கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Friday, August 19, 2005



வெயில்
அகங்காரம் பிடித்த புருஷனாய்
உலர்த்திக்கொண்டிருந்தாலும்
காற்று
புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்
வீசிக்கொண்டிருக்கிறது

இசை அதிர்கிறது
முன்னேயும் பின்னேயும்
நகரும் பின்தொடரும் கார்களுக்கு
நமது இருப்பையும் வயதையும்
அடையாளம் காட்டியபடி

கிலோமீற்றர்கள் நூறினைத் தாண்டி
கூழ் காய்ச்சிக் குதூகலிப்பதற்காய்
பயணித்துக்கொண்டிருக்கின்றோம்
நாகரீகப்பூச்சு இன்னமும் படியா
ஒரு கிராமத்தை நோக்கி

Barbeque மெஷினில்
புரட்டப்படும்
கோழியும் மாடும்;
கொதிக்கும் கூழும்
பரப்பும் வாசத்தில்
நாவில் எழும் தாகத்தை
தீர்த்துக்கொள்கின்றனர் நண்பர்கள்
பியர்களை உடைத்து

நாற்பத்தைந்து தொண்ணூறு பாகைகளில்
கணிதம் கற்கும் நாங்களும்
செங்குத்தான புள்ளியில் வதனத்தை நிறுத்தி
விழிகளால் கோணங்கள் அமைத்து பெண்களும்
தவத்தினைப் போல
கவனமாகச் செய்கின்றோம்
Chopping

மிக இயல்பாய்
உரையாடத்தொடங்கும்
இவர்களில் யாரேனும் ஒருவர்
காதலியாகவோ தோழியாகவோ
நமக்கு வாய்க்கக்கூடும்
நாளை

கிளித்தட்டு விளையாட்டு
களைகட்டிய தருணத்தில்
'சமூகத்தில் மதிப்பு வாய்ந்த' மனிதர்
சற்றுக்குழப்படி செய்த நண்பர்களில்
ஒருவனை
'பற நாயே' என விளித்து
தூஷித்திருக்கக்கூடாது
சாதியை இழுத்து.

சட்டையைப் பிடித்து
மணலில் புரட்டி
சில அன்பளிப்புக்கள் அவருக்கு வழங்காதிருந்தால்
மனிதர்கள் அல்ல
நாங்கள்

சம்பவம் கண்டு
'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவள்
இவ்வளவு நேரமும்
கலகலப்பாய் பேசியபடி
கடற்கரைக்காற்றாய்
மனதை நிறைத்துக்கொண்டிருந்தவளாய்
அமைந்ததில் எஞ்சிநின்றது
வாழ்வின் அவலச்சுவை

விவாதம் முடிந்து
நிதானம் வந்தபோது
எவரும் தீண்டுவாரின்றி
ஆறியிருந்தது கூழ்
விலகிப்போயிருந்தனர் பெண்கள்.

Aug 19/05

22 comments:

-/பெயரிலி. said...

டிஜே,
அண்மையிலே நீங்கள் எழுதியவற்றிலே பிடித்திருந்தது; குறிப்பாக,
"சம்பவம் கண்டு
'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவள்
இவ்வளவு நேரமும்
கலகலப்பாய் பேசியபடி
கடற்கரைக்காற்றாய்
மனதை நிறைத்துக்கொண்டிருந்தவளாய்
அமைந்ததில் எஞ்சிநின்றது
வாழ்வின் அவலச்சுவை

விவாதம் முடிந்து
நிதானம் வந்தபோது
எவரும் தீண்டுவாரின்றி
ஆறியிருந்தது கூழ்
விலகிப்போயிருந்தனர் பெண்கள்."

8/19/2005 01:29:00 PM
Anonymous said...

நல்ல அழகான க(வி)தை!

8/19/2005 01:39:00 PM
SnackDragon said...

/மிக இயல்பாய்
உரையாடத்தொடங்கும்
இவர்களில் யாரேனும் ஒருவர்
காதலியாகவோ தோழியாகவோ
நமக்கு வாய்க்கக்கூடும்
நாளை
/
டீ சேவின் இருப்பை தூஊஊக்கிக்கொண்டே செ(சொ)ல்லும் வரிகள்.
விழித்து = > விளித்து

எங்கெங்கு காணிலும் பச்சையடா

8/19/2005 01:50:00 PM
Sri Rangan said...

டி.ஜே.
உணர்வுத்தீயில் வெந்துதிரும்,
கனவுகள்
எதிர்பால் வினையாற்றும்!
எட்டிப்பார்க்கும் ஒரு ஆசை
ஓசையின்றி ஒழிந்துகொள்ளும் நல்லபிள்ளை வேஷம்
எப்படியும் தொட்டுவிடத் துடிக்கும் இதயம்
எனினும் இஃது கூடிவரா!
என்னதாமிது?
அரும்பிக் கொள்ளும் புன்னகையொன்றே அகத்தோடு அன்பு சொல்வதாய்...
அந்தோ
அப்பா,அம்மா இடைஞ்சலாகும்
இதுதாம்
எதிர்பால் வினை!
எடுத்ததும் எதுவும் வெறுமை.
ஓரத்தே உக்காந்திருக்கும் உருவமற்ற விருப்பு
உண்மை வெளிகிளம்பி வயிற்றுள் விமானமொன்று வீரிட்டுப் பறக்கும்
மாவீரம் காணும் வரண்ட நிலத்தைப்போல் மதி உணர்வால் உறைந்து கொள்ளும்
இததூமோ ?...

8/19/2005 01:54:00 PM
Anonymous said...

பதிந்தது:தர்சன்

//விவாதம் முடிந்து
நிதானம் வந்தபோது
எவரும் தீண்டுவாரின்றி
ஆறியிருந்தது கூழ்
விலகிப்போயிருந்தனர் பெண்கள்.
//
அருமையான் கவிதை. இறுதிவரைகளின் உயோரட்ட படிமைத்தை நன்றாக உணர முடிகிறது. Dj is at the best..

//காற்று
புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்
வீசுக்கொண்டிருக்கிறது//

இந்த வரிகள் பெண்ணியக் கோணத்தில் உறுத்தலாக இருக்கின்றன. காற்று நிச்சயம் புன்னகையுடன் போகும் ஆணாக ஏன் வீசக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. பெண்களை எப்போது மென்மையான்வரகள் என்ற சராசரி படிமத்தை தூக்கி நிக்கின்ற வரிகள். நிச்சியம் இது எனது தர்க மனதில் இருந்து எழும் விமர்சன. ( அப்ப ஆழ் மனதில் ஆணதிக்கத்தின் எச்ச சொச்சங்கள் என்னடமும் இருக்கிறதா?... நிச்சயம் இல்லையென்று என்னால் சொல்ல முடியாது.)
- தர்சன்

19.8.2005

8/19/2005 02:07:00 PM
இளங்கோ-டிசே said...

//விழித்து = > விளித்து //
நண்பா, மாற்றிவிட்டேன்.
.......
மிச்சம் பிறகு நண்பர்களே(ஒரு ஆறுதலான பொழுதில்).

8/19/2005 02:25:00 PM
Anonymous said...

//நகரும் பின்தொடரும் கார்களுக்கு//

மிருகத்தின் வயிற்றுள் நுழைந்து
கதவுகளைச் சார்த்துகிறேன் ஒலியை அணைக்கிறேன்
இருக்கையைச் சாய்த்து மல்லாந்து படுக்கிறேன்
ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என்றிருப்பதுதான் ஒரே ஒலி
கண்ணாடியை இறக்கத் துடிக்கும் கைகளை
விரல்களைப் பிசைந்து அடக்குகிறேன்

பிம்பங்களற்ற வாழ்வில் கரைகின்றன
வடிவங்களின் வெளிக்கோடுகள் ஊர்ந்தென்
மிருகத்தைச் சூழ்கின்றன இரைதேடிப் புன்னகைக்கின்றன
திரும்பத்திரும்பக் கூறப்படும் ஒரு வார்த்தையே
அனைத்து வார்த்தைகளுமாகின்றது
வடிவங்களுமாகின்றது
யாதுமாகி இருக்கையோடு சேர்த்துச் சிலுவையில் அறைகின்றது

சம்பவங்களின் மரணங்களும் உருகி நாவுகளைச் சுழற்றி
மிருகத்தை மூழ்கடிக்கச் சூழ்கின்றன
அர்த்தங்கள் கரைந்தொழிந்த ஓலம் சிதைக்கிறது
மிருகத்தின் அமைதியை அதன் வயிற்றுக்குள்
புதைந்து ஒளியமுயலும் என்னை

பார்வையை அவிழ்க்கிறேன், அது
நான் பார்க்கவிரும்புபவற்றையெல்லாம் பார்க்கிறது
பார்க்கவிரும்பும்படி
அக் கோலிக்குண்டைக் கழற்றமுயல்கிறேன்
பொறு பொறு என்கிறது அறுபடாத பாவனை
பின் அவிழ்ந்து சுழன்று சுருக்காகி
என்முன் நின்று சிரிக்கிறது

என்னை நானே பார்க்கவிரும்புகிறேன்
நெற்றியில் ஒளிவிளக்குகளுடன்
சௌகரியமான இருக்கைகளுடன் அணைத்து இயக்கமுடியும்
இசையுடன்
கழுவிவிடப்படும் உடலுடன் அணையா தாகத்துடன்
பழுதாகும் பாகங்களுடன்
சாதாரணதொரு மனிதனாக.

8/19/2005 02:39:00 PM
Anonymous said...

நிறைய குதூகலங்கள் இப்படி ஒற்றை சொல்லில் தாறுமாறாக முடிந்ததை பார்த்திருக்கிறேன்.உங்கள் கவிதைகள் ஒவ்வொருமுறையும் நிறைய மெருகேறுகிறது.

8/19/2005 03:41:00 PM
இளங்கோ-டிசே said...

பெயரிலி, தங்கமணி, கார்த்திக், சிறிரங்கன், தர்சன், அனானிமஸ் மற்றும் பத்மா, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
........
சிறிரங்கன் நீங்கள் பின்னூட்டமாய் எழுதியது கூட கவிதையாக வாசிப்பனுபவத்தைத் தருகின்றது. அதுபோலவே அனானிமஸ், நீங்கள் எழுதியிருந்தததும் மிக நன்றாக இருந்தது. முக்கியமாய் இந்தப்பத்தி
//பிம்பங்களற்ற வாழ்வில் கரைகின்றன
வடிவங்களின் வெளிக்கோடுகள் ஊர்ந்தென்
மிருகத்தைச் சூழ்கின்றன இரைதேடிப் புன்னகைக்கின்றன
திரும்பத்திரும்பக் கூறப்படும் ஒரு வார்த்தையே
அனைத்து வார்த்தைகளுமாகின்றது
வடிவங்களுமாகின்றது
யாதுமாகி இருக்கையோடு சேர்த்துச் சிலுவையில் அறைகின்றது//
நன்கு பிடித்திருந்தன. உங்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே :-).
...
////காற்று
புன்னகையுடன் கடந்துபோகும் பெண்ணாய்
வீசுக்கொண்டிருக்கிறது//

இந்த வரிகள் பெண்ணியக் கோணத்தில் உறுத்தலாக இருக்கின்றன. காற்று நிச்சயம் புன்னகையுடன் போகும் ஆணாக ஏன் வீசக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. பெண்களை எப்போது மென்மையான்வரகள் என்ற சராசரி படிமத்தை தூக்கி நிக்கின்ற வரிகள்.//
தர்சன் நீங்கள் நல்லதொரு விமர்சனத்தை வைத்திருக்கின்றீர்கள். அவ்வளவு இலகுவில் ஆணாதிக்கக்காரக் கூறுகளிலிருந்து விடுபடல் சுலபமில்லை என்று புரிகிறது. ஆனால் மேலே நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் நீங்கள் கூறுவது போல வாசிப்புச் சாத்தியமுண்டு எனினும், மென்மை என்பதைவிட இதம் என்ற வாசிப்புச் சாத்தியத்தில்தான் எழுதினேன். ஒரு ஆணாகிய நான், அந்தக்காற்று ஒரு பெண்ணின் புன்னகைப்போல எனக்கு இதம் தருகின்றது என்றே குறிப்பிட விளைந்தேன். பல வாசிப்புச் சாத்தியங்கள் உண்டென்பதால் நீங்கள் கூறுவதையும் மறுக்கப் போவதில்லை. சிலவேளைகளில் யாரேனும் ஒரு பெண், (எனக்கு எதிர்ப்பால் இதம் தருவதுபோல) 'காற்று/புன்னகையுடன் கடந்துபோகும் ஆணாய்/ வீசிக்கொண்டிருக்கின்றது' என்று அர்த்தம் வரக்கூடியதாய் எழுதியிருக்கலாம்/எழுதவும் கூடும்.
....
//நிறைய குதூகலங்கள் இப்படி ஒற்றை சொல்லில் தாறுமாறாக முடிந்ததை பார்த்திருக்கிறேன்//
உண்மை பத்மா. ஊக்குவிப்புக்கும் நன்றி.

8/19/2005 09:46:00 PM
வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு டி.ஜே.

8/19/2005 10:27:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரொம்பப் பிடிச்சிருக்கு டிஜே.

-மதி

8/19/2005 11:32:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

நல்ல கவிதை டி.சே பத்மா அவர்கள் சொல்வதுபோல உங்கள் கவிதைகள் மெருகேறி வருகின்றன

8/20/2005 12:04:00 AM
கொழுவி said...

//வெயில்
அகங்காரம் பிடித்த புருஷனாய்
உலர்த்திக்கொண்டிருந்தாலும்//

இது காலங்காலமாக ஆணினத்தைக் கொச்சையாகச் சித்தரித்த மனப்பாங்கின் வெளிப்பாடே.
பெண்களைத் தென்றலுக்கு ஒப்பிட்டு, ஆண்களை இப்படி ஒப்பிட்டதன்மூலம் காலங்காலமாக ஆண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமையை டி.சே. செய்துள்ளார்.

இதை யாரும் கண்டிக்க முன்வராதது மட்டுமன்று, பெண்களைத் தென்றலுக்கு ஒப்பிட்டதை மட்டும் குறைசொல்லச் சிலருக்கு வருகிறதென்பது வேடிக்கையாயிருக்கிறது.

அதுமட்டுமன்று, ஒருவருக்கு அடிபோட்டனான் என்று (பெருமையாகச்) சொல்வதன்மூலம் வலைப்பதிவுகளில் வன்முறையைத் தூண்டுகிறார் (அல்லது ஆதரிக்கிறார்) டி.சே.

என்னோடு சற் பண்ணின உம்முடைய நண்பன், நீர் எந்த அடியும்போடவில்லையென்றும்,
மாறாக, "'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவளிடம்
நீர் அடிவாங்கியதென்றும்" உண்மைகளைச் சொல்லிவிட்டார்.

8/20/2005 12:45:00 AM
இளங்கோ-டிசே said...

வசந்தன், மதி, ஈழநாதன் மற்றும் கொழுவி பின்னூட்டங்களுக்கு நன்றி.
......
அய்யா கொழுவி!
உம்மைத் தவிர வேறு யாரால் 'இணையத்தில் தீவிர'மாக இப்படி யோசித்து எல்லாம் எழுத முடியும் :-)?
//என்னோடு சற் பண்ணின உம்முடைய நண்பன், நீர் எந்த அடியும்போடவில்லையென்றும், மாறாக, "'அப்பா' என்று அலறியபடி ஓடிவந்தவளிடம்
நீர் அடிவாங்கியதென்றும்" உண்மைகளைச் சொல்லிவிட்டார்.//
'உண்மை' உமக்கும் தெரிந்து போச்சா :-)?

8/20/2005 12:03:00 PM
Anonymous said...

தம்பி கொழுவி,
நல்ல ஆராய்ச்சி.
நீர் அன்று, அல்ல எண்டதுகளப் பாவிக்கிற முறையில 'ஆராள்' எண்டு தெரியுது. கொஞ்சம் மாத்திப் பாவியும்.

-வம்பன்-

8/20/2005 01:10:00 PM
Sri Rangan said...

டி:ஜே. இந்த வலைப்பதிவில் ஒருவரை நீண்ட நாளாகக் காணவில்லை.நம்மோடு சதா உறவாடிவந்த கருப்பியைத்தாம் கூறுகிறேன்.ஏதும் உடல் நலக்குறைவா?அடிக்கடி பதிவுகளிட்ட அவரை மருந்துக்கும் காணக்கிடைக்குதில்லை.

8/20/2005 03:55:00 PM
இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், கறுப்பி அவரது வேலை செய்யும் இடம் வேறு நகருக்கு இடம் மாறியதால் வலைப்பதிவுகளில் எழுத நேரங்கிடைக்காது என்று தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் வாசிக்க இங்கே சென்று பாருங்கள்
http://www.karupu.blogspot.com

8/20/2005 05:29:00 PM
Anonymous said...

கவிதையெல்லாம் பிரமாதம்.
ஆனால்
இந்தக் கவிஞனுக்குள் கொஞ்சம் பெண்மை ஒளிந்திருக்கிறதாம்
மற்றது கூழை இப்படி அலுமினியப்பாத்திரத்தில் சமைத்தால்
சுவைக்காதாம். ஏன் எப்படி என்றெல்லாம் கேளாதீர்.
சொல்வது ஞானல்லா..... என் காதலியாக்கும்.

= காருண்யன் =

8/21/2005 09:02:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கு நன்றி காருண்யன்.
.....
//கூழை இப்படி அலுமினியப்பாத்திரத்தில் சமைத்தால்
சுவைக்காதாம்.//
உண்மைதான், அதுபோல பலாவிலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் கோப்பைகளில் ஊற்றி உறிஞ்சினாலும் சுவைக்காது. என்ன செய்ய கூழ் குடிப்பதே அரிதாக இருக்கும்போது, மண் பானையும், ப்லாவிலையும் வேண்டுமென்று செய்து தருபவர்களிடம் கேட்டால், கூழ் குடிக்க வராதே என்று கூறித்துரத்திவிடுவார்கள் :-).

8/22/2005 10:27:00 AM
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

நல்லாயிருக்கிறது.

8/23/2005 02:05:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி சந்திரவதனா.

8/23/2005 08:47:00 AM