1. பெத்ரோ பராமோ (திரைப்படம்)
காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார். அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo), ‘பெத்ரோ பராமோ’ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ் அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால் முன்னுரை தொடக்கம் இந்நாவலின் இறுதிப் பக்கங்கள்வரை அப்படியோ ஒப்புவிக்க முடியும் என்று மார்க்வெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவுக்கு மார்க்வெஸ் இந்த நாவலுக்குள் மூழ்கியவர். இந்த நாவல் கொடுத்த பெரும் ஈர்ப்பினால்தான், மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை எழுதுகின்றார்.
இதையே இலத்தீன் அமெரிக்காவில் இருந்து முகிழ்ந்த 'மாய யதார்த்த' கதை சொல்லல் முறைக்கான முதல் புதினம் எனச் சொல்கிறார்கள். இது 120 பக்கங்களுக்குள்ளே அடக்கி விடக்கூடிய ஒரு புனைவு. ஆனால் இவ்வளவு குறுகிய பக்கங்களில் கிட்டத்தட்ட அன்றைய கால மெக்ஸிக்கோவின் நிலவியல், அரசியல், கலாசாரம், புரட்சி எனப் பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பெத்ரோ பராமோ வன்முறையின் மூலம் ஒரு நிலச்சுவாந்தர் ஆகின்றார். அவர் காதல் செய்யும் பெண்களும் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல. அதனால் எண்ணற்ற பெண்களோடு மோகிக்கின்றார். அவர்களை எளிதில் கைவிட்டு தன் வாழ்க்கையில் நகர்ந்தபடியும் இருக்கின்றார்.
இந்த நாவலின் கதைசொல்லியான யுவானே ஒரு தற்செயலான நிகழ்வால் பெத்ரோவிற்குப் பிறக்கின்றவர். மதத்திற்கு எதிரான புரட்சியும், பிறகு அந்தப் புரட்சிக்கெதிரான தேவாலயங்களின் போராட்டமும், நிலப்பிரத்துவ இறுதிக்கட்டமும், அதிகாரம் எதுவுமற்ற பெண்களின் நிலையும் என பல்வேறு நிகழ்வுகளை பெத்ரோ பராமோ நமக்குக் காட்சிகளாக விரித்துக் காட்டுகின்றது.
இவ்வாறான ஒரு நேர்கோட்டுத் தன்மையில்லாத எழுத்தில் கடந்தகால நினைவுகளும், பேய்களும், பாதாள உலகும், கல்லறைக்குள் இருப்பவர்களும் பேசும் ஒரு நாவலைக் காட்சித் திரையாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் 'பெத்ரோ பராமோ' திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக - மாய யதார்த்தமும் குலைந்துவிடாது- கொண்டு வந்திருக்கின்றனர். பெத்ரோ பராமோ ஒரு துன்பியல் முடிவை நோக்கிச் செல்கின்ற நாயகனின் கதை என ஓர் எளிமைக்காகச் சொல்லலாம். மார்க்வெஸ்ஸின் 'கொலாராக் காலத்தில் காதல்' நாவலில் வருகின்ற நாயகன் 80வயதுவரை தனது முதல் காதலுக்காகக் காத்திருப்பதைப் போல, 'பெத்ரோ பராமோ'வில் பெத்ரோ தனது பதின்மக் காதலியான சூசனாவுக்காய்க் காத்திருக்கின்றான். அவள் கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் பெத்ரோவிடம் திரும்புகின்றபோது அவள் இளமையில் பெத்ரோவை விட்டுச் சென்ற சூசனா அல்ல. அவள் வேறொருத்தியாக,கண்களுக்குத் தெரியாத உருவங்களோடு (இறந்துவிட்ட கணவனோடு) உரையாடும் ஒருத்தியாக இருக்கின்றாள்.
அவளின் வரவோடு பெத்ரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தனது காதலி சூசனா இறக்கும்போது அந்தத் துக்கத்தை அசட்டை செய்து, இந்த நகர் தன்பாட்டில் விழாக் கொண்டாட்டத்தில் திளைக்கின்றதா என பெத்ரோ கோபமுறுகின்றான். அத்தோடு அவன் அந்த ஊரைக் கைவிடத் தொடங்குகின்றான்.
பாழாய்ப்போன ஊரிலிருந்து மறைந்துவிட்ட அந்த ஊரவர்கள் யுவானின் தந்தையை யுவானுக்கு நினைவுபடுத்துவதற்காய் மீண்டும் அந்த நகரிலிருந்து எழுகின்றார்கள். இவர்கள் அசலான மனிதர்கள்தானா என ஒவ்வொருத்தரையும் பார்த்து யுவான் திகைத்து அவர்களைக் கரம்பற்ற விழைகின்றபோது அவர்கள் இறந்துவிட்ட மனிதர்கள் என்பதை அறிகின்றான்.
இறுதியில் கதைசொல்லியான யாவனே காலமாகிவிட்ட ஒருவனாக நமக்குத் தெரிகின்றான். அப்படியாயின் நாம் பெத்ரோ பராமோவில் இறந்துபோன ஆவிகளின் கதைகளைத்தானா கேட்டிருக்கின்றோம்? அவர்களோடுதான் இவ்வளவு நேரமும் உலாவிக் கொண்டிருந்தோமா எனத் திகைக்கவும் செய்கின்றோம்.
2. யுவான் ரூல்ஃபோவுடன் நூறு வருடங்கள் (ஆவணப்படம்)
‘பெத்ரோ பராமோ’ திரைப்படத்தைப் பார்த்தபின், யுவான் ரூல்ஃபோ பற்றிய 'One Hundred Years with Juan Rulfo' என்கின்ற ஆவணப்படமொன்றைப் பார்த்தேன். யுவான் அவரது வாழ்க்கைக்காலத்தில் இரண்டே இரண்டு நூல்களை மட்டுமே வெளியிட்டவர். அவை தமிழிலும் ஏற்கனவே 'பெத்ரோ பரோமா' (குறுநாவல்) எனவும் 'எரியும் சமவெளி' (சிறுகதைகள்) எனவும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணப்படம் யுவான் எழுத்தாளர் என்பதற்கு அப்பால் எவ்வாறு மெக்ஸிக்கோவில் வாழ்ந்தார் என்பதை ஒரளவு அடையாளம் காட்ட விழைகின்றது எனச் சொல்லலாம்.
யுவான் தனது பெற்றோரை அவரது பத்து வயதுக்குள் இழந்துவிடுகின்றார். தந்தை 1920களில் நடந்த மெக்ஸிக்கன் உள்ளூர் யுத்தத்தில் இறந்திருக்கின்றார். இதன் பின்னர் யுவான் அவரின் தாத்தா-பாட்டிகளோடு வளந்தவர். அத்தோடு பதின்மத்தில் அவர் ஒரு பாடசாலைக்கு, ஹொஸ்டலில் தங்கிப்படிக்க அனுப்பப்படுகின்றார். அது கிட்டத்தட்ட ஒரு ஜெயில் அனுபவம் போன்றதென யுவான் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.
யுவான் பின்னர் ஒரு டயர் நிறுவனத்தில் வேலை செய்கின்றார். அதன் நிமித்தம் மெக்ஸிக்கோவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணித்திருக்கின்றார். இந்த வேலையில் அவருக்காகக் கொடுக்கப்பட்ட காரில் ஒரு ரேடியோ போட்டுத்தரவேண்டும் என்று கேட்டதை நிறுவனம் மறுத்ததால் அந்த வேலையை இராஜினாமாய்ச் செய்தார் என்கின்ற ஒரு சுவையான கதையும் இருக்கின்றது.
யுவானின் எழுத்து உச்சத்தில் இருந்தது அவர் சில வருடங்கள் எழுத்துக்கான நிதியைப் பெற்றிருந்தான காலமான 1952-54களெனச் சொல்லலாம். இந்த இரண்டு ஆண்டுகளில்தான் அவர் தனது இரு நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களின் புகழ் யுவானை அவரது வாழ்வின் இறுதிக்காலம் வரை அடுத்த புத்தகங்களை எப்போது எழுதுவார் என எல்லோரையும் தொடர்ந்து கேட்க வைத்திருக்கின்றது. ஒருபொழுது மெக்ஸிக்கன் ஜனாதிபதியே யுவானிடம் ஒரு விருந்தில் இதை நேரடியாகக் கேட்கின்றார் என்றளவுக்கு இந்தத் தொந்தரவு அவரைத் தொடர்ந்து துரத்தியிருக்கின்றது. இறுதியில் அவரது சக எழுத்தாளர் ஒருவர், தயவு செய்து யுவானை அவரின் போக்கில் விட்டுவிடுங்கள், அடுத்து ஒன்றை எழுதுங்கள் எனக்கேட்டு சித்திரவதைப்படுத்தாதீர்கள்' என்ற ஒரு கட்டுரையை பத்திரிகையொன்றில் எழுதுகின்றார். யுவான் மெக்ஸிக்கோ இலக்கியத்துக்காய் இரண்டு படைப்புக்களைத் தந்திருக்கின்றார் அதுவே போதும் என்று அந்தக் கட்டுரை முடியும்.
யுவான் ஏன் தொடர்ந்து எதையும் பிரசுரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை, அவர் கொடுத்த சொற்ப நேர்காணல்களில் கூட தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த நேர்காணல்களில் தான் பிரசுரிக்கவில்லையே தவிர, எழுதாமல் இருக்கவில்லை என்று அர்த்தமில்லை என்று கூறுகின்றார். யுவான் பிரசுரித்த இந்த இரண்டு படைப்புக்களுக்கு முன் கூட, மெக்ஸிக்கோவைப் பின்புலமாகக் கொண்ட ஒரு பெரும் நாவலை சில வருடங்களாக எழுதியிருக்கின்றார். ஆனால் அவருக்கு அது திருப்தியைக் கொடுக்காததால் முற்றாக அழித்திருக்கின்றார். இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கும்போது, ‘அது குறித்து கவலை ஏதுமில்லை, அவ்வளவு மோசமான நாவல்' என்று அந்தப் பதிலை எளிதில் முடித்துவிடுகின்றார்.
இந்த ஆவணப்படத்தில் பெரும்பகுதி அவர் எடுத்த புகைப்படங்களின் நிலப்பரப்பைத் தேடிப் போகின்ற பயணமாக இருக்கின்றது. இதில் யுவானின் மகன்களில் ஒருவரும் இருக்கின்றார். யுவான் மிகக்கடினமான மலையில் ஏறி காட்சிதரும் இடத்தைத் தேடி இந்த ஆவணப்படக்குழு ஏறுகின்றது. இந்தக் காலத்திலேயே அவ்வளவு கடினமாக இருக்கும் மலையில் அன்று யுவான் ஏறியிருக்கின்றார், அதைப் புகைப்படமாக்கியிருக்கின்றார் என்பது வியப்பாக இருக்கின்றது.
யுவான் தொடர்ச்சியாக எழுதவில்லையே தவிர அவர் மெக்ஸிக்கோவின் மிக முக்கியமான இன்னொரு பகுதியை ஆவணமாக்கியிருக்கின்றார். மெக்ஸிக்கோவின் பூர்வீகக்குடிகளின் 200இற்கு மேற்பட்ட நூல்களை எடிட்டராக இருந்து தொகுத்துக் கொடுத்திருக்கின்றார். மானுடவியல் அன்று அவ்வளவு மதிப்பு வாய்ந்த துறையாக இல்லாதபொழுதுகளில் யுவான் செய்த இந்த தொகுப்புக்கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவையாகும்.
யுவான் இப்படி தன் வாழ்நாள் காலத்தை பூர்வீகக்குடிகளோடு இணைத்துக்கொண்டு சென்றதற்கு அவரின் வேலை நிமித்தம் ஒரு ஆற்றைத் தடுத்து அணைக்கட்டு கட்டப்பட்டபோது அந்த ஆற்றோடு வாழ்ந்த பூர்வீகக்குடிகளின் கிராமங்கள் அழித்துச் செல்லப்படுவதைப் பார்த்தது ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். இவ்வாறு ஓர் அழிவைப் பார்த்துவிட்டு ஒரு படைப்பாளி அந்த மக்களுக்காய் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கொடுப்பது என்பது விதந்துரைக்கப்பட வேண்டியதல்லவா?
யுவான் தனது 69 வயதில் 1986இல் காலமாகியவர். அவரின் மரணத்தின் பின் 'The Golden Cockerel' என்றொரு நூல் வெளிவந்திருகின்றது. எப்போதும் ஒரு படைப்பாளி இறந்தபின் வெளிவருவது அவர்களின் விருப்பத்துக்குரியவையா என்ற கேள்வி இருக்கின்றது. மார்க்வெஸ் இறந்தபின் அவர் பிரசுரிக்க விரும்பாத 'Until August' அண்மையில் வெளிவந்ததை நாமறிவோம். அவ்வாறே ரொபர்தோ பொலானாவோவின் '2666', 'The Salvage Detectives' போன்றவை வெளிவந்து புகழ்டைந்தபின், அவரின் கணணியில் சேகரமாக இருந்த எல்லா படைப்புக்களும் வெளிவரத் தொடங்கின. எனவே ஒரு படைப்பாளியின் இறப்பின் பின் வெளிவருவதை அவர்களின் பிற படைப்புக்களோடு வைத்து ஒப்பிடமுடியுமா போன்ற சந்தேகங்களும் இருக்கின்றன.
எனக்கு இன்றுவரை தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் பிடிக்கும். அதேவேளை சில எழுத்தாளர்கள் ஓரிரு சிறந்த படைப்புக்கள் எழுதிவிட்டு உறங்குநிலைக்குப் போனாலும் அவர்களையும் மிகவும் பிடிக்கும். ஆங்கிலத்தில் ஹார்ப்பர் லீ எழுதிய 'To Kill a Mockingbird’, தமிழில் 'புயலிலே ஒரு தோணி' எழுதிய பா.சிங்காரம் என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஈழச்சூழலிலும் கிட்டத்தட்ட 30 வருடங்களுகளாகியும், எந்தத் தொகுப்பும் வெளியிடாத ரஞ்சகுமாரின் 'மோகவாசல்', அருளரின் 'லங்காராணி', கோவிந்தனின் 'புதியதொரு உலகம்' என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
யுவான் ரூல்ஃபோ இரண்டே இரண்டு நூல்களைத்தான் எழுதினார் என்றாலும், அவை எழுதப்பட்டு 75 ஆண்டுகளாகின்றபோதும் இன்னும் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். மேலும் இந்தப் படைப்புக்கள் தனியே மெக்ஸிக்கோவின் அடையாளமாக இல்லாது, முழு இலத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்குமான முன்னோடியாகவும் ஆகியிருக்கின்றது. யுவானின் 'பெத்ரோ பராமோ'வின் புனைவு மொழியால் எண்ணற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மட்டுமில்லை, ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இதைத் தவிர ஒரு படைப்பாளிக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை. அந்தவகையில் மிகச் சொற்பமாக எழுதிய யுவான் ரூல்ஃபோ ஆசிர்வதிக்கப்பட்டவர்.
*************
(நன்றி: 'அம்ருதா' - தை/2025)
1 comments:
பொரும்பாலும் உங்கள் பத்தியை வாசிக்கையில் தவிப்பில் குழைந்து போகிறது சிந்தை.
1/13/2025 09:49:00 PMPost a Comment