ஓரடி பின்னே வைப்பதென்பது ஒரு அடி முன்னே செல்வதற்கானது
**********************
தாவோயிஸத்தில் ஓர் உரையாடல் தாவோவைப் பற்றி ஆசிரியர் மாணவருக்கிடையில் நிகழ்ந்திருக்கும்.
மாணவர்: தாவோ என்றால் என்ன?
ஆசிரியர்: சாதாரண மனமே தாவோ.
மாணவர்: அப்படியெனில், நாங்கள் அதை நோக்கிப் போகவேண்டுமா அல்லது போகத் தேவையில்லையா?
ஆசிரியர்: நீங்கள் அதை நோக்கிச் சென்றீர்களென்றால், அது உங்களை விட்டு விலகிப் போய்விடும்.
மாணவர்: நாங்கள் முயற்சிக்கவே இல்லையென்றால், பிறகு அதுதான் தாவோ என்பதை, எப்படி அறிவது?
என அந்த உரையாடல் மேலும் நீளும்.
ஆனால் ஸென் நம்மை மாற்றிச் சிந்திக்கச் சொல்கின்றது. ஒன்றை அடைவதற்காய் நீங்கள் எங்கும் செல்லவேண்டியதில்லை என்று ஒவ்வொருபொழுதும் ஞாபகப்படுத்துகிறது. ஸென்னின் அடிப்படைப் பயிற்சியே நமக்குள்ளே இருக்கும் இடைவெளிகளையும், நமக்கும் மற்றவருக்கும் இருக்கும் இடைவெளிகளையும் குறைப்பதாகும் (It is about closing gaps, the gaps between yourself and your Self, between you and me).
இறுதியில் அந்த தாவோ ஆசிரியர், 'தாவோ ஒருபோதும் எதுவென்று அறிவதையோ அல்லது எதுவென்று அறியாதிருப்பதையோ தனக்குரியதாகக் கொள்வதில்லை' என்கின்றார்.
அப்படியெனில் தாவோ என்பது என்னதான் என்று எமக்கு இப்போது இன்னும் குழப்பம் கூடுகின்றது. இதையிதைச் செய்தால் அல்லது இப்படியிப்படிப் போனால் உங்கள் இலக்குகள் அடையப்பட்டுவிடும் என்றோ அல்லது அறிந்துவிடலாமோ என்றோ தாவோயிஸமோ/ஸென்னோ சொல்வதில்லை.
உங்களால் ஒவ்வொரு கணத்திலும் மூழ்கமுடியுமென்றால், நீங்கள் தேடும் புதையல் இங்கேயே இருக்கின்றது. நீங்கள் இதற்காக எங்கேயும் போகத்தேவையில்லை, உங்களுக்கான பொக்கிஷம் உங்கள் வெறும் காலுக்கு அடியில் இருக்கின்றது என்று ஸென் சொல்லும்.
இது உங்களுக்கு பாவ்லோ கொய்லோ எழுதிய 'இரசவாதி'யை (Alchemist) ஞாபகப்படுத்தலாம். அதாவது 'புதையலை' ஒரு பொருளாக/செல்வமாகக் கொண்டீர்கள் எனில்!
ஸ்பெயினின் ஆண்டலூசியாவில் இருந்து எகிப்துக்கு புதையலைத் தேடிச் செல்லும் சாந்தியாகோ இறுதியில் அந்தப் புதையலை எங்கே கண்டடைகின்றான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஸென் சொல்லும் நாம் தேடும் 'பொக்கிஷம்' பொருளை அடிப்படையானதல்ல என்பது உங்களுக்குப் புரியும். இதையே எனது ஆசிரியான தாய், 'I've arrived, I'm home' என்று நாம் தியானம் செய்கையில் மனம் அலைவுறும் ஒவ்வொரு தருணமும் சொல்லி நம்மை நினைவூட்டிக் கொள்ளச் சொல்வார்.
'நூற்றுக்கணக்கான மலர்கள் வசந்தகாலத்திலும், நிலவு இலையுதிர்காலத்திலும், மென்குளிர் காற்று கோடையிலும், பனி குளிர்காலத்திலும் இருக்கும்போது, உங்கள் மனதை எந்த ஒரு மேகமும் மூடவில்லையெனில், உங்களுக்கு அதுவே மிகச் சிறந்த பருவம்' என்கின்ற ஒரு கவிதை ஸென் பிரதிகளில் இருக்கின்றது.
அதாவது நீங்க எந்த குறிக்கோள்களையோ, அவை அடையும் எல்லைகளையோ உங்களுக்குள் இழுத்து அடைத்து வைத்திருக்கவில்லையெனில், அந்த நாள் மிக நல்ல நாளாக ஆகிவிடுகின்றது.
ஒருநாளில் அதற்கான குறிக்கோள் இல்லாது எப்படி இருப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அப்படியிருப்பது நமக்கு அச்சமும் ஊட்டக்கூடும். சரி வேண்டுமானால் ஒரு நாளுக்கான இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை எப்போதும் காவிக் கொண்டிருக்கத் தேவையில்லை என ஸென் நமக்கு இன்னொருவகையான சுதந்திரத்தைத் தருகிறது. அத்துடன் எந்தவகையான இலக்காயினும் தன்னியல்பிலே நடந்து நிறைவேறிவிடும். நீங்கள் அதை உங்கள் மனதுக்குள் ஒவ்வொரு பொழுதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்கின்றது.
எங்களில் பலர் காலையில் எழுந்தவுடனேயே, அப்படியே 'வேலைக்குச் செல்லும்' மனநிலைக்குச் சென்றுவிடுவோம். அது அவ்வளவு நல்லதில்லை, உங்களை கொஞ்சம் நிதானமாக்குங்கள் எனச் ஸென் சொல்கிறது. உதாரணத்துக்கு நாங்கள் சில நாட்களோ/வாரங்களோ வேலையிலிருந்து விடுமுறை எடுத்துப் போகும்போது, நாங்கள் விடுமுறை முடிந்து மீள வரும்போது நிறைய வேலை சேர்ந்திருக்குமே, நிறைய மின்னஞ்சல்கள் திறக்கப்படாமல் இருக்குமே, நிறைய முக்கிய தொலைபேசி அழைப்புக்களைத் தவறவிட்டிருப்போமே எனப் பதற்றம் வந்தால், நாம் எங்கோ தவறிழைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.
நாங்கள் ஒவ்வொரு நொடியையும் அதை இழக்கவிடாது வாழ்ந்து கொண்டிருப்போம் என்றால், இப்படி இவற்றைத் 'தவறவிடுகின்றோம்' என்று எண்ணமுடியும்? விடுமுறைக்காகச் சென்றாலும் நாம் வேலை என்கின்ற கடந்தகாலத்திலும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் செய்ய இருக்கும் என நினைத்து எதிர்காலத்திலும் இருக்கின்றோமோ தவிர நாம் இந்தக் கணத்தில் இல்லை என்றுதானே பொருள். அப்படியெனில் நாம் உண்மையில் விடுமுறையில்தான் போயிருக்கின்றோமா எனக் கேட்க வேண்டியிருக்கும்.
ஸென் எங்கள் மனதுக்கு மட்டுமில்லை, எமது உடலுக்கும் கவனத்தைக் கொடுக்கச் சொல்கின்றது. எமது மனம் தன்னியல்பிலே பல்வேறுபட்ட எண்ணங்களாலும், தேவையற்ற முணுமுணுப்புக்களாலும் நிறைந்திருப்பது. இந்த இரைச்சல் எப்போது அமைதியடைகின்றது அல்லது நம் கவனத்தில் இருந்து இல்லாது போகின்றது? நமக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாடும்போதோ, ஒரு நடனத்தை ஆடும்போதோ அல்லது ஒரு நல்ல புத்தகத்தையோ வாசிக்கும்போதோ நாம் ஒரு பயிற்சியைச் செய்து பார்க்கலாம். அதாவது நாம் அந்தச் செயற்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கின்றோமா அல்லது அடுத்து என்ன செய்வது/நிகழும் என்று எம் 'மனம்' சிந்திக்கின்றதா என்று அவதானிக்கலாம். உங்கள் கைகளும், கால்களும் எங்கேயிருக்கின்றன என்று எப்போதும் யோசித்துக் கொண்டா இருக்கின்றீர்கள்? இல்லைத்தானே!
தாவோ அதைத்தான் எளிமையாக, ஆனால் பூடகமாகச் சொல்கிறது. 'சாதாரண மனமே தாவோ' என்கின்றது. அதுவே பாதை. எந்த ஒன்றையும் நீங்கள் அடையவோ, எதனோடும் ஒப்பிடவோ, எவரோடும் போட்டியிடவோ தேவையில்லை என்கின்றது.
இன்னொருவகையில் நீங்கள் உங்கள் அளவில் முழுமையானவர். அந்த முழுமையை நீங்கள் உணர்கின்றபோது நீங்கள் ஞானமடைகின்ற நிலையை அடைகின்றீர்கள். புத்தரும், நீங்கள் யாரென்று அறியாத அளவுக்கு உங்களுக்குள் நிறைய தூசி பெரும்படையாகச் சேர்ந்துவிட்டது, அந்தத் தூசியைத் துடைத்து நீங்கள் யாரென்ற கண்ணாடியைப் பாருங்கள் என்றுதான் சொல்கின்றார்.
நாம் எதையும் அடையவோ அல்லது எதனோடும் போட்டி போடத் தேவையில்லை என்றாலும், நமக்குள்ளிருக்கும் 'பசித்த பேய்கள்' எம்மை எளிதில் விடாது. எங்களை இன்னும் இலக்குகளில் கவனம் குவிக்கவும், வெற்றிகளின் மீது வெறிபிடித்து அலையவும், இதன் நிமித்தம் இன்னும் கடினமாக உழைக்கவும் இந்தப் பேய்கள் உந்தித் தள்ளும். உங்களால் அவ்வளவு இலகுவில் இந்த பசிப்பேய்களிடமிருந்து தப்பிவிடமுடியாது.
அது இன்னும் நிறைய மணித்தியாலங்கள் வேலை செய், நிறையப் பணத்தை ஈட்டு என்று எங்களைத் துரத்தும். அப்படி எல்லாவற்றையும் செய்தால் கூட ஏதோ ஒன்று எமது வாழ்க்கையில் கிடைக்காமல் இருக்கின்றதே என்கின்ற வெறுமையில் நெஞ்சம் அவ்வப்போது எடைகூடிப் போகும்.
ஆகவே கொஞ்சம் உங்களை நிறுத்தி நிதானியுங்கள். பசிப்பேய்களோடு நண்பர்களாகி உரையாடுங்கள். உனக்காக எந்த நேரமும் தீனியிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று இந்தப் பேய்களை நீங்கள் தியானத்தில் அமரும்போது அழையுங்கள். அவற்றைக் கொஞ்சம் அமைதிப்படுத்துங்கள்.
ஒரு நாள், மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்யாமலோ அல்லது அரைநாளில் விடுப்பு எடுத்து நீங்கள் வீடு திரும்பும்போது, உழைக்கும் பணத்தில் கொஞ்சத்தை இழக்கலாம். ஆனால் அதேசமயம் அந்த நேரத்தை உங்களுக்காகவும், உங்களுக்குப் பிரியமானவர்களுடன் செலவழிப்பதாகவும் அமையக்கூடும். ஆகவே ஓரடி பின்னால் எடுத்து வைப்பதென்பது, ஓரடி முன்னே வைப்பதற்காகவும் இருக்கும். பல பொழுதுகளில் எதையோ இழந்துதான் எதையோ பெறவேண்டியிருக்கின்றது. ஆனால் நாம் பெறுபவை நமக்கு அதிகம் நிம்மதியையும், மனநிறைவையும் தந்தால், நமக்கு இழந்தவைகள் ஒரு பொருடாக இருக்கப் போவதில்லையல்லவா.
****************
(எழுத உதவிய நூல்: "The Book of Householder Koans')
0 comments:
Post a Comment