1.
நாம் எண்ணம் (thought) என்று நினைக்கும் ஒன்றுக்கு அப்பால் ஆழமான சுயமொன்று (self) இருக்கின்றது. அதை அறிந்துகொள்ளல் அவ்வளவு எளிதுமல்ல. எண்ணங்களின் கூட்டுத்தொகைதான் சுயமென்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.
நமக்குள் எண்ணம் ஒன்று உதிக்கும்போது, நாம் அந்த எண்ணத்தை மட்டும் கவனிப்பதில்லை. அத்துடன் அந்த எண்ணத்தை கவனிக்கும் இன்னொருவராகவும் (watcher) இருப்பதைச் சிலவேளைகளில் பார்த்திருப்போம். இங்கேதான் பிரக்ஞையின் (consciousness) புதிய பரிணாமம் வந்து சேர்கின்றது.
நீங்கள் உங்கள் எண்ணத்தை உற்றுக் கவனிக்கும்போது, பிரக்ஞையின் இருப்பை உணர்ந்திருக்கலாம். பிரக்ஞையானது, எண்ணத்தை விட, இன்னும் ஆழமான ஓரிடத்திலோ அல்லது அதற்கு அப்பாலோ இருக்கும்.
மேலும் கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களே, எங்களை நிகழ்காலத்தில் இருக்க முடியாது செய்கின்றன. ஆனால் இந்த எண்ணம் தோன்றும்போது, நாம் பிரக்ஞையின் இருப்பை அதேகணத்தில் உணர்ந்தால், எண்ணமானது தனது வலுவை இழக்கின்றது.
அப்படி எண்ணமானது வலுவிழக்கும்போது, நமது உளவோட்டத்தில் (mental stream) தொடர்ச்சியில்லாது போகின்றது. அப்போது நாம் முதன்முறையாக மனமில்லாத (no-mind) இடைவெளியை உணர்கின்றோம். முதலில் இந்த இடைவெளி எண்ணங்களிடையே சிறியதாக இருக்கக்கூடும். பின்னர் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் அந்த இடைவெளியை இன்னும் அதிகரித்தும் செல்லலாம். இந்த 'மனமற்ற' இடைவெளியில் நிசப்தமும் அமைதியும் உங்களுக்குள் ஊடுருவதை உணரமுடியும்.
இதை இவ்வாறு வார்த்தைகளில் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இதை உணர்வதற்கான அல்லது தெளிவதற்கான பயணம் என்பது நீண்டது.
2.
புத்தரின் சூன்யம் என்பது பலவிதங்களில் புரிந்து கொள்ளமுடியும். மேற்கில் ஸென் வந்தபோது வெறுமையும், சூனியமும் ஒன்றைப் போல பல இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. சூன்யம் என்பது எதுவோ, ஆனால் நிச்சயம் வெறுமையோ/வெற்றிடமோ அல்ல. புத்தர் ஞானமடைதலை துன்பத்திலிருந்து விடுதலை (no suffering) என்று சொன்னவர். ஆனால் துன்பத்திலிருந்து விடுதலையான பின் அந்த நிலை எப்படியென்று அவர் வெளிப்படையாகச் சொல்லியவரல்ல. அந்த இடத்தில் -புத்தர் எப்படி இறப்பின் பின் என்ன நடக்கும் எனக் கேட்கும்போது அமைதி காத்தாரோ- அப்படியே துன்பத்திலிருந்து விடுதலையடைந்த பின் அது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அமைதி காத்தவர். அந்த நிலை புத்தரால் விபரிக்க முடியாதது என்றல்ல அர்த்தம்.
துன்பத்திலிருந்து விடுதலை என்பதை என்னவென்பதை நீங்களே உங்கள் இயல்பிலே அறியுங்கள் என்றே அது குறித்துப் பேசாது அமைதி காத்தவர். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி புத்தரை திருவுருவாக்கி, அவரில் அடையாளங்களையும்/குறியீடுகளையும் சுமத்தி கடவுளாக்கிவிட்டோமோ, அப்படியே 'ஞானமடைதலும்' வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் எவ்வித அர்த்தமோ/விடுதலையோ தராது சொற்களிலும்/பேச்சிலும் அர்த்தமில்லாது உறைந்து போயிருக்கும்.
இவ்வாறு எண்ணங்களை அவதானிக்கும் ஒரு கவனிப்பாளராக (watcher) மாறி, நமது பிரக்ஞையை அறிவதைப் போல, இன்னொரு விதமாகவும் நாம் இந்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும் முடியும். அது நாம் தொடர்ந்து நிகழில் இருந்து கொண்டிருப்பது. அப்படி நிகழில் இருக்குந்தோறும் நாம் மனதில் ஒரு இடைவெளியை எண்ணங்களிடையே உருவாக்க முடியும். இதற்கான முக்கிய ஒரு பாதையாக தியானம் இருக்கின்றது. எந்த ஒரு வேலையைச் செய்தாலும் வேறு எந்த எண்ணமும் இல்லாது நிகழிலேயே திருப்ப திருப்ப இருப்பது.
மனமானது நம்மைக் காப்பாற்றும் ஒரு இயந்திரம் எனச் சொல்லலாம். அது மற்ற மனங்களைத் தாக்குவது, தற்காப்புச் செய்வது என்பதோடு (தகவல்களை) பல இடங்களில் இருந்து சேர்த்து, பின்னர் சேமித்து வைத்து அலசி ஆராயச் செய்கின்றது. அது ஒருவகையில் நல்லது, ஆனால் அது சிருஷ்டிகரமானது அல்ல.
எண்ணங்களின் இடைவெளியை காண்பதென்பது, சிந்திப்பதை நிறுத்தி வைப்பது போல் ஆகாதா என்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும். எப்படி நான் தியான வகுப்பிற்குப் போனபோது எண்ணங்கள் இல்லாது எழுத முடியுமா என்று எனக்குச் சந்தேகம் வந்ததோ, அது போல உங்களுக்கும் தோன்றலாம். எண்ணமானது நம்மை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால்தான் நமக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. பிரக்ஞையை நாம் உணரும்போது, எண்ணமானது அதன் ஒரு பகுதியாகின்றது.
எண்ணமானது ஒருபோதும் பிரக்ஞையாவது இல்லை ஆனால் பிரக்ஞையின் ஒரு பகுதியாக எண்ணம் மாறக்கூடியது. ஆகவே நாம் விழிப்புடன் இருக்கும்போது, பிரக்ஞையின் மூலம் எண்ணங்களை வேண்டியபோது மட்டும் 'பயன்படுத்தி'க் கொள்ளலாம். மற்ற நேரங்களில் எப்போதும் அலட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்களை 'சற்று அமைதியாய் இரும் பிள்ளாய்' என ஓரு மூலையில் வைத்துக் கொள்ளலாம்.
இப்படி எழுதுவதெல்லாம் குழப்பமானது என்பதும் எனக்குப் புரிகிறது. அதைவிட புத்தரைக் கடவுளாக்கி வணங்கும் பெளத்தர்களில் பெரும்பாலானோர் கூட, புத்தரைப் போல தங்களால் இந்தப் பிறப்பில் ஞானமடைதல் முடியாது என்றுதான் நம்புகின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. ஒருவகையில் இது புத்தர் கற்பித்தவற்றைக்கு நேரெதிர் திசையில் செல்வதைப் போன்றது.
மதம் என்ற கற்பிதம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை உணராததால்தான் ஒவ்வொரு மதமும் தானே சிறந்ததெனச் சொல்லி சர்ச்சரவுகளில் ஈடுபடுகின்றது. இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துத்தான் நீட்ஷே போன்றவர்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்து புதிய பாதைகளைத் தேட முனைந்திருந்தார்கள்.
எல்லா அசலான கலைஞர்களும், படைப்பாளிகளும், அவர்கள் உணர்ந்தோ அல்லது உணராமலோ இந்த மனதைத்தாண்டிய, மனமில்லாத (no mind) வெற்றிடத்தில் வந்த அமைதியை உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களது சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டிக்க வைத்திருக்கவும் கூடும். பல எழுத்தாளர்கள் தமது எழுத்துக்கள் தம்மையறியாமல் எழுதிச் சென்றது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
உண்மையில் அவர்கள் அந்த சிருஷ்டியில் இருக்கும்போது, எண்ணங்களின் உலகிற்கு அப்பாலான மனமற்ற வெளியில் (no mind) அலைந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் மாபெரும் படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கின்றது. மிகச் சிறந்த உதாரணமாக இளையராஜாவிடம் எப்படி இந்த இசையை அமைத்தீர்களென்று பலர் அவரிடம் வியந்து கேட்கும்போது, அவர் சொல்கின்ற பதில் அவர் அந்த 'மனமற்ற வெளி'யில் அலைந்தபோது உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் என்பதை நாம் எளிதில் உணரமுடியும். அதை ஏதோ ஒருவகையில் அவரும் அனுபவிப்பதால்தான் ஒரு வெளிநாட்டு நிகழ்வொன்றில், நான் நாளை இல்லாமல் போனாலும் என் பாடல்கள் உங்களுக்காக ஒலிக்கும் என்று சொல்லிவிட்டு, சட்டென்று இனி எனக்கு இன்னொரு பிறப்பு இல்லை என்றும் தெளிவாகச் சொல்கின்றார்.
தன்னிலை உணர்தல் (self realization) இந்த வாழ்க்கைக் காலத்தில் நிகழுமா, நிகழாதா என்பதைவிட, அப்படி நம்மை உணரும் சாத்தியம் எப்போதேனும் இருக்கலாமென்ற சுவாரசியத்துடன், இந்தப் பயணத்தைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானது என்பதையும் இந்தக்கணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
3.
ஒருவருக்கு முப்பதாவது பிறந்தநாள் வருகின்றது. அதுவரை அவர் மிகுந்த பதகளிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு அவருக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலையில் எழும்பும்போது இந்த வாழ்வின் வெறுமை அவரைத் துரத்தியடிக்கின்றது. அவர் இனி வாழ்வது அர்த்தமில்லை என்று நினைக்கின்றார். அந்நியமாதலின் பெரும் அவஸ்தையை அன்று அவர் உணர்கின்றார்.
'என்னால் இனி ஒருபோதும் என்னுடன் வாழ முடியாது' ('I cannot live with myself any longer') என்கின்ற எண்ணம் திருப்பத் திருப்ப அவரின் மனதில் சொல்லப்படுகின்றது. அப்போது அவருக்குள் எங்கிருந்தோ ஓர் எதிர்பாராத சிந்தனை வருகின்றது. இப்படி ஒரு குரல் சொல்லிக் கொண்டிருந்தால், 'நான் ஒருவரா அல்லது இருவரா? நான் என்னோடு வாழ முடியாது என்று சொன்னால், நிச்சயமாக அது நான் ஒருவரல்ல, இருவர்' என நினைக்கின்றார். 'நான்' (I) மற்றும் 'சுயம்' (Self) இங்கே இருப்பின், யாரோ ஒன்றுதான் அசல் என்று மேலும் யோசிக்கின்றார்.
இந்த 'தன்னிலை உணர்ந்த' அந்தப் பொழுதில் தனது மனது நிறுத்தப்பட்டதை அவர் அவதானிக்கின்றார். 'நான் அவ்வளவு விழிப்புடன் இருந்தேன், எந்த எண்ணமும் எனக்கு அப்போது இருக்கவில்லை' என்கின்றார். அந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான சக்தி தன்னுடலில் மெதுவாக ஆரம்பித்து வேகமடைவதை அவர் பார்க்கின்றார். அது என்னை மிகவும் அச்சுறுத்தியது. என் உடல் அதிர்வில் நடுநடுங்கத் தொடங்கியது. அப்போது 'ஒன்றையும் எதிர்க்காதே' என்கின்ற வார்த்தைகளைத் திருப்பத் திருப்பக் கேட்டேன், அது யாரோ என் நெஞ்சுக்குள் இருந்து பேசுவதைப் போல இருந்தது. நான் ஒரு பெரும் வெற்றிடத்தால் உறிஞ்சப்படுவதை உணர்ந்தேன். அந்த வெற்றிடமானது வெளியில் இருந்தது அல்ல, எனக்குள் இருந்த வெற்றிடத்தாலேயே நான் இழுக்கப்பட்டேன். சட்டென்று எனது எல்லாப் பயங்களும் இல்லாது போயின. நான் அந்த வெற்றிடத்திற்குள் என்னை விழ அனுமதித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எந்த நினைவும் தனக்கு இல்லை என்கின்றார்.
பிறகு சுயநினைவு வந்தபோது, நான் பறவைகளின் கீச்சிடலைக் கேட்டேன். ஆனால் அப்படியொரு குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. நான் அப்போதும் கண்ணை மூடியபடியே இருந்தேன். எனக்கு ஒரு வைடூழியத்தின் காட்சி தோன்றியது. ஏதோ வைரம் சத்தம் போட்டதுபோல அந்தப் பறவைகளின் குரல் கேட்டது.
அந்த நாளில் மட்டுமில்லை, பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியான மனோநிலையில் நானிருந்தேன். எல்லாமே மிகத் துல்லியமாகத் தெரிந்தன, கேட்டன. எந்தத் தொந்தரவுமில்லாது அந்தக் காலங்களில் நான் அமைதியையும், பேரின்பத்தையும் அனுபவித்தேன். அதன்பிறகு அந்த அனுபவம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதுவே என் இயல்பான நிலையாக இப்போது மாறியுமிருக்கலாம் என்கின்றார்.
இப்படிச் சொல்கின்றவர் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பூங்காவின் பெஞ்சுகளில் இருந்து காலத்தைக் கழித்தேன் என்கின்றார். எனக்கு இந்த உலகில் எதுவுமே அப்போது தேவையாக இருக்கவும் இல்லை. அந்த வெறுமனே வேடிக்கை பார்த்த அந்த 2 வருடங்களில், எனக்கு எந்த உறவும் இல்லை, எந்த வேலையும் இல்லை, எந்த வீடும் இல்லை, சமூகம் சொல்லும் எந்த அடையாளமும் எனக்கிருக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்கின்றார்.
தனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான மாற்றம் நடந்தது என்பதை அறிந்தபோதும், அது என்னவென்று விளங்கிக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்றும், அதை தனது ஆன்மீக ஆசிரியர்களும், ஆன்மீகப் பிரதிகளும் பின்னர் விளங்கப்படுத்தின/ர் என்கின்றார். இவ்வாறு சொல்கின்றவரே இன்று முக்கியமான ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கும் Eckhart Tolle. அவர் தற்போது கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவரில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர் சொல்லும் அனுபவத்துக்கு நிகரானதை விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோதும் அறிந்திருக்கின்றேன். விசிறி சாமியாருக்கு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதென்று அவரை வைத்தியசாலையில் கூட அவரின் குடும்பத்தினர் அனுமதித்திருக்கின்றனர். நம்மைப் போன்றவர்கள் பிறந்த நாடுகளில் 'விழிப்பு' வந்தவுடன் அலைவதைப் போல, மேற்கில் 'தன்னிலை உணர்தல்' நிகழ்ந்தாலும் பரதேசிகளாக அலையமுடியாது. அதனால்தான் இரண்டு வருடமாக பூங்காக்களில் இருந்து இந்த அனுபவத்தை தன்னியல்பிலே எச்கார்ட் அனுபவித்தாரோ தெரியவில்லை.
இது ஒருவரின் அனுபவம். அவரின் பாதையில் அல்லது அவருக்கு சட்டென்று (ஸென் ஆசிரியர்கள் பலருக்கு நிகழ்ந்ததுபோல) தன்னிலை உணர்தல் போல நமக்கும் நடந்துவிடும் என்று நம்பத் தொடங்கினால் அதை போல அபத்தம் இல்லை. இவ்வாறானவர்களின் அனுபவம்/ வாழ்க்கை எல்லாம் நமக்கும் இவை சாத்தியம் என்பதற்காகவே நினைவில் வைத்திருக்கலாமே தவிர, நாம் ஒவ்வொருவரும் நடக்கவேண்டிய பாதை நமக்கு மட்டுமே உரியது. அதனால்தான் புத்தர் துயரங்கள் முடிந்த நிலை எப்படியிருக்கும் என்பது குறித்து எதுவும் பேசாது அமைதி காத்தவர்.
ஒரு எண்ணமும் அதற்கு அடுத்த எண்ணமும் தோன்றும் இடைவெளியைக் கவனிப்பதிலிருந்து எல்லாமே ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு எண்ணத்தைக் கவனித்து அனுப்பினாலும், அடுத்த எண்ணம் பின் வீட்டால் நுழையவும் செய்யும். அதையும் 'ஓ.. இது இன்னொரு எண்ணத்தின் சித்து விளையாட்டு' என்று கவனிக்கத் தெரிந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கிவிடுவோம், வாழ்க்கை குறித்த தேவையற்ற பயங்களும் குறையத் தொடங்கிவிடும் என நினைப்பதும் இந்த மனம் செய்யும் குறளி வித்தையா அல்லது அதைத்தாண்டிய வேறு எதுவோ?
***************
(எழுத உதவிய நூல் 'The Power of Now')
1 comments:
❤️
1/29/2025 11:26:00 AMPost a Comment