இன்று காரில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு
வந்திருந்தது. சும்மாவே தெரிந்த நண்பர்கள் அழைத்தாலே எங்கேயாவது போய்
ஒளிந்துகொள்பவன் நான். ஆகவே தெரியாத இலக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்தது
என்பதால் அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.
பிறகுதான் தெரிந்தது அது
எனது நாவலான 'மெக்ஸிக்கோ'வை வாசித்துவிட்டு ஒருவர் அழைத்திருக்கின்றார்.
என் படைப்பை வாசித்துவிட்டு அப்படியே அவர் போயிருக்கலாம். ஆனால் எனது
தொலைபேசி இலக்கத்தை என் பதிப்பாளரிடமிருந்து வாங்கி தனக்கான நேரத்தைச்
செலவிட்டு அழைத்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனைக்கும்
மெக்ஸிக்கோ வெளிவந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இன்றைக்கும் அது
வாசிக்கப்படுவதும், யாரையோ பாதிக்கச் செய்கின்றது என்பதும் என்னளவில்
நிறைவளிப்பது.

இவ்வாறு மெக்ஸிக்கோ கவனிக்கப்படுவது ஒருபுறமிருக்க அதைச் சிலர் நிராகரிக்கவும் செய்கின்றனர். அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்தப் படைப்பும் எல்லோருக்கும் ஏற்ற படைப்பாக ஒருபொழுதும் ஆவதில்லை. ஒரு விமர்சனத்தில் எதையாவது கற்றுக்கொள்வதற்கு இருந்தால் அது மிக நல்லது; காழ்ப்பாக தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டிருந்தால் அதை நிராகரித்தும் செல்லலாம். ஒரு வாசகருக்கு படைப்பை ஏற்கும்/நிராகரிக்கும் உரிமை இருப்பதைப் போல, ஒரு படைப்பாளிக்கும் ஒரு விமர்சனத்தை ஏற்கும்/நிராகரிக்கும் சுதந்திரம் இருக்கின்றது.
மேலும், ஒரு படைப்பு எப்படி ஒரு தரப்பால் நிராகரிக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் வாசகர்களால் காலத்தின் நீட்சியில் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று நம்புகின்றவன் நான். அப்படி இல்லாதுவிட்டால் அவர்களின் காலத்தில் நிராகரிக்கப்பட்ட காஃப்கா வான்கோ போன்ற அரிய படைப்பாளிகள் இன்று நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.
ஆக எந்தப்படைப்பாயினும் அது அசல்தன்மையில் இருந்தால் அதற்கான வாசகப்பரப்பைப் பெற்றுக் கொள்ளும். அதை நாம் காலமான நமது முன்னோடி எழுத்தாளர்களின் இன்றும் காலத்தால் கரையுண்டு போகாத அவர்களின் படைப்புக்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
*
இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் 'பாவனை' எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது 'குருவின்' பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார்.
நான் சொன்னேன், காலமான படைப்பாளிகளின் பாதிப்பு இருந்தால் கூட கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்; சமகாலத்தில் எழுதும் ஒரு படைப்பாளியின் பாதிப்பு இருந்தால் அதை ஏன் ஒருவர் வாசிக்கப் போகின்றார். அசலாக அதை எழுதும் 'குரு' எழுத்தாளர்களே நமக்குப் போதுமே என்றேன்.
"பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" என்று இயேசு தன்னைச் சிலுவையில் அறையும்போது சொன்னதைக் கூட இவர்களுக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறு பாவனை செய்து 'அதே நடையில்' எழுதுவதை தெரிந்தே செய்கின்றவர்களுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தப் 'பித்தம்' இப்போது தெளியப் போவதில்லை.
ஆனால் அவர்கள் எழுதும்போது ஒன்றைக் கவனத்தில் கொள்ளலாம். உண்மையிலே எழுத்து எனக்கு அந்தரங்கமான மகிழ்வையும் நிறைவையும் இப்படிப் பாவனை/பாதிப்போடு எழுதுகின்றபோது தருகின்றதா, இல்லையா? என்று.
சிலவேளை தங்களுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் ஆழ்ந்து பார்க்கின்றபோது அவர்களைப் போன்றோர் தமது தனித்துவத்தை எழுத்தில் கண்டடையக்கூடும். அப்படி எழுதுகின்ற எழுத்துக்களே அவர்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துமே தவிர, பாவனை எழுத்துக்கள் அல்ல.
*
மெக்ஸிக்கோ வாசித்துவிட்டு பேச விரும்பிய நண்பரின் அழைப்பை நான் எடுத்திருந்தாலும் எனக்குப் பேசுவதற்கு நாவல் குறித்து எதுவும் இருக்கப் போவதில்லை. எழுதியவர் அந்த நாவலைப் பற்றிப் பேச பிரதிக்கு அப்பால் என்ன சுவாரசியமாக இருக்கப் போகின்றது.
கடந்தகாலத்தில் அவ்வாறு மெக்ஸிக்கோ பற்றியோ மற்ற என் படைப்புக்கள் பற்றியோ பேச விரும்பியவர்களுடன், நான் வேறு விடயங்களைப் பேசியே கடந்து வந்திருக்கின்றேன்.
ஒருவர் ஒரு படைப்பை வாசித்துவிட்டு நேரமெடுத்து அது குறித்து பேச விரும்புகின்றார் என்று அறிவதே எனக்குப் போதுமானது. அது எனக்குத் தரும் நிறைவை வேறு எதுவும் தரப்போவதில்லை.
அத்துடன் என் படைப்பை வாசித்து ஒருவர் தனது கருத்தை எழுத்திலோ/பேச்சிலோ பகிரும்போது அவரை வாசகராக அல்ல, அவரை நண்பராகவே நான் ஒவ்வொருமுறையும் நினைத்துக் கொள்வதுண்டு.
இப்போது மெக்ஸிக்கோ வாசித்து என்னோடு பேச விரும்பிய நண்பருக்கு நன்றி. நீங்கள் இந்த அழகிய கோடை நாளை இன்னும் வனப்புடையதாக எனக்கு ஆக்கியிருக்கின்றீர்கள்.
அவ்வாறே பதிப்பாளர் வேடியப்பனுப்புக்கும் மிக்க நன்றி.
***


0 comments:
Post a Comment