கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வி.வி. கணேசானந்தனின் 'சகோதரனற்ற இரவு'

Tuesday, August 27, 2024

Brotherless Night by V.V.Ganeshananthan


இ
லங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து பதற்றமான சூழ்நிலையில் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றது. 1956 சிங்களத் தனிச்சட்டம், இன்னொரு இனத்தின் மீதான மொழியின் மீதான வெறுப்புக்கு உதாரணமானது. அதன் நீட்சியில் நடந்த தமிழர் மீதான படுகொலைகள் 1956, 1958 இல் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டில் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்துக்கு ஏறியவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவேதான் பின்னரான காலங்களில் அநியாயமாக மனித உயிர்கள் பல்லாயிரக்கணக்கில் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை சுதந்திரம் பெற்றபின் எந்த ஒரு தசாப்தத்திலும், முழுநாட்டும் அமைதியாக இருந்த காலங்கள் என்று பார்த்தால் அரிதாகவே இருக்கும். தமிழர்களின் மீதான சிங்களப் பேரினவாதத்தால் பின்னர் 1977, 1983 காலங்களில் படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.  பின்னர் முற்றுமுழுதாக நாடு போரிற்குள் 2009வரை அமிழ்ந்திருக்கின்றது.

இவ்வாறாக பல்வேறு சூழ்நிலைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், யாழ்ப்பாணம் என்கின்ற ஒரு நகரைப் பின்னணியாக வைத்து வாசுகி கணேசனாந்தன் 'சகோதரனற்ற இரவு' (Brotherless Night) ஐ எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் 1980-1989 வரை நடந்த நிகழ்வுகள் பல இங்கே சொல்லப்படுகின்றன. 

 

சசி என்கின்ற பெண்ணே இந்தக் கதையை நமக்குச் சொல்கின்றார். சசிக்கு நான்கு ஆண் சகோதரர்கள். அந்தக் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியராக வர விரும்புகின்றவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் சசியின் மூத்த சகோதரன் நிரஞ்சன் வைத்தியராகத் தயாராகி விட்டிருந்தார். சசி அவரின் சகோதரர்கள் சீலனோடும், அவரின் நண்பரான 'கே'யுடனும் சேர்ந்து உயர்தரப் பரிட்சைக்காய்ப் படிக்கின்றார். அப்படிப் பழக்கமாகின்ற கேயுடன் சசிக்குக் காதல் வருகின்றது. அது ஒருவகையான 'யாழ்ப்பாணத்துக் காதல்'. சொல்லியும், சொல்லாமலும், தெரிந்தும், தெரியாமலுமாக முகிழ்கின்ற நேசமென எடுத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் காலத்தில்யேயே இவர்கள் படிக்கச் செல்லும் யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்படுகின்றது. தமிழர்களின் ஒரு நீண்டகால வரலாற்றைச் சொல்லும் பல நூல்கள் அழிந்து போகின்றன. இந்தக் காலங்களில் யாழில் பொலிஸ் மீதான தமிழ் இளைஞர்களின் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இந்தத் தாக்குதல்களினால் பொதுசனமாக இருந்த கேயும், சசியின் சகோதரர்களும் பொலிஸால் விசாரிக்கப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.

சசி உயரதரப்பரிட்சையில் சுகவீனம் காரணமாக முதற்தடவை சிறப்பாகச் செய்யவில்லை. மறுமுறை பரிட்சைக்குப் படிக்க அவர் அவரது மூத்த சகோதரனான நிரஞ்சனோடு கொழும்புக்குப்ப் படிக்க அனுப்பபடுகின்றனர். இப்போது நிரஞ்சன் ஒரு வைத்தியசாலையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆகிவிட்டார். சசியும், நிரஞ்சனும் அவர்களின் அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருக்கின்றனர். இந்த காலகட்டத்தில்தான் கொழும்பில் ஆடி-1983 தமிழர்களுக்கெதிராக நிகழ்கின்றது. கிட்டத்தட்ட 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள், தமிழ் மொழி பேசுகின்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காய் அடையாளமிட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலையில் ஒருமாதிரியாக சசியும், அவரின் அம்மம்மாவும் தப்பி யாழ் வந்து சேர்கின்றார்கள். துன்பியல் நிகழ்வாக, இன்னொரு நண்பருடன் தெஹிவளைக்குச் சென்ற நிரஞ்சன் என்றென்றைக்குமாய்த் திரும்பாமல் காணாமற் போகின்றார். பிறகு சில மாதங்களுக்குப் பிறகு நிரஞ்சன் சிங்களக்காடையர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று கொழும்பில் இருந்த வேறொரு குடும்பத்தால் உறுதிப்படுகின்றது. சசி மிக நெருக்கமான ஒருவரின் இழப்பை வாழ்வில் முதன்முதலாகச் சந்திக்கின்றார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிவரும் சசிக்கு, அவர் நேசிக்க விரும்பும் 'கே' மட்டுமில்லை, அவரது இரண்டு சகோதர்களான சீலனும், தயாளனும் புலிகள் இயக்கத்தில் சேர்வதைக் காண்கின்றார். சில வருடங்களில் மருத்துவத் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட சசி, அஞ்சலி என்கின்ற அவரது பேராசிரியரைப் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றார். அஞ்சலியினதும், அவரின் துணைவரான வரதனினும் நட்பானது சசியினது வாழ்க்கையை வேறொரு திசையில் அழைத்துச் செல்கின்றது. இதே காலகட்டப் பகுதியில் இந்திய இராணுவம், 'அமைதிபப்டை' என்கின்ற பெயரில் இலங்கைக்குள் வந்து இறங்குகின்றது.

புலிகளுக்கும், இந்திய் இராணுவத்துக்கும் போர் மூளத் தொடங்குகின்றது. இந்தக் காலத்தில் புலிகள் போராட்டத்தின் பெயரில்' எனச் செய்யும் கொலைகளைப் பார்த்தபடி, அதை அவ்வப்போது அவரின் வீட்டுக்கு வரும் அவரின் சகோதரர்கள், கே உள்ளிட்டோரோ சசி விவாதிக்கின்றார். காயடையும் புலிகளை, ஒரு மருத்துவர் என்றரீதியில் சசி காப்பாற்றவும் செய்கின்றார். ஒருவகையில் இங்கே சசி இருதலைக் கொள்ளியாக ஒருபக்க்கம் சகோதரர்கள்/காதலர் கே புரிந்துகொள்கின்றவராகவும், மறுபுறத்தில் அநியாயமாக பலர் கொலைசெய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகத் தவிர்க்கின்றார்.

இதே காலகட்டப்பகுதியில் கே புலிகளின் சார்பில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார். அந்த உண்ணாவிரதத்தின் ஒவ்வொரு நாள் நிகழ்வும் விபரமாக இங்கே விபரிக்கப்படுகினறது. கே யின் மீது நேசம் வைத்த சசி, அவரின் இறுதி மூச்சுவரை அந்த உண்ணாவிரத மேடையில் ஒரு வைத்தியராக இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில்நிலைமை இன்னும் மோசமாகின்றது. இந்திய இராணுவம் உள்ளிட்ட இயக்கங்களின் பொதுமக்கள் மீதான‌ வன்முறையை பேராசிரியர்களான அஞ்சலியும், வரதனும் எழுத்தில் பதிவு செய்கின்றனர். அந்த இரகசியான செயற்பாட்டில் சசி தன்னையும் இணைத்துக் கொள்கின்றார். ஒருமுறை இந்திய இராணுவத்தால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பிரியா என்கின்ற பெண்ணுக்கு சசி வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கின்றது. பிரியாவின் நான்கு சகோதரர்களும் பிரியா வன்புணர்வு செய்யப்பட்ட நாளில் இந்திய இராணுவத்தால் கொல்லப்படுகின்றனர். சசி, பிரியா இதன் வன்புணர்வினால் கருத்தரித்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார்.

இனியும் யாழ்ப்பாணத்தில் சசியை வைத்திருக்க முடியாதென, சசியையும், அவரது கடைசிச் சகோதரனான ஆர்யனையும் இங்கிலாந்துக்கு சசியின் பெற்றோர் அனுப்புகின்றனர். இதன் நிமித்தம் கொழும்பில் நிற்கும்போது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்று கொழும்பில் நடக்கின்றது. அந்த‌  தற்கொலைப் போராளி வன்புணர்வுக்குள்ளாகி கருத்தரித்திருந்த பிரியா என்பதை ஒருவகையில் சசி கண்டடைகின்றார்.

இங்கிலாந்தில் கொஞ்சக்காலம் வசித்துவிட்டு சசி மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்புகின்றார். அப்போது அஞ்சலியைப் புலிகள் கடத்திக் கொண்டுபோய் காணாமற் செய்துவிடுகின்றார். காணாமற்போன அஞ்சலியின் உடைமைகளைப் புலிகள் வந்து எடுத்துச் செல்லுமாறு அவரின் கணவரான வரதனிடம் சொல்கின்றார். அஞ்சலியின் இருப்புக் குறித்து விசாரிக்க வரதனும், சசியும் புலிகளின் முகாமுக்கு செல்கின்றனர். அந்த முகாம பொறுப்பாளாரான 'ரி' என்பவருடன் சீலனும் நிற்கின்றார். 

காணாமற்போய்விட்ட அஞ்சலி இறந்துவிட்டார் என்பதை அறிந்து பல்கலைக்கழக மாணவர்கள், பொதுசனங்கள் அவ்வளவு அச்சத்துக்கு நடுவிலும் ஒரு பேரணியைச் செய்கின்றார். அதில் முன்னே போகும் வரதன் அதுவரை எழுதப்பட்ட இரகசிய அறிக்கைகளில் ஒன்றை வெளியிடுகின்றனர். அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தோடு வரதனும், சசியும் தலைமறைவாகின்றனர். அதுவரை இரகசியமாக எழுதப்பட்ட இரண்டு யாழ்ப்பணத்தின் குறிப்புகளை ஒரு நூலாக சசி தன்னோடு கடத்திக் கொண்டு வருகின்றார். அதை அவர் ஒருநாள் நியூயோர்க்கிலிருக்கும் ஐ.நா சபையில் சமர்பித்துப் பேசுகின்றார். இவ்வாறு 1980 ‍வரை யாழ்ப்பாணத்தில் நிகழும் சம்பவங்களினூடாக கதை சொல்லப்படுகின்றது. இறுதியில் அது 2009 இற்கு ‍ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்திற்குத் தாவிவிடுகின்றது.

இப்போது போரில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பி வந்த சீலன், அவரின் சகோதரியான சசியிடம், அங்கே அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்ற ஐ.நாவில் சென்று பேசக் கேட்கின்றார். முதலில் மறுத்தாலும், ஒரு தவறான நபர், சரியான விடயத்தைக் கேட்கும்போது அதைச் செய்யாது தட்டிக் கழிக்கமுடியாதெனச் சொல்லி சசி ஐ.நாவுக்கு  இறுதி யுத்தம் பற்றிப் பேசச் செல்கின்றார். அத்துடன் நாவல் முடிவடைகின்றது.

 

இலங்கை பற்றியோ, ஈழப்போராட்டம் பற்றியோ ஆங்கிலத்தில் எழுதப்படும் புதினங்களில் 1983 இனப்படுகொலை மையமாக இருப்பதை அவதானிக்க முடியும். ஒருவகையில் கொழும்பில் நடைபெற்ற அந்த இனவழிப்பால் சாதாரண மக்கள் மட்டுமில்லை, கொழும்பு வாழ் உயர்வர்க்க தமிழ்ச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளானது. அவர்களில் பெரும்பானமையினரே இதே முன்னிட்டு வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களாவார். அவர்கள் அதை பல்வேறுவகையில் இதை ஆவணப்படுத்தினார்கள், பேசினார்கள் என்பதால் அடுத்து வரும் தலைமுறை என்ன நடந்தது என்று பார்க்க ஆவணங்கள் கிடைத்தன. 1983 முக்கிய பேசுபொருளாக ஷியாம் செல்வதுரை, மேரி ஆன் மோகன்ராஜ் போன்றவரக்ளின் புதினங்களில் மட்டுமில்லை, சிங்களப் படைப்பாளியான நயோமி முன்னவீராவின் படைப்புக்களில் இருப்பதைக் காண்கின்றோம். ஒருவகையில் அதுவே இலங்கை அரசியலின் திருப்புமுனை என்பதாலும் 1983 பேசாது இலங்கையில் அண்மைக்கால வரலாற்றைப் பேசமுடியாது.

 

1983 இற்குப் பிறகு போரின் ஒரு காலகட்டத்தைப் பதிவு செய்த ஆவணமாக ராஜினி திரணகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் பதிப்பிக்கப்பட்ட 'முறிந்த பனை'யைக் கூறலாம். இது இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குள் நடந்த காலப்பகுத்யில் இந்திய இராணுவத்தாலும், புலிகள், ஈபிஆர் எல் எப் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களாலும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைச் சொல்கின்றது. ஒருவகையில் முறிந்தபனையும் இல்லாவிட்டால் நமக்கு இந்திய இராணுவ காலத்தின் துயரத்தைச் சொல்ல எந்த ஆவணமும் இல்லாது போயிருக்கும்.

வாசுகி கணேசானந்தன் இரண்டு இரண்டு முக்கிய காலப்பகுதிகளின் ஆவணங்களை உசாத்துணையாக வைத்து எழுதியிருக்கின்றார். ஆனாலும் அவர் இதை புறவயமாக சம்பவங்களினூடாக எழுத முயற்சித்திருப்பது ஒருவகையில் பலவீனமாக அமைந்துவிடுகின்றது. மூத்த சகோதரனை 1983 கலவரத்துக்கு பலி கொடுத்து, இன்னொரு சகோதரனான தயாளனை ஈழப்போராட்டத்துக்கு காவு கொடுத்து, அவரின் பிரியமான பேராசிரியரான அஞ்சலியை இயக்கத்தின் பழிவாங்கலுக்கு அநியாயமாக இழந்த சசி என்கின்ற பெண்ணின் அகவுலகினூடு ஒர் அற்புதமான கதையை வாசுகி சொல்லியிருக்க முடியும். ஆனால் அவர் இந்த இழப்புக்கள் ஒவ்வொன்றையும் மிக வேகமாக தாண்டிச் செல்வதால் சசியின் பாத்திரத்தினூடாக வாசகர் நுழைந்து பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது.

 

மேலும் இந்நாவல் 1980 ‍வரை நடந்த பல சம்பவங்கள் விரிவாக சொல்லப்பட்டு, சட்டென்றும் 2009 இற்குப் பாய்ந்து சென்றுவிடுகின்றது. அந்த இடைவெளியுள்ள 20 ஆண்டுகளில் ஈழத்தில் யுத்தம் இன்னும் கோரமாக நிழந்திருக்கின்றது. இரண்டு தலைமுறை அதற்குள் தோன்றி போரைத் தவிர வேறு தெரிவில்லை எனவும் வளர்ந்து வந்திருக்கின்றது. வாசுகி கதையை 1989 இல் முடித்திருக்கலாம். அவர் 2009 தாவியதால், இரண்டு தலைமுறையின் வாழ்வை வரலாற்றில் இருந்து இல்லாமற் செய்கின்றார்.

 

 

வாசுகி 1970களில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெற்றோருக்கு 1980இல் பிறந்தவர். அவர் இந்த நாவல் நடக்கும் காலப்பகுதியில் நம்மைப் போல ஈழத்தில் இருக்கவோ, போரின் எந்தத் துளியாலும் தீண்டப்படாதவர். படைப்பாளியாகவும், பேராசிரியாகவும் இருக்கும் வாசுகி ஒரு வெளியாளின் பார்வையில் இவை எழுதப்பட்டதென்கின்ற குறிப்புக்களை நாவலின் தொடக்கத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாவல் பெரும்பாலும் நடந்த சம்பவங்களையும், அசல் மனிதர்களின் கதைகளையும் சொல்கின்றது. 

 

இந்த நாவல் கே என்கின்ற பாத்திரத்தில் வருவது புலிகள் இயக்கத்து திலீபன் என்பதும், அஞ்சலி என்ற பெயரில் வருவது ராஜினி திரணகம் என்பதும் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியது. போருக்கு வெளியே, போரால் நேரடியாக பாதிக்கப்படாத ஒருவராக இருக்கின்றேன் என்றுதான் அனுக் அருட்பிரகாசம் இறுதிப்போர்க்காலத்தையும், அதன் பின்னரான காலத்தையும் வைத்து இரண்டு அருமையான நாவல்களை எழுதியபோது நமக்கு அறிவுறுத்துகின்றார். அவ்வாறாக தம்மை இந்த யுத்தப் பின்னணியில் எங்கே இருக்கின்றோம் என அடையாளப்படுத்துவது- முக்கியமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனைவு எழுதும்-  எந்தப் படைப்பாளியும் செய்யவேண்டிய நல்லதொரு காரியமாகும். ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் எழுதும் வாசுகி மட்டுமில்லை தமிழில் எழுதுபவர்களும் இந்தத் தவறைத் தெரிந்தே செய்கின்றார்கள்.

 

இலங்கையில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது சிங்களப் பேரினவாதமும், அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கும் இனவாத மத அரசியல் கட்சிகளும் ஆகும். ஆகவேதான் இன்று யுத்தம் முடிந்தபின்னும் இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி ஏற்படாமல் இருக்கின்றது. அந்தப் பேரினவாதத்திற்கு காலத்துக்காலம் ஒரு எதிரி தேவைப்பட்டபடி இருக்கின்றது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதைப் போல அந்த எதிரிகளாக சிறுபான்மை இனங்களும், அவர்களுக்குள் தோன்றும் இயக்கங்களும் அமைந்துவிடுகின்றன. சிலவேளைகளில் சிறுபான்மையினர் பலிகொடுக்க தயாராக இல்லாதபோது, இதே பேரினவாதப் பிசாசு தன் இருப்புக்காய், நீதி/நியாயம் கேட்டுப் போராடும் சிங்கள இளைஞர்களையும் காவு கொள்ளத் தயங்குவதுமில்லை. அதற்கு சிறந்த உதாரணங்களாக எப்படி ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளின்போதும் கொடூரமான முறையில் அடக்கப்பட்டிருக்கின்றனர் என்பது வரலாற்றில் அழியாக் கறையாக நம் முன்னே இருக்கின்றது. இன்றைக்கும் ஏன் இலங்கையில் அனைத்து இனங்களும் சமாதானமாக இருந்து நாட்டை சுபீட்சமாக வளர்க்க முடியவில்லை என நாமனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

இந்த நாவலும் இந்தக் கேள்விகளை எளிதாகத் தவிர்த்து, யுத்ததிற்கான அடிப்படைக் காரணங்களுக்குள் செல்லாது, அதன்  எதிர்வினைகளையும், பின்விளைவுகளையும் முக்கியமானதாக் காட்ட விழைகின்றது. ஒரு பேரினவாத அரசுக்கெதிராக, ஒரு கொரில்லா இயக்காகத் தோன்றி, பின்னர் மரபுவழி இராணுவமாக ஒரு குறிப்பிட்ட பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகளை, அரசுக்கு நிகராக வாசுகி முன்னிறுத்த விரும்புகின்றார். அதனாலே இந்தப் புனைவு 2009 இல் புலிகள் மக்களை பயணக்கைதிகளாக வைத்திருக்கின்றனர் எனச் சொல்கின்றது. புலிகள் மக்களை வெளியே செல்ல விடவில்லை என்பது உண்மை என்றாலும், புலிகள் பலநாடுகளால் தடைசெய்யபட்ட இயக்கம், ஆனால் தனது சொந்த மக்களையே காப்பாற்றவேண்டிய அரசுதான் செய்ததுதான் என்ன? இந்நாவல் நடக்கும் 1980களின் நடுப்பகுதியில் ஒரு அரசானது தனது சொந்த மக்களைக் கொல்ல விமானத்தாக்குதலையும் ஷெல் தாக்குதல்களயும் நடத்தி, சொந்த நாட்டு மக்களையே அந்நியமாகிப் பார்த்திருக்கின்றது.

இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு நாம் ஹாமாஸை இஸ்ரேல் அரசுக்கு நிகராக வைத்துப் பேசினால் நியாயமாக இருக்க முடியுமா? இந்த அடிப்படைக் கேள்விகளைத்தான் இந்தப் புதினத்தை முன்வைத்து வாசுகியை நோக்கி நாம் கேட்க வேண்டியவராகின்றோம்.

 

ஓர் அரசியல் நாவல் முடியும்போது அது  பாதிப்படைந்தவர்களின் பக்கம் அழைத்துச் செல்வதோடு, அவர்களின் பலவீனங்களையும் ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொள்ள வைக்கும். அனுக் அருட்பிரகாசத்தின் நாவல்களை வாசித்தவர்களுக்கு- அவர் எந்தத் தரப்பையும் வெளிப்படையாகச் சொல்லாமல்-  கதாபாத்திரங்களினூடாக உள்ளிறங்கி நம்மை நிலைகுலையச் செய்வதை அறியலாம். வாசுகியின் இந்நாவலின் கதைசொல்லியான சசியினூடாக இந்த முயற்சி நிகழ்த்திப் பார்த்திருக்கக்கூட சந்தர்ப்பம்  இருந்தபோதும் அது நிகழாது  ஒருவகையில் துரதிஷ்டமே. ஈழத்து அரசியல் தெரிந்த எங்களைப் போன்றவர்களுக்கு இதில் இருந்து அறிந்துகொள்ள புதிதாக அவ்வளவாக எதுவும் இல்லை. நமக்குப் பரிட்சயமான களங்கள், நபர்கள், சம்பவங்களே இதில் இருக்கின்றன. ஆனால் இது தமிழர் அல்லாதவர்க்கும், புலம்பெயர்ந்தவர்களின்  இங்கு பிறந்த முதல் தலைமுறைகளுக்கும் வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும்.

 

வாசுகியின் முதல் புத்தகமான 'Love Marriage'  ஐ வாசித்து 2008இல் என் வாசிப்பை எழுதியிருந்தேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அதில்...

 

"இன்று மிக‌ச் சிக்க‌லாக‌வும், ப‌ல‌வீன‌மாக‌வும் போய்க்கொண்டிருக்கும் த‌மிழ‌ரின் போராட்ட‌த்தை, எல்லாத் த‌ர‌ப்புக‌ளும் பிழை செய்கின்ற‌ன‌ என்று எளிதாக‌க் கூறித் த‌ப்பியோட‌ முடியாது. தொட‌க்க‌ கால‌த்தில் த‌மிழ‌ரின் உரிமைக்காய் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்திற்கு எவ்வ‌ள‌வு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளிலிருந்த‌தோ அந்த‌ப் பிர‌ச்சினைக‌ள் இன்ன‌மும் தீர்க்க‌ப்ப‌டாம‌லேயே இருப்ப‌தைச் சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்திற்கோ, உல‌க‌நாடுக‌ளுக்கோ ம‌ட்டுமில்லாது, வெற்றி/தோல்விக‌ளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூக‌லிக்கும் 'புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கும்' நினைவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து. இந்நாவ‌லில் த‌மிழ‌ர் த‌ர‌ப்பின் தீர்க்க‌ப்ப‌டாத‌ பிர‌ச்சினைக‌ளின் ஆழ‌ங்க‌ளை அல‌சாம‌ல், பொதுப்ப‌டையாக‌/எளிமையாக‌ அனைவ‌ரும் த‌வ‌று செய்கின்றார்க‌ள் என்று எழுதுவ‌து/பேசுவ‌து, ஈழ‌ப்போராட்ட‌ம் குறித்து அவ்வ‌ள‌வு அறியாத‌வ‌ர்க‌ளுக்கு த‌வ‌றான‌ நிலைப்பாட்டை விதைக்க‌க் கூடியதாக‌விருக்கும். முக்கியமாய் த‌மிழ‌ல்லாத‌, ஆங்கில‌ம் போன்ற‌ பிற‌ மொழிக‌ளில் நேர‌டியாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் இவை குறித்து அதிக‌ க‌வ‌ன‌த்தோடு, க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றை ஆழ‌மாய் அறிந்து கொள்வ‌தினூடே நிதான‌மாய் எழுத‌ வேண்டியிருக்கிற‌து." எனக் குறிப்பிட்டிருப்பேன்.

 

யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் ஏன் இலங்கை இப்படி பெரும் அரசியல்/பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது? எதன் பொருட்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பொதுமக்கள் மீது நிகழ்த்தபட்டது? இறுதி யுத்த்த்தை முடித்துவைத்த வீரநாயகர்கள் எனக் கொண்டாடப்பட்ட ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ஏன் நாட்டின் நிறைவேற்றுமிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து அவரது சொந்த மக்களாலேயே தூக்கியெறியப்படு சொந்த நாட்டைவிட்டு துரத்தப்பட்டார் போன்ற கேள்விகளை நாம் கேட்கும்போது, தமிழ் இயக்கங்களோ, ஜேவிபியினரோ நடத்திய ஆயுதப்போராட்டம் மட்டும் இலங்கையின் சீரழிவுக்கு முக்கிய காரணமில்லை என்பது விளங்கும். அந்தப் புள்ளிகளில் ஒரு படைப்பு முதன்மையாக கவனத்தைக் குவித்து, போராட்ட இயக்கங்களின் பலவீனங்களோடு ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முயன்றிருந்தால் ஓர் அசலான படைப்பாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் அடையாளப்படுத்துகின்ற ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் இந்த நாவல் மாறிவிட்டிருக்கக் கூடும்.. ஆனால் அது வாசுகியின் ‘சகோதரனற்ற இரவில்’ நிகழவில்லை என்பதுதான் துயரமானது.

 

************

 

 நன்றி: 'எழுநா' -பங்குனி

https://ezhunaonline.com/brotherless-night-novel-review

ஆவிகள் பேசுகின்றன - ஓர் எதிர்வினை

Wednesday, August 21, 2024

 "ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

‍-
ஜெயமோகன்

ஆமாம். ஜெயமோகன் நாங்கள் எதுவும் எழுதவில்லை. எங்களின் ஆவிகள்தான் இதையெல்லாம் எழுதியிருக்கின்றன. 2016 இல் வெளிவந்த என்னுடைய 'பேயாய் உழலும் சிறுமனமே' தொகுப்பில் திரை என்ற பகுதி முழுவதுமே சிங்கள நெறியாளர்களின் திரைப்படங்களைப் பற்றியே எழுதியிருப்பேன். பிரசன்ன விதானகேயின்' நீயும் நீயின்றியும்', அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்', விமுக்தி ஜெயசுந்தரவின் 'இரண்டு உலகங்களுக்கிடையில்' உட்பட பல சமகால சிங்களப் படைப்பாளிகளின் திரைப்படங்களே அதில் இருக்கின்றன‌. அதுமட்டுமில்லாது அண்மையில் வந்த பிரசன்னாவின் 'காடீ' திரைப்படத்தை பயணத்திடையே, அதைத் தவறவிடக்கூடாதென்று கொழும்பில் திரையரஙகில் சென்று பார்த்து அது குறித்தும் விரிவாக ஜெமோ இருக்கும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் 'அம்ருதா'வில் எழுதியிருக்கின்றேன். மேலும் கெளதம சித்தார்த்தன், பிரசன்னாவின் 'நீயும் நீயின்றியும்' மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப எடுக்கப்பட்ட திரைப்படம் என்று ஒரு கட்டுரை எழுதியபோது, சித்தார்த்தன் எனது நண்பர் என்கின்றபோதும் ஒரு கடும் எதிர்வினையை அந்தக் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்தெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன் எழுதியிருக்கின்றேன். எனவே இந்த 'ஆவிகள்' எதையும் எழுதவில்லை என்று ஜெமோ சாட்டுச் சொல்லியெல்லாம் தப்பவும் முடியாது.

ரொறொண்டோ சர்வதேச திரைப்பட விழாக்களில் (TIFF ) விமுக்தி, அஷோக ஹந்தகமவின் திரைப்படங்களுக்காகவே சென்று பார்த்துமிருக்கின்றேன். ஏன் எனது முதல் நூலான 'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டின்போதும், தர்மசிறி பண்டாரநாயக்காவின் ஒரு படைப்பை திரையிட்டுமிருக்கின்றேன். மேலும், பிரசன்னவின் ஒரு தீவிர இரசிகனாக என்னைப் போன்றவர்களை இப்படி அவமானப்படுத்தி எழுதுவதை என் 'ஆவி' கூட மன்னிக்காது.

எவ்வளவு சான்றுகள்/உசாத்துணைகள் கொடுத்து பக்கம் பக்கமாக எழுதினாலும் ஜெயமோகன் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை அவருடனான கடந்தகால‌ உரையாடல்களில் நான் கற்றுக்கொண்ட பாடம். எனக்கு எல்லாமே தெரியும் என்கின்ற ஒருவரோடு உரையாட‌லின்போது எந்தக் கதவைத்தான் அங்கே சென்று உங்களால் திறந்துவிட முடியும். இப்போது இதை எழுதுவது கூட‌ ஜெமோ சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வழி தவறாது நடக்கும் அவர் மேய்த்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு அல்ல. ஜெமோவை வாசித்துக்கொண்டு, மற்றவர்கள் சொல்வதையும் செவிமடுக்கக் கூடிய திறந்த உள்ளங்களுடன் இருப்பவர்க்காகத்தான் இதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜெமோவை நன்கறிந்தவன் என்பதால், அவர் இப்படி எழுதுவதால் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நேர்நிலைகளில் மூழ்கிக் கிடப்பதாகச் சொல்லும் ஒருவரால் எப்படித் தொடர்ந்து எதிர்மனநிலைகளை உற்பத்தி செய்ய முடிகின்றது என்கின்ற ஒரேயொரு ஆச்சரியத்தைத் தவிர வேறொன்றும் அவர் குறித்து இல்லை.

ஆனால் ஜெமோ உடனே தமக்கு உவப்பான கருத்தைச் சொன்னவுடன் அவருக்குக் கடிதங்களும்/பதிவுகளும் எழுதும் நம்மவர்கள், இவ்வாறான பல உண்மைகள் தெரிந்தபின்னும், அவர் அபத்தமாய் எழுதுவதைச் சகித்துக்கொண்டு ஒரு மெளனம் சாதிப்பார்களே, அந்த 'அழகியல்' மனோநிலை எனக்கு வருகின்றபோது, நானும் ஞானமடைந்து விடுவேன். அந்த ஞானத்தை அடைவதற்கான பயணந்தான் இப்படியெல்லாம் எழுதிப் பார்க்க விழைவதென்றும் எடுத்துக் கொள்ளலாம்.

********

 (1) ஜெயமோகனின் பதிவு: https://www.jeyamohan.in/201521/ 

 

 (2) எனது முகநூல் எதிர்வினையும், பின்னூட்டங்களும்: https://www.facebook.com/elanko.dse/posts/pfbid02THf3LHAPn3muDzfmziQYCJtchxPd9SiJx9D9FVkQQvc6BCVbwEHJLWSFuSGWmP7Dl

 

(3) மேலேயுள்ள எனது பதிவு எழுதப்பட்டபின் ஜெமோவின் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட கடிதத்திற்கு ஜெமோவின் பதில்: https://www.jeyamohan.in/201688/


(Jun 11, 2024)

கார்காலக் குறிப்புகள் - 45

Tuesday, August 20, 2024

 மனிதர்களுக்கு எப்போது கடந்தகால நினைவுகள்/உறவுகள்/பிறழ்வுகள் பெருக்கெடுத்து, வாழ்வு நிலைகுலையும் என்பது தெரியாது. பெரும்பாலும் 'நல்லாய் இருந்த மனிதனுக்கு இப்படி ஆயிற்றே' என்று பச்சாபப்பட்டுக் கொண்டு நாம் அவ்வாறான பொழுதுகளில் கடந்து போயிருப்போம். ஆனால் இந்த‌ நிலை தடுமாறும் காலத்தை அனுபவித்தவர்களுக்கே அதன் வலியும், வேதனையும், மீண்டெழுதலின் இரகசியமும் தெரிந்திருக்கும்.

அவ்வாறான ஒரு கடலோர மனிதனை ஜோ.டி.குருஸின் 'யாத்திரை'யில் நாம் பார்க்கின்றோம். புனைவில் பெயரிடப்படாத ஒரு மனிதனின் வாழ்வை அவனின் சிறுவயதுகளில் இருந்து இதில் பின்தொடர்கின்றோம்.. கடலோரக் கிராமம் ஒன்றில் பிறந்து, மதத்தில் கத்தோலிக்கத்தவனாக‌ இருந்தாலும், அந்த சிறுவன் மூதன்னைகளின் கதைகள் சொல்லப்பட்டு வளர்க்கப்படுகின்றான். பின்னர் ஒரு பாதிரியாராக மாற விரும்பும் அவனின் ஆசையை தேவாலயங்களில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும், பாலியல் சுரண்டல்களும் அங்கிருந்து அவனை வெளியே ஓடச் செய்கின்றது. பாதிரிகளையும், புனிதர்களையும் நம்பாமல் அந்தச் சிறுவன் இயேசுவோடும், கர்த்தரோடும் நேரடியாகப் பேசத் தொடங்குகின்றான்.

கல்வி கற்று கடல் வணிகம் சார்ந்த உயர்பதவிகளை அடைந்தாலும் கடலோர மக்கள் தமது பெறுமதியை உணராது வீணே தேவாலயத்துக்கும், குடிக்கும் அடிமையாகிக் கிடக்கின்றார்களே என்று மனம் வருந்தும் இளைஞனாகிவிட்ட அந்தச் சிறுவன் அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை உயர்த்தும் வழிகளைத் தேடச் செல்கின்றான்.

இந்தக் காலத்திலேயே அவனது திருமணம் நடந்து, அது சிக்கலாகின்றது. வழக்கு மேல் வழக்கு, பொலிஸ் கைதுசெய்யத் தேடுதல் போன்றவற்றை -ஒரு தசாப்தகாலம் வரை- அனுபவித்துவிட்டு வந்து, இப்போது இன்னொரு திருமணம் செய்தபின் இரண்டு பிள்ளைகளும் அவனுக்குப் பிறந்துவிட்டனர். ஏதேனும் ஒருவகையில் வலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யவேண்டுமென்று, அதுவரை எழுத்தின் பக்கம் வராத இந்த‌மனிதனை ஒரு பதிப்பாளர் வழிகாட்ட நாவலொன்றும் வெளிவந்துவிடுகின்றது. கடலோர மக்களின் வாழ்வைப் பதிவு செய்த முக்கிய நாவலென்று பாராட்டுப் பெற்றாலும், அவன் சார்ந்த ஊர்க்காரர்களும் தாங்கள் இதனால் அவமதிக்கப்பட்டுவிட்டோம் என்று அந்த ஊரிலிருந்து அவனைத் தள்ளிவைக்கின்றனர். எப்போது ஊருக்குத் தனித்துப் போனாலும், தனக்கு வெட்டு விழுந்துவிடும் என்ற பயத்தோடே அவனது வாழ்க்கை நகரத் தொடங்கின்றது.

என்றாலும் இந்த எழுத்தாளன் கடலோடும், காற்றோடும், வேப்பமரங்களோடும் பேசுவதைக் கைவிடுவதில்லை. அது அவனது அகத்தேடலுடன் சார்ந்தும், அவனது கடலோர முதாதையர்கள் பற்றியதுமாக இருக்கின்றது. கடல்வணிகம் சார்ந்த வேலையில் அவன் உயர்நிலையில் இருந்தாலும், தனக்குச் சரி என்பதில் தீர்மானமாக இருப்பதால் அந்த நிறுவனத்திலிருந்தும் விலக வேண்டியதாக இருக்கின்றது.

 

எழுத்தாளனின் அகத்தேடல் உக்கிரமாகின்றபோது, அவனைச் சுற்றியிருப்பவர் எவராலும் அவனைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது. சிலர் அவனைக் குடியில் அமிழச் சொல்கின்றனர்; வேறு சிலர் ஏதாவது உளவியல் சிகிச்சை பெறச் சொல்கின்றனர். அவனின் மனைவியும், ஒரு குடும்பத்துப் பெண்ணாக, சமூகத்துக்காக உழைத்தல், எழுதுதல் என்பவற்றில் ஈடுபடாமல், அவன் லெளதீக வாழ்வில் மட்டும் கவனஞ்செலுத்த வேண்டுமென விரும்புகின்றாள்..அவனுக்குள் தீவிரமாயிருக்கும் இந்தத் தேடலைப் பிள்ளைகள் மட்டும் புரிந்துகொள்கின்றனர். பிள்ளைகள் 'அப்பா நீங்கள் எங்கேயாவது உங்களுக்குப் பிடித்தமாதிரி பயணியுங்கள்' எனச் சொல்கின்றனர்.

அவன் இனி எதுவும் எழுதுவதில்லை என்று முடிவுசெய்து, இந்தியாவின் தென்கிழக்கு முனையில் இருக்கும் ஒரு தீவுக்கு தனிமை வாழ்க்கைக்கு எல்லாவற்றையும் விட்டுச் செல்கின்றான். கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு மேலாக அலைகளின் ஓசையையும், பறவைகளின் குரல்களையும் கேட்டபடி தன் அகத்தின் பாடலைக் கண்டடைகின்றான். எதுவாக இருக்க விரும்புகின்றான் என்பதில் அவனுக்கு குழப்பங்கள் இருக்கின்றது. ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவோ, சமூகத்துக்குப் பணியாற்றுகின்றவனாகவோ, எழுத்தாளானாகவோ அல்லது என்னதைத்தான் இந்த மனம் விரும்புகின்றது என்ற கேள்விகளுக்கான பதில்களை அவன் இந்தத் தனிமை வாசத்தில் கண்டடைகின்றான்.

'குடும்பம் ஒரு சுகமான சிலுவை. சில மணித்துளிகளில் கடந்துபோகும் குடும்பச் சிக்கல்கள், உறவுகளின் துன்பம் இவற்றை நினைத்து வாழ்வை வீணாக்காதே.எல்லா வேதனைகளுக்கும் விடியல் உண்டு. இந்தத் தீவுக்கு வரும்போது எழுதக்கூடாது என்ற முடிவோடுதானே வந்தாய். உன்னால் முடிந்ததா? திரும்பவும் சொல்கின்றேன் உனக்கு முடியாதவற்றை உன்னால் கட்டுப்படுத்தவே முடியாது. அமைதிப்படு, உன் ஆன்மாவின் குரலைக் கேள்' என்று தனது அகத்தோடு எழுத்தாளன் உரையாடலை நடத்தி பூரண அமைதியை அடைவதோடு இந்தப் புனைவு முடிவு பெறுகின்றது.

ஜோ.டி.குருஸ் இதைப் புனைவாக எழுதினாலும், அவரின் கடந்தகாலம் எதுவும் அறியாத என்னைப் போன்றவர்களே, இது அவரின் தன்வரலாற்று சார்ந்த நாவலென எளிதாகச் சொல்லிவிடலாம். குருஸின் 'ஆழிசூழ் உலகு', 'கொற்கை', 'அஸ்தினாபுரம்' போன்றவற்றை வாசித்தவர்களுக்கு/அதன் பின்னணி அறிந்தவர்க்கு 'யாத்திரை'யை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும். இந்த நாவலில் வரும் சிறுவன்/இளைஞன்/மத்தியவயதுக்காரன் போல பலருக்கு மதம் சார்ந்த, இனம் சார்ந்த அடையாளப் பிரச்சினைகள் வருவது இயல்பானதும் கூட. 


நா
ம் எதுவாக இருக்கின்றோம் என்று ஒரு கிளையைப் பற்றிக் கொள்ளும்போது
, அந்த 'அடையாளம்' நமது வேரில்லை என்கின்றபோது நமது அகம் சரியத் தொடங்குகின்றது. ஆகவே அடையாளங்களை உதிர்த்து உதிர்த்து நம்மைப் புதிதாக மாற்றியமைத்தபடி இருக்க வேண்டியிருக்கின்றது.. ஒருகாலத்தில் கடலோரக்கிராமத்தில் சிறந்த வீரனாக இருந்து, பின்னர் ஜெயிலுக்குள் அடைபட்டு, சிறைமீண்டபின் அமைதி வழியிலே நமது உரிமைகைப் பெறவேண்டும் என்று போராடுகின்ற ஒரு கடலோரத் தலைவன் கொல்லப்படுகின்றான். அவ்வாறு கொல்லப்பட்டவனின் மகனைத் தற்செயலாக ஒரு வைத்தியசாலையில் இந்த நாவலில் வரும் கதைசொல்லி சந்திக்கின்றார். அவன் தனது தகப்பனின் கதையைச் சொல்கின்றேன், நீங்கள் அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கின்றபோதே இந்த எழுத்தாளனின் ஒரு நாவல் எழுதப்படுகின்றது. 'நமது பிள்ளைகள் இதைப் படிக்கட்டும். பெருமையை எழுதி எந்தப் பிரயோசனமும் இல்ல. வாழ்க்கையை எழுதுங்க. அடுத்த சமூக மக்களும் நம்மளப் பற்றித் தெரிஞ்சி கொள்ளட்டும்' என்று அந்த இளைஞன் சொல்கின்றான்.

இந்த நாவலின் மூலம் ஜோடி குருஸை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. இடையில் அவருக்குள் நடந்த அரசியல் தளம்பல்களைக் கூட ஒரு எழுத்தாளனின் அகமனதோடான போராட்டம் என்றவகையில் குருஸைத் தோளணைக்க முடிகின்றது. நாம் எங்கையோ அந்தரத்தில் பறந்து கொண்டு, நாம் எதுவாக மாற‌ ஆசைப்படுகின்றோம். அவ்வாறாக ஆகுதல் எளிதல்ல. நமது கனவுகள் நமக்கு மட்டும் உரியவையல்ல. அந்தக் கனவுகள் குடும்பம், சமூகம், இன்னபிற காரணிகளால் கலைக்கப்படும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

அதன் நிமித்தம் நம்மை எதிர்நிலையில் வைத்துப் பார்த்து மறுகாமல், நம்மால் இயன்றதை நிம்மதியாகச் செய்ய முடியுமெனில் நாம் பாக்கியவான்கள் ஆவோம். இந்தப் புனைவில் கதைசொல்லி அவரது 'ஆன்மாவின் குரலோடு' ஒரு மானசீக உரையாடலைச் செய்யும்போது, 'நீ கடந்து வந்திருக்கும் காலம், எங்களைப் பொறுத்தவரை ஒரு நொடிப் பொழுதுக்குச் சமம்' எனச் சொல்கின்றது. ஆம் ஆன்மாக்களுக்கு மட்டும் அல்ல, இந்தப் பூமிக்கும் நமது இந்த வாழ்வென்பது நொடிப்பொழுது போன்றதுதான்.

சிறுவனாக இருப்பதிலிருந்து கதைசொல்லியோடு உரையாடும் குமரியும், நாச்சியாரும், சந்தனமாரியும் ஒரு தெய்வீகத் தன்மையை அடைந்துவிட்டாலும், அவர்களும் ஒருகாலத்தில் மானிடர்களாக வாழ்ந்திருக்கவே சாத்தியம் அதிகமுண்டு. 'தச்சன் மகனாகிய யேசு சொன்னது, உன் சிலுவையைச் சுமந்து கொண்டு நீ முன்னே செல்' என்று கதைசொல்லி தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத்தான் புத்தரும் 'உனக்கு நீயே ஒளி' என்கின்றார். சிலுவையோ, ஒளியோ எதுவென்றாலும் அது நமக்குரித்தானதாக இருக்கவேண்டும். இரவல் சிலுவையோ அல்லது ஒளியோ நம்மை ஒரு காலத்திலும் வழிநடத்தபோவதில்லை.

*****************

(Aug 2024) 

(புகைப்படங்கள் : நன்றி இணையம்)

 

கார்காலக் குறிப்புகள் - 44

Monday, August 19, 2024

 கோடை காலம் வந்தால் பல்வேறு வகையான பழங்களையும், பூக்களையும் பண்ணைகளுக்குச் சென்று பறித்துக் கொள்ள முடியும். பெர்ரிகளுடன் தொடங்கும் பருவம், இறுதியில் அப்பிள்கள் பறிக்கும்வரை உற்சாகமாக‌ நீளும். ஹலோவீனோடு பூசணி அறுவடை முடிய‌ தோட்டங்கள் இலையுதிர்கால உறங்குநிலைக்குச் செல்ல ஆரம்பிக்கும்.

லாவண்டர் பண்ணைகளுக்குப் போவதென்பது என் நெடுங்கால விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. நான் வசிக்கும் நகரில் இருந்து எங்கேயாவது நீண்ட பயணம் செல்லும்போது அது நினைவுக்கு வரும். ஆனால் அப்போதெல்லாம் தேடிப் போகும்போது லாவண்டர் பண்ணைகள் காணாமற் போய்விடும். லாவண்டர்களிலும் பல வகை இருந்தாலும் இங்கே 'இங்கிலிஷ்' லாவண்டர்களும், 'பிரெஞ்' லாவண்டர்களும் பிரபல்யமானவை. இவற்றில் ஒன்று கோடையில் தொடக்கத்திலும், மற்றது நடுக்கோடையிலும் பூக்கத் தொடங்கி நறுமணம் பரப்புவை. 'இங்கிலிஷ்' லாவணடர்கள் ரோஸ்மேரியின் மணத்துக்கு அண்மையாகவும், பிரெஞ் லாவண்டர்கள் பைன் மரங்களின் வாசத்துக்கு கிட்டவாகவும் இருப்பவை.

இந்தக் கோடையில் நீண்ட பயணமொன்று போய்த் திரும்பி வந்துகொண்டிருக்கையில், ஒரு லாவண்டர் பண்ணைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அன்று நல்ல காலமோ என்னவோ அந்தப் பண்ணையில் ஒரு சிறு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். இசைஞர்கள் பாடல்களை இசைக்க‌, கேலிச்சித்திர ஓவியர்கள் காட்டூன் படங்களை வரைந்து கொண்டிருந்தார்கள், இன்னொருபுறத்தில் பாடசாலை மாணவிகள் ஜிம்னாஸ்டிக் செய்து வந்தவர்ளுக்கு உற்சாகம் கொடுத்தப்டியிருந்தார்கள். அத்தோடு லாவண்டரில் செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

நான் லாவண்டர் கலந்து செய்த லெமனேட்டை ஒரு மரத்தின் கீழ் உறிஞ்சிக்கொண்டு பாடகரொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான இணை அருகில் வந்தமர்ந்தார்கள். இருவரும் அவர்களின் 70களின் பிற்பகுதியில் இருந்தார்கள். ஆண் நடப்பதற்கு உதவி செய்யும் உபகரணத்தோடு வந்திருந்தார். அவர்கள் தமது கடந்தகாலங்களை சுவாரசியமாகச் சொல்லத் தொடங்கினார்கள்.

ஒரு வாகனத்தை (RV) எடுத்து கனடா/அமெரிக்க நிலப்பரப்பு எங்கும் வருடக் கணக்கில் திரிந்திருக்கின்றார்கள். இந்தப் பெண்மணி தனது இருபதுகளில் (1970களில்) ஸ்பெயின், மொராக்கோ போன்ற நாடுகளில் பெண் தோழிகளுடன் பயணித்தபோது, ஓரிடத்தில் கடத்தப்பட்டு விற்கப்படும் நிலைக்குப் போன கதையை விபரித்தார். அவரின் துணைவரோ மிகுந்த நகைச்சுவையானவர். இவர் கதைக்கும் ஒவ்வொரு விடயத்துக்கும் நகைச்சுவையாக ஏதாவது சொல்லியபடி இருந்தார். இந்தக் கடத்தல் கதையைப் பெண்மணி சொன்னபோது, 'இவள் இளமையில் அப்படியொரு அழகி, ஆனால் அழகுக்கு ஏற்ற அறிவு இல்லை, அதனால்தான் மாட்டுப்பட்டு இருக்கின்றாள்' என்று சொல்லிவிட்டு 'உம்மென்று' இருந்தார். அவரின் மனைவிக்கோ கதை சொல்லும் சுவாரசியத்தில் இந்த எள்ளல் முதலில் விளங்கவில்லை அல்லது இப்படி எத்தனை கேலிகளை அவர் தன் வாழ்வில் சந்தித்திருப்பாரோ தெரியாது.

இறுதியில் எனக்கும் பயணிப்பதில் பேரார்வம் இருக்கின்றதெனச் சொன்னபோது, அந்தப் பெண்மணி இளமையாக இருக்கும்போது தொலைதூரங்களுக்கும், வயதேறும்போது அருகிலுள்ள இடங்களுக்கும் சென்று பார்க்கும் முறைமையைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் எனச் சொன்னார். அவரின் கணவரோ, 'வாழ்க்கையில் எந்தப் பொழுதிலும் நகைச்சுவையை மட்டும் விட்டுவிடக்கூடாது. அதுவே வாழ்க்கையிற்கு மிக முக்கியம் என்பதே தான் கண்டறிந்த உண்மை' என்றார். நம்மை வாழ்வு நெருக்கி நொறுக்கும்போதெல்லாம் பெருமூச்சுவிட்டு தப்பிவரும்போது நகைச்சுவை உதவுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன். சொன்னவர் கூட, ஓரடி எந்த உதவியுமில்லாமல் நடக்க மிகக் கஷ்டப்படுக் கொண்டிருந்தார், ஆனால் பேசும் ஒவ்வொரு பொழுதும் அவருக்குள் நகைச்சுவை நதிபோல ஓடிக்கொண்டே இருந்தது.

000000000

நானும் நண்பரொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரின் சுவாரசியமான எழுத்தைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருப்போம். வாழ்க்கை எப்படி இருந்தாலும் இப்படித்தான் இறுதியில் ஆகும் என்கின்ற ஒரு துயரம் அந்த எழுத்தில் உள்ளோடிக் கொண்டிருக்கும். ஒருவகையில் தொடர்ந்து அப்படியான எழுத்துக்களை வாசிக்க வாசிக்க, துயரத்தில் முடியும் வாழ்வின் அபத்தம் நம்மிலும் கவிழத் தொடங்கும். வாழ்க்கையில் துயரங்களைத் தவிர்க்க முடியாது, ஆனால் அதனால் ஏற்படும் வலிகளைக் குறைக்க முடியும் என்கின்ற புத்தரைப் போற்றுபவன் நான்.
 

அவ்வாறு துயரத்தில் மூழ்கடிக்கும் எழுத்துக்களையோ/ திரைப்படங்களையோ இப்போது இயன்றளவுக்குத் தவிர்க்க முயல்வேன். நான் பேசிக் கொள்ளும் நண்பரோ அவ்வளவு துயரங்களுக்குள் போய்க் கொண்டிருப்பார். ஆனால் அவருக்குள் உள்ளூறும் நகைச்சுவையும், வாழ்வை இரசிக்கும் பார்வையும் எனக்கு நான் லாவண்டர் பண்ணையில் சந்தித்த முதியவரை நினைவுபடுத்தும்.

அதனால்தான் எனக்கு மிலான் குந்தேராவின் நாவலான‌ 'இருத்தலின் தாங்கமுடியாத மென்மை' என்ற தலைப்பின் மீது அவ்வளவு வியப்பிருக்கின்றது. துயரம் மட்டுமில்லை, சிலவேளைகளில் மகிழ்ச்சி/வியப்பு கூட அவ்வளவு மிருதுவாக இருக்கும்போது நம்மால் தாங்க முடியாது போய்விடுகின்றது. ஒரு மழலையின் சிரிப்பு, காதலியின் முத்தம், நண்பனின் தழுவல் எவ்வளவு மென்மையாக இருக்கின்றதோ அந்தளவுக்கு அது தாங்கமுடியாத 'கனமாக' நம்மில் தங்கிவிடுகின்றது அல்லவா. அது மென்மைதான், ஆனால் அதற்கு அந்தளவு ஒரு 'பாரம்' வந்து நம்மை நிலைகுலையச் செய்து விடுகின்றது.

பிரான்ஸ் காஃப்கா எழுத்துக்களில் அவ்வளவு இறுக்கமானவராவும், நடக்காதவற்றை அதிகம் சிந்திக்கும் ஒருவராகவும் நமக்கு காட்சியளிக்கக்கூடியவர். ஆனால் அவர் காதலிகளுக்கு எழுதிய கடிதங்களில் எவ்வளவு 'ஜோவியலான' மனிதராக இருக்கின்றார் என்பதை நாம் பார்க்கமுடியும். திருமணம் பக்கம் போகாதவராக, தனது காதலியை இரண்டுமுறை திருமணஞ்செய்யப் போய் கைவிட்டு வந்தவராக அவர் இருந்தாலும், அவர் குழந்தைகளின் மீது அவ்வளவு பிரியம் வைத்திருப்பவராக அவரின் காதலிகளே தமது பதிவுகளில் எழுதியிருக்கின்றனர். அப்படியெனில் நாம் எந்த காஃப்காவை நம்மோடு எடுத்துச் செல்ல முடியும். அவ்வளவு விசித்திரமாகவும், சிக்கலாகவும் இருப்பதால்தான் காப்ஃகா தீர்ந்து போகமுடியாதவராக இன்னமும் -அவர் மறைந்த ஒரு நூறாண்டுக்குப் பிறகும்- நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கின்றாரோ தெரியாது.

அவ்வாறுதானே நகுலனும் நம்மிடையே இருக்கின்றார். அவருடைய காலத்தில் அவரைப் போல தமிழ்ச் சூழலில் எத்தனை பேர் பிறந்து காலமாகிப் போயிருப்பார்கள். ஆனால் நகுலனைப் போன்ற உள்ளொடுங்கிய‌, எழுத்தில் தன்னிலைகளின் உரையாடல்களை மட்டும் முன்வைத்தவரை இப்போதும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம் அல்லவா? நகுலன் காலத்தைய மற்றவர்கள் காலத்தில் தூசிகளாகப் போனபோது நகுலன் தனது பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டல்லவா இருக்கின்றார். 

 

ஒரு கட்டு வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும், புகையிலையும், வாய் கழுவுவதற்கு நீரும், ஒரு புட்டி பிராந்தியும், பிளாஸ்க் நிறைய ஜஸ்கட்டிகளும், தீப்பெட்டியும் சிகரெட்டும், பேசுவதற்கு நண்பா நீயிருந்தால், இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டென்றவர், தன்னைத்தானே அறிந்திருப்பார் அல்லவா? அப்படியொரு ஞானம் பெற்றிருந்தால், நகுலன் எவ்வளவு நகைச்சுவையான ஒருவராக, எப்படியொரு சிரித்த மனிதராக தனிப்பட்ட‌ வாழ்வில் இருந்திருப்பார்.

கோடை காலத்தில் லாவண்டர்களும், கார்னேஷன்களும், சூரியகாந்திகளும் பூத்துக் குலுங்கிச் சிரிக்கின்றன. இப்படி பண்ணையில் விரிந்த பரப்பில் மலராது நம் வீட்டில் மலரும் செவ்வரத்தைகளும், கனகாம்பரங்களும் நமக்காய்க் காத்திருக்கின்றன‌. பல்வேறு வர்ணங்களில் மனிதர்களும், மலர்களும் ஒவ்வொரு பருவங்களிலும் நம்மைத் தேடி வருகின்றன/ர். அப்போது மனதாலும், முகத்தாலும் நாம் சிரித்துக் கொண்டிருக்கின்றோமெனில், நாம் அதிசயங்களில் உலகில் நீந்தத் தொடங்குகின்றோம். புத்தர் அடைந்த ஞானத்தின் ஒரு மிடறை அந்தக் கணத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

*********************

 (Aug 2024)