உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில்
மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.
அமரதாஸின்
இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின்
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின்
நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.
இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.
அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'
அமரதாஸின் கவிதைகளில் ஆச்சரியப்படவைக்கும் ஒருவிடயம் எங்கும் நேரடியாக போரைப் பற்றிப் பேசவில்லை என்பதுதான். எழுதப்பட்ட சில கவிதைகளில் கூட, போர்க்களத்தில் நிற்கும் ஒருவன் தன் துணைக்கு தான் திரும்பி வருவேன் என்று ஆறுதல் கூறுகின்றதான கவிதைகளாய் இருக்கின்றனவே தவிர போர் குறித்து பெருமிதப்படும் கவிதைகள் அறவே கிடையாது. போரிற்குள் வாழ்ந்துகொண்டு அதன் அனைத்துக் கொடூரங்களையும் பார்க்கும் ஒருவனால் அது குறித்து பேசமுடியாது போலும்.
காதலியின் கடிதம் 01ல்...
'போர்முனையுள் உன் முனைப்பு
வேரறுந்த பூமரமாய் ஆகிறது என் நினைப்பு.
அழிக்கவோ அல்லது அணைக்கவோ முடியாத
என் நிழலாய் உன் இருப்பு
அந்தரத்து வாள் முனையில்
எந்தனது காத்திருப்பு'
என்றும்,
துயர்க்காலம் என்னும் கவிதையில்,
'அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைத்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.'
என்று ஆரம்பித்து இறுதியில்...
'வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து'
என்று மனதைப் பிசைவதாய்த்தான் முடிகிறது. பல கவிதைகள் படிமங்களால் வார்க்கப்பட்டு (
புத்தகம் பற்றி, விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு) பல்வேறு அர்த்தங்களை வாசிப்பவர்களுக்குத் தருபவை. வன்னிக்கு சென்றவருடம் சென்றபோது அமரதாஸ¤டன் இரண்டுவாரங்கள் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. இயல்பான சூழ்நிலையில் பலவிடயங்களை மனந்திறந்து பேசக்கூடியதாக இருந்தது. இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட அனேக கவிதைகள் போராட்டக்களத்தில் நின்றபோது எழுதப்பட்டவை என்று கூறியபோது வியப்பாயிருந்தது. வாசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ நேரங்கிடைப்பதே அரிதாயிருக்கும் சூழலில் (மற்றும் போராட்டக்காலத்தில் வடபகுதிக்கு பிற இடங்களிலிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) இந்தக் கவிதைகள் நவீனத்துவச் சாயல் படிய எழுதப்பட்டிருப்பதற்கு, அமரதாஸ் என்னும் ஒரு படைப்பாளியின் ஆளுமைதான் முக்கிய காரணமாயிருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.
அமரதாஸ¤டன் உரையாடியபோது அவர் நிறைந்த வாசிப்புள்ளவர் என்பதை இலகுவில் அவதானிக்க முடிந்தது. ஈழம் என்றில்லாமல் தமிழக/புலம்பெயர் படைப்புக்களில் அனேகமானவற்றை வாசித்திருக்கின்றார் அல்லது அறிந்து வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் அமரதாஸ் நல்லதொரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த படந்தான் Lutesong and Lament என்ற ஈழத்தமிழ்ப்படைப்புக்களின் ஆங்கிலமொழிபெயர்ப்பின் முன்னட்டையை அலங்கரிக்கின்றது. இன்று வன்னியிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் அனேக படைப்புக்களில் அமரதாஸினதும், கருணாகரனினதும் பங்களிப்பு ஏதோவொரு வகையில் இருக்கின்றது (அண்மைய உதாரணம்: புதுவை இரத்தினதுரையினது,
பூவரசம் வேலியும் பூலூனிக் குஞ்சுகளில், ட்ராஸ்கி மருதுடன், அமரதாஸின் கைவண்ணமும் உள்ளது).
அமரதாஸிற்கு பயணஞ்செய்வதில் (எந்தப்படைப்பாளிக்குத்தான் விருப்பமிருக்காது) அலாதிப்பிரியமெனவும், அவ்வாறு பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை எனக்கும் காட்டியிருந்தார். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படங்களைத் தொகுத்து,
'கோபுரங்களில் இருந்து' என்ற தலைப்பில் ஒரு புகைப்படக்கண்காட்சி வைக்கப்போவதாய் கூறியதாயும் நினைவு. அந்தக் கண்காட்சியில் முழுப்படங்களும் இந்துக்கோயில் கோபுரங்களின் சிலைகளை/சிற்பங்களை உள்ளடக்கப்போவதாய் கூறியிருந்தார். பாலியல் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தில்தான் இவ்வாறான படைப்புக்கள் முகிழ்ந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான முரண்நகை என்றார். கோபுரத்தில் உறங்கிக்கிடக்கும் அவற்றை யதார்த்திற்கு கொண்டுவந்து விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலேயே
கோபுரத்திலிருந்து என்று தலைப்பு வைக்க விரும்புவதாய் கூறினார். உண்மையில் அதுவரைகாலமும், இந்தியாவிலுள்ள கோயில்களில் மட்டுந்தான் இப்படி வெளிப்படையான பாலியல்/நிர்வாணம் சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அமரதாஸ் எடுத்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டியது (கிட்டத்தட்ட மூன்று அல்பங்கள் அளவில் அவர் எடுத்த படங்கள் இருந்தன).
தானா.விஷ்ணு யுத்ததிற்குள்ளே பிறந்து அதன் சகல பாதிப்புக்களையும் தன்னகத்தே உள்நிரப்பி வளர்ந்த ஒரு கவிஞன். அனைவரையும் போல, முதலாம் தொகுப்புக்கான பலத்துடனும் பலவீனங்களுடன்
நினைவுள் மீள்தல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. போரும், காதலும் இவரது கவிதைகளின் அடிநாதமாய் ஒலித்தபடி இருக்கின்றன.
'ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது
நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.
என்று 'இருளின் தனிமை வெளி' கவிதையில் காதற்பிரிவையும் தனிமையும் வாசிக்கும் நம்முள்ளும் படியவிடுகின்றார். இன்னொரு கவிதையான 'அடையாளப்படுத்தலில்' வாளை படிமமாக வைத்து எமது வாழ்வை மீட்டெடுக்கவேண்டியவர்கள் நாமன்றி வேறொருத்தரும் அல்ல என்கின்றார். அதற்காய்,
'நீயும் வாள் வைத்திருப்பது நல்லது
அப்பிள் வெட்டவோ
மற்றவரை ஆசிர்வாதிக்கவோ அல்ல
உன்னை ஆசிர்வதிக்க நினைப்பவனுக்கு
உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும்
உன் அடையாளத்தைத் தறிப்பவனின்
சிரம் நறுக்கவும்
நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்'
என்று குறிப்பிடவும் தவறவும் இல்லை. இந்தத் தொகுப்பில் பல நல்ல கவிதைகளும் சில சாதாரணக்கவிதைகளும் உள்ளன. இனிவரும் காலத்தில் இன்னும் ஆழமான கவிதைகளை, விரிவான தளங்களில் தானா.விஷ்ணு தருவார் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.
நிலாந்தன்
மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளிவந்தபோதே அறியப்பட்ட ஒரு கவிஞர். பிறகு ஈழ அரசியல் நிலவரங்கள் குறித்து பத்திகள் எழுதி தனது பன்முக ஆளுமையை போர்க்காலத்திலும், இன்றைய 'சமாதான' காலத்திலும் வெளிப்படுத்தியவர்; வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்.
'யாழ்ப்பாணமே ஓ.... எனது யாழ்ப்பாணமே தொகுப்பு கவிதை நடையிலும், கதை வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றது. யாழின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பித்து, 95ல் நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வையும், இறுதியில் யாழின் நுழைவாயிலை எட்டிப்பார்த்த ஓயாத அலைகள்-03 வரையும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற ஒரு கடிதம் யாழின் அன்றைய நிலையை (1996) விபரிக்கின்றது.
'இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.
இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது
பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது
தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.
இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.'
என்கின்றது. யாழ்ப்பாணத்து பெருமை சொல்லப்பட்டாலும், யாழ் மேலாதிக்கத்தனத்தையும் நிலாந்தன் சுட்டிகாட்டத்தவறவில்லை.
'...இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி' என்கின்றார் யாழில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வும் அதனால் பாதிப்புற்ற மக்களின் துயரமும் அந்தக்காலகட்டத்தில் அங்கிருக்காதவரைக் கூட இந்தப் படைப்பை வாசிக்கும்போது கொஞ்சமாவது பரவச்செய்து கலக்கமுறச்செய்யும்.
இந்தப் படைப்பில் முக்கியமான குறிப்புக்களில் ஒன்றாய் இதையும் சேர்த்து வாசிக்கத்தான் வேண்டும்.
'....மேலும் இங்கையொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995ல் எக்ஸ்சோடஸ் ஏற்பட்டது என்பது.' உண்மைதான். நாம் முற்பகலில் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே பிற்பகலில் அறுவடை செய்யவும் வேண்டியிருக்கின்றது என்பதுதானே யதார்த்தம். ஒரு புதிய வாசிப்பு முறைக்கு நிலாந்தன் இந்தப் படைப்பில் நம்மை அழைத்துச் செல்கின்றார் என்றபோதும், பைபிளின் பழைய ஆகமத்தில் கூறப்படும் யூதர்களின் இடப்பெயர்வை யாழ்ப்பாண இடம்பெயர்வுடன் ஒப்பீட்டு நோக்குவது சற்று உறுத்தச் செய்கின்றது. அது ஆதியில் நிகழ்ந்தது எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் அக்கிரமம்தான் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. இன்றைய பொழுதில் யூதர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தவிர்த்து வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. எனினும் நாமும் யூதர்களைப் போல, பராம்பரியத்துடன் நூற்றாண்டுகளாய் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களைத் துரத்திய பாவச்செயலைச் செய்திருக்கின்றோம் என்பதை மறுத்துவிடவோ அல்லது அவ்வளவு இலகுவில் மறந்துவிடவோ முடியாது.