கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காசித்தும்பைப்பூ குறிப்புகள்

Tuesday, December 23, 2014

நஞ்சுண்டகாடு

அண்மையில் தமிழில் வந்திருப்பதில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. 2004ல் எழுதிமுடிக்கப்பட்டு பிரசுரமாவதற்கு இருமுறை தடைகளைச் சந்தித்து இப்போது (2014) பிரசுரமாயிருக்கிறது.

போரை நீண்ட சகாப்தங்களாய் ஈழத்தமிழர் சந்தித்தபோதும், ஏன் அழுத்தமான பதிவுகள் இன்னும் வரவில்லை என எழும் கேள்விகளுக்குப் பதிலாய், ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதைப் போல 'நஞ்சுண்டகாடு' வந்திருக்கின்றது. இது போர்/இயக்கம் பற்றிய கதையென்றபோதும் ஒரு மினிமுகாம் தாக்குதல் மட்டும் சில பந்திகளால் நிரப்பப்பட்டு மிகுதி அனைத்துப் பக்கங்களிலும் போராளிகள்/மக்களின் மனங்கள் மிக நெருக்கமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மைக்காலமாய்ப் ஈழப்போராட்டம் சார்ந்து எழுதப்படும் புனைவுகளில் அளவுக்கதிகமாய் நகைச்சுவை/எள்ளல் பாவிக்கப்படுவது சிலவேளைகளில் கூறவரும் விடயங்களை நீர்த்துப்போகச் செய்வதாய் இருப்பதை நாம் அவதானித்திருக்கக்கூடும். ஆனால் இந்நாவலில் நம்மையறியாமலே புன்னகை செய்துவிடச் செய்யும் இடங்களிலிருந்தாலும் அது நாவலிற்குள் துருத்தித் தெரிவதில்லை. பயிற்சி முகாங்களில் ஒருவரையொருவர் சந்தேகித்தபடியும், கோள்மூட்டியபடியும் இருப்பவர்கள் பின்னர் எப்படி தங்களுக்குள் நெருக்கமாகின்றார்கள் என்பதை மிக இயல்பாய்ச் சித்தரிக்கின்றது. இவ்வளவு நுணுக்கமாய் இயற்கையையும், போராட்டமென்று கூட்டுமனப்பான்மை வந்தாலும் ஒவ்வொரு மனித மனங்களுக்குள் நிகழும் அந்தரங்கமான உரையாடல்களையும் -குணாவின் முதல்நாவல் இது என்றுணாரா வண்ணம்- இதில் அருமையாக வளர்த்துச் செல்கின்றார்.

இந்த நாவல் நடைபெறும் காலகட்டம் (என் வாசிப்பின்படி) புலிகள் ஆனையிறவு முகாம் மீது முதன்முறை தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்த 'ஆகாய-கடல்-வெளி'யை அண்டித் தொடங்கி, யாழ் பெரும் இடம்பெயர்வு, சமாதானக்காலம் எனறு மூன்று வெவ்வேறு கட்டங்களைத் தொட்டு நிற்கின்றது. குணா கவியழகன் 2009ம் வரை இறுதி ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடியும்வரை நின்றதோடு, முள்வேலி தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி தற்போது வெளிநாடொன்றில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. புனைவின் மொழி மிக இயல்பாய்க் கைவரப்பெற்றிருக்கும் குணா, தான் கடந்துவந்த பாதைகளை இன்னும் விரிவாக இனிவருங்காலங்களில் எழுதுவாரென நம்புகின்றேன்.

ஒரேயிரவில் என்னை எங்கும் அசையவிடாது, மனதின் ஆழங்களை ஊடுருவி நெகிழவைத்த 'நஞ்சுண்ட காட்டை' இந்த ஆண்டில் வெளிவந்த முக்கிய படைப்புக்களில் ஒன்று எனச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.


இரண்டு இழப்புக்கள்

-எம்.எஸ.எஸ்.பாண்டியன்

எம்.எஸ்.பாண்டியனை முதன்முதலாகவும் இறுதியாகவும் சந்தித்தது, ரொறொண்டோவில் நடந்த தமிழியல் மாநாட்டில். அவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். "Nation Impossible"  என்ற தலைப்பில் பேசியிருந்தார். காலையிலிருந்து பல்வேறு அமர்வுகளில் அம்ர்ந்திருந்ததால் பாண்டியனின் உரையை ஆழ்ந்து கவனிக்க முடியாது போயிருந்தது. மேலும், பிறரை விட அறிவுசார் புலமையாளர்களை மிகுந்த சந்தேகத்துடன் பார்க்கும் என்னியல்பால் அன்றையகாலத்தில் பாண்டியனை நெருங்க அணுகவும் முடியவில்லை.

ஆனால் பிறகு வெளியரங்கில் தேவகாந்த்ன், எஸ்.வி.ராஜதுரையின் இல்லத்தில் பாண்டியனை நக்சலட்டுக்கள் தீவிரமாய் இயங்கிய காலங்களில் அடிக்கடி சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்தபோது சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாண்டியனின் தனிப்பட்ட கட்டுரைகளை அவ்வப்போது வாசித்தபோதும் அவர் எழுதிய மூன்று புத்தகங்களில் எதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் திராவிட இயக்கங்களின் தீவிர பற்றுள்ளவராக இருந்தபோதும், அண்ணாத்துரை(?) பற்றி மோசமாய் சித்தரித்துக் கார்ட்டூன் வரையப்பட்டபோது கருத்துச் சுதந்திரத்திற்காய் காட்டூனிஸ்ட் பக்கம் நின்றதும், அண்மையில் டெல்கி பல்கலைக்கழகத்தில் ஏ.கே.ராமானுஜத்தின் ராமாயாணக் கட்டுரை நீக்கப்பட்டபோது, அதற்குத் தனது எதிர்ப்பை அழுத்தமாய்ப் பதிவு செயததுமென அவரை இன்னும் நெருங்கமாய்ப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன.

இப்போது எஸ்.வி.ஆரின் அஞ்சலிக் குறிப்பை வாசிக்கும்போது, அவர் தாம்பரம் கல்லூரியில் சேரும்வரை ஆங்கிலத்தை முறையாகக் கற்றவரில்லை; பின்னரே தன் முயற்சியில் சிறந்த ஆங்கிலப் புலமையாளராக மாறினார் என்பதை அறிய நேர்ந்தது. ஆங்கில மோகம் கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு குறிப்பு இது. ஒருவர் தன் வேர்களை தனது தாய்மொழியில் அறியாமல், இன்னொரு மொழியினூடாக ஆழமாக அறியவோ ஆய்வு செய்யவோ முடியாது. இன்னொரு மொழி நமக்குத் தேவையானபோது நம்மை வந்தடையச் செய்யும். நமது தாய்மொழியைக் கைவிட்டுத்தான் இன்னொரு மொழியைக் கற்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. ஆகவே எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இந்த்விடயத்தில் நமக்கு நல்லதொரு உதாரணமாய் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார்.

மேலும், ராஜன்குறையின் இந்தக் குறிப்பில் "உண்மையில் கல்விப்புலம் சாராது சிந்தனையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் இருப்பவர்கள்மீது அவர் மிகுந்த மரியாதையும், பிரியமும் கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்தாது பல சமயம் அத்தகையோரிடம் கறாராக பேசுவதாக காட்டிக்கொள்வார்; உண்மை என்னவென்பது அருகிலிருந்து தொடர்ந்து அவதானித்த என் போன்றோருக்கே தெரியும்" எனக் குறிப்பிடும்போது பாண்டியனை இன்னும் நெருக்கமாய் உணர்கின்றேன். பட்டம் பெற்று பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராய் நுழைந்தவுடனேயே சுயம்புவாய்த் தோன்றிய மாற்கு மாஸ்ரரையும், அவரின் பாதிப்பில் உருவாகிய தனித்துவமான ஓவியர்களையும் நிராகரித்த ஓரு 'அறிவுசார் புலமையாளரையும்' எம்.எஸ்.எஸ்.பாண்டியனைச் சந்தித்த அதே தமிழியல் மாநாட்டிலேயே நானும் சந்தித்திருக்கின்றேன் என்பதால் பாண்டியன் பலருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார், இனியும் இருப்பார் என்பது இதமாயிருக்கின்றது.

-ருத்ரைய்யா

'அவள் அப்படித்தான்' திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த படம். ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோதும் அவ்வளவு நெருக்கமாகவும் புதுமையாகவும் இருப்பது என்பதுதானே இன்னும் முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன் நணபரொருவரினூடு ஒரு தோழி அறிமுகமானார். அந்தத் தோழியோடு சிலதடவைகள் பொழுதைக் கழித்தபோதும், ஒருநாள் தற்செயலாய் அவரின் last name அறிந்தபின்னர், ஏதோ நினைவு வர, உங்கள் தந்தையின் பெயர் ருத்ரைய்யா என்றிருக்கின்றதே. நீங்கள் 'அவள் அப்படித்தான்' இயக்கிய ருத்ரைய்யாவின் மகளா என அவரிடம் சும்மா கேட்டேன். ஆனால் நிஜத்திலே அவர் ருத்ரைய்யாவின் மகள் என்றபோது எனக்கு வந்த பரவசத்தை விபரித்துவிட முடியாது. தன் தந்தையின் பெயரால் அறிமுகமாவதை விரும்பாததாலோ என்னவொ அவர் அப்படி அறிமுகப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், நானாக அவரைக் கண்டுபிடித்ததில் எனக்குச் சிறு பெருமிதம் அன்று இருந்திருந்தது. பிறகு என் நண்பர்களுக்கு எல்லாம் அதே பரவசத்துடன் இந்தத் தோழியை அறிமுகப்படுத்தினேன். அவரின் வீட்டிலும்/வெளியிலும் சென்று விருந்துண்பதிலிருந்து, ரொறண்டோ தமிழ் திரைப்பட விழாவிற்கு நடுவர்களாய் சேர்ந்து சிறந்த படங்களைத் தெரிவுசெயவதிலிருந்து, நாம் நடத்திய 'சுடருள் இருள்' நிகழ்வுகளிற்கு வருவது வரை என நெருக்கமாயிருந்தோம்..

அப்படி அவர் நெருக்கமாயிருந்தபோதும், அன்றையகாலங்களில் என்னுடன் நெருக்கமாயிருந்த நண்பரிடம் அவர் ருத்ரைய்யாவின் மகள் என்று அடிக்கடி பரவசப்பட்டபடி கதைத்துக்கொண்டிருப்பேன். நண்பரோ எத்தனைமுறைதான் இதையே திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பாய் என அலுத்துக்கொள்ளுமளவிற்கு 'அவள் அப்படித்தான்' மீது மோகத்தில் இருக்கும் ஒருவன் நான்.

ருத்ரைய்யா தொடர்ந்து படங்கள் செய்வதற்கென சில திரைப்படக்கதைகளுடன் இருந்தார் என அவரின் மகள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்போது சமயவேல் எழுதிய இந்தக் குறிப்பில் "அவள் அப்படித்தான்" வெற்றிக்குப் பிறகு அவரது எதிரிகள் அதிகரித்தார்கள். "சீரியஸ் சினிமா" தமிழில் வரக்கூடாது என்று ஒரு கூட்டம் தமிழ்த் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை அலைந்து கொண்டிருக்கிறது. அவரது அடுத்த படத்தைத் தொடங்க முடியாத சதிகாரர்கள் தீவிரமாக உழைத்தார்கள். அவரை இயங்கவிடாமல் முடக்கினார்கள்." என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இல்லாவிட்டால் ஏன் ருத்ரைய்யா தன் திரைப்படக் கதைகளை இறுதிவரைப் படமாய் எடுக்கமுடியாது தவிக்கவேண்டியிருந்தது.

ஒருவகையில் இது ருத்ரைய்யாவிற்கான இழப்பல்ல, நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்களுக்கான இழப்பாய்த்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. இவ்வாறு நல்ல படங்கள் வர அனுமதிக்கா தமிழ்த் திரைப்படச்சூழலைச் சபிப்பதைவிட வேறெதைத்தான் செய்யமுடியும்?

ஆனாலும் என்ன, ஈழத்து இலக்கியச் சூழல் குறித்து எழுதும்போதெல்லாம், 'தொடர்ச்சியாக எழுதுவதல்ல முக்கியம், குறைவாய் எழுதினாலும் நிறைவாய் எழுதினாலே, அந்தப் படைப்பாளிகளை நினைவில் என்றென்றைக்குமாய் வைத்திருக்கும் மரபொன்று எங்களுக்கு இருக்கின்றதென்று' அடிக்கடி நினைவுபடுத்தியிருக்கின்றேன். அவ்வாறே ருத்ரைய்யா இரண்டு படங்களோடு நிறுத்திக்கொண்டாலும், அவரை என்றும் நினைவு கொள்ள 'அவள் அப்படித்தான்' எங்களிடையே இருப்பாள்.

தந்தையின் இழப்பில் தவிக்கும் தோழிக்கு என் ஆறுதல்கள்.


காவியத்தலைவன்

கதையின் சில பாத்திரங்களின் சாயல்களை ஏற்கனவே தெரிந்ததாலோ என்னவோ ஏற்கனவே தெரிந்த கதையைப் பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது. இறுதிமுடிவைக் கூட இப்படித்தான் முடியும் என்று ஊகித்திருந்தேன். வசந்தபாலனும் ஜெயமோகனும் சேரும் படங்களென்றால் இப்படி மனதை அழ/அழுத்த வைப்பார்கள் என்பதால் அவ்வாறு நினைத்திருந்தேனோ தெரியவில்லை. நாசர் இருக்கும்வரை படம் சுவாரசியமாகப் போனது. 'இருவர்' படத்தின் அரசியல் பற்றி எவ்வளவோ பேசலாம் என்றாலும், அந்த 'இருவருக்கிடையிலான' பொறாமை/போட்டி என்பது வெகு இயல்பாய்க் காட்டப்பட்டிருப்பதாய் நினைவு. இங்கே இரு நடிகர்களுக்குள் தம்மை முன்னிறுத்த விரும்பும் விழைவுகளில் ஒருவரை மட்டும் வழமையான 'வில்லன்' பாத்திரத்திற்குள் அடக்கிவிடும்போது வழமையான 'நாயக-வில்லன்' பாத்திரங்களிற்குள் சிக்கிவிட்டதாய்த் தோன்றியது.

உண்மையில் ராஜபாட் பாத்திரம் ஏற்கக்கூடிய/ அல்லது அதை தன் லட்சியமாகக் கொள்ளும் ஒருவரை விலத்தி, குரு தன்னை அந்த வேசம் கட்டச்சொல்லும்போதே, அதை ஏற்கும் பாத்திரத்திற்கு அது குறித்த அற/மனப்போராட்டம் நிகழ்ந்திருக்கும். ஆசான் சொன்ன சொல்லைத் தட்டக்கூடாதென்று அவர் கூறியதை சிரமேற்கொண்டாலும், தன்னைச் சகோதரனாக (அல்லது தான் சகோதரனாக நினைக்கும்) பாத்திரம் குறித்தும் சற்றேனும் யோசித்திருக்குமல்லவா? ஆனால் படத்தில் எந்தக் காட்சிகளும் அவ்வாறு இல்லை.

ஜெயமோகன் இது குறித்து எழுதியதை வாசித்தபோது அது தெருக்கூத்திலிருந்து வரும் மிகையுணர்ச்சி நடிப்பு X யதார்த்த நடிப்பு என்கின்ற இரு வேறுபட்ட நடிப்பிலிருந்தே இவ்விரு முக்கிய பாத்திரங்களும் உருவாக்கப்பட்டன என்று அறிந்தாலும், படத்தில் அதை அவ்வாறு உணரும்படியாக காளியின் பாத்திரம் இல்லை. ஒரேயிடத்தில் மட்டும் 'கர்ணமோட்சம்' நிகழும்போது மட்டும், நாடகம் முடிந்தபின் ஒரு காட்சியாக அர்ஜூனனின் உள்ளக்கிடக்கை விரியும்போதே கொஞ்சம் தொட்டுச் செல்கின்றது.

ஜெயமோகனின் 'சம்பாஸணை'யில் 'அம்மா, வேண்டுமென்றால் உன்னை அம்மாவாக்கின்றேன்' என்று நொடிநேர கிளுகிளுப்பிற்காய் ஒரு பாத்திரம் பேசுவதைச் சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஆணின் மீது எவ்வளவு மையலிருந்தாலும் 'உங்களின் குழந்தையிற்குத் தாயாவதே என் பாக்கியம்' என்றெல்லாம் அதி நாடகீயமான வசனமிருக்கும்போது, பெர்னாட் ஷாவிடம் ஒரு அழகி கேட்டார் என்ற ஒரு 'நகைச்சுவை'யே நினைவிற்கு வருகின்றது. அன்றையகாலத்தில் இப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும், இன்றையகாலத்திலாவது ஒரு ஆண்/பெண் மீதான காதல் என்பது இறுதியில் குழந்தை பெறுவதில்தான் இருக்கிறது என்பதையாவது மாற்றி யோசிக்கவேண்டாமா? அதைவிட சகிக்கமுடியாதது இலக்கியம் அறிந்த இவர்களே 'பொட்டை' போன்ற வசனங்களைச் சேர்த்திருப்பது.

வசந்தபாலனின் 'வெயில்' எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. 'அங்காடித்தெரு' ஒரே அழுகையான/துயரம் தொடர்ச்சியாக சூழ்ந்துகொண்டிருப்பதை அளவுக்கதிகமாய் திகட்டத் திகட்டத் தந்த படமென எழுதியிருக்கின்றேன். 'அரவானை' அது திரைப்படமாக்கிய விதத்தை விட, அது 'காவல்கோட்டத்தோடு' எவ்வளவு ஒத்தியியைகிறது/விலகுகிறது எனப் பார்ப்பதே என்னளவில் சுவாரசியமாயிருந்ததெனக் கூறினேன். வரலாற்றுப் படங்களை எடுப்பது என்பது எவ்வளவு கடினமென்றும், அதற்கான அவ்வளவு 'வியாபாரச்சூழல்' இல்லையென்றபோதும் அந்த ஆபத்தான பாதையையே வசந்தபாலன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது நன்கு புரிந்தாலும், இவ்விரு படங்களிலும் பார்ப்பவர்களை உள்ளிழுக்கும் எதுவோ இல்லாமற்போகின்ற திரைக்கதை இருக்கின்றதை அவர் கண்டுகொள்ளவேண்டும்.

எனக்கு இப்படத்தில் பிடித்திருந்த விடயம் பெண் பாத்திரங்கள். இரு பெண் பாத்திரங்களும் மிக இயல்பாய்ச் செய்கின்றார்கள். மேலும் கதையின் போக்கிற்குத் துருத்தித்தெரியாது premarital sex ஐ இயல்பாய்க் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்தவன்/ அவளோடு நெருங்கிப்பழகியவன் என்பதை நன்கறிந்தும், தன்னைத் தொடர்ந்து காதலிக்கும் இன்னொரு ஆணையும் உதாசீனம் செய்து, ஒரு பெருங்குடிகாரனை அவ்வளவு ஆழ்ந்து நேசிக்க ஒரு பெண்ணுக்கு நிச்சயம் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதனூடாக வேதிகாவின் பாத்திரத்தை செழுமைப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,

எவ்வளவோ அபத்தமான படங்கள் வரும்போது இவ்வளவு நுணுகிப் பார்க்கவேண்டுமா எனக் கேள்வி எழுதலும் இயல்பு. ஆனால் வசந்தபாலன் நிறைய வாசிப்பவராகவும், தமிழின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களை தன் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்கின்றவராகவும் இருப்பதால் எதையாவது இன்னும் வித்தியாசமாக -பார்ப்பவர்களும்- எதிர்பார்ப்பதும் இயல்பே.

இவ்வாறு கூறுவதால் 'காவியத்தலைவன்' மோசமான படம் என்பதல்ல அர்த்தம். வசந்தபாலன் மீது இன்னும் நம்பிக்கை வைத்து எப்போது திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து முதல்நாள் காட்சி பார்க்கும் ஒருவரின் எதிர்பார்ப்புக்களை அவ்வளவு நிறைவேற்றவில்லை எனவே கூறவருகின்றேன். மேலும் தம் படைப்புக்களினூடாக வீழ்ந்தும், எழுந்தும் செல்லாத கலைஞர்கள் என்றும் எவருமில்லை.

கோணங்கி

Friday, December 12, 2014

கோணங்கியிற்கு 'விளக்கு' விருது அறிவிக்கப்பட்டபோது கோணங்கி பற்றிய புதிய கட்டுரைகள் நிறைய வருமென எதிர்பார்த்தேன். 'விளக்கு' விருதிற்கென ஒரு அரசியல் இருந்தாலும், சிவரமணி எழுதியதுமாதிரி 'நிராகரிக்கப்பட முடியாதவள் நான்/இனியும் என்ன/தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்/நான்/பிரசன்னமாயுள்ளேன்' போல கோணங்கி தமிழில் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதால் விளக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

ஜெயமோகன் நிறைய எழுதி, எத்தனையோ தீவிர வாசகர்கள் அவருக்கு இருந்தாலும், அவரின்  எழுத்து நடையின் பாதிப்பிலிருந்து எழுத வந்தவர்கள் என எவரையுமே அவ்வளவு எளிதில் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால் கோணங்கி எந்த வட்ட/சதுர வாசகர்களைக் கொண்டிராதபோதும், அவரின் பாதிப்பில் உருவாகி வந்த ஒரு புதிய தலைமுறையை எளிதாய் நாம் அடையாளங் கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு கல்குதிரை இதழ்களை விரித்துவைத்து பார்த்துக்கொண்டிருந்தாலே இது எளிதாய் இன்னும் புரியும்.

கோணங்கியிற்கு விளக்கு விருது கிடைத்தபோது, அவரின் நண்பர்களிடமிருந்து மட்டுமில்லை, அவரை தம் முன்னோடியாக கொண்டவர்களிலிருந்தும் பல்வேறு தளங்களில் கோணங்கியை பற்றிய மறுவாசிப்பு நிகழுமென நினைத்திருந்தேன். ஆனால் அநேகமாய் எல்லோரும் வாழ்த்துக்களோடு மட்டும் நின்று எதையும் விரித்தெழுதாது கோணங்கியை அவர்போக்கில்  தனித்து அலைய விட்டுவிட்டனர். நாம் நமக்கு பிடித்த படைப்பாளியொருவரை பல்வேறு விதமாய் வாசிப்புச் செய்தும், தொடர்ந்து அறிமுகம் செய்தபடி இருப்பதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். கோணங்கியைப் போன்ற சித்தன்போக்கில் அலைபவர்கள் இதைத் தனிப்பட விரும்பமாட்டார்கள் என்றாலும் புதிதாய் வாசிக்க வருபவர்களுக்கு மட்டுமில்லை, தமிழ் இலக்கியச் சூழலில் 'மும்மூர்த்திகளின் தளங்களுக்கு' மாற்றாக கோணங்கியை முன்வைக்கும் அவசியமும் இருக்கின்றது.

உண்மையில் இன்னமும் கோணங்கியின் பெருநாவல்கள் ('பாழி', 'பிதிரா', 'த') எதனுள்ளும் என்னால் நுழையமுடியாதிருக்கின்றது. கோணங்கியிற்கு விருது கிடைத்த செய்தி கேள்விப்பட்டபோது, எப்படியென்றாலும் கஷ்டப்பட்டு தினம் 10 பக்கங்களாவது 'பாழி'யில் இருந்து வாசிக்கத் தொடங்குவோம் என நினைத்திருக்கின்றேன். ஆனால் இன்றையகால என மனச்சூழலில் எளிய வாசிப்புக்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதால் அதைத் தொடர முடியாது இருக்கின்றது. ஆனால் கோணங்கியின் நாவல்களை வாசித்தவர்கள் அவை குறித்து எழுதலாம்; எப்படி அந்த நாவல்களிற்குள் நுழைவது என்ற மாயப்பாதையின் வரைபடத்தை மேலோட்டமாய் வரைந்தும் காட்டலாம்.

ந்த எழுத்தாளரும் தன் படைப்பு விளங்கிக்கொள்ளப்படக்கூடாது என்று நினைத்து எழுதுவதில்லை. கோணங்கியே ஓரிடத்தில் 'எனக்கு முன்பு எழுதிய மொழியில் தொடர்ந்து எழுதுவது சலிப்பாய் இருந்தது. எனவே புதிய மொழியைத் தேடவேண்டியது அவசியம் இருந்தது' என கூறியிருக்கின்றார். நாம் பதின்மங்களில் இருக்கும்போது ஒருவகையான எழுத்து மொழியை வைத்திருப்போம். இப்போது அதே மொழியில் எழுதிவிடமுடியாது. அப்படி எழுதினால் கூட அதை வாசித்துப் பார்க்கும்போது நமக்கே கூச்சம் வரும். அவ்வாறான ஒரு நிலையைத்தான் கோணங்கி தன் பழைய நடையில் பார்க்கின்றார் போலும்.

கோணங்கியிற்கு விருது கிடைத்த மகிழ்ச்சியில், அவரின் படைப்பு(நாவல்) பற்றி இணையத்தில் தேடியபோது கிடைத்தது பிரம்மராஜன் எழுதிய எதிர்மறையான இந்த விமர்சனம்:  விமர்சனம் எப்படியிருந்தாலும் அது ஒருவகையில் வாசிப்பவரைப் பாதித்திருக்கின்றது என்றும், எதிர்மறையாக இருந்தால் கூட அந்த படைப்பாளியின் மீதிருக்கும் நம்பிக்கையினால்தான் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என உறுதியாக நம்புகின்ற ஒருவன் நான். சிலவேளை ஒரு எதிர்மறையான விமர்சனம் கூட அந்தப் படைப்பு அவ்வளவு மோசமானதா எனத் தேடவைத்து உங்களை ஈர்க்கக்கூட வைக்கும். உதாரணத்திற்கு 'காவல் கோட்டம்' வந்தபோது எஸ்.ராமகிருஷ்ணன் மிக எதிர்மறையான விமர்சனத்தை அதற்கு வைத்திருந்தார். எஸ்.ராவின் விமர்சனத்தை வாசித்தபோது, எவரையும் அவ்வளவு சீண்டிப்பார்க்காதவராயிற்றே, இவ்வளவு பொங்கி எழுதுகின்றாரே அந்த நாவல் அவ்வளவு மோசமானதா என்ற குறுகுறுப்புடன் 'காவல்கோட்டத்தை' வாசிக்கத் தொடங்கினேன். அதிசயமாய் எனக்கு அந்த நாவல் மிகப் பிடித்துப் போனது. ஆக ஒரு விமர்சனம் கடுமையாக இருந்தால் கூட சிலவேளைகளில் நம்மைக் கவரவும் கூடும் என்பதற்கு இது ஒரு சான்று.

பிரம்மராஜனின் இந்த விமர்சனத்தை ஏற்கனவே சிலதடவைகள் வாசித்தபோதும்,  இப்போது மீண்டும் வாசிக்கின்றபோது கூட எனக்கு கோணங்கி விலகிப்போன ஒருவராக இருக்கவில்லை. நான் கோணங்கியின் நாவல்களை முழுமையாய் வாசிக்கும்போது சிலவேளைகளில் இந்த எதிர்மறை விமர்சனத்திற்கு -காவல்கோட்டத்திற்கு நிகழ்ந்தது போல- நன்றி சொல்லக்கூடியவனாகக் கூட மாறிவிடவும் கூடும்.

கோணங்கி பற்றிய இன்னொரு கட்டுரை, பவா செல்லத்துரை எழுதிய 'கோணங்கி பெண் பார்க்கப்போன கதைகள்': . இதையும் முன்னர் வாசித்ததாக நினைவு.  ஆனால் எப்போது வாசித்தாலும் அதிலிருக்கும் நகைச்சுவையிற்கு அப்பால் மனம் நெகிழ்ந்து போகின்றவனாக ஆகிவிடுகின்றேன். கோணங்கி தன்னை வாசித்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்கின்ற சந்தர்ப்பத்தில் என்னை நான் அங்கே கண்டுகொண்டேன். இந்நிகழ்வு நடந்து அடுத்த நாள் விடிகாலையில் எவரும் அறியாமல் நகர் நீங்கிப் போய்விடுகின்ற கோணங்கியை நான் பின் தொடர விரும்பினேன்.  அவரின் கரங்களைப் பற்றி காதல் பிரிவோ, ஒரு நிரந்திர உத்தியோகம் இல்லை என்பதோ தனிமையையோ துயரத்தையோ தரக்கூடியதாக இருக்கலாம். இவற்றோடு சமரசம் செய்துகொண்ட எத்தனையோ பேர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு அலைந்துகொண்டிருப்பதால்தானே இன்னுமின்னும் எங்களை வசீகரித்துக்கொண்டிருக்கின்றீர்கள். வழிகாட்டியாக நீங்கள் முன்னே போய்க்கொண்டிருந்தாலும் உங்களைப் பின் தொடர முடியா அவலத்துடன் கண்ணிற்குத்தெரியாக் கண்ணிகளை அறுத்தெறிய முடியாது நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்' எனக் கூற வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.

கோணங்கியின் இயற்பெயரும் சிலப்பதிகாரத்தை எழுதியவரின் பெயரும் ஒன்றே. முன்னவர் துறவியாக அலைந்ததைப் போல கோணங்கியும் தனது பயணத்தைத் தொடர்கின்றவர். அவரின் தனிமையான பயணங்களை நாம் பின் தொடராதபோதும் எம்முடைய அன்பும் வாழ்த்தும் அவரை என்றும் அரவணைத்தபடி இருக்கும்,

ஈழத்துச் சூழலில் மிக முக்கியமானவரான ஏ.ஜே கனகரட்ண தன்னைப் பற்றிய பாராட்டுவிழா(?) நடந்தபோது அந்த இடத்திற்கே காலடி எடுத்துவைக்கவே கூச்சப்பட்டு போகாமலே இருந்தவர். அவரைப் பற்றிய சிறப்பிதழ்  புலம்பெயர் இதழொன்றினால் வெளியிடப்பட்டு அவரின் கையில் கொடுக்கப்பட்டபோது கூட  தூக்கியெங்கோ ஓரத்தில் வீசியெறிந்தவர். அந்தளவிற்கு தன் மீதான ஒளிவட்டத்தை வெறுத்தவர். இன்றையகாலத்தில் எல்லோருமே தம்மைத்தாமே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கின்ற சூழலில்,  ஏஜேயைப் போல தன்னை முன்வைக்க கூச்சம் மட்டுமின்றி அதுகுறித்து சிறிதும் அக்கறையில்லாத கோணங்கி போன்றவர்களைப் பார்ப்பதே மிக அரிது. அவ்வாறான ஒருவரை முன்னோடியாய்க் கொள்வதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியே.

(Oct 17, 2014)

வர்ணங்களை உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Monday, December 08, 2014

-சுகுமாரனின் 'வெல்லிங்டன்' குறித்த வாசிப்பனுபவம்-

ரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் பார்க்காத, கடக்காத ஓர் இடத்தை நெருக்கமாக உணர சிலவேளைகளில் ஒரு புத்தகமே போதுமாயிருக்கும். அவ்வாறு நாம் விலகியோ/விலத்தியோ போக முடியாதவளவிற்கு 'வெல்லிங்டன்' என்கின்ற தான் சிறுவயதுகளில் வசித்த ஊரை இந்தப் புதினத்தில் மிக நுட்பமாகக் கட்டியெழுப்பியிருக்கின்றார் சுகுமாரன். சிறுவர்கள் வயதுக்கு வரும் நாவல்களிற்கு சாலிஞ்சரின் "Catcher in the Rye'ல் இருந்து அண்மையில் வெளிவந்த மைக்கல் ஒண்டாச்சியின் 'Cat's Table' வரை நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். வெல்லிங்டன் உருவாகிய வரலாற்றை ஆங்கிலேயரின் குறிப்புக்களிலிருந்து தொடங்கி, அங்கே விஸ்தரிக்கப்படுகின்ற இராணுவ முகாங்களால் எவ்வாறு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதையும், காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் சிறுவன் பாபுவின் பார்வையினூடு வெளிக்கொணரப்படுகின்றது.

மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதர்களாகவே' இருக்கின்றார்கள். அன்பாய் வாழப் பிரியப்படுகின்றார்கள், பிடித்த யாரோடோ ஓடிப்போகின்றார்கள், பிறன்மனை தேடி அலைகின்றார்கள், சிறுவர்கள் மீது வன்முறை செலுத்துகின்றார்கள், மற்றவர்களுக்குக் கிடைப்பது தங்களுக்கு வாய்க்கவில்லையென பொறாமைப்படுகின்றார்கள், காதலுக்குத் துரோகம் செய்கின்றார்கள், துயரத்தின் மிகுதியின் வாழமுடியாது தற்கொலை செய்யவும் துணிகின்றார்கள். நாவலை வாசித்து முடிக்கும்போது நீங்களும் வெலிங்டனுக்குள், இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்று ஒரு பாத்திரமாக நிச்சயம் மாறியிருப்பீர்கள். சரஸ்வதி ரீச்சர் ஊரை விட்டு முற்றுமுழுதாக விலகும்போது ஏன் கண்கள் ஈரமாயின என்பதற்கு இப்போதும் சரியான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. பாபுவிற்கு பிரியமான, காமத்தின் முதல் அரும்பை கிளர்த்திய சக்குக்காவைப் போல, யாரேனும் ஒருவரைத் தாண்டாது நம்மில் அநேகர் வந்திருக்கவே முடியாது.

இந்த நாவலைப் போலவே, இந்த நாவல் எழுதியது பற்றி சுகுமாரன் எழுதிய பின்னுரையும் முக்கியமானது. நாவலை எழுதத் தொடங்கிய காலம்,  ஆரம்ப காலத்தில் எழுதியவை பிடிக்காமல் போனது, நாவலிற்கான மொழி கைவராமல் ஒரு தற்கொலையிற்கான மனதைப் போல சோர்ந்து நின்றது, பிறகு எழுதியதை நிறைய வெட்டியெறிந்துவிட்டு வேறொரு திசையில் எழுதிப்போனது, நாவலிற்கு ஆதாரமாய் வாசித்த நூற்கள், ஒருகட்டத்தில் நாவலை அதன்போக்கிலே போகவிட்டு, அதனைப் பின் தொடர்ந்து போனது என்று எழுதுகின்ற சுகுமாரனின் குறிப்புகள், நாவல்கள் எழுதப் பிரியப்படும் எந்த ஒருவருக்கும் மிகவும் பயன்படக்கூடியவை.

சுகுமாரன் பாபுவினூடாக முன்வைக்கும் அக்காக்கள் பலரின் வாழ்க்கை, எனக்கும் நெருக்கமானது. சிறுவன்களுக்கும் அக்காக்களுக்கும் உறவை, சிலவேளைகளில் அம்மாக்களால் கூட அறிந்து கொள்ளவோ/ விளங்கிக்கொள்ளவோ முடியாத அந்தரங்கங்களை உடையது. அக்காக்கள் காட்டும் அல்லது அவர்களின் பார்வையினூடு விரியும் ஒரு உலகைக் காணும் சிறுவன்கள் ஏதோ ஒருவகையில் வித்தியாசமான பருவத்தை பதினமங்களில் அடைகின்றார்கள். ஊரில் இருந்தபோது மட்டுமின்றி பிறகு இடம்பெயர்ந்து அலைந்தபோதும் நான் வெவ்வேறான அக்காக்களில் அரவணைப்பிற்குள்ளே இருந்திருக்கின்றேன். பதினமங்களை அடைந்தபோது, என் வயதொத்த பெண்களை விட, அக்காக்கள் போன்ற அனுபவங்களுள்ள பெண்களைத் தேடியே அலைந்திருக்கின்றேன், அது ஏனென்று நினைக்கும்போது சற்று வியப்பே வருகின்றது.

வெல்லிங்டனை வாசிக்கும்போது அந்த நிலப்பரப்பிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதன்பிறகு நாமும் ஒரு சாட்சியாக மாறும்போது நம்மால் நாவலின் பலத்தைப் பாராட்ட மட்டுமில்லை, பலவீனங்களைக் கூட புரிந்து ஏற்றுக்கொள்ள முடிகின்றது. நம்மை அதன் நிலப்பரப்பிற்குள்/பின்னணியிற்குள் அழைத்துச் செல்லாத நாவல் எத்தகைய சிறப்பாக இருந்தாலும், நாம் அதற்கு அந்நியராகிப் போய் முற்றுமுழுதாக அதனோடு ஒட்டிக்கொள்ள முடியாது போய்விடுகிறது. ஏன் வெலிங்டனோ, பூனையின் மேசையோ, சடங்கோ, காடோ, யாமமோ எனக்கு மிக நெருக்கமாய் இருக்கிறதென்று யோசிக்கும்போது, அவை தமக்கான நிலப்பரப்பை வாசிப்பவரிடையே ஆழமாய் உள்ளிறக்கியவை என்பது ஒரு முக்கிய காரணமென நினைக்கின்றேன்

நிறைய நண்பர்களோடு அலையும் பாபு, நண்பர்கள் ஒவ்வொருவராய் ஊர் விட்டு நீங்கி வேறு நகர்களுக்குப் போகின்றபோது, தனிமையில் உளைந்தலைகின்றார். பின்னர் தனிமையை தனக்குப் பிடித்தமான ஒன்றாக ஆக்கி, நெருக்கமும் கொள்கின்றார். அவ்வாறு பழக்கப்படுத்திக்கொண்டதாலேயே சரஸ்வதி ரீச்சர் ஊர் நீங்கிப் போகும்போதோ, கெளரி அக்கா வேலை நிமித்தம் செல்லும்போதோ துயரத்துடன் அந்நிகழ்வுகள் தரும் வெறுமையைத் தாங்கிக்கொள்ள முடிகின்றது. இவ்வாறு அனுபவங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கும்போது, நாம் அவற்றைக் கடக்கையில் வளர்ந்த மனிதர்களாக ஆகிவிடுகின்றோம் அல்லவா?  இதை மிக நேர்த்தியாக சுகுமாரன் இந்நாவலில் கொண்டு வருகின்றார். இங்கேதான் சிறுவனான பாபு, வளர்ந்தவனாகி விடுகின்றான் என்பதையும் வாசிக்கும் நாங்கள் கண்டுகொள்கின்றோம்.

சுகுமாரன் இந்த நாவலெழுதிய வரலாற்றைச் சொல்லும்போது, மார்க்வெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' பாதிப்பு இதில் தன்னையறியாமலே வந்திருக்கின்றது எனச் சொல்லி மார்க்வெஸின் நாவலில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும்போதெல்லாம் மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சி பறக்கின்றமாதிரி, தனது நாவலில் வரும் பாத்திரமான மம்மது வரும்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றார். ஒருநாள் மாலையில் வெலிங்டனை வாசித்துக்கொண்டிருந்தபோது, நாவல் மீதான பித்தத்தில் நள்ளிரவு தாண்டி இரவுணவைக் கூட சாப்பிடாது தொடர்ந்து வாசித்து முடித்தபோது, இடையில் என்னறைக்குள் ஒரு வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி வந்து பறந்துகொண்டிருந்தது தற்செயலானது என்றாலும் மறக்கமுடியாத தருணந்தான் அதுவும்.

ஒரு கவிஞராக அறிமுகமாகி, தனது 50களில் முதல் நாவலென்றாலும் முக்கியமான புனைவை எழுதிய சுகுமாரன், நாம் எழுத விரும்பும் கதையை எப்போதேனும் எழுதிவிட முடியும் என்று நம்பிக்கை தந்திருக்கின்றார். இந்தக் கணத்தில் என்னோடு நாவல் வாசிப்பில் கூடவே பறந்த வண்ணத்துப்பூச்சியிடம் சுகுமாரனிற்கான என் கதகதப்பான நேசத்தை நன்றியுடன் அனுப்பிவைக்கின்றேன்.

(நன்றி: 'காலம்' - இதழ் 45)

பூவசரம்பூ குறிப்புகள்

Friday, December 05, 2014

Birdman

Alejandro González Inárritu இம்முறையும் ஏமாற்றவில்லை. இது Amores Perros, 21 grams, Babel வகைப் படமல்ல. Biutifull வகையிற்கு ஒரளவு அருகில் வரக்கூடிய படம். ஆனால் Biutiful அதிக மனவழுத்ததிற்கு கொண்டுபோகும், மகிழ்ச்சியிற்கான சிறு இடத்தையும் தராத படம். Birdman சிரித்துப் பார்க்கக்கூடிய படம். எனினும் அதற்குப் பின்னால் இருக்கும் துயரத்தையும் மனவழுத்தத்தையும் நேர்த்தியாய்க் கொண்டுவருகின்றது.

ஒருகாலத்தில் super hero படங்களில் நடித்து, புகழ் மங்கிய காலத்தில் Broadwayயிற்கு வருகின்ற ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கதை. நாடக மேடையிற்காய் அவர் ரேமண்ட் கார்வரின் 'What We Talk About When We Talk About Love' கதையை எடுத்து இயக்கவும் நடிக்கவும் செய்கிறார். மனைவியைப் பிரிந்தவர்; மகள் rehab லிருந்து திரும்பி வருகின்றார்; மேலும் இவரின் நாடகத்திற்குள் தற்செயலாய் நுழையும் இன்னொரு நபர் அதற்கான எல்லாப் புகழையும் எடுத்துக்கொள்கிறார் என அனைத்தையும் அந்தரமாய் எதிர்கொள்ளவேண்டிய ஒருவரின் வாழ்க்கையைப் பின் தொடரும் திரைப்படம். இசையும், ஒளிப்பதிவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. எந்த வகையில் கமராக் கோணங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாமறியாமலே வெவ்வேறு சூழலிற்கு காட்சிகளுக்கு நகர்த்தப்படுவது ஒருவகையான வித்தைதான்.

வணிகச் சினிமாவையும், மில்லியன்கணக்கில் லாபம் ஈட்டும் super hero திரைப்படங்களையும் இது ஒருவகையில் கேலி செய்கின்றது. அது மட்டுமின்றி இன்றைய நவீன தொழில்நுட்ப ஃபேஸ்புக், ட்வீற்றர் போன்றவற்றைத் தெரியாத/அணுகாத ஒரு சமூகத்திற்கு இனியான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், பிறகு ஒரு தற்செயலான -முட்டாள்சம்பவத்தினால்- எப்படி இந்த நடிகர் சமூக ஊடகங்களில் பிரபல்யம் ஆகின்றார் என்பதையும் அதற்கேயுரிய அபத்தங்களுடன் நம்முன்னே வைக்கப்படுகின்றது.

யதார்த்த்தை மீறிய இலத்தீன் அமெரிக்கர்களைப் பாதிப்புச் செய்யும் மாய யதார்த்தமும் இந்தப் படத்தில் கலந்திருக்கின்றது. ஆகவேதான் தற்கொலை என நாம் நினைப்பதைச் சடுதியாய் மாற்றி பறப்பதாய்க் காட்டமுடிகின்றது. இறுதிக்காட்சியில் கூட என்ன நடந்திருக்குமென நமக்குக் காட்டாது 'பறவைமனிதனின்' மகள் எதையோ பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு முடிவுறாத சிறுகதை போன்று நம்மை இன்னுமின்னும் அத்திரைப்படத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்ற புள்ளியே.


The Tiger Vanquished (LTTE's story)

எம்.ஆர். நாராயண் சுவாமியின் The Tiger Vanquished நூலை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாராயண் சுவாமி நல்லாய்க் கதை சொல்லக்கூடியவர் என நினைக்கின்றேன், ஏதோ எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்தமாதிரி, என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கூறும்போது அப்படி நினைக்காமல் வேறெப்படி நினைக்க முடியும். இப்படி 'நன்றாகக் கதை' சொல்லக்கூடிய இன்னொருவர் டி.பி.எஸ்.ஜெயராஜ். தனக்கு கிடைத்த 'சோஸ்களை'க் கூட ஒழுங்காய்த் தராது டிபிஎஸும் அருகிலிருந்து பார்த்தமாதிரி எழுதுவார். அதனால்தான் நிறையப் பேர் சுவாரசியமாக இவர்களை வாசிக்கின்றார்கள் என்பது வேறுவிடயம். டிபிஎஸின் அநேக கட்டுரைகளில் விபரிக்கப்படும் பல சம்பவங்களை ஏற்கனவே வேறு யாராவது எழுதியிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் டிபிஎஸ் அதைப் பற்றிய எல்லாம் கவலைப்படாது ஏதோ தனக்கு மட்டுமே கிடைத்த தகவல் என்கின்றமாதிரி எழுதிக்கொண்டு போவார்.

எம்.ஆர்.நாராயண் சுவாமி ஒரு பத்திரிகையாளர் என்றாலும், அவர் றோவோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவராக இருக்கலாம் என்பதற்கான புள்ளிகளையும் இதில் அவரையறியாமலே தருகின்றார். இந்தியாவில் நிறையப் பத்திரிகையாளர்கள் இப்படி இருக்கின்றார்கள் அல்லது பின்னால் றோவால் உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதும் அவ்வளவு பரம இரகசியம் அல்ல.

ஈழப் போராட்டம் குறித்து புனைவுகள் எழுதப்படவேண்டும்; அதையெவரும் மறுக்கப்போவதுமில்லை. அதேபோலவே வரலாற்றுத் தரவுகளோடு ஆய்வுரீதியான கட்டுரைகளும் இன்னும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் மீண்டும் ஒரே வட்டத்திற்குள் நுழைந்துவிடும் அபாயம் ஈழம் சார்ந்து இன்னமும் இருக்கின்றது. புலிகளை ஒரு 'தீவிரவாத இயக்கமாய்' கட்டமைத்து நாராயண் சுவாமி எழுதுவதில் பிரச்சினையில்லை. ஆனால் புலிகள் அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டால் இந்திய இராணுவமோ அல்லது இலங்கை இராணுவமோ 'நல்லவர்களாக/தியாகிகளாக' மறுஜென்மம் எடுத்துவிடுவார்கள் என்று நாராயண் சுவாமி போன்றவர்கள் நம்புவதை நினைக்கத்தான் சற்று வியப்பாய் இருக்கிறது.

நாராயண் சுவாமியிற்கு இந்திய/இலங்கை அரசுக்களின் மீது அபரிதமான அன்பிருந்தால் கூட சிலவேளைகளில் உண்மையைக் கூறிவிடுகின்றார். புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் இடையிலான (நோர்வே) சமாதானப் பேச்சுக்களை முதலில் ஆரம்பித்ததே இந்தியாவின் றோதான் என்ற முக்கிய உண்மையை இந்த நூலில் குறிப்பிடுகின்றார்,. ஒரு நாட்டிற்குள் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் அல்லது சமாதானத்தைக் கொண்டுவருவது என்றால் ஒரு அரசல்லாவா தன்னை வெளிப்படையாக முன்வைத்து வெளிவரவேண்டும். ஆனால் ஒரு நாட்டின் உளவுப்பிரிவான றோதான் உள்ளே இருந்து சமாதான நடவடிக்கையைத் தொடங்குகின்றனர் என்றால் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா? மேலும் அன்றைய காலகட்டத்தில் புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு நிகரான அமைப்பாக போர்க்களங்களில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காலமும் கூட என்பதைக் கவனித்தாக வேண்டும்.

அதுமட்டுமில்லாது, சந்திரிக்கா அரசாங்கம் புலிகள் மீது தாம் சார்பாக இருக்கக்கூடும் என்று நினைக்கக்கூடும் என்பதால், றோ அதேகாலகட்டத்தில் இலங்கை அதிரடிப்படையினரை அழைத்து இந்தியாவில் பயிற்சி கொடுத்திருக்கின்றனர் என்பதையும் நாராயண சுவாமி குறிப்பிடுகின்றார்.

ஆக றோ(இந்தியா) ஒருகாலத்தில் தன் இயல்பில் தொடங்கிய தமிழ் போராட்டக் குழுக்களை இந்தியாவிற்கு அழைத்து பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து, இலங்கையிற்குப் போய் மற்றவர்களையும் அழியுங்கள் உங்களையும் அழியுங்கள் எனக் கற்றுக்கொடுத்தனர். பிறகு சமாதானக் காலத்திலும், சிங்களவர்க்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, இப்போது சமாதான காலம் என்றாலும் விரைவில் உங்களுக்கு நாங்கள் வேறொரு வேலை தருகின்றோம் எனச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் போலும்.

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் மட்டுமல்ல, ஜேவிபி கிளர்ச்சிகளின்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவிய கடந்தகாலங்கள் எல்லாம் உண்டல்லவா?

இதையெல்லாம் நாராயண் சுவாமி போன்றவர்கள் விவரித்து எழுதமாட்டார்கள். அதற்கு அவர்களின் 'பத்திரிகா தர்மம்' மட்டும் அல்ல, இந்தியத் தேசியப் பெருமிதமும் கைகொடுக்காது என்பதே உண்மை.


சிலநாட்களுக்கு முன்னர் தோழியொருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ராஜம் கிருஷ்ணனின் மரணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் தனிமையையும், வேதனையையும் போலத்தான் நமக்கும் நிகழ்ந்துவிடுமா எனக் கதைத்துக்கொண்டிருந்தோம். தனிமையிலே கழியக்கூடிய சாத்தியமுள்ள நம்முடைய முதுமையில் யார் வந்து நம்மைப் பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு தோழி, தன் சகோதரிகளின் குழந்தைகள் வந்து பார்க்ககூடும் என்றார். நானும் இப்போது என்னோடு நெருக்கமாய் இருக்கின்ற அண்ணாக்களின் பிள்ளைகள் வந்து பார்க்கக்கூடுமென நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் இங்குள்ள கலாசாரத்திற்குள் பிறந்து வளர்ந்ததால் இப்படி எதிர்ப்பார்ப்பது கூட சரியானதோ தெரியவில்லை என அந்தத் தோழியிடம் கூறினேன்.

இப்போது அம்பை, சு.கிருஷ்ணமூர்த்தியின் மறைவைப் பற்றி 'அஞ்சலி: பாதையின் முடிவு' எழுதியிருப்பதை வாசித்தேன். அதில் "குடும்பம் இல்லாத எழுத்தாளர்கள், குடும்பத்திலிருந்து வெளியே வந்தவர்கள், முதுமையிலும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள், நோயுற்ற எழுத்தாளர்கள் இவர்கள் தங்கக்கூடிய ஆரோக்கியமான சூழல் உடைய இடம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலைஞர் ஒருவரை ஒருமுறை சந்தித்தபோது கலைஞரான அவர், அன்னையைக் கலைஞர்களுக்கான ஓர் இல்லத்தில் சேர்த்திருப்பதாகக் கூறினார். ஓவியர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இருக்கும் இல்லம் அது என்றார். அப்போது அந்தமாதிரி ஓர் இல்லம் இங்கு அமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. முதுமையைக் கழிப்பதற்கான இல்லம் இல்லை. முதுமையை அனுபவிக்கும் இல்லம்; முதுமையைக் கொண்டாடும் இல்லம். இளவயதினர் வந்துபோகும் இல்லம். "
 பற்றி எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது என்னைப் போன்றவர்கள் முதுமையிற்குள் நகருவதற்குள்- அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால் இது குறித்து சுந்தர ராமசாமி அம்பையிடம் கேட்ட கேள்வியும் நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான். எனக்கும் எழுதுவது பிடிக்கும். பிற எல்லாவற்றையும் விட இதில் ஈடுபடும்போது மிகுந்த அமைதி அடைகின்றதும் உண்மையே ஆனால் அதற்காய் எழுத்தைச் சிறப்புச் சலுகையாக்குவதை அல்லது அவ்வாறு ஆக்குபவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. ("சுராவிடம் ஒருமுறை இதுபற்றிப் பேசியபோது, எழுத்தாளர்கள் எந்த வகையில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் இத்தகைய சிறப்புச் சலுகைகள் பெற என்ற கேள்வியை எழுப்பினார். அது சரியான கேள்விதான். எழுதுவது என்பது எந்த வகையிலும் தனிச் சிறப்பு உள்ள ஒன்றில்லைதான். ")

இங்கும் நம்மிடையே இருக்கும் நண்பர் ஒருவரும் அடிக்கடி கம்யூன் தொடங்குவது குறித்து பேசிக்கொண்டிருப்பார். அம்பை விரும்புவதைப் போல எழுத்தாளர்களுக்கென ஒரு இல்லம் அமைக்காதுவிட்டால் கூட, நான் முதுமையடைவதற்குள் நமக்குப் பிடித்தமாதிரி ஒரு கம்யூனாவது இருந்தால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும்.


சென்ற வாரம் முன்பு படித்த ஒரு பாடசாலையின் நிகழ்விற்குச் சென்றிருந்தேன். கனடா வந்த புதிதில் அடிக்கடி அங்கே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தாலும், பின்னர் எல்லா 'அமைப்பு'க்களிற்கும் இருக்கும் அதிகாரப் போட்டியில் இங்குமிருப்பதைப் பார்த்து வெறுத்துப்போய், 'ஞானம் பிறக்க புத்தனுக்கு ஒரு போதிமரம் போதும்/ இந்த வயசுப்போனதுகள் தெளிய/ எத்தனை போதிமரங்கள் தேவை' என எழுதிக்கொடுத்திருந்தேன். என்னதான் இருந்தாலும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருப்பதால், அதையும் அன்றைய ஆண்டு மலரில் பிரசுரித்திருந்தார்கள்.

அமைப்பாய் இல்லாதபோது, தனிப்பட்டு பலர் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். எப்போதாவது அவர்கள் அழைக்கும்போது கலைவிழா நிகழ்வுகளுக்குப் போவதுண்டு. ஆனால் அங்கேயும் அரங்கத்திற்கு வெளியே ஏதாவது வேலை செய்யவோ இல்லை இடைவேளையில் சாப்பாடு கொடுப்பதற்கு பொறுப்பாகவோ அனுப்பிவிடுவார்கள் என்பதால் ஒருபொழுதும் நிகழ்ச்சிகளை ஒழுங்காய்ப் பார்க்க முடிந்ததில்லை.

நிறைய மனிதர்கள் கூடும் இடங்கள் எனக்கு எப்போதும் அந்தரத்தைத் தந்துகொண்டிருப்பவை. மால்களில் சில கடைகளுக்குப் போனவுடனேயே தலைசுற்றும் நிலை வந்துவிடும் விசித்திரதன்மை எனக்கு இருக்கிறது. இம்முறை கலை நிகழ்விற்கு அண்ணாவின் பிள்ளைகளான எழிலும், நிலாவும் நிகழ்ச்சிகள் செய்வதால் போகலாமென்றிருந்தேன். போனாலும் எங்கேயாவது பிறர் கண்ணில்படாமல் ஒளிந்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். மண்டபத்தில் பல்கணி இருக்கைகள் இருந்ததால் அங்கே எளிதாய்ப் பதுங்கிவிட முடிந்தது.

ஏற்கனவே 15வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் நடத்தபட்டு, அவர்களில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொருவரும் ஒரு கீர்த்தனையும், ஒரு சினிமாப்பாட்டும் பாடினார்கள். மிக நல்லாய்ப் பிள்ளைகள் பாடினார்கள். சினிமாப் பாடல்களில் நிறைய ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை (மார்கழித் திங்கள் அல்லவா, 'வெள்ளைப் பூ') பாடியதால் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. நன்றாகத் தமிழை உச்சரித்துப் பாடியது மகிழ்ச்சியளித்திருந்தது.

நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அப்போது என்னோடு இங்கே உயர்கல்லூரியில் படித்த தோழியையும் சந்திக்க முடிந்திருந்தது. அவர் எங்கள் பாடசாலையில் பல்கலாச்சார நிகழ்வுகள் நடக்கும்போது நடனமாடுவார். அரங்கில் என்னோடு இருந்து பார்க்கும் தோழிகள், ஆகா எவ்வளவு அழகாய் கண்ணை உருட்டி ஆடுகின்றார் என வியப்பார்கள். எனக்குத் தூரப்பார்வை பிரச்சினையென்பதால் இவ்வாறான 'நுண்ணிய தளங்கள்' எல்லாம் புலப்படுவதில்லை. அந்த நடனமாடும் தோழியை பார்வையாளராய்ப் பார்த்தபோது, நமக்கான காலங்கள் போய்விட்டது அல்லவா எனக் கூறவேண்டும் போலத்தோன்றியது. இன்னொரு பெண் என்னை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்னை இலங்கையிலோ, கனடாவிலோ அல்லது இடைநடுவிலோ தெரிந்திருக்கக் கூடும். எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிறைய 'சம்பவங்கள்' நிகழ்ந்திருப்பதால் அவரை நெருங்கிக் கதைக்கவும் பயமாயிருந்தது.

நாடகம் தொடங்கியபோது, வயிற்றுக்கு உண்டியிடுவதில் நேரத்தை நிறையக் கழித்ததால் இடைநடுவிலேயே பார்க்கத்தொடங்கினேன். இரண்டு பேர் நிறையக் காலம் காதலித்து திருமணம் செய்கின்றார்கள். திருமணத்தின்பின் பெண் தன் நாயோடு நிறைய நேரம் செலவளிக்கிறார் என ஆணும், கணனியோடு எந்தநேரமும் துணைவர் இருக்கிறார் என பெண்ணும் சண்டை பிடித்து, பிறரால் சமரச முயற்சி செய்யப்பட்டும் பிரிந்து போகின்றார்கள்.

சில வருடங்களின் பின் அந்த ஆண் வேறொரு திருமணம் செய்துகொள்கின்றார். பெண்ணோ தன் குழந்தையோடு வாழுவதே தனக்குப் போதுமென இருந்துகொள்கிறார். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கும்போது தங்களால் பழைய காதலிலிருந்து விடுபடமுடியவில்லை, அது எவ்வளவு அருமையாக இருந்ததென நினைப்பதுடன் நாடகம் முடிகின்றது.

நல்லதொரு நாடகமே. ஆனால் அதில் ஒரு பாத்திரம் என்னதான் நடந்தாலும் சேர்ந்திருப்பதுதான் எங்கள் தமிழ் கலாசாரம் என நிறைய அறிவுரை கூறுவார்.அதற்குப்பிறகு நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய ஒரு வானொலி அறிவிப்பாளரும் எங்களுக்கு கலாசாரம் முக்கியம், அதற்கு தமிழ்மொழியை அறிந்துகொள்வது முக்கியம் என மேலும் கருத்துரை வழங்கினார். தமிழ் மொழியை அறிவது நல்லவிடயந்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்க் கலாசாரத்தில்தானே களவொழுக்கம், காந்தர்வமணம் என நிறைய இருக்கின்றனவே. நமது விருப்பங்களுக்கு ஏற்ப நடந்தால் அது நம் கலாசாரம். நம் விருப்பங்களுக்கு அப்பால் நிகழ்ந்தால், அது நம் கலாசாரம் அல்ல.

எல்லா மொழிகளுக்கும், கலாசாரங்களுக்கும் இருப்பதுபோலத்தான் நம்மிடமும் எல்லாமே இருக்கின்றன. நாமெவரையும் விட தாழ்ந்தவருமில்லை. அதேபோல் எவரை விட உயர்ந்தவருமில்லை என்பதோடு, இதையும் சொல்லிக்கொள்ளலாம், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.

( படங்கள்: நன்றி: கூகிள் தேடல்)

ஹெக்டரும், மகிழ்ச்சியைத் தேடும் பயணமும்

Monday, December 01, 2014

நாம் எம்மை யாரென்பதை அறிய இடையறாது தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதைப் போல, நமக்கான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதுவாயிருக்குமெனவும் தேடுகின்றோம். ஆனால் மகிழ்ச்சியிலிருந்து மகிழ்ச்சியின்மையையும், நிம்மதியிலிருந்து நிம்மதியின்மையும் பிரிக்கமுடியாது என்பதே யதார்த்தமானது. மேலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கும்போது இறுதியில் எந்த ஒன்றுமே மிச்சமாவதும் இல்லை. ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். அவருக்குச் சொகுசான வாழ்வும், எதையும் செய்துகொடுக்கும் துணையிருந்தாலும் அவருக்கு வாழ்வு அர்த்தமில்லாதது போலத் தோன்றுகின்றது. அவரிடம் உளநலத்திற்காய் ஆலோசனை கேட்க வரும் நோயாளிகளையும், அவரால் நிம்மதியான/மகிழ்ச்சியான தளத்திற்கு நகர்த்த அவ்வளவு எளிதாய் முடிவதும் இல்லை. இது இன்னும் அவரை மனவழுத்ததிற்குள் இழுத்துச் செல்கின்றது.

உண்மையான மகிழ்ச்சி எதுவாயிருக்குமென அவருக்குக் கேள்வி வருகின்றது. அதை அறிவதன் மூலம் தனக்கு மட்டுமில்லை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும் உதவமுடியும் என திடீரென்று பயணம் ஒன்றைத் தொடங்குகின்றார். அவரோடு இணைந்து வாழும் துணையான கிளாராவிற்கு இதில் அவ்வளவு சம்மதமில்லை என்பதை அறிந்தே ஹெக்டர் புறப்படுகின்றார்.

மகிழ்ச்சியைத் தேடும் அல்லது மகிழ்ச்சி என்பது எதிலிருக்கிறது எனத் தேடும் தன் பயணத்திற்கு ஹெக்டர் முதலில் சீனாவைத் தேர்ந்தெடுக்கின்றார். அந்தப் பயணத்தின்போது ஒரு பெரும் பணக்காரரை விமானத்தில் சந்திக்கின்றார். அவரிடம் தன் பயணத்தின் நோக்கம் பற்றி பகிரும்போது, மகிழ்ச்சி என்பது பணத்தில் இருக்கிறதெனக் கூறி ஹெக்டருக்கு ஷங்காயின் இடாம்பீக நள்ளிரவு வாழ்க்கையைக் காட்டுகிறார், அங்கே சந்திக்கும் இளம்பெண் ஒருவர் மீது ஹெக்டர் மையல் கொள்கிறார். அப்போது அவர் கிளாராவையும் நினைவுகூர்ந்து 'மகிழ்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே நேரத்தில் நேசிப்பதாலும் வரலாம்' என நினைத்துக்கொள்கிறார்.ஆனால் தொடர்ச்சியான நாட்களில் அந்தச் சீனப்பெண் ஒரு பாலியல் தொழிலாளி எனத் தெரியும்போது 'மகிழ்ச்சி என்பது சிலவேளைகளில் முழுக்கதையையும் தெரியாமல் இருப்பதிலும் இருக்கிறது' என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதுகிறார்.

துயரமாய் முடிந்த இத்தேடலின் பின் பனிப்பிரதேசத்திலிருக்கும் திபெத்திய புத்தமடலாயத்தில் ஹெக்டர் போய்த் தங்குகின்றார். ஒருநாள் சூரிய வெளிச்சத்தில் மினுங்கும் கொடிகளைப் பார்த்து உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் நடனமாடும் துறவிகளைப் பார்த்து, இதிலென்ன இருக்கிறதென ஹெக்டருக்கு வியப்பாயிருக்கின்றது. ஒரு துறவி 'மகிழ்ச்சியிற்கான பாதையை, மகிழ்ச்சியில்லாத விடயங்களைத் தவிர்த்து ஒருபோதும் அடைய முடியாது' என மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதென்பதை வேறொருவகையில் ஹெக்டருக்கு உணர்த்துகின்றார்.

சீனா/திபெத் பயணத்தின்பின், ஹெக்டர் ஆபிரிக்க நாடொன்றுக்குப் பயணிக்கின்றார். அங்கே அவரது பல்கலைக்கழகக்கால நண்பர் வேலை செய்துகொண்டிருக்கின்றார். ஒரு ஆபிரிக்காப் பெண்மணியை இடையில் சந்திக்கும்போது, ஹெக்டரை அவர் விருந்திற்கு வரச் சொல்கிறார். உற்சாகமாய் விருந்தைக் கொண்டாடும் ஹெக்டர் திரும்பி வரும்வழியில் ஒரு குழுவினரால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வருகின்றார். அதிலிருந்து வெளியே வரும்போது மகிழ்ச்சி என்பது எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதைத் தன் அனுபவத்தினூடாக கண்டுகொள்கிறார். அதேசமயம் அவரது பல்கலைக்கழக நண்பர், தான் gay என்பதை ஹெக்டருக்கு உணர்த்தி, 'மகிழ்ச்சி என்பது நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அதன் நிமித்தம் நீங்கள் நேசிப்படுவதில் இருக்கிறது' என்கின்றார் அந்த நண்பர்.

இவ்வாறாக ஹெக்டர் தன் பயணத்தின்போது சந்திக்கும் ஒவ்வொருவரிடம் 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி என்பது என்ன?' எனக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற முயல்கின்றார். இடையில் இலண்டனில் இருக்கும் கிளாராவோடு ஸ்கைப் மூலம் உரையாட முயலும்போதெல்லாம், ஏதோ இருவருக்குமிடையில் விரிசல் வந்துவிட்டது மாதிரி இருவரும் உணர்கின்றனர். உரையாடல்களையெல்லாம் இடைநடுவில் நிறுத்தியும் கொள்கினறனர். மேலும், தொடக்கத்தில் ஹெக்டர் திடீரென்று பயணத்தைத் தொடங்கும்போது கிளாரா, ஹெக்டர் அவரது முன்னால் காதலியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கண்டுபிடிக்கின்றார். ஹெக்டர் சந்தோசத்தைத் தேடிப் போவதாய்ச் சொன்னாலும், அவர் தன் பழைய காதலியைத் தேடித்தான் செல்கின்றார் என்கின்ற சந்தேகமும் கிளாராவிற்கு வருகின்றது.


அதே போன்று தன்னால் முழுமையான சந்தோசமாய் இருக்க முடியாததற்கு, தன் பழைய காதலி சிலவேளைகளில் ஒரு காரணமாய் இருக்கலாமோ என்பதை அறிய, ஹெக்டர் ஆபிரிக்காவிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் பயணிக்கின்றார். விமானப் பயணத்தில் மூளைப் புற்றுநோயில் இறுதிக்கட்டத்திலிருக்கும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் ஹெக்டர், அவருடைய கடினபயணத்தில் உறுதுணையாக இருக்கின்றார். அப்போது அந்தப் பெண், 'மரணத்தைப் பற்றி அறியாத ஒருவராலும் வாழ்வைப் பற்றி அறிய முடியாது. நான் அதை அறிந்தவள்; எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியும்' என மகிழ்ச்சியிற்கான புது விளக்கம் ஒன்றைக் ஹெக்டருக்குக் கொடுக்கின்றார். மேலும் மகிழ்ச்சி என்பது 'எப்படிப் பிறர் கூறுவதை நிதானமாய்க் கேட்பது என்பதைக் கற்றுகொள்வதிலும் இருக்கிறது' என்கின்றார். ஹெக்டர் அவ்வாறானதொரு கனிந்த மனிதரெனவும் அந்தப் பெண் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் போகும் ஹெக்டருக்கு என்ன நிகழ்கின்றது? கிளாராவிற்கும் ஹெக்டருக்குமான உறவு என்னவாகிறது, ஹெக்டர் அவருக்குரிய மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கின்றாரா என்பதை நீளும் திரைப்படத்தில் பார்க்கமுடியும்.

இப்படி மகிழ்ச்சி எப்படி இருக்குமென அறியப் பயணிக்கும் ஹெக்டரை ஒப்பிட்டுப் பார்க்க உடனே நினைவிற்கு வருவது 'Eat, Pray, Love' . அது பெண் ஒருவருடைய தன்னைப் பற்றிய தேடல் என்றால் இந்தத் திரைப்படத்தை ஆணின் மகிழ்ச்சியிற்கான தேடலென எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே அதிக சலுகைகள் உள்ள வெள்ளையினத்தவர்களைப் பற்றியது (white privilege) எனினும் 'Eat, Pray, Love யில் எலிஸபெத் சென்ற ஆழத்திற்குள் ஹெக்டரின் பயணம் அமையவில்லை. எலிஸபெத் நாளொன்றின் சிறிய விடயங்களில் மகிழ்ச்சியைக் கண்டதுமாதிரி ஹெக்டர் தனக்கான சந்தோசத்தைச் சிறிய விடயங்களில் கண்டுகொள்ள முனையவேயில்லை. ஆண்களுக்குரிய இன்னுமின்னும் சாகசம் செய்து பார்ப்பதில் இருக்கும் கவனத்தினால், மிகச்சிறிய விடயங்களின் அழகான தருணங்களை கோட்டை விட்டு விடுகின்றனர் போலும்.

ந்தப் படம் மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிப்போகும் ஒரு ஆணின் பயணம் என்றளவில் என்னை கவர்ந்திருந்தாலும், இது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்கின்றது. சீனாப் பயணத்தின்போது ஹெக்டர் சந்திக்கும் ஒரேயொரு பெண்ணும் பாலியல் தொழிலாளியாகவே இருக்கின்றார். அதுவும் ஹெக்டர் இறுதியில் அந்தப் பெண் தன் அடையாளத்தை மறைத்து தன்னை ஏமாற்றியவர் என்று எதிர்மறையாகத்தான் அவரைப் பற்றி நினைக்கின்றார். ஆபிரிக்கா நாடொன்றின் பயணத்தின்போது, 'ஆபிரிக்கா' எனவே கூறப்படுகின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. அவற்றின் ஒரு பெயரைக் குறிப்பிட மறுத்து ஆபிரிக்கா எனப் பொதுப்படையாக குறிப்பிடுவது இன்னுமிருக்கும் காலனித்துவ மனோநிலையன்றி வேறெதுவாக இருக்கும்.

ஆபிரிக்க நாடொன்றில் நிகழும் விமானப்பயணத்தைக் கூட மிக மோசமாய் விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பவர்களாய், காலநிலைக்கு தாங்கமுடியா பழைய விமானமாய், இன்னும் கொண்டுபோகும் கோழி குலுக்கலில் முட்டையிடுவதாய்க் காட்டுவதெல்லாம் ஆபிரிக்கா கண்டத்து மக்கள் பற்றிய 'வெள்ளையினத்தவரின் பொதுப்புத்தியே' தான். அது மட்டுமில்லாது ஹெக்டரின் ஆபிரிக்காப் பயணம் முழுதும் ஆயுதக்குழுக்களும், இராணுவமுமே காட்டப்படுகின்றன, இவையெல்லாம் தற்செயலான நிகழ்வு என்று எவரும் சொல்லமுடியாதளவிற்கு காட்சிப்படுத்தப்படுகின்றது.

மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கும் அல்லது அது எதுவாய் இருக்குமென தேடிக்கொண்டிருப்பவர்க்கும், பயணங்களின் மீது தீராக் காதல் இருப்பவர்க்கும் இத்திரைப்படம் வசீகரிக்கவே செய்யும். ஆனால் அதேவேளை, காலனித்துவ எச்சங்களுடன் வெள்ளையின மேலாதிக்கத்துடன் எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகள் எரிச்சலைத் தருவதையும் மறுக்கமுடியாது,

மேலும் மகிழ்ச்சி என்பது இன்னொருவரால்/இன்னொன்றால் தரப்படுவதில்லை. அது நம் அகமனதோடு சம்பந்தப்பட்டது. சிலவேளைகளில் பயணங்கள் மூடப்பட்டிருக்கும் அந்த அகமனதைத் திறந்துவிடக் கூடியன. மேலும் எதுவுமே நிரந்தரமில்லாதது போல, மகிழ்ச்சியும் கணப்பொழுதுகளில் மாறிவிடக்கூடியதே. அதைத் தெளிவாக உணராதவரை நாம் மகிழ்ச்சி என்கின்ற கருத்துருவாக்கங்களினால் மட்டுமே சிறைப்பட்டிருப்போம். ஹெக்டர் கண்டடைகின்ற பாதை அவருக்குரியது. ஒவ்வொருத்தருக்கும் அவரவர்க்கான தனித்துவமான வழிகள் என்றுமே திறந்தபடியே இருக்கின்றன. புத்தர் ஒருவகையில் கூற விழைந்ததும் இதையேதான்.

(Movie: Hector and the Search for Happiness)
(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை இதழ்)

பிற்குறிப்பு:இத்திரைப்படம் Francois Lelordன் பிரெஞ்சுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நிஜவாழ்வில் Francois Lelord ஒரு உளவியல் நிபுணராக இருந்து, பல்வேறு வாழ்வு முன்னேற்றப் புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார். ஒருகட்டத்தில் அவ்வாறான நூற்களை எழுதுவதில் சோர்வு வந்து ஹொங்கொங்கில் நின்றபொழுது(2002ல்) ஹெக்டர் என்ற பாத்திரத்தை உருவாக்கி புனைவுகளை எழுதத் தொடங்குகின்றார். பின்னர், நீண்டகாலம் செய்து வந்த ஆலோசனை வேலையைத் துறந்து, சார்ஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் வியட்னாமில் பணிபுரியச் செல்கின்றார். அங்கேயே அவர் தனது இன்றையகால துணையைச் சந்திக்கின்றார். இன்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட 'ஹெக்டரும் அவரது மகிச்சியைத் தேடும் பயணத்துடன்' ஹெக்டர் என்ற பாத்திரத்தை வைத்து மேலும் பல்வேறு நூற்களை அவர் எழுதிவிட்டார். 1953ல் பிறந்த Francois Lelord தற்சமயம் தனது துணையுடன் தாய்லாந்தில் வசித்து வருகின்றார்.

நாகலிங்கப்பூ குறிப்புகள்

Wednesday, November 05, 2014

Haider (ஹதர்)

விஷால் பாரத்வாஜிற்கு ஷேக்‌ஷ்பியர் மீது பித்து இருப்பதை அவரின் கடந்தகாலத் திரைப்படங்களில் பார்க்கமுடியும். ஹதர் எனப்படும் இப்படம் 'ஹம்லட்'டின் பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கேன் காஷ்மீர் மக்களின் பின்னணி தேவைப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை. 'சுதந்திரம் என்பது பழிக்குப் பழி வாங்குவதில் அல்ல, வன்முறையைத் தாண்டி இருக்கிறது' எனச் சொல்லப்படுவதும் நல்லதொரு செய்திதான். ஆனால் சிக்கல் என்னவென்றால், ஒடுக்கப்படும் சமூகம்/இனம் மீதுதான் எல்லோரும் அறிவுரை மழைகளைப் பொழிகிறார்களே தவிர, ஒடுக்கும் அரசு/சமூகம் மீது மென்மையாகக் கூட ஏன் எதுவும் கூறத் தயங்குகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்தத் திரைப்படம், மிகவும் 'சென்டிவ்வான' காஷ்மீர் சிக்கல்களை தெளிவாகச் சொல்லாது, குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குள் சுருங்கியதை ஒருபுறம் விட்டுவிடுவோம். கொல்லப்படும் உடலங்களும், பெருகும் இரத்தமும், துப்பாக்கிச் சூடுகளும் - இவற்றை- மிக வெளிப்படையாக வைக்கும் திரைப்படங்கள் என்னை நெருக்கமுறச் செய்வதில்லை. மிகவும் அந்தரத்தோடு அவற்றை கடந்துவிடவே என்னுடைய போர்க்கால அனுபவங்கள் எப்போதும் நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்தப்படத்திலிருக்கும் அதீத வன்முறையான பல இடங்களை அவ்வாறே தாண்டியிருக்கின்றேன்.

இந்தப் படத்தில் விஷால் அப்பாவி முஸ்லிம்கள் காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதை வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றார். அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா அல்லது இல்லையா எனத்தேடுகின்றவர்களின் துயரமும் ஓரளவிற்குச் சொல்லப்படுகின்றது. கைதுசெய்யப்படுபவர்கள் பற்றிய விபரம் உரிய முறையில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவேண்டும் என ஐ.நா வலியுறுத்துவதையும், அதில் கையெழுத்திட்டிருக்கின்ற இந்தியா மீறிக்கொண்டிருப்பதையும் காட்டுகின்றார். அதுமட்டுமின்றி எப்படி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளின் நகங்கள் பிடுங்கப்படுவதை, நிர்வாணமாக்கி மின்சார ஷொக் கொடுக்கப்படுவதை, ஆண்மை முற்றாகச் சிதைக்கப்படுவதை - இந்தியா இராணுவத்தின் உண்மையான முகத்தை- நேரடியாகக் காட்டியிருப்பதை வரவேற்றாக வேண்டும், காஷ்மீர் இயல்புநிலைக்கு வருவதற்கு அங்கே பெருமளவாய்க் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை அகற்றுதல் முக்கியமானது என ஒரு குரல் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

இந்தியா இராணுவத்தின் முற்றுகைகளும், ஆண்களை/சிறுவர்களை அடையாள அட்டைகளுடன் ஊர்களின் பொதுவெளியில் கூடச்சொல்வது, அவ்வாறு வந்தவர்களை தலையாட்டிகளின் முன் நிறுத்துவதும், கைதுசெய்வதுமென... அப்படியே எனக்கு ஈழத்தின் இந்திய இராணுவகாலத்தை முன்னிறுத்தியது. எல்லா இடங்களிலும் உடல் பரிசோதனை நிகழ்த்தப்படுவதைக் கூட விஷால் ஒரு பாத்திரம் மூலம் தத்ரூபமாய்க் காட்டியிருப்பார். ஒருவர் தன் வீட்டிற்குள் நுழையாது வெளியிலே நிறைய மணித்தியாலமாய் நின்றுகொண்டிருப்பார். தாய் அவரை உள்ளே வாருங்கள் எனச்சொன்னாலும் வரவேமாட்டார். இதைப் பார்க்கும் தெருவில் ஒருவர், அந்த ஆணிடம் வந்து அடையாள அட்டையைக் கேட்டுவிட்டு, உடல் பரிசோதனையை செய்வார். இவையிரண்டும் முடிந்தவுடன் அந்த ஆண் வீட்டிற்குள் தன்பாட்டில் சென்றுவிடுவார். எப்படி இப்படி பரிசோதனைகளுக்கு மனிதர்கள் உட்படுத்தப்பட்டு, அது ஒருவித மனவியாதியாகி/சாதாரணமாகி விட்டிருக்கின்றது என ஒருவகையான எள்ளலில் இங்கே கூறப்படுகிறது.

மேலும், எப்படி இந்திய இராணுவத்தால், காஷ்மீரில் போராடும் இயக்கங்களுக்கு எதிரான முஸ்லிம் அமைப்புக்கள் வளர்த்தெடுக்கப்பட்டு, அவர்கள் சாதாரண பொதுமக்களை கொலைசெய்வதை இந்த 'தீவிரவாத' இயக்கங்களே செய்கின்றன என ஊடகங்களினூடு பொதுமக்களுக்கு செய்தியை தவறாக வழங்குகின்றன என்பதையெல்லாம் வெளிப்படையாக விஷால் வைப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

காஷ்மீர் போராட்டத்தை எதிர்க்கும் பெரும்பான்மையான அரசு/இராணுவம் சார்பானவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு பாகிஸ்தானே இந்த இயக்கங்களுக்கு ஆதரவும் ஆயுதமும் அளிக்கிறது என்பது. அந்த மக்களின் ஆதரவில்லாமல், எந்த ஒரு இயக்கமும் இயங்குதல் எளிதல்ல என்பது ஒருபுறமிருக்க, சரி அதையே உண்மையாக எடுத்தால் கூட, ஏன் கடந்தகாலங்களில் இதே இந்திய அரசு ஈழத்தில் தோன்றிய இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்ததென தம் அரசை நோக்கி இவர்கள் கேள்வி கேட்பதேயில்லை. சரி, ஈழத்தில் தமிழ்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடத்தான் ஆயுதங்களை இந்திய அரசு கொடுத்திருக்கின்றதென்று சொன்னால்கூட, ஏன் பல்வேறு இயக்கங்களை வளர்த்தது என்பது (இலங்கையரசோடு போரிடமட்டுமின்றி, தங்களை மீறி வளர்ந்தால், அவர்களுக்குள் சண்டைபிடிக்க எளிதாகவும்) பற்றியும் யோசித்தாகவேண்டும்.

இறுதியில் இந்தப்படம் ஹம்லட்டின் உளவியல் பிரச்சினைகளுக்குள் போனதும், முஸ்லிம்களின் வெவ்வேறுதரப்புக்களை எதிர்த்தரப்புக்களாகக் காட்டுவதாயும் சுருங்கிவிட்டாலும், ஏதோ ஒருவகையில் இந்திய இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஷ்மீரையும், அந்தமக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் ஒரளவிற்குக் காட்டுவதை மறுத்துவிடமுடியாது.


 அம்ருதா பத்திரிகை

'அம்ருதா' இதழோடு எப்படித் தொடர்பு ஏற்பட்டதெனச் சரியாக நினைவினில்லை. அநேகமாய் 'காலம்' இதழில் வந்துகொண்டிருந்த படைப்புக்களினூடாக 'அம்ருதா'வின் நண்பர்கள் என்னைக் கண்டடைந்திருக்கக் கூடுமென நினைக்கின்றேன். 'அம்ருதா'விற்கு ஆக்கங்கள் அனுப்பச் சொல்லிக் கேட்டனர். அவ்வப்போது 'அம்ருதா'விற்கு படைப்புக்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, 'அம்ருதா'வின் நண்பரொருவர் தொடர்/பத்தி எழுத அழைப்பு விடுத்தார். நான் விரும்பியபோது எழுதுபவனே தவிர தொடர்ச்சியாக எழுதுபவன் அல்ல என்பதால் சம்மதஞ் சொல்லத் தயக்கமாயிருந்தது. எனினும் தற்கால ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து தமிழக வாசகர்களுக்கு அறிமுகஞ்செய்ய நல்லதொரு சந்தர்ப்பம் இது என்பதால் தவறவிடக்கூடாதென பின்னர் முடிவு செய்திருந்தேன்.

'வன்னி யுத்தம்' (அப்பு), 'அகாலம்' (புஷ்பராணி), 'பாலைகள் நூறு' (இரவி) என தனிப்பட்ட நூற்களை மட்டுமில்லாது 'கவிதைகளில் நகரும் வரலாறு', 'சில அரசியல் பிரதிகள்' என்பவற்றிலும் பல ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் படைப்புக்களை முன்வைத்து எழுதியிருக்கின்றேன். மேலும் ஈழத்துக்குப் போனபோது அங்கே தசாப்தங்களுக்கு மேலாய் கைவிடப்பட்டிருந்த என் கிராமம் பற்றியும், ஈழத்தில் சந்தித்த நண்பர்கள் பற்றியும் எழுத முடிந்திருந்தது. இந்தத் தொடரில்தான், பலர் தங்களுக்குப் பிடித்ததாய்க் கூறிய வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் நேரில் பார்த்த பரவசத்தில் 'வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை'யினையும் எழுதினேன்.

இணையத்தைத் தவிர இலங்கையிலிருப்பவர்களை நேரடியாக அணுகமுடியாத சூழலில் - முக்கியமாய் வன்னி யுத்தம் போன்றவற்றை வெளிப்படையாக விற்கவே முடியாத ஈழத்துச்சூழலில்- ஏதோ ஒருவகையில் இலங்கையிலிருப்பவர்களையும் 'அம்ருதா'வினூடு நெருங்க முடிந்திருந்தது. 'சில அரசியல் பிரதிகள்' மீண்டும் இலங்கையில் ஒரு சஞ்சிகையில் மீள்பிரசுரமானதைத் தற்செயலாய்ப் பார்க்கவும் நேர்ந்தது.

சென்ற வருடங்கூட மெக்ஸிக்கோ போய், மாயாக்களின் கலாசாரத்தை நேரில் பார்த்து வந்த திளைப்பில் மிகப்பெரிய் பயணக்கட்டுரை (ஏழெட்டுப் பக்கங்களுக்கு மேல் வரும்) எழுதி அனுப்பியபோது, எவ்விதத் தயக்கமோ, வெட்டலோ இன்றி அப்படியே 'அம்ருதா' பிரசுரித்தது. எனக்கே பிறகு அந்த இதழின் பெரும் பகுதியை எடுத்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு சஞ்சிகையைப் பார்த்தபோது வந்தது. அந்தளவிற்கு என் மீது நம்பிக்கையும், எதையும் எழுதலாம், வெட்டமாட்டோம் என்று மிகப்பெரும் சுதந்திரத்தையும் அம்ருதா தந்திருக்கின்றது. 'அம்ருதா'வில் மிகப் பிடித்த இன்னொரு விடயம் என்னவென்றால், நிறைய ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வெளியிடுவது.

அச்சு ஊடகம் என்றவகையில் இங்கே 'வைகறை' பத்திரிகையிற்குப் பிறகு எனது ஆக்கங்கள் நிறைய வெளிவந்தது 'அம்ருதா'வில் என்றே நினைக்கின்றேன்.

ஒரு சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவருவது அவ்வளவு எளிதல்ல. 'அம்ருதா' இப்போது 100வது சஞ்சிகையையாக மலர்ந்திருக்கின்றது.

மிகுந்த மகிழ்ச்சி, 'அம்ருதா' நண்பர்களுக்கு வாழ்த்து!


நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ஹருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார்.

அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருடகளைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'

Wednesday, October 29, 2014

டைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின் நேர்காணலும் அதுவரை இருந்த வாசிப்பின் திசையை மாற்றியிருக்கின்றது. இப்படி ஒருவர் வெளிப்படையாகவும், விமர்சன பூர்வமாகவும் எல்லாவற்றையும் உடைத்துப் போடமுடியுமா என யோசிக்க வைத்த நேர்காணலது.

அப்போது பதின்மவயதுகளிலிருந்த எனக்கு அம்பை ஏதோ இருபதுகளில் இருப்பவரைப் போன்ற உற்சாகமுடையவராகத் தெரிந்தார். அவர் அப்போதே 50களில் இருந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிந்தாலும், நகுலனைப் போல அவர் ஒரு இளமையானவராகவே எனக்குள் இன்றுமிருக்கின்றார். அம்பையின் இறுதியாய் வந்த 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு' தொகுப்பை வாசிக்கும்போது அதே உற்சாகத்தையும், அவருக்குப் பின் வந்த/வரும் எந்தத் தலைமுறையும் நெருக்கங்கொள்ளும் கதைகளையுந்தான் எழுதியிருக்கின்றார் என்பதைக் கண்டுகொண்டேன்.

முரகாமியின் எந்த நாவலை வாசித்தாலும், அதில் வரும் பாத்திரங்களுக்கு எவ்வளவு வயதாயிருந்தாலும், அவர்களின் பதின்மப்பருவங்களை எங்கோ ஓரிடத்தில் முரகாமி தொட்டுச் செல்லாமல் கடந்து சென்றிருக்கமாட்டார். அதற்கு இறுதியாய் வந்த 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' என்ற நாவலில் கூட, கதையில் Tsukuru Tazaki, 36 வயதாக இருந்தாலும், நாவலைத் தொடங்கும்போது sukuruயின் பதின்மமும், 20களில் தற்கொலையிற்கு த்யாராகும் மனோநிலையை விபரிப்பதுடனேயேதான் நாவல் தொடங்குகின்றது. அவ்வாறே அம்பையின் கதையை வாசிக்கும்போது, அதில் வரும் பாத்திரங்கள் எத்தகைய வயதுகளில் இருந்தாலும் -என்றுமே வயதுபோகாத- ஒரு இளம்பெண் கதைகளிற்குள் மறைந்தும் மறையாத மாதிரி இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தத் தொகுப்பில் 'பயணம் - XX' என்ற இலக்கமிட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இப்படி 'பயணம்' என தலைப்பிடப்பட்டு கடந்த தொகுப்பில் வந்த கதைகளின் நீட்சிதான் இதுவெனினும், ஒவ்வொரு பயணங்களும் வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. பாரிஸிற்குப் போய் மரபுவாதிகளிடம் சிக்குப்படுகின்ற இராவணன் கோட்டை என்றாலென்ன, 'திருவள்ளுவர்' சிலையுடன் நெருக்கம் கொள்கின்ற இங்கிலாந்துக் கதையாயிருந்தாலென்ன எல்லாமே பயணித்தலின் குறுக்குவெட்டு முகங்களே.

இந்தியாவிற்குள் பயணிக்கும்போது நிகழ்பவை சில சிரிப்பைத் தருகின்றன என்றால பல பதற்றங்களை ஏற்படுத்துகின்றன. பயணிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் பற்றி பலர் நிறைய எழுதியிருக்கின்றனர்/ விவாதிருக்கின்றனர். ஒரு கதையில் வரும் பாத்திரம் நடுத்தரவயதுகளில் இருந்தாலும், இந்த வயதில் ஜூன்ஸ் அணிந்து பயணித்தாலும் ஆண்களின் கண்கள் எப்படி உற்றுப் பார்க்கும் என நினைத்து, ஜூன்ஸ் அணிவதைத் தவிர்க்கும்போதே, அம்பை இளம் பெண்களுக்கு இருக்கும் இடைஞ்சல்களை -ஆடையின் அரசியலை- மிக எளிதாக வாசிப்பவருக்குச் சொல்லிவிடுகின்றார்.

டெல்கியில் படிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய இன்னொரு கதையில், அந்தப் பெண் டெல்கியிற்கு ரெயினில் பயணிக்கும்போது இன்னொரு பெண்ணைச் சந்திக்கின்றார். இந்த -மற்ற- பெண், தன் ஊரில் குடும்பத்தினர் பிடிக்காத யாரையோ ஒருவரைக் கல்யாணங் கட்டித்தரப்போகின்றனர் என்பதற்காய் வீட்டை விட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஓடிவருகின்றவர். ஆனால் டெல்கியைப் பற்றி ஒன்றுமே அறியாத இந்தப் பெண் எப்படி டெல்கியில் தப்பிப்பிழைக்க முடியும் என டெல்கி யூனிவசிட்டியில் படிக்கும இந்தப்பெண் பதற்றமடைகிறார். கடந்த வருடங்களில் படித்துக்கொண்டிருக்கும் அவரை நடந்துபோகும்போதே துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றிருக்கின்றனர். இன்னொரு நாள் ஆண் நண்பனோடு இரவில் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவனைத் தாக்கிவிட்டு இவரை நெருங்கமுயன்றபோது அருந்தப்பில் தப்பியவர். வேறொருநாள், வாகனத்தில் பயணம் போனபோது, ஒரு குழு அரைநிர்வாணமாய்ப் பெண்ணை சிதைத்து அவரை எங்கோ புதைக்கப் போய்க் கொண்டிருந்ததை கண்டுமிருக்கின்றார். அவரைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு மட்டுமில்லை, அப்படி சிதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அடுத்தநாள் எந்தப் பத்திரிகையில் செய்தி வரவில்லை என்பதையும் அறிந்து, இப்படி அடையாளந்தெரியாது எத்தனை பெண்களின் உயிர்கள் பாலியலிற்காய் காவுகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தும் கவலைப்படுகின்றார்.

வ்வாறான ஒரு பெருநகரிற்கு எவரையும் தெரியாது ஊரிலிருந்து தப்பிவந்து விட்டேன் என நினைக்கும் பெண் எவரின் துணையின்றி வாழமுடியுமா என இந்த வளாகப்பெண் அந்தரப்படுகின்றார். ஒருகட்டத்தில் 'தயவுசெய்து திரும்பிப் போய்விடு, இது நீ நினைக்கின்ற நகரமல்ல, இதே ரெயினிலேயே திரும்பிச் சென்றுவிடு' என்று வற்புறுத்துகின்றார். படிக்கும் இந்தப் பெண்ணே தனியே வீட்டைப் போவதே அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால் அவரின் மாமா ஒருவரே கூட்டிப்போக ரெயில்வே ஸ்ரேசனில் வந்து நிற்கிறார். ஆனால் வீட்டை விட்டு ஓடிவந்த பெண் திரும்பிப் போகாது, பெருநகரிற்குள் -எங்கே போவதெனக் கூட தெரியாது- நுழையத் தொடங்குகின்றார். இறுதியில், கதை சொல்பவர் தன் உடல் சில்லிடுகின்றது என்கிறார். அதற்கு டெல்கி குளிர் மட்டுமே காரணமில்லை என்பதோடு கதை முடிகின்றது. நமக்குள்ளே இப்படி டெல்கி என்ற பெருநகருக்குள் வந்து விழுந்துவிட்ட அந்த மற்றப்பெண்ணுக்கு என்ன நிக்ழப்போகின்றது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன.

இன்னொரு வடஇந்தியப் பயணத்தில், ஒரு முதியவர் ரெயினுக்குள் தண்ணீர் தாகத்தில் தவிக்கிறார். அந்தப் பெட்டி முழுதும் அவருக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றார்கள். அவர்களே அனைவரும் இவரை விட சாதியின் படிமுறைகளில் வேறுநிலைகளில் இருப்பார்கள். எனவே பயணிக்கும் இந்தப்பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். கதைசொல்லி தண்ணீரைக் கொடுத்தாலும், அந்த முதியவர் இவரின் என்ன சாதி எனக்கேட்கின்றபோது நான் உங்கள் சாதியல்ல என்கிறார். திரும்பத் திரும்ப சாதி என்ன என முதியவர் கேட்டாலும், இந்தப் பெண், தான் என்ன சாதியென்பதைச் சொல்லவேமாட்டார். இதனால் முதியவர் தண்ணீரை வாங்கிக் குடிக்காது தாகத்துடன் அடுத்த ஸ்டேசனில் இருக்கும் பைப்பில் தண்ணீரைக் குடிக்கிறார். பின்னர் அந்த முதியவர் இரெயினுக்குள் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை/பாக்குப் போடும்போது பாக்கு தொண்டைக்குள் சிக்குபட்டு மூச்சிவிடத் திணறத்தொடங்குவார். தண்ணீரை அவசரத்திற்கு இந்தப் பெண் குடுக்கும்போது, தண்ணீர் இதற்கு வேலை செய்யாது, எனச் சொல்லிவிட்டு, இன்னொருவருவர் அவர் உடலைத் வளைத்துப் பிடித்து, ஒருமாதிரியாக பாக்கை எடுத்துவிடுவார். இந்த முதியவரின் சிந்திய பாக்குச் சாறை அந்த நபரே சுத்தமும் செய்துவிட்டு, அந்த முதியவரிடம், பாத்ரூம் சுத்தமாய்த்தானிருக்கிறது, நீங்கள் போய்க் குளிக்கலாம் என்கிறார். உதவிய மனிதர் தலித் என்பதால், இப்படித் தொட்டுக் காப்பாற்றியதால், அவருக்குத் 'தீட்டு' வந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

அந்த தலித், தானொரு வைத்தியர் எனவும், நீங்கள் ஒரு தலித்தில்லை எனத் தெரியும், பிறகும் ஏன் சாதியைச் சொல்லி தண்ணீர் கொடுக்க மறுத்தீர்கள் எனக் கேட்பார். இந்தப் பெண், 'அந்த முதியவருக்கு இவ்வளவு சாதிவெறி இருக்கும்போது, என்னால் இப்படித்தான் இருக்க முடியும்' என்கிறார். அப்போது அந்த தலித் டாக்டர், 'உங்களுக்கு சாதி அடையாளத்தை மறுக்கும் தெரிவிருக்கிறது, ஆனால் எங்களால் அப்படி முடியாது' எனச்சொல்வது கதையின் மிகக் கூர்மையான இடம். அது மட்டுமின்றி கதையின் முடிவில் அந்த முதியவர் துவாயை எடுத்துக்கொண்டு 'தீட்டு' க்கழிக்க பாத்ரூமைப் போவதுகூட, ஒருவரின் உயிரைத் தலித் காப்பாற்றினால் கூட, அவர்களால் எந்த்ப்பொழுதில் சாதிப்பெருமிதத்திலிருந்து வெளியேறிவிடமாட்டார்கள் என யதார்த்தை அறைந்து சொல்கின்ற இடம்.

ம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.

'நிலவைக் காட்டிய பெண்' எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. வளாக நாட்களில் தன்னோடு ஒத்த இரசனைகளுள்ள நண்பனோடு ஒரு பெண் நெருக்கமாகின்றார். அந்தப் பெண்ணை கறுப்பானவள் என்று பிறர் கேலிசெய்யப்படும்போது, இந்தப் பெண்ணைக் காப்பாற்றுபவனாக அவனேயிருக்கின்றான. ஒருமுறை இருவருக்கும் ஜரோப்பாவில்(வெவ்வேறு நகரங்களில்) சில மாதங்கள் தங்கிப்படிக்கும் வாய்ப்பு வரும்போது, உடலாலும் நெருக்கமாகின்றனர். திரும்பி வரும்போது அந்தப் பெண் தான் கர்ப்பமடைந்திருக்கின்றேன் எனச்சொல்லி, இந்தியா போனதும் திருமணம் செய்வோம் என்கின்றாள். 'நான் உன்னைத் திருமணம் செய்வதென்று நினைக்கவேயில்லை. உனது நிறத்தை நீயே பார்த்ததில்லையா?' என அவளின் அடியாழம்வரை சென்று வேதனை செய்கின்றான். இந்தியா திரும்பும் பெண், மிகவும் கஷ்டப்பட்டு அபோர்ஷன் செய்கின்றாள். அபோர்ஷனிற்கு வெளிநாட்டிலிருந்து காசனுப்பிய அவனை ஓரிடத்திற்கு கூப்பிட்டு, இந்தக் காசிற்கா நான் என்னை உன்னிடந்தந்தேனென செருப்பெடுத்து அடிக்கிறாள்.

காலம் நகர்கின்றது. இந்தப் பெண் பேராசிரியை ஆகிவிட்டார் மட்டுமில்லை, இப்படித் தன் மகன் செய்தான் என்பதை அறிகின்ற அந்த ஆணின் தாயோடு நெருக்மும் ஆகிவிட்டார். 'நீ அபோர்ஷன் செய்தது உன் தெரிவு. ஆனால் இப்படி உதவியில்லாது எங்கோ தொலைவில் போய் நின்று செய்யும்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குத் துணையாயிருந்திருப்பேன்' என்கிறார் அந்த ஆணின் அம்மா. ஆனால் இந்தப் பெண்ணுக்கு தான் பிரியமாய் வளர்க்க விரும்பிய இரட்டைப் பிள்ளைகளை இப்படியான நிலைக்குப் போகச் செய்துவிட்டேன் என்கின்ற கவலையிருக்கிறது. அதை எப்படிக் கலைந்து தன் 'தாளத்தை' நிதானமாக்கின்றார் என்பதை அம்பை இந்தக் கதையில் அற்புதமாக எழுதியிருப்பார். அந்த ஆண் அப்படிச் செய்துவிட்டான் என்ற வேதனை அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இருக்கின்றது. அது குறித்த எந்த நிந்தித்தலும் பிறகு கதையில் எங்குமேயில்லை. எனெனில் இப்போது அந்தப் பெண் தனக்கான உலகில் வாழத்தொடங்கிவிட்டாள். ஆணின் இருப்பு அவளின் வாழ்வோ இருக்கிறதோ இல்லையோ அவர் முன்னர்போல வேதனைப்படப்போவதில்லை. இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையென புரிந்துகொள்வதில் பெண்களைப் போல பல ஆண்களால் இருக்கமுடிவதில்லை.

இதைத்தான் இன்னொரு கதையான, 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவில், குடும்பம் நெருக்குகிறதென, மூன்று வயதுப்பிள்ளையுடன் தன்னை விட்டுவிட்டுப்போன துணையை, ஒரு பெண் நினைத்துப் பார்க்கின்ற கதையும் வேறுவிதமாய்க் கூறுகின்றது. 'நீ ஏன் என்னை விட்டுப்போனாய், உனக்குப் பிறகு நான் சந்தித்த எந்த ஆணும் உன்னைப் போல இருந்ததில்லையே. ஒரு கறுப்புச் சிலந்தியைப் போலவாது என்னுடன் கூடவே இருந்திருக்கலாமே' என உடல்வலி மிகுந்த இரவில் தன் துணையை சிலந்தியாக உருவகித்துப் பார்க்கின்ற வித்தியாசமான கதை.

பெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் த்ப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது

(Oct 03, 2014)

ரொபர்டோ பாலனோ (Roberto Bolano)

Monday, October 20, 2014

1.
பெரும்பாலான படைப்பாளிகளைப் போல ரொபர்டோ பாலனோ, அவரின் மறைவின் பின்னே கண்டுபிடிக்கப்பட்டவர். அவரின் படைப்புக்களை வாசித்த மோகத்தில் பலர் அவர் வாழ்ந்த வாழ்வு எப்படியானது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அது இன்னும் மூடப்பட்ட பக்கங்களாய் இருக்கும்போது ரொபர்டோ இன்னுமின்னும் மர்ம்ம நிறைந்த ஒருவராய் தோற்றங்களை மாற்றியபடியிருக்கின்றார். அது மட்டுமின்றி அவரின் புனைவுகளின் வழி அவரின் குணாதிசயங்களைத் தேடுபவர்கள் கண்டுகொள்ளும் விம்பங்களையும் ரொபர்டோ அடிக்கடி குலைத்தபடியுமிருக்கின்றார்.

இப்போது கிடைக்கும் ஒரளவு தகவல்களின்படி 1953ல் சிலியில் டிரக் டிரைவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் மகனாய்ப் பிறந்த ரொபர்டோ தன் பதினைந்தாவது வயதில் மெக்சிக்கோவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்கின்றார். டைஸ்லக்‌ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்த ரொபர்டோ, கற்பித்தலை கேட்கவோ அல்லது கிரகிக்கவோ முடியாது திணறிக்கொண்டிருந்த மாணவனாய் இருந்தாரென அவரின் ஆசிரியர்களால் குறிப்பிட்டிருக்கின்றனர். மெக்சிக்கோவில் உயர்பாடசாலைக் கற்றலை உதறித்தள்ளிவிட்டு, பத்திரிகையாளராக தன்னை மாற்றிக்கொண்ட ரொபர்டோ, அங்கே கவிஞர்களுக்கான சிறு அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்.

தீவிர மார்க்சியவாதியான (டிரொஸ்கியவாதி) ரொபர்டோ பின்னாட்களில் மெக்ஸிக்கோவில் இருந்து சிலியிற்கு பினோச்சோவின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகப் போராடத் தன் தாய் நாட்டிற்குப் போகின்றார். அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ரொபர்டோ கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கவும்படுகின்றார். அங்கே சிறைக்காவலர்களாய் வேலை செய்யும் அவரின் பழைய இரண்டு பாடசாலை நண்பர்களால் காப்பாற்றப்பட்டு சிலியை விட்டுத் தப்பியோடுகின்றார். இந்த நிகழ்வு குறித்து -இப்படி ரொபர்டோ சிலியிற்கு போய் தப்பி வந்தது- நிகழ்ந்ததா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாது விவாதங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தப்பித்தலில்போது இடையில் எல் சல்வடோர் சென்று அங்கே கவிஞர்களோடும், போராளிகளோடும் நட்பு கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.

தனது 24 வயதில் ஸ்பெயின் போகின்ற ரொபர்டோ, பார்சிலோனாவின் பல்வேறு கடலோர நகரங்களில் வாழ்கிறார். அவ்வாறான ஒரு நகரத்திலேயே (Barnes) அவர் தனது துணையான லோபஸைச் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாய் -இறக்கும்வரை- தனது துணையோடும் பிள்ளைகளோடும் Barnesலேயே வாழ்கிறார். அவரின் அநேக படைப்புக்கள் பல்வேறு பதிப்பகங்களினாலும், ஏஜெண்டுகளாலும் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்திருக்கின்றார். அவரது துணை அவர் எழுதுவதற்கான சூழலை தொடர்ந்து எவ்விதத் தொந்தரவிற்கும் உள்ளாகாது கொடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனினும் ரொபர்டோவின் இறுதி வருடங்களில் அவர் தன் துணையை விட்டு தனித்து வாழ்ந்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

2.
ஏன் எனக்கு ரொபர்டோ மிக நெருக்கமானவராக ஆகிப்போகின்றார் என யோசித்துப் பார்க்கின்றேன். அவரைப் போன்ற பதின்ம வயதுகளிலேயே எனது புலம்பெயர்வு நிகழ்ந்து மட்டுமில்லை, அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் தொழில்களான கோப்பை கழுவுதல், குப்பை அள்ளுதல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண தொழில்களையே ரொபர்டோ தொடர்ந்து செய்துமிருக்கின்றார் என்பதும் ரொபர்டோவை நான் நெருங்கியதற்கான காரணங்களில் சிலவாய் இருந்திருக்கலாம்.. மேலும் ஒதுக்குபுறமான வாழ்வை வாழ்ந்தவர் என்றபடியாலும், எந்த நிலப்பரப்போடும் அதிகம் நெருக்கம் கொள்ளாத மனோநிலையாலும், சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவிலிருந்து, இஸபெல் அலெண்டே வரை எல்லோரையும் விமர்சனங்களால் அடித்துத் துவைத்துமிருக்கின்றார். ஆகவே தன்னை எங்கும் பொருத்திக்கொள்ளாத அல்லது எவரையும் பின் தொடர விரும்பாத ஒருவரை இந்த்ச் சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இயல்புதானில்லையா?

ரொபர்டோவின் எழுத்துக்களை வைத்து, அவர் ஒரு பெரும் குடிகாரனாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்று கட்டியெழுப்பட்ட விம்பத்தை அவரைப் பற்றி இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆய்வுகள், அப்படியில்லையெனத் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது அவர் தன்னை எப்போதும் கவிஞனாகவே நினைத்துக்கொண்டவர், அவரின் குடும்ப நிலையிற்காகவே பிற்காலத்தில் நாவலாசிரியராக மாறினார் எனக் கூறப்பட்டதைக் கூட, அப்படியல்ல அவருக்கும் நாவலாசிரிய்ராகும் கனவு நீண்டகாலமாய் இருந்தது என்பதை இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அவரின் தொடக்ககாலக் குறிப்பேடுகள் சில நிரூபிக்கின்றன.

3.
ரொபர்டோவின் படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்ட பலர் இப்போது ரொபர்டோ வாழ்ந்த பார்சிலோனாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். அப்படி அங்கே போய், ரொபர்டோவின் நீண்டகால வீடீயோ கடை நண்பருடன் உரையாடும் லிஸா எமக்கு இன்னொருவிதமான ரொபர்டோவைக் காண்பிக்கின்றார். எப்போதும், எங்கேயும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரையே, ரொபர்டோவிவின் நண்பர் மட்டுமில்லை வேறு பலரும் நினைவு கொள்கின்றனர். தோள்வரை நீளும் தலைமயிரும், அடர்த்தியான கண்ணாடியும் அணிந்த ரொபர்டோவேயே அவர்கள் தங்கள் ஞாபகங்ளினூடாக மீண்டும் நிகழிற்குக் கொண்டுவருகின்றனர். மகனை பாடசாலையில் இருந்து அழைத்து வரக் காத்திருக்கும்போதுகூட ரொபர்டோ புத்தகங்களை வாசிக்கும் ஒருவராக மட்டுமின்றி, சிலவேளைகளில் சினிமா தியேட்டருக்குள்ளும் நூலை வாசிக்கும் தீவிரமான ஒருவராக இருந்திருக்கின்றாரென அவரோடு ஒரு தசாப்தகாலததிற்கு மேலாய்ப் பழகிய நண்பர் நினைவுகூருகின்றார்.

மேலும், ரொபர்டோ ஒரு பெருங்குடியாளனோ அல்லது போதைமருந்து அடிமையோ அல்லவென குறிப்பிடும் அந்த நண்பர், ஆனால் இவ்வாறானவர்களின் வாழ்க்கையை அவதானிப்பதற்காய் மணித்தியாலக்கணக்கில் பார்களில் நேரத்தை ரொபர்டோ செலவழித்திருக்கின்றார் எனச் சொல்கின்றார். மற்றவர்கள் உரையாடுவதை அமைதியாக எப்போதும் கேட்க விரும்பும் ரொபர்டோவுடன் பின்னாட்களில் போதையிற்கு அடிமையான நிறையப் பேர் நண்பர்களாய் ஆகியும் இருக்கின்றனர். அவர்களின் கதைகளைக் கேட்ட்கும்போது நிறைய கோப்பியும், சிகரெட்டும் அருந்தும் ரொபர்ட்டோவைத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அந்த நண்பர்.

இவ்வாறாக ரொபர்டோவைத் தேடிப்போகும் லிஸா, அவரின் நாவல்கள் மெக்சிக்கோவையோ, சிலியையோ பின்புலங்களாய்க் கொண்டவையாக இருநதாலும், அந்த நாவல்களில் அவர் தொலைந்துபோன கனவுகளையும், கடந்து போன வாழ்வையும் எழுதினாலும், அவர் அந்த நாவல்களின் சித்தரித்தவைகள், தான் ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்புக்களையும் வாழ்ந்த வாழ்வையுந்தான் என்கின்றார். இது ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள் உணர்கின்ற யதார்த்தமும் கூடத்தான்.

சிலவேளைகளில் நாம் நமது தாயகத்தைப் பற்றி எழுதும்போது, நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தேசத்தின் கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றோமோ என்ற தோற்ற மயக்கம் ஏற்படுவதும் இயல்புதானல்லவா? ஆனால் ரொபர்டோவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ரொபர்டோ சிலியை விட்டுப் பிரிந்தபின் ஸ்பானிஷ் பேசக்கூடிய நிறைய நாடுகள் தென்னமரிக்காவில் நிறைய இருந்தன. இறுதியாய் அவர் வாழத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்பெயினிலும் அவரை அவ்வளவு அந்நியப்படுத்தப்படாத அவரின் தாய்மொழியைப் பேசும் வாழும் மக்களின் நிலப்பரப்பில் வாழ முடிந்தது என்பதே.

கடந்த வருடம் ஒரு எழுத்தாள நண்பருக்கு புலம்பெயர்ந்திருந்து எழுதுவதில் வரும் சலிப்பைப் பற்றி ஒரு கடிதத்தில் நான் குறிப்பிட்டபோது, அவர் முதன்மையாகக் குறிப்பிட்டது, 'உங்களுக்கு உங்கள் மொழி பேசும் மக்கள் திரளிடையே வாழ முடியாதது பெரும் இழப்பு' என்றிருந்தார். கசப்பானது என்றாலும் அதுதான் உண்மை.

4
ரொபர்டோவின் நண்பரான விடீயோ கடைக்காரர், தானும் ரொபர்டோவின் மணிக்கணக்கில் அரசியல்,இலக்கியம், திரைப்படங்கள், பெண்கள் பற்றிப் பேசுக்கொண்டிருப்போம் என்கின்றார். படைப்பாளியாக இருந்தபோதும் எப்போதும் தன்னை யாரேனும் அளவுக்கதிகமாய்ப் பாராட்டினால் அவர்களை விலத்தி வரவே ரொபர்டோ விரும்பியிருக்கின்றார் எனவும், அதே சமயம் எழுத்தாளர்களுடன் எப்போது அளாவளாவ பிரியப்பட்டவராக இருந்திருக்கின்றார் எனவும் சொல்கின்றார். தாங்கள் வூடி அலனின் படங்கள் உள்ளிட்ட நிறையப் படங்களை விவாதித்ததாகவும், ரொபர்டோவிற்கு டேவிட் லிஞ்ச், நைட் ஷியாமளன் போன்றவர்களின் திரைப்படங்கள் அதிகம் பிடிக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ரொபர்டோவின் படைப்புக்களை ஆய்வு செய்தும், அவர் யார் என்பது பற்றியும் நிறையப் புத்தகங்கள் இப்போது வரத்தொடங்கிவிட்டன. அதுமட்டுமின்றி இன்னமும் பிரசுரிக்கப்படாது ரொபர்டோவின் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தவைகளும் பிரசுரங்களுக்குத் தயாராகியும் கொண்டிருக்கின்றன. அண்மையில் ரொபர்டோவை இறுதியாய் நேர்காணல் செய்தவர், ரொபர்டோவிற்கு பிற்காலத்தில் ஒரு காதலி இருந்திருக்கின்றார் என்றும், அந்தப் பெண்ணையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றார்.

எதுவென்றாலும் புதுவகையான எழுத்தை அறிமுகப்படுத்தும் ரொபர்டோ போன்றவர்களை அவரின் வாசகர்கள் கொண்டாடவே செய்வார்கள்.அதுபோலவே அவரைப் பற்றிய புதிர்களும் அவரைப் பற்றிய வசீகரத்தை இன்னும் அதிகரித்தபடியே இருக்கும். இறந்தபின்னும் ஆயிரம் பொன் என்பது யானைகளுக்கு மட்டுமில்லை, ரொபடர்டோ, வான்கோ போன்ற படைப்பாளி/ஓவியர்களுக்கும் பொருந்தும் போலும். ஆனால் இதையெல்லாவற்றையும் விட இந்தப் புகழ், பெயர் என்பவற்றைப் பொருட்படுத்தாது, தாங்கள் வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தபோதும், தாம் விரும்பியதை எதன் பொருட்டும் கைவிடாது செய்துகொண்டிருந்தார்களே, அதைத்தான் ரொபட்டோவிடமிருந்தும், வான்கோவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2014)


ஏற்கனவே எழுதியவையும்/ எழுதுவதற்கு உதவியவையும்:

(1) https://www.facebook.com/photo.php?fbid=10152513264238186&set=a.135912858185.111205.645983185&type=1&theater
(2) http://www.newyorker.com/magazine/2013/04/22/mexican-manifesto
(3) http://www.newyorker.com/magazine/2012/01/23/labyrinth-2
(4) http://www.salon.com/2013/06/24/myths_and_legends_of_roberto_bolano_exposed_in_new_exhibit_partner
(5) http://www.independent.co.uk/arts-entertainment/books/features/fame-after-death-why-roberto-bolao-became-a-literary-superstar-posthumously-8706107.html

நித்தியகல்யாணிப்பூ குறிப்புகள்

Wednesday, October 15, 2014

 1.
நேற்று மழைநாளோடு வாசித்து முடித்த நாவல், ஜீ.முருகனின் 'மரம்'. எனக்குப் பிடித்த (விரும்பிய அளவு நாட்களைக் கழிக்கவேண்டுமென பிரியப்படும்) திருவண்ணமலையைச் சுற்றி நடக்கின்ற கதையென்பதால் அங்கேயே போய்விட்டதென்ற உணர்வுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கவிஞர்/ஓவியர்களின் வாழ்வைத் தொட்டு செல்வதோடு, நீட்ஷேயும், டால்ஸ்டாயும் பயமுறுத்தாமல்/நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதால் இன்னுமின்னும் நாவல் ஈர்த்துக்கொண்டிருந்தது.

தனது துணைவியும் கவிஞருமான சந்திராவின் எல்லாத் 'துரோகங்களை'யும் மறந்துவிட்டு, டால்ஸ்டாயின் ஒரு பாத்திரம்போல மண்டியிட்டு அழவேண்டுமென கண்ணன் விரும்புவார்... "அது அவளுடைய துரோகங்களுக்கு உரிய பதிலீடாக,, பகை உணர்வையெல்லாம் அன்பாக மாற்றக்கூடிய உலைகளமாக அது இருக்கும்' எனவும் நம்புவார். டாஸ்டாய் எழுத நினைத்தும், மனிதன் கடவுளாக மாறும் தருணங்கள் இதுவேயெனவும் மேலும் யோசிப்பார். ஆனால் அவர் தன் துணையை நேரில் சந்திக்கும்போதெல்லாம், சராசரிக்கும் கீழான மனிதராகவே மாறிவிடுகின்றார். 'கிரஸ்லர் சோனட்டாவில் வரும் கணவனைப் போல கத்தியை எடுத்து அவளது வயிற்றில் சொருகும்' ஆசை'யே அவருக்குப் பெருகுகிறது. எமது அன்பானவர்களாக மாறும் விருப்பையும், பிறரை மன்னிக்க விரும்பும் மனோபாவத்தையும் எவை குலைத்துக்கொண்டேயிருக்கின்றன? ஏன் நம்மால் அவ்வளவு எளிதாக அப்படியாக மாறமுடியாதிருக்கின்றது எனத் தொடர்ந்து யோசிக்கவைக்கும் இவ்வாறான பாத்திரங்களே நாவல் முழுதும் நம்மைத் தொந்தரவுபடுத்தியபடியே இருக்கின்றன.

மாலையில் வாசிக்கத்தொடங்கியது அயோத்திதாச பண்டிதரைப் பற்றி டி.தருமராஜன் எழுதிய 'நான் பூர்வ பெளத்தன்'. அந்த முன்னுரையை கவனித்தாகவேண்டும். முக்கியமாய் ஒவ்வொருவரும் எழுதுவதற்குப் பல்வேறுகாரணங்கள் இருக்கக்கூடுமெனப் பட்டியலிட்டு, ஒரு தலித் எழுதத் தொடங்கும்போது, அவருக்கு முன்னாலுள்ள சவால், 'இதுவரை எழுதப்பட்டிருக்கும் அத்தனை அவதூறுகளுக்கும் எதிராக எழுதுவதே' என சொல்லப்பட்டிருப்பது எத்தகைய உண்மையான வார்த்தைகள். முக்கியமாய் பல்வேறுவிதமான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு 1880களில், தமது கோரிக்கைகளை பிரிட்ஷாருக்கு அனுப்பும் மாநாட்டில், அயோத்திதாச பண்டிதர் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்.

சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருக்கும் பறையர்களை கோயில்களுக்குச் செல்ல வழிபட அனுமதிக்கவேண்டும். அந்தக் கோரிக்கை பிரிட்டிஷ்காரருக்குப் போகாமாலே, உயர்சாதியினரால், சிவனும் விஷ்ணுவும் எங்களுக்குரிய கடவுள்கள், உங்களுக்கென்றுதானே சுடலைமாடன்களும், காட்டாண்டிகளும்' இருக்கின்றதெனக் கூறி நிராகரிக்கின்றனர். ஆனால் அதேகாலகட்டத்திலேயே, இந்தியாவில் முதன்முதலாக குடிசன மதிப்பீடு செய்யப்படும்போது, சிவனையோ, விஷ்ணுவையோ இன்னபிற பெருந்தெய்வங்களை வழிபடாது தனக்குரிய குல/நாட்டார் தெய்வங்களை வழிபட்ட மக்களை ஆங்கிலேயோரோடு நின்ற உயர்சாதியினர் 'இந்துக்கள்' என்ற வகைக்குள் அடக்கச் சொல்கின்றனர்.

அயோத்திதாச பண்டிதரே இவ்வாறே பெருந்தெய்வங்களுக்கு வெளியே நின்ற ஒதுக்கப்பட்ட சாதிகளையும், பழங்குடிகளையும், 'ஆதித்தமிழர்' என்ற வகைக்குள் சேர்க்கச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். எனினும் அவரின் குரல் செவிமடுக்கப்படாது, எல்லோரும் இந்துக்களாகவே சேர்க்கப்படுகின்றனர். இன்றும் சமஸ்கிருதமயமாக்கலில் நாட்டார் தெயவங்கள் பெருந்தெய்வங்களாக கலக்கப்படும் சூழலில் தலித்துக்கள் சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டா இவையெல்லாம் நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் எல்லாச் சூட்சுமமும் நமக்கு விளங்கும்.

 2.
நீங்கள் ................ அனுப்பியபொழுதில் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வு பற்றிய நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி உங்களால் காமத்தைக் கடந்து போக முடியவில்லை என்பதுபோல தஸ்தயேஸ்கியை வாசித்தபோது அவரால் ஏன் எந்தக் காலத்திலும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியவில்லை, எப்போதும் தளும்பிக்கொண்டிருந்தார் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இத்தனைக்கும் மரணத்தை மிக அருகில் கண்டபின், இது மீளுயிர்ப்பு என விளங்கி வைத்திருக்கின்ற தஸதயேவ்ஸ்கியால் பிறகான காலங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியவே இல்லை.

அவர் தன்னை யாரென்று கண்டடையக்கூடுமென்றா அல்லது காமத்தின் மூலம் எதையாவது அடையக்கூடுமென்றா பெண்களைத் தேடிப் போயிருக்கின்றார் எனவும் தெரியவில்லை. ஆனால் அவரின் வாழ்வில் நிறையப் பெண்கள் வந்திருக்கின்றனர். எனக்கு மிக ஆச்சரியமென்னவென்றால் அவர் அன்னாவோடாவது மகிழ்ச்சியாக இருந்திருப்பாரென்றால், அன்னா பிற்காலத்தில் எழுதிய நினைவுகளின் தொகுப்பில் கூட தஸ்தயேவ்ஸ்கி துயரம் நிறைந்த ஒருவராக இருந்திருக்கின்றார் என்பதைத்தான் அடையாளங்காண முடிகின்றது. 'நான் தனியே இருக்கின்றேன், தனித்திருக்கின்றேன்' என்றே அடிக்கடி அன்னாவிடம் குறிப்பிடுகின்றார். அன்னாவின் முதற்குழந்தை சொற்ப மாதங்களில் இறந்துபோகின்றபோது 'மகிழ்ச்சியற்ற இந்த மனிதர் ஒரு பெண்ணைப் போல விசும்பி விசும்பி அழுதததைப் பார்த்தபோது என்னால் கூட சகிக்கமுடியாதிருந்தது' என்றே அன்னா எழுதியிருக்கின்றார்.

ஆனால் இவ்வளவிற்கும் அப்பால், மிகுந்த வலதுசாரித்தன்மையுடைய, ஜரோப்பாக் கலாசாரத்தையே (அன்றையகாலத்தில் மொஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க் என்ற இரண்டு வேறுபட்ட கலாசார வாழ்வு இருந்தன) வெறுக்கின்ற தஸ்தயேவ்ஸ்கியா இவ்வளவு அருமையான புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பதுதான் வியப்பளிக்கின்றது. இவ்வளவு துயரங்களுக்கும் பதற்றங்களுக்குமிடையில் இருந்து கொண்டு இப்படி எழுதமுடிகின்றதென்றால் அவருடைய மகிழ்ச்சியோ/நிறைவோ எழுதுவதில் மட்டுமே இருந்திருக்கின்றதெனப் புரிந்துகொள்கின்றேன்.

நீங்கள் காமத்தைக் கடக்கமுடியாதிருக்கின்றதென எழுதியதை வாசிக்கும்போது, ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியது ஞாபகம் வருகின்றது. 'காமம் ஒரு நீலியைப் போல உங்களை தன் கண்களைப் பார் பாரென்று கேட்டுக்கொண்டேயிருப்பாள். நீங்கள் விழிகளை நிமிர்ந்து பார்த்தீர்களோ அப்படியே காமத்தோடு என்றுமே போராடிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் நீலியை நிமிர்ந்து பார்க்காது கடந்து போய்க்கொண்டிருக்கின்றேன்' என்றெழுதியிருந்ததாய் ஞாபகம். அதை வாசித்தபோது, இல்லை நான் காமத்தை அப்படிக் கடக்கப் போவதில்லை. நீலியின் கண்களை நிமிர்ந்து பார்ப்பேன். அதனோடு போராடியே தாண்டிச் செல்வேன் என நினைத்துக்கொண்டதுண்டு....

(நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து...)

3.
னந்தவிகடன் கையில் கிடைக்கும்போதெல்லாம், தவறாது வாசிப்பது அ.முத்துலிங்கத்தின் 'கடவுள் தோன்றிய இடம்' தொடர்கதையும், ப்ரியா தம்பியின் 'பேசாத பேச்செல்லாம்' தொடரும் . ப்ர்யா தம்பியின் தொடரோடு, விகடனில் அதே வாரங்களில் வரும் பிறவற்றை ஒப்பிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பெண்களுக்குப் பொதுவாய் வெளிப்படையாய்/இயல்பாய்க் காதலைச் சொல்லும் ஆண்களைப் பிடிக்கும் என்று ஒரு தொடரில் எழுத, அதே இதழில் வா.மு.கோமு காதலை இறுதிவரை சொல்லாத ஆணை, ஒரு பெண்ணுக்கு அதிகம் பிடிப்பதாய்க் கதை எழுதியிருப்பார். இப்படி இரண்டு வேறுவிதமான உலகங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பது கூட சுவாரசியமானது.

இந்தமுறை ப்ரியா தம்பி, சினிமாவில் சித்தரிக்கும் 'க்ளிஷே' பெண்களுக்கும், யதார்த்ததில் இருக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசங்களையும், ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் எப்படி தன் நடைமுறைவாழ்வில், சினிமாவில் இருந்து பெண் கதாபாத்திரங்களை, தமக்குத் தெரிந்த பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருப்பார். அதில் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் சிறிதேவி செய்யும் பாத்திரத்தை வியந்து எழுதியிருப்பார். அந்தப் படத்தைப் பார்த்த தருணத்தில் நானும் இப்படியான ஒரு நிலையில், பெண் பாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது எனவே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தோழி 'இறுதியில் பார்த்தால் எவ்வளவுதான், தன்முயற்சியில் முன்னேறிய சிறிதேவியும், குடும்பத்திற்கு கட்டுபட்டு தன் திறமைகளை மறைக்கும் ஒரு பெண்ணைப் போலவே காட்டப்பட்டிருப்பார். இப்படிக் காட்டுவதே ஆண்களுக்குப் பிடித்தமானது' என்று ஒரு புள்ளியைத் தொட்டுக்காட்டியிருந்தார்.

ப்ரியா தம்பியியும் இதற்கு முன் வாரங்களில், எப்படி பிஎஜ்டி படித்த பெண்கள் எல்லாம், திருமணம் என்று வந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு குடும்பப் பெண்களாகிவிடும் அபத்தத்தைக் குறிப்பிட்டதாய் நினைவு. எனவே இங்கிலீஷ் விங்கிலீஷ் எப்படி முடிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். இதையெல்லாவற்றையும் விட, இந்த வாரத் தொடருக்கு ஓவியர் வரைந்த படம் பற்றியது. ப்ரியா தம்பியின் தொடர் எப்படி ஆண்களின் புரிதல்கள் தவறென்று சொல்ல முயற்சிக்கிறதோ, அதை மறுதலிப்பதாய் இந்த ஓவியம் இருக்கின்றது. என் விளங்கிக்கொள்ளலில் இந்த ஓவியம், பெண்கள் இடப்பக்கத்தில் இருப்பது போல இருக்கின்றார்கள், ஆனால் திரைப்படங்கள் படச்சுருளில் இருப்பது போலச் சித்தரிக்கின்றதாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் இப்படி உள்ளே அணிவதைக்கூட அப்பட்டமாய்த் தெரிவது போல ஓவியம் வரைவதே, தொடரில் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய் விடுகின்றது. இதை அந்தத் தொடரை எழுதுகின்ற ப்ரியா தம்பியோ, விகடன் ஆசிரியர்களோ கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. இப்படித்தான் முன்பும் ப்ரியா தம்பியின் சிறுகதையிற்கும் ஏதோ அபத்தமான ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது நினைவில் வருகின்றது.

குங்குமத்தில் அசோகமித்திரன் எழுதும் தொடரையும் விடாமல் வாசிப்பதுண்டு. இம்முறை யு.அனந்தமூர்த்தி பற்றி எழுதியிருக்கின்றார். எல்லாவற்றையும் உடைத்துப் பார்க்க விரும்பிய ஆனந்தமூர்த்தி தன் வாழ்வில் பராம்பரியத்தைக் கைவிடாமல் இருந்தவர் எனக்குறிப்பிட்டு, அவரின் மகனொருவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் செய்தபோது, அனந்தமூர்த்தி மகனிற்கு அன்றைய காலை உபநயனம் செய்தார் என அசோகமித்திரன் குறிப்பிடுகின்றார். எழுத்தைத் தாண்டிய அனந்தமூர்த்தி ஒரு மரபுவாதியாக இருந்திருக்கக்கூடும். பெரும் இடதுசாரித் தலைவர்களாய் இருந்தவர்களே இறுதியில் பூநூல் சடங்குகளுக்குள் பாய்ந்தவர்கள் என்பதைத்தானே கடந்தகாலம் நமக்குக் கற்றுத்தந்திருக்கின்றது.

ஆனால் அசோகமித்திரனின் இந்தத் தொடரை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம். அவருக்கு மார்க்சியவாதிகளோடு இருந்த நட்பைப் பற்றி. சோவியத்து இதழ் வந்தபோது தி.க.சியை அடிக்கடி சந்தித்தபடி இருந்ததைக் குறிப்பிடுகின்றார். தான் அயோவா சென்று எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொண்டதற்கு கைலாசபதியே முக்கிய காரணம் என்கின்றார். அனந்தமூர்த்தியோடு நட்பாய் இருந்தையும் விரிவாக எழுதுகின்றார். அசோகமித்திரனைப் பற்றியெழுதும் எவரும் இவற்றைக் குறிப்பிடுவதில்லை. மார்க்சியர்கள் அவர்களவில்/அவர்களின் கொள்கையில்பால் விமர்சிக்கப்படவேண்டியவர்களே. ஆனால் அவர்கள் தமது சட்டகங்களை மீறி பிறரை வரவேற்றிருக்கின்றார்கள் என்பதையும் கவனித்தாகவேண்டும். இன்றும் புதிதாக வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டும் இருக்கின்றார்கள். பிறகு அதற்குள் இருக்கின்றார்களா, மீறிப்போகின்றார்களா, விமர்சிக்கின்றார்களா என்பது அடுத்த நிலையில் வருவது. முதலடியிற்கு எப்போது மார்க்சியம் கைகொடுத்திருக்கின்றது, தன் சட்டகத்திற்குள் இல்லாதவர்களையும் அரவணைத்திருக்கின்றது என்பதை நாம் தவறவிட்டுவிட முடியாது.

அசோகமித்திரன் அயோவா போயிருக்காவிட்டால், எனக்குப் பிடித்த 'ஒற்றன்' உருவாகியே இருக்க முடியாது. ஒருவகையில் அசோகமித்திரனுக்கு மட்டுமில்லை கைலாசபதியிற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்.