சூரியன் உதிப்பதையே
பார்க்காத கடட்டக்காட்டுக்குள் வாழும்போது, அவர் ஷேக்ஸ்பியரின் ' "It is
the east, and Juliet is the sun" என்பதை எப்படி புரிந்துகொள்வார் என்று
மேரி ஓர் உரையாடலில் கேட்கின்றார். இயற்கையிடமிருந்தே நாம் எல்லாவற்றையும்
கற்றிருக்கின்றோம் என்றால் இயற்கையிடமிருந்து விலகும்போது நமது வாழ்க்கை
அவ்வளவு ஆழமாக இருக்குமா என்பது நாம் ஒவ்வொருவரும் நமக்குள் எழுப்பிப்
பார்க்க வேண்டிய கேள்வியாகும்.

நமது
தமிழ்ப் படைப்பாளிகள் போலவே மேரியினது இளமைக்கால வாழ்வு வசதியானதல்ல.
ஆனால் அவர் ஒரு கவிஞராவது என்பதில் பதின்மத்திலிருந்தே தீவிரமாக
இருந்திருக்கின்றார். அதேவேளை அவர் உள்ளடங்கியவராக, தனது கவிதைகளைப்
பொதுவெளியில் வாசிக்க விரும்பதாவராகவே நீண்டகாலம் இருந்திருக்கின்றார்.
தற்பாலினரான மேரி அவரது நீண்டகாலத் துணையை இழந்ததன் பின்னரே, பொதுவெளிக்குப் போய் கவிதைகளை வாசிக்கவும், கவிதைகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றார். மேரியின் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, நாங்களும் மேரியுடன் காடுகளுக்குள் உலாவுவது போலவும், சிறு உயிரிகளையும் அவ்வளவு வியப்புடன் பார்ப்பது போலவும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒருவகையில் மேரி எப்படி இந்த உலகைப் பார்த்தவர் என்பதை அவரில்லாத காலத்தில் எங்களை இந்த ஆவணப்படத்தின் மூலம் பார்க்க வைப்பது சுவாரசியமானது.
மேரி தனது முதிய காலத்தில்தான் அவரின் பால்யகால மனவடுக்களைப் பேசுகின்றார். அவர் அவரது குடும்பத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளானவர். ஒருவர் தன் உடல் குறித்த பிரக்ஞையை அடைந்தபின், பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்போதே எவ்வளவோ பாதிப்பை அடையும்போது ஒரு குழந்தை தனது உடல் குறித்து விழிப்புணர்வு இல்லாதபோது அதற்குள் சென்று வருவது என்பது இன்னும் கொடுமையானது. ஆகவேதான் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு ஆகின்றவர்களுக்கு கனவுகள் கூட துர்க்கனவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.
மேரி தனது மனவடுக்களைப் புதைத்துவிட்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தினாலும் (அதுதான் இப்படியான துஷ்பிரயோத்துக்கு ஆளாகின்றவர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு துயரமான வழியும் கூட), அவரை அந்த நினைவுகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்ததை அவர் இது குறித்து பிற்காலத்தில் தனது மனதைத் திறந்து காட்டும்போது நாம் காண்கின்றோம்.
மேரியின் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்குக் கடிதம் எழுதும் பலர், 'மேரி நீங்கள் என் வாழ்க்கையைக் காப்பாற்றினீர்கள்' என்று எழுதியிருக்கின்றனர். மேரியோ அவரின் வாழ்வை கவிதைகளுக்குள் நுழைந்தன் மூலம் முதலில் காப்பாற்றியிருக்கின்றார். இல்லாவிட்டால் மேரியால் அவரது வாழ்வைத் தொடர்ந்து பதற்றங்களில்லாது கொண்டு சென்றிருக்க முடியாது. கலை ஒருவகையில் ஆற்றுப்படுத்துவதாகவும், அதேவேளை ஒருவரின் சிருஷ்டித்திறனை முகையவிழ்க்க வைப்பதாகவும் இருப்பதுதான் எவ்வளவு அருமையானது.
*
கடந்த வாரம் இங்குள்ள நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, நமக்கு வயதாகும்போது இப்படி வாசிக்கவும் எழுதவும் முடியுமா, அப்படி இவை நம்மைக் கைவிட்டால் நமது நிலைமை என்னாவகும் என்று நினைக்க அச்சமாக இருக்கிறது என்றார். உண்மையில் இதற்கான பதில்கள் நம் எவரிடமும் இல்லை. ஆனால் நண்பரிடம், 'எது அப்போது நமக்கு தரப்போகின்றதோ, அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான், இப்போது அதையெல்லாம் நினைத்து அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை' என்றேன் என்றாலும் எனக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.
ஆனால் இப்படி யோசித்துப் பார்க்கலாம். நாங்கள் இன்று வாழும் வாழ்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் நமக்குத் தெரிந்திருக்குமா? அல்லது நாம் பத்து வருடங்களுக்கு முன் கனவு கண்ட வாழ்க்கையையா இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? ஏன் நம்மில் எவரேனும் இப்படி சில வருடங்களுக்கு முன் கோவிட் வந்து நம் அனைவரையும் முடக்கும் என்று யோசித்துப் பார்த்திருப்போமா? இல்லைத்தானே.
இந்தவேளையில்தான் ஸென் உள்நுழைந்து இப்படியான பதற்றங்களை எனக்குள் நிதானப்படுத்தும். இந்த வாழ்க்கையில் அவசரப்படுவதற்கு அவ்வளவு முக்கியமானது என்று ஒன்றுமே இல்லை என்று எங்களுக்கு நாங்களே அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் மேரியைப் போன்ற ஒரு வாழ்க்கையை காடுகளுக்கு அருகாமையில் வாழ்வதற்கு இல்லை, அவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக்கூட நம்மால் எளிதாக முடியாது.
இந்த வாழ்வு நமக்கு ஒரேயொரு முறை என்றும், மரணம் என்பது நிச்சயமானது என்றும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் ஏன் இந்த வாழ்க்கையை இப்படிப் பதற்றங்களோடும், அவசரகதியோடும் எதிர்கொள்கின்றோம் என்பதுதான் எவ்வளவு முரண்நகையானது.

0 comments:
Post a Comment