கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?

Wednesday, August 05, 2015


வவுனியா நகரை எங்களின் கார்  நெருங்கிக் கொண்டிருந்தது.  நாட்டு நிலவரங்களை எங்களோடு துணையாக வந்த சிவா களைப்பில்லாது கொழும்பிலிருந்து சொல்லி வந்துகொண்டிருந்தான். பின்னணியில் சக்தி எப்ஃ எம்மில் ‘வேணாம் மச்சான் வேணாம்’ என்கிற பாடல் போய்க் கொண்டிருந்தது. காதலாய் இருந்தாலென்ன வீரமாய் இருந்தாலென்ன தோற்றுப் போனவர்களின் கதைகளின் உள்ளடுக்குகளில் துயரமே ததும்புகிறது. சிவா பேசிக்கொண்டிருக்கும் விடயங்கள் தற்போதைய மோஸ்தரில் கறுப்பிலா வெள்ளையிலா அல்லது பழுப்பிலா வருமெனத் தெரியாது நான் குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் சிவப்பும் மஞ்சளுமான வர்ணங்களைத் தெரிவு செய்து சிவா ஒரு பெரும் கனவுக்காய்த் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் இருக்கின்றான்.

சிவாவும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாங்கள் வெவ்வேறு ரியூட்டரிகளைத் தேர்ந்தெடுத்திருந்தோம். அவன் சுன்னாகம் பக்கமாகவும் நான் அதற்கு எதிர்த்திசையில் இருந்த அளவெட்டிக்கும் ரியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தோம்.  ஊரை விட்டு தூரம் கூடச் சென்று படித்தால், படிப்பில் ஒரு மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கை எங்களில் பலருக்கு இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தூர நகர் ரியூட்டரிகளில்தான் வேறு பாடசாலை பெண்களைப் பார்க்கலாம் என்கின்ற ஒரு காரணத்திற்காய் மட்டுமே எதிர்க்காற்றில் சைக்கிளை மூசிமூசி மிதித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ், சமயம் போன்ற மேலதிக உதவி தேவைப்படாத பாடங்களைக் கூட  பக்திப் பழங்களாய் வரும் பிள்ளைகளுக்காய்க் கடைசி வாங்கிலிருந்து சிரத்தையாகக் கற்றுக் கொண்டிருந்தேன்.  எங்களை விட இரண்டு வயது கூடிய, என்னை மிருதங்க வகுப்புக்குக் கூட்டிச் செல்கின்ற துவாரகன் அண்ணா, வாணி விழாவில் ‘எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது’  என்ற உருக்கமான இயக்கப்பாடலைப் பாடிவிட்டு அடுத்த கிழமை இயக்கத்துக்குப் போயிருந்தார். நாமெல்லோரும் படித்துக் கொண்டும், பிள்ளைகளின் பின் சுழட்டிக் கொண்டும் திரியும்போது அவரேன் ‘எங்களின் பாதைகள் வளையாது’ என்கிற வழியைத் தேர்ந்தெடுத்தார் என்பது விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாய்த்தானிருந்தது. ஒவ்வொருத்தருக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ள எளிதில் பகிர்ந்து கொள்ள முடியா ஏதோவொரு காரணம் அவரவர் மனதுகளில் இருந்திருக்கும் போலும்.

ஒருநாள் ரியூசனுக்குப் போன சிவாவையும் அவனின் நண்பர்கள் சிலரையும், இயக்கம் பங்கர் வெட்டுவதற்கென கட்டுவன் பக்கமாய் கூட்டிக் கொண்டு போயிருந்தார்கள். றெக்கி பார்த்துக்கொண்டு இருந்த ஆமிக்காரன், இவர்கள் ஏதோ தாக்குதலிற்குத் தயாராகிறார்கள் எனத் தவறான செய்தியை அனுப்பி-யிருக்க வேண்டும். பலாலியிலிருந்து சரமாரியாக ஷெல்லைப் பட்டப்பகலிலேயே குத்தத் தொடங்கிவிட்டாங்கள். அதிஸ்டவசமாய் சிவா செல் தாக்குதலில் தப்பிவிட்டான், ஆனால் அவனின்  இரண்டு நண்பர்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறிச் செத்துப் போய்விட்டார்கள். எந்நேரமும் கலகலப்பாய்த் திரியும் சிவா கொஞ்சக்காலம் மவுனச்சாமி போல நடமாடிக்கொண்டிருந்தான். பிறகொருநாள் துவாரகன் அண்ணா போலவே இயக்கத்தில் இணைந்து விட்டான். அவனைத் தேடு தேடென்று அவனது வீட்டுக்காரர்கள் தேடியதில் இறுதியில் ‘லுமாலா’ சைக்கிள் மட்டுமே அகப்பட்டது. பயிற்சிக்காய் அவனை வன்னிப்பக்கமாய்க் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தி பின்னாட்களில் சாடைமாடையாய்ப் பேசப்பட்டது. என் வயதொத்த மச்சாள்காரிதான் சிவாவை அடிக்கடி நினைவுபடுத்தி என்னிடம் கதைகள் பல கூறிக்கொண்டிருப்பாள்.  

சிவா ஏழெட்டு வருடம் இயக்கத்திலிருந்துவிட்டு சுனாமி நேரத்தில் போராடியது போதுமென, ‘துண்டு’ கொடுத்துவிட்டு வந்திருந்தான். எனது மச்சாளைத்தான் மணமுடித்தும் இருந்தான். . நாங்கள் யாழ்ப்-பாணத்துக்குப் போகும் வழியில், உமா மகேஸ்வரனின்  பெயருடைய வீதியிலிருக்கும் மச்சாளின் வீட்டில் சாப்பிட்டுப் போவதென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பெருந்தெருவிலிருந்து உமாமகேஸ்வரன் வீதியில் திரும்பும்போது, யாரையோ ஒருவரைக் காரின் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டு சிவா, ‘இந்த நாசமாய்ப் போகிறவன் ஏன் இங்கை இப்ப வந்து நிற்கிறான்’ என முணுமுணுத்தான். அவனைப் பார்த்ததன் பின் சிவாவிடம் அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகங்கூட கொஞ்சம் வடிகட்டிப்போனது போலத் தோன்றியது.. 

மச்சாளின் வீட்டு முற்றத்தில் நிறைய செவ்வந்திப் பூக்கள் பூத்துக் கிடந்தன. முன்பொரு காலத்தில் ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இதென’ மச்சாளைப் பின் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வந்து போயின. ஆனால் பிறகு விக்ரர் அம்மானிற்கும் இந்தப் பாட்டுத்தான் பிடிக்கும் என்பதைக் கேள்விப்பட்டபின் இதைப் பாடுவதைக் குறைத்துக் கொண்டேன். சிலவேளைகளில் இந்தப் பாட்டுக்கு இயக்கம் உரிமை கோரியிருக்கிறதோ என்னவோ, ஏன் வீண் பிரச்சினை என்று இதை நிறுத்திவிட்டு ‘நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா’விற்கு மாறியிருந்தேன். மச்சாளின் பின் நான் பாடித்திரிந்த நன்றிக்கடனிற்காகவோ என்னவோ மச்சாள் தன் வீட்டுச்சேவலை அடித்துப் பொன்னியரிசியோடு அமர்க்களமாய் விருந்து தயார் செய்துவைத்திருந்தார். 

சாப்பிட்டுப் படுத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ‘கனடாவில் ஒழுங்காய் நித்திரை கொள்வதில்லை போல, பாவம் படுக்கட்டுமென’ மச்சாள்தான் என்னை எழுப்ப விடாது தடுத்திருக்கின்றார். நேரம் ஆறு மணியாயிருந்தது. ‘இனி இந்த இரவில் அவசரம் அவசரமாய் யாழ் போய் டக்ளஸசையா சந்திக்கப் போகிறாய், ஆறுதலாய் நாளை போகலாம்’ எனச் சொல்லித் தடுத்தும் விட்டார். நீண்டகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறோம் கதைக்க கனக்க பழைய கதைகள் இருக்கிறதென நானும் வவுனியாவில் நிற்கச் சம்மதித்து விட்டேன். இரவு தேங்காய்ப்பூப் போட்ட குழல்பிட்டும் கணவாய்க்கறியும். இது போதாதென்று கறுத்தக் கொழும்பான் மாம்பழமும் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. பிட்டோடு மாம்பழத்தைப் பிசைந்து சாப்பிடுவதைப் போல ஒரு சுவை எங்கும் வராது. சின்ன வயதிலிருந்தே எனக்கு கணவாய்க்கறியும் மாம்பழமும் புட்டோடு சாப்பிடப் பிடிக்கும் என்பதை இன்னும் மச்சாள் மறக்காமல் இருந்-தது நெகிழ்வாய் இருந்தது. ‘எங்கடை அம்மாவைப் போல மச்சாளுக்கும் எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பது நல்லாய்த் தெரியுமென சிரித்தபடி சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்த சிவாவிற்கு வயிறு எரிந்திருக்கும், அதற்காய் மனதில் உள்ளதை நான் சொல்லாமல் விடமுடியுமா என்ன? 

இன்னமும் அறுந்து போய்விடாத எங்களின் அந்நியோன்னியத்தைக் கண்டு சிவா சாபம் போட்டானோ என்னவோ தெரியாது, அன்றிரவு எனக்கு வயிற்றைக் குத்தத் தொடங்கிவிட்டது.  காணாததைக் கண்டதைப் போல அளவுக்கு மீறிச் சாப்பிட்ட கணவாய்தான் விளையாட்டைக் காட்டியிருக்க வேண்டும். நான் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு மச்சாள், சிவாவிடம் ‘ஒருக்காய் இவனைக் கூட்டிக்கொண்டு போய் டொக்டரிடம் காட்டுங்கோவன்’ எனச் சொன்னாள். பக்கத்து வீதியில் ஒரு டொக்டர் இருந்தாலும் சிவாவிற்கு அவரிடம் போக அவ்வளவு விருப்பமில்லை. ‘நீயும் வாவன், என்னால் உள்ளே வர முடியாது, நான் வெளியில் நிற்கிறன். நீ இவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டு’ என மச்சாளிடம் கூறினான். மச்சாளும் அவசரம் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு எங்களோடு காருக்குள் ஏறினார்

டொக்டரின் வீடும், நோயாளிகளைப் பார்க்கும் இடமும் ஒரேயிடமாய் இருந்ததால் நல்லதாய்ப் போய்விட்டது.  இரவு பத்து மணியைத் தாண்டியதால் டொக்டர் படுத்துவிட்டார் போலும். அவரின் மனைவிதான் கதவைத் திறக்க, மச்சாள் நிலைமையை விபரிக்க, ‘கொஞ்ச நேரம் இந்தக் கதிரையில் இருங்கோ, அவரை நான் எழுப்பிவிடுகிறேன்’ எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளுக்குள் போய்விட்டார்.  நான் வயிற்றை ஒருகையால் தடவியபடி, ‘ஏன் மச்சாள், சிவா இந்த டொக்டரிடம் வரமாட்டேன் என்று வெளியில் நிற்கிறான்’ எனக் கேட்டேன். ‘அதொரு பெரிய கதையடா, சிவாவும் இந்த டொக்டரின் மருமகனும் முந்தியொரு காலம் இயக்கத்தில் ஒன்றாய் இருந்தவையளடா, அதுதான்’ என்றார் சிரித்தபடி.


கோபிகா வீட்டில் ஒரே பிள்ளை என்றபடியால் அவ்வளவு செல்லமாய் வளர்க்கப்பட்டாள். யௌவனத்தின் அழகு எங்கும் தெறிக்கத் துள்ளிக்கொண்டு திரிந்தவளை யாருக்குத்தான் பிடிக்காது போகும். மேலும் வைத்தியரின் ஒரேயொரு மகள் என்பதால் வரக்கூடிய எதிர்கால அனுகூலங்களையும் கணக்கிட்டும் அவளின் திருவாய் மொழிவி-ற்காய் நகரில் பல ஆண்கள் காத்துக்கிடந்தனர். தகப்பனின் நிதானமான பேச்சையும், நடத்தையையும் பார்த்ததாலோ என்னவோ அவளுக்கு விளையாட்டுத்தனமும், சாகசமும் நிரம்பிய கபிலனைப் பிடித்துப் போயிருந்தது. அப்படி என்னதான் இருந்து உனக்குக் கபிலனைப் பிடித்துப்போனது என கோபிகாவிடம் கேட்டால், ஒருநாள் தான் பிள்ளையார் கோயிலுக்கு நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, கபிலன் மோட்டார் சைக்கிளில் வந்து சட்டென்று பிரேக் அடித்து,  இரத்தத்தால் ஐ லவ் யூ என்றெழுதி கடிதம் தந்ததுதான் என்பாள். அப்படியாயின் வேறு ஒருவரும் உனக்குப் ப்ரபோஸ் செய்யவில்லையா என மேலும் கேட்டால், மற்றவங்களும் முயற்சித்தவன்கள்தான், ஆனால் கபிலன் கேட்ட ஸ்டைல் அமர்க்களத்தில் அஜித் கேட்டமாதிரி இருந்தது, அதுதான் கபிலனை உடனேயே பிடித்துவிட்டது என வெட்கப்பட்டபடி சொன்னாளாம். போராடப் போனவர்களுக்கு ஒவ்வொரு தனித்துவமான காரணங்கள் இருப்பதைப் போல காதலிக்கத் தொடங்குபவர்களுக்கும் நாம் யோசித்தே பார்க்க-முடியாத பல காரணங்கள் இருக்கின்றன போலும்.

வைத்தியருக்குத் தன் பிள்ளையின் காதற்பித்து சாடையாய்த் தெரிந்-தாலும் இந்தப் பதின்மக் காதல் வேப்பமரத்துப் பேய் போல ஒருநாள் தானாய் ஆடி அமுங்கிவிடுமென நம்பினார். ஆனால் கோபிகாவோ யாரோ செப்புத்தகடு புதைத்து மலையாள மாந்தீரிகம் செய்ததுபோல, கபிலன் இல்லாவிட்டால் தனக்-கோர் வாழ்வில்லையென ஓரிரு ஆண்டுக்குள்ளேயெ முடிவு செய்து-விட்டாள். சாகசக்காரக் கபிலனுக்கு நகருக்குள் -தண்ணீருக்குள் மீன்கள் போல- நடமாடிய இயக்கத்தோடு நாளடைவில் தொடர்பு ஏற்பட்டதும் தற்செயலானதே. ஒருநாள் இந்த டொக்-டரிடம் அவசரமென ஒரு நோயாளி சிகிச்சைக்கு வர வைத்-தியர் அலுப்பில் ‘எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை நாளை வாருங்கள்’ என அனுப்பி வைத்துவிட்டார். இந்தச் செய்தி எப்படி எப்படியோ எல்லாம் திரிபடைந்து இயக்கக்காரர்களின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒரு நாளிரவு ‘டொக்டர் உங்களுக்கு ஓய்வுதானே வேண்டும்; நாங்கள் ஓய்வு தருகிறோம், எங்களோடு வந்து கொஞ்சநாள் இருங்கோ’ எனத் தங்களின் கட்டுப்-பாட்டுப் பிரதேசத்திற்குள் இயக்கக்காரர் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்.  

இரண்டு வாரம் இயக்கத்தோடு இருந்துவிட்டு வந்த டொக்டருக்கு அதற்குப் பிறகு இயக்கத்தை மட்டுமில்லை, அதனோடு உறவு வைத்திருந்த கபிலனையும் துப்பரவாய்ப் பிடிக்காது போய்விட்டது. விஜயேந்திரன் என்கின்ற பெயரில் இருந்த தனது வைத்தியசாலையின் பெயரைக் கூட விஜயசேன என மாற்றி இராணுவத்தோடு நல்ல நெருக்கமாய்ப் பழகவும் தொடங்கி--விட்டார்.  இயக்கம் அவரை இரண்டு வாரமும் பங்-கருக்-குள் போட்டதோ, இல்லை இரணைமடுக்குளத்தைச் சுற்றி ஓட-விட்டதோ என்னவோ தெரியாது. அவரால் இப்படித் தான் கடத்தப்பட்டதை மறக்கமுடியவில்லை. ‘இயக்கக் காவாலி’யான கபிலனோடு தன் மகள் சுற்றுவதை நிறுத்திவைக்க கோபிகாவிற்கும் அவசரம் அவசரமாக ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  இந்த நேரத்தில் ஆமியின் நெருக்கடிகள் அதிகரித்து, கபிலனும் ஒவ்வொரு வீடு வீடாய் ஒளித்து வாழும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் கோபிகா எத்தனை அஜித்குமாரின் படங்களைப் பார்த்-திருப்பாள், எப்படியென்றாலும் இறுதிநேரத்தில் கபிலன் வந்து தன்னைக் காப்பாற்றிச் செல்வானென நம்பிக்கொண்டிருந்தாள். தலை-மறைவாய் இருந்த கபிலன் கோபிகாவின் திருமணம் பற்றி எப்படியோ கேள்விப்பட்டிருக்கின்றான். ஆனால் இதெல்லாம் கோபி--கா-வின் சம்மதத்தோடுதான் நடக்கிறதென அவன் வேறொரு கணக்-குப் போட்டிருக்கின்றான்.

திருமணம் நடக்க ஒருவாரத்திற்கு முன்னர் வைத்தியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து,  கபிலன் கோபிகாவின் வீட்டுக்குச் சென்-றிருக்கிறான். எல்லாவற்றையும் சாகசமாய் செய்து திரிந்த கபிலன், ‘என்னடி உனக்கு ஊரெல்லாம் சுற்றித் திரிய நான்  வேணும், ஆனால் கல்யாணஞ் செய்ய மட்டும் இன்னொருத்தன் தேவையா?’ எனத் திட்டிவிட்டு காலில் இரண்டு வெட்டுப் போட்டி-ருக்கின்றான். தடுக்க வந்த கோபிகாவின் அம்மாவிற்கும் கையில் நல்ல வெட்டு. காலின் நரம்புகள் வெட்டப்பட்டுத் துடித்துக்கொண்டிருந்த கோபிகாவை அவசரம் அவசரமாகக் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுபோனதில் ஒரு கால் காப்பற்றப்-பட்டது.  மற்றதில் மூன்று விரல்கள் இயங்கமுடியாமற் போனது. எப்போதும் எல்லா ‘ஏன்’களுக்கும் பதில் கிடைப்பதில்லை போல, கபிலன் ஏன் கோபிகாவை இப்படி வன்-மத்தோடு வெட்டப்போனான் என்பதற்கும் ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. இப்படிச் செய்ததன்பிறகு தனக்குப் பாதுகாப்-பில்லையென நினைத்துக் கபிலன் வன்னிக்குப் போய் இயக்கத்தில் முழுதாய் இணைந்துவிட்டான்.

கோபிகாவிற்கு நிறையச் சீதனம் கொடுத்து குழம்பிப்போன திருமணத்தைச் சில மாதங்களில் செய்து வைத்தார் அவளின் தந்தையார்.. சாகசக்காரனான கபிலனுக்கு இயக்கத்தின் இறுக்-கமான விதிமுறைகளுக்குள் அடங்கிப் போவது  பெரும்பாடாக இருந்தது. ‘எனக்குத் தகவல் சேகரித்துப் பார்த்த முன் அனுபவம் உண்டு, சிங்களமும் தெரியும். என்னை உளவுவேலைக்காய் கொழும்புக்கு அனுப்புங்கள்’  என அண்ணைக்கு அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். இவ்வாறான விடயங்களில் கபிலனைப் போன்றவர்கள் அல்ல,  இயக்கமே அவ்வேலைகளுக்கு  உரிய-வர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்கிற புரிதல் கூட இல்லாமல் தன்னை அம்மானின் பிரிவில் சேர்க்கும்படி மன்-றாடி-யிருக்கின்றான். இருந்திருந்து பார்த்துவிட்டு ஒருநாள் எப்படியோ இயக்கத்தைச் சுழித்துவிட்டு வள்ளமேறிக் கபிலன் இந்தியா-விற்கும் போய்விட்டான். விலத்திப் போகின்றவர்களுக்கு எல்லாம் சமையற்பிரிவிலோ அல்லது பங்கர் வெட்டும் வேலையையோ வகுத்துக் கொடுக்கிற இயக்கத்திற்கு இவன் இப்படித் தப்பிவிட்டானே என்ற கோபத்தைவிட ஒரு தொல்லை தங்களை விட்டுப் போய்விட்டதே என நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்பட்டிருக்கவேண்டும்.

கோபிகாவிற்கு மகன் ஒருவன் பிறந்தபோதும் அவளால் ஒரு காலிலேயே முழுப்பாரத்தையும் கொடுத்துத் தாண்டித் தாண்டி நடக்க-வேண்டியிருந்தது. தமிழ்நாட்டுக்குப் போன கபிலன் அங்-கேயும் சும்மா இருக்கவில்லை. மன்னாரிலிருந்து படிக்க வந்திருந்த ஒரு கத்தோலிக்கப் பிள்ளையைத் துரத்தித் துரத்திக் காதலித்திருக்கின்றான். ஆனால் அவள் அஜித்குமார் மாதிரி ஒருவரை விரும்பவில்லை போலும். இவனின் சாகசக் காதலை நிராகரித்துக் கொண்டேயிருந்தாள். வவுனியாவில் காதலுக்காய் காலையே வெட்டியவன், மன்னார்ப் பிள்ளையை நுங்கம்பாக்கம் பக்கமாய் வைத்துக் கடத்த முயற்சித்திருக்கின்றான். பிள்ளை கத்திய சத்தத்தில் சனமெல்லாம் கூடிக் கும்மி, கபிலனைப் பொலிஸில் ஒப்படைக்க பொலிஸ் கேஸ் அது இதென கொஞ்சக்காலம் ஜெயிலுக்குள் இருந்துவிட்டு மும்பாய்ப் பக்கமாய் அவன் போயி-ருக்கின்றான்.

ஒருநாள் வைத்தியரின் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. கோபிகா ஒரு நோட்டில், தானும் பிள்ளையும் கபிலனிடம் இந்தியா போகின்றோம் என்று எழுதி வைத்துவிட்டு ஒருவரிடமும் சொல்லாமல் போய்விட்டாள். என்னதான் யேசுநாதர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கருணையைப் போதித்திருந்தாலும், தன் கால்கள் இரண்டையும் வெட்டியவனிடமே கோபிகா சேர்ந்து வாழப் போனதைத்தான் ஒருவராலும் நம்ப முடியவில்லை. எல்லா ஏன்களுக்கும் பதில் கிடைத்திருந்தால் அல்லது காலத்தில் பின்னோக்கிப் போய் சிலவற்றைத் திருத்த முடியும் என்றால் எத்தனை விடயங்-களுக்-காய் வருந்தியிருக்கத் தேவையிருந்திருக்காது. கோபிகா அப்படிப்போனதைக் கோபிகாவின் கணவரை விட அவளது தகப்பனால்தான் தாங்க முடியாதிருந்தது. அவளைக் கைகழுவி விட்டேன் என கோபத்தில் கூறிவிட்டாலும் தன் ஒரேயொரு பிள்ளை இப்படி விபரீதமாக நடந்துகொள்கிறாளே என்பதில் நிறைய வருத்தம் அவருக்குள் இருந்தது.

மச்சாள் இப்படி கபிலனதும் கோபிகாவினதும் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, என்னால் இதை நம்ப-முடியாது இருக்கிறதெனச் சொன்னேன். ‘என்ன செய்வது சில விடயங்களை நம்பக் கடினந்தான். ஆனால் கண்ணுக்கு முன்னால் இவையெல்லாம் நடக்கும்போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது’ என்றார். நாங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவும்,  ‘என்னால் கூட எங்கள் போராட்டம் இப்படி முடிந்துபோயிற்றென்பதை நம்பமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் அதுதான் கசப்பான உண்மை அல்லவா?’ என எங்கையோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான். அவனுக்குள் பழைய நினைவுகள் அலை புரண்டோடத் தொடங்கியிருக்க வேண்டும். நானும் மச்சாளும் தொடர்ந்து பேச எதுவுமின்றி அமைதியாகினோம்.


அடுத்த நாள் காலை மச்சாளிடமும் சிவாவிடமும் விடை-பெற்றுக்கொண்டு அம்பனையிலிருந்த வீட்டைப் பார்க்க நாங்கள் வெளிக்கிட்டோம். சிவா காலைச் சாப்பாட்டுக்காய் பாண் வாங்க கடைக்குப் போன நேரத்தில் மச்சாளிடம்  ‘நேற்றைக்கு சிவா கபிலனைப் பார்த்தவுடன் ஏன் திட்டிக் கொண்டிருந்தான்?’ எனக் கேட்டேன். ‘அதுவா, இந்தக் கபிலன் சிவா பொறுப்பாய் இருந்த பிரிவில் தான் இயக்கத்தில் இருந்தவன். அவன் இப்படி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவிற்கு ஓடிப்--போனதில் சிவாவிற்கும் பங்கு இருக்கிறதென கொஞ்சநாள் இயக்கம் சிவாவைப் பங்கருக்குள் போட்ட கடுப்புத்தான்’ என மெல்லிய குரலில் மச்சாள் சொன்னார். ‘ஓ அதுதான் அவனைக் கண்டவுடன் சிவாவிற்கு முகம் இருண்டது போலும்’ என நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். ‘கபிலன் பிரச்சினையோடுதான் சிவாவும் இயக்கத்தை விட்டு வெளியே வந்தவர்’ எனத் தொடர்ந்தாள் மச்சாள்.

யாழ்ப்பாணம் போய் கொழும்புக்குத் திரும்பும் வழியில், இனி எப்போது சிவாவையும் மச்சாளையும் பார்க்கமுடியுமோ என நினைத்து, அவர்களிடம் விடைபெற்றுச் செல்லலாம்  என அவர்-களின் வீட்டுக்குக் காரைத் திருப்பியிருந்தோம்.  சிவா முதன்முறையாக இப்போதுதான் கபிலனை -அவன் இயக்கத்தை விட்டு ஓடிய-பின் - சந்தித்திருக்கின்றான். தன் வாழ்க்கையையே ஒரு ஓட்டத்தால் மாற்றியவன் என்பதால் சிவா, கபிலனை வவுனியாச் சந்தை-யடியில் சத்தித்தபோது கதைத்திருக்கின்றான். ‘அண்ணை நான் இயக்கத்தை விட்டு ஓடவில்லை  அம்மான் தான் என்னை இந்தியாவிற்குப் போய் இயக்கத்திற்காய் சில வேலைகள் செய்ய அனுப்பியவர். இயக்கத்திடம் எல்லாவற்றிற்கும் ஒரு ப்ளான் இருக்குந்தானே. அப்படித்தான் என்னையும் இயக்கத்தைவிட்டு ஓடுகின்றமாதிரி ஒரு நாடகத்தைச் செய்து வள்ளத்தில் அனுப்பி வைத்தவையள்’ என்றிருக்கின்றான். இதைக் கேட்டு சிவாவுக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு ஏறியிருக்கிறது. ‘இயக்கந்தான் ஒரு நாடகம் செய்து உன்னை அனுப்பியதென்றால் பிறகு ஏன்டா என்னை அவங்கள் பங்கருக்குள் போட்டவங்கள்’ எனக் கேட்டிருக்கின்றான். அதற்கு அவன், ‘அண்ணை உங்களுக்கும் தெரியுந்-தானே இயக்கத்தில் எல்லாப் பிரிவிற்குள்ளும் அம்மானின் ஆட்கள் இருந்து உளவு பார்க்கிறவையள். அப்படி அம்மான் தெரிவு செய்துதான் என்னை உங்களின்   பிரிவில் விட்டிருந்தார். வேறொரு அசைன்மென்டுக்காய் என்னை அவசரமாக அனுப்ப வேண்டியிருந்ததால் தான், அம்மானின் ஆட்கள் இப்படியொரு நாடகம் நடத்தி அனுப்பினவையள். அத்தோடு அம்மானின் ஆட்கள் இந்தப் பிரிவில் இருக்கின்றார்கள் என்று மற்ற ஆட்களுக்கு தெரியக்கூடாதென்பதற்காய்த்தான் உங்களுக்குப் பனிஷ்மென்ட் தந்திருக்கினம்’ என்றிருக்கிறான் கபிலன். 

ஆனால் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய் கபிலனை அடிக்கச் சிவா போயிருக்கின்றான். மச்சாள்தான் ‘சும்மா இருங்கோ உங்களுக்கு இப்பவும் இயக்கம் என்ற நினைப்பு’ என்று பிடித்து இழுத்துக்கொண்டு வந்திருக்கின்றார். நான் இதையெல்லாம் கேட்டுவிட்டு சிவாவிடம் ‘ஏன்டா சிலவேளைகளில் கபிலன் சொல்வதுபோல் அவன் அம்மானின் ஆளாய்த்தான் இருந்தானோ தெரியாது’. எனச் சொன்னேன். சிவாவிற்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது, ‘விசர்க்கதை கதைக்காதையடா, எங்களின் பிரிவில் அம்மான் தனக்குத் தகவல் திரட்டித்தர நியமித்த ஒரே ஆளே நான் தானடா. கபிலன் தப்பி ஓடிட்டான் என்றவுடன் என்ன பூனாவுக்கு உளவு பார்க்கிறாய் எனச் சொல்லித்தானே பங்கருக்குள் அம்மான் என்னைப் போட்டவர். இல்லாவிட்டால் நான் இயக்கத்தில் இருந்த  காலத்தை வைத்து, நான் விலகிப் போகிறதென்று சொல்லியிருந்தாலே, சும்மாவே போகச் சொல்லியிருப்பார்கள்.  இந்த நாசமறுப்பானால்தான் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. இப்போது என்னடாவென்றால் எனக்கே இவன் கதைவிடுகிறான்’ என முகஞ்சிவக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். ‘அது சரி இப்பவேன் கபிலன் இங்கே வந்து நிற்கிறானாம்?’ என நான் கேட்டேன். ‘கேபியின் நேர்டோவோடு சேர்ந்து ஏதோ வேலை செய்யப்போகின்றான் எனறு சொல்லிக்கொண்டிருக்கின்றான், உண்மை பொய் தெரியாது’ என்றான் சிவா.  அதைக் கேட்டுவிட்டு ‘இதுவரை சனங்களுக்குச் செய்த பாவங்களுக்கு எப்படியோ ஏதோ ஒருவழியில் பிராயச்சித்தம் செய்யத்தானே வேண்டும்‘ என மச்சாள் முணுமுணுத்துக் கொண்டார்.

கொழும்பை நோக்கி எங்களின் கார் பயணிக்கத் தொடங்கியது. வானம் இருண்டு மழை வரும் போலக் கிடந்தது. எனக்கு சிவா சொல்வதா அல்லது கபிலன் சொன்னதா எது உண்மையாயிருக்குமெனக் குழப்பமாயிருந்தது. கார் ஜன்னலைத் திறக்க குளிர்காற்று முகத்தில் படுவது பிடித்தமாயிருந்தது. சட்டென்று சாம்பல் வானத்திலிருந்து மழை பொழியத் தொடங்கியது. நான் ஜன்னலை மூடிவிட்டு இவ்வளவு நடந்ததன் பிறகும், கோபிகாவால் எப்படிக் கபிலனைக் காதலிக்க முடிகிறது என யோசித்தேன். கோபி-காவைப் போலத்தான் சனங்களும் இயக்கத்தை நேசித்திருந்தார்களோ தெரியாது.


2012 
 

அனிச்சம்பூ குறிப்புகள்

Thursday, July 30, 2015


Alejandro Zambra

"She knows that very soon Ernesto won't come back. She imagines herself disconcerted, then furious, and finally invaded by a decisive calm. It's all right, there was no commitment, as it should be: one loves in order to stop loving, and one stops loving in order to start loving others, or to end up alone, for a while or forever. That is the law. The only law."

(The Private Lives of Trees, P 75)

Alejandro Zambra சிலியின் முக்கியமான ஒரு எழுத்தாளராக - ரொபர்தோ பாலானோவிற்குப் பிறகு- குறிப்பிடப்படுகின்றார். அவரது எழுத்துக்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. 1975ல் பிறந்த Alejandro Zambra தொடக்கத்தில் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டு இப்போது நாவல் உலகினுள் நுழைந்திருக்கின்றார். Bonsai, The Private Lives of Trees, Ways of Going Home என்பவை அவர் எழுதிய நாவல்கள். நான் அவரின் நாவல்களில் Bonsai தவிர மிகுதி இரண்டையும் வாசித்திருக்கின்றேன். Alejandroவின் நாவல்களில் பாத்திரங்கள் அதிகம் இருப்பதில்லை என்பதோடு அநேகமான பாத்திரங்கள் தமக்குள்ளேயே உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

Secondary Characters தனக்குப் பிடித்தமானது எனச் சொல்லும் Alejandroவின் புனைவுகளில் கதைகளுக்குள் கதைகளென நீண்டபடியிருக்கும். போர்ஹேஸ் மீதும் பாலானோ மீதும் மதிப்புடைய Alejandroவின் நாவல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரும் நாவல்களுமில்லை. ஒருவகையில் சொல்வதென்றால் அவை நாவல்லா (Novella) வகையைச் சேர்ந்தவை. ஆயிரம் பக்கங்களைத் தொடுமளவில் எழுதினாலே சிறந்த நாவல்களென தற்காலத்தில் 'பிரமை' பிடித்தலையும் தமிழ்கூறும் நல்லுலகம், புதிய கதை சொல்லல் முறையால் சுருங்கச் சொல்லி உலகின் கவனத்தைக் கோரும் Alejandro Zambra போன்றவர்களையும் கவனிக்கக் கடவுக.


SAAAC Art Exhibition

மதியிறுக்கம் எனப்படும் ஆட்டிசம் (Autism) குறித்து நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகவேதான் அது ஒருவகையான tabooவாய் இன்னமும் நம் சமூகத்தில் இருக்கின்றது. ஆனால் இன்றைய காலத்தில் முன்னரைவிட மிக அதிகமான குழந்தைகள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆட்டிசத்தில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகளை 24 மணித்தியாலமும் பராமரிக்கவேண்டிய தேவை பெற்றோருக்கு இருக்கின்றது. எனவே பெற்றோர் எத்தகை மனவுளைச்சல்களுக்கும் தத்தளிப்புக்களுக்கும் போகவேண்டியிருக்கும் என்பதை மேலும் விரித்துச் சொல்லத்தேவையில்லை.

சென்றமுறை 'உயிர்ப்பு' நிகழ்வில் சுமதியின் நாடகமும் இப்படியான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்களைப் பற்றியது. இந்நாடகத்தில் பாதிக்கபப்ட்ட குழந்தை எந்த நேரமும் ஒரு டிரமை அடித்துக்கொண்டே இருக்கும். அந்த தொடர்ச்சியான சப்தங்களுக்கிடையிலேயே நாடகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. நாடகம் நிகழும் கொஞ்ச நேரமே உரையாடல்களுக்கிடையில் ஒலிக்கும் டிரம் எங்களை தொந்தரவுபடுத்தியபடி இருக்கிறதென்றால் எப்போதும் அப்படியான ஒரு நிலைமையில் வாழ்பவர்களைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். டிரம் இங்கே ஒரு படிமம். சுமதியின் முக்கியமான பிரதி. பொதுவெளியில் ஆட்சிசம் பற்றிய உரையாடல்களை தொடங்கிவைக்கின்ற ஒரு புள்ளியது.

அண்மையில் பாலபாரதி தமிழகத்தில் 'சந்துருவுக்கு என்னாச்சு' என்ற தலைப்பில் வெளியிட்ட நூலும் ஆட்டிசம் பற்றியே உரையாடுகின்றதென நினைக்கின்றேன் (நானின்னும் அதை வாசிக்கவில்லை).

இன்று நடத்த கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்களையே நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும், வேறு ஓவியர்களும் வரைந்த ஓவியங்கள் இவை. கறுப்பு வெள்ளையில் தெரிகின்ற முக்கிய ஆளுமைகளின் ஓவியங்கள் இயற்கையிலிருந்து எடுத்த மண்ணால் வரையப்பட்டவை. வித்தியாசமான முயற்சி. வான்கோவின் நட்சத்திர இரவையும், மங்கின் ஓலத்தையும் வேறு விதமாய் வரைந்து பார்த்திருக்கின்றார் செந்தூரன். கடைசிப் புகைப்படத்தில் இருப்பவர் அவர்.
*South Asian Autism Awareness Centre (SAAAC)


Boyhood

ஒரு நல்ல படைப்புக்காய் எத்தனை வருடங்கள் என்றாலும் காத்திருக்கலாம் என்பதற்கிணங்க ஒரு சிறுவனின் பன்னிரண்டுகால வாழ்வை பின் தொடர்கின்ற படம். அதற்காகவே ஒரு 6 வயதுச் சிறுவனை முக்கியபாத்திரமாக்கி, யதார்த்தத்தில் 12 வருடங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் அவரைத் தொடர்ந்து சென்று திரைப்படமாக்கியிருக்கின்றனர். எல்லாத்துயரங்களின் பின்னாலும், எல்லா குழப்படிகளின் பின்னாலும் திளைத்துப் பெருகும் வாழ்வை நாம் இந்தப் படத்தில் தரிசிக்கமுடியும்.

எல்லாம் நமக்காய்ச் செய்யும் அம்மாக்களை விலத்தி நடக்கின்ற பருவம் வருகையில் நம்மைவிட அம்மாக்களே நிறையக் கவலைப்படுகின்றார்கள். வளாகத்திற்கு புறப்படும் மேசனிடம் 'இனியென்ன, எல்லாம் முடிந்துவிட்டது, இனி என் மரணவீட்டுக்குத்தானே வரப்போகின்றாய்?'  என அழத்தொடங்குகின்ற மேசனின் அம்மாவின் விழிகளைத் தாண்டி நாம் அவ்வளவு எளிதாய் வெளியேறவிடவும் முடியாது.

மேசனிற்குப் பிடித்த காதலி முரண்களின் நிமித்தம் விலகிப்போய்விட, வளாக வாழ்வு தொடங்கும் நாளில் நண்பியொருத்தியுடன் மலையேற்றம் செய்யயும்போது, seize the moment என்பதல்ல சரியானது, moment seizes us என்பதே சரி என்று இருவரும் மாற்றி யோசிப்பார்கள். ஒருவகையில் பார்த்தால் அதுதான் உண்மை அல்லவா? நமக்கான கடந்தபருவங்களை ஏதோ ஒருவகையில் நிச்சயம் ஞாபகப்படுத்தும் இத்திரைப்படம், தவறவிடப்படக்கூடாத ஒன்று.

"It's not a documentary, it's a story!"


தேர்தல் - அல்பேர்ட்டா

பழமைவாதகட்சியின் (Progressive Conservative) கோட்டையாக நெடுங்காலமிருந்த (44 வருடங்கள்) அல்பேர்டா மாகாணத்தை புதிய ஜனநாயக் கட்சி (New Democratic Party) பெரும்பான்மை இருக்கைகளுடன் (53/87) சுவீகரித்திருக்கின்றது. இந்த வெற்றியைப் பார்த்து, கொன்சர்வேடிவ் ஆதரவாளர்கள் எல்லாம் தமது நம்பிக்கைகளிலிருந்து மாறிவிட்டார்கள் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளமுடியாதெனினும், மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது. பழமைவாதக் கட்சியைவிட இன்னும் அடிப்படைவாதக் கட்சியான WildRose, தாராளவாத கட்சியான Liberal போன்ற கட்சிகளைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் என்டிபியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வியப்புத் தருகின்ற விடயம்.

இவ்வாறான ஒரு பெரும் அலை ஜாக் லேய்ட்டன் தலைவராக மத்தியில் இருந்தபோது கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்திருக்கின்றது. அதற்கு ஜாக்கின் தலைமைப்பண்பு மீதிருந்த வசீகரமும் ஒரு முக்கிய காரணம். கியூபெக்கில் கூட தனிநாட்டுக் கோரிக்கையுடன் தொடங்கிய Parti Québécois இருந்தபோதும் பெருந்தொகையாக என்டிபியினரை கியூபெக் மக்கள் அன்று மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

இவ்வாறு பழமைவாதக் கட்சி பலமாக இருக்கும் அல்பேர்டாவிலும், தனிநாட்டுக்குக் கோரிக்கை/விரிவான சுயாட்சி என்பது எப்போதும் தேர்தல்களத்தில் முக்கியபுள்ளியாக வைக்கும் அதை பெரும்பான்மையினர் ஆதரிக்கும் கியுபெக்கிலும் என்டிபியினரைத் தேர்ந்தெடுக்கும்போது, ஏன் இன்னும் குடிவரவாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒன்ராறியோவில் என்டிபியினரை நீண்டகாலமாய் மாகாண/மத்தியரீதியில் தேர்ந்தெடுக்காது இருக்கின்றனர் என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.

அல்பேர்ட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 என்டிபியினரில் 27பேர் பெண் வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடா அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி.

-----------------

மூன்று திரைப்படங்கள்

Wednesday, July 29, 2015

'நினைவு' பெறுமதியானது

'Still Alice' படத்தை நண்பரொருவருடன் சேர்ந்து பார்த்தேன். என்னால் இவ்வாறான நோய்களின் பாதிப்பைச் சொல்லும் படங்களைப் பார்க்க முடிவதில்லை. நண்பரோ இது நாளை உன்க்கோ அல்லது எனக்கோ நடக்கவும் கூடியது, ஒஸ்காரிலும் விருதுபெற்ற படம் நீ பார்க்கத்தான் வேண்டுமென இழுத்துச்சென்றார். அவர் பணிபுரிவதும் இவ்வாறான நோயாளிகளுடன் சம்பந்தப்பட்டது. எப்படி Alzheimer ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் குழந்தைத்தன்மைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள் என்பது பற்றியும், நாங்கள் கூறுவதை நம்பாது, தங்கள் 'ஞாபகத்தில்' இருப்பதே சரியென்று அடம்பிடிப்பார்களென்றும் கூறிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர்களைச் சமாளிக்கமுடியாது role play செய்யவேண்டியிருக்குமென படத்தோடு ஒன்றிப்போன அவர் எனக்கும் இது பற்றி மேலும் விரித்துச் சொல்லிக் கொண்டு போனார்.

என்னைப் போன்ற இந்நோயைப் பற்றிய அவ்வளவு அறிதலற்ற எளிய பார்வையாளரும் விளங்கும்படியாக (ஆழமாகப் போகாவிட்டாலும்) இப்படத்தை எடுத்திருக்கின்றார்கள். இப்படி 'நினைவு' மெல்ல மெல்ல அழிந்து போகும்போது இங்கே வளர்ந்து பிறந்தவர்க்கும், எம்மைப் போன்ற இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்ந்தவர்க்கும் இருக்கும் வித்தியாசங்கள் பற்றியும் நண்பர் விளக்கிக்கொண்டிருந்தார் (அவரின் அனுபவத்தில் நம்மவர்களின் நிலை மோசமானது, முக்கியமாக நம்மிடையே இதுகுறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவ்வாறானவர்களை விளங்கிக்கொள்வது மிகச் சிக்கலாக இருக்கிறது. அத்துடன் இந்நோய் பராமரிப்பில் தாக்கம் செலுத்தும் பொருளாதார வசதி, வாழ்ந்த/வளர்ந்த விதம்). அதுவும் நாம் சிறுவயதில் ஏதாவது வகையில் oppressed செய்யப்பட்டிருந்தால் அது இந்நோயின் பாதிப்பில் தெளிவாகத் தெரியும் என்றும் சொன்னார்.

படம் எப்படியென்று நண்பர் படம் முடிந்தபோது கேட்டார்.

கடந்தகாலத்தின் 'நினைவு'களை அழிப்பதுதான் கஷ்டமானது, அதற்கு எதிராகத்தான் இன்றையபொழுது நிறைய போராடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நினைவுகளோடு வாழும் நாம் ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போலத் தோன்றுகினறது எனச் சொன்னேன்.

Alzheimer நோயோடு தத்தளித்துக்கொண்டிருப்பவர்க்கு, நினைவு/நினைவுபடுத்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினையாக இருக்கும் 
(Feb 27, 2015)


எது குறித்து அஞ்சியதோ அல்லது எவை குறித்து விமர்சனம் வைத்து எள்ளல் செய்ததோ, இறுதியில் எதிர்த்த பாதையிற்கே திரும்பிச் செல்லவேண்டியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

...அல்லது எதை எதிர்க்கின்றோமே, அதன் மீதே நமக்கு தீரா விருப்பு ஒருவகையில் வந்துவிடுகின்றது, ஆகவே அதையதை அதன் இயல்பில் விட்டுவிடலாம் என்று ஒரு கருத்தை மறைமுகமாய்ச் சொல்ல வருகின்றதெனில் அதைப் பாராட்டலாம்.எனக்கு செல்வராகன் முன்வைக்கும் காதல்களே அநேகமாய்ப் பிடித்திருக்கின்றன. மணி ரத்னமும், கெளதம் வாசுதேவனும் சித்தரிக்கும் காதல்களில் அழகியல் இருப்பினும் பார்க்கும்போது ஏதோ ஒருவகையான விலகல் வருவதுண்டு.துல்ஹருக்கும் நித்யாவிற்குள்ளும் முகிழும் உறவைவிட, பிரகாஷ் ராஜிற்கும் அவரது துணைவியாருக்கும் இருக்கும் காதல் நெகிழ்வாகவும் நெருக்கமாகவும் இருந்தது. 
(apr 19)


அண்மையில் ஒரு குறும்படம் பற்றி நிறையப்பேர் சிலாகித்து எழுதுவதைப் பார்க்கின்றேன். இப்படம் பல மாதங்களுக்கு முன் கருத்தையறிவதற்காய் எனக்கும் அனுப்பப்பட்டடது. இதில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் இப்படம் பொதுவெளியில் எல்லோருக்குமாய்ப் பகிரப்படும்போது அதை முன்வைக்கின்றேன். எனினும் முயற்சியிற்கு வாழ்த்துச் சொல்லி அந்த நண்பருக்குப் பதில் அனுப்பியிருந்தேன்.

அந்தப் படத்தின் கதை சொல்லும் பின்னணியைப் பற்றி சிறிது அறிந்தவர்கூட அதிலிருக்கும் பல வழுக்கள் பற்றி எளிதாய்ச் சொல்லிவிடமுடியும். மேலும் துயரத்தை ஓவென்று தொடர்ச்சியாக அழுதுதான் சொல்லவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. அப்படி திரையில் கண்ணீர் சிந்தாமலே நமக்குக் கண்ணீர் வரச்செய்த எத்தனையோ படங்கள் இருக்கின்றன.

சரி ஆகக்குறைந்தது திரையில் அழுகின்ற காட்சியைத் தவிர்க்கத்தேவையில்லை, ஆனால் அளவுக்கதிகமாக அழுவது நாம் கூறவந்த விடயத்தை நீர்த்துவிடச் செய்துவிடும் என்பதை அறிவதும் கூட கலையல்லவா? அவ்வாறு ஒரு முக்கியமான விடயத்தை நீர்த்துவிடச்செய்ததற்கு உதாரணமாக இங்கு நடந்த திரைப்படவிழாவிற்கு நடுவராக இருந்தபோது பார்த்த 'கிளிநொச்சி' என்ற ('நிழல்கள்' ரவி நடித்த) படம் நினைவுக்கு வருகின்றது.

இந்தப்படம் மோசமான படம் என்றல்ல நான் கூறவருவது. இதைவிட சிறந்த குறும்படங்களைப் பார்த்தவன் என்றவகையில் இதிலிருக்கும் பலவீனங்களைத் தெளிவாகக் கண்டடைய முடிகிறது என்பதையே குறிப்பிட விழைகிறேன். இன்னொருவிடயம், இந்தப் படத்தை இயக்கியவரின் நண்பர்கள் அல்லது புதியவர்கள் பாராட்டுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படங்கள் மீது பித்தமுள்ள, நான் மதிப்பவர்கள் பலர் கூட இதை விதந்து பாராட்டுவதைத்தான் சகித்துக்கொள்ள சற்று முடியாதிருக்கின்றது. அதிலும் ஒருவர் நீண்டகாலம் திரைப்படங்கள் பற்றி நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவர், இப்படத்தின் வழுக்கல்/அதீத உணர்ச்சி குறித்து எதுவுமே கவனிக்காது பாராட்டியதை வாசிக்கும்போது இவர்கள் எல்லாம் இதற்காகவா இவ்வளவு காலம் எழுதித்தீர்த்தார்கள் என்ற சலிப்பே வருகிறது.

மேலும் விருதுகள் நிறைய கிடைப்பதாலோ, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலோ மட்டும் ஒரு படம் நல்ல படமாகிவிடும் என்றுமில்லை. அத்ற்கு 'செங்கடல்' உட்பட நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு புதியவர், இளைஞர் என்றவகையில் இந்தப் படத்தை எடுத்தவரைப் பாராட்டுவதில் பிரச்சினையில்லை. ஆனால் துருத்திக்கொண்டிருக்கும் வழுக்களை முன்வைக்காத விமர்சனமில்லாத பதிவுகளால் நாம் அவரை முன்னகர்த்துவதற்குப் பதிலாக, புதைகுழியிற்குள் இறக்கிவிடும் ஆபத்தே உண்டு.

கடந்த சில வருடங்களில் கலை இலக்கியங்களில் கொஞ்சம் நம்பிக்கை தந்தவர்களையே அதீதமாய்ப் புகழ்ந்து அவர்களை ஒரே வட்டத்திற்குள் பரிதாபமாய்ச் சுழலவிட்ட உதாரணங்கள் நம்மிடையே நிறைய உள்ளன. மேலும் படைப்பிலக்கியங்கள் மீது காதல் கொண்டவர்கள் காத்திரமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒருபோதும் கடந்து செல்லவும் போவதில்லை. ஒரு படைப்பாளி இன்னும் சிறந்த படைப்புக்களைத் தரவேண்டும் என்று விரும்பினால் உரிய விமர்சனங்களை உரிய காலத்தில் தெளிவாய் முன்வையுங்கள். அதுவே ஒருவகையில் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கவும்கூடும்.
(feb 25)

வினோதினியின் 'முகமூடி செய்பவள்'

Tuesday, July 28, 2015


எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன்.

அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது சட்டென்று உற்சாகமான மனோநிலைக்கு வந்ததைப் பார்க்க அதிசயமாயிருந்தது. எப்போதும் ஒரு தொகுப்பை வாசிக்கும்போது அதில் ஐந்தோ/பத்தோ கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிட்டால் அதை ஒரு முக்கிய தொகுப்பாய் நினைத்துக்கொள்கின்றவன், நான். இதில் இப்படி நிறையக் கவிதைகள் இருந்ததால் சோர்ந்த மனது குதூகல நிலையை அடைந்ததோ தெரியவில்லை.

இப்போது சில கவிதைகள்:

அடையாளம்

பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கான அடையாளங்கள் பல.
அறிமுகங்கள் நிகழ்தலும்
அவற்றின் மூலமே

மகள் மருமகள் பெறாமகள் பேத்தி என
நீண்ட பட்டியல் இன்னும் நீள்கிறது
இற்றை வரை

பள்ளிக்கூடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல
அலுவலகத்தில் கறுப்பழகி
தலை நகரில்
பலர் இந்தியாக்காரி
சிலர் பறைத் தமிழச்சி என்றும் வியக்க
ஊரிலோ வேறு வழக்கு
திமிர் பிடித்தவள்
பெண்ணா இவள் என்றனர்

பெண்ணே என்றேன் உரத்து

(2001)


தமிழன்

மழை தொடாத வானம்
வெயில் சுகித்த நேரம்
நெடுந்தூரம் நடந்த களை
அலுவலக நண்பன் ஜோனும் நானுமாக
அவக்காடோ பழச்சாறு ருசிக்கையில்
அருகே வந்தான் அவன்

தமிழனுடையது கிடைக்கவில்லையோ
என்ற முணுமுணுப்புடன் காதுக்குள்

ஒரு கணம் உலகப் பெண்களின் கோபமெல்லாம்
என்னுள் ஊறியதை உணருமுன்
அவன் போய்விட்டிருந்தான்

இந்திரன் போல் உடலெங்கும் குறிகளோடு
அவனைப் படைத்து
ஒவ்வொன்றாய்ச் சீவி எறிதல் வேண்டும் நான்

(2003)

மேலே 'அடையாளம்' என்றெழுதப்பட்ட் கவிதை ஆழியாளின் 'பிறந்தவீட்டில் நானொரு கறுப்பி' எனத் தொடங்கும் கவிதையை ஞாபகமூட்டியது. இது ஒன்றின் பாதிப்பில் மற்றதில் இருக்கிறதென அதிகம் ஆராயாமல் எந்த ஒரு பெண்ணும் தனக்குரிய 'அடையாளம்' எதுவெனத் தேடும்/திணறும் வெவ்வேறு தனித்துவமான கவிதைகளாய் இவையிரண்டையும் நாம் பார்க்கமுடியும்.

ஒரு பெண்ணை எந்த ஒரு ஆணும் அடக்கிவிடமுடியும். ஆனால் அவளுக்கு மறைமுகமாய்ப் பழிவாங்கவும் தெரியும் என்பதை நுட்பமாய்ச் சொல்லும் ஒரு நீள்கவிதையில் முதற்பகுதி இவ்வாறாக...

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல

காதலித்த நாட்களில்
பகிர்ந்த முத்தங்களும்
பேசிய பல கதைகளும்
இருவருமாக நட்சத்திரங்களை வியந்ததும்
கடலைப் பாடியதும்
அவன் நினைவினிலில்லை.

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
இருளில் அவள் மீது படரும் அவன் மூச்சும்
அவள் விருப்பின்றித் தொடைகளைப் பிரிக்கும் விரல்களும்
அவளுக்கு ஒரு பொருட்டல்ல

நடு இரவில் தீச்சுடர்களென ஒளிரும்
இமைக்காத அவள் கண்களும்
தொடுகையில் நெகிழாத அவள் உடலும்
அவனை மறுதலிக்க
பெருமூச்சுடன் மறுபக்கம்
திரும்பித் துயில்கிறான் அவன்

புன்னகைத்தபடி யன்னலூடாகத் தெரியும்
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகின்றாள் அவள்.

.............

இத்தொகுப்பிலேயே எனக்கு மிக நெருக்கமாய் ஆன கவிதை ஒன்றிருக்கிறது, அது...

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு கவிதை

கடந்த நாட்கள் போலவே
இதுவும் இன்னொரு நாள்
மழையோ பனியோ அன்றி உணர்வோ
அதை மாற்றவோ பிற்போடவோ முடியாது.

அவன் எப்போதும் போலவே விழிக்கிறான்
யன்னலில் படிந்திருக்கும் பனியை முதன் முதலாகப்
பார்ப்பது போலப் பார்க்கின்றான்

அறையைச் சுற்றிவர அளவெடுக்கின்றன அவன் கண்கள்
ஒரு மெழுகுவரத்தியோடு கேக் இருக்குமா என்ற ஆவலில்
அன்றி ஒற்றை மலராவது,
இல்லை, இல்லவே இல்லை. அதற்கு வாய்ப்பில்லை.

அவன் உடைகளையும் இரவு படித்த புத்தகத்தையும்
பியர்க் குவளையும் தவிர வேறென்ன?

தன் தனிமையை உணர்ந்துகொள்கிறான்
ஒற்றை வாழ்த்துக்கூட இல்லை.
அவனது அறைக்குள் வர அவை எதற்கும் அனுமதியில்லை.
ஒரு சிறு பரிவுக்கேனும் விதியின்றி
வெறுமை சூழந்ததாகவே அந்நாளும்.
இருந்தும் அது அவனது வாழ்க்கை
கண்களைத் துளைத்தபடி துளிர்த்து விழுகின்றன துளிகள்
அவனால் அந்த நாளையும் வரவேற்க முடியவில்லை
பதிலாக அவன் தனக்கான
வாழ்த்துப்பாவைப் புனையத் தொடங்குகின்றான்.


உண்மையில் இந்தக் கவிதை முடிகின்ற இடந்தான் இன்னும் பிடித்திருந்தது. இவ்வளவு தனிமையுடனும் துயரத்துடனும் இருக்கும் ஒருவன் பெரும்பாலும் தனக்கான சாவுப்பாடலைத்தான் பாடக்கூடியவனாக இருப்பான் என நாம் நினைக்கும்போது, வினோதினி அந்த 'ஒருவனுக்கு' வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். வாழ்தல் என்பது நம்மை நாமே நேசிப்பதிலிருந்தும் தொடங்கலாமென்கின்ற ஒரு சிறுவிதையை வாசிக்கும் நம்மிடையே ஊன்றவும் செய்கின்றார்.

பெண் என்கின்ற தனக்கான அடையாளத்தைத் தேடும், வேற்றின ஆணோடு பழகுவதைப் பிடிக்கவில்லையெனச் சொல்கின்றவனுக்கு சாபமிடுகின்ற, தன்னை உதாசீனம் செய்கின்ற ஆணை நுட்பமாய் பழிவாங்குகின்ற பெண் மனதுதான், தனித்து துயரத்தோடு இருக்கும் ஒரு ஆணைப் பரிவுடனும் அணுகச் செய்கின்றது. அந்த ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான கவிதையை நீயே புனையென அவனுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.


( Mar 23, 2015)

The Theory of Everything

Thursday, July 23, 2015


உலகில் தம் திறமைகளினால் பிரபல்யமடைந்தவர்கள் நமது கவனத்தை எப்போதும் ஈர்த்தபடியிருப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் எமக்குத் தெரிவது அவர்களின் ஒருபக்க வாழ்க்கையென்றால், இன்னொருபுறம் அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு அவர்களைப்பற்றிய வேறொருவிதமான வாழ்க்கை தெரியவும் கூடும். முக்கியமாய், பிரபல்யம் அடைந்தவர்களின் துணைகள் அவர்களைப் பற்றி மனந்திறந்து பேசும்போது/ எழுதும்போது சிலவேளை நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் விம்பங்கள் உடைந்து நொறுங்கிவிடவும் கூடியவை. அந்த 'உடைத்தல்' எழுத்துலகத்திலிருந்து, விஞ்ஞான உலகம் வரை எல்லாப் பக்கங்களிலும் விரியக்கூடியது. 'The thory of everything' என்கின்ற இப்படம் ஸ்ரிபனின் (Stephen Hawking) முன்னாள் மனைவி ஜேன் எழுதிய 'Travelling to Infinity – My Life with Stephen' என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், ஸ்ரிபனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை விட அவரின் தனிப்பட்ட வாழ்வையே அதிகம் இந்தப்படம் ஊடுருவிச் செல்கிறது.

முக்கியமாய் motor neuron நோயினால் 20களிலேயே பாதிக்கப்பட்டு  2 ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழமுடியும் எனச் சொல்லப்பட்ட ஸ்ரிபனைக் காதலித்து திருமணமும் செய்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஜேன் சேர்ந்து வாழ்ந்துமிருக்கின்றார். கடவுளை மறுத்து பிரபஞ்சம் கருந்துளைகளிலிருந்து உருவாகியதென நம்பும் ஒருவரும், கடவுளிடமும் தேவாலயத்திலும் நம்பிக்கை கொள்கின்ற இன்னொருவரும் சேர்ந்து வாழ்வதற்கு காதலின்றி வேறெது காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

ஸ்ரிபனோடு வாழுங்காலத்திலே ஜேனுக்கு இன்னொருவருடன் காதல் வருவதும், அதை ஸ்ரிபன் ஒருவகையில் ஏற்றுக்கொள்வதுமென யதார்த்தத்தை உணர்ச்சித்தளத்திற்குள் அதிகம் கொண்டு செல்லாது படம் விரித்துச்செல்கின்றது. பிறகு அவரைப் பராமரிக்கும் தாதியோடு சேர்ந்து வாழ்வதற்காய் ஸ்ரிபன் ஜேனை விட்டுப் பிரிந்து போகின்றார். நிஜவாழ்வில் (படத்தில் இக்காட்சிகளில்லை) இதன்பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளின் பின் ஜேனும் ஸ்ரிபனும் விவாகரத்துப் பெற்று, இருவரும் தமக்குப் பிடித்தவர்களை திருமணஞ்செய்தும் கொள்கின்றனர்.

2008 திருத்தி/திருப்பி எழுதப்பட்ட ஜேனின் நினைவுகளின் நூலையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டபோதும், ஜேன் 1999ல்எழுதிய 'Music to Move the Stars: A Life with Stephen' நூலில் தன் திருமணம் குறித்து சற்று கர்ரசாரமாகவும் எழுதியதாகவும், பின்னர் சிலவற்றை மென்மையாக -திருத்திய நூலில்- மாற்றி எழுதியதாகவும் கூறப்படுகின்றது. ஆக, இரண்டாவது நூல் வெளிவந்தபோது ஜேனுக்கும் ஸ்ரிபனுக்கும் இடையில் ஒரு சுமுகமான உறவு மீண்டும் முகிழ்ந்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 
தன்னுடைய நோய் பற்றியோ அதன் வலியோ எதையும் தன் குடும்பத்திடம் மட்டுமின்றி, தன் நெருங்கிய துணையான ஜேனிடம் கூட ஸ்ரிபன் மனந்திறந்து பேசியதில்லை எனப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதுபோலவே ஜேன் நிறையக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எழுதிய Music to Move the Stars: A Life with Stephen பற்றிக் கருத்துக்கேட்டபோது, தான் தன்னைப் பற்றி எழுதப்படும் எந்த biography யையும் வாசிப்பதில்லை என்றே
ஸ்ரிபன் கூறியிருக்கின்றார். ஆனால் இந்தப் படத்தை ஸ்ரிபன் பார்த்ததோடு சில இடங்களில் தனது சொந்தக்குரலைப் பாவிக்கவும் அனுமதி கொடுத்திருக்கின்றார் என்றால், இத்திரைப்படம் அவரது சொந்தவாழ்க்கையிற்கு நெருக்கமாகத் திரைப் படமாக்கப்பட்டிருக்கிறதெனவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

The Beautiful Mind ற்குப் பிறகு பிரபல்யமான ஒருவரைப் பின் தொடர்ந்து எடுக்கப்பட்ட படங்களில் கவனிக்கத்தக்கதொரு படமிது. The Beautiful Mindல் நாஷ் தொடக்க காலத்தில் அவரைப் பராமரித்த தாதியொருவருடன் நெருங்கிப் பழகியதும், பின்னர் அந்தப் பெண் தான் கர்ப்பமெனக் கூறியபோது தன் குடும்ப வரலாறு/அந்தஸ்து காரணமாக அந்தப் பெண்ணை விட்டு நாஷ் விலகியவர் எனவும், ஆனால் அதைப் படமாக்கியபோது நேர்மையாகத் திரையில் காட்டவில்லை என்ற விமர்சனம் பின்னர் அப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு The Thory of Everythingல் முக்கியமான எதுவும் மறைக்கப்பட்டிருக்காதெனவே நம்புகிறேன்.

(Dec 17,2014)

நயோமி முனவீராவின் 'Island of a Thousand Mirrors'

Wednesday, July 22, 2015

குறிப்பு 01:

நயோமி முனவீராவின் Island of a Thousand Mirrors வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 1983ல் நடந்த ஜூலைக் கலவரம் பற்றி மிகுந்த வலியுடன் இந்நாவலில் அவர் பதிவு செய்திருக்கின்றார். அதிலும் அந்தக் கொடுங்காலத்தில் கர்ப்பிணியான தன் மனைவியை காரில் கூட்டிச்செல்லும்போது, கொல்லப்படுவதற்கு தயாரான நிலையிலிருக்கும் ஒரு தமிழ்ச்சிறுவனைக் காடையர்களிடம் இருந்து காப்பாற்ற முயல்வதில் தன்னுயிரை இழக்கும் ஒரு சிங்கள ஆண் பற்றி விபரிக்கப்படுகின்ற இடத்தை அவ்வளவு எளிதில் தாண்டிச் செல்லமுடியாது.. இந்த நாவலில் கதையைச் சொல்வதாய்க் கூறும் பாத்திரத்தின் மாமா/மாமியாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஜூலைக் கலவரத்தின்போது, குழந்தைகளையும் முதியவர்களையும் கூடக்கொல்லும் நாட்டில் தன் பிள்ளைகளை வளர்க்கமாட்டேன என்று கூறி, இந்தக் கதைசொல்லியின் தாய் வெளிநாடொன்றுக்கு குடும்பத்தினருடன் வெளியேறுகின்றார். நாவலில் சிங்களக் குடும்பங்களும் தமிழ்க்குடும்பங்களும் ஒன்றாய் வாழ்ந்த, அவர்களின் பிள்ளைகள் தமிழும் சிங்களமும், ஆங்கிலமும் கலந்த ஒரு கலப்புமொழியைப் பேசிய காலங்கள் இனி என்றைக்குமே வராதா என்பதைப் பற்றியே நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன்.

1983 நிகழ்வுகளால் மிகுந்த குற்றவுணர்வு அடைந்த ஒரு சிங்களச் சமூகம் இருந்ததை, இப்போதும் அதற்காய் வருந்திக்கொண்டிருப்பவர்களை அவர்களின் எழுததுக்களினூடாகப் பார்க்கலாம். இந்த நாவல், முன்பொருமுறை (2007) தமிழாக்கம் செய்த சிங்களக் கவிதையொன்றை வாசிக்க மீண்டும் நினைவுபடுத்தியது.


வன்மையான பிரார்த்தனை

சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.

கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்

போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.

இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது

இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.

எனக்கு ஞாபகத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை

கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.

நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு விகாரை
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.


-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
*Dagoda


(mar 11)


குறிப்பு 02:

Island of a Thousands Mirrors ஐ இப்போது வாசித்து முடித்தாலும், அதில் கடந்துபோக முடியாத பகுதிகள் எனப் பல இருக்கின்றன. முக்கியமான ஒரு தமிழ்ப்பெண் இராணுவத்தால் கூட்டாய் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்குவதை சில வரிகளால் கடந்துசெல்லாது, விபரமாக எழுதிய பகுதி மனதுக்கு மிகவும் அழுத்ததைக் கொண்டுவந்திருந்தது. நாவலை அப்படியே நிறுத்திவிட்டு நண்பரொருவருக்கு தொடர்ந்து வாசிக்கவே கஷ்டமாயிருக்கிறதென text செய்திருந்தேன். அவருக்கும் தொடக்கத்தில் இலங்கையில் நிகழ்ந்தது பற்றி அறியவிரும்புகின்றவர் என்பதால் இதை பரிந்துரைக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு அழுத்தமான பகுதிகளையெல்லாம் தாங்குவாரா என இப்போது யோசிக்கிறேன்.

நாவலின் முற்பகுதியில் ஒரு தற்கொலைப்போராளியின் சம்பவம் விபரிக்கப்பட்டு எப்படி இவர்களால் எளிதாய் உயிரைத் துறக்கமுடிகிறதென கேள்வி எழுப்பப்படும். அதன் காரணங்களைத் தேடிப்போகின்ற ஒருபுள்ளியாக பாலியல் வன்புணர்வு இருப்பதை வாசிப்பவர்கள் கண்டுணரமுடியும்.

(mar 12)


குறிப்பு 03:

நீங்கள் வாசிக்குமொரு நாவல் உங்களைப் பாதிக்கிறது. உங்கள் பதின்மக் காலங்களையும், போர் பற்றிய ஞாபகங்களையும் கிளறும் அந்த எழுத்தின் வீரியத்தை வியக்கின்றீர்கள். நாவலாசிரியருடன் உங்கள் வாசிப்பையும் நெகிழ்வையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றீர்கள். அவர் உடனேயே உங்களுக்குப் பதிலளித்தால் எப்படியிருக்கும்? அவ்வாறான ஒரு சந்தர்ப்பம்...

Hi Elanko,

I am so happy to hear from you and that you liked the book. I was very scared when I was writing it that I didn't know anything about the war zone and what you all went through. So it makes me very happy to hear that you connected with what I wrote.


-Nayomi


(apr 03)

ரொபர்டோ பாலானோவின் 'Woes of the True Policeman'

Sunday, July 19, 2015

ரொபர்டோ பாலானோவின் இந்த நாவல் ஓரினப்பாலினர் பற்றி அதிகம் பேசுகிறது. சிலேயில் பிறந்த பேராசிரியர், பார்சிலோனாவில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும்போது அங்கே படிக்கும் மாணவன் ஒருவனோடு தற்பால் உறவில் ஈடுபட்டதால் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றார். துணையை ஏற்கனவே இழந்த இந்தப் பேராசிரியர், தன் மகளைக் காப்பாற்றும் பொருட்டு, மெக்சிக்கோவின் (அமெரிக்க எல்லையிலுள்ள) ஒரு நகருக்கு இடம்பெயர்கின்றார்.
கதை பிறகு மெக்சிக்கோவிற்கும், ஸ்பெயினுக்குமென பேராசிரியர் - மாணவர் எழுதும் கடிதங்களினூடு நீளுகின்றன.

பேராசிரியருக்கு மெக்சிக்கோவிலும் ஒரு மாணவனோடு உறவு முகிழ்கிறது. ஒருகட்டத்தில் அவரது மகள் பேராசிரியரின் தற்பால் உறவைக் கண்டும் கொள்கிறார். இதற்கிடையில் மெக்சிகோவில் பேராசிரியர் இருக்கும் நகரில் இளம் பெண்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள். அதற்கான காரணங்களைத் தேடும் பொலிஸார் ஒருகட்டத்தில் பேராசிரியரின் கடந்தகால வாழ்க்கையை அறியும்பொருட்டு அவரையும் பின் தொடர கதை பல்வேறு திசைகளில் பிரிந்து போகின்றது.

போர்ஹேஸ் மீது மிகுந்த ஈர்ப்பிருக்கும் ரொபர்டோவை இந்த நாவலில் இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். பேராசிரியர் மொழிபெயர்த்திருக்கும் பிரான்ஸ் எழுத்தாளர் பற்றியே ஒரு தனிக்கதை இந்நாவலில் நகர்கின்றதென்றால், இன்னொரு புறத்தில் மெக்ஸிக்கோவின் ஒருபகுதியை பெல்ஜியத்தினரும் பிரான்ஸ்சுக்காரரும் தாக்கும்போது அங்கிருந்த மக்களால் துரத்தியடிக்கப்படுகின்ற பல நூற்றாண்டுகள் பின்னாலுள்ள வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகின்றது. ரொபர்டோ நமக்கு அறிமுகமான எழுத்தாளர்களோடு எப்படி தனது கற்பனை கதாசிரியர்களையும் உலாவ விடுகின்றாரோ, அவ்வாறே அவர் கூறும் வரலாறுகளும் உண்மையில் நிகழ்ந்தவைதானா என்ற சந்தேகம் இந்நாவலை வாசித்துக்கொண்டு போகும்போது வருவதும் இயல்பானது.

இந்நாவலில் வரும் பேராசிரியர் பாத்திரமே ரொபர்டோவின் புகழ்பெற்ற 2666ல் வேறொருவராக வருகின்றார். ஸ்பெயினில் இருக்கும் பாஹதியா தான் எழுதுவதாய்க் கூறும் god of homosexuals ஐ பற்றி வரும் விவரிப்புக்கள், குறிப்புக்கள், குழப்பங்கள், இடையில் தொடரமுடியாத் தவிப்புக்கள் எல்லாமே ரொபர்டோ எழுதிய 2666 பற்றியதுதானோ என்று ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பது கூட சுவாரசியம் தரக்கூடிய விடயம்.

இந்நாவலை ரொபர்டோ 1980களில் எழுதத்தொடங்கி அவர் இறக்கும் வரை  (2003)  தொடர்ந்து முடிவுறாத ஒரு நாவலலென, இந்நாவலின் பிற்பகுதியில் ரொபர்டோவின் மனைவி குறிப்பிடுகின்றார். ஆனால் இது நாவலே அல்ல, ரொபர்டோ தான் எழுதிய மற்றும் எழுத நினைத்த நாவல்களிற்கான பெருங்குறிப்புக்களே இவ்வாறு ஐந்து பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அவரது கணனியிலும் கையெழுத்துப் பிரதியிலும் இருந்ததென, ரொபர்டோ எப்படி தன் நூல்களை வெளியிடவேண்டும் என உரையாடிய இன்னொரு எடிட்டர் குறிப்பிடுகின்றார். ரொபர்டோ பிற்காலத்தில் அவரின் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
ஒருவரின் எழுத்து பெரும்புகழ் அடையும்போது, அவர்களின் முடிக்கப்படாத எழுத்துக்கள் பிரசுரமாவது கடந்தகாலங்களில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால் அப்படி வெளிவருபவை எழுத்தாளரின் விருப்பாய் இருந்திருக்குமா அல்லது எழுதியவரின் முழுமையான ஆக்கங்களை இவ்வாறு முழுமையடையாத படைப்புக்கள் வெளிவரும்போது பாதிக்கச் செய்யாதா என்பவை விவாதத்திற்குரியவை.

என்னைப் பொறுத்தவரை, ரொபர்டோ எப்படி தன் நாவல்களை எழுதியிருக்கின்றார், எவ்வாறு பல்வேறுவகைகளில் திருத்தித் திருத்தி வேறு திசைகளில் புனைவுகளை மாற்றியிருக்கின்றார் என்பதை அறிவதும், ரொபர்டோவின் நாவல்கள் எந்தப் புள்ளிகளில் முழுமையடைகின்றன என தெரிந்து கொள்வதும் கூட ஒருவகையில் சுவாரசியந் தரக்கூடிய ஒரு விளையாட்டுப் போல இருக்கிறது.

(நன்றி: எதுவரை)

வீடு திரும்புவதற்கான வழிகள்

Monday, July 06, 2015

Alejandro Zambraன் 'Ways of Going Home' நாவலை முன்வைத்து...

இந்நாவல் சிலியில் 1985ல் நிகழும் பூகம்பத்துடன் ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் நினைவுகளுடன் தொடங்குகின்றது.  நகரொன்றில் தமக்கான தனித்துவங்களுடனும் தனிமையுடனும் இருக்கும் மனிதர்களை பூகப்பம் ஒரேயிடத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றது. அப்போது சிலியில் பினோச்சேயின் இருண்ட ஆட்சி நடக்கின்றது. இந்தவேளை ஒன்பது வயதுச் சிறுவன், தன்னிலும் மூன்று வயது மூத்த கிளாடியாவைச் சந்திக்கின்றார். அவர் மீது வயதுக்கு மீறிய மெல்லிய ஈர்ப்பு சிறுவனுக்கு இருக்கின்றது. கிளாடியாவை ஈர்க்கும் நோக்கில், கிளாடியாவின் வேண்டுகோளிற்கிணங்க, அவரின் மாமா ஒருவரை இந்தச் சிறுவன் உளவு பார்க்கச் சம்மதிக்கின்றார். தனியே வசிக்கும் கிளாடியாவின் மாமாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காய், தன் பெற்றோரிடம் வயிற்றுக்குப்பிரச்சினை எனப் பொய்சொல்லி பாடசாலைக்குக் கூடச் செல்லாது, தீவிரமாய் வேவு பார்க்கின்றார்.

ஒருமுறை கிளாடியாவின் வீட்டில் ஒரு இளம்பெண் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அந்தப் பெண் எங்கே போகின்றார் என பின் தொடர்ந்து தொலைதூரத்திற்கு பஸ்சில் இச்சிறுவன் போகின்றார். பின்னாளில் கிளாடியா இன்னொரு பதின்மரை தன் நண்பராக அறிமுகப்படுத்துகின்றார். இனிமேல் கிளாடியா தன்னைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை என்கின்ற பொறாமை காரணமாக,  இந்த உளவு பார்க்கும் வேலை, தானாகவே இல்லாமற்போகின்றது.

இரண்டாவது அத்தியாயம், இந்நாவலை எழுதும் எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இன்னும் சொல்லப்போனால் மேலே கூறப்பட்ட முதலாவது அத்தியாயம், இந்த நாவலாசிரியரால் எழுதப்படும் ஒருநாவலின் பகுதியே ஆகும், இவ்வாறாக ஒரு நாவலிற்குள் இன்னொரு நாவலாக கதை வளர்கின்றது. நாவலாசிரியருக்கு எமெ என்கின்ற பெண்ணோடு நீண்டகால உறவு இருந்து இப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாவலாசிரியருக்குள் இன்னும் எமெ மீதான காதல் இருக்கின்றது.

இந்த இரண்டாம் பாகத்தில், அவர்கள் மீண்டும் நீண்ட இடைவெளியின் பின், சந்தித்துக் கொள்கிறார்கள். நாவலாசிரியர் வீட்டுக்கு வந்து, தங்கிவிட்டும் எமே போகின்றார். எனினும் இருவருக்குமிடையில் ஏதோ குறிப்பிட்டுச்சொல்ல முடியா புள்ளிகளில் விலகலும் இருக்கின்றது. நாவலாசிரியர் தன் நாவலை வாசிக்கச் சொல்லிக்கேட்கும், ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணங்களைச் சொல்லி எமெ அதை நிராகரித்தபடியே இருக்கின்றார். ஒருகட்டத்தில் எமேயிற்கு தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை வாசிக்க விருப்பமில்லை என்பதை இந்நாவலாசிரியர் அறிந்துகொள்கின்றார். எனினும் எமே, 'உனக்கு நாவல் எழுதுவதே பிடித்தமானது, தொடர்ந்து எழுதி நாவலை முடி' என்று உற்சாகப்படுத்துகின்றார். எனெனில் நாவலாசிரியர் தன் நாவலை எழுதுவதும் இடைநடுவில் நிறுத்துவதுமான மனோநிலையுடன் எப்போதும் போராடிக்கொண்டிருப்பவர்.

மூன்றாம் பாகம், மீண்டும் நாவலாசிரியர் எழுதும் நாவலிற்குள் போகின்றது. முதலாம் பாகத்தில் சிறுவனாக இருக்கும் சிறுவன், தற்செயலாக தன் குழந்தைமைக்கால நண்பியான கிளாடியாவை நீண்ட வருடங்களின் பின் சந்திக்கின்றார். கிளாடியா இப்போது நியூ யோக்கில் வசிக்கின்றார். அவருக்கு ஆர்ஜென்ரீனா காதலர் ஒருவரும் இருக்கின்றார். கிளாடியா, தன் தகப்பனின் மறைவிற்காய் சிலியிற்குத் திரும்பி வருகின்றார்.

அப்போது கிளாடியா தன் சிறுவயது இரகசியத்தை இந்த -வளர்ந்துவிட்ட- சிறுவனுக்குச் சொல்கிறார். பினோச்சேயின் ஆட்சிக்காலத்தில் கிளாடியாவின் மாமா எனப்பட்டவர் பினோச்சேயின் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பும் இயக்கத்திற்காய் ஒரு தலைமறைவுப் போராளியாகச் செயற்படுகின்றார். அத்துடன் கிளாடியாவின் மாமா எனப்பட்ட ராகுல், உண்மையில் கிளாடியாவின் தந்தையாகிய ரொபர்டோவே.

அன்றைய இருண்டகாலத்தில் கிளாடியாவின் மாமாவான ராகுலை ஆர்ஜென்ரீனாவிற்கு அனுப்பிவிட்டு, அவரின் அடையாளத்தில் ரொபர்டோ தலைமறைவாக சிலியில் இயங்குகின்றார். ஆகவே இயக்க இரகசியங்கள் அரசால் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதற்காய், அவர் கிளாடியாவின் குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்கின்றார். இப்படி ஒரு தலைமறைவு வாழ்வை தன் தகப்பனார் வாழ்கிறார் என்று கிளாடியாவிற்கு அவரின் தாயாரின் கூறப்பட்டாலும், அதை இரகசியமாக வைத்திருக்கச் சொல்லப்படுகின்றது. முதல்பாகத்தில் சிறுவனாக இருக்கும்போது அவர் பின் தொடர்ந்து பஸ்சில் போகின்ற இளம்பெண் வேறு யாருமல்ல, கிளாடியாவின் மூத்த சகோதரியே அது.

இந்த நாவலின் ஓரிடத்தில், 'நாம் யாரோ ஒருவரின் கதையை சொல்லத் தொடங்குகின்றோம், ஆனால் இறுதியில் நாம் நமது கதையையே சொல்லி முடிகின்றோம்' எனச் சொல்லப்படுவதைப் போல இந்நாவலாசிரியர் முதல் அத்தியாயத்தில் எழுதுவதாய்க் கூறும் கதையும், இரண்டாம் அத்தியாயத்தில் அவரைப் பற்றிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுவதும்.... எது நிஜம் எது புனைவு என்கின்ற இரண்டும் கலக்கப்பட்ட  ஓர் இடத்திற்கு  இந்நாவலை வாசிக்கும் நாங்கள் மூன்றாம் பாகத்தில் வந்தடைகின்றோம்.

தகப்பனின் மறைவிற்காய் நாடு திரும்பும் கிளாடியாவிற்கும் அவரின் மூத்த சகோதரிக்கும் -பூர்வீக வீடு யாருக்கு உரித்து என்பதில்- சச்சரவு வருகின்றது. கிளாடியா நமக்குக் கதையைச் சொல்பவரோடு வந்து தங்குகின்றார். பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் அவருக்கும் கிளாடியாவிற்குமிடையில் உடல்சார்ந்த உறவும் இயல்பாய் மலர்கிறது. ஒருநாள் சடுதியாய் கிளாடியா கதைசொல்லியின் பெற்றோரைச் சந்திக்கவேண்டும் எனவும், தான் சிறுவயதில் கழித்த நகருக்குப் போகவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார். கதை சொல்லியிற்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை. எனெனில் தன் இருபதாவது வயதில் வீட்டை விட்டு விலகியோடி, பகுதிநேரமாய் தானே உழைத்து பல்கலைக்கழகப் படிப்பையும் முடித்தவர். பெற்றோருக்கும் அவருக்குமிடையில் விலகல் வந்தற்கு, சொல்லப்படாத நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

மீண்டும் பெற்றோரிடம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரும்பும், கதைசொல்லியிற்கும் அவரின் தந்தையிற்கும் அரசியல் குறித்த புள்ளிகளில் முரண் உரையாடல் நிகழ்கின்றது. தந்தை  பினோச்சேயின் மறைமுகமான ஒரு  ஆதரவாளரென கதைசொல்லி குற்றஞ்சாட்டுகின்றார். அரசியல் சூடாகும் இரவுணவு வேளையில் எல்லோரும் ஒவ்வொரு தனித் தீவுகளாகின்றார்கள். கிளாடியா ஒரு பினோச்சே எதிர்ப்பாளரின் மகள் என கிளாடியா இல்லாத சமயத்தில் கோபத்துடன்  கதைசொல்லி பெற்றோரிடம் கூறுகின்றார். மகனுக்கும் தந்தையிற்கும் விரிசல் வந்ததைப் பார்த்த தாய், தாங்கள் அலெண்டேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லாததுபோல, பினோச்சேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லை என்கின்றார்.

உண்மையில் இது இவ்வாறான சர்வாதிகார/கொடூர ஆட்சியில் வாழ்ந்த தலைமுறையினருக்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் இடையில் வரும் -அவ்வளவு எளிதில் தீர்க்கமுடியாத- மிகப்பெரும் சிக்கல். ஹிடலரின் ஆட்சியில் இருந்த ஜேர்மனியின் தலைமுறையிற்கும், அத்ற்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கும் வந்த முரணும் இதுவே. அதைப் போன்றே சிலேயின் பினோச்சேயின் காலங்களில் தப்பிப்பிழைத்த தலைமுறையினர், பினோச்சேயின் காலங்களின் பின்னாலும் கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாவலின் ஓரிடத்தில் 'நாம் போர் முடிந்துவிட்டதென மீண்டும் வீடு திரும்புகின்றோம். ஆனால் உண்மை என்னவென்றால், போர் இன்னும் எங்களின் மனங்களில் முடியவே இல்லை என்பதாகும்' எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு பெரும் அழிவின் பின்னாலோ/கொடுங்கோல் ஆட்சியின் பின்னாலும் அவற்றின் வடுக்கள் அவ்வளவு எளிதில் மறைவதுமில்லை, மறைக்கவும் முடியாது.

ஒருநாள் தங்கலே இனிதாய் அமையாத நிகழ்வாய் கதைசொல்லியிற்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்பட்டுவிடுகின்றது. மீண்டும் தமது சொந்த நகருக்கு  கதைசொல்லியும் கிளாடியாவும் திரும்புகின்றனர். கிளாடியாவும் சிலநாட்களுக்குள், சண்டைபிடித்த தன் சகோதரியோடு போய்ச் சேர்ந்ததோடு, சிலியில் தனக்கு எதுவுமில்லை அமெரிக்கா மீளப்போகின்றேன் என்கின்றார். 'என்னை விட்டு உனக்கு இன்னொருத்தன் மீது பிடிப்பு வந்துவிட்டதா?' என கிளாடியாவின் ஆர்ஜென்ரினாக காதலரை நினைவில் வைத்து கதைசொல்லி கேட்கின்றார். 'என் மனதில் இப்போது எந்தக் காதலரும் இல்லை. ஆனால் அப்படியொருவர் இருப்பதாய் நீ நினைத்துக்கொள்வதுதான் நல்லது. எனென்றால் அப்போதுதான் என்னை உன்னால் மறக்கமுடியும்' என்கின்றார்.

இறுதி அத்தியாயத்தில், நாவலாசிரியர் எமெயிடம் 'நான் உன்னைப் பற்றித்தான் என் நாவலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நீ வாசிக்கவேண்டும்' என்கிறார். அந்தப் பிரதியை வாசிக்கும் எமெ, 'நீ நன்றாக நாவல் எழுதியிருக்கின்றாய். ஆனால் என்னைப் பற்றி நீ எழுதியதைவிட, நீ  உனக்கான கதையைத்தான் இதில் எழுதியிருக்கின்றாய்' என்கின்றார். இப்படி முன்னர் கணவன்-மனைவியாய் இருந்த இவர்கள் பிரிந்து மீண்டும் இணைந்தாலும், எந்த இடத்திலும் தாங்கள் பிறரைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எனெனில் அந்தத் திசையில் மீண்டும் போனால் இன்னொரு பிரிவே வரும் என்பதை இருவரும் நன்கு அறிந்திருக்கின்றனர் ஆனால் அதேசமயம் ஒரு இயல்பான உறவு தங்களுக்கிடையில் இப்போது இருக்கவில்லை என்பதையும் உணர்கின்றார்கள். ஒருநாள் எமெ -மீண்டும்- நாவலாசிரியரை விட்டுப் பிரிந்து போகின்றார்.

நாவலாசிரியர் மீண்டும் தனிமையுடனும், எழுதி முடியா நாவலின் பிரதியுடனும் இருக்கின்றார். சிறுவயதில் வந்த பூகம்பத்தைப் போன்று திரும்பவும் ஒரு பூமியதிர்ச்சி நகரத்தில் ஏற்படுகின்றது. 'எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா?' என விசாரித்தபடி நாவலாசிரியர் வீதிகளினூடாகச் செல்கின்றார். எமெயின் வீட்டிற்குள் சென்று எமெ எவ்வித ஆபத்துமில்லாது இருக்கின்றாரா எனக் கேட்க விரும்புகின்றார். ஆனால் எமெ நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு எமெயைச் சந்திக்காது அவரது வீட்டைத் தாண்டிச் செல்கின்றார். எமெயிடம் அவருக்கு இன்னும் அன்பும் பரிவும் இருந்தாலும் அவர்களுக்கிடையில் இனி காதல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதாக நாவல் முடிகின்றது.

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த இரண்டு நாவல்களைச் சேர்ந்த மூன்றாவது நாவலை வாசகர்களான நாங்கள் என வாசிப்பதென மாயச்சுழல் நிறைந்த வாசிப்பைத் தருகின்ற புதினம் இது. கிளாடியாவும், எமெயும் ஒரே பாத்திரத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்று தோன்றச் செய்வது போல கதைசொல்லியும், நாவலாசிரியரும் ஒருவரோ எனச் சந்தேகத்தையும் வாசிக்கும்போது இது தரக்கூடியது.

இந்நாவலில் வரும் நாவலாசிரியர், கிளாடியாவின் பாத்திரத்தை உருவாக்கி நாவலொன்றை எழுதத்தொடங்குவது, அவர் தன் நடைமுறைவாழ்வில் தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்ட மனைவியான எமெயுடன் மீண்டும் இணைந்துகொள்வதற்கான முயற்சியேயாகும். ஆகவேதான் தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை எமெ வாசிக்கவேண்டுமென ஒவ்வொருபொழுதும் விரும்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த நாவலை வாசிப்பதை எமெ ஒத்திவைப்பதுடன் இறுதியாய் வாசிக்கும்போதுகூட நீ என்னைப் பற்றி எழுதியிருக்கின்றாய். அது உன் பார்வையினூடு பார்க்கும் நானே தவிர, உண்மையான நான் அல்ல எனத்தான் சொல்லவும் செய்கின்றார்.

இறுதியில், நாவலாசிரியரால் அந்த நாவல் பூர்த்தியாக்கப்படவுமில்லை. எமெ மீண்டும் திரும்பி வந்து அவருடன் சேரவுமில்லை. ஆனால் பினோச்சே காலத்தின் இருண்ட பக்கங்களும், அமைதியாக்கப்பட்ட குரல்களும், மனச்சாட்சிகளின் குற்ற வாக்குமூலங்களும் முடிக்கப்படாத பிரதியிலிருந்து வாசிக்கும் நமக்கு கடத்தப்படுகின்றன. அதுவும் முக்கியமானதே.

வீடு திரும்புதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அவ்வாறு வீடு திரும்பியவர்களுக்கும், அவர்கள் விட்டு விலகிச் சென்றதைப் போல, அந்தப் பழைய சூழ்நிலைகள் அப்படியே திரும்பவும் வாய்ப்பதுமில்லை. எவரெனினும் வீடு திரும்புகின்றார்களோ, இல்லையோ, அவர்களால் நினைவுகள் என்றென்றைக்குமாய் சுமந்துகொண்டிருக்கும் வரலாறு எனும் வீடுகளிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பியோடவும் முடிவதில்லை.


(நன்றி: 'அம்ருதா' - 2015, ஜூன் இதழ்)

கடந்த இரவு (Last Night)

Tuesday, June 30, 2015


உறவுகள் என்பது எவ்வளவு அழகானவையோ அதேயளவிற்கு சிக்கலானவையும் கூட. ஏதோ ஒரு தருணத்தில் உறவுகளில் ஏற்படும் சிறுகீறல்கள், சிலவேளைகளில் ஒரு அழகானபாடலைப் போன்று இசைத்துக்கொண்டிருக்கும் வாழ்வைச் சிதைத்தும் விடக்கூடியவை. மைக்கல், ஜோனா என்ற தம்பதிகளிற்குள் இரு இரவுகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், 'கடந்த இரவு' எப்படி எல்லாவற்றையும் சிக்கலாக்கின்றது என்பதையும் பேசமுயல்கின்றது இத்திரைப்படம்.

எல்லாம் போதுமானதாய் இருந்தும், அதற்கப்பால் எதையோ மகிழ்விற்காய்த் தேட விரும்பும் மனங்களையும், இயல்பிலேயே மனிதர்கள் polygamy ஆனவர்களா, அதனால்தான் infidelity மீது மறைமுகமான ஈர்ப்புடையவர்களாய் இருக்கின்றார்களா என்பதையும் பார்ப்பவரிடையே கேள்விகளாய் இது முன்வைக்கின்றது.

மைக்கலும், எழுத்தாளரான ஜோனாவும் ஒரு விருந்திற்குச் செல்கின்றார்கள். அங்கே மைக்கல் மீது அவரோடு சேர்ந்து வேலை செய்யும் லோராவிற்கு மெலிதான மையல் இருப்பதை ஜோனா கண்டுகொள்கின்றார். அதன் நிமித்தம், அவர்கள் இருவருக்குமிடையில் ஏதோ ஒரு உறவு இருக்கிறதென சந்தேகத்துடன், மைக்கலோடு ஜோனா சண்டைபிடிக்கவும் செய்கின்றார். மைக்கல், லோராவுடன் வேலை சார்ந்த நட்பிற்கப்பால் எவ்வித நெருக்கமுமில்லையென மறுக்கின்றார். ஒரு விருந்து, சந்தேகங்களுடன் குலைந்துபோனாலும், பின்னிரவில் ஜோனாவும் மைக்கலும் சமாதானத்திற்கு வருகின்றனர். அடுத்தநாள் மைக்கல், லோராவுடன் வேலை நிமித்தம் நியூயோர்க்கிலிருந்து இன்னொரு நகருக்குப் புறப்படுகின்றார்.

அதேநாளில் ஜோனா தற்செயலாய் தன் பழைய காதலனான அலெக்ஸை கோப்பிக்கடையொன்றில் சந்திக்கின்றார். அவரோடு அன்றைய பகலும் இரவும் கழிகின்றது. ஜோனாவிற்கு அலெக்ஸ் மீது ஈர்ப்பு வந்து அவரோடு நெருக்கமாய் அன்றைய பொழுதைக் கழித்தாலும், உடலுறவு சார்ந்த ஒரு புள்ளியிற்கு அது போகும்போது விலகிக்கொள்கிறார்.

இதேசமயம் இதுவரை எந்த உறவுமே முகிழ்ந்திருக்காத மைக்கலுக்கும் அவரது வேலையிட நண்பியான லோராவிற்கும் உடல்சார்ந்த உறவு நிகழ்கின்றது. அன்றைய உறவின் பின்னான இரவில், ஜோனா மைக்கலிற்கு எழுதி ஆடையிற்குள் மறைத்துவைத்திருந்த -என்னை மன்னி, நானுன் நேர்மையை நம்புகின்றேன் - என்ற குறிப்பை வாசித்து, மைக்கலிற்கு குற்றவுணர்வு இன்னும் பெருகுகின்றது. இரண்டு நாள் நிகழ்விற்காய் சென்ற மைக்கல், ஒருநாளிலேயே வெளியேறி, தன் துணையான ஜோனாவிடம் அதிகாலை திரும்புகின்றார்.

ஜோனா யன்னலினூடாக அழுதபடி எதையோ வெறித்துப் பார்த்தபடியிருக்கின்றார். அவருக்கு மைக்கலின் -முன்னரான- வீடு திரும்பல் ஆச்சரியத்தைத் தருகின்றது. ஏன் கருத்தரங்கு முடியமுன்னர் திரும்பினார் என வினாவுகின்றார். 'நான் உன்னைக் காதலிக்கின்றேன், அதனால்..' என்கின்றார். இன்றைய நாளில் அருமையான மதியவுணவுடன் நமது பொழுதைக் கொண்டாடுவோம் எனச் சொல்லவும் செய்கின்றார்.

'அப்படியே செய்வோம்' எனச் சொல்லும் ஜோனாவை மைக்கல் அணைக்கும்போது, ஜோனா கடந்த இரவு அணிந்துசென்ற பார்ட்டி ஸூ அவரது கண்களுக்குத் தெரிவதோடு, ஜோனா அணிந்திருக்கும் உள்ளாடைகள் விருந்தொன்றுக்காய் அணிவதற்கானவை என்பதையும் கண்டுகொள்கிறார். அத்தோடு சட்டென்று இருண்ட திரை மூடி, படம் முடிகின்றது.

உறவுகள் அழகாய் இருந்தாலும் மனித மனங்கள் அதற்கப்பால் எதையாவது தேட விழைகின்றதா என்பதோடு, infidelity என்பதை உடலுறவு சார்ந்து மட்டும் மதிப்பிடமுடியுமா என்பதையும் கேள்வியாக இத்திரைப்படம் முன்வைக்கின்றது. ஜோனா, மைக்கலுடன் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனபோதும், அவர் தன் பழைய காதலன் அலெக்ஸ் பற்றி எதுவுமே சொல்லவில்லை. மேலும் மைக்கல் மற்ற நகருக்குப் போய் தொலைபேசி அழைக்கும்போதுகூட - அலெக்ஸோடு பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் ஜோனா- தான் தன் நண்பனோடு நிற்கின்றேன் என்பதைச் சொல்வதுமில்லை. ஆனால் மைக்கலுக்கு லோராவோடு நிகழ்ந்த உடல்சார்ந்த உறவு போன்ற சந்தர்ப்பம் ஜோனாவிற்கு அலெக்ஸோடு வந்தாலும் அவர் அதைத் தடுக்கின்றார், தாண்டிப் போகின்றார்.

மைக்கலின் ஜோனாவுடனான உறவு, பெளதீக உடல் சார்ந்தது என்பதால் நமக்கு infidelity வெளிப்படையாகத் தெரிகின்றது, ஆனால் ஜோனா அலெக்ஸோடு முத்தமிட்டு தனக்கு இருக்கும் காதலை வெளிப்படையாகக் காட்டினாலும் ஏதோ ஒரு இடத்தில் விலகிப்போகின்ற இடம் நுட்பமானது. அவ்வாறு நிகழ்வது பலருக்குள் இருக்கும் 'ஒழுக்கம்' சார்ந்த மீறமுடியாத ஒரு மதிப்பீட்டின் நிமித்தமாய்க் கூட இருக்கலாம். அப்படியாயின் இன்னொருவனின் மீது இயல்பாய்க் காதல் கொள்ளும் ஜோனாவை infidelityயிற்குள் சேர்க்கமுடியுமா என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
  

இத்திரைப்படம் முடிகின்ற இடங்கூட முக்கியமானது. இனி ஜோனா-மைக்கல் வாழ்வில் என்ன நிகழும் என்பதை திறந்த வெளியாக விட்டிருக்கின்றது. ஜோனா மைக்கலின் பாத்திரங்களினூடாக பார்ப்பவர் தமக்கான கதைகளையும் அவை எழும்பும் வினாக்களையும் தங்களுக்குள் வினாவிக் கொள்ளலாம். முக்கியமாய் ஒழுக்கம் என்பதை நாம் இன்னுமின்னும் இறுக்கமாக்கும்போது மனித மனம் அதை மீறவே விரும்புகின்றது. ஆக polygamy என்பது இயல்புதானோ? இல்லாவிட்டால் 'life is short, have an affair' என்று அண்மைக்காலங்களில் திருமணத்திற்கப்பாலும் உறவுகளை அமைக்கலாம் என்று வெளிப்படையாகத் தொடங்கப்பட்ட Ashley Madison வகையான இணையத்தளங்கள் இந்தளவு பிரபல்யமும் அடைந்திருக்காதோ?

Last Night தவறவிடக்கூடாத ஒரு வித்தியாசமான படமல்ல. எனக்குப் பிடித்த Keira Knightley, Eva Mendes போன்ற நடிகைகள் இருந்தாலும் அவர்களை சரியாய்ப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாய் இதைப் படமாயிருக்கமுடியும். மைக்கலுக்கும் லோராவிற்கும் முகிழும் உறவு -முக்கியமாய் அவர்களுக்கிடையிலான உரையாடல்கள்- செயற்கைத்தனமாகவே இருக்கின்றது.


இப்படத்தின் கச்சிதமற்ற திரைக்கதையிற்கப்பாலும் இது எழுப்பும் மனித மனம் சார்ந்த சில சிக்கலான கேள்விகள்தான் முக்கியமாய்ப்படுகின்றது.  


(Apr 24, 2015)
 படங்கள்: கூகிள் தேடல்

நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்

Monday, June 22, 2015


அந்நியன்

மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை.

இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது.  அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண்ணைப் போல, பெருநகருக்குள் இருந்தாலும் அவ்வளவு சப்த்மில்லாத ஓரிடம்.

சிலர் நாய்களோடு நடந்துகொண்டிருக்கின்றார்கள்.  வேறு சிலர் இணைகளாய் கைகோர்த்து கதைபேசிக் கொண்டு செல்கின்றார்கள். சலிப்பான நாளாந்த வாழ்விலிருந்தும், பேரிரைச்சலிருந்தும் வெளியே இப்படிக் கொஞ்சநேரமேனும் தப்பிவிட்டவர்களைப் பார்க்கும்போது அந்நியனுக்கு ஏதோ நெருக்கமும் நெகிழ்வும் அவர்கள் மீது பெருகுகிறது.

வானம் சாம்பலாகிப் போகும்போது கடலும் அதே வர்ணம் பூசி மென் அலைகளோடு மிதந்துகொண்டிருக்கிறது. 'சாம்பல் வானத்தில் மறைந்த வைரவர்கள்' மீண்டும் தோன்றக்கூடிய தருணமாகக் கூட இது இருக்கக்கூடும். கடலையொட்டி நீண்ட நெடிய செம்மண் பாதை அருகிலியிருப்பதும் ஓர் அதிசயமென்றுதான் கூறவேண்டும். நீர் அரித்த சிறு மண்குன்றுகள் இன்னமும் நம்பிக்கையை இழ்ந்துவிடாத இயற்கையின் பெரும்சக்தி பற்றி எதையோ சொல்ல முயல்கின்றன. மனிதர்கள் அவ்வளவு ஏறாத ஒரு மலையில் யாரோ படுக்கையை மரங்களைக் கொண்டமைத்து தங்கி விட்டுப் போயிருப்பதை காணக்கூடியதாய் இருக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களிடமிருந்து தப்பியோடி, தம் மனச் சிலந்திகளின் வலைப்பின்னல்களிலிருந்தும் தப்பிக்க முயற்சித்ததன் ஒரு தடயமாக இது இருக்கவும் கூடும்.

அந்நியன் நடந்தபடி போய்க்கொண்டிருக்கின்றான், பாதையும் முடிவுறாது விரிந்துகொண்டேயிருக்கிறது. இதற்கு முன் பலமுறை வந்தபோது இருந்த பாதையைப் போல இதுவில்லையென அவனது காலடிகள் வியந்துகொள்கின்றன. காலமும் வெளியும் இல்லா இடத்தில் வாழ்வு என்பது சாத்தியமா என்பதைவிட, காலமும் வெளியும் நம் மனதிற்கேற்ப நீட்சியும் விரிவும் கொள்ளக்கூடியதா என்பதைப் பற்றி யோசிக்கின்றான்.

பறவைகள் வசந்தத்தின் முதற்பாடலை பனித்தூவல்களிடையே இசைத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சிறகடிக்கின்றன. ஒருவகைப் புல்லினம் தன்னைவிட இரண்டு மடங்கு உயரத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து அந்நியன் திகைக்கின்றான். மெல்லியதாய்த் தட்டினாலே முறிந்துவிடக்கூடிய இந்தப் பொன்னிறப்புற்கள் இப்படி வளரமுடியுமென்பதும் இயற்கையின் விந்தைதான் என வியந்துகொள்கிறான். யாரோ ஒருவர் சமாதானக் குறியீடை நடக்கும் பாதையில் வரைந்து விட்டுப் போயிருக்கின்றார். வியட்னாமில் அமெரிக்கா போர் நடத்தியபோது போருக்கு எதிராக எழுந்தவர்கள் அமைதியிற்காய் முன்வைத்த ஓர் அடையாளம் அது. அந்நியனுக்கு அது எதையெதையோ நினைவுபடுத்துகிறது. வெளியுலகமும் அகவுலகமும் தளும்பாது அமைதியான ஓரு வாழ்வு முறையைக் கொண்டவர்கள் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களென நினைத்துக்கொள்கிறான். அந்த அடையாளத்திற்கு அருகிலேயே 'நான் அமைதியை நேசிக்கிறேன்' என மெல்லிய பனியோடு குழைந்துபோன மண்ணில் எழுதிவிட்டு நகர்கின்றான்.

தொடர்ந்து நீளநடக்கும் அந்நியன் யாரோ ஒருவர் சிறுபாறையில் வைத்துவிட்டுப் போயிருக்கும் அன்னை மேரியின் திருவுருவைக் காண்கிறான். மேரியின் முகத்தில் பரவும் சாந்தம் இயற்கையோடு  இரண்டறக் கலக்க முடிந்த ஒருவரினால் மட்டுமே சாத்தியமானது போலத் தோன்றுகின்றது. செய்த பாவங்களுக்கும், இனி செய்யப்போகும் பாவங்களுக்குமாய் என்னை மன்னித்துவிடுங்கனென, கடல்விரியும் பின்னணியில் நிற்கும் மேரியைப் பார்த்து வேண்டிக்கொள்கிறான். 'உன்னைப் போன்றவர்களின் பாவங்களை வாங்கிக்கொள்ளத்தானே என் மகனை அனுப்பி வைத்தேன்' என்பதை மேரி சொன்னாற்போல் தோன்றியது. அனுப்பப்பட்ட எல்லாக் கடவுள்களையும் கொன்றுவிட்டு,  கடவுளர்களும் கைவிடப்பட்ட ஒரு கழிவிரக்கக் காலத்தில் அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென அந்நியனின் உதடுகள் முணுமுணுத்துக்கொள்கின்றன.

மேனியில் பனி இலவம்பஞ்சாக மிதந்து வந்து தொடுகின்றன. பின்னர் அவை சொற்பக்கணத்தில் உருவமிழந்து நீராகக் கரைந்தும் போகின்றது. இரண்டு கரிய அணில்கள் பாதையின் குறுக்கே ஓடுகின்றன. ஒன்றையொன்று சீண்டி விளையாடுகின்றன. பல பத்தாண்டுகள் உயிர்த்திருக்கும் முதிய மரங்களின் அடிப்பாகங்களில் பசுமை வர்ணங்களைப் பூசி நிற்கின்றது. “April's air stirs in/willow-leaves.../a butterfly/floats and balances” என்கின்ற பாஷோவின் ஸென் படிமம் அந்நியனுக்கு நினைவில் வந்து தெறிக்கிறது.

நெடுந்தூரம் நடந்தாயிற்று சற்று இளைப்பாறுவோமென, ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்கிறான். சாம்பல் பூசிய வானமும் கடலும் விழிகளுக்குள்ளும் அதே வர்ணத்தைக் கொண்டு வந்துவிட்டாற்போல் தோன்றுகின்றது. இறுதியில் நாம் எதுவுமற்றவர்களாகப் போகும்போது எந்த வர்ணத்தில் இருப்போமென யோசிக்கின்றான் அந்நியன். 'காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்' என்ற பாடல் எங்கிருந்தோ ஒலிப்பதாய்த் தோன்றுகின்றது. தொலைவிலிருந்து அல்ல, தன் ஆழ்மனப் படிமம்தான் அதை இசைக்க விரும்புகிறது என்பதை அறிந்து உடலை உதறிப்பார்க்கின்றான்.

மனிதர்கள் அவனின் முதுகின் பின்னால் கதைத்துக்கொண்டும், உலாத்திக்கொண்டும் மறைந்து கொண்டிருக்கின்றார்கள்.யாரோ ஒருவர் ஓடி வருவதாய்க் காலடிச்சத்தங்கள்  நெருங்க, திரும்பிப்பார்க்கையில் மென் நீலநிற ஸ்வெட்டருடன்  ஒரு பெண் ஓடுவதைப் பார்த்து புன்னகைக்கின்றான்.

கடலைப் பார்த்தபடிமெல்ல மெல்லத் தன்னை மறக்கின்றான், அந்நியன். சப்பணமிட்டு பாறையில் அமரும்போது ஏதோ ஒரு அமைதி வந்துவிடுகின்றது போலும். குதிரைச் சத்தங்கள் கேட்கின்றன. யாரோ காட்டுக்குள் விறகு வெட்டுவதாய்க் காட்சிகள் விரிகின்றன. எதுவெனச் சொல்லமுடியாத நறுமணம் கூட சூழ்ந்துகொள்கின்றது. மெல்ல மெல்ல தானில்லாத ஏதோ ஒன்றில் கரைந்துபோய்க்கொண்டிருக்கின்றான்.  ஒருபொழுது கடல் ஊழியாய் தன்னை உள்ளிழுத்துக்கொள்ளும்போது தான் உடலற்ற ஒருவனாய் ஆகுவதையும் பார்க்கின்றான்.

எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருந்தான், எதில் கரைந்திருந்தான், எங்கு தன்னைத் தொலைத்திருந்தான் என்பதன் 'காலமும் வெளியும்' உணராது விழிகளைத் திறந்தபோது, அருகிலொரு பெண் இருப்பதைக் காண்கின்றான். அவளுக்கு, முன்னர் பார்த்த ஓடிக்கொண்டிருந்தவளின் சாயல் இருப்பதைப் போலத் தெரிகிறது.

'உன்னைத் தொந்தரவு செய்துவிட்டேனா?' என்கிறாள் அவள்

'இல்லையே' என்கிறான் அந்நியன்.

'நான் சிலதடவைகள் இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கொண்டிருந்தேன். நீ இங்கேயே நீண்டநேரமாய் உட்கார்ந்திருந்தாய்'

'சும்மா கடலைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். ஆனால் மனம் எங்கெங்கோ இழுத்துச்சென்றிருக்கிறது'

'இப்படி ஒருவர் நீண்டநேரம் அமர்ந்திருந்தது வியப்பாகவும், ஆனால் அதேசமயம் பயமாகவும் இருந்தது; அதுதான் அருகில் வந்து உட்கார்ந்திருந்தேன்.'

'ஏன், கடல் என்னைக்கொண்டு போய்விடும் என யோசித்தாயா?'

'பலவிதமாய் யோசித்தேன். அவற்றில் ஒன்றில் நீ குறிப்பிடுவதுந்தான்.'

'பிரச்சினைகள் இருந்தால்தான் தனிமையில் இருக்கவேண்டும் என்றில்லைத்தானே?'

'உண்மைதான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது தனித்தே அதை அனுபவிக்க விரும்புகின்றவள். இல்லாவிட்டால் இப்படியும் கூறலாம். தனித்திருக்கும்போதே மகிழ்ச்சியின் உச்சத்தை உணரமுடிகிறது என்னால்.'

'நீ கதைப்பதைப்பார்த்தால், புத்தரை அறிந்து வைத்திருப்பது போலத் தோன்றுகின்றது'

'ஆமாம். நான் புத்தனைப் பின் தொடர்பவள்'

'புத்தரைத் தெருவில் கண்டால் கொன்றுவிடவேண்டும் என ஸென் கூறுகிறது, எப்படி நீ புத்தரைப் பின் தொடர்பவளாகச் சொல்லமுடியும்'

'நானுமொரு புத்தராக மாறும்போது புத்தரைக் கொன்றுவிடுகின்றேன். இப்போது புத்தரைப் பின் தொடர்வதைவிட வேறு வழியில்லை'

'விழிப்படைந்த மனதுக்கு புத்தரோ ஜீஸசோ பெயர்கள் மட்டுமே. அதற்கப்பால் எந்த வரலாற்றையோ எதிர்காலத்தையோ அடையாளப்படுத்துவதில்லை'

'நாங்கள் தேநீர் அருந்தப் போவாமா?'

'என்னைப் போன்ற அந்நியன் ஒருவனை எப்படி நம்பி அழைக்கின்றாய்?'

'புத்தர்கள் நமக்கு முன் சாட்சியமாய் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்தான்'

'புத்தர் சாட்சியாய் இருக்க கொலைகள் புரிந்த வரலாறு நான் பிறந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றது'

'சிலுவைகளை எடுத்துக்கொண்டு கடல்கடந்து வந்தவர்கள் இங்கேயிருந்த ஆதிக்குடிகளை வதைத்த வரலாறுதான் இங்கேயும் நடந்திருக்கிறது'

'மானுடத்தால் நிகழ்ந்த பேரிடர்கள் இல்லாத ஒரு நிலப்பரப்பை இனிக் கண்டடைதல் சாத்தியமேயில்லை'

'உண்மைதான். ஆனால் இயற்கையிற்கு ஏதோ ஒருவகையில் எல்லாவற்றையும் ஆற்றும் சக்தியிருக்கிறது'

'வரலாற்றை எளிதாய்க் கடந்துவரச் சொல்கின்றாயா?'

'இல்லை, இயற்கையின் முன் நாமெல்லோரும் மிகச்சிறிய துளிகளே என்றுணரும்போது நமது அதிகாரத்தின் போலித்தனங்கள் தெரியும் எனச் சொல்ல வருகின்றேன்'

'சரி, நாம் தேநீர் அருந்தச் செல்லலாம்'


அவன்

என் பிரிய புத்தா,  இந்த மாலைவேளை மங்க மங்க, ஏன் என் மனதும் ஒளி குறைந்து போகின்றது? 'எதையாவது அறிவது என்றால் முதலில் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும்' என்ற உன் வார்த்தையைப் போல இதுவும் இருந்தால் நல்லதிற்கு என்று இருந்திருப்பேன். ஆனால் மனமேன் ஒரு பூனையைப் போலச் சோர்ந்து சுருண்டு படுத்திருக்கின்றது என்று விளங்கவில்லை. எல்லோரும் 'உனக்கு விடுதலை தருவது எப்படி' எனப் பேசித்திரிகையில், நீதானே முதன்முதலில் 'உன் சுயத்திலிருந்துதான் உனக்கு முதலில் விடுதலை  வேண்டும், அதைக் கவனி' என எல்லாவற்றையும் புரட்டிப்போட்டவனல்லவா?

உன்னோடு ஆறுதலாக அமர்ந்து அருந்துவதற்கெனத்தானே ஒரு பழமைவாய்ந்த வைன் போத்தலை நீண்டநாட்களாய் குளிர்பதனப்பெட்டியில் வைத்து காத்துக்கொண்டிருக்கின்றேன். சென்றமுறை வீட்டுக்கு வந்தபோது எப்போதும் மனம் உறுதியாய் முடிவுகளை எடுக்கமுடியாது சஞ்சலம் அடைகிறதே, நான் உறுதியானவாய் மாறும்வரை அருகில் இருக்கக்கூடாதா என்றல்லவா புத்தா உன்னிடம் கேட்டிருந்தேன். நீயோ புன்னகைத்தபடி, 'ஒரு மாணவர் எப்போது கற்றுக்கொள்ளத் தயாராகின்றாரோ அப்போதே அவருக்கான ஆசிரியர் முன்னால் தோன்றிவிடுகின்றார்' எனச் சொல்லி,  அப்படியே நீ வாழ்வில் எதையாவது கற்றுக்கொள்ளத் தயாராகும்போது நானும் உன் முன்னால் வந்துவிடுவேன் என்றல்லவா கூறிச் சென்றாய்.

நான் இந்த அறையில் தனிமையை நிரப்பியபடி வெளியில் சிறுகுன்றைப் போல விரியும் நிலத்தில் எழுந்த மரங்களையல்லவா விழியெறிந்தது பார்த்தபடியிருக்கின்றேன். இங்கே எந்நேரமும் பல்வேறு குருவிகளின் ஒலி காற்றில் கரைந்தபடியே இருக்கின்றது. இதுவரை இந்தப் பனிதேசத்திற்கு வந்தபின் கேட்டமுடியா சில்வண்டுகளின் ஒலியையும், காகங்களின் கரைதலையும் கேட்டிருக்கின்றேன் என்றால் நீயும் மகிழத்தான் செய்வாய்.

இயற்கையை உற்றுப் பார்க்க பார்க்க, உள்மனதின் ஆழங்களுக்குப் போவது ஒரளவிற்கு சாத்தியமாகின்றது. உள்ளே பார்த்தலும், பிறகு எதுவுமில்லையெனத் தெளிதலிலுந்தான், எவரும் பிறப்பதுமில்லை எவரும் மறைவதில்லை என்ற உன் சூத்திரங்கள் உருவாகின்றனவோ தெரியாது.

எதைத்தான் நான் சரியாகக் கற்றிருக்கின்றேன்? நீ கூட என்னைப்போன்றவர்களுக்கு முதன்முதலில் வெறுப்பின் அரசியல் திருவுருவாக அல்லவா அறிமுகமாகினாய். உன் பீடங்களில் அரளிப்பூக்களையும் தாமரைப்பூக்களையும் பரப்பவேண்டியவர்கள்,  வேறு மொழிபேசுகின்றார்கள் என்ற ஒரேகாரணத்திற்காய், என் இனத்தவர்களின் இரத்தத்தையல்லவா ஊற்றி உனக்குப் புது உருவம் கொடுத்திருந்தார்கள்.

இப்போது மட்டுமென்ன, 'நீ வேண்டாம் வேண்டாம் என கதறக் கதற இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு, அரசமரங்களின் முன் வைத்துவிட்டு இந்தத் தலைமுறைக்கும் வெறுப்பின் அரசியலை அவர்கள் புகட்டவில்லையா? எதைத் திணிக்கின்றார்களோ, அதற்கான எதிர்ப்பு விசை இன்னும் வீரியமாய் மேலெழும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? இல்லை,  இன்னொரு மொழியைப் பேசினாலும் முன்னொரு காலத்தில் உன்னையும் தங்களின் வழிகாட்டியாகக் கொண்டு வழிபட்டவர்கள் தமிழர்கள் என்கின்ற உன் மெல்லிய குரலை, புத்தா, யார்தான் கேட்கப்போகின்றார்கள்?

உறவு, நட்பு, காதல் என எல்லாவற்றையும் தப்பும் தவறுமாய்க் கற்றுக்கொள்கின்ற ஒருவன், உன்னையும் நீ கூறிச்சென்றவைகளையும் ஒழுங்காய்க் கற்றுவிடுவான் என்பதை நீ நம்பப்போவதில்லைதான். ஆனாலும் புத்தா, ஏனிந்த தளும்புகின்ற மாணவனைத் தேடித் தேடி  நீ அடிக்கடி வருகின்றாய்? இவனது இந்தத் தனிமை உன்னையும் அச்சுறுத்துகின்றதா? குறித்த நேரத்தில் வருவேன் என்ற புத்தன் வரவில்லை, ஆதனால் என்னை மாய்த்துக்கொள்கின்றேன், இந்த முடிவுக்குக் காரணம் புத்தன்தான் காரணம் என்றொரு குறிப்பை எழுதிவிட்டு போய்விடுவேன் என்ற அச்சத்திலா, எத்தனையோ அவசர வேலைகளிருக்க என்னைத் தேடி வருகின்றாய்?

அப்படியிருக்கவும் சாத்தியமில்லை. எத்தனை அரிய மனிதர்கள் இந்த உலகில் வந்தமாதிரியே சட்டென்று போய்விடுகின்றார்களே. நான் யார் என்றும், இந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்றும் தேடித் தேடிக் களைப்புறும்போது ஒவ்வொருபொழுதுமல்லவா நீ என் முன்னால் தோன்றுகின்றாய். நீ என்பதே எவரும்/எதுவும் இல்லையெனத் தெளிய இன்னும் கொஞ்சத் தூரந்தான் இருக்கிறதென - அது எவ்வளவு நீண்ட பயணமாய் இருந்தாலும்- என்னை உற்சாகப்படுத்தத்தானே  இந்தப் பனிக்குள்ளும், சுழன்றாடும் காற்றுக்குள்ளும் மெல்லிய ஆடையையை அணிந்தபடி வருகின்றாய்.

புத்தா, உன் திருவடிக்கு நான் மீண்டும் ஒரு தாமரைப் பூவோடு எனக்குப் பிரியமான ஒருவரோடு  மலையேறுவதற்குள் ஒருமுறை என்னைச் சந்திக்க வந்துவிடு. உனக்காய்த் தயாரித்து ஆறிப்போன தேநீரைத் திரும்பத் திரும்ப சூடாக்கிக்கொண்டு இருப்பதும் கஷ்டமாயிருக்கிறது. இது புத்தனுக்குத் தயாரித்த தேநீர் என்பதால் எவராலும் அருந்தமுடியாது. 'எதைப் பற்றி நினைக்கின்றாயோ, அதுவாக நீ ஆகின்றாய்' என்று மென்மையாப் போதித்தவன் நீ. இந்தக் கணத்தில் என் நினைப்பெல்லாம் என்னிலிருந்து எனது 'நானை' எப்படி விடுவிடுப்பது என்பதே.


அந்நியனும், அவளும்

அந்நியர்களை நேசிப்பவர்கள் சிலவேளைகளில் கைவிட்டாலும் நேசம் கைவிடுவதில்லை. தாம் கிறுக்குத்தனமாய் இருப்பதால்தான் எவரும் நெருங்குவதில்லையென அந்நியர்கள் நினைத்துக்கொண்டாலும், அவர்களின் கிறுக்குத்தனத்தின் மீது அபரிதமான நேசத்தையுடையவர்கள் இந்த உலகில் இருக்கின்றார்கள்.

அலைவரிசைகள் வெவ்வேறு வெளியில் மிதந்துகொண்டிருந்தாலும், அவை தமக்கான காலத்தையெடுத்து எப்படியோ நெருங்கிவந்துவிடத்தான் செய்கின்றன. இயற்கை ஒரு காலத்தில் மரங்களில் இலைகளை உதிர்க்கச் செய்வதும், பின்னர் துளிர்க்கச் செய்வதும் போன்ற  விந்தையைப் போன்றதுதான் இது.

தேநீர் குடிப்பதுடன் மென்நீலப்பெண்ணுடன் தொடங்கிய சந்திப்பு மேலும் மேலும் நீளத்தொடங்கின.  அந்நியனுக்கும் அவளுக்கும் பிடித்த மலையேற்றம் செய்வதும், சைக்கிள் ஓடுவதும் என சேர்ந்து பொழுதுகள் கழியத்தொடங்கின.  காடுகளையும் வாவிகளையும் அவர்கள் தேடியலைந்தனர். அடிக்கடி, செல்லவேண்டிய இடங்களுக்குப் போகாது தொலைந்துபோய்க்கொண்டிருந்தாலும் அதுவும் அவர்களுக்குச் சுவாரசியமாக இருந்தன. இலக்குகளை விட இலக்குகளற்ற அலைதல்களிலேயே விடுதலையும், மிகப்பெரும் வியப்புக்களும் இருப்பதையும் உணர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

ஒருமுறை மலையேற்றம் செய்தபோது, எங்கேனும் ஓரிடத்தில் காம்பிங் அமைத்து ஓரு சில நாட்கள் தங்குவதென தீர்மானித்திருந்தனர். இயன்றளவு இயற்கையிடமிருந்தே எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்து பார்ப்பதன் ஒரு முயற்சியாக அதைத் தீர்மானித்திருந்தனர். நான்கைந்து மணித்தியாலங்கள் மலையேறிப் போய் தமது கூடாரத்தை அமைத்துக்கொண்டார்கள். எவரும் பயிரிடாமலே முளைத்திருந்த காளான்களையும், ரெட்டிஷ்களையும் சேகரிக்க முடிந்திருந்தது. ஏற்கனவே வரும்வழியில் சோளப்பொத்திகளை எடுத்தும் வந்திருந்தனர். சிறு அடுப்பில் நீரைக் கொதிக்க வைத்த சோளத்தை மணிகளாய் உதிரச்செய்து சூப் செய்தார்கள். காளான்களையும் ரெட்டிஷ்களையும் வெந்தும் வேகாமலும் அவியவிட்டு சாப்பிட்டார்கள்.

அன்றைய மாலைதான் அவர்கள் இருவரும் தம் உடல்களின் வர்ணங்களை, இயற்கையைச் சாட்சியாக வைத்து அறிந்துகொண்டார்கள். கனவுகள் நுரைத்துப் பெருகும் கலயங்களை, மொழிகள் தாண்டிய வரைபடங்களை உடல்கள் தமக்குள் ஒளித்து வைத்திருந்த இரகசியங்களை வியப்புடன் உள்ளெடுத்துக்கொண்டனர்.

மரங்கள் சூழ்ந்த ஏகாந்தம் எல்லா தளைகளையும் அறுக்கச் செய்தன. ஆடைகள் எல்லாம் உதறியெறிந்து சூரியனுக்கு தம் நிர்வாணங்களை படையிலிட்டார்கள். இனி மலையேறிக் கீழே போகும்வரை ஆடைகள் எதுவும் அணிவதில்லையெனவும் மகிழ்ச்சியின் எல்லையில் நின்று உரத்துச் சொல்லிக்கொண்டார்கள்.

சூரியன் மறைந்து, இருள் மெல்ல மெல்ல அடர்ந்துவந்தபோதும் தம்மை மறந்திருந்தார்கள். எப்போதுமே தன்னை வெறி பிடித்த நாய்போலத் துரத்திக்கொண்டிருக்கும் காமம், அருகில் ஒருத்தி நிர்வாணமாய் இருந்தபோதும், வாலைச் சுருட்டி அமைதியாக இருந்ததைக் கண்டு அந்நியனுக்கு வியப்பாக இருந்தது. காமத்தைத் தாண்டிப்போய் காமத்தை இரசிக்க முடிகின்ற கணத்தில் எல்லையற்ற பேரின்பத்தின் தெறிப்பு இருக்கிறதென அந்நியன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

அவளே,  தான் எதுவுமின்றி உதிரும் பெரும் பயணத்தின் முதல் ஒளியைக் காட்டியவளென விபரிக்கமுடியாப் பேரன்புடன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

மயிர்கள் அடர்ந்த அல்குலிலிருந்து, யாரோ ஒருவன் தேநீருடன் காத்துக்கொண்டிருப்பதும், புத்தர்  அவன் வீடு தேடிச் செல்வதும்  காட்சிகளாய் விரியத்தொடங்கின.  இது எப்படி இவளின் உடலிற்குள்ளிருந்து சாத்தியமென வியப்பும் திகைப்பும் கலந்து அவதானிக்கையில்,  அந்த 'அவனும்' புத்தரும் தாமரை இதழ்களாய் மாறி எண்ணற்ற வட்டங்களாய் விரிந்து எதுவுமற்றவர்களாய் ஆகிக்கொண்டிருப்பது நிகழத்தொடங்கியது.

சட்டென்று, 'நீதான் எனது புத்தர், சந்தேகமேயில்லை' என அவளின் காதுக்குள் முணுமுணுத்தான்.

விழிகள் மூடிக் கிறங்கிக்கிடந்த தருணத்திலும், 'பாதையில் புத்தரைக் கண்டால் கொல்லவேண்டும் எனச் சொன்னவன் நீ 'என்றாள் அவள்.

'நீயும், நானும் வேறுவேறானவர்கள் இல்லை என்று தெரிந்தபின், இப்பிரபஞ்சத்தில் எவரும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்பதையும் அறிந்தேன்' எனச் சொல்லி அவளின் விழிகளிரண்டிலும் மெல்ல முத்தமிட்டான்.

அவள் தீராக் காதலுடன் இன்னும் இறுக்கி அணைத்தபோது, அந்நியன் ஒரு முயல்குட்டியாய் உருமாறியிருந்தான்.


(நன்றி: 'உரையாடல்' - இதழ் 03)