கனடா பத்து மாகாணங்களையும் 3 territoriesகளையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இங்கு நீண்டகாலமாய் வசித்தாலும் இதுவரை இரண்டு மாகாணங்களை மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது சற்று அவமானமான விடயந்தான். பத்து மாகாணங்கள் என்றாலும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் ஒவ்வொரு மாகாணங்களும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருக்கின்றன. கனடாவில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்குப்போவதற்குள், ஐரோப்பா என்றால் நாம் இன்னொரு நாட்டைப் பார்த்துவிடமுடியுமென எங்களுக்குள் கதைப்பதும் உண்டு.
Sea Caves, New Brunswick |
கனடாவில் கிழக்குக் கரையோரமும், மேற்குக்கரையோரமும் (வன்கூவர்) என்னை எப்போதும் அழைத்துக்கொண்டிருப்பவை. அதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரமும், மறுபுறத்தில் பசுபிக் சமுத்திரமும் இருப்பதே. இந்து சமுத்திரத்தோடு பிறந்த ஒருவனை பிற கடல்கள் ஈர்க்காமல் இருந்தால்தான் யோசிக்கவேண்டியிருக்கும். ரொறொண்டோ போன்ற நகரில் வசிப்பவர்க்கு ஐம்பெரும் வாவிகள் அருகில் இருந்தாலும், பெரும் சமுத்திரத்திரங்களைக் காண்பதிலும், கால் நனைப்பதிலும் வேறுவகையான சந்தோசம் இருக்கிறது அல்லவா?
Quebec City |
ஒரு நீண்ட வாரவிறுதிநாள் வந்தபோது நானும் நண்பரொருவரும் எங்கே போவதென வரைபடத்தில் ஓரிடத்தைக் குத்திவிட்டு 2013ல் பயணித்திருந்தோம். இரண்டு இரவுகள் மூன்று நாட்கள் கிட்டத்தட்ட 5000 கிலோமீற்றர்கள் காரில் பயணித்து South Dakota 'Badlands'ற்குப் போயிருந்தோம். அது ஒரு வெறிப்பிடித்த காரோட்டம். ஐந்தாறு மணித்தியாலங்கள் நித்திரை கொள்வதற்காய் ஓய்வெடுத்தததே தவிர எப்போதும் காரை ஓட்டிக்கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு வெறித்தனமான ஒரு பயணத்தைச் செய்ததால் எங்கேயெனினும் எப்படியெனினும் Road Trip அமெரிக்காவிற்குள்ளோ கனடாவிற்குள்ளோ செய்யலாமென்ற நம்பிக்கை வந்திருந்தது.
New Brunswick |
எப்போதும் பேசிக்கொண்டிருக்க விரும்பாதவன் மட்டும் அல்லாது. எனது மெளனங்களைக் குழப்புகின்றவர்கள் மீதும் அவ்வப்போது கோபங்கொள்கின்ற -ஒருவகையில் கூறுவதென்றால் உள்ளொடுங்கிய பேர்வழி நான். மேலும் விடிகாலையில் எழும்புவதைப் போன்ற சித்திரவதை வேறொன்றும் இல்லையென நம்புகின்றவனும் கூட. எனக்குள் சட்டென்று விழுகின்ற மெளனங்களைச் சகித்துக்கொண்ட, அதிகாலையில் புறப்படும் பயணங்களில் எனக்காய் பொறுமையாய்க் காத்திருக்கவும் முடிந்த நண்பர்கள் இந்தப் பயணத்தில் கிடைத்தது பெரும்பேறு.
Montmorency Falls, Quebec |
ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 5 மணிக்கு road trip தொடங்கியபோது நண்பரொருவர் முதல்நாள் மட்டுமே 1500km போகவேண்டியிருக்கிறதென GPSல் போட்டு படமெடுத்து, அனுப்பியபோது, அவருக்கு 'A long journey starts with a single step' என லா-சூ சொன்னதை பதிலாக அனுப்பியிருந்தேன்.
ஆம், எதுவென்றாலும் முதலடியில் இருந்துதானே எல்லாமே ஆரம்பிக்கின்றது.
1 comments:
அருமை
2/05/2017 01:58:00 AMPost a Comment