பாப் மார்லியின் வாழ்க்கை குறுகியகாலம். 36 ஆவது வயதில் ஒருவகைப் புற்றுநோய் காரணமாக இறந்தும் விடுகின்றார். அந்தக் குறுகிய காலத்தில் மார்லி சாதித்தவை அதிகம், ஆகவேதான்
அவர் இறந்து இன்று 40 வருடங்களுக்கு மேலான பின்னும் பேசப்படுகின்றார்; திரையில்
ஒரு நாயகனாக முன்னிறுத்தப்படுகின்றார். Reggaeஇல்
மார்லி அளவுக்கு இல்லையெனினும் அடுத்தடுத்த தலைமுறையில் வந்த டூபாக்கிற்கும் Rapஇல் இது
நிகழ்ந்திருக்கின்றது. டூபாக் (Tupac) அவரது 25ம் வயதில் 90களில்
சுடப்பட்டு இறந்துவிட்டாரென்றாலும் அவரும் இன்றுவரை பேசப்படுகின்றார். மார்லியின்
காலம் புரட்சிக்கும், காதல் செய்வதற்கும் நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்த 60/70கள்.
அன்றைய கால இளைஞர்கள் எதையாவது உறுதியாய்ப் பற்றிக்கொள்வதற்கு போராட்டமும் (சே
குவேரா, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ்), இலக்கியமும்
(பீட் ஜெனரேஷன்), இசையும் (பார்லி, ஜான் லெனான்) இருந்திருக்கின்றன.
இத்திரைப்படம் மார்லியின் கடைசி 5 வருடங்களைப் பின் தொடர்கின்றது எனச் சொல்லலாம். மார்லி ஜமேய்க்காவின் ஒற்றுமையை மட்டுமில்லாது, ஆபிரிக்கா நாடுகளின் கூட்டிணைவையும் கனவு கணடவர். ஒருவகையில் தன் வேர்கள் எதியோப்பாவில் இருக்கின்றதென நம்பியவர். அதுபோலவே இசைக்கும், ஆன்மிகத் தேடலுக்கும் கஞ்சா புகைத்தல் ஓர் உந்துசக்தியென தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டவர். மார்லியின் இசை, அரசியல், ஆன்மீகத் தேடல் என்பவை மிகத் தெளிவானவை. அதுமட்டுமில்லாது இந்த வாழ்க்கையில் எப்போதும் வேதனையுற்றிருப்பதுதான் இயல்பானதா என்கின்ற இருத்தலியத் தேடல்களும் அவருக்குள் இருந்திருக்கின்றன. இவ்வாறான சில புள்ளிகளை இந்தத் திரைப்படம் தொட்டுச் சென்றாலும் மார்லி என்கின்ற பெரும் ஆளுமையை அதே வீரியத்துடன் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் இதுவரை மார்லியை அவ்வளவு அறியாத ஒரு புதிய தலைமுறைக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்து, மார்லியை இன்னும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் கொடுக்கக் கூடும்.
மார்லியின் காலத்து அன்றைய ஜனாதிபதிகளை உலகம் மட்டுமில்லை, ஜமேய்க்கா கூட இப்போது மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலைஞனான மார்லி இன்று ஜமேய்க்காவைத் தாண்டி 'இசையின் மூலம் சமாதானத்தைத் தேடிய' ஒரு திருவுருவாக ஆகிவிட்டார். ஜமேய்க்காவின் அடையாளமாக இன்று உலகப்பரப்பில் மார்லியும், அவரால் பாடப்பட்ட ரெக்கே பாடல்களும் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதைவிட எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம் என்பதை 40 வயதுகளுக்குள்ளேயே காலமான சேகுவேரா, வான்கோவிலிருந்து, மார்லி வரை பலர் நிரூபித்திருக்கின்றனர்.
*************
(Movie - 'Bob Marley: One Love')
(Feb, 2024)
0 comments:
Post a Comment