-வாசுகி கணேசானந்தனின் Love Marriageஐ முன்வைத்து-
அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து எந்த ஏற்றமும்/உயர்ச்சியும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. 'மாற்றம் என்பதே மாறாதது' என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது. இவற்றையெல்லாம் விட, தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது 'இவர்களைவிட அவர்களே பரவாயில்லை' என்ற மனோநிலையும் வந்துவிடுகின்றது.
போர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் போரையும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைப் பார்ப்பதற்கும், அதனோடு சம்பந்தப்படாத பிறர் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது பலவேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. அவ்வாறான நம்பிக்கையுடன், இதுவரை ஈழத்துப் போர்ச்சூழல்/புலம்பெயர் வாழ்வு குறித்து கவனிக்கப்படாத புள்ளிகளையும் முன்னிறுத்தும் என்ற எண்ணத்தோடே வாசுகி. கணேசானந்தனின் Love Marraige புதினத்தை வாசிக்கத்தொடங்கினேன்.
இப்புதினம், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் (arranged marriages) மற்றும் காதற் திருமணங்களை அலசுவதை மையமாகக் கொண்டு சுழன்றாலும், ஈழத்தமிழ்ச் சமூகம் பற்றிய் மதிப்பீடுகளும், போர்ச்சூழல்களும் உள்ளடக்கப்பட்டதாய் நகர்கின்றது. ஈழத்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்து, காதலித்து திருமணஞ்செய்யும் பெற்றோருக்குப் பிறந்த இரண்டாந்தலைமுறையைச் சேர்ந்த யாழினியால் இக்கதை/கதைகள் சொல்லப்படுவதாய் எழுதப்ப்பட்டிருக்கின்றது. இருபதுகளின் ஆரம்பத்தில் வளாகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் யாழினியும் அவரின் பெற்றோரும், புற்றுநோயின் காரணமாய் சிகிச்சைக்காய் கனடா வரும் மாமனாரின் (குமரன்) நிமித்தம் கனடாவுக்கு குடிபெயர்கின்றார்கள். புற்றுநோய் முற்றி வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் குமரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நீண்டகாலமாய் இயங்கிக்கொண்டிருப்பவர். நோயின் தீவிரங்காரணமாய் வெளிநாடு செல்ல அவருக்கு இயக்கம் அனுமதி கொடுப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. ரொறொண்டோவுக்கு தனது பதினெட்டு வயதான மகள் ஜனனியின் துணையுடன் குமரன் வருகின்றார். குமரனின் நோயின் நிமித்தம் உலகின் பல்வேறு திசைகளிலிருக்கும் உறவினர்கள் ரொறொண்டோவில் கூடுகின்றார்கள். போர் குறித்தோ, உறவுகள் குறித்தோ அதிகந்தெரியாது வளர்ந்த யாழினி, இந்நிகழ்வின் மூலம் தனது அடையாளங்களைத் தேடத்தொடங்குகின்றார். யாழினியின் பெற்றோரின் நெருங்கிய உறவுகளின் கிளைக்கதைகள், பலவேறு பின்னணிச் சூழல்களில் சொல்லப்படுகின்றன. புதினமும் மாறி மாறி கனடா, அமெரிக்கா, ஈழமென வெவ்வேறு கதாமாந்தர்களைப் பின்தொடர்ந்து அலையத் தொடங்குகின்றது..
அமெரிக்காவில் பிறந்து தமிழ்ச்சமூகத்தோடு அவ்வளவு நெருங்கிப்பழகாத யாழினிக்கு, அவரது தாய் முறையிலான மாமாவும், புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் அதிகமிருக்கும் ரொறொன்டோவும் அவரை ஒரு வெளியாளாக/அந்நியளாக வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. தமிழ்ப்பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே தமிழராக முடியுமா என்று இங்கே வளரும் இரண்டாந்தலைமுறைக்கு எழக்கூடிய கேள்விகள் யாழினிக்குள்ளும் எழுகின்றன. மேலும் தமிழ் மொழி/கலாசாரம்/பண்பாடுகளோடு வந்திறங்கும் குமரனின் மகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தான் தமிழராய் இருப்பதற்கான எந்த அடையாளங்களையும் கொண்டிருக்கவில்லையென யாழினி இன்னும் குழம்புகின்றார் (உரையாடும் தமிழை மட்டும் விளங்கிக்கொள்பவராக யாழினியின் பாத்திரம் இங்கு சித்தரிக்கப்படுகின்றது).
மேலும் ஈழத்தில் நடக்கும் போர் பற்றி விரிவாக அறியாத யாழினிக்கு, போரை, விடுதலைப்புலிகளை, அதில் முக்கிய உறுப்பினராய் இருந்த தனது மாமனாரை எப்படி விளங்கிக்கொள்வது/உள்வாங்கிக்கொள்வதென்ற சிக்கல்களும் எழுகின்றன. 74ம் ஆண்டு உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஜூலைக் கலவரம், புலிகளின் சகோதர இயக்கப் படுகொலைகள் என்று எல்லாம் சில கதைமாந்தர்களினூடாக/சம்பவங்களினூடாக யாழினிக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அவரால் போரின் ஊற்றுக்களை விரிவாக விளங்கிக்கொள்ளமுடியாதிருக்கின்றது. மேலும் ஈழத்தில் நடக்கும் இனவொடுக்கல் போராட்டத்தை, அதன் உண்மையான காரணங்களை காண மறுத்து, மேலைத்தேய பார்வையினுடாக 'ஆயுதந்தூக்கியவர்கள் எல்லோரும் கெட்டவர்களே' என்ற எளிமைப்படுத்தப்பட்ட பார்வைதான் யாழினிக்கும் இருக்கின்றதோ என்று அய்யமுறக்கூடிய அளவுக்கு யாழியின் பாத்திரம் தெளிவின்மையாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றது அதேவேளை புலம்பெயர்ந்த இரண்டாந் தலைமுறையில் அநேகருக்கு ஏற்படக்கூடிய மனோநிலையாகவும் இதை எடுத்துக்கொள்ளாலாம்.
தொடக்கத்தில் யாழினி தனது மாமன் குமரனோடு அந்நியப்பட்டு நின்றாலும், குமரனின் இறுதிக்காலத்தில் அவருக்குப் பிரியமான மருமகளாக மாறிவிடுகின்றார். போர்/புலி இன்னபிற நியாயத்தராசுகளின் எடைபோடல்களுக்கு அப்பால் மனிதாபிமானம் யாழினியை குமரனோடு நெருக்கமாக்கிவிடுகின்றது. குமரனின் மரணத்திற்குப் பின், குமரனின் மகள் கனடாவிலிருக்கும் புலிகளின் தீவிர ஆதரவாளர் ஒருவரைத் திருமணஞ்செய்வதோடு புதினம் முடிவடைகின்றது (இந்நபர், சட்டத்திற்குப் புறம்பான வழியில் ஏதோவொரு தொழில் செய்து நிதி சேகரித்து புலிகளுக்கு அனுப்புகின்றார் என்ற குறிப்பு இந்நாவலில் வருகின்றது).
ஜனனியின் திருமணத்தை முன்வைத்து தமிழரின் இந்துக்களின் சடங்குமுறைகள் விரிவாகப் பேசப்படுகின்றது. நாவல் முடியும்போது தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் திருமணங்கள் அது நிச்சயிக்கப்பட்ட திருமணமானால் என்ன அல்லது காதற்திருமணமானால் என்ன இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட சிக்கலான ஒரு முறைபோலவே தோற்றமளிக்கின்றன. தனித்துவமான வித்தியாசங்களுடன் காதற்திருமணமோ அல்லது நிச்சயிக்கப்படும் திருமணமோ இல்லையென்ற வாசிப்பையே படைப்பாளியும் வாசிப்பவர்களுக்கு தர முயற்சிக்கின்றாரெனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது; அதுவே யதார்த்தமும் கூட.
புலம்பெயர்ந்த இரண்டாந்தலைமுறையை முன்னிலைப்படுத்தி எழுதப்படும் நாவலென்ற வகையில் மிகுந்த ஆர்வத்துடனேயே இந்நாவலை வாசிக்கத் தொடங்கினேன். காலங்காலமாய் கட்டிக்காக்கப்படும் கலாசார/பண்பாட்டுத்தளங்களுக்குள் இருந்து வரும் ஒருவருக்கு இருக்கும் மனத்தடைகளோ, போர்ச்சூழலுக்குளிருந்து வரும் ஒருவருக்கு இருக்கும் தனிப்பட்ட சொந்த அனுபவங்களின் நிமித்தம் வரும் சமரசங்களோ இல்லாது, மிகச்சுதந்திரமாய் பல விடயங்கள் பேசப்படக்கூடிய வெளியில் விரியக்கூடிய சாத்தியங்களைக்கொண்ட இப்புதினம், இறுதியில் இந்து சமயச்சடங்குகளை முன்னிறுத்தி திருமணங்களுக்கு அதிகம் விளக்கம் கொடுப்பதோடு மட்டும் நிற்கும்போது தனக்கான சரிவைத்தானே தேடிக்கொள்கின்றது.. போர் குறித்து இந்நாவலில் சொல்லப்படும் செய்திகள் கூட ஒரு கட்டுரையாக எங்கேயும் எடுக்கப்படக்கூடிய விடயங்கள் என்றளவில் அவையும் ஒரு எல்லைக்கப்பால் வாசகருக்கு 'வித்தியாசமாய்' எதையும் தரவில்லை எனக்குறிப்பிட வேண்டியிருக்கின்றது. மூன்றாம் நபராய்/அந்நியராய், ஈழத்தில் நடக்கும் போர்குறித்தும் அதன்பாரதூரமான விளைவுகள் குறித்தும் ஒரு நேர்மையான பார்வையை படைப்பாளி, யாழினியினுடாக முன்வைப்பார் என்று எதிர்பார்த்து தொடர்ந்து வாசிக்கும்போது அலுப்பே மிஞ்சுகின்றது. இன்னுஞ் சொல்லப்போனால், புலம்பெயர்ந்த இரண்டாந்தலைமுறை ஈழத்தில் நடக்கும் போர்குறித்து என்னவிதமான பார்வைகளைக் கொண்டிருக்கின்றது என்றறியக்கூடிய வெளி கூட இப்புதினத்தில் விரிவாகப் பேசப்படாதது முக்கிய பலவீனமெனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
இந்நாவலில் பக்கங்கள் உள்ள அளவுக்கு கதாபாத்திரங்கள் இருக்கின்றனவோ என்று மயக்கம் வருமளவுக்கு நிறையப் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், எந்தவொரு பாத்திரமும் வாசிப்பவரை அதிகம் பாதிப்பதாய்க் காணமுடியவில்லை. முக்கியமாய் குமரன் என்ற பாத்திரத்திற்குக் கொடுக்கப்படும் அடையாளத்தினூடாக ஈழத்தில் சில தசாப்தகால போர்ச்சூழல் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கலாம் அல்லது போர்ச்சூழலில் இறந்துபோன குமரனின் துணைவியை முன்வைத்து ஏன் மக்கள் அப்படியாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் போன்ற புள்ளிகளிலாவது அதிகம் கவனங்குவிக்கப்பட்டிருக்கலாம். ஆகக்குறைந்தது, மேற்கத்தைய நாடுகள் எப்படி ஆபிரிக்கா/ஆசிய நாடுகளில் மனிதவுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் அழியும்போது, -தமக்கு ஏதும் நன்மை ஏற்படாதவரை- உள்நுழையாது அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பதன் 'அடர்த்தியான மெளனம்' குறித்தாவது கேள்விகளை படைப்பாளி எழுப்பியிருக்கலாம்.
தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளைப் பற்றி விரிவாகப் பேசப்பட முயலும் ஒரு புதினத்தில் இவ்வாறான பிற அரசியல்/சமூகப்புள்ளிகள் கட்டாயம் பேசப்படவேண்டுமா என்ற கேள்விகள் நமக்குள் எழக்கூடும். உண்மைதான், ஆனால் திருமணம்/பராம்பரியச் சடங்குகள்/சம்பிரதாயங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனங்குவிக்கப்பட்டிருந்தால், இயக்கம்/ ஈழத்தில் நடைபெறும் போராட்டங்கள் பற்றி இந்நாவலில் குறிப்பிட்டிருக்கத்தேவையில்லை; முக்கியமாய் குமரன் என்கின்ற விடுதலைப்புலியின் பாத்திரம் இப்புதினத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டிய அவசியமேயிருந்திருக்காது. ஈழப்போராட்டச்சூழல் விரிவாக பேசப்படாது -தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி- தமிழர் போராட்டம் இப்புதினத்தில் பாவிக்கப்பட்டிருந்தால், அது புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டத்தை முன்வைத்து வியாபாரம் செய்பவர்களைப் போன்றே, தனது புதினத்தையும் இப்படைப்பாளி மேற்கத்தைய சமூகத்திற்கு விற்கப்பிரியப்படுகின்றாரோவெனச் சந்தேகிக்க வேண்டியிருக்கும். திருமணத்தை விளக்கப்படுத்துகின்றேன் என்று மணவறைக்கு முன்னிற்கும் ஐயர் போட்டிருக்கும் பூணூலிருந்து தாலி இன்னபிற வரை எல்லாமே விரிவாக எழுதபபட்டிருப்பது வாசிக்கும்போது மிகுந்த அலுப்பைத் தருகின்றது. இங்குகூட இவ்வாறான, நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சாதி என்பது மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது என்பதைக்கூட படைப்பாளி மறந்துவிடுகின்றார். புலம்பெயர்ந்த சூழலில் சாதி மட்டுமில்லை, சீதனம் இன்னபிறவும் எப்படி இங்கு பிறந்த அடுத்த தலைமுறைக்குள்ளும் காவப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது பற்றி விரிவாக எந்தக்குறிப்பையும் இதில் காணக்கிடைக்கவில்லை. உறவுகளுக்குள் நடக்கும் (நிச்சயிக்கப்படும்)திருமணங்கள் என்பதே சாதியைக் கட்டிக்காப்பதற்கேயென்ற எளிய அரசியல் ஏன் மறைக்கப்படவேண்டும்?
நான் அறிந்தவகையிலேயே இந்நாவலில் நிறைய தகவற்பிழைகள் இருக்கின்றன. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் சுடப்பட்டுத்தான் இறந்தார்கள் என்ற செய்தி இப்புதினத்தில் வருகின்றது (பொலிசார் கூட்டத்தைக் கலைக்க மேலே சுட்டபோது மின்சாரக் கம்பிகள் அறுந்தே பொதுமக்கள் இறந்திருக்கின்றார்கள் என்பதே நடந்த நிகழ்வு). யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடமிருப்பதாய் அடிக்கடி சொல்லப்பட்டிருப்பது இன்னொரு தகவற்பிழை (குமரன் ஒரு பொறியல் பீட மாணவனாயிருந்து இயக்கத்தில் சேர்கின்றார்). மேலும், திருமணத்தில் கூறப்படும் மந்திரம், சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகின்றது என்று விபரிக்கப்படும்போது சமஸ்கிருதமானது, தமிழை விட ஆதியானது என்றவகையில் எழுதப்படுகின்றது. இவற்றை விட முக்கியமாய் இந்நாவலின் மிகக்குழப்பமாய் இருப்பது, குமரன் இயக்கத்தில் இருக்கின்றார் என்று எல்லோருக்கும் அறிவித்தபடியே ரொறொண்டோவுக்கு வருவது. மனிதாபிமான அடிப்படையில் குமரனுக்கு கனடா வர அனுமதி கொடுக்கப்படுவதாய் புதினத்தில் கூறப்படுகின்றது. கனடாவின் குடிவரவுக் கொள்கைகளின்படி அப்படியொருவர் இப்படி அறிவித்துக்கொண்டு வருவதற்கான எந்தச் சாத்தியப்பாடும் இருப்பதாய்த் தெரியவில்லை. 'கனடாவில் தமிழர்கள் அனைவருமே புலிகள்' என்றரீதியில் பாராளுமன்றத்தில் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒருவர் புலியாக இருந்தவர் என்று அறிவித்துக்கொண்டு வரும்போது,' கனடாவில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள், தேசத்திற்கே ஆபத்து, நாடாளுமன்றத்தையே கலை'யென்று அலறப்போகின்றார்கள் என்ற பயத்திலேயே கொழும்பில் வைத்து விஸா கொடுக்கவே, உரிய அதிகாரிகள் விரும்பமாட்டார்கள் என்பதே யதார்த்தமாயிருக்கும்.. அதுவும் குமரன் புலியாகவே ஈழத்தில் இருந்தவரை இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது; மகளும் போராளியாக இருந்திருக்கலாம் என்கின்ற மாதிரியான வாசிப்பும் இந்நாவலினூடு வருகின்றது. குமரனும், ஜனனியும் கனடா வருவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்து (அல்லது உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்து) விஸா குத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி இவ்வாறு ஒரு நிகழ்வு நடத்தல் யதார்த்தத்தில் அவ்வளவு சாத்தியமில்லை (ஈழத்திலிருந்த சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கே, புலிகளோடு தொடர்பிருக்கின்றதெனக் காரணங்காட்டி கனடாவுக்கு வர விஸா மறுக்கப்பட்ட கடந்த கால உதாரணங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்).
இன்று மிகச் சிக்கலாகவும், பலவீனமாகவும் போய்க்கொண்டிருக்கும் தமிழரின் போராட்டத்தை, எல்லாத் தரப்புகளும் பிழை செய்கின்றன என்று எளிதாகக் கூறித் தப்பியோட முடியாது. தொடக்க காலத்தில் தமிழரின் உரிமைக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு எவ்வளவு வலுவான காரணங்களிலிருந்ததோ அந்தப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருப்பதைச் சிங்களப் பேரினவாதத்திற்கோ, உலகநாடுகளுக்கோ மட்டுமில்லாது, வெற்றி/தோல்விகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூகலிக்கும் 'புதிய சனநாயகவாதிகளுக்கும்' நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்நாவலில் தமிழர் தரப்பின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் ஆழங்களை அலசாமல், பொதுப்படையாக/எளிமையாக அனைவரும் தவறு செய்கின்றார்கள் என்று எழுதுவது/பேசுவது, ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்களுக்கு தவறான நிலைப்பாட்டை விதைக்கக்கூடியதாகவிருக்கும். முக்கியமாய் தமிழல்லாத, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் நேரடியாக எழுதுபவர்கள் இவை குறித்து அதிக கவனத்தோடு, கடந்த கால வரலாற்றை ஆழமாய் அறிந்துகொள்வதினூடே நிதானமாய் எழுதவேண்டியிருக்கிறது.
இப்புதினத்தின் தோற்றுவாய் இப்படைப்பாளி தனது முதுமாணிப் பட்டத்துக்காய் எழுதியதையே நாவலாக்கியதாய் புதினத்தின் பின்னட்டை கூறுகின்றது. ஆய்வு என்பதே நிறைந்த தரவுகளையும், தகவற் திரட்டுக்களையும், பன்முகப்பார்வைகளையும் உள்ளடக்கி எழுதப்படவேண்டியது. ஐயர், பூணூல் மணவறை, கூறைப்புடைவை,கன்னிகா தானம் என்பவற்றுக்கு நிறைந்த ஆய்வுகள் செய்து விபரிக்கும் படைப்பாளி, போர்/போராளிகள்/போராட்டம் போன்றவற்றுக்கு அதிக விளக்கம் கொடுத்து விரிவாக எதுவும் அதிகம் எழுதத் தேவையில்லை என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. இவ்வாறான குறைகளுக்கும் அப்பால், சமகாலப் பிரச்சினைகளையும் உள்ளடக்கியதற்காய் - பலவீனங்களுடன் என்றாலும் இயன்றளவு உண்மைகளை மறைக்காமல் எல்லாத் தரப்புகளினதும் அரசியல் பலவீனங்களைப் பதிவு செய்த முயன்றமைக்காய்- படைப்பாளியைப் பாராட்டலாம். கதையின் நகர்வோட்டத்தை சடங்குகள் என்பவற்றுக்கு விளக்கம் கொடுப்பது சில இடங்களில் தடைசெய்து வாசிப்பிற்கு அலுப்புத் தந்தாலும், தமிழ்ச்சூழலில் ஒரு பெண் முக்கிய பாத்திரமாக்கப்பட்டு படைக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியவொன்று. ஆனால் இரண்டாந்தலைமுறை புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து, ஏற்கனவே சொல்லப்பட்ட/விவாதிக்கப்பட்ட விடயங்களையல்ல, வித்தியாசமான கோணங்களில், புதிய உரையாடல் புள்ளிகளை எதிர்பார்த்து வாசிக்கத்தொடங்கும் ஒரு வாசகருக்கு இப்புதினத்திலிருந்து எடுத்துக்கொள்ள/நினைவூட்டிக்கொள்ள அதிகம் எதுவுமில்லையெனத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இப்புதினத்தின் படைப்பாளியான வாசுகி கணேசானந்தன், 70களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஈழத்துப் பெற்றோருக்குப் பிறந்த இரண்டாந் தலைமுறையைச் சேர்ந்தவர். பல்வேறு பத்திரிகைகள்/சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள்/செய்திகள் எழுதிக் கொடுக்கும் ஒரு ஊடகவியலாளராக இருக்கும் இவர் தற்சமயம் நியூயோர்க்கில் வசிக்கின்றார்.
(வைகறைக்காய் எழுதியது...)
படங்கள்: 1 & 2
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது//
7/28/2008 07:19:00 AMநீங்கள் குறிப்பாக யாரைச் சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. தமது சொந்த இலாபம் கருதி விலைபோகிற அரசியல் காரர்களையென்றால் நானும் உடன்படுகிறேன். ஆனால் வித்தியாசப்படும், மாற்று நபர்களைக் குறிக்கிறீர்களெனில் எனக்குப் பிரச்சனைகள் உண்டு. விலகிப் பயணிப்பவர்களுக்கு தமது சமூகத்தை முன்னிறுத்த வேண்டிய கடப்பாடுகள் இருப்பதாய் நான் கருதவில்லை. சொல்லப் போனால் மறுத்தோடகள் சமூகத்தை/அதன் கூட்டு விருப்பை முன்னிறுத்துவதில் இருந்து விலகி தமதி 'வித்தியாசத்தை'/'சுயமுகத்தை' வெளிக்காட்டுவதே நல்லது. அதுதான் எதிர்ப்பிலக்கியங்களின்/எதிர்ப்பியக்கங்களின்/மறுத்தோடிக் குரல்களின் பண்பு. 'சமூகத்தை முன்னிறுத்துங்கள்' என்று ஸ்டாலின் சொன்னார்தான்... ஹிடலரின் கீழான ஜேர்மனியின் சமூகக் கூட்டு மனதை வெளிப்படுத்துவதா அல்லது மறுத்தோடி தன்னை முன்னிறுத்துவதா நல்லது... ஏன் தற்போதைய இலங்கை நிலவரங்களின் கீழ் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு அறிவுஜீவி தேர்ந்து கொள்ள வேண்டிய நிலைப்பாடு எது? தன் சமூகத்தை முன்னிறுத்துவதா அல்லது மறுத்து ஓடிப்போய் தன் சுயமான குரலைச் சொல்லுவதா???
//போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது பலவேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. //
7/28/2008 07:19:00 AMநீங்கள் புலம்பெயர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பதால் இப்படிச் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவைகள் இருக்கலாம் தான் ;-p ஆனால், நானறிந்தவரை இலங்கையின் போருக்குள் அகப்பட்ட தலைமுறை மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை, அங்கு எதிர்கொள்கிற பல்வேறு சமூகவியல் சிக்கல்கள் காரணமாக மிகவும் அடிப்படைவாத நிலைக்கே மீண்டு கொண்டிருக்கிறது. Facebookஇல் இருக்கிற குழுமங்கள், Youtubeஇல் தாராளமாகக் கிடைக்கிற மிக மிக இளம் தலைமுறை இளைஞர்களின் (MIAவுக்குப் பின் வருபவர்கள்) புலிப் பாடல்கள் (பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து) உங்கள் கண்களில் இருந்து எப்படித் தப்பிப் போயிற்று? அல்லது பொங்குதமிழ் நிகழ்வுகளில் youth engagementஇற்கு இருக்கிற அச்சமூட்டும், 70களை நினைவுறுத்தும் வன்முறை நிரம்பிய குழும உணர்வை எங்கனம் தவற விட்டீர்கள்? இதுதான் எனக்குத் தெரிந்து புலம்பெயர் தேசங்களின் diaspora. அவர்கள் மேற்கின் ஜனநாயகத்தை இங்கு எடுத்து வருவார்கள் என்றும் நான் நம்பவில்லை. இங்கிருக்கிற தீவிர வழிபாட்டாளர்களை விட மிக மோசமான அடிப்படை வாதிகளாக, போலிகளாக அவர்கள் இருக்கிறார்கள். இங்கிருக்கிறவர்களுடைய ஆதரவு நிலைப்பாடு என்பது, அவர்கள் நேரில் அனுபவித்த துயரம் சார்ந்து எழுவது, தவிர்க்கவியாலத் தன்மைகளுடன் சம்பந்தம் கொண்டது. இந்த ஆதரவுக்கும் அவர்களுடைய 'அடையாளத்துக்கும்' எதுவித சம்பந்தமும் இல்லை. ஆனால், புலம்பெயர் இளைஞர்களுக்கு, அவர்களுடைய புலம் பெயர் சூழலின் கலாச்சார அந்நியமாதல், தனிமைப்படுதல் எல்லாவற்றுக்குள்ளும் 'புலி' என்பது 'அடையாளத்தை' 'சுயத்தை' தக்க வைக்கச் செய்யும் ஒன்றாக இருக்கிறது. அவர்களுடைய 'சுயம்' இங்கிருப்பவர்களைப் போல 'தமிழ்' என்பதாக அன்றி 'புலி' சார்ந்தே கட்டமைக்கப் படுகிறது. இங்கிருப்பவர்களுக்கு 'புலி' ஒருவித தேர்வு. ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு 'விடுதலைப் புலிகள்' என்பது ஒரு 'அடையாளம்'. இதனால் தான் அவர்களின் காதல் சார் இசை வீடியோக்கள், தாயகம் சார் வீடியோக்களில் கூட 'புலி' படிமம் மிகவும் சரளமான இயல்பான ஒன்றாய் வந்து போகிறது. என்னை இன்னும் ஆச்சரியப்படுத்துவது, அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த சிறுவர் சிறுமிகளது மின்-அஞ்சல் முகவரிகள் கீழ்க்கண்டவாறு இருப்பது தான்: true_eelamtiger@///.com, tigressroars@/////.com, vanni_tiger@///.com...
ஒரு விஷயம் இளங்கோ, நீங்கள் balanced ஆக இருப்பதற்கு போர்ச்சூழலில் இருந்து அந்நியமாகி வளர்ந்தது ஒரு வித காரணமாய் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் தான். ஆனால், பெரும்பான்மையைப் பொறுத்தவரை அவர்களை நெருப்பு சுடாமலிருப்பதே ஏருப்பை நோக்கி இழுக்கிறது.
//வாசுகியின் நாவல்//
7/28/2008 07:20:00 AMஇந்த நாவல் இன்னும் என் கைக்கெட்டவில்லை. ஆனால் அது விளம்பரப்படுத்தப் பட்ட விதம் (US novel about SL, harvard educated) எனக்குள் பரவலான சந்தேகங்களைக் கிளப்பிற்று. அதுவும் இப்போ நீங்கள் பட்டியலிடுகிற தகவல் பிழைகளை வைத்துப் பார்க்கையில் இது சர்வதேசப் புத்தகச் சந்தைக்காய் எழுதப் பட்ட புத்தகமோ என்று தோன்றுகிறது. இது மிகவும் வழக்கமாக நடைபெறுகிற ஒன்றுதான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் 'உலகளாவிய தமிழ் இனத்துவ சினிமாவுக்கான சந்தை இருக்கு' என்று ஒரு தயாரிப்பாளர் பேட்டி கொடுத்திருந்தார்... அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் தனி மடலில். இவர்களுடைய நோக்கம், எனக்குத் தெரிந்து சந்தையை நோக்கமாகக் கொண்டது. தெற்காசிய ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவியாக வாசுகி செய்தவற்றைப் பார்க்கிறேன், பெரிதாய் ஒன்றுமில்லை. அவருடைய பேட்டிகள் வழக்கமான 'நடுநிலை' என்று safe ஆன ஒரு நிலைப்பாடை எடுப்பதாகவே இருக்கு.
பதிவின் முதல் பந்தியை வாசிக்கத்தொடங்குகையில் அட இந்த புத்தகம் நன்றாயிருக்கும் போல இருக்கே என்று நினைத்தேன் ஆனால் அது உங்கள் எதிர்பார்ப்பு என்கையில் சுவாரஸ்யம் சட்டென்று குறைந்து விட்டது.படைப்பாளி எதற்காக போரையும் போர்ச்சூழலலையும் கலக்க வேண்டும் ஆய்வுக்காக எழுதுவதில் ஏதோ நிறையச்சொல்லியிருக்கிறார் என்ற மாயையை உருவாக்குவதற்காக பல பாத்திரங்களையும் பல்வேறு சம்பவங்களையும் கோர்த்திருக்கலாம் ஆனால் அது நாவலாக வெளிவருகையில் அதற்கான மாற்றமும் காலத்துக்கான தேவையும் கருதப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது அனுபவம் வாய்ந்த படைப்பாளிகளுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது...
7/28/2008 10:14:00 AMஎன்பது உண்மைதானே அண்ணன்!
///'மாற்றம் என்பதே மாறாதது' என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது.///
7/28/2008 10:16:00 AMநீங்கள் எழுதிய இந்த விமர்சனமே இப்பொழுதிலிருக்கிற புலம்பெயர் இரண்டாம் தலைமுறைக்கும் ஈழத்திலிருக்கிற பழைய தலைமுறைகளுக்கும்
தேவையானதாயிருக்கிறது...
பதிவை வாசிக்கையில் சமீபத்தில் நிகழ்ந்த புலம்பெயர் நாடுகளின் பொங்குதமிழ் நிகழ்வுகளும் அதில் பங்குகொண்டு முழங்கிய புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினரது முழக்கங்களும் நினைவில் ஓடி உதடுகளின் ஓரத்தில் மற்றவர்களுக்கு பிடிக்காத புன்னகையை தானாகவே உருவாக்கிற்று... ;)
7/28/2008 10:20:00 AMUnbound Urchin,
7/29/2008 10:03:00 AMஉங்களது முத்லாவது பின்னூட்டம் முழுவதோடும் உடன்படுகின்றேன். எனது 'எழுத்தில் முன்வைத்தல்' பலவீனங்களினால் -நான் சொல்லவிரும்பிய புள்ளிகள்- குழப்பமாய் இப்பதிவில் எழுதப்பட்டிருக்கலாம். சமூகத்தை முன்னிறுத்தல் என்பது பொதுப்புத்தியோடு ஒத்துப்போதல் என்ற அர்த்தத்தில் நானிங்கு கூறவரவில்லை. தமக்கான தனி முகம்/அடையாளம் என்றாலும், எந்த அரசியல் வியாபார/தரகுகளுக்கும் விலைபோகாதிருப்பதையே குறிக்க விழைந்தேன். என்னால் உடன்படமுடியாத அரசியல் புள்ளிகளைக் கொண்டிருந்தாலும், அவ்வாறு விலைபோகாதிருக்கும் நண்பர்களை மிகவும் மதிக்கிறேன், அவர்களோடு உரையாடுவதற்கான எந்த மனத்தயக்கங்களும் எனக்கில்லை. அண்மைக்கால அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது யார் யார் தனது தோல்களை மாற்றி அரசியல் பச்சோந்திகளாய் மாறினர்/மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது நீங்களும் அறிவீர்கள். எவரும் தாம் விரும்பும் அரசிய்லைத்தேர்வு செய்யும் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, மறுத்தோடிகள்/கலகக்காரர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி தாம் முன்பு எதிர்த்த/ஏற்றுக்கொள்ளாத அரசியல், சமூகப்புள்ளிகளை இன்று விமர்சனங்களில்லாது ஏற்றுக்கொள்பவர்களை நோக்கியதாய்த்தான் எனது கேள்விகள் இருக்கின்றன. அதுவும் இவர்கள் மீது நம்பிக்கை கொண்டு, இவர்களைப் பின் தொடர்ந்து செல்லும/செல்ல விரும்பும் ஒருவனுக்கு/ஒருத்திக்கு இவ்வாறான பச்சோந்தித்தனங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் கொடுக்குமென்றே நம்புகின்றேன். ஆக இனியான மாற்று அரசியல் என்பது நமக்கு இனி இல்லையோ என்று வருகின்ற சூனியம் மிகக்கொடுமையானது.
Unbound Urchin,
7/30/2008 09:04:00 AM/இங்கிருப்பவர்களுக்கு 'புலி' ஒருவித தேர்வு. ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு 'விடுதலைப் புலிகள்' என்பது ஒரு 'அடையாளம்'./
மிக விரிவாகப் பேசப்படவேண்டிய ஒரு முக்கிய புள்ளியிதென நினைக்கிறேன். நீங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில் குறிப்பிடுவதுபோல பல விடயங்களில் ஈழத்திலிருப்பவர்களை விட இங்கிருப்பவர்களில் அநேகர் -எல்லாவிதமாய் சிந்திக்கும் வெளியிலிருந்தும்- அடிப்படைவாதிகளாய் இருக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன்னும், ஆட்டுமந்தைகளாய் எல்லாவற்றுக்கும் ஓமோம் போடவேண்டுமென்று எதிர்பார்க்கும் இந்த அடிப்படைவாதிகளோடு மூர்க்கமாய் விவாதித்து ஒரு நிகழவிலிருந்து வெளியேறவேண்டியதாயிற்று.
நீண்டகாலமாய் இந்தப் புலம்பெயர் வாழ்வின் எனக்குத் தெரிந்த சில பக்கங்களையாவது பதிவுசெய்துவிடவேண்டுமென்ற ஆவலிருக்கிறது; பார்ப்போம்.
.......
தமிழன்...,
இது எனது தனிப்பட்ட வாசிப்பே. இந்நாவலை நீங்களும் வாசித்துப் பாருங்கள், சிலவேளைகளில் உங்களுக்குப் பிடிக்கக்கூடும். இந்தப் பதிவை எழுதியபின், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில விமர்சனங்களை வாசித்தபோது, மூர்க்கமாய் இந்நாவலை வாசிப்புச் செய்துவிட்டேனோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது. எனெனில் எழுதப்பட்ட விமர்சனங்கள் நாவலை அதிகம் பாராட்டியே எழுதப்பட்டிருந்தன. இப்பதிவை 'வைகறை'க்கு அனுப்பமுன்னர் நண்பரொருவரிடம் வாசிக்கக்கொடுத்தபோது, 'உனது வாசிப்பை வைத்துப் பார்க்கும்போது, இனி வாசிப்பு என்பதே வாசகர் தீர்மானிப்பதாய் ஆகிவிட்டது என்பது உறுதியாகத் தெரிகிறது' என்றார் (இன்னொரு விதத்தில், வாசகர் தனக்கான பிரதியை கண்டறிந்து கொள்கிறார்/உருவாக்கிக் கொள்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்). அத்தோடு, எனக்கு அலுப்புத் தருவதாய்க் குறிப்பிடுகின்ற 'தாலி, கூறைப்புடவை...' போன்றவற்றின் விபரிப்பு, இவைபற்றி எதுவும் தெரியாத ஆங்கிலேய வாசகருக்காய் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், புலம்பெயர்ந்த இரண்டாந்தலைமுறைக்கு தமிழ் மரபுகள்/பண்பாடுகள் -அவற்றிலிருக்கும் அடிப்படைவாதங்களை மீறி- fantasyயாய் ஈர்க்கக்கூடிய விடயங்களாய் இருக்கலாம் எனவும் சொல்லியிருந்தார். நண்பர் கூறும் வாசிப்புக்களும் சாத்தியமானதே.
http://www.vasugi.com/ இந்த பதிவில் இப் புத்தகம் பற்றிய மேற்கத்திய ஊடகங்களின் பார்வைச் சுருக்கம் உள்ளது. love and war என்ற அடிப்படை கவர்ச்சிகரமானது மட்டுமல்ல இந்த தலைப்பிலே நிறைய நாவல்களும் திரைக்காவியங்களும் உள்ளது. ஏராளமான வெள்ளை அலமாரிகளில் அழகாய் இருக்கும் பேர்ள் காபர் திரை நாடாக்களும் இந்த அடிப்படையை கொண்டதே. எம்மவர்களுக்கு இந்த உலகத்தில் எப்படி மினுங்க முடியும் என்று நன்று தெரிய தொடங்கியிருப்பது புது தகவல். மாட்டை பற்றி எழுதச்சொனால் மாட்டை இழுத்துவந்து தென்னையில் கட்டி விட்டு தென்னையை பற்றி எழுதுவது ஏகாதிபத்திய உலகத்தோடு ஒத்துப்போக சிறந்த வழி. சிறுபான்மை இனங்கள் குறித்து மேற்கு அவ்வாறே செய்வதால் சிறந்த வழி. குமரன் இங்கே மாடு.
7/30/2008 10:26:00 AMநாகரீக வளர்ச்சி கண்ட உணர்வுகள் மட்டத்தில் நடக்கும் இந்த விழையாட்டுகளில் இயல்பான உணர்வுகளுடன் வாழும் மக்கள் பார்வையாளர்களே அன்றி பங்காளிகள் அல்ல.
-----------------------
உங்கள் பார்வை சிறப்பானது.
நன்றி நர்மதா. உங்கள் பார்வையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
7/31/2008 09:52:00 AM....
மேலே குறிப்பிடப்பட்ட பலவீனங்களை மீறி, சமகாலப் பிரச்சினைகளையும் உள்ளடக்கி எழுதியதற்காய் வாசுகியைப் பாராட்டத்தான் வேண்டும்; அதேவேளை அமெரிக்கா ஆப்கானிஸ்தான்/ஈராக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கியவுடன், அந்த நாடுகளில் ஆக்கிரமிப்புக்கு முன்பிருந்த நிலைமை குறித்து மிகக்குறுகிய காலத்தில் ஏன் நூற்றுக்கணக்கில் நூற்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற அரசியலையும் நாம் புரிந்துகொள்வதுபோல, ஈழப்போராட்டம் பற்றி வரும் நூற்களை நோக்கியும் கேள்வி எழுப்புதலும்/குறுக்கிடலும் அவசியமானது என்றே நம்புகின்றேன். நன்றி.
Post a Comment